தந்தை பெரியார், கருணானந்தம்/013-021

 11. எதிர்த்தார்
இந்திப்போர் - முதல் பரணி - சிறை வாழ்வு - நீதிக் கட்சித் தலைவர் - திராவிடநாடு திராவிடருக்கே முழக்கம் உதயம் - 1938 முதல் 1943 வரை

துஞ்சு புலி இடறிய சிதடன்போலத் தமிழ் மக்களின் உணர்வினை உசுப்பிட முனைந்தார் சென்னை மாகாணப் பிரதமராகப் பதவி ஏற்ற சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார். காங்கிரசின் வேலைத் திட்டங்கள் எத்தனையோ இருக்க, மிக்க அவசரமாகக், காங்கிரஸ் ஆண்டுவந்த எட்டு மாகாணங்களில் வேறெந்த மாகாணத்துக் காங்கிரஸ் மந்திரி சபையும் முயற்சி எடுக்காத நேரத்தில், இவர் மாத்திரம் முந்திக்கொண்டு, இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும், என முதலில் அறிவிப்புச் செய்தார், 1938 பிப்ரவரி 25-ஆம் நாள். 25-4-38-ல் அது நடைமுறைக்கு வந்தது.

தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை; தாய் மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் - என்று காங்கிரசில் இருந்தபோதே பெரியார், 1924-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாகாண மாநாட்டுத் தலைமையுரையில் குறிப்பிட்டுள்ளார். பின்னரும், இந்தி பொது மொழியாக வேண்டுமெனக் காங்கிரசார் வற்புறுத்துவதன் இரகசியம் என்ன என்பதை 1926-ஆம் ஆண்டு “குடி அரசு” இதழில் விளக்கியுள்ளார்:- “100க்கு 97 பேராயுள்ள பார்ப்பனரல்லாதார் செலவில், 100க்கு 3 பேரேயுள்ள பார்ப்பனர்கள், 100க்கு 100 பேரும் இந்தி படித்துள்ளனர். ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே, ஒரு ஒடிந்து போன குண்டூசி அளவு பயனும் இல்லாத இந்தி மொழியை, இங்குப் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதில் 100-ல் 1 பங்கு கவலையாவது இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்படும் பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாக முடியும் போலிருக்கிறது!” வரும்பொருள் உணர்ந்து பெரியார், அன்றே உரைத்த மொழி இது. மேலும் தொடர்ந்து “குடி அரசு” இதழில் எச்சரித்து வந்திருக்கிறார் பெரியார். 1930-ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர். இந்தி மொழி கட்டாயமானால் தமிழ் வளர்ச்சி குறையும்: தமிழர் நலம் குன்றும்; தமிழர் நாகரிகம் அழியும் என்றார் பெரியார். மலைமலையடிகளாரும், இந்தி பொது மொழியாவதற்குத் தகுதியுடையதன்று; இந்தி நுழைப்பால் தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் - எனக் கட்டுரை தீட்டினார்.

தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்தே ஆச்சாரியார், கட்டாயப் பாடமாக்குவேன் என உறுதியாய்க் கூறிவிட்டார். தமிழர் உணர்வோடு விளையாடுவது எனத் திட்டமிட்டே இறங்கியிருக்கிறார்! மேலும், பெரியாரின் சூறாவளி வேகச் சுயமரியாதைப் பொதுவுடைமைப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே பெருவாரியாக ஏற்பட்டு வரும் செல்வாக்கு கண்டு, தமது இனநலன் அழிக்கப்பட்டுவிடுமே என அஞ்சித், திசை திருப்பும் சாணக்ய தந்திரமாகவும் ஆச்சாரியார் இந்தி நுழைப்புப் பணியினைக் கருதினார். 1937 டிசம்பர் 26-ல் திருச்சியில் தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் முயற்சியால், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஒரு தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் கலந்து கொண்டார். இதில் கட்சி, சாதி, மத பேதமின்றி, வைதிகர் உட்படத் தமிழர் அனைவரும் குழுமினர். இந்தி நுழைப்புக்கு எதிர்ப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் கோரல், தனியான தமிழ் மாகாணம் வேண்டல் - ஆகிய முக்கிய தீர்மானங்கள் இங்கு நிறைவேறின. பெரியாரின் உழைப்பினுடைய உருவந்தான் அங்கே அனைவர் சிந்தனையிலும் ஊடுருவிக் காணப்பட்டது. தொடர்ச்சியாகக் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் எதிர்ப்பு உணர்ச்சி வெளிப்படுத்தப்பெற்றது. புத்துயிரும், புதுவன்மையுங் கொண்டவராய்ச் சிலிர்த்தெழுந்தார் பெரியார்!

தமிழவேள் உமாமகேசனார் உறவினரும், வழக்குரைஞருமான திருச்சி தி.பொ. வேதாசலம் பெரியாரிடம் மெய்யன்பு பூண்டவர், நேர்மையும் ஒழுக்கமும் அடக்கமும் அறிவும் மிகுந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான விரிவுரைகள் ஆற்றவல்லவர். பெரியாருக்கும் இயக்கத் தொண்டர்களுக்கும் இவர் இல்லம் திருச்சியில் நல்லதோர் உறைவிடமாகும். பெரியார் பிற்காலத்தில் திருச்சியில் தங்குமிடம் அமைக்க இவரே காரணம். எதனாலோ தமது இறுதி நாட்களில் பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டார். 1971- அக்டோபர் 10 ஆம் நாள் மறைந்தார். இடுகாட்டில் இரங்கலுரை ஆற்றினார் பெரியார்.

1899-ல் பிறந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருச்சியில் புகையிலை வணிகர். மேலான, ஆழ்த்த தமிழ்ப் புலமை வாய்ந்த சான்றோர். பெரியாரின் துணையாகச்
சில ஆண்டுகள் பழகியவர். சுயமரியாதைக் கொள்கைப்பற்றுடன் விளங்குபவர். எண்ணற்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வருகிறார். தமிழுக்கு ஊறு, யாரால், எப்போது, எங்கே நேர்ந்தாலும் எதிர்த்து முதல் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் முதுமையிலும் இளைஞராய், ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

பின்னர் 1938 பிப்ரவரியில் காஞ்சியில் அ.க. தங்கவேலர் முயற்சியால் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. சர் கே.வி. ரெட்டிநாயுடு தலைவர். முன்னாள் சட்ட உறுப்பினர் சர்.எம். கிருஷ்ணன் நாயர் திறப்பாளர். பெரியார் இங்குதான் இந்தி எதிர்ப்புப் போர்ப் பிரகடனம் செய்தார்; போர் போர் போர் என முழங்கினார்; போராட்டம் துவங்கிவிட்டது!

இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படுவது, பொதுவான விஷயம்; அனைவருடைய வரிப்பணத்தில் இருந்துதான் இது செய்யப்படுகிறது; இதைத் தட்டிக் கேட்க வேண்டியது நம்முடைய கடமை என்றார் பெரியார். இந்தி கட்டாயமானால் இந்து மதக் கலாச்சாரம் தொடர்ந்து ஆக்கம் பெறும்; வட நாட்டாரின் அரசியல் ஆதிக்கம் இங்கு நிலைபெற வழி வகுக்கும் - எனவும் எடுத்துக் காட்டினார். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது: அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்! அவை என்ன? பார்ப்பனியத்துக்குத் தமிழ் மக்களைப் புராண காலம்போல் நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதற்கேயாம், சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்திருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடிப் புகுத்துவதற்கேயாம்! இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், தமது சரீரத்தில் ஓடும் பார்ப்பன மதஉணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியேற்றப்பட்டுப் புதிய பகுத்தறிவு ரத்தம் பாய்ச்சப்படவேண்டும் - என்றார் பெரியார்.

ஆச்சாரியார் உறுதியில் பின்வாங்க மறுத்தாரேனும், சிறிது தளர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அதாவது, எல்லாப் பள்ளிகளிலும் என்று எடுத்த முடிவு தேய்ந்து, 125 பள்ளிகளில் மட்டும் என்றும்; முதல் மூன்று ஃபாரங்கள் வரையிலுந்தான் என்றும்; அதிலும் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்று அவசியமில்லை என்றும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும், சூதான உள்நோக்கத்தை நீண்ட நாட்களாகப் புரிந்தவராதலால், ஆச்சாரியாரை நம்பவில்லை பெரியார் மேலும் அவர் தலைமையில் அமைச்சர்கள் எட்டு பேர்; சட்டமன்றத் தலைவர், மேலவைத் தலைவர் ஆகிய பத்துப் பதவிகளில், ஆறு இடங்களில் பார்ப்பனரே இருந்தனர். 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய வேதபாடசாலை அமைத்து, அதில் பல பார்ப்பன ஆசிரியர்கட்கு வேலையும் அளித்தார் ஆச்சாரியார். மாறாகச் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல் செய்வதாகவும், அந்த இழப்பினை ஈடுகட்டக் கிராமப் புறங்களில் ஏழை மக்கள் கல்விக்காக நீதிக்கட்சியினரால் துவக்கப்பட்டிருந்த 2200 ஆரம்பப் பள்ளிகளை மூடிவிடுவதாகவும் ஆச்சாரியார் ஆணையிட்டார். பொற்கொல்லர்கள், தம் பெயருடன் ஆச்சாரி என்ற அவர்களது சாதிப்பட்டத்தை இணைப்பதால் தமது சாதிப் பெருமை குறைவதாக எண்ணி, அவ்வாறு அவர்கள் குறிப்பிடக் கூடாது எனவும் ஆணையிட்டார் சக்கரவர்த்தி இராஜகோபால ஆச்சாரி!

நயவஞ்சகமான ஆச்சாரியாரின் போக்கினை நன்கு அறிந்ததால், பெரியார் காங்கிரசை ஒழிக்கவே இந்தியைக் கருவியாக எடுத்துக் கொண்டு போர் துவக்கியதாக, மற்றவர்கள் குற்றம் சுமத்திய போதும், அவற்றையெல்லாம் துச்சமென ஒதுக்கித் தள்ளிப் பெரியார் குதித்தார் போர்க்களத்தில்; இந்திப் பரணி பாடினார்!

