தந்தையும் மகளும்/62
62அப்பா! பாவாடையில் தீப் பிடித்தால் வெளியே ஓடக் கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! வெளியேயும் ஓடக்கூடாது, வீட்டுக்குள்ளும் ஓடக்கூடாது. ஓடினால் தீ அதிகமாகப் பிடித்துக்கொள்ளும். அதற்குக் காரணம் என்ன? தீ எரியும். பொழுது எந்தப் பொருள் எரிகிறதோ, அது காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயு உண்டாகிறது. பிராணவாயு இல்லாவிட்டால் எதுவும் எரியாது. துணியில் தீப் பிடித்தவுடன் ஓடினால், நாம் தீ எரியும்பொழுது உண்டாகும் கரியமிலவாயுவை உடனுக்குடன் துணியை விட்டு அப்புறப்படுத்தி விடுகிறோம். அதனால் எரிவதற்கு வேண்டிய பிராணவாயு எரியும் பொருளுக்கு அதிகமாகக் கிடைத்து விடுகிறது. அதனால்தான் ஓடினால் தீ அதிகமாகப் பரவ நேர்கிறது,
ஆதலால் அந்த மாதிரி சமயங்களில் நாம் செய்ய வேண்டியது யாதெனில் தீ எரிவதற்கு வேண்டிய பிராண வாயு கிடையாமல் செய்வதுதான். அதற்காகப் பெரிய சமுக்காளமோ கம்பளியோ எடுத்து உடம்பு முழுவதும் போர்த்த வேண்டும். அவை இல்லாவிட்டால் உடனே தரையில் படுத்துப் புரளவேண்டும். சன்னல்கள் திறந்திருந்தால் அவைகளையும் வாசலையும் மூடிவிடுவது நல்லது.
தீ உடம்பில் பற்றாமல் வேறு பொருள்களில் பற்றினால் துணிகளாய் இருந்தால் தண்ணீரைக் கொட்டி அணைக்கலாம், எண்ணெயாயிருந்தால் ஜலத்தைக் கொட்ட கூடாது. கொட்டினால் தீ அதிகப்படவே செய்யும். அந்தச் சமயத்தில் மண்ணோ மணலோ போட்டு அணைக்க வேண்டும். மின்சாரத்தில் தீப் பற்றினாலும் மணலையே உபயோகிக்கவேண்டும். அதற்காகத் தான் பாடசாலை போன்ற கட்டடங்களில் வாளிகளில் மணலை நிறைந்து வைத்திருக்கிறார்கள். துணிகளில் பற்றும் நெருப்பையும் மணலைக்கொண்டு அணைக்கலாம்.
கட்டடங்களில் தீப்பிடித்தால் அதை அணைப்பதற்காக அரசாங்கத்தார் "நெருப்பு அணைக்கும் இயந்திரங்களை" பெரிய பட்டணங்களில் வைத்திருக்கிறார்கள். அத்தகைய பட்டணங்களில் உள்ளவர்கள் கட்டடங்களில் தீப்பற்றினால் உடனே அந்த இயந்திர நிலையத்துக்குத் தகவல் கொடுப்பது நல்லது.
இத்தனையும் நான் கூறினாலும் நெருப்புப் பிடிக்க இடம் தராமல் கவனமாக நடந்து கொள்வதே எல்லாவற்றிலும் நல்லதாகும். அதனால் அம்மா! நீ எப்பொழுதும் ஜாக்கிரதையாக நடந்து கொள்.