தந்தை பெரியார், கருணானந்தம்/014-021
முத்தமிழ்க் கலைஞர்கள் சுயமரியாதைக் கொள்கைகளையும் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்ய உதவியாகப், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சி மேற்கொண்டு, சென்னையில் முத்தமிழ் நிலையம் ஒன்றை அமைத்தார். 1944 சனவரி 2-ஆம் நாள் பெரியார் இதனைத் தொடங்கி வைத்தார். பாரதிதாசன் கவிதைகள் “குடி அரசு” வாயிலாக நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, இதற்குள் மூன்று பதிப்புகள் செலவாகிவிட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 7-ஆம் நாள் கா. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் பெரியார், தமிழிசையும் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பின் கீழ், அரியதோர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் தமிழன் தன் பொருளைச் செலவழித்துத், தான் நுகரும் இசை, தமிழ் மொழியில் இருக்கவேண்டுமென்று கேட்பது தவறா? இந்த உணர்ச்சி இப்போது வெற்றி பெற்று வருவது பாராட்டற்குரியதுதான் எனினும், நரஸிம்ஹ மூர்த்தியே என்று பாடி வணங்குவதற்குப் பதில் சிங்கமுகக் கடவுளே என்று பாடி வணங்குவதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? பஜனை, பக்திப் பாடல்களை எந்த மொழியில் பாடினால் தான் என்ன? அதே போல் புராண நாடகங்களால் என்ன பலன்? நந்தனார் பார்த்தால் தீண்டாமை பெருகும்; கிருஷ்ணலீலா பார்த்தால் விபச்சாரம் பெருகும் - என விளக்கினார். இவைகளை முறியடிக்க எம்.ஆர் ராதா நடத்தி வரும் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் ஆதரித்து வந்தார். நாகப்பட்டினத்தில் மார்ச் 10-ஆம் நாள் எம்.ஆர். ராதாவைப் பாராட்டினார்.
சேலம் செவ்வாய்ப் பேட்டையில் கடந்த ஆண்டே துவக்கப் பட்ட திராவிடர் கழக முதலாண்டு விழாவில், சனவரி 16-ஆம் நாள், பெரியார் பங்கேற்றார். பிப்ரவரி 13-ஆம் நாள் சென்னையிலும், 20-ஆம் நாள் திருச்சியிலும் மாவட்ட நீதிக்கட்சி மாநாடுகளைத் திறந்து வைத்தார். சுதந்திரத் திராவிட நாடு பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், புராண இதிகாசக் கதைகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தியும் திராவிட மக்களுக்கு எழுச்சியுண்டாக்கினார் பெரியார். தமிழ்ப் புலவர்களும், ஆசிரியர்களும், இளம் மாணாக்கர்க்குப் புராணக் கதைகளைப் பாடமாகப் போதிக்காமல், அறிவு வளர்ச்சிக்கு உகந்தவற்றையே கற்பிக்க வேண்டிப் பெரியார் பல கட்டுரைகள் தீட்டினார்.
1944-ஆம் ஆண்டின் துவக்கமே பெரியாரின் மொழிப்படி நற்குறிகளின் துவக்கமாகத் தென்பட்டது. தென்னகத்தில் பெரியாரின் பெருந்தொண்டால் புதிய எழுச்சி ஒன்று எங்கணும் பரவி வியாபித்தது. ஒன்று கலைத்துறையின் மறுமலர்ச்சி! மாணாக்கர் எழுச்சி மற்றொரு புதுமையாகும். 1942-ஆகஸ்டுக் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் பெரும் பங்கு கொண்டனர், அதன் பின்னர் உண்மை உணர்ந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள், தாம் தவறான பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்து, தந்தை பெரியார் காட்டும் பகுத்தறிவு ஒளியில் கவனஞ் செலுத்தத் துவங்கினர். ஆரிய வஞ்சகத்தால் திராவிடர் எதிர்காலம் இருட்டாவதை உணர்ந்தனர். பெரியாரின் “குடி அரசு”, அண்ணாவின் “திராவிட நாடு” இதழ்கள் உணர்வுத் தீயை மூட்டி விட்டன. மாணவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடச் சட்டங்கள் தடை செய்தன. அதனால் முதலில் பெரியாரின் சம்பந்தமில்லாது கும்பகோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு 1944 பிப்ரவரி 19, 20 இரு நாட்களிலும், மிகுந்த எழுச்சிமயமாய் நடைபெற்றது. அண்ணாவும் பிறரும் அரிய சொற்பொழிவுகளை ஆற்றினார்கள். மாணவர் மட்டுமல்லாது ஆசிரியரும் பேரெழுச்சி கொண்டனர். கோ. சி. பெரியசாமிப் புலவர், குழந்தையா, நன்னன், நா.மு. மாணிக்கம், ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், இரா. தண்டபாணி, க.அ. மதியழகன், பூ. கணேசன், இரா. செழியன், த.மா. திருநாவுக்கரசு, கி. தியாகராசன், ஆகியோரை மாநாட்டில் அறிமுகம் செய்தனர் குடந்தை மாணவர்களான எஸ். தவமணி இராசன், எஸ். கருணானந்தம், இரா. சொக்கப்பா ஆகியோர்.
1943 முதல் “குடி அரசு” இதழில் கட்டுரைகள் தீட்டிவந்த க. அன்பழகன், பச்சையப்பன் கல்லூரியின் தமிழாசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார். தமது வெண்கலக் குரலோசை துணைசெய்யத் தமது ஒல்லியான உருவத்துடன் தமிழகத்தில் அவர் முழங்காத சுய மரியாதை இயக்க மேடையில்லை. அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகங்கண்டவர். 21-2-45-ல் பெற்ற வெற்றிச் செல்வி அம்மையாரின் வாழ்க்கைத் துணை நலம் இவருக்குப் பேருதவியாயிருந்தது. சிதம்பரம் கல்யாண சுந்தரனாரின் மூத்தமகனாகிய இவரைப் போலவே அடுத்த இளவல்களும் ஆசிரியர்களாயினும், இயக்கத்துடனேயே இணைந்த குடும்பத்தினராவர். சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை, நாடாளுமன்றம் மூன்றிலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். கலைஞரின் அமைச்சரவையில் நல் வாழ்வுத்துறையின் பொறுப்பிலிருந்தார். பின்னர் கழகம் சோதனைக்குள்ளான போழ்தில், தி.மு.க. பொதுச் செயலாளராகியுள்ளார். பேராசிரியர் என மக்கள் இவரை அன்பொழுக அழைக்கின்றனர்.
டார்ப்பிடோ சனார்த்தனம் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மும்மொழி வல்லுநர். எளிய தோற்றம், வெடிக்கு முன் எரிமலை, பெரியாரின் பெரு விருப்புக்குப் பாத்திரமானவர். சட்டமன்ற மேலவை, மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். தமிழகத்தில் சுறுசுறுப்புடன் சுற்றிச் சுழன்று, விறுவிறுப்புடன் உரையாற்றியவர். இவர் காணாத ஊரே இல்லை எனலாம். ஆங்கிலத்தில் பத்திரிகை, நூல்களை எழுதியுள்ளார். சிலகாலம் தி.மு. கழகத்திலிருந்தார். இப்போது அ.இ. அ.தி.மு.க. எங்கிருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கும், தந்தை பெரியாருக்கும் இவர் சிந்தையில் முதல் இடம்!
பெரியசாமிப்புலவர், குழந்தையா, திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி வருவோர். பெரியசாமிப் புலவர் நல்ல பரம்பரையை உருவாக்கியவர், மறைந்து விட்டார். நா.மு. மாணிக்கம், செட்டிநாடு தந்த பகுத்தறிவுப் புலவர். பெருமைக்குரிய “குடி அரசு”
அலுவலகத்தில் பெரியாரிடம் பணியாற்றியவர். புலவர் நன்னன் சிலநாள் பெரியாரிடம் வதிந்தவர்; பகுத்தறிவுத் திறங்குன்றாப் பண்பாளர் பேராசிரியராகி, டாக்டர் பட்டமும் சுய முயற்சியால் பெற்றவர்.
இரா. செழியன், நாவலர் நெடுஞ்செழியனின் இளவல், 1957-ல் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தார், 1962, 67, 71 ஆண்டுகளில் வென்று நற்பணியாற்றினார். அண்ணாவின் அருந் தோழர், இன்று ஜனதாக் கட்சியின் சார்பில் மாநிலங்களவையினை அலங்கரிக்கிறார்.
பூ. கணேசன் தந்தையார் பூவராகனார் பகுத்தறிவாளர்; எனவே தம் மக்களையும் தம் வழியில் ஈடுபடுத்தியவர். “நிலவு” இதழ் நடத்தி வந்து, “விடுதலை”யில் சில காலம் பணியாற்றிப் பின்னர் குடும்பநலத்துறையில் நீண்டநாள் அரசு அலுவலராக விளங்கி, ஓய்வு காணும் வயதில் உள்ள கணேசன் அமைதி, அடக்கமுடையார்.
இ.ரெ. இளம் வழுதி எனும் தண்டபாணி கடலூரில் சிறந்த வழக்கறிஞர். குறையாயுளில் மறைந்து போனார். கருப்பு இளவரசன் என்ற சிறப்புப் பெயருக்கேற்பத் துவக்க நாட்களில் நன்கு இயக்கப்பணி புரிந்தவர்.
மதியழகன் உருவமோ குள்ளம். உள்ளமோ உயரம். இயக்கப் பணியோ ஏராளம். துவக்க நாட்களில் பெரியார் பாசறையிலிருந்து, பின் அண்ணாவின் நண்பராகி, நல்ல தொண்டாற்றிய முழுநேர அரசியல் வாதி. அண்ணாவின் அமைச்சரவை, கலைஞரின் அமைச்சரவைகளில் உறுப்பினராகவும், சட்டப் பேரவை, மாநிலத் திட்டக்குழுத் தலைவராகவும் விளங்கியவர். அண்ணா தி.மு. கழகத்தில் இணைந்தார். இன்று உடல் நலிவுற்று ஓய்வாக வாழ்கின்றார்.
எஸ். தவமணி இராசன் 1943 - ல் கும்பகோணத்தில் முதன்முதலில் திராவிட மாணவர் கழகம் அமைத்தவர். தோற்றம் கவர்ச்சியற்றது; தொண்டை கணீரென்பது; தொண்டு இவர் உயிர்மூச்சு; தோழமை இவர் நல்லுணவு! பெரியாரிடமும் அஞ்சாமல் பேசும் வெகுளியான உள்ளம் படைத்தவர். அவரது உண்மையான தொண்டராதலால் என்றும் அன்புடன் நேசிக்கப்பட்டவர். ஓயாது உழைப்பது இவரது இலட்சியம். ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சி முகாம் இவரது தனிச்சிறப்பு, “குடி அரசு” அலுவலகம் இவருக்குக் குடியிருப்பு. குடந்தை திராவிட மாணவர் மாநாட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஆக்கியவர் இவரே; இவர் ஒருவரே!