1938-ஆம் ஆண்டு ஜுன் 4-ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் துவங்கப் பெற்றது. பெத்து நாயக்கன் பேட்டை இந்து தியாலாஜிகல் பள்ளி முன்பும், பிரதமர் (முதல் மந்திரி) இல்லத்தின் முன்பும் ஒரு சர்வாதிகாரி தலைமையில் ஒவ்வோரணியினராக மறியல் செய்தனர். ஒரு சர்வாதிகாரி கைதான பின் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல், இப்படியாக ஏராளமான தாய்மார்கள் (குழந்தைகளுடன்) தமிழ்ப் பற்றுள்ளோர், புலவர், ஆசிரியர், துறவிகள், மக்கள் தொண்டர்கள், மாணவர்கள் - இந்தி எதிர்ப்புக் களத்தில் இன்முகத்துடன் இறங்கினர். பல்லடம் பொன்னுசாமி முதலமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பட்டினிப் போர் தொடங்கிக் கைதானார். ஸ்டாலின் ஜெகதீசன் அவரை அடுத்து உண்ணாவிரதம் தொடங்கிச், சாகும் வரையிலும் தொடர்வதென இருந்தார்; அரசுத் தரப்பில் இவருக்கு வஞ்சக வலை விரிக்கப்பட்டு, ஏமாந்து அதில் சிக்கிவிட்டார் இறுதியில்!

காங்கிரஸ்காரர் ஒத்துழையாமைப் போர் நடத்திய காலத்தில், அவர்கள் மீது வெள்ளை அரசால் வீசப்பட்டு, அவர்களால் அப்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட, அதே கிரிமினல் திருத்தச் சட்டத்தையே, இந்தி எதிர்ப்புத் தொண்டர்களின் மீது ஏவிக், கைது செய்து, கடுமையான தண்டனைகளை வழங்கியது ஆச்சாரியார் அரசு அடக்குமுறைக் கொடுமை தாளாது, அக்காலத்திய சில காங்கிரஸ் சார்பு ஏடுகள் கூடக் கண்டித்து எழுதின. நடுநிலையாளரான பல பார்ப்பனப் பிரமுகர்களும் வன்முறைகளை எதிர்த்துக் கருத்துக் கூறினர். சத்தியமூர்த்தி அய்யரோ, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்வோர் மீது ராஜத்து வேஷக் குற்றம் சுமத்தித், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென அரசுக்கு ஆலோசனை கூறினார்! தயாள குணசீலர்!

கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-3- பிரிவின்படிக் கைதானவர்கள் மீது, வழக்குப் போட்டுக், கடுங்காவல் தண்டனை 3,4 மாதங்கள்வரை தந்து, மொட்டையடித்துச் சிறை உடை அணிவித்துக், குல்லாய் போட்டுக், களியும் கூழும் உணவாகத் தந்து வந்தது ஆச்சாரியார் ஆட்சி| இதற்கெல்லாம் அஞ்சாமல் அன்றைக்கு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை, என மகிழ்வோடு சிறை ஏகியவர்கள் எண்ணிக்கை 1269 ஆகும். இதில் பெண்டிர் 73 பேர், மதலையர் 32 பேர்,

மேலும், இந்தியன் பினல்கோட் 117 பிரிவின்படி சி.டி. நாயகம், கே.எம். பாலசுப்பிரமணியம், ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த சாமிகள், சுவாமி அருணகிரிநாதர், பாலசுந்தரப் பாவலர், மறை. திருநாவுக்கரசு, டி.ஏ.வி. நாதன், சி.என். அண்ணாதுரை ஆகியோரைக் கைது செய்து, சிறையிலிட்டு, 3 ஆண்டு தண்டனை வாங்கித்தர முயற்சிகள் நடந்தன. 1938-ஜூன் 26-ல் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு, சென்னைக் கடற்கரையில், பெரியார் தந்த வாசகங்களான தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்பனவற்றை மண்ணதிர முழக்கமிட்டனர்.

செ.தெ. நாயகம் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராயிருந்த தமிழ்ச் சான்றோர். பெரியாரிடம் மிக்க அன்புடையார். குலசேகரன் பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி துவக்கினார். 1944-ல் மறைந்தார்.

டி.ஏ.வி. நாதன் ஆங்கிலமும் தமிழும் பாங்குற எழுதவல்ல வழக்கறிஞர். “ஜஸ்டிஸ்”, “விடுதலை” ஏடுகளின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார்.

முகவை மாவட்ட வெங்கலக்குறிச்சியில் 15-9-1907-ல் பிறந்த பாலசுந்தரப் பாவலர் சுயமரியாதைக் குடும்பத்தின் தலைசிறந்த புலமைத் தொண்டர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; பராசக்தி நாடக ஆசிரியர். “தென்சேனை”, “தமிழரசு” இதழ்கள் நடத்தினார். 1938-ல் சிறைசென்றவர் திராவிடர் கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தண்டனை பெற்றவர், புதுக்கோட்டை ‘பிராமணாள்’ அழிப்புப் போராட்டத்தில், மனைவி பட்டம்மாள், மகள் அறிவுக்கொடி, மகன் தமிழரசனுடன் கலந்து கொண்டார். சென்னையில் பொது மருத்துவமனையில் 1.4.1971 இரவு 10 மணிக்கு மறைந்து, 3-ந் தேதி அடக்கம் செய்யப்பட்டார். குடும்பத்தார் இன்றும் கழகப் பணியில் முன்னணி.

ஈழத்தடிகள் இல்லறத்தில் ஈடுபட்டுக் காஞ்சியில் அண்ணாவின் ஆதரவில் நீண்ட நாள் வாழ்ந்திருந்தார்.

மறைமலையடிகளாரின் மகனார் திருநாவுக்கரசு. தனித்தமிழ் அன்பர். இனித்திடும் பண்பாளர்.
சி.என். அண்ணாதுரை 1934-ல் எம்.ஏ., பட்டதாரி. அடுத்த ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாடு ஒன்றில் அண்ணாவின் பேசுந்திறனால் பெரியார் கவரப்பட்டார். பெரியாரின் கனிவான கவனிப்புக்கு அண்ணா உள்ளானார். இந்தி எதிர்ப்புப் போரில் 1938-ல் ஈடுபட்டுச் சிறை சென்றார். பெரியாருடன் 1940-ல் ஈரோடு சென்று: ‘விடுதலை’ ஆசிரியரானார். 1944-ல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது. புகழ்பெற்ற அண்ணாதுரை தீர்மானம் அங்கே நிறைவேறியது. இயக்கத்துக்கு அண்ணாவின் வரவு இளைஞர்களை ஈர்த்துப் புதுரத்தம் பாய்ச்சியது. பெரியார் உருவாக்கிப் பெருமைக்குரியவராக்கிய எண்ணற்ற சுயமரியாதைத் தளபதிகளில் அறிஞர் அண்ணாவே முதன்மையானவர். பெரியாரின் புகழ் உலகெலாம் பரவியுள்ளதற்கு அண்ணாவை அவர் தமது சீடராக்கிக்கொண்டதும் ஒரு காரணம். சாக்ரட்டீசுக்குப் பிளாட்டோவும், புத்தருக்கு அசோகனும், மார்க்சுக்கு லெனினும் போல் பெரியாருக்கு அண்ணா! இங்கர்சாலும், ரஸ்ஸலும் யாரைக் குருவாகக் கொண்டனரோ; ஆனால் அண்ணாவுக்கு ஆசான் பெரியாரே! 1949-ல் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தபோது, தான் தலைவராகக் கண்டதும் கொண்டதும் பெரியார் ஒருவரைத்தான் எனக் கூறித் தலைவர் இல்லாத நிறுவனமாகவே அதனைக் கண்டார் அண்ணா , 1967-ல் அண்ணா தமது அமைச்சரவையையே பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர். 1969. பிப்ரவரி 3-ஆம் நாள் இந்தப் பேரறிவாளர் கல்லறையானார்; பெரியாரின் கண்ணீரால் குளிப்பாட்டப்பெற்றார். “புரந்தார் கண்நீர் மல்கச் சாகிற் பின் சாக்காடு இரந்து கோள் தக்க துடைத்து.”

அடக்குமுறை வெறியாட்டம் போட ஆரம்பித்துவிட்டால் அதற்கு முடிவேது? மதுவருந்திய மந்தியைத் தேளும் கொட்டி விட்டால் எப்படியிருக்கும்? “விடுதலை” நாளேட்டின் மீது ராஜத்து வேஷ, வகுப்புத்துவேஷ வழக்குகள் போடப்பட்டன. அரச வெறுப்புக் குற்றம் என்பது தள்ளப்பட்டது. வகுப்பு வெறுப்புக் குற்றத்துக்காக “விடுதலை” ஆசிரியர் பண்டித முத்துசாமியும், வெளியீட்டாளர் ஈ. வெ. கிருஷ்ணசாமியும் ஆளுக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை பெற்றனர் கோவையில்.

தமிழர் தன்மான உணர்வோடு, மிகுந்த வீறுகொண்டு எழலாயினர். நாடு முழுவதும் தமிழ் வாழ்க இந்தி ஒழிக எனும் - வீரமுழக்கம் ஒலிக்காத இடமில்லை. அன்று ஆச்சாரியார் மூட்டிய இந்தி எனும் செந்தீ இன்றளவும் கொழுந்துவிட்டெரிகின்றது. முந்தி அவரே மூட்டிய தீயைப் பிந்தி அவரே அணைக்க நினைத்து மனம்மாறியும் முடியவில்லை. இந்தியாவின் தலைமைப் பீடத்தை யார் அலங்கரித்தாலும் சாம்பல் பூத்த இந்தி நெருப்பை ஊதி எரியவிடுவது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீரால் அல்ல; கண்ணீராலும் செந்நீராலும் அணைத்துப் பார்த்தும் அது தணிய மறுக்கிறது!

முதன் மந்திரியான ஆச்சாரியார் வீட்டு முன்னர் மறியல் செய்வது அரசுக்கு இடையூறாக உள்ளது என உணர்ந்த பெரியார். அதைத் தவிர்க்குமாறு பெருந்தன்மையுடன் தமது தொண்டர்களைக் கேட்டுக் கொண்டும், அரசின் அடக்குமுறைக் கொடுமை குறையவில்லை; போராட்டம் தொடர்ந்தது!

திருச்சியில் வழக்கறிஞர் கலிபுல்லா தலைமையில் பெரியார் கலந்து கொண்ட வழியனுப்புக் கூட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் புதுமையான முன்னுதாரணம் படைத்தது. தமிழர்படை என்பதாக 100 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டு, அவர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டு, வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கொண்டு 42 நாள் நடந்தே 577 மைல் கடந்து சென்னை சென்றடைவது என்பதாக ஒரு திட்டம். இந்தத் தமிழர் படைக்குத் தஞ்சை பள்ளியக்ரகாரம் அய். குமாரசாமி தலைவர். திருச்சி “நகரதூதன்” ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி யுத்தமந்திரி, பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி அணித்தலைவர். திருப்பூர் முகைதீன், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் முன்னணியில், தொண்டர்களுக்கு அறிவுரை கூறி, 1938-ஆகஸ்டு 11-ஆம் நாள் வழியனுப்பி வைத்த பெரியார், 1938- செப்டம்பர் 11-ஆம் நாள் - அதே தமிழர் படையை வரவேற்றுச், சென்னைக் கடற்கரையில் திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பெருவெள்ளத்தில், வீரமுழக்கம் செய்தார். அங்கே ஒரு புதுக்கர்ச்சனை புரிந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் அது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கை திடீரெனப் பெரியாரின் உள்ளத்திலிருந்து வெடித்ததல்ல. இந்திய அரசியல் அமைப்பில், தமிழர் நலன் தனியாகப் பாதுகாக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை . எந்நாளும் பார்ப்பனரும் வடநாட்டாரும் ஆதிக்கம் செலுத்தியே வருவர். இதற்கான பரிகாரம், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர்கைக்கு வருவதுதான் என்பன போன்ற கருத்துகள் 1930-ஆம் ஆண்டு முதலே பெரியாரின் உள்ளத்தில் உருவாகி வந்தன.

