தந்தை பெரியார், கருணானந்தம்/017-021




 15. எரித்தார்
தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சியும், நிறுத்தமும் - இராமன் படஎரிப்பு - தட்சிணப் பிரதேச எதிர்ப்பு - வினோபா சந்திப்பு - மலையப்பன் வழக்கு - பிராமணாள் பெயர்ப் பலகை அழிப்பு - சாதிப் பகுதி உள்ள அரசியல் சட்டம் எரிப்பு - குத்துவெட்டு வழக்கில் தண்டனை - 1955 முதல் 1957 முடிய.

பெரியார் தாயகத்தில் இல்லாத நேரத்தில்தான் காமராசர் ஆட்சி நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றியது. எனினும் பெரியார் தொண்டர்கள் வாளா இருக்கவில்லை. முழுமூச்சாக எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களை ஓரணியில் திரட்டியும் காண்பித்தனர். அதேபோல், பெரியார் சிங்கப்பூரிலிருந்து தாயகம் நோக்கிக் கிளம்பிய அதே வேளையில் சிங்கப்பூர் தோழர்களின் பேரன்புப் பெருமழையில் நனைந்து தோய்ந்து, அதையே நினைந்து கனிந்து, உருகிக் கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்தோடித், தங்கத் தகட்டை மறைக்கும் வெள்ளிக்கம்பிகள் போல் முகத்தின் பெரும்பாகத்தை மறைக்கும் அந்த வெண்ணிறத் தாடியினூடே பளபளக்கப், பிரியா விடை பெற்று, எஸ்.எஸ். ரஜூலா கப்பலில் தந்தை பெரியார் அடியெடுத்து வைத்த அதே வேளையில் - திருச்சியில், 9.1.55 அன்று, பெரியார் தொண்டர்கள், மாநாடு ஒன்று கூட்டித், தலைவரில்லா நிலையிலும், தாம் எதற்கும் சித்தமாயுள்ளதை மொத்தமாய்த் திரண்டெழுந்து கூடி நின்று உலகுக்கு உணர்த்தினார்கள்.

17.1.55 அன்று பிற்பகல் 50,000 மக்கள் ஓரணியாய்க் கருஞ்சட்டைப் பேரணியாய் இணைந்து நின்று தந்தை பெரியார்க்கு மகத்தான ஊர்வலம் எடுத்து, வரவேற்புக் கொடுத்தனர், சென்னையில் திரண்டோர். பின்னர், கீழ்த்திசை கொண்ட, வாழ்த்துக்குரிய தந்தை பெரியாருக்குத் தமிழகத்தார் தத்தம் ஊர்கள்தொறும் நல்வரவேற்பு நல்கினர். 23-ந் தேதி திருச்சியில் நிர்வாகக்குழு; 25 ஈரோட்டில் வரவேற்பு; 30 சென்னை சட்டக் கல்லூரி; அடுத்து 4-சென்னைப் பச்சையப்பன் கல்லூரி - என்று தொடங்கிய சுற்றுப்பயணத் திக் விஜயம், பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்தது. மார்ச் திங்களிலும் ‘மார்ச்’ செய்தார். ஆனால் 14.3.55 முதல் 17.3.55 வரையில் சிறிது நலக் குறைவு நேர்ந்ததால், சுற்றுப் பிரயாணத் திட்டத்தில் சற்றே மாறுதல் - ரத்துச் செய்யவில்லை - மாற்றம் செய்து, தொடர்ந்து கிளம்பிவிட்டார் பெரியார்!

1955 பிப்ரவரி 7-ஆம் நாள் பி.என். ராஜ்போஜ் சென்னை வந்து பெரியாரைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். தமது கீழை நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின்போது தாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த மான் கொம்புத் தடி ஒன்றினைப் பெரியார் ராஜ்போஜுக்கு அன்புடன் அளிக்க, அவரும் வேலைப்பாடமைந்ததும், லண்டனில் தமக்கு வழங்கப்பட்டதுமான பர்ஸ் ஒன்றினைப் பெரியாருக்குப் பண்புடன் அளித்தார்.

அகில இந்தியக் காங்கிரஸ், ஆவடியில், பிரம்மாண்டமான காமராசர் ஆட்சியின் ஏற்பாடுகளுக்கிடையே அழகாகக் கூடி, சோஷலிசத் தீர்மானம் நிறைவேற்றிக் கலைந்தது. வந்திருந்த மக்கள், மிகப்பெரிய இட்லி இயந்திரத்தைப் பார்த்து மலைத்து வாய் பிளந்து நின்றதாகப் பத்திரிகைகள் வர்ணித்தன.