கும்பகோணம் மாநாடு பெரியாரின் வாழ்த்துச் செய்தி க.அன்பழகனால் படிக்கப்பட்ட அளவோடு முடிந்தது மாணவ உலகுக்குப் பெருத்த ஏமாற்றம். அதனால் மார்ச் 15-ஆம் நாள் செல்வம் நினைவு நாள் பொதுக்கூட்டத்திலும்; பின்னர் பெருமுயற்சியால், ஏப்ரல் முதல் நாள், குடந்தை அரசினர் கல்லூரியிலும் பெரியார் கலந்து கொண்டு, அரியவுரை நிகழ்த்துமாறு செய்து, மாணாக்கர் பெருமிதமும் பூரிப்பும் எய்தினர். கும்பகோணத்திலிருந்து ஈரோடு சென்றதும் பெரியார் புதுத்தென்பு கொண்டார். தம்மிடம் அப்போது தனிச் செயலராக இருந்த கஜேந்திரனை அழைத்தார். கல்லூரிகளுக்கெல்லாம் அனுப்பினார். எங்கெங்கு இயக்கப்பற்றுள்ள மாணவர்கள் உள்ளார் எனக் கண்டறிந்தார். அனைவரையும் ஈரோடு வருமாறு அன்பழைப்பு விடுத்தார். அதிலே பெரு வெற்றியும் பெற்றார்.
ஈரோட்டில் 1944 ஏப்ரல் 17-ஆம் நாள் நடைபெற்ற திராவிட இளைஞர் மாநாட்டையொட்டி எல்லா மாணவர்களையும் பெரியார் நேரில் பார்த்துக்கொள்ள விரும்பினார். அண்ணா தலைமையில், நெடுஞ்செழியன் திறந்துவைக்க, அன்பழகன் கொடி ஏற்ற, இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன் வரவேற்புக் கழகத் தலைவர். எஸ். ஆர். சந்தானம் செயலாளர். இதனை ஒட்டியே மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரியாருக்குத் திடீரென்று உடல் நலம்குன்றி, நடக்க முடியாமல் அவதிப்பட்டார். எனினும் புதிய வரவுகளான மாணவர்களை ஆவலுடன் கண்டு உரையாடிக் களித்தார். இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற கம்பர் மாநாடு கலவரத்தில் குழப்பமாகி, நடைபெறாமல் நின்று விட்டது. இது சுயமரியாதைப் பிடாரிகளின் அடாத செயலென்று தமிழ்நாட்டின் அக்கிரகாரப் பத்திரிகை உலகம் அவதூறு பொழிந்தது.
கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மிகப்பெரும் பண்ணைக்காரராகிய பட்டக்காரர் குடும்பத்திலிருந்து கழகத்துக்குக் கிடைத்த நன்முத்து என். அர்ச்சுனன், 20 வயதில் ஈடுபட்டு 23 வயதில் வாழ்வையே முடித்துக்கொண்டார். இந்த மூன்றாண்டுகளில் முப்பதாண்டுப் பொதுப்பணியை அற்புதமாய்ச் செய்து காட்டினார். இந்தக் காலகட்டத்தில் ஏராளமான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தியும், பங்கேற்றும் சிறப்பித்தார்.
எஸ்.ஆர். சந்தானம் மாப்பிள்ளை நாயக்கரின் முதல் மகன். நெடுநாள் ஈரோடு நகரமன்ற உறுப்பினர். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தூண்களில் முக்கியமானவர். பெரியார் நினைத்தவண்ணம் முடித்திடும் ஆற்றலுடையார்.மாணவர் பயிற்சி பெற்று மாவட்டந்தோறும் இயக்கப் பிரச்சாரம் செய்திடப் புறப்பட்டனர். அந்தக் கோடை விடுமுறையில் தொடங்கிய இவ்வழக்கம், திராவிடர் கழகத்தால் இன்றளவும் கையாளப்படுமாறு, பெரியார் பணித்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு சிறையிலிருந்த காந்தியாரை விடுதலை செய்துவிட்டு, வெள்ளையனே வெளியேறு என்று 1942 ஆகஸ்டில் செய்த தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டது. காந்தியார் விடுதலையால் யாருக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? இறந்துபோன தம் மனைவியார் பெயரால் கஸ்தூர்பா நிதிவசூலித்து, அடுத்துவரும் பொதுத்தேர்தலில் நிறையச் செலவு செய்ய முனைந்துவிட்டார்களே! என்றார் பெரியார். மே மாத இறுதியில் சென்னை மாநில 3-வது மருத்துவகுல மாநாட்டைச் சென்னையில் திறந்துவைத்துவிட்டுப் பெரியார், ஜூன் முதல்வாரம் ஆந்திரப் பகுதியில் சுற்றுப்பயணம் சென்று வந்தார். பாக்கிஸ்தான் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியார், இறுதியில் ஜின்னாவைச் சந்திக்க இசைந்ததைக், காந்தியாரின் சரணாகதி எனப் பெரியார் வர்ணித்தார். அவர்கள் பேச்சு முறிந்ததையும் விமர்சித்தார்.
நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. பழைமைவாதிகள் சிலர் திட்டமிட்டுப் பெரியாரின் தலைமைப் பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். பெரியாரின் தீவிரப் போக்குக் கண்டு மனங்குமுறும் பதவிப்பித்தர்கள் அவர்கள். ஆனாலும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் - குறிப்பாகத் தஞ்சை திருச்சி மாவட்டங்களினின்றும் சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்களின் முயற்சியால் எதிர்ப்பு தலைகாட்டவே முடியவில்லை. ஏற்கனவே சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியாரின் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறைவேற்றினார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கவுரவப் பட்டங்களான சர், திவான்பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்பகதூர், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டுவிடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி, ஜில்லாபோர்டு, தாலுகாபோர்டு நியமனங்கள், நாமினேஷன், மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப் பதவிகளையும் விட்டொழிக்க வேண்டும் என்பது. சரிகைக் குல்லாய்க் கட்சி என்ற அவப்பெயர் இத்தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக ஒழிந்தது; 1944 ஆகஸ்ட் 27-ஆம் நாளோடு! இங்கு ஒரு தீர்மானத்தின்மீது பேசினார் கடலூர் சிறுவன் வீரமணி.
கடலூர் சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்களின் பிள்ளைகளை திராவிட இயக்கத்துக்காகவே அவர் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டவர். மூத்தவர் கி. கோவிந்தராசன் தி.மு.க. செயலாளர். அடுத்தவர் கி. தண்டபாணி தி.மு.க. சார்பில் நகர்மன்ற உறுப்பினர். மூன்றாவது பிள்ளை பால்யத்திலேயே படுசுட்டியாக இருந்தது.
கடலூர் ஓ.டி., எனப்படும் பழைய பட்டினத்தில் சென்னையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் பி.ஏ. அலுவல் பார்த்து வந்தார். பெரியாரிடத்தில் ஏகலைவ பக்தி கொண்ட அவர் தமது பெயரை ஆ. திராவிடமணி என மாற்றிக்கொண்டு, தமிழ் வெறியும் சுயமரியாதைக் கொள்கை வெறியும் கொண்டவரானார். அவரது அத்யந்த சீடர் 10 வயது கி. வீரமணி; இவர் 2-12-1933-ல் பிறந்தார். கடலூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முதன்மை மாணாக்கராக இருந்து முடித்தார். இடையில் சுயமரியாதை உணர்வினை மூச்சோடும் நீரோடும் உணவோடும் உயிர்த்தும் உண்டும் தன் உடலை ஊணை அறிவை வளர்த்து வந்தார். வாயாடித்தன்மை பகுத்தறிவு ஒளி வீச்சாக இருந்தது. 10 வயதில் சராசரி உயரத்தைவிடக் குள்ளமாதலால் மேஜைமீது தூக்கி நிறுத்திப் பேசச் சொல்லிவிட்டால் போதும். நிறுத்துவதுதான் கஷ்டம். இந்தப் பத்துவயதுச் சிறுவன் வீரமணி 1944சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழிமொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது. வரலாறு படிப்போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப்போராக மாறியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் தேர்வு. சட்டக் கல்லூரியில் பி.எல். தேர்வு. கடலூரில் கி. வீரமணி எம். ஏ.பி.எல். வழக்கறிஞராகப் பதிவு. திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த போதும் பெரியாரைப் பிரியாத பேராண்மை.
பெரியாரையும், திராவிட பாரம்பரியத்தின் வரலாற்றையும், சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடுகளையும் அய்யந்திரிபு இன்றி உணர்ந்தமையாலும், அபாரமான நினைவாற்றலாலும், கல்வியின் தேர்ச்சியாலும், பயிற்சியின் சிறப்பினாலும், சொல்லாட்சித் திறத்தாலும் மேடையிலே இவர் வெற்றிகரமான விரைவுப் பேச்சாளராக விளங்குகிறார். பூவாளூர் அ. பொன்னம்பலனார் கூட விரைவாகப் பேசுவார். ஆனால் சில பல சொற்கள் விளங்காமலே போகும். வீரமணியின் விரைவான சொற்பெருக்கிலும் விளங்காத சொல்லடுக்கே விழுவதில்லை. அலங்கார நடையல்ல. ஆனால் அழுத்தமான தெளிவான உறுதியான நடை, ஆழமான அனுபவமிக்க கருத்தோட்டம்.
எழுத்திலும் இவர் இணையற்ற வெற்றி கண்டுள்ளார். “விடுதலை”யில் இவர் பொறுப்பேற்ற பிறகு எழுதப்பட்ட தலையங்கம், துணைத்தலையங்கம் எவையாயினும், வெளியிடப்பட்ட பெட்டிச் செய்திகள், துணுக்குகள், செய்திகள் எவையாயினும் பெரியாரின் அங்கீகாரம் பெற்றவை என்று நம்பலாம் எஸ். குருசாமி பொறுப்பில் “விடுதலை” நடந்த காலத்தில் பெரியாரின் எண்ணத்திற்கு முரணாக எத்தனையோ சங்கதிகள் வெளியானதுண்டு.
பெரியாரின் அனைத்து நற்பண்புகட்கும் உறைவிடமாய், அவர் தீர்மானித்த பெண்மணியை மணந்து, அளவாகும், இரு ஆண் ஒரு பெண் மக்களுடன், அவர் ஏற்றி தந்த பகுத்தறிவுச் சுடரைப் பாதுகாப்பாய் பத்திரமாய் உயிரினும் மேலாகப் போற்றி வரும் இவர் ஒருவரே தன்மான இயக்கத்தின் நம்பிக்கைப் பேரொளியாய் இன்று திகழ்கின்றார்.பதவிச் சுகம் அனுபவித்தவர்களால் சும்மாயிருக்க முடியாதே! அவர்கள் சென்னையில் ஒன்று கூடித் தாங்கள்தான் ஜஸ்டிஸ் கட்சி என்று அறிக்கை விட்டனர். பெரியார் அவர்களின் தவறான போக்கைக் கண்டித்துக் “குடி அரசு” 17-9-1944 இதழில் எழுதினார். அதே போன்று டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்துபோது, அவருக்கு நீதிக்கட்சியின் சார்பில் என்று சொல்லி, இவர்கள் செப்டம்பர் 22-ஆம் நாள் விருந்தொன்று கொடுத்தனர். உண்மை நிலவரம் உணர்ந்த அம்பேத்கர், இவர்களைக் கண்டித்து உரையாற்றினார். அடுத்த நாளே பெரியார் இல்லத்துக்குத் தாமே வருகை தந்து. நீண்ட நேரம் உரையாடியும் சென்றார். இம்மாதம் 29-ஆம் நாள் திருச்சியில் பெரியார் இடத்துக்கு வந்து, அனைத்திந்திய இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே, பெரியாரைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் வரதராசலு நாயுடுவும் வந்திருந்தார். இந்து என்ற சொல்லுக்கே ஆதாரம் இல்லை என வாதாடினார் பெரியார். அனைத்திந்திய திராவிடர் கழகம் அமைத்திட, மூஞ்சே பெரியாரிடம் கேட்டார்.
தஞ்சையில் புரட்சிக் கவிஞர் தலைமையில் நடந்த திராவிட மாணவர் மாநாட்டை 26-ஆம் நாள் பெரியார் திறந்து வைத்தார். கரூரில் 24-ஆம் நாளும், கோவையில் அக்டோபர் முதல் நாளும் நடைபெற்ற கழக மாநாடுகளில் கலந்து கொண்டார். கோவை மாநாட்டில் சென்னை சத்தியவாணிமுத்து பங்கேற்றார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற வர்ணாசிரம மறுப்புக் கூட்டத்தில் பெரியார் அக்டோபர் 14-ஆம் நாள் பங்கேற்றார். புராணங்கள் கற்பனையானாலும், சைவரும் வைணவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பி அடித்துள்ள வேடிக்கையைப் பெரியார் நன்கு பிரித்துக் காட்டினார். பக்தலீலாமிருதம் வைணவ ஆழ்வார்கள் 82 பேரைப் பற்றி உரைக்கிறது. பெரிய புராணம் 63 சைவ நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிற, நாயன்மார் நால்வர். ஆழ்வாராதியர் பன்னிருவர். மேலும் பொதுவுடைமைவாதிகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியாவில்தான் சாதியும் வகுப்பும் தனித்தனியே இருக்கின்றன. மேல் நாடுகளில் வகுப்பு பேதம்தான் இருக்கிறது; அதனால் அதை ஒழித்தல் சுலபம். இங்கே முதலில் சாதியை ஒழித்தால்தான் வகுப்பை நீக்க முடியும். சாதியை ஒழிப்பதுதான் சிரமம். அதில் அவர்கள் நுழைய மாட்டார்கள்; அதுதான் நமது போராட்டம் - என விளக்கினார். சாதி என்றால் Caste என்றும், வகுப்பு என்றால் Class என்றும் பெரியார் வேறுபாட்டைத் தெரிவித்தார்.
கலையுலகில் மறுமலர்ச்சித் தூதுவராக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் சென்னையில் ஒரு நாடக சபா துவக்கினார். அவரது இழந்த காதல் நாடகத்துக்குப் பெரியார், நவம்பர் முதல் நாளிரவு தலைமை ஏற்றுப் பாராட்டினார். கலையுலகில் அவர் மீதும், எம்.கே. தியாகராச பாகவதர் மீதும் அவதூறுகளைக் கிளப்பி விட்டிருந்தனர் அழுக்காறு படைத்தோர் சிலர். பெரியாரின் ஒத்த வயதினரும் மதிப்புக்குரிய நண்பருமான செ.தெ. நாயகம் 1944 டிசம்பர் 13-ஆம் நாள் மறைந்தது குறித்துப் பெரியார் மிகுந்த வருத்தமுற்றார்.
டிசம்பர் 24-ஆம் நாள் அண்ணாவுடன் புறப்பட்டுப் பெரியார் கல்கத்தா சென்று, அங்கு எம்.என். ராயின் தீவிர ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 27-ஆம் தேதி உரையாற்றினார். தனது நாத்திக ஆசான் பெரியார் என்றும், அவரளவு நாத்திகத்தைப் பற்றிப் பேசி, எழுதி, நூல் வெளியிட்டவர் உலகில் வேறு எவரும் இலர் என்றும், ராய் புகழ்ந்துரைத்தார். அப்படியே கான்பூர் சென்று, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்று, 29, 30, 31 மூன்று நாட்களும் ஆங்கிலத்தில் விளக்கமாக உரை நிகழ்த்தினார் பெரியார்.
சேலம் மாநாட்டிற்குப் பிறகு திராவிடர் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தினார் பெரியார். 1945-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 24,302. அவர்கள் செலுத்திய கட்டணம் ரூ.2619-13-0. மாணவர்கள் புத்தெழுச்சியால் மனம் நெகிழ்ந்த பெரியார் எதிர்காலத்தில் இனி அச்சமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி, ஆரிய திராவிடப் போருக்கு அறைகூவல் என்ற “குடி அரசு" 20-1-45 தேதி இதழில் தலையங்கமே தீட்டினார். தென்னார்க்காடு மாவட்டம் புதுப்பேட்டையில் திராவிட மாணவர் மாநாடு; சிற்றூரிலும் வெற்றிகரமாய் நடக்கும் என எடுத்துக் காட்டாய் இலங்கியது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா என்று தொடங்கி, இங்கு உன் நாட்டுக்கு இழி கழுதை ஆட்சியா? என்றெல்லாம் ஓடும் கவிதைப் பிரவாகம், புரட்சிக் கவிஞர் இந்த மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். ஈ.வெ.கி. சம்பத் இம்மாநாட்டின் தலைவர்.
சுற்றுப் பயணம் தொடர்ந்தார் பெரியார் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், ஆறறிவு படைத்ததால் மனிதன் சிந்திக்கும் ஆற்றலுள்ளவனாயிருக்கிறான்; அதனால் விலங்குகளைவிட உயர்ந்தவன் - என்ற கருத்தைப் பெரியார் மறுத்து, விளக்கினார். மிருகங்கள்கூடச் சிந்திக்கின்றன. மனிதன் மற்றவர்களுக்கு உதவுவதால் பெரியவன் என்றால், அற்பமான தேனீகூட மனிதனுக்குத் தேன் தருகிறதே; மாடுகூடப் பால் தருகிறதே - ஆனால் மனிதன் எப்போது உயர்ந்தவன் என்றால், தனக்கென்று சுயநலத்துடன் எதையும் செய்து கொள்ளாமல், பொது நலத்துக்கே எப்போதும் பாடுபடுவதால் மதிக்கப்படுவான் - என்றார் பெரியார். அதே போல 32 தர்மங்கள் செய்ய வேண்டும்; அதற்காகத்தான் கடவுள் மனிதனுக்குச் செல்வத்தைத் தந்துள்ளார் என்ற பழங்கொள்கையையும் கண்டித்தார் ஒருவனிடம் செல்வத்தைத் தந்து, அவன் இடுகின்ற பிச்சையைட் பெறுவதற்கென்றே இன்னொருவனை ஏழையாக வைப்பவன் கடவுளாயிருக்க முடியாது - என, வள்ளுவரையும் மேற்கோள் காட்டினார் பெரியார்.
சுற்றுப் பயணத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது பெரியாருக்கு. செயற்கைப் பல், நாவில் உரசி உரசிப் புண்ணாக்கி விட்டது. 16-3-45 முதல் சென்னை பொது மருத்துவமனையில் பத்து நாள் தங்கிச் சிகிச்சை பெற்றார். அங்கு நாக்கில் புற்று நோய் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்யப்பட்டது. நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர் என்று சொல்ல ஆத்திகர்க்கு வாய்ப்பில்லாது எல்லாமே குணமாகி விட்டது. முதலில் தமையனாரின் சித்த வைத்தியம் பலிக்கவில்லை. அதன் பிறகு செயற்கைப் பல் செட்டைப் பொருத்தாமலே ஈறுகளால் நன்கு மென்று தின்னப் பழகிக் கொண்டார் பெரியார். முறுக்கும். இறைச்சியும்கூட நொறுக்கப்பட்டன!
மீண்டும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு, ஏற்காட்டில் ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது, சொந்த உபயோகதிற்காகத் தமது சொந்த நிலத்தில் விளைந்த அரிசியைத் தாமும், தமையனார் ஈ.வி.கே.யும், மணியம்மையாரும் எடுத்துச் சென்றதற்காகப், பெருந்தன்மையும் காருண்யமும் மிக்க சர்க்காரால், தலைக்கு 75 ரூபாய் அபராதம் கட்ட நேரிட்டது. ஈரோட்டில் மூன்றாம் முறையாக நடைபெற்ற திராவிட மாணவர் பயிற்சி முகாமுக்கு வந்து, வகுப்புகள் நடத்திவிட்டு, மறுபடியும் ஏற்காடு திரும்பினார் பெரியார்,
இரண்டாம் உலகப் பெரும் போரில் நேசநாடுகள் இறுதியாக வெற்றி பெற்று விட்டன. இதைப் பாராட்டிப் பெரியார் 12-5-1845 அன்று “குடி அரசு” தலையங்கம் எழுதினார். இதற்குப்பின் ஜூலையில் நடைபெற்ற சிம்லா மாநாட்டில், வைசிராய் வேவல் கழகத்தை அழைக்காவிடினும், வகுப்புவாரி உரிமைக்கு ஒப்புதல் தந்தனர் என்பது குறித்துப் பெரியார் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்திங்களில் மணியம்மையார், ஏ.பி. சனார்த்தனம் இவர்களுடன் ஆந்திர நெல்லூர்ப் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அடுத்த திங்கள் பெங்களூருக்கும் சென்றிருந்தார் பிரச்சாரத்திற்கு.
போலி ஜஸ்டிஸ் கட்சியைத் துவக்க முயன்று தோல்வியுற்ற மாஜிப் பதவியாளர் சிலர், வேறொரு முனையிலிருந்தும் பெரியார் மீது பாணம் தொடுத்துப் பார்த்தனர். இமிடேஷன் சுயமரியாதைச் சங்கம் என்று 14-7-1945 “குடி அரசு” இதனை வர்ணித்தது. தாங்களே மெய்யான சுயமரியாதைச் சங்கம், என ஒன்றைப் பதிவு செய்திட முனைந்தனர். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியப் பெரியார் தொண்டர்கள் 1945-ஆகஸ்ட் 2-ம் நாள் கரூரில் சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பெரியார் தலைமையில் நடத்தி, உண்மை இதுதான் என நாட்டினர்!