பின்னாளில் புதுக்கோட்டை திவானாக விளங்கிய கலிபுல்லா, பெரியாரிடமும் இயக்கத்தினிடமும் மிகுந்த பற்றுள்ளவர். போராட்டத்தை அவர் நெடுநாள் ஆதரித்து வந்தார்.

திருப்பூர் முகைதீன் இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளிலும் முழங்கி வந்த ஆவேசப் பேச்சாளர். முஸ்லிம் லீகில் இருந்தவாறே நல்ல நட்புடன் ஆதரித்துவந்த பண்பாளர்.

“நகர தூதன்” இதழில் பேனா நர்த்தனம் என்ற பகுதியில், உண்மையிலேயே தமது பேனாவை நடனமாடவிட்ட நயமான எழுத்தாளர் திருமலைசாமி. கேலியும் கிண்டலும், வீரமும் விவேகமும் கொப்புளிக்க எழுதுவார். பெரியாரின் அன்பர்.

இந்திப் பரணி பாடிய இந்தத் தரணி முதல்வர் பெரியார்மீது, ஆச்சாரியார் அரசு வழக்குத் தொடர்ந்து 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்தது. அன்பான எதிரி ஆச்சாரியார், தமது நண்பரின் இந்தி எதிர்ப்புப் போருக்காக அளித்த இன்பமான பரிசு பெரியாரின் ஃபோர்டுகார் (டூரர்மாடல்) 181 ரூபாய்க்கு அரசினரால் ஏலத்தில் விடப்பட்டது; அபராதத் தொகை வசூலிக்க என்று!

1938 நவம்பர் 26-ல் கைது செய்யப்பட்ட பெரியார் மீது வழக்கு, 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. தமது நண்பர்களான பாரிஸ்டர் பன்னீர்செல்வம், செட்டி நாட்டு இளவரசர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் வேண்டியும், பெரியார் தமது வழக்கம் போலவே எதிர் வழக்காடவில்லை . எழுத்து வடிவில் அறிக்கை ஒன்றினை நீதி மன்றத்தில் வெளியிட்டார். சென்னை ஜார்ஜ்டவுன் 4-வது போலீஸ் நீதிபதி மாதவராவ்தான் விசாரித்துத் தண்டனை வழங்கியவர். பெரியார் அறிக்கையில் என்ன கூறியிருந்தார்? “நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும், அல்லது கிளர்ச்சியும், அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு, வன்முறையில்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியார் பேசிவிட்டார். நீதிபதியோ, காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தரமுடியுமோ அதையும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புத் தரமுடியுமோ அதையும், கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்” - என்பதாகத் தமது அறிக்கையில் பெரியார், தமது உள்ளக் கிடக்கையைத் தெள்ளிதின் விளக்கியிருந்தார். முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியாரை 1939 பிப்ரவரி 16-ல் பெல்லாரி சிறைக்கு மாற்றினார்கள்.

பெரியார் சிறைப்பட்டபோது, தமது தனித்தமிழ்க்குருதி கொதிப்பேறத் திரு.வி.க. தமது “நவசக்தி” ஏட்டில் மிக இரக்கத்துடன் அருமையான தலையங்கம் தீட்டியிருந்தார். ஓய்வு என்பதை அறியாது வீரக்கர்ச்சனை புரிந்துவந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது - என்ற முடித்திருந்தார்.

பெரியார் சிறையேகிய பின்னர்தான், சென்னை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த தாளமுத்து, நடராசன் என்னும் இரு மாவீரர்கள் அடக்குமுறை காரணமாய், சிறையிலேயே உயிர் நீத்துக் களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15-ஆம் நாள் நடராசனும், மார்ச் 13-ஆம் நாள் தாளமுத்துவும் மாண்டனர். தமிழகமே கொந்தளித்துக் குமுறியது.

முதல்முறை யென்றாலும், 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர் உலக வரலாற்றில் மேலான இடம் பெறத்தக்கதாகும். தமிழ் நாட்டிலேயே, தமிழ்நாட்டார், தமிழ் வாழ்க என்று முழங்குவதற்காகத் தண்டிக்கப்படும் கொடுமையை நடுநிலையாளர் கண்டித்தனர். தமிழ் நாட்டின் வீரமகளிர், சென்னையில் 1938 நவம்பர் 13-ஆம் நாள், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்ற பெயரில், மறைமலையடிகளார் மகளாரும் திருவரங்கனார் துணைவியாருமாகிய நீலாம்பிகை அம்மையார் தலைமையில் உணர்ச்சியுடன் கூடினர். பெரியாரின் தீரமிக்க சொற்பொழிவைக் கேட்டுத் தன்மானக் குருதி சூடேறத் தாமும் மறியலில் பெருமளவில் ஈடுபடத் துணிவு கொண்டனர். இந்த மாநாட்டில் தீர்மான வடிவமாக, இனித் தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரை அனைவரும் பெரியார் என்றே அழைத்திடல் வேண்டுமென முடிவு செய்தனர்.

அடுத்து, வேலூரில் 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடும், பண்டித நாராயணி அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடும் எழுச்சியுடன் கூடி, இனித் தமிழர்களின் தலைவர் பெரியாரே என்றும், எந்நாளும் அவர் மொழிவழி நடப்பதாகவும் உறுதி பூண்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் 1938 டிசம்பர் 29, 30, 31 நாட்களில் நீதிக்கட்சியின் 14-ஆவது மாகாண மாநாடு எழுச்சியும் உணர்ச்சியும் பொங்கிடக் கூடியது. லட்சக்கணக்கான, மக்கள், பெரியார் இல்லாமல் நடைபெறும் இந்த மாநாட்டில் கடமையுணர்ச்சியோடு குழுமியிருந்தனர். மாநாட்டின் தலைவராக, முன்னரே பெரியாரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர்.

பெரியார் பெல்லாரி சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதுபோல் வடிவு அமைக்கப்பட்ட அலங்கார வண்டி ஊர்வலமாய் வந்தது. மாநாட்டு மேடையில் தலைவரின் நாற்காலியில் பெரியாரின் உருவப் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன் - என்று நன்னீர்மை கொண்ட பன்னீர் செல்வனார் நாத் தழுதழுக்கத் தமது பெருமீசை துடிதுடிக்கக் கூறித் தமக்களித்த மாலையைப் பெரியார் படத்துக்குச் சூட்டினார். பெரியாரால் முன்பே தயாரித்துத் தரப்பட்டிருந்த தலைமையுரையை இவரே படித்தார். சிறையிலடைபட்டிருந்த சிங்கம், இந்தத் தங்கத் தமிழ் நாட்டுக்குப் பங்கம் நேராமல் பாதுகாத்திட, நீதிக் கட்சியின் தலைவராக ஒரே மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில் குழுமியோர் அனைவரும் ஒரு முகமாக எழுந்து நின்று, எங்கள் மாபெருத் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கின்றோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும், சொல்வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம் - என்னும் உறுதி மொழியிளைத் தமிழிலும், தெலுங்கிலும் எடுத்துக் கொண்டனர்.

பெரியார் தமது தலைமையுரையில், தாம் நிதிக் கட்சியில் தலைவரானதால் சுயமரியாதை இயக்கத்தின் எந்தக் கொள்கைக்கும் எள்ளளவு ஊனமும் நேரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இந்து மதப்படிச் சூத்திரர்தான் உழைப்பாளர், தொழிலாளர் பார்ப்பனரல்லாதவர் எல்லாம் நாம் எல்லாரும் திராவிடர் என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். உலகில், எல்லா மக்களுமே உழைத்து, உழைப்பின் பலனை விகிதாச்சாரப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேசபக்தி, தேசியம், தேசவிடுதலை, ஆத்மார்த்தம், பிராப்தம் என்று சொல்லி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் போக்கை அடியோடு ஒழிக்க வேண்டும் - இதற்கு ஒரே பரிகாரமாகத் தமிழ்நாடு தமிழருக்கே ஆகவேண்டும் - என்றெல்லாம் பெரியார் நன்கு விளக்கம் அளித்தனர். இளமைப் பிராயத்தில் இயல்பாக அவருள் கருவாகிக் கிளர்ந்தெழுந்த சிந்தனைச் செல்வமே, கொள்கையாய்க் கோட்பாடாய் இலட்சியமாய் இயக்கமாய்ப் பேச்சாய் எழுத்தாய் வழக்காய் போராட்டமாய் வெற்றியாய் உருவும் திருவும் பெற்றுப் பற்பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியாய்ப் பல்கிப் பெருகி வந்ததைத் தெளிவாகக் காண முடிகின்றது. அடிப்படையில் அணுவளவு மாற்றமும் செய்யாமல், கட்டடத்தின் முதல் தளம், இரண்டாந்தளம், மூன்றாந்தளம் என வசதிக்கும் வாய்ப்புக்கும் நேரத்துக்கும் தேவைக்கும் ஏற்ப எழுப்பிச் செல்வதுதான் அவரது நடைமுறை என்பதும் நுட்பமாய்க் காண்போர்க்குத் திட்பமாய்ப் புரியும்.

தமது அறுபதாவது வயதில், அரசு ஊழியராக இருந்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கிடக்கவேண்டிய வயதில் பெரியார் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெயிலின் வெம்மை அதிகமாகத் தாக்கும் பெல்லாரி சிறையில், அடக்குமுறைக் கொடுமைகளால் அவதியுற்று, உடல் நலிந்து, வயிற்று நோயினால் துன்புற்று வந்தார். வெளியிலிருந்து, வெயிலின் கொடுமையைவிடக் காங்கிரஸ் புதிய ஆட்சியின் அடக்குமுறைக் கொடுமையை அதிகம் அனுபவித்து வந்த தமிழ் மக்கள், பெரியார் வாழ்க எனச் சந்து பொந்துகளிலும் கூடச் செந்தமிழ் முழங்கிச் சிந்து பாடி வந்தனர்.

