தந்தையும் மகளும்/7
7அப்பா! வானத்தில் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்களாக இருக்கின்றனவே, நட்சத்திரங்கள் இல்லாத இடமே கிடையாதா?
அம்மா! நீ சொல்வது உண்மைதான், வானத்தில் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்களே தெரிகின்றன. எத்தனை இருக்குமோ யாருக்கும் தெரியாது. நம்முடைய கண்ணால் மட்டும் எண்ணினால் இரண்டாயிரம் வரை தெரியும் என்றும், அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் படம் பிடித்துப் பார்த்தால் 150 கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்றும் வான சாஸ்திரிகள் கூறுகிறார்கள்.
அப்படியானால் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லாத இடமே கிடையாது என்றே தோன்றும். ஆனால் அது உண்மையன்று. தொலையிலுள்ள பொருளை அருகில் தெரியும்படி செய்யும் தொலைநோக்கி வாயிலாக வெகு தூரத்தில் பார்த்தால் தூரம் போகப்போக நட்சத்திரங்கள் தெரியாது, குறைந்து கொண்டே போகிறது. இறுதியில் நட்சத்திரங்கள் இல்லாத இடத்தை எட்டி விடுகிறோம்.
ஆகவே நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே கூட்டமாகத்தான் இருக்கின்றன. அவைகள் உள்ள இடத்தை அறிஞர்கள் பாக்கட் கடிகார உருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள். அந்தக் கடிகாரத்தின் விட்டத்தின் அளவு ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் என்றும் கனம் 10 ஆயிரம் ஒளி ஆண்டுகள் என்றும் கணக்கிடுகிறார்கள்.
ஒளிவருஷம் என்றால் தெரியுமா? சாதாரணமாக தூரத்தை இத்தனை மைல்கள் தூரம் என்று கூறுவோம். ஆனால் நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் அவ்வாறு இத்தனை மைல்கள் என்று கூறமுடியாது. அதனால் வானசாஸ்திரிகள் எதன் தூரத்தைக் குறிப்பிட வேண்டுமோ, அதனிடமிருந்து ஒளி நமக்கு வந்து சேர எத்தனை ஆண்டுகள் செல்லுமோ அதையே அதன் தூரமாகக் கூறுகிறார்கள்.
ஒளியானது ஒரு செக்கண்டு நேரத்தில் 186500 மைல்கள் செல்லும். அப்படியானால் ஒரு ஆண்டில் சுமார் 6 ஆயிரம் கோடி மைல்கள் செல்லும். இது பெரிய தொகையாயிருப்பதால் இந்தத் தூரத்தையே நட்சத்திரங்களின் தூரத்தைக் கூறுவதற்கான அலகாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அலகுதான் "ஒளி ஆண்டு" என்பது
நட்சத்திரங்கள் கடிகார வடிவில் உள என்று கூறினேன் அல்லவா? அந்தக் கடிகாரத்தின் நடுவில் தான் நட்சத்திரங்களுள் பெரும்பாலானவ காணப்படுகின்றன. கடிகாரத்தின் விளிம்புக்கு அருகே செல்லச் செல்ல அவை குறைந்து கொண்டே போகின்றன. விளிம்புக்கு அப்பால் சென்றுவிட்டால் அங்கே நட்சத்திரங்கள் காணப்படுவதில்லை.