172அப்பா! ஆதியில் குதிரைக்கும் ஐந்து விரல்கள் இருந்ததாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படித்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆதியில் அதாவது 35 லட்சம் ஆண்டுகட்கு முன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நரியைவிடச் சிறியதாக ஒரு மிருகம் இருந்ததாம். அதுதான் நாம் இப்பொழுது பார்க்கும் குதிரையாக ஆகியிருக்கிறதாம். அதன் பாஸில்கள் என்னும் சின்னங்கள் அகப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்தால் அதற்கு ஐந்து விரல்கள் இருந்தது தெரியும்.

பிறகு பத்து லட்சம் ஆண்டுகள் சென்ற பின்னர் முதல் விரல் மறைந்து போய்விட்டது. அதன் பின் அதிகக் காலம் ஆவதற்குள்ளாகவே ஐந்தாவது விரலும் போய் விட்டது. அதே சமயத்தில் மிருகம் ஒன்றரை அடி உயரமாக ஆகிவிட்டது.

அதன்பின் இருந்த மிருகத்தின் பாஸிலைப் பார்த்தால் மிருகம் பெரியதாயிருக்கிறது; முன் கால்களில் நான்கு விரல்களும் பின் கால்களில் மூன்று விரல்களும் மட்டுமே காணப்படுகின்றன.

அதன்பின் மற்ற விரல்கள் மறைந்து நடுவிரல் பெரிதாகிக் குளம்பாக ஆகிவிட்டது. குதிரைக்கு விரல்கள் இருந்தன என்பதைக் காட்ட இப்போது அதனிடம் உள்ளது பின் கால்களின் பின் புறமுள்ள எலும்பு துருத்திக் கொண்டிருப்பதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/172&oldid=1538489" இலிருந்து மீள்விக்கப்பட்டது