சென்னை மாகாண அரசு என்ன எண்ணிற்றோ தெரியவில்லை; 1939-ஆம் ஆண்டு மே திங்கள் 22-ஆம் நாள் எந்தக் காரணமும் அறிவிக்காமல் திடீரென்று பெரியாரை விடுதலை செய்து விட்டது. 190 பவுண்டு எடையுடன் சிறை சென்ற பெரியார், ஆச்சாரியார் ஆட்சிக்கு விலையாகத் தமது எடையில் 24 பவுண்டு அன்பளிப்பாக வழங்கியே வெளியில் போந்தார். தாளமுத்து - நடராசன் ஆகிய இரு இளங்காளைகளே சிறைக் கொடுமையால் உயிர்த் தியாகம் செய்ய நேர்ந்ததே! தள்ளாத வயதில் பெல்லாரிச் சிறையில் வாடும் தலைவர் பெரியாரை நாம் உயிருடன் காண்போமா? என அய்யுற்றுக் குமைந்த தமிழ் மக்கள் களிப்பால் கூத்தாடினர் ஊருக்கு ஊர் வரவேற்பும், பணமுடிப்பு வழங்கலும் போட்டி போட்டுக் கொண்டு நடைபெற்ற வண்ணமிருந்தன!

விடுதலை பெற்று வெளிவந்தவுடன், சென்னையில் தம்மைச் சந்தித்த பத்திரிகை நிருபர்களிடம் பெரியார், இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடரும் எனவும், புதிதாகக் காங்கிரஸ் அரசால் விதிக்கப்பட்டுள்ள வணிக விற்பனைவரி அநீதியானது என்றும், ஆந்திரா தனி மாகாணமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், தமது தலைமையில் நீதிக்கட்சி தன்மானச் சமதர்ம அடிப்படையிலேயே இயங்கும் எனவும் விரிவாக எடுத்துரைத்தார்.

அவ்வாறே, கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மீண்டும் இந்தி எதிர்ப்பு மறியல் மிக உத்வேகத்துடன் தொடங்கியது. ஏற்கனவே தண்டிக்கப்பட்ட தோழர்கள் இன்னும் சிறையில் வாடத், தம்மை மட்டும் விடுவித்தனரே, எனச் சங்கடமும் சஞ்சலமும் அடைந்திருந்த பெரியார் மனம் மகிழ, முதல் அணியாக 1939 ஜூன் 6-ஆம் நாள் சிலர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது அணியாக 1939 நவம்பர் 15-ஆம் நாள் மீதியிருந்த தோழர்களும் சிறையின்றும் விடுவிக்கப்பட்டனர். ஆக மொத்தம் 1271 பேர் சிறைத்தண்டனை பெற்றவராவர். அரசுக்கு ஏதோ நல்லெண்ணம் முளைத்து விட்டதாகத் தவறியும் யாரும் கருதி விடக் கூடாதே என்று. “விடுதலை” அலுவலகம். நீதிக்கட்சி அலுவலகம் ஆகியவை சோதனையிடப் பெற்றுக் கண்காணிப்புக்கு இலக்காயின.

பெரியாருடைய சிறைவாசம் அவருக்கு இன்னொரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்திருந்தது. இது புதிய சிந்தனை என்பதைவிடப் பட்டை தீட்டப்படாமல் ஒளி மங்கியிருந்த ஒரு வைரக்கல்; அது சிறை வாழ்க்கையில் துப்புரவு செய்யப்பட்டுப் பட்டை தீட்டப்பெற்றுச் சுடரொளி வீசுமாறு பிரகாசமாக்கப்பட்டது எனலாம். அதாவது நமது இனத்துக்கு என்று ஒரு பெயர் இல்லாதது போல, நாம் நம்மை ஏன் பார்ப்பனர் அல்லாதவர் என்று சொல்ல வேண்டும்? நூற்றுக்கு மூன்று பேராயிருப்பவர் பெயரைச் சொல்லி, நூற்றுக்குத் தொண்ணூற்றெழு பேராயிருப்பவர் - அது அல்லாதவர் - என்று சொல்லி வருவது என்ன நியாயம்? நம்மை இந்தியன் என்றும், இந்து என்றும் கருதிக் கொள்வதால் வரும் இழிவுதானே இது? எனவே சரித்திரப்படித் தமிழ் நாட்டின் பூர்வகுடிகளான நாம் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் தாமே? எனவே நமது இனப்பெயர் திராவிடர்; அவர்கள் வேண்டுமானால் திராவிடர் அல்லாதவர் என்று வைத்துக் கொள்ளட்டும். திராவிடர்களாகிய நமது நாடு திராவிடருக்கே ஆகவேண்டாமா? இவ்வளவேன்? பார்ப்பனர்கள் ஆரிய வழி வந்தவர்கள் என்பதை அவ்வகுப்பைச் சார்ந்த சரித்திர ஆசிரியர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்! எனவே நமது நாட்டில் நடைபெறுவது ஆரிய திராவிடப் போராட்டமேயாகும். இதற்கு முடிவு வடவர் பிடியிலிருந்த திராவிட நாட்டைத் தனி நாடாக்குவதே - எனப் பெரியார், 1939 - ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் நாள் “குடி அரசு” இதழில் முதன் முறையாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து திராவிட நாடு திராவிடருக்கே என்ற உரிமை முழக்கம் நாடெங்கணும் எதிரொலிக்கத் தொடங்கிற்று. இந்திய அரசியல் அமைப்பில் இருந்து கொண்டே, தனிநாடு ஒன்று பிரிக்கப்படவேண்டும் என்ற தத்துவத்தை உருவாக்கியவரும் உலகுக்கு அறிவித்தவரும் முதன் முதலாகப் பெரியார் ஒருவரே என்பது வரலாற்றின் மாபெரும் உண்மைக் குறிப்பாகும்!

1939-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 10-ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் செயற்குழு நடைபெற்றது. அரசர்கள் கட்சி என்று அழைக்கப்பட்ட அந்த நீதிக்கட்சியைப் பயங்கர சமதர்மவாதி என அழைக்கப்பட்ட பெரியார், தமது இல்லத்துக்கே குடியேற்றிவைத்துப் பெருமை சேர்த்தனர். மேலும், ஆங்கிலேய அடிவருடிக் கட்சி என எள்ளி நடையாடப்பட்ட நீதிக்கட்சி, அதுவரை இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து போதும் என்ற அடிப்படைக் கொள்கை தான் கொண்டிருந்தது. அதையும் அடியோடு மாற்றித் பூரணச் சுதந்திரம் வேண்டும் எனப் புரட்சியும் செய்துவிட்டார் பெரியார். இலங்கையில் துயருறும் தமிழர் நிலை குறித்தும், இந்தி எதிர்ப்புத் தொடர் போராட்டம், எதிர் வரும் ஜில்லா போர்டு நகரசபைத் தேர்தல்கள், தனி ஆந்திர நாடு அமைப்பு போன்ற விஷயங்களிலும் நீதிக்கட்சியின் செயற்குழு தனது கண்ணோட்டத்தை விசாலப்படுத்த வகை செய்தார் தலைவர் பெரியார்.

இந்தியர்களின் கோரிக்கைகளை நேரிடையாகக் கண்டறிய, அப்போதைய இந்தியா மந்திரி சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் கிரிப்ஸ்மிஷன் என ஒன்று இந்தியாவுக்கு வருகை புரிந்தது. பெரியார் நீதிக்கட்சித் தலைவர் என்ற முறையில் கிரிப்ஸைத் சந்தித்துத் தமது திராவிடநாடு கோரிக்கையை விளக்கினார். கிரிப்சோ முதலில் இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா எனப் பிரித்தால், பிறகு திராவிட இந்தியா, வட இந்தியா தானே வந்து விடும் என்பதாகக் கருதினாராம்.

“குடி அரசு” வார இதழும், “விடுதலை” நாளேடும் கொடிகட்டிப் பறக்கின்றன. அண்ணாவின் எழுத்தோவியங்கள்; எஸ்.எஸ். மாரிசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை , என்.வி. நடராசன் ஆகியோரின் கருத்தாழமிக்க கட்டுரைகள் அணிசெய்கின்றன. ஆரியர் - திராவிடர் பற்றி இலக்கிய ஆதாரங்கள் வரலாற்று உண்மைகள் பூகோளச் சான்றுகள் அடுக்கடுக்காய் எடுத்தாளப்படுகின்றன. புள்ளி விவரங்கள் பார்ப்பனக் கொள்ளையை விளக்குகின்றன. கெஜட் பதிவு பெற்ற 650 உத்தியோகங்களில் 350 பார்ப்பனர்க்கு; நூறு ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் பெறும் உத்தியோகங்கள் 6000-ல் 3508 பார்ப்பனர்க்கு; முப்பத்தைந்து முதல் அறுபது ரூபாய் வரை சம்பளம் பெறும் அலுவல்களில் 8000 பார்ப்பனர்க்கும் 9000 மற்றவர்க்கும் என்ற நெஞ்சு பதறும் நிலைமை விளக்கப்படுகின்றது.

1938-ஆம் ஆண்டு இந்திப் போரில் கண்டெடுத்த தொண்டர் மாணிக்கம் என்.வி. நடராசன், அதுவரையில் காங்கிரஸ்காரர்; சென்னை பெத்து நாய்க்கன் பேட்டை வாசி. பெரியாரின் உண்மைத் தொண்டர், அண்ணாவின் அருமை நண்பர். - திராவிடன் வார இதழில் இவர் பேனாவின் திறம் காட்டி வந்தார். தி.மு.க. அமைப்புச் செயலாளராக நெடுநாள் உழைத்தவர், எளியவர், தொழிலாளர் தோழர், கலைஞர் அமைச்சரவையில் உறுப்பினராயிருக்கும் போதே 1975-ல் மரணமடைந்தார். மக்களான சோமு, செல்வம் தி.மு.க. தொண்டர்கள். அனைத்துக் கட்சியினராலும் என்றும் நட்புரிமை பூண்டு கொண்டாடப்பட்ட, சுயமரியாதை இயக்கத்தின் மக்கள் தொடர்புத் தலைவர்.

எஸ்.எஸ். மாரிசாமி இடதுகையால் மிகமிக விரைவாகச் சரமாரியாகக் “காண்டிபம்” வாயிலாகப் பொழிவார். முதலில் காமராசருக்கும், பின்னர் இராஜாஜிக்கும் அதன்பின் கலைஞருக்கும் அணுக்கமான நண்பராக விளங்கினார். மாநிலங்களவை உறுப்பினராக நன்முறையில் கடமையாற்றியவர். 1976 மிசாக் கைதியாகி விடுதலையான பின், சிறிது நாள் ஒய்வில் இருந்தார்.

1939 செப்டம்பர் 3-ஆம் நாள் மூண்ட இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் சம்மதம் பெறாமல் இந்தியாவையும் பிரிட்டன் ஈடுபடுத்தியது தவறு என்றும், அதைக் கண்டிக்கும் முகமாகத் தான் வெளியேறுவதாகவும் கூறித், தமது இருபத்தெட்டு மாத ஆட்சியை விட்டு, எட்டு மாகாணக் காங்கிரசும் பதவி விலகியது. சென்னை மாகாணப் பிரதமரான இராசகோபாலாச்சாரியார் 1939 அக்டோபர் 27-ஆம் நாள் பதவி நீத்தார். இதற்குள் சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹோப் நீதிக்கட்சியின் அரசை உடனே அமைக்குமாறு கட்சித் தலைவர் பெரியாருக்குத் தாக்கீது அனுப்பினார். ஆச்சாரியாரே பெரியாரிடம் வந்து, சண்டை சமயத்தில் அட்வைஸரி ஆட்சி நடக்க விடுவது ஆபத்து. தயவு செய்து நீங்கள் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நானும் மந்திரியாக இருந்து, எங்கள் ஆட்களிலும் 2, 3 பேரை இருக்கச் செய்து உதவுகிறேன் என்று கூறினார்.

பெரியாரோ முன்னெச்சரிக்கையாக அக்டோபர் 25-ஆம் நாள், சென்னை அடையாற்றில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில், நீதிக்கட்சி பதவி ஏற்காது என்றும், நேசநாடுகளின் போருக்கு ஆதரவு தரும் என்றும் முடிவுகளை மேற்கொண்டார். வலிய வந்த பதவி நாற்காலியைத் தலைவர் இப்படி எளிமையாக உதறிவிட்டாரே என்று சில பதவியாசைத் தோழர்கள் மனத்திற்குள் பொருமினர். தமது முடிவை 29-ஆம் நாள் பெரியார் அறிவித்து விட்டார். நாற்பதாண்டு கட்கு முன்னரே தம்மை நாடி வந்த சென்னை மாகாணப் பிரதமர் பதவியை ஒதுக்கிய பெரியாரின் மாண்பு என்னே! வெள்ளுடை வேந்தரை நினைவுறுத்தும் இச்செயலில், அதனிலும் மேலான முற்போக்கு ஒன்றும் உள்ளது. அன்னார் தமக்குத்தான் பதவி வேண்டாமென்றார்; தியாகராயரைப் போன்றே நீதிக்கட்சித் தலைவரான பெரியாரோ, தமது கட்சியே பதவி ஏற்காதெனத் திட்டமாகக் கூறிவிட்டார்! பெரியாரைப் பற்றிச் சரியாகப் புரியாத கவர்னரோ, பன்னீர் செல்வத்திடம், உங்கள் தலைவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியமா? அடுத்து முதல் மந்திரி அவர்தான் - என்றாராம். செல்வமோ, எங்கள் தலைவர் உங்கள் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே என்று, அவரது வாயை அடைத்தாராம்.

நவம்பர் இரண்டாம் நாள் பண்டித முத்துசாமியாரும், ஈ.வெ. கிருஷ்ணசாமியாரும் விடுதலை பெற்று வெளிவந்தனர். பெரியாரே சிறை வாசலில் சென்று அன்னாரிருவரையும் வரவேற்றுச் சிறப்பித்தனர். ஈ. வெ. கிருஷ்ணசாமியோ முன்னிலும் தீவிரத்துடன், ஈரோட்டில் ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி ஒன்று துவக்கிப் பணிபுரியலானார். ஈரோட்டில் திராவிட நடிகர் கழகம் ஒன்றைப் பெரியார் 1939 நவம்பர் 24 ஆம் நாள் துவக்கி வைத்தார்.

வடவர் ஆதிக்கம் அடியோடு தகர்க்கப்பட்டுத் தமிழர் சுய ஆட்சி உரிமை பெறவேண்டும் என்ற அடிப்படையில் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை உருவாக்கி, முதன் முதலாக இதே தலைப்பில், “குடி அரசு” 1939 டிசம்பர் 17 ஆம் நாள் இதழில் தலையங்கம் தீட்டினார். பின்னர் இந்தியாவில் இந்துக்களாலும், காங்கிரஸ் கட்சியாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்காது என்பதாகக் கருத்து வெளியிட்ட அனைத்திந்திய முஸ்லிம் லீக் தலைவர் முகம்மதலி ஜின்னாவை ஆதரித்து. 22 -ஆம் நாள், அவரது அறிவிப்பைப் பெரியாரும் வழிமொழிந்தார். திராவிடநாடு பிரச்சினையைத் தமக்கு 61-வது பிறந்த நாள் விழாவெடுத்த திருவாரூரில் 18-ம் தேதியும், பின்னர் காஞ்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி விவாதிக்கக் கூடிய குழுவில் 31-ந் தேதியும் விரிவாக விளக்கினார் பெரியார்.

பம்பாயில் சுயமரியாதை இயக்க - நீதிக்கட்சித் தோழர்களும், டாக்டர் அம்பேத்கரும் பெரியாரின் வருகையை மிகவும் விழைந்தனர். நெடுநாளைய அவர்களது விருப்பத்திற்கு ஒருப்பட்டுப், பெரியார் தமது குழுவினருடன், ரயில் மார்க்கமாக 1940 சனவரி 6-ஆம் நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார். குழுவில் “சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்ரமணியம், “ஜஸ்டிஸ்” ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், கே.எம். பாலசுப்ரமணியம், அறிஞர் அண்ணா ஆகியோர் இருந்தனர். டாக்டர் அம்பேத்கார் பெரியாருக்கு 6-ந் தேதி இரவு விருந்தும், 9-ந் தேதி இரவு விருந்தும், 7-ந் தேதி மாலை தேநீர் விருந்தும் அளித்துச் சிறப்பித்தார். 8-ந் தேதி இரவு ஜனாப்ஜின்னா அவர்களை அவரது இல்லத்தில், டாக்டர் அம்பேத்கரும் உடனிருக்கப், பெரியார் சந்தித்துப் பேசினார். தமது இந்தி எதிர்ப்பு பற்றி விளக்கவே, அவர்களிருவரும் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர். தனிநாடு பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தார். மூவரும் ஆங்கிலேயர்களின் பிரியத்துக்குரிய காங்கிரஸ் பிடியிலிருந்து நாட்டை எப்படி விடுவிப்பது? இந்துக்களின் கொடுமையிலிருந்து - முஸ்லிம், தாழ்த்தப்பட்ட, திராவிட இன மக்களை எப்படி மீட்பது? என்பது பற்றியெல்லாம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பம்பாய் வாழ் இயக்கத் தோழர்களின் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பெருமையுடன் கலந்து கொண்டு, அவர்களைப் பூரிப்பில் ஆழ்த்திய பெரியார், சனவரி 10-ஆம் நாள் புறப்பட்டார்; இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்தைத் தூளாக்கும் வெடிமருந்தைத் தூவி விட்டு!

தமிழகத்திற்குத் திரும்பிய பெரியார், காங்கிரஸ் ஆட்சி ஒழிந்த பின்னும், அது புகுத்திய கட்டாய இந்தி இன்னும் ரத்தாகாத நிலை குறித்துக் கண்டித்து வந்தார். கவர்னரின் கீழிருந்த அட்வைசர் ஆட்சி, 1940 பிப்ரவரி 21-ஆம் நாள் வெளியிட்ட உத்தரவில், இந்தியை விருப்பப் பாடமாக வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. கட்டாய இந்தி ஒழிந்ததற்குக் களிப்புத் தெரிவித்தாலும், மக்களின் வரிப்பணத்திலிருந்து விருப்பப் பாடமாகவேனும் இந்தி கற்க அவசியமில்லையெனப் பெரியார் வெறுப்பும் தெரிவித்தார். மற்றப் பத்திரிகைகள் எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், ஆதரவு தெரிவித்து வந்த “மெயில்” ஏட்டுக்குப் பெரியார் தமது நன்றியை, 25-ஆம் தேதி “குடி அரசு” அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் நீதிக்கட்சியின் தலைமை அலுவலகத்தை 1940 பிப்ரவரி 4-ஆம் நாள் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். பிரிட்டிஷ் அரசு அவரை லண்டனில் இந்தியா மந்திரி ஆலோசகராக நியமித்திருந்தது. பெரியார் அளவற்ற மகிழ்ச்சியுடன் அவரைப் பாராட்டினார். லண்டன் புறப்படுமுன் தமிழ் நாடெங்கும் அவருக்கு வழியனுப்பு விழாக்கள் சிறப்புடன் நடைபெற்றன. ஆனால் அந்தோ! அவர் புறப்பட்டுச் சென்ற ஹனிபால் என்ற விமானம் மார்ச் 1-ஆம் நாள் காணாமல் போய்விட்டதாக ஒரு செய்தி வந்தது. இதுவரையில் அது என்ன ஆயிற்று என்பதைக் கண்டறிய முடியாத ஒரு மர்மமாகவே அது போய்விட்டது. தமது துணைவியார் நாகம்மையார், தமது தாயார் சின்னத்தாயம்மையார், தமது அண்ணன் மகன் லண்டனில் படித்த ரங்கராம் ஆகியோர் மறைந்த போதும் கண்ணீர் சிந்தாத பெரியார், தமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாயிருந்தவரும், ஓயாத உழைப்பாளரும், தம்மிடம் களங்கமற்ற அன்பும் விசுவாசமும் கொண்டவருமான பன்னீர்செல்வம் மறைவுக்குக் கலங்கிக் கதறி, முதன் முறையாகக் கண்ணீர் வடித்தார்! அவருக்குக் கிடைத்த பதவி, சர்க்கரை தடவிய நஞ்சு உருண்டை குத்திய தாண்டில் முள்ளாகவும், பன்னீர்செல்வம் அத்தூண்டிலில் சிக்கிய மீனாகவும் ஆன நிலையினை எண்ணி எண்ணி மனம் குமைந்தார் பெரியார்! ஏப்ரல் 2-ஆம் நாள் பன்னீர்செல்வம் மறைவுக்குத் துக்க நாள் என்று அறிக்கை வெளியிட்டார். ஏப்ரல் 7-ஆம் நாள் கோவையில், என். ஆர். சாமியப்பா, பா. தாவுத்ஷா, சர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் பங்கேற்ற நீதிக்கட்சி மாநாட்டு அரங்கிற்குப் பன்னீர் செல்வம் பெயரைச் சூட்டினார் பெரியார்!

இதற்கிடையில் ஜனாப் ஜின்னா, அதுகாறும் இஸ்லாமியக் கலாச்சாரப் பாதுகாப்பு, உத்தியோக உரிமை கோருதல் ஆகியவற்றுக்காக நிறுவப்பட்ட முஸ்லிம் லீக்கின் சார்பில், 1940 மார்ச் திங்களில் முதன் முதலாகத் தமது பாகிஸ்தான் என்னும் தனி நாடு கோரிக்கையைப் பிரகடனம் செய்திருந்தார். பெரியார் அதனை முழுமையாக வரவேற்று, மார்ச் 11-ஆம் நாள் “குடி அரசு” தலையங்கம் தீட்டினார். பின்னர் ஜுன் 6-ஆம் நாள் காஞ்சியில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டை ஒட்டி, ஜின்னா பெரியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்த மாநாடு திராவிட நாடு தனி ஸ்டேட் ஆவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரத்தைப் பெரியாருக்கு வழங்கியது. அடுத்த வாரத்தில் நெல்லையில் நடந்த தமிழர் மாநாட்டின் தலைமை ஏற்றபோது, பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகட்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தைப் பெரியார் நிறைவேற்றினார். அண்ணாவுடன் இங்கு, சி.பி. சின்னராஜ், பி. சண்முக வேலாயுதம் கலந்து கொண்டனர். சென்னை திரும்பியதும் அடுத்த திங்களில் அதாவது ஜூலை 30-ஆம் நாளில் சென்னை வந்திருந்த வைசிராய் வெல்லிங்டனை, அவர் விரும்பிய வண்ணம் சென்று சந்தித்துப் பேசினார் பெரியார்.

சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு என அழைக்கப்பட்ட வேலூர் சின்னராஜ் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர். அனல் பறக்கப் பேச எழுத நடிக்க வல்லவர். அண்ணாவின் அன்புத் துணைவராய் விளங்கியவர், “தீப்பொறி” ஏடும், போர் வாள் நாடகமும் கணக்கற்ற நூல்களும் நகைச்சுவை மிளிரும் பேச்சும் தனித்தன்மை பெற்றவை. 1978-ல் மறைந்தார். தமிழ் நாடு சட்ட மன்ற மேலவைத் தலைவராகக் கலைஞர் ஆட்சியில் வீற்றிருந்தவர்.

ஈரோடு சண்முகவேலாயுதம் “ஈரோடு வாசி”, “ஈரோட்டுப் பாதை” ஆசிரியர். எந்நாளும் பெரியாரின் அந்தரங்கத் தொண்டர். நல்ல பேச்சாளர். பெரியாரின் அசைவுக்கும் அர்த்தம் சொல்லும் வித்தகர்.

1940 மே 5-ஆம் நாள், சென்னையில், இந்தி எதிர்ப்புத் தியாகிகளான தாளமுத்து நடராசன் கல்லறைக்குப் பெரியார் அடிக்கல் நாட்டினார். 1939 அக்டோபரில் அரசு பதவி நீங்கியும், தமது சம்பளத்தை மட்டும் பெற்று வந்தனர், சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள். இதைக் கண்டித்துச் சம்பள ஒழிப்புநாள் கொண்டாடினார் பெரியார், மே 15-ஆம் நாள்!

வரலாற்றுப் புகழ் தாங்கிய திருவாரூர் மாநாடு 1940 ஆகஸ்டுத் திங்கள் 24, 25 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புற நடைபெற்றது. 15-வது நீதிக்கட்சி மாகாண மாநாடு இது. பெரியார் தலைமையில், இளவரசர் முத்தையா திறந்து வைக்க, புச்சிரெட்டிப்பாலம் ராமச்சந்திர ரெட்டியார் கொடி உயர்த்த, செல்வம் நகரில், ஜின்னா மண்டபத்தில் கோலாகலமாகக் கூடியது. திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் கட்சியின் தீர்மானமாக மாநாட்டில் இயற்றப்பட்டது மிக முக்கியமானதாகும். கி.ஆ.பெ. விசுவநாதம் காரியதரிசியாகவும், சி.என். அண்ணாதுரை கூட்டுக் காரியதரிசியாகவும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆரிய, இந்து பிடிப்பிலிருந்து நம் மக்கள் விடுபடத் தனி நாடுதான் சிறந்த வழி; தாயைக் கொல்வதா? பசுவை வெட்டுவதா? என்ற மாய்மாலப் பேச்சுகளுக்கெல்லாம் மயங்கிடக்கூடாது. சிலோன், பர்மா முதலிய நாடுகள் இந்தியாவிலிருந்து தனியே பிரிந்ததால்தான் தம் மக்களை வாழவைக்கவும், பிறரை அங்கிருந்து விரட்டவும் முடிந்தது. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் அந்நியத் துணி அணிவோருக்கு 30 பவுன் அபராதம்! இப்படிச் செய்து சுதேச நெசவுத் தொழிலை வளர்த்தது இங்கிலாந்து - என்றெல்லாம் கணக்கற்ற ஆதாரங்களை அள்ளி வழங்கினார் பெரியார்.

கட்சி இவ்வளவு வளர்ந்ததும், அதிகார பூர்வமான தினசரி ஏடாகிய “விடுதலை” மாதம் 500 ரூபாய் நட்டத்தில் நடக்கிறதே எனப் பெரியார் அங்கலாய்த்தார். இருப்பினும் கலக்கமுறாது தமது பணியினைத் தொடர்ந்தார். சென்னையில் டாக்டர் நாயர் நினைவுநாள். கோகலே மண்டபத்தில், 1940 - ஜூலை 20 ஆம் நாளில் நடைபெற்ற போது அரிய கருத்துக்களை வழங்கினார். டாக்டர் நாயரை திராவிடத்து லெனின் என வர்ணித்தார். அவர் இருபது ஆண்டுகட்கு முன்பே தனித் திராவிட நாடு கருத்துக்கு ஒரு கருவினைத் தந்தவராம். பதவியில் நமக்கு நாட்டம் இருக்கக்கூடாது: 17-ஆண்டுக்காலம் பதவியிலிருந்தது ஜஸ்டிஸ் கட்சி; ஆனால் அதனால், காங்கிரஸ் தன்னை வளர்த்துக் கொள்ளவே ஏதுவாயிற்று: காங்கிரஸ் 28 மாதம் இப்போது ஆள்வதற்குள், நாம் எவ்வளவு நம்மை வளர்த்துக் கொண்டு விட்டோம்! எனவே நாம் பதவியை நாடாமல், கட்டுப்பாட்டை வளர்ப்போம் - என்றார் பெரியார்.

பெரியாரின் பெருமையினைப் பாராட்ட யங் ஜஸ்டி சைட் லீக் சார்பில் சென்னையில் கன்னிமாரா ஓட்டலில் அக்டோபர் 6-ம் நாள் விருந்தொன்று நடந்தது. பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டினர். அதே திங்கள் 25-ஆம் நாள் சுந்தர வடிவேலு - காந்தம்மா கலப்புத் திருமணம் பதிவு செய்யப்பட்டது; பெரியார் வாழ்த்தோடு!

என்.டி. சுந்தர வடிவேலு எம்.ஏ., எல். டி. கல்வித் துறையில் ஆய்வாளராகத் துவங்கிப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக ஆறாண்டு பணியாற்றும் உயரம் வளர்ந்தவர். பெரியாரின் அன்புக்குரியவர். குஞ்சிதம் குருசாமி அம்மையாரின் தங்கையான எம்.எஸ்.சி. பட்டதாரி காந்தம் அம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்தவர். ஒரே மகன் இளம் அறிவாளன் வள்ளுவன் மறைவால் உள்ளம் பாதிக்கப்படினும், கல்வி வெள்ளம் பாமரனுக்கும் பாய்ந்திட வழிவகுத்த கொடையாளர். காமராசர் காலத்து மதிய உணவு இவரது திட்டமே.


தொழிற் சங்கவாதியும், நீதிக்கட்சித் தலைமகனுமாகிய பாசுதேவ் இவ்வாண்டு நவம்பர் ஆறாம்நாள் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது பெரியாரின் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1939- நவம்பரில், இருந்த பழைய அமைப்பின் உதவியால். சத்தியமூர்த்தி அய்யர் மேயரானதற்குக் காங்கிரஸ் - பார்ப்பன வட்டாரங்கள் குதூகலித்துக் கிடந்தன! சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் 1940 நவம்பர் 11-ஆம் நாள் பெரியாரைச் சந்தித்துச் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு யோசனை கூறினார். பெரியார் இசைய மறுத்தார். இக்காலகட்டத்தில் அண்ணாவின் கட்சிப்பணி உச்ச நிலையிலிருந்தது. சென்னையில் சீர்திருத்தத் தொண்டர்கள் அண்ணா தலைமையில் மாநாடு கூடிப் பெரியார் கருத்துகளுக்கு உரமேற்றினர். பின்னாட்களில் எதிர் முகாம்களுக்குச் சென்றுவிட்ட வேளுக்குடி கா.மு.ஷெரீப், தமது கவிதைகளைக் “குடி அரசு” இதழ்களில் தொடர்ந்து யாத்தளித்து வந்தார். “குடி அரசு”, “விடுதலை” ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் சென்னையிலிருந்து வெளிக்கொணர ஏற்பாடு செய்யப்போவதாகக் “குடி அரசு” இதழில் டிசம்பர் 29-ல் பெரியார் அறிக்கை வெளியிட்டார். அதே போன்று 1941-சனவரி 4-ஆம் நாள் நிறுத்தப்பட்ட “குடி அரசு” மீண்டும் ஈரோட்டிலிருந்து 1943 அக்டோபர் 16-ஆம்நாள்தான் வெளியாயிற்று! அப்போது கைவல்யம் அவர்கள் “வந்தாயா குடி அரசே?” என்று வாழ்த்தி, வரவேற்றுத் தம் பேனாவை உருவிப் புறப்பட்டார். எதிர்த்தோரைத் தாக்குதலுக்கு!

ரயில்வே நிலையங்களிலுள்ள உணவு விடுதிகளில் - இவ்விடம் பிறாமணாளுக்கு, இவ்விடம் இதராளுக்கு - என்று தனித்தனியே இருவேறு இடங்கள் சாதி அடிப்படையில் இருந்ததைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து வந்தார். பார்ப்பதற்கு மிக அற்பமானதாக இது தோன்றினாலும் பெரியாருடைய தொலை நோக்குப் பயணத்தில் இதெல்லாம் காலில் இடறும் சிறுகல் எனினும், சமூக இழிவு ஒழிப்பிற்கு, இதனை நீக்குவது அவசியம் எனப் போராடினார். ரயில் வண்டிகளில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்றுதான் இருந்ததே தவிரப் பிராமணாள் வகுப்பு சூத்திராள் வகுப்பு என இருந்ததில்லையே! 20-3-1941-ல் ரயில்வே நிர்வாகத்தின் இணக்கத்தினால் இந்த பேதம் ஒழிக்கப்பட்டது: பெரியாருக்கு வெற்றிதானே? (“விடுதலை” 21-3-41 அன்று பெட்டிச் செய்தி).

சோவியத் ரஷ்யாவில் பொதுவுடைமை இயக்கத் தந்தையான லெனினுடன் தம் இளமைக் காலத்தில் இணைந்து பணியாற்றிய. வங்க வீரர் எம்.என். ராய், பின்னர் இந்தியா திரும்பிக், காங்கிரசில் இருந்து, தமது தீவிரப் போக்கினுக்கு அது ஏற்றதல்ல என விலகி, ரேடிக்கல் டெமக்ரடிக் பார்ட்டி எனும் தீவிர ஜனநாயகக் கட்சியினைத் துவக்கினார். பெரியாருக்கு அவரிடத்திலும், அவரது முற்போக்குக் கொள்கையிடத்திலும் மிகுந்த பற்று உண்டு. அவரது கருத்துகளைக் “குடி அரசு” இதழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்வார். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் தமது துணைவியாரான ஜெர்மானிய மாதரசி எல்லென்ராயுடன், சென்னைக்கு வருகை தந்து, பெரியாரின் விருந்தினராக இருந்தார். இருவரும் தத்தம் சிந்தனை விருந்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்கிக், காங்கிரசல்லாத மந்திரி சபையை முதலில் சென்னையில் அமைத்து, வழிகாட்ட வேண்டும் எனப் பெரியாரை எம்.என். ராய் கேட்டுக் கொண்டார்.

நாடெங்கிலும் திராவிடர் உணர்வு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது! ஆங்காங்கு ஏற்கனவே இருந்து வந்த பற்பல பார்ப்பனரல்லாதார் சங்கங்களெல்லாம் திராவிடர் கழகங்களாக மாற்றம் பெற்றன. பெரியார் மீண்டும் 1942-ஆம் ஆண்டில் ஒருமுறை வடநாடு சுற்றுப்பயணம் சென்றார். அங்கிருந்து தகவல் தந்து அண்ணாவும் புறப்பட்டார். “குடி அரசு” இதழ் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து சில எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய அச்சகத்துத் தேவைகளைப் பெரியார் கொடுத்து உதவ, அண்ணா காஞ்சியிலிருந்து “திராவிட நாடு” என்ற வார இதழைத் துவக்கினார். 1942 மார்ச் 8-ஆம் நாள், முதல் இதழ் வெளிவந்தது. “குடி அரசு” இல்லாத குறையை அது போக்குவதாகவும், “திராவிட நாடு” இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கு தோழர்கள் நிதியளிக்க வேண்டுமென்றும் பெரியார் 1-4-1943-ல் அறிக்கை வெளியிட்டார். தாமே நூறு ரூபாய் அளித்தார். காஞ்சியில் திராவிட நடிகர் கழகம் ஏற்படுத்தித், தாம் எழுதிய சந்திரோதயம் என்னும் புரட்சி நாடகத்தில், தாமே மூன்று வேடங்கள் ஏற்று நடித்துத் தமிழ் நாடெங்கும் அந்த நாடகத்தின் வாயிலாகவும் அண்ணா நிதி திரட்டினார். திருவாரூரிலிருந்து மாணவர் மு. கருணாநிதி 1942 ஏப்ரல் 26-ம் தேதியிட்ட ”திராவிட நாடு“ இதழில் இளமைப் பலி என்ற கட்டுரை தீட்டியிருந்தார். இவர் திருவாரூரில் “முரசொலி” என்ற சிறு ஏடு ஒன்று துவக்கிக் காலணா விலையில் 1942 ஆகஸ்ட் 10-ஆம் நாள் முதல் வெளியிட்டு வந்தார். வேகமும் விவேகமும் மிக்க எழுத்துகளில் பெரியாரின் கருத்துகள் “முரசொலி”யில் மிளிர்ந்தன.

பாரத மாதாவைத் துண்டாடுவதா? என்று பதைத்தவர்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். இராஜாஜி காங்கிரசிலிருந்து விலய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவு தந்தார். அவருக்காகக் துவக்கப்பட்ட “கல்கி” வார இதழ் பிரிவினைக் கொள்கையைத் தாங்கி எழுதியது. 1942 ஏப்ரல் 23-ஆம் நாள், பெரியார் ஆச்சாரியாரின் பாக்கிஸ்தான் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுச் தென்னாட்டில் நீதிக்கட்சியின் உடன்பாடு பெறாமல் எந்தத் திட்டமும் நிறைவேற்றப் படக்கூடாது - முடியாது என நினைவுறுத்தினார். ஈரோட்டில் பெரியாரின் வீட்டிற்கே வந்து ராஜாஜி, திராவிடநாடு பிரிவினைக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இராமசாமி நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தானையும் திராவிட மக்கள் கேட்டால் பிரித்து விடவேண்டியதுதான் என்று வெளிப்படையாக ஆதரவு தந்ததோடு அதன் அவசியம் பற்றியும் பேசினார். 1942 ஆகஸ்டு சட்ட மறுப்புக் கலவரங்களால் பொது மக்களுக்குத் தொல்லைதான் எனப் பெரியார் கருதினார். இதனால் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினார். ஆங்காங்கு காங்கிரஸ்காரர்களால் ஏற்பட்ட அழிவு, சேதம், சொத்து நாசம் ஆகிய மோசமான செயல்களைக் கண்டித்தார். இதனால் தான் அடுத்த அக்டோபர் 18-ஆம் நாள் சென்னை மாகாண கவர்னரைச் சந்தித்து, துவக்கத்திலிருந்து தாம் ஆகஸ்டுக் கலவரங்களைக் கண்டனம் செய்ததை எடுத்துக் காட்டி, அரசினர் விதித்த கூட்டு அபராதத் திட்டத்திலிருந்து நீதிக் கட்சியினர்க்கு விலக்களிக்கக் கோரினார், வைசிராய், கவர்னர் இருவருமே 1942-ஆம் ஆண்டில் மீண்டும் வேண்டுகோள் விடுத்தும், பெரியார் சென்னை ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்தார். பெரியாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டுமென அண்ணா அக்டோபர் 25 “திராவிட நாடு” இதழில் கருத்தறிவித்தார்.

1942 இறுதித் திங்களில் பெரியாருக்கு உடல் நலமில்லை . சென்னைப் பொது மருத்துவமனையில் சில நாள் இருந்துவிட்டு, ஈரோடு சென்று ஓய்வு எடுத்து வந்தார். ஈரோட்டிலிருந்து விடுதலை“ நாளேடு மீண்டும் வெளியாயிற்று. சென்னையில் சர். ஏ. ராமசாமி அவர்களின் மூத்த மகன் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி (பாரிஸ்டர்) “லிபரேட்டர்” என்ற ஆங்கில நாளேட்டினை 1942 டிசம்பர் 7-ஆம் நாள் துவக்கினார். இது நீதிக் கட்சியின் படைக்கலனாக விளங்கியது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திருவாங்கூர் மகாராணியும், மன்னரும் தமது நல்லெண்ண அறிகுறியாய், சமஸ்கிருத வளர்ச்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற பெரியார், உள்ளங் கொதித்து, வடமொழி வளர்ச்சிக்கு இந்தப் பணம் செலவிடப்படலாகாது என வலியுறுத்தியும், வற்புறுத்தியும் போராடினார். இறுதியில், மாணவர் விடுதியினை விரிவுபடுத்திட அத்தொகையினை செலவழிப்பதாகப் பல்கலைக் கழக நிர்வாகம் முடிவெடுத்த பின்னரே, பெரியார் ஓய்ந்தார். திருவாங்கூர் அரசர் இதற்கு இணங்காவிடில் பணத்தையே திருப்பித் தந்துவிடலாம் என்றார் பெரியார்!

உடல் நிலை சரியானதும், மீண்டும் பெரியாரின் சுற்றுப் பயணங்கள் தொடர்ந்தன. இளைஞர்களைப் பொதுவுடைமைக் கொள்கைகள் பெரிதும் கவர்ந்ததால், அவர்கள் அங்கே ஈர்க்கப்படுவதைத் தடுக்கவே, தாம் 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியதாகக் காந்தியார் உண்மையை ஒப்புக் கொண்டார்; இது காந்தியாரின் சனாதனப் போக்கையே காட்டுகிறது என்று பெரியார் எடுத்துக் காட்டினார். பெங்களூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பங்கேற்றார்; பின்னர் ஜூலை 1943-ல் உடல் நலிவுற்றுச் சில காலம் சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்தார். ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் புதிதாகத் தொடங்கப்பெற்று, முறுக்கோடு பவனி வந்த தமிழிசை இயக்கத்துக்குப் பெரியார் தமது ஆதரவைத் தெரிவித்தார். கொச்சி திவான் ஆர்.கே. ஷண்முகம், சர் ஏ. முத்தையா செட்டியார் முதலியோர் முன்னோடிகளாயிருந்தனர்.

என்னதான் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தாம் இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தில்தான் தமக்கு நாட்டம் அதிகம் எனப் பெரியார் காட்டி வந்தார். நீதிக் கட்சியைப், பெரியாரைத் தவிர இன்னொருவர் கூட நடத்தி விடலாம்; ஆனால் சுயமரியாதை இயக்கத்துக்குப் பெரியார்தான் இருக்க வேண்டும் - என்று “விடுதலை” தலையங்கம் தீட்டியது. மேலும் இயக்கத்துக்குச் சரியான ஒரு வாரிசு வேண்டும் என்பதாகவும் பெரியார் தெரிவித்தார். 1943 - செப்டம்பர் 13-ஆம் நாள் ஏட்டில், பொறுப்பாக இருந்து; கட்சி, பத்திரிகை, பதிப்பகம், அச்சகம் ஆகியவற்றைக் கவனிக்க ஆட்கள் தேவை என்றும், வருகின்றவர் சிறிது காலம் இருப்பதும், திருமணமோ வேறு நிலையோ கிடைத்ததும் அகன்று விடுவதுமாயிருக்கிறார்கள். இது இயற்கைதான் என்றாலும், காரியங்கள் நடைபெறத் தடையாகின்றன என்றார் பெரியார். அதனால் “விடுதலை” ஏட்டைச் சென்னைக்கு மாற்றுவதாக அறிவித்தார். இப்போது “குடி அரசு” துவக்கப்பட்டதால், ஈரோட்டிலிருந்து “விடுதலை” 1943 அக்டோபர் 18-க்குப் பிறகு வெளியாகவில்லை .

1933 - ல் நாகம்மையார் காலமான பிறகு, பெரியாருடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனிக்க அணுக்கமாக யாருமே யில்லை! அண்ணார் வீட்டிலோ, தங்கை வீட்டிலோ ஈரோட்டிலிருக்கும்போது உணவு கிடைத்துவிடும். ஆனால் இப்போதெல்லாம் பெரியாருக்கு ஓயாத உழைப்பினால், அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அம்மாதிரி நேரங்களில், ஒரு செவிலிப்பெண் அளவிலாவது உடனிருந்து பரிவு காட்ட ஒருவர் தேவையல்லவா? இந்த எண்ணத்தை 1943 அக்டோபர் 23-ஆம் நாள் “குடி அரசு” இதழில் செல்வி கே. அரசியல் மணி அம்மையார் தெரிவித்தார்.

நவம்பர் 19-ம் நாள் ஈரோட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சந்திரோதயம் நாடகத்தின் வாயிலாக அண்ணாவின் “திராவிடநாடு” வளர்ச்சிக்காக 4000 ரூபாய் கிடைத்தது. இந்த நாடகத்தைக் கண்ணுற்ற பெரியாருக்குக் கலைத் துறையின் மீது அதிக ஆவல் பிறந்தது. நம்மவர்கள் இந்தக் கலைகளை நன்முறையில், வளர்த்திட, நாமும் மூன்று வகையான பிரிவுகளை உண்டாக்க வேண்டும். சினிமா நாடகம் பார்க்கிறவர் கழகம், இசை நுகர்வோர் கழகம், பத்திரிகை படிப்போர் கழகம் - இவை நமக்கு அவசியம் என்றார் பெரியார். திருவையாறு அரசர் கல்லூரியில், விடுதியிலுள்ள பார்ப்பன மாணவர்க்குத் தனி உணவு ஏற்பாடு நடைபெறுவது கேள்விப்பட்டு, “மீண்டும் சேர்மாதேவியா?” எனப் பெரியார் குமுறினார்.

கோவை மாவட்டத்தில் முதலாவதாகத் திராவிடர் கழகம், 1943 நவம்பர் 18-ஆம் நாள் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆங்காங்கு பரவத் தொடங்கியது.

மாயூரத்தை அடுத்த மூவலூரில் பெரியார் பிறந்த நாள் விழாவில் நவம்பர் 21-ஆம் நாள் வ.ரா. நெடுஞ்செழியன் கலந்து கொண்டதாகக் “குடி அரசு” செய்தி ஒன்று வெளியாகியுள்ளது யார் இவர்?

பதினான்கு வயது பள்ளிச் சிறாராயிருந்த போதே 1938 - இந்திப் போரில் திருவாரூரில் கொடி பிடித்துக் கோஷமிட்டவர் மு. கருணாநிதி. 1942-ல் துவக்கிய “முரசொலி” இன்றளவும் நடைபோடுகிறது வெற்றிப் பெருமிதம். 1943-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் துவக்கிப் பின் திராவிட மாணவர் கழகத்துடன் இணைத்தார். சாந்தா அல்லது பழனியப்பன் என்ற நாடகத்தை 1944-ல் எழுதி நடித்துப், பின் நாகை திராவிட நடிகர் கழகத்துக்குத் தந்து, தாமும் விழுப்புரம், புதுவையில் நடித்து வந்தார். 1945 இறுதியில் ஈரோட்டில் பெரியாருடன் தங்கிக் “குடி அரசு” உதவி ஆசிரியரானார். 1946-ல் கோவையிலும், பின்னர் சேலத்திலும் திரைப்படக் கதை வசனப் பணியில் தமிழகத்தில் மிக உயர்ந்த இடம் வகித்தவர். 1942 செப்டம்பர் 13-ல் இசைவாணர் சிதம்பரம் ஜெயராமன் தங்கை பத்மாவை மணந்தார். 12-4-48-ல் அவரது அகால மறைவுக்குப் பின், 1948 செப்டம்பர் 15-ல் தயாளு அம்மையாரை மணந்தார். 1951 முதல் சென்னையில் நிரந்தரமாகத் தங்கினார். சென்னை மாநகராட்சியை 1959-ல் தி.மு.க வசமாக்கினார். 1967-ல் தி.மு.க ஆளுங்கட்சியாக அருந்துணை புரிந்தார். 1957 முதல் தொய்வின்றிச் சட்டமன்ற உறுப்பினர். 1969 முதல் 1976 சனவரி முடிய தமிழகத்தில் பொற்காலங்கண்ட முதல் முதலமைச்சர். தனித் தன்மை படைத்த, எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாளர். உணர்ச்சியால் ஊன் உயிரெலாம் உருக்கிடும் ஓங்கு தமிழ்ப் படைப்பாளர். தமிழகத்தின் ஒரே நம்பிக்கைப் பெருஞ்சூரியன். 1976-ல் ஏற்பட்ட சோதனையைக் கடந்த நிகழ்ச்சிக்கு, உலக

வரலாற்றிலேயே ஒப்புவமை கிடையாது.1969 - ல் இந்திய ஜனாதிபதியாகும் வாய்ப்பினை ஒதுக்கித் தள்ளித், தாய்த் தமிழக மேன்மைக்குச் சகலத்தையும் தரத்துணியும், தியாகத் தீப்பிழம்பு!

1938-ல் அன்னை நாகம்மையார் மறைவுக்குப் பின்னர் நெருக்கமாயிருந்து, தனிப்பட்ட முறையில் பணிவிடைகள் செய்து, பராமரிக்க யாருமில்லாமலிருந்த பெரியாருக்கு, ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை அவர்கள் மகளார் கே. அரசியல்மணி 1943-ல் பெரியாரிடம் வந்து சேர்ந்தார். 1973-ல் பெரியார் மறையும் வரை அவரை விட்டு அகலவேயில்லை ! பக்குவமாய்ப் பத்தியமாய் உணவு சமைத்தல், வேளைதவறாமல் ஒழுங்குடன் உண்ணச் செய்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டுதல், வலியுறுத்தித் துணி மாற்றுதல், வருவோரை உபசரித்தல், வீட்டில் கணக்கு எழுதுதல் குடி அரசுப் பதிப்பக நூல்களின் சிப்பங்களைச் சுமந்து பெரியாருடன் பயணம் சென்று விற்பனை செய்தல், இயக்கத்தின் கொள்கைகளில் முழு நம்பிக்கையோடும் தலைவர் மீது பரிபூரண விசுவாசத்தோடும் தொண்டாற்றுதல், எளிமையாயிருத்தல், இனிமையாய்ப் பழகுதல், இவ்வளவு நற்பண்புகட்கும் உறைவிடமான அரசியல்மணி 1949 ஜூலை 9-ஆம் நாள் ஈ.வெ.ரா மணியம்மை ஆனதில் என்ன தவறு? 64 வயதில் இறந்து போயிருக்க வேண்டிய பெரியாரை 95 வயதுவரை வாழவைத்த பெருமை மணியம்மையாரையே சாரும். இது ஒன்று போதாதா, தமிழ்க்குலம் அம்மையாருக்கு நன்றி பாராட்ட? தலைவரையிழந்தும் கழகத்தைக் கைவிடாமல் இவர் காப்பாற்றி, உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு மேலும் 5 ஆண்டு வாழ்ந்திருந்தது பெரும் நல்வாய்ப்புத்தானே?

வடகண்டம் ராஜகோபால் நாராயணசாமி பி.ஏ. ஆனர்ஸ், 1943-ல் இளந்தாடி நெடுஞ்செழியன் எம். ஏ. நெடிதுயர்ந்த கவர்ச்சி மிகு உருவம், குற்றால அருவியெனக் கொட்டும் தமிழ்ச் சொல்வளம், மணிக்கணக்கில் கேட்பாரைப் பிணிக்கும் நயம். பெரியாரின் தளபதிகளில் சிறந்தவர். 1948-ல் திருமணத்துக்குப் பின் பேச்சு நடையில் பெருமாற்றம் எனினும் நாளொன்றுக்கு மூன்று வெவ்வேறு ஊர்களில் பேசிடும் ஆற்றல். “மன்றம்” இதழ் வேண்டும் போது வரும், நிற்கும், நடக்கும், ஆழ்ந்த தமிழறிவு, அகலமான உலகறிவு, சுயதலமற்ற பொது நலப்பணியே வாழ்வின் குறிக்கோள். 1948 முதல் அண்ணா எவ்வழி அவ்வழி நாவலர், அதனால்தான் அவர் மறைந்த 1969-ல் சிறு விலகல், பின், சேர்க்கை , அண்ணா , கலைஞர் அமைச்சரவைகளில் இரண்டாம் இடம் இவருக்கே.

அண்ணா அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகநாள் பொதுச் செயலாளர் இவரே. பின்னர் சிறிது நாள் மக்கள் முன்னேற்றக் கழகம் கண்டார். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்.

நீதிக்கட்சியில் இன்னமும் பதவி ஆசை கொண்டவர்களும், முன்னரே பதவியைச் சுவைத்தவர்களும் இருந்து வந்ததை நன்கு உணர்ந்திருந்தார் பெரியார். 1943 ஜூலை 8-ஆம் நாள் வேலூரில் நகரமண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் நன்கு அறிவுரை புகன்றார். காங்கிரஸ்காரர் பதவிக்குச் சென்றால் ராமராஜ்யம் நிறுவுவோம் என்று துணிவுடன் சொல்கிறார்கள். முஸ்லீம் லீக் சென்றால் இஸ்லாமிய ராஜ்யம் நிறுவுவோம் என்கிறார்கள். நீதிக்கட்சியினர் சென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? நமது இன இழிவு ஒழியத் திராவிடநாடு கேட்பீர்களா? சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவீர்களா? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நான் என் சுயமரியாதைக் கருத்துகளைப் பேசினாலே ஓட்டுக்கிடைக்காது என்று பயப்படுகிறீர்களா! - அதனால் நமக்கு வேண்டாம் தேர்தலும் பதவியும் என்று அறுதியிட்டுக் கூறினார் பெரியார்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனுக்கும் பெரியாருக்கும் சமவயதுதான் பெரியார் ஒரு விஞ்ஞானி என்று யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதுவரை எந்த விஞ்ஞானியும் தமது அறிவியல் கண்ணோட்டத்தில், தீர்க்கதரிசனத்தோடு, எதிர்காலம் எப்படியிருக்கும் எனக் கணித்துக் கூறியதில்லை . எச்.ஜி. வெல்ஸ் ஒரளவு எடுத்துக் காட்டியுள்ளார். இதெல்லாம் பெரியாருக்குத் தெரியாது. ஆனால் அவரது கூர்த்தமதியால், நுட்பமான பகுத்தறிவின் தொலை நோக்குத் திட்பத்தால், அவருக்கே உரிய சுயசிந்தனை ஆராய்ச்சித்திறத்தால் அவர் எழுதியுள்ள ஒரு இருவாரத் தொடர் கட்டுரை அவரை உலகப் பெரும் விஞ்ஞானிகள் வரிசையில் உயர்த்தி உட்கார வைக்கிறது. “இனிவரும் உலகம்” என்ற தலைப்புத்தந்து அண்ணா தமது “திராவிட நாடு” வார இதழில் 1943 மார்ச் 21, 28 தேதிகளில் இக்கட்டுரையினை வெளியிட்டுள்ளார்கள். டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் சோதனைக் குழாய்க் குழந்தை, டெலிவிஷன் எனப்படும் தொலைக்காட்சி, உணவு மாத்திரைகள் இன்னம் ஏராளமான கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் என்று பெரியார் அன்றே கூறியுள்ளார்.