திராவிடர் கழக உறுப்பினர் பதியும் பணி விரைந்து முன்னேறி வந்தது. 1945-ஆகஸ்ட் 18-ஆம் நாள் வரையில் உறுப்பினர் எண்ணிக்கை 33,867/- கட்டணத் தொகை ரூ.3367/- ஈரோட்டிலிருந்து பெரியார் “ஜஸ்டிசைட்” என்ற ஆங்கில வார இதழ் துவக்கினார், 1-9-45 அன்று, பின்னர் செப்டம்பர் 3-ஆம் நாள் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ் மொழி பற்றிக் கருத்தாழமிக்க ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். 17-வது நீதிக்கட்சி மாநாடு திருச்சியில் நடைபெற ஆயத்தமாயிற்று.
1945 - செப்டம்பர் 29-ஆம் நாள் திருச்சி புத்தூர் மைதானத்தில் 17-வது நீதிக்கட்சி மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. என். அர்ச்சுனன் திறந்து வைத்தார். தராசுக்கொடி (இங்குதான் கடைசி) மிராண்டா கஜேந்திரன் அம்மையாரால் ஏற்றி வைக்கப்பட்டது. தி.பொ, வேதாசலம் வரவேற்புக் குழுத் தலைவர். அடுத்த நாள் டி. சண்முகம் தலைமையில் 4-வது சு.ம இயக்க மாநில மாநாடு கே.கே.நீலமேகம் திறந்துவைக்கக், கனகம்மையார் இராமசாமி கொடியேற்றினார். அண்ணா தான் வரவேற்புக் குழுவின் தலைவர். அழகர்சாமியின் சிறப்புரையும், எம்.ஆர். ராதாவின் நாடகமும் மாநாட்டில் பாராட்டுப் பெற்றன. இந்த மாநாட்டை ஓட்டி நடைபெற்ற ஊர்வலம், திட்டமிட்ட பாதையில் செல்லாதவாறு தடை செய்து. அரசு சிறுமதியைக் காட்டிக் கொண்டது. தொண்டர்கள் உணர்ச்சிமயமாய்க் தடை மீறத் துடித்தனர். பெரியாரோ தமது இயல்புக்கேற்ப, அரசு அனுமதிக்கும் வழியிலேயே செல்வோம் என்று அமைதிப்படுத்தினார். இதேபோல்தான் கடந்த ஜூலை 22-ஆம் நாள் புதுச்சேரியில் பாரதிதாசனால் துவக்கப்பட்ட திராவிடர் கழக விழாவுக்குப் பெரியார் சென்றபோது, அவர் உரை நிகழ்த்திய பின்னர், உள்ளூர்க் கயவர்கள் சிலர் கொடிமரத்தை வீழ்த்திக் கலவரம் செய்தனர். பெரியாரை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாக அன்பர் இராமலிங்கம் இல்லத்திற்குத் தோழர்கள் அனுப்பினார்கள். தனியே அகப்பட்டுக் கொண்ட மு. கருணாநிதி நையப் புடைக்கப்பட்டார் அங்கு “தொழிலாளர் மித்திரன்” இதழ் நடத்தி வந்த காஞ்சி கல்யாண சுந்தரம் தாக்கப்பட்டார். அப்போதும் பெரியார் அமைதி காத்து, அனைவரையும் ஆறுதல் பெறச் செய்து, அடுத்த நாள்வரை தங்கியிருந்து, பின்னர் ஈரோடு திரும்பினார்.
திருச்சி மாநாட்டில் பாடலாம் என்று பெண்ணாகரம் நடேசன் ஒரு பாடல் இயற்றிக்கொண்டு வந்திருந்தார். இன்னும் என்ன செய்யப் போறிங்க? சொல்லுங்க நீங்க! என்ற அந்தப் பாடலின் சந்தம் பெரியாரைக் கவர்ந்ததால், தாமே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். நன்றாக வந்தது. உடனே மகிழ்ந்து போய், அதில் 10,000 பிரதிகள் அச்சியற்றித் திருச்சி மாநாட்டில் விநியோகம் செய்தார்; பாடலும் பாராட்டுகளை ஏராளமாகப் பெற்றது!
தராசுக்கொடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தந்த கொடி, அது புரட்சியின் சின்னமல்ல; மாற்ற வேண்டும் - என்பதாக ஒரு கருத்து திருச்சியில் உதயமாயிற்று. பின்னர் பெரியார் கேட்டுக் கொண்ட வண்ணம், பலரும் டிசைன் அமைக்க முயன்றனர். “குடி அரசு" உதவி ஆசிரியராக அப்போது ஈரோடு வந்திருந்த மு. கருணாநிதி, கருப்புமையும், தன் விரலின் நுனியிலிருந்து எடுத்த இரத்தமும் கொண்டு, இப்போதுள்ள திராவிடர் கழகக் கொடிக்கு வடிவமைப்பு எழுதித்தந்தார். அதுதான் பின்னர் 27-4-1946-ல் பெரியார் அங்கீகாரம் பெற்றது.
இனி திராவிடர் கழகத்துக்குப் பெரியார்தான் நிரந்தரத் தலைவர் எனத் திருச்சி மாநாடு தீர்மானம் இயற்றியது.
திராவிட விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், இதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945-செப்டம்பர் 29-ஆம் நாள் “குடி அரசு” இதழில், கருப்புச்சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் இதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் இத்தகைய அறிவிப்பு, 22-12-1945 “குடி அரசு” இதழ் வரையில் தொடர்ந்து வெளியாயிற்று. கருப்புச்சட்டைப் படையின் முதல் தொண்டராக, மு. கருணாநிதி தம்மைப் பதிவுசெய்து கொண்டார் ஈரோட்டில்.
திருச்சி மாநாடு, தனிச் சுதந்திரத் திராவிட நாடு வேண்டும் என்றும், தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் புரட்சிகரமான இரு முடிவுகளையும் மேற்கொண்டது. அடுத்த திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார், தேர்தல் பகிஷ்காரம் ஏன் என விளக்கினார். நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம்; பெண்டிரும் புடவை இரவிக்கை அணியலாம்; கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளையே போடலாம் என்ற கருத்துகளைப் பெரியார் கூறினார். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை. நீலச்சட்டை, ஹிந்துஸ்தாள் சேவாதள் ஆகியவை இருப்பது போல, இங்கும் கருப்புச் சட்டைப் படை இருக்கும் - என்றார் பெரியார்.
உடல்நலங் குன்றியதால் பெரியார் நவம்பர் 20-ஆம் நாள் முதல் டிசம்பர் 31 முடிய குற்றாலத்தில் தங்கியிருந்தார். இதற்கு ஒரு காரணம், கடந்த நவம்பர் முதல் நாள் என்.எஸ். கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் இருவருக்கும் 14 ஆண்டு கடின காவல் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பாகும். பெரியார் இதனால் மனங்குமைந்து போனார். நாடெங்கும் திராவிடர் கழகக் கூட்டங்களில் இவர்களிருவரையும் விடுதலை செய்ய வேண்டிக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கிருஷ்ணன் நாடக சபா ஒன்று துவக்கியிருந்தார். இதில் டி.வி. நாராயணசாமி, சிவாஜிகணேசன், ஆர்.எம். வீரப்பன், எஸ். எஸ். ராசேந்திரன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த நாடக சபா தினந்தோறும் கிருஷ்ணன் - பாகவதர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைக் காட்சியாகக் காட்டி வந்தது. பத்திரிகா தர்மத்தின் பாதுகாவலனான மவுண்ட்ரோடு மகா விஷ்ணு, “இந்து” பக்கிரிகை, என்.எஸ்.கே. சம்பந்தமான செய்திகளையே வெளியிடுவதில்லை . இதனால் மனம் வருந்திய பெரியார், நமக்கு நிதி வசதியும், ஒரு தினசரிப் பத்திரிகையும் தேவை என 1946 சனவரி 5-ஆம் நாள் “குடி அரசு” இதழில் குறிப்பிட்டிருந்தார். கழகப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள், கூட்டங்களுக்கு ஒத்துக்கொண்டு, போகாமல் தவறி விடும் ஒழுங்கினத்தையும் பெரியார் கண்டித்திருந்தார். யுத்தப் பிரச்சாரத்திற்காகத் தரப்பட்ட “விடுதலை” நாளேடு திருப்பித்தரப்பட்டால், நடத்தலாமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி 1946 ஜூன் 5-ஆம் நாள் முதல் “விடுதலை” நாளேடு மீண்டும் தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தொடங்கிய 60-ஆம் ஆண்டு விழா 1946 சனவரியில் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தியார் சுற்றுப் பயணம் புறப்பட்டார். பெரியார், காங்கிரஸ் அய்ந்தாம்படை ஸ்தாபனந்தான் என்றாலும் காந்தியார் பகிஷ்காரம் இப்போது வேண்டாம்; காங்கிரசே தேர்தலில் வெற்றி பெறும் என்பதாக எழுதினார். இந்த முற்போக்கான காலத்திலும் சேலத்தில் மார்ச் 9, 10 தேதிகளில் சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் பிராமணர் மகாநாடு நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டு பதைத்தார் பெரியார்! திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு நீடாமங்கலத்தில் பிப்ரவரி 23, 24 நாட்களில் மிக எழுச்சியுடன் நடை பெற்றது. பெரியார், அண்ணா , ஏ. ராமசாமிக் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் உள்ளத்தில் மூண்டிருந்த புரட்சிக்கனல் அணைந்திடாமல் பாதுகாத்தார் பெரியார்!