1955 பிப்ரவரி 15-ஆம் நாள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று கேட்ட கழகத் தோழர்களுக்குப் பெரியார் தந்த விவர ஆணை எப்படியென்றால் - காங்கிரசிலுள்ள வேட்பாளர்களின் தன்மைக் கேற்றபடி, ஆதரிக்கலாம் என்பதே! காமராசருக்குப் பூரண ஆதரவா என்பதன் அடுத்த கட்டம் இது! பிப்ரவரி 16-ஆம் நாள் “விடுதலை”யில் ‘டி.டி.கே, நாடகம்’ என்ற தலையங்கம் வெளியாயிற்கு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி மத்திய நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டதை, நம்பாத நிலையின் விளைவு இது!

1955 மார்ச் 22-ஆம் நாள் - அதாவது பெரியார் சிறிது அசவுக்கியமுற்றிருந்து, அந்த மாதம் முழுவதும் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருந்த நிகழ்ச்சிகளில், 14 முதல் 17 வரை சிறு தொய்வு உண்டாகுமாறு செய்து, பின்னர் மேற்கொண்ட பிரயாணத் திட்டத்தின் இடையில் பெரியார் வெளியிட்டிருந்த தன்னிலை விளக்க அறிக்கை மிகச் சிறப்பானதாகும்! “ஜனவரி 17-ஆம் நாள் கிழக்கு நாடுகளிலிருந்து திரும்பிய பின்னர். இதுவரை 60, 70 ஊர்களுக்கு மேல் சென்று வந்துள்ளேன், எல்லாக் கூட்டங்களிலும் நான் சொல்ல நினைத்த கருத்துகளைச் சொன்னதோடு, கூட்டத்தில் கண்ணீர்த் துளிகளும், கம்யூனிஸ்டுகளும் தொல்லை தரும் வகையில் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதிலும் சொன்னேன். 1947-ல் வாங்கிய MSY 3500 எண்ணுள்ள என் கார் என்னைவிடக் கிழடாகிவிட்டது. இது! ஏறத்தாழ மூன்று லட்சம் மைல் ஓடியிருக்கிறது. இதை சர்வீஸ் செய்தால் ஆயிரம் ரூபாயும், பழுது பார்த்தால் பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாயும், ஆகும் என்கிறார்கள். ஆகையால் எனக்குவரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன். சிறிது காலம் ஏற்காட்டில் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். இனி என்னை அழைப்பவர்கள், கூட்டமானால் ஐம்பது ரூபாயும், திருமாணமானால் நூறு ரூபாயும் அனுப்பித்தர வேண்டும்” என்பதே அது.

இந்த அறிக்கையின் உட்பொருளை உணர்ந்த மெய்ப்பொருளன்பராகிய பொதுச் செயலாளர் எஸ்.குருசாமி, பெரியார் கார் நிதி என்பதாக ஒன்றைத் துவக்கி, ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் சிறுகச் சிறுகச் சேமித்துத் திரட்டிக், காரை சிம்ப்ஸன் கம்பெனியில் விட்டு, வசதியுள்ள வேனாக உருமாற்றிக் கேட்டதைவிட அதிகமாகவே 18,659 ரூபாய் 3 அணா நிதியும் சேகரித்துச் சென்னையில் ஒரு விழா நடத்தி, 1955 டிசம்பர் 25-ஆம் நாள், கிறிஸ்துமஸ் தினத்தன்று, புதிய வண்டியைப் பெரியாருக்கு வழங்கினார்! தொகை மேலும் மிகுந்ததால், ஒரு டேப்ரிக்கார்டரும் பெரியாருக்கு விழாக்குழுவினர் அன்பளிப்பாகத் தந்து உதவினர். அங்கு நன்றிப் பெருக்கால் பெரியார் அதிகம் பேசவில்லை. எவ்வளவோ வகையான நாற்காலிகள் சோபாக்கள் எங்கள் மாளிகையில் இருந்தும், சாய்வு நாற்காலி எனப்படும் ஈஸிச்சேர் ஒன்று கூடக் கிடையாது. நான் அதை உபயோகிக்க விரும்புவதேயில்லை. சோம்பலாகச் சாய்ந்து கிடப்பதும் ஈஸிச்சேர் பாலிட்டிக்ஸ் பேசுவதும் எனக்குப் பிடிக்காது”- என்று பேசினார் பெரியார்.

27.3.1955 அன்று தஞ்சை நகரில் நடந்த வரவேற்பு விழாவில் பெரியாருக்கு வெள்ளிப்பட்டயத்தில் வாசகங்கள் பொறித்து, அன்புடன் வழங்கினார்கள். அதற்கு மறுநாள் பெரியார் தஞ்சையிலிருந்தார். அன்று அழகிரி நினைவுநாள், எனவே அழகர்சாமியின் கல்லறை அமைக்கப்பட்டடிருந்த ராஜாகோரி என்னும், தஞ்சாவூர் கருந்தட்டாங்குடி வடவாற்றின் கரையிலுள்ள இடுகாட்டுக்குச் சென்று; ஒரு மலர்மாலை வைத்து வரலாம் என்று பெரியார் கருதினார். 19.2.1954 அன்று மறைந்த நெடும்புலம் சாமியப்பாவின் கல்லறையும் அங்கு தானிருந்தது. பெரியார் அங்கு சென்றபோது இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்பதற்காக அறிவிக்கும் கல் ஒன்று நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் பதறினார். அருகிலிருந்த தோழர்கள் அப்போதே அதை அகற்றி வடவாற்றில் விட்டெறியத் துடித்தார்கள். ஆனால் இம்மாதிரி வன்முறைச் செயல்களில் என்றுமே விருப்பம் காட்டாத முதுபெரும் தலைவர் பெரியார், நகராட்சிக்கு விண்ணப்பம் செய்து, அதை அகற்றுமாறு கோரினார்; வேறு நகரங்களில் எங்காவது இப்படி இடுகாட்டிலும் இழிவுப்பட்டம் சூட்டப்பட்டிருந்தால், அவற்றையும் களைந்திடக் கேட்டுக் கொண்டார்.