நாடெங்கும் கருப்புச் சட்டை அணிந்தோர் உலா வந்தனர். மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது மாநாடு குழுமியது. மே திங்களில் 11, 12 நாட்களில் தொடங்கிய கருப்புச் சட்டை மாநாட்டிற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் அண்ணா , கொடி உயர்த்தியோர் என். அர்ச்சுனன், “திராவிட நாடு” படத் திறப்பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (மாப்பிள்ளை நாயக்கர் மகளார். சம்பத், பெரியார் விரும்பியவாறு இவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், பெரியாரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்க மாட்டார்!) அண்ணாவின் அவன்பித்தனா, ராதாவின் போர்வாள் - நாடகங்கள் ஏற்பாடாகியிருந்தன. மதுரை வையையாற்று மணற்பரப்பில் வேயப்பட்டிருந்த மாநாட்டுப் பெரும் பந்தலில் கயவர் நெருப்பிட்டுக் கொளுத்தினர். தங்கியிருந்தோர் திசைமாறி ஓடும்போது, காலிகள் தாக்கினர். இதைத் தொடர்ந்து தமிழ் நாடெங்கும் அமளி கட்டவிழ்த்து விடப்பட்டுக் கழகக் கொடிகளை வீழ்த்துவதும், கலகம் விளைப்பதும் தொடர்ந்தது. ஆனால் அடுத்த வாரமே கும்பகோணத்தில் திராவிடர் மாநாடும், சுய மரியாதை மாநாடும் நடைபெற்றன. இரவில் அண்ணாவின் சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகங்கள். உடல் நலிவோடு அண்ணாவும் இவற்றில் நடித்தார். சிவாஜிகணேசன் சிவாஜியாக வேடம் புனைந்தார். (15-12-1945 அன்று இந்த நாடகம் சென்னையில் அரங்கேறியது. அதுவரை ஸ்தீரி பார்ட்டாக இருந்த நடிகர் வி.சி. கணேசனுக்கு சிவாஜி வேடந்தந்து, தாம் காகபட்டராக நடித்தார் அண்ணா ) ஏ.வி. பி. ஆசைத்தம்பி சுயமரியாதை மாநாட்டுத் தலைமை தாங்கினார்.
விருதுநகரில் காமராசருக்கு உறவினராயிருந்தும் துவக்க முதல் இறுதிவரை மயங்காத்திண்மை படைத்த சுயமரியாதை வீரராக விளங்கிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி தமது பள்ளிப் படிப்பு முடிந்த 1943-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் ஈடுபட்டார். 1944-ஆம் ஆண்டு திராவிட மாணவர் மாநாட்டை அங்கே கே. ஆர். சத்தியேந்திரன் (மாவட்ட நீதிபதி அளவுக்குப் பின்னாளில் உயர்ந்தவர். 1976-ல் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்டோரில் முக்கியமானவர்) போன்ற தோழர்களுடன் நடத்தினார். நகரமன்ற உறுப்பினராயிருந்தார். அண்ணாவுடன் தி.மு.சு. அமைப்புக்கு வந்தார். “காந்தியார் சாந்தியடைய” என்ற நூலை எழுதியதற்காக 6 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுச் சிறையிலிருந்தபோது, அரசு 1950-ல் இவர் தலையை மொட்டையடித்தது. 1957-ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் சென்னையில் சட்டமன்ற உறுப்பினரானார். கலைஞர் ஆட்சியில் சுற்றுலா வாரியத் தலைவராயிருந்தார். 1977-ல் வடசென்னை நாடாளுமன்றத் தேர்தலில் வென்றார். 1979 ஏப்ரல் 7-ஆம் நாள் அந்தமானில் திடீரென மறைந்தார். “தனி அரசு” இதழாகவும் காளேடாகவும் நடத்தி - அச்சம் தயை தாட்சண்யமின்றி எழுதினார். தொலைவிலிருந்து கேட்பார்க்குத் தந்தை பெரியார் பேசுவது போலவேயிருக்கும் குரலும் பாணியும் இவர் கொண்டு, சிறந்து விளங்கினார். டாக்சி ஆட்டோரிஷாத் தொழிற்சங்கத் தலைவராக நீண்ட நாள் இருந்தார். இன் சொல்லால் உரையாடும் பண்பாளர்.
குடந்தை கே.கே. நீலமேகம் தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதை, திராவிடர் இயக்கப் பெருந்தூண். பெரியாரை விடுத்து அண்ணாவுடன் இவர் தி.மு. கழகத்திற்குச் சென்றது பெரியாருக்கு உட்பட எல்லார்க்குமே வியப்பு. ஓங்கிய குரலால் நீண்ட நேரம் மேடைகளில் பேசுவார். நிறைய சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார்.
சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் ஏ. இராமசாமிக் கவுண்டரும், அவரது துணைவியார் கனகம்மையாரும் திராவிடர் இயக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். எந்தக் கூட்டமோ, மாநாடோ, தயங்காமல் பங்கேற்றுப் பணியாற்றுவார்கள். அம்மையார் அரசியல் நிகழ்ச்சிகளில் மிகத் துணிவுடன் கலந்து கொள்வார்கள்.
திருவெற்றியூர் சண்முகம் பெரியாரின் அன்பர், இடைவிடாது நீதிக்கட்சிக்காக உழைத்த பெருந்தகையாளர். அண்ணாவிடமும் பெருமதிப்புப் பெற்றார்.
ஜூன் திங்கள் நடைபெற்ற இரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தம், சென்னையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவற்றை வரவேற்றும், வெற்றிபெற வாழ்த்தியும், பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் - பத்திரிகையாளர் இழி தன்மைக்கும் பலியாகாமல் எச்சரிக்கையாய் நடந்துவர வேண்டுமென்றும் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறினார் பெரியார்.
கழகத்துக்கு நிதி வசதியே இல்லாததால் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து உதவ வேண்டும் என்றும், அது சேரும் வரையில் கழகத் தோழர்கள் ஆங்காங்கு மாநாடு கூட்டி நிறையப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.
சூலைத் திங்கள் 31-ஆம் நாள் முதல் ஆகஸ்டுத் திங்கள் 8-ஆம் நாள் முடியப் பெரியார் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இதில் புதுமையாக விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் என்னும் சிறந்த அமைப்புத் தொண்டரால். அதாவது, பெரியாருடன் நெடுஞ்செழியனும் வருவார்; ஒலி பெருக்கி அமைக்கப்பட்ட காரில் இருவரும் பயணம் செய்வார்கள் என்பதாக! 1946-ல் இதுவும் ஒரு புதுமை!
பெரியார் குடும்பத்தில் இந்த ஆண்டு இரு திருமணங்கள் நடந்தன. அண்ணாரின் சிறிய மகள் செல்லா என்கிற நாகலட்சுமிக்கும், சேலம் தாதம்பட்டி ராஜுவுக்கும் 19-4-46-ல் திருமணம் நடைபெற்றது. ஈ.வெ.கி. சம்பத் - திருப்பத்தூர் சாமி நாயுடு மகள் சுலோச்சனா இவர்கள் திருமணம் 15-9-1946 அன்று திருப்பத்தூரில் நடைபெற்றபோது பெரியார், பெண்கள் அலங்கார பொம்மைகளா - என்ற தலைப்பில், பெண்டிருக்கு உள்ள நகைப் பைத்தியம் முதலிய பழைமைக் கருத்துகளைச் சாடினார். (பெரியார் வலதுகை மோதிர விரலில் எப்போதும் அணிந்திருக்கும் பெரிய பச்சைக்கல் மோதிரத்தைக் குறும்புடன் பார்த்தனர் மணமகளார்!)
திராவிட மக்களுக்குத் தனியான நெறியில்லை ; ஆரிய மதம் ஆரிய வேதம் ஆரியக் கலை இவைகளையே தமது நெறியாகத் திராவிடர் தவறாகக் கருதுகின்றனர்; ஆதாரமேயில்லாத பரதக் கண்டம் அல்லது பாரத தேசம் தமது நாடு என நினைக்கின்றனர்; யார் நம்மவர், யார் அந்நியர் என்பதும் புரியவில்லை ; திராவிடர் தவிர மற்ற எல்லாருமே நமக்கு அந்நியரே; காங்கிரஸ் ஏற்பட்டது. முஸ்லீம்களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்கவே; எனவே ஆரியம் ஒழிந்த திராவிடமே நமது இலட்சியம் - என்று பெரியார் சென்னையிலும் பிற ஊர்களிலும் நடந்த பொதுக் கூட்டங்களில் விளக்கினார். இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட்டு, நூறு சதவீத வெற்றியைத் தேடிக் கொண்டது! வெள்ளையர் வெளியேறுமுன்பே காங்கிரசார் இங்கு பதவியில் அமர்ந்து, அரசியல் சட்டங்களை இயற்றத் தொடங்கினர், முஸ்லிம் லீகும், டாக்டர் அம்பேத்கர் இயக்கமும் நேரடி நடவடிக்கையில் இறங்கின. சர் ஸ்டா போர்டு கிரிப்சும், வைசிராய் வேவலும் திராவிடர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தும், காலை வாரிவிட்டனர். பெரியாருக்கு அதிர்ச்சி தரும் வண்ணம், 24 வயது நிரம்பு முன்னர் என். அர்ச்சுனன் மறைந்துவிட்டார் 12-10-46 அன்று.
காங்கிரஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் திட்டவட்டமான கொள்கையில்லாமல் குழம்பிக் கிடந்தனர் மந்திரிகள். மதுவிலக்கில் கட்டுப்பாடில்லாக் காங்கிரஸ் மந்திரிகள் என்று பெரியார் கண்டனம் தெரிவித்து எழுதினார். மேலும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தலைப்பிலும் எழுதினார். அதாவது, காங்கிரஸ் இடைக்கால சர்க்கார் அமைத்ததைச் சுட்டிக்காட்டி! முன்பு நீதிக்கட்சி ஆட்சி முடிவுற்றுக், காங்கிரஸ், ஆட்சி அமைக்கத் தயங்கியபோது, 1936-ல், அற்பாயுள் மந்திரிசபையென இடைக்கால மந்திரி சபையைச். காங்கிரசார் வர்ணித்தார்களல்லவா - அதைப் பெரியார் நினைவூட்டினார்.
சென்னையில் டிப்புசுல்தான் நாள் என்பதாக. 1946 நவம்பர் 16-ஆம் நாள் கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது புதுமையாகத் தோன்றுகிறது.
சென்னை மாகாணத்தில் பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் அரசோச்சத் தொடங்கியிருந்தது.
ஈரோட்டில் சண்முக வேலாயுதம், புலியூர் குகநாதன் இருவரும் சேர்ந்து நாதன் கம்பெனி என்ற புத்தக விற்பனை நிலையம் துவங்கினர். “குடி அரசு” இதழ் சில காலம் இவர்கள் பொறுப்பில் நடைபெறப் பெரியார் அனுமதித்திருந்தார். பெரியாரின் சேலம் கல்லூரிச் சொற்பொழிவைத் தொகுத்து “தத்துவ விளக்கம்” என்ற அழகிய நூலையும் இவர்கள் வெளியிட்டனர். பின்பு 1947 சனவரி 22 அன்று துவக்க விழா ஆற்றிய பெரியார், நூல்களைப் பற்றி அரிய கருத்துகளை அங்கு வெளியிட்டார்:- இப்போது நூல் படிப்பவர் தொகை அதிகமாகியிருப்பதால், வெளியீட்டாளர் நூல் விற்குமோ என அஞ்சவேண்டியதில்லை. ஆனால் படித்த கூட்டத்தார், பிறருக்கு உபகாரிகளாக இருப்பதில்லை. பண்டிதர்கள் எவ்வளவோ பெரிய நூல்களை எழுதி வெளியிட்டாலும் மூடநம்பிக்கையில்லாத, மானமற்ற தன்மையில்லாத, நூல் ஒன்றேனும் காண முடிவதில்லை. அறிவியக்க நூல்களை வாங்குவோர் மிக அவசியமானவற்றை வைத்துக் கொண்டு மற்ற நூல்களைக் குறைந்த விலைக்கு, உடனே, பிறர்க்கு விற்று, நிறையப் பேர் படிக்க வழி செய்ய வேண்டும் - என்றெல்லாம் பெரியார் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினார்.
மார்ச் 18-ஆம் நாள் திருச்சியில் தென்பகுதி ரயில்வே அலுவலர் சங்கத்தார் பெரியாருக்கு 1080 ரூபாய் நிதி வழங்கினார்கள். அவர்கள் குறை போகப் பெரியார் காட்டிய வழிகள், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவையாகும். அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் ரயில்வே சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் அய்ந்து பேரில் ஒருவர் முஸ்லிம்; அவரும் பார்ப்பன மாதை (கே. சந்தானம் அய்யங்காரின் மைத்துனியை) மணந்தவர்; மற்றவர் பார்ப்பனர். நீதி எப்படி நம்மவர்க்குக் கிடைக்கும்? காங்கிரசின் ராமராஜ்யம் நமது சூத்திரர்களுக்கு மட்டுமே தீங்கிழைக்கிறது. முஸ்லீமோ, வெள்ளையரோ, சட்டைக்காரரோ, மதம் மாறுவதாய் மிரட்டும் அம்பேத்காரின் தாழ்த்தப்பட்டவரோ தமக்குரிய கோட்டாவைப் பெறுகிறார்கள். இந்து என்கிற பெயரில் பார்ப்பனர் முழுக் கோட்டாவும் அடித்து விடுகின்றனர். தப்பித்தவறி நம்மவர் யாராவது மேலே வந்தால், கெட்ட பெயர் உண்டாக்கி, ஆளையே அழித்து விடுகிறார்கள். அதனால்தான் நாம் இந்து என்னும் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும். நமக்கு அய்ந்தாண்டுகளுக்குப் பின் தாம் இந்துவல்ல என்று சொன்ன அம்பேத்காருக்குச் சலுகை கிடைக்கிறது; நாம் திராவிட நாடு கேட்ட மூன்றாண்டுகட்கு அப்பால் பாக்கிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்குப் பயப்படுகிறார்கள்; நம்மை மாத்திரம் மதிப்பதில்லை . ஆகையால் நமக்கு இருக்கிற இழிவு ஒழிய நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விடுவதுதான் ஒரேவழி - என்றார் பெரியார்.
பெரியாருக்கு இப்போது மகிழ்ச்சியளித்த ஒரே செய்தி என்.எஸ். கிருஷ்ணன், தியாகராச பாகவதர் இருவரும் 25-4-47-ல் விடுதலை ஆனதுதான்! அதனால் நோயுற்றிருந்த அவர் பூரித்தெழுந்தார். எடை ஒரு வேளை அதிகரித்ததோ என்னவோ? திருவத்திபுரத்தின் கழகத் தோழர்கள், அடுத்த திங்கள், பெரியாருக்குத் துலா நிறை புகு விழா நடத்திக் களித்தனர்.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் வெள்ளையன் வெளியேறினான். காந்தியார் கேட்ட இந்துஸ்தான் சுயராஜ்யம் முழு அளவில் கிடைக்கவில்லை. இந்தியாவைக் கூறுபோட்டுப், பாக்கிஸ்தானைத் - தனியாக்கிக், குடியேற்ற நாட்டு அந்தஸ்துடன்தான் சுயராஜ்யம் தந்தான். ஆடி, ஆனந்தப் பள்ளுப் பாடினர் காங்கிரசார். “இது நமக்குத் துக்க நாள் வெள்ளையன் வெளியேறினானாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது சவாரி செய்கிறானே?” என்றார் பெரியார். திராவிடர் கழகத் தேனிசையில் அபசுரம் ஒலித்தது. அண்ணா எழுதினார் “இரண்டுபேர் நம் மீது சவாரி செய்தனர்; ஒருவன் ஒழிந்ததில் பாதிச்சுமை குறைந்ததல்லவா? அதனால் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிக்குரிய நாள்!” என்று. வெளியில் தெரியுமளவுக்குக், கழகம் இரு முகாமாகித், தாக்கிக் கொண்டது. ஏற்கனவே, எல்லாரும் எப்போதும் கருப்புச் சட்டை அணிய வேண்டும்; வெள்ளைச் சட்டையணியும் குள்ள நரிகள் எனக்கு வேண்டாம் - என்று பெரியார் சொன்னதில், அண்ணாவும் வேறு சிலரும் மனத்தாங்கலுடனிருந்தனர். ஆகஸ்ட் 15 புதிய விரிசலை உண்டாக்கியது.
செப்டம்பர் 14-ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில், திரு.வி.க. கலந்து கொண்டு திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய அற்புத மாறுதலைத் தமிழகம் கண்டது ஆயினும், அண்ணாவின் உள்ளம் அமைதியை இழந்திருந்தது. பெரியார் செயல்களில் அண்ணா ஏதோ குறை உணரத் தொடங்கினார். இதற்கு மேலும் உரமூட்டுவது போல், கரூர் வழக்கு நிதி அமைந்தது. நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் கழகத் தோழர்கள் சுமார் 100 பேர்மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்தது. பெரியார். அவர்களை ஆதரித்துக் காப்பாற்றவில்லை என்பதாகக் கூறி அண்ணா , திருச்சியில், தமது நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்கள் வாயிலாய் நிதி திரட்டி உதவினார்.
உடையர்பாளையம் வேலாயுதம் என்கிற ஒரு பள்ளி ஆசிரியர் கழகப் பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்துக்காகக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிடப்பட்டது. 1947 நவம்பரில்தான்!
ஏ.பி. சனார்த்தனம் “தோழன்” என்றொரு திங்களிதழ் தொடங்கினார். “அவரை நம்பலாம்” என்று பெரியார் 1-11-47-ல் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்தாம் பெரியாரில் பெரியார் என்றார் பட்டுக்கோட்டை அழகர்சாமி, அப்போது பெரியாரைப் பற்றி!
வால்மீகி ராமாயணத்தைப் பெரியார் மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெளிந்தவர். அந்த ஆதி காவியத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்த கம்பனுக்கு, என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை - அதில் உள்ள சாமான்ய மனிதர்களையெல்லாம் தெய்வங்களாகப் படைத்து உலவ விட்டான். கம்பராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதால் கிடைத்ததைவிடப், பக்தி மார்க்க நூல் ஆண்டவன் அவதார மகிமை கூறும் இதிகாசம் என்பதால் கிடைக்கும் பெருமையே அதிகம். எனவேதான் கம்பன் தமிழ்க் கவிஞனென்கின்ற தயவு தாட்சண்யம் பாராமல் பெரியார் கண்டித்தார். மேலும், நாடகம், தெருக்கூத்துகள் வாயிலாகவே இராமாயணம் அதிகமாகப் பரவியிருப்பதால், அதே வழியைக் கையாண்டு, வான்மீகிப் படைப்பின்படி இராமாயணப் பாத்திரத்தைச் சிருஷ்டித்து, நாடகமாக நடத்த விரும்பிய பெரியார், உண்மை இராமாயணம் என்னும் பெயரில், நாடக உருவில், தொடர்ந்து “குடி அரசு” இதழில் எழுதி வந்தார்.
சுயராஜ்ய ஆட்சி என்ற பெயரால் கடைந்தெடுத்த முதலாளிகள் ஆட்சிதான் டெல்லியிலும், சென்னையிலும் நடைபெறுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, 1948 சனவரித் திங்களில் தாம் சுற்றுப் பயணம் செய்க எல்லா ஊர்களிலும் பெரியார் சொற்பொழிவாற்றுகையில், ஏழைப் பங்காளரான காந்தியார், பிர்ஸா மாளிகையில் தங்குவதும்; பெரும் முதலாளியான ஆர்.கே. சண்முகம் நிதி மந்திரியாக விளங்குவதும் நியாயமா என்று கேட்டார். சுய ஆட்சி என்பதைவிட, நல்ல ஆட்சியையே தாம் விரும்புவதாகக் கூறினார். 100க்கு 88 பேராகவுள்ள பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோருக்குப் பிரதிநிதித்துவம் தரப்படாத கொடுமையை விவரித்தார்.
காந்தியார் படுகொலை நிகழ்ந்து விட்டது! அவரது வர்ணாசிரம தர்ம மோகத்தையே பெரியார் கண்டித்து வந்தார். ஆனால் பார்ப்பனரல்லாதாரான காந்தியார்மீது அளவற்ற பற்றுதல் கொண்டவர் பெரியார். சித்தம் கலங்கிவிட்டார். நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் 1948 பிப்ரவரி 29-ஆம் நாள் காந்தியாருக்காக அனுதாபக் கூட்டங்கள் நடத்திட அறிவித்தார். 31-1-48 “விடுதலை” ஏட்டில், மனம் பதறி அறிக்கை விட்டார். தொடர்ந்து பிப்ரவரிமாதம் முழுவதும் காந்தியாரைப் பற்றியே பேசியும், எழுதியும் வந்தார். காந்தியார் பாலூற்றி வளர்த்து வந்த பார்ப்பனீயப் பாம்பே அவரைத் தீண்டிய நன்றி கொன்ற செயவை வெளிப்படுத்தினார். கோட்சே, பார்ப்பனன் என்பதை மறைத்த, “இந்து”, “மித்திரன்” பத்திரிகா தர்மத்தை அம்பலமாக்கினார். “அய் ஹாவ் நோ பிலீஃப் இன் பர்சனல் காட்” என்று சொன்ன காந்தியாரின் சாம்பலை ஊரூராய்க் கரைத்த மூடத்தனத்தைக் கண்டித்தார். காந்தியாருக்கு நினைவுச் சின்னமாக, இந்தியாவுக்கு காந்திஸ்தான் அல்லது காந்திதேசம் என்றும், இந்து மதத்துக்குக் காந்தி மதம் என்றும், நமது ஆண்டுக் கணக்குக்குக் காந்தி ஆண்டு என்றும், பெயர் மாற்றலாமெனப் பெரியார் ஆலோசனை வழங்கினார். இந்தப் பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றலின்றி, நேரு குழுவும் பட்டேல் குழுவும் தமக்குள் போராடிக் கொண்டிருந்தன, டெல்லிப் பட்டணத்தில்!
எல்லாவற்றுக்குமே கருஞ்சட்டைக்காரர்தான் காரணம் என்று இங்குள்ள பத்திரிகையாளர் தூண்டி விட்டதற்கிணங்க, சென்னையிலிருந்த ஓமந்தூரார் அரசு, திராவிடர் கழகத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15-ஆவது பிரிவின்கீழ்க் கருப்புச்சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. கழக அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், கழகத்தார் இல்லங்கள்யாவும் சோதனைக்குள்ளாயின. கருப்புச்சட்டைப் படை என்பதாக ஒரு படை இல்லை என்று எடுத்துக்காட்டியும் கேட்பாரில்லை. ஆகையால் பெரியார் இன்னும் விளக்கமாக - என்னை அழிக்க நினைத்தால் அது என் இயக்க அழிவல்ல; பிராமண அழிவேயாகும் - என்று 27-3-48 “குடி அரசு” இதழில் எழுதி இடித்துரைத்தார். இனிப் பிராமணாள் என வழங்காமல், இலக்கிய ஆதாரத்தின்படிப், பார்ப்பான் என்றே அழைத்திட ஆணையிட்டார். திராவிடர் கழகம், என்றும் பலாத்காரத்தையோ வன் செயல்களையோ ஆதரிக்காது; ஊரெங்கும் தாக்கப்பட்டும், அடிக்கப்பட்டும் அவதிக்கு ஆளாவதெல்லாம் கழகத்துக்காரரே! வன்செயலை விரும்பாத அகிம்சாவாதியான காந்தியடிகளையே இந்து மத வெறிப் பார்ப்பனன் சுட்டுக் கொன்றது போல, அறவழியில் செல்லும் கழகத்துடன் மோத வேண்டாம் - என எச்சரித்தார் பெரியார். சுயநலமிகளுக்கு மட்டுந்தான் எங்கள் கழகம் விரோதி. மற்ற அனைவர்க்கும் தோழன் - எனவும் விவரித்தார். ஜாதி மதமற்ற - வர்ணாசிரம அடிப்படை ஒழிந்த - சமுதாயம் அமைத்திட இனியாவது பாடுபட்டு ஆவன செய்யுங்கள் என அரசியல் நிர்ணய சபைக்கும், காங்கிரசுக்கும் 1948 ஏப்ரல் 24 -ஆம் நாள் பெரியார் ஆலோசனை வழங்கினார்.
17-4-48-ல் சென்னையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பாளர் மாநாடு ஒன்றில் பெரியார் கலந்து கொண்டார். அண்ணாவும், திராவிடர் கழகத்தவர் அல்லாத திரு.வி.க., அருணகிரி அடிகள், ம.பொ. சிவஞானம், டி. செங்கல்வராயன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரும் கட்டாய இந்தியை எதிர்த்துப் பேசினர்.
பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது அபிப்பிராய பேதம் உண்டா? என வெளிப்படையாகவும், நேரிடையாகவும் தம்மிடம் வினவிய கழகத் தோழர்களிடம் பெரியார் - இம்மாதிரிக் கேட்பதே தவறு. ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்க முடியும். மற்றவர், பின்பற்றுவோராகத்தான் இருக்க வேண்டும். அபிப்பிராய பேதம் சொந்தத் தனிப்பட்ட விஷயங்களில் வேண்டுமானால் இருக்கலாம்; கழக விஷயங்களில் இருக்கக்கூடாது! அப்படி ஏதாவது இருப்பதாக வெளிப்படுத்தினால், அது குறுக்கு வழியில் தமக்கு விளம்பரம் தேடும் முறையாகவே கருதப்படும்... என்று திட்ட வட்டமாகவே அறிவித்து விட்டார். இந்நிலையில் “திராவிட நாடு” இதழில் அண்ணா எழுதிவந்த - லேபில் வேண்டாம், உள்ளம் உடையுமுன், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற உருவகக் கதைகள், ஏதோ புயலுக்கு முன்னெச்சரிக்கை போலக் காட்சி தந்தன. அநேகர் எதிர்பார்த்தவாறு அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!
அனைத்துலகத் தொழிலாளர் நாளாகிய மே தினத்தைத், தொழிலாளர்களின் உண்மையான இயக்கமாகிய திராவிடர் கழகம் ஏன் கொண்டாடுகிறது என்பதை விளக்கினார் பெரியார். 1-5-48 “குடி அரசு” இதழில் மே தினமும், திராவிடர் கழகமும் என்று தலையங்கம் தீட்டினார். மே திங்கள் 8, 9 நாட்களில் தூத்துக்குடியில் 18-வது திராவிடர் கழக மாகாண மாநாடு நடைபெற்றது. பெரியார் தலைமையேற்று, காந்தியடிகள் படத்தையும் திறந்து வைத்தார்; தி.பொ. வேதாசலம் திறப்பாளர்; கே.கே. நீலமேகம் கருப்பு சிவப்புக் கொடியினை உயர்த்தினார். திராவிடநாடு படத்தை அண்ணா திறக்க வேண்டும்; வரலில்லை! பன்னீர் செல்வம் படத்தை அழகிரியும், தாளமுத்து நடராசன் படத்தை ஏ.பி. சனார்த்தனமும், வ.உ.சி. படத்தைத் திரு.வி.க.வும் திறந்து வைத்தனர். கழகத்தில் கட்டுப்பாடு காக்கப்படவேண்டிய அவசியம் பற்றிப் பெரியார் வலியுறுத்தினார். அண்ணா வராததை எம்.ஆர். ராதா கண்டித்துப் பேசவே, “நடிகவேள் மாநாட்டில் நஞ்சு கலந்தார்” என்றார் மு. கருணாநிதி.
வாழ்வில் ஒன்று சேராத உறவினர்கள்கூடத் தாழ்வில் ஒருங்கிணைவார்களல்லவா? ஓமந்தூரார் ஆட்சி கட்டாய இந்தியை மீண்டும் கொணர்ந்து தலைவரையும் தளபதியையும் இணைத்து வைத்தது!
விபரீதமான வெடி என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட ஒரு தாக்கீது, டெல்லி மத்திய அரசால் மாநிலங்களுக்கு மே இறுதியில் அனுப்பப்பட்டது. பெரியாரின் உயிர் நாடியான கம்யூனல் ஜி.ஓ. கூடாது என்பதே அது! பெரியார் சிலிர்த்தெழுந்து “உடனே அரசியல் நிர்ணயசபையைக் கலைக்க வேண்டும்! வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்த பின்பே, அரசியல் சட்டம் நிறைவேற்றுவோம், என்று காங்கிரசார் அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றுக்குப் பத்துப்பேர் வாக்கைப் பெற்றுத், தாங்களே விருப்பமானவர்களை நியமித்துக்கொண்டு, இரண்டாண்டுகளாய்ச் செயல்பட்டுப், பல சட்டங்களை உருவாக்கி வரும் அரசியல் நிர்ணய சபையின் அமைப்பு செல்லாது; எங்களையும் கட்டுப்படுத்தாது” என்று இந்தியாவிலேயே ஓங்கிக்குரல் கொடுத்த ஒரே ஒரு முழு மனிதர் பெரியார் தான்! திராவிடநாடு பிரச்சினையைக் கேலி பேசிய பிரதமர் பண்டித நேருவுக்கும் பெரியார் விளக்கமுரைத்து, அடுத்த ஜூலை முதல் ஒவ்வோராண்டும் ஜூலை 1-ந் தேதி திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடுமாறு கழகத்தார்க்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசு வாளா இருக்குமா? பாய்ந்தது “விடுதலை” மீது! 19-6-48 அன்று “விடுதலை” ஏட்டுக்கு 2000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று, அதன் பதிப்பாசிரியரும் வெளியீட்டாளருமான மணியம்மையாருக்கு அரசாணை வந்தது. அம்மாதம் 24-ஆம் நாள், திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி ஆராய்ந்தது.
இந்தி தமிழ் நாட்டில் விருப்பப்பாடமாகவும், கேரள ஆந்திரக் கர்நாடகப் பிரதேசங்களில் கட்டாயப் பாடமாகவும் இருக்குமென்று. G.O. 1643 பிரகாரம், 20-6-48 அன்று ஓர் அரசாணை வெளியாயிற்று. பெரியார் இராமசாமிக்கு ஓமந்தூர் இராமசாமி பயப்படலாமா என்று தமிழகத்துப் பார்ப்பன ஏடுகள் சிண்டு முடிந்து விட்டதில், தமிழ்நாட்டிலும் கட்டாயமாக்கினர். உண்மையில் கட்டாயப் பாடந்தான்; ஆனால் சொல்லிக் கொண்டதோ விருப்பப்பாடம் என்று. இதிலடங்கிய சூது, சூட்சுமத்தைப் பெரியார் உணர்ந்து கொண்டதால், 10-8-48 முதல் இரண்டாம் இந்திப் போரைப் பெரியார் துவக்கினார்.
இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி துவக்கப்படுமுன்னர் நிகழ்ந்தவற்றைப் பெரியாரே வர்ணிக்கிறார்:- “கிளர்ச்சி துவக்கமானது மாபெரும் அஸ்திவாரத்தின்மீதே துவக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடானது சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் மறைமலையடிகள் தலைமையில், தெருக்கள் எல்லாம் அடைபடும்படி, 25,000 மக்கள் முன்னிலையில், அந்த ஹாலும் அந்தத் தெருவும் அதுவரை கண்டிராதபடி மகா உற்சாகத்துடன் கூடியது.
அதில் மறைமலையடிகள், தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கள் முதல், தோழர்கள் கதர் பிரதிநிதி நாரண துரைக்கண்ணனார், காங்கிரஸ் பிரதிநிதி ம.பொ.சி., கிறிஸ்தவப் பிரதிநிதி ரெவரெண்ட் அருள் தங்கையா, முஸ்லிம் லீக் பிரதிநிதி அப்துல் மஜீத், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, வி.வி. ராமசாமி, மாஜி மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை , கே.ஏ.பி. விஸ்வநாதன் முதலிய திராவிடர் கழகத்தினரல்லாதவர்களும், அதன் எதிரிகளும் ஏராளமாக வந்திருந்தனர். இம்மாநாடு தவிர மற்றும் பல மாநாடுகள் - புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடு முதலிய பல மாநாடுகள் கூடி, இந்தியை எதிர்த்துத் தீர்மானங்கள் செய்ததோடு நேரடிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் முன்வந்தார்கள்.
அந்த மாநாட்டுத் தலைவரை ஆதரித்து நான் காலையில் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால் அதற்கு ஓட்டுக் கொடுப்பேன் என்று கூறினேன். சிலர் அதைப் பற்றித் தவறாகவும் எண்ணியிருப்பார்கள். குறிப்பாக ம.பொ. சிவஞானம் அவர்கள், பெரியார் மந்திரியானால் அவ்விதம் செய்ய மாட்டார். ஏதோ பேச்சுக்கு அவ்வாறு கூறினார்” என்று தனது அதிருப்தியைக் காட்டினார். இன்றும் கூறுகிறேன், நாம் ஆங்கிலத்தை வெறுக்கும் புத்தியை வளர்ப்போமானால் என்றுமே விடுதலை அடைய முடியாத அடிமைகளாகவேதான் இருப்போம்.
நான் இரண்டாம் இந்தி எதிர்ப்புக்குத் தேதி குறிப்பிட்டவுடன் 2 நாட்களுக்கு முந்தி தோழர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல் மந்திரி அவர்கள், என்னை நேரில் அழைத்தார். நான் சென்றதும் என்னை அன்பாய் வரவேற்று, துவக்க வாக்கியமாகக் கலக்கத்துடன், “நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார். ‘இந்த இடத்தில் நான் இருக்க நினைத்தால் இந்த இடம் எனக்கும் கிடைக்காது. உங்களுக்கும் கிடைத்திருக்காது’ என்றேன்.
‘என்ன இருந்தாலும் நீங்கள் காங்கிரசை விட்டுப்போனது தவறு’ என்றார்.
‘நான் காங்கிரசில் இருந்திருந்தால், இன்று நீங்கள் செய்கிற அளவு காரியம் கூட நான் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது’ என்றேன், கல்வி மந்திரி அவிநாசிலிங்கம் செட்டியார், இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று அரசாங்கப் பத்திரிகையில் எழுதியதைக் காட்டினேன்.
‘என்ன இந்தச் செட்டியாரின் தொல்லை பெரிய வம்பாக இருக்கிறதே’ என்று சொன்ன பிறகு சில வார்த்தைகள் பேசிய பின், ‘என்ன இப்படிக் கிளர்ச்சி ஆரம்பித்து எனக்கு நீங்கள் வேறு தொல்லை கொடுக்கப் போகிறீர்களே! அய்தராபாத் பிரச்சினைப் போராட்டம் துவக்கப்பட்டால் என்ன செய்வது?’ என்றார்.
‘என் நாட்டின் சுதந்திரத்தை முன்னிட்டுச் செய்கிறேன்; அய்தராபாத் போராட்டம் துவக்கப்பட்டால் என் கிளர்ச்சியை நிறுத்திக் கொள்வேன்’ என்றேன்.
அதன்மீது அது பற்றிச் சிறு விவாதம் நடந்தது. முடிவாக ‘நான் எப்படியோ மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்போது இருக்கிறேன். என்னைப் பற்றித் தவறாய்க் கருதக் கூடாது’ என்றேன், ‘கலவரம் ஏதுமின்றி நடத்துங்கள் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிப், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு என்னை வழியனுப்பினார்.
கிளர்ச்சி தொடங்கியதும் அவரும் அவரது கடமையைச் செய்தார். எப்படியோ முடிந்தது!”
நாள்தோறும் மறியல் நடைபெறுவதும், கர்ப்பிணிப் பெண்டிர் உட்பட மறியல் தொண்டர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல், லாரிகளில் ஏற்றி, நகருக்கு வெளியில் காட்டுப்புறத்தில் இறக்கி வருவதுமாக அரசின் அடக்குமுறை விநோதமாயிருந்தது. போராட்டம் தொடரவே; சிறைத் தண்டனை அடி உதை வலுத்தது. ஊருக்கு ஒருவிதமாகப் போலீஸ் அடக்குமுறை வேட்டை தர்பார் நடந்தது. ஆகஸ்டு 23-ல் சென்னை வரும் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்ட முடிவு மேற்கொண்டதை ஒட்டி, 22-ஆம் நாளே தலைவர் பெரியாரும், தளபதி அண்ணாவும் கைது செய்யப்பட்டு, 27-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். 28-8-48 அன்று பாரதிதாசனின் இரணியன் நாடகம் தடைசெய்யப்பட்டது. தடையை மீறிப் பல ஊர்களில் இரணியன் வேடத்தோடு தொண்டர்கள் கைதாயினர்!
1948-செப்டம்பர் 11-ஆம் நாள் ஜின்னா மறைவு குறித்துப் பெரியார் பெரிதும் மனம் வருந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் 14-9-48 அன்று அய்தராபாத்தில் இந்தியப் போலீசு நுழைந்த செய்தி கிடைத்தவுடன், அரசுக்கு இந்த நேரத்தில் தொல்லை தரவேண்டாம் என்ற நன்னோக்கத்தில், தற்காலிக மறியல் நிறுத்தம் செய்தார் பெரியார். ஆனால் 15-9-48 ஒருநாள் மட்டும் எல்லா ஊர்களிலும் அடையாள மறியல் செய்யப் பணித்தார். (அன்று திருவாரூரில் தயாளு அம்மையாரை மணந்த மு. கருணாநிதி மணக்கோலத்திலேயே அடையாள மறியலில் பங்கேற்றார்.) “விடுதலை” பத்திரிகைக்கு 2000 ரூபாய் அரசு கேட்ட ஜாமீள் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் 4000 ரூபாய் கேட்கப்படலாம் என்ற சூழ்நிலையில், கழகத் தோழர்கள், ஈடாகப் பதினைந்தாயிரத்துக்கு மேல் நன்கொடைத் தொகை அனுப்பிப், பெரியாரிடம் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தூத்துக்குடியில் அண்ணா கலந்து கொள்ளாதது ஒரு குறைதான். அவரை அப்படியே ஒதுங்கிச் செல்ல விடக்கூடாது என்று பெரியாருக்கு அணுக்கமான சில தோழர்கள் - பி. சண்முக வேலாயுதம், தவமணி இராசன், கருணானந்தம் போன்றோர் - கூறிய யோசனையைப் பெரியார் ஏற்றுக்கொண்டு, அண்ணா தலைமையில் ஈரோட்டில் 19-வது மாகாண திராவிடர் கழகத் தனி (ஸ்பெஷல்) மாநாடு 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் ஏற்பாடு செய்துவிட்டார். அண்ணாவையும் பிற தலைவர்களையும் இரட்டைமாட்டுச் சாரட்டு வண்டியில் அமர்த்திப், பெரியார் ஊர்வலத்தில் நடந்தே வந்தது கண் கொள்ளாக் காட்சி! கருப்புச் சட்டைபோட்டு, மேல் துண்டை இடுப்பில் கட்டி, வியர்க்க விறுவிறுக்கத் - தூத்துக்குடித் தொண்டர் படைத் தலைவரான கே.வி.கே. சாமி அதிசயிக்கப் - பெரியார் சிங்க ஏறுபோல் ஈரோடு வீதிகளில் நடைபோட்டார்!
மாநாட்டை எஸ். குருசாமி தொடங்கி வைக்க, சென்னை இந்திராணி பாலசுப்ரமணியம் கொடி உயர்த்தினார். திருவள்ளுவர் படத்தைப் பெரியாரும், திராவிட நாடு படத்தைத் திரு.வி. கல்யாண சுந்தரனாரும், காந்தியார் படத்தைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், சிங்கார வேலர் படத்தை என்.வி. நடராசனும், தியாகராயர் படத்தைத் தி.பொ. வேதாசலமும், நாகம்மையார் படத்தை அழகிரியும் (அவருக்கு அதுதான் கடைசி மாநாடு) தாளமுத்து நடராசன் படத்தை ஏ.வி.பி. ஆசைத்தம்பியும், பன்னீர் செல்வம் படத்தை ஏ. சித்தையனும், சுந்தரனார் படத்தை இரா. நெடுஞ்செழியனும், என். அர்ச்சுனன் படத்தை சி.டி. டி. அரசுவும் திறந்து வைத்தனர். (உண்மையில் மாநாட்டில் ஒரு படமும் வைக்கப்படவில்லை. கற்பனையாய்க் காணவேண்டும் என்று பெரியார் கூறிவிட்டார். எப்படி சிக்கனம்?) முதல் நாள் இரவில் கே.கே. நீலமேகம் தலைமையில் எம்.ஆர். ராதா நடித்த மகாத்மா தொண்டன் நாடகம். மறுநாள் இரவில் குஞ்சிதம் குருசாமி தலைமையில் மு.கருணாநிதி நடித்த தூக்குமேடை நாடகம். டி.கே. சீனிவாசன் நன்றி நவின்றார்.
ரேஷன் முறை தீவிரமாக அமுலில் இருந்ததால், மாநாட்டுக் கட்டணத்துடன் உணவுக்கும் சேர்த்து வசூலித்து விட்டனர். பெரியார் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு கூட்டம் பெருகி வழிந்ததால், நேரத்தில் உணவளிக்க முடியவில்லை. தோழர்கள் பெரியார் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, வயிற்று உணவை மறந்து, செவி உணவை அருந்தினர்! ஈரோடு நகரமன்றம் அண்ணா , திரு.வி.க. இருவர்க்கும் வரவேற்பளித்துச் சிறப்பித்தது.
மீண்டும் அடுத்த திங்களே இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கிவிட்டது. நவம்பர் 2-ஆம் நாள். கும்பகோணத்தில் 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டதால், அதை மீற வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது. தினமும் தோழர்கள் மறியல் செய்தனர். பெரியார் தாமே களத்தில் இறங்கிட முடிவு செய்தார்.
1948 டிசம்பர் 18-ஆம் நாள் குடந்தையில் பெரியார் மறியல் செய்து கைதானார். நள்ளிரவு 2.15 மணிக்கு கும்பகோணத்தில் கைதான பெரியாரை, வேனில் ஏற்றி, முதலில் திருச்சிக்குக் கொண்டு சென்று, மீண்டும் தஞ்சை வந்து, பின்னர் ஐய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இறக்கி, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அலைக்கழித்தனர். அத்துடன் பத்தாம் முறையாகப் பெரியார் கைதானபோது - “அடக்கு முறை எங்கே நடந்தாலும், எப்படி இருந்தாலும், அதை முகங்கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அப்போது தான் நமது மானம் காப்பாற்றப்படும். சமாதானத்துக்குப் பங்கமோ, ஒழுங்குத் தவறோ ஏற்படக் கூடாது”- என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார் பெரியார்.
ஆனால், ஓமந்தூரார் ஆட்சி மறுநாளே வெறியாட்டத் தொடங்கியது. தடியடியால் குடந்தையில் இரத்த ஆறு ஓடிற்று. போலீஸ் அதிகாரியின் கோர தாண்டவத்தை எடுத்துக் காட்டிடப் போர்த்தளபதி அண்ணா , “ஆதித்தன் கனவு” என்று ‘திராவிட நாடு’ இதழில் தீட்டினார். பின்னர் டிசம்பர் 26-ஆம் நாள் முதல் அரசின் போக்கில் அமைதி காணப்பட்டது. தடியடியும் கைதும் நிறுத்தப்பட்டன. எனவே 28-ஆம் நாள் திராவிடர் கழகப் போராட்டக் குழு கூடி, அறப்போரை நிறுத்துவதென முடிவெடுத்தது.
59 நாள் அறப்போர் நடைபெற்றது. இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்!