1953 பொட்டி சீராமுலு பட்டினி மரணத்தால் ஆந்திர மாநிலம் பிரிந்த போது, பெரியார் எதிர்க்கவில்லை. சென்னையை அவர்கள் கேட்டபோதும், இடைக்காலமாகத் தங்க விரும்பியபோதும் பெரியார் எதிர்த்தார். மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால், எஞ்சியுள்ள தமிழ் நாடே திராவிட நாடாகும். தமிழ் நாட்டுக்குத் தனியுரிமை கிடைத்தால் பிறரும் கூட்டாச்சியாக அப்போது இணைந்து கொள்ளலாம் என்பது பெரியார் முடிவு. ஆனால் டெல்லியிலுள்ள மத்திய அரசு, ஆந்திர மாகாணம் வன்முறைகளைக் கையாண்டு தன்னைத் தனியே பிரித்துக் கொண்டது குறித்து அஞ்சி, மொழிவாரி மாநிலங்கள் உரிமை கேட்கத் தொடங்கிவிடுமே எனவும் பயந்து, புதிதாகத் தட்சிணப் பிரதேசம் என்பதற்காக ஒரு அமைப்பினை உருவாக்கிட முனைந்தது. இதற்குத் தமிழ்நாட்டிலும் சில ஆதரவாளர்கள் கிடைத்தனர்.

ஆனால், பெரியார் அதன் உட்கருத்தையும் உள்ளுறையையும் சூட்சமத்தையும் நன்குணர்ந்தால், தட்சிணப்பிரதேச அமைப்பை வன்மையாகக் கண்டித்தார். தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ் கன்னடம் மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்த்தால், பார்ப்பனருக்குப் போக மிகுதி உத்தியோகமெல்லாம் மலையாளி, கன்னடியர் கைக்குப் போய்விடும். நமக்குக் கக்கூஸ் எடுத்தல், போலீஸ் கான்ஸ்டபிள், ரயில்வே கூலி போர்ட்டர் உத்தியோகம் தான் மிச்சமாகும். இப்போதே நம்மை அடிமைப்போல் நடத்துகிறார்கள். தட்சிணப் பிரதேசம் என்று சொல்லிக் கொண்டு அன்னியர்தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள், ஆந்திரா பிரிந்ததே நல்லது. இனி மலையாளியும், கன்னடியரும் ஆளுக்கொரு ஜில்லா தானே? இவர்களும் போகட்டும். மீதி 12 ஜில்லாக்களைக் கொண்ட தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாகி, நமது சமய சமுதாய தேசிய சுதந்திர முயற்சிகளுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பினேன். இப்போது இதற்கும் தமிழ்நாடு என்று பெயர் தராமல் சென்னை ராஜ்யம் என்பதாகத்தான் பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத அக்கிரமம்; அவமானம்! இதைத் திருத்துமாறு தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை - டெல்லி சட்டசபை, மேல்சபை அங்கத்தினர்களையும் இறைஞ்சிக் கேட்டு கொள்கிறேன். தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லாமல் எங்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

தட்சிணப் பிரதேச அமைப்புக்கு ஆதரவாக ஒரு மந்திரியே (சி.சுப்பிரமணியம்) இருந்து வருகிறார்கள். இவருக்குப் பின்னால் மத்திய சர்க்கார், நேரு பண்டிதர், பார்ப்பனர்கள், (ராஜாஜி) பத்திரிகைகள், சமய சஞ்சீவிகள், காமராசரின் எதிரிகள் ஆகியோர் இருப்பதால், காமராசர் சும்மாயிருப்பது ஆபத்தென நமக்குத் தோன்றுகிறது.

இக்கேட்டினை முளையிலேயே கிள்ளும்படியாக எல்லாத் தமிழ் மக்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்று பேசி வந்தார் பெரியார். தமிழ்நாட்டில் பெரிய பதவிகளில் கட்டாயம் தமிழர்களையே நியமிக்குமாறும், தாழ்மையுடன் மந்திரிமார்களைப் பெரியார் வேண்டிக் கொண்டார்.!

பம்பாயிலிருந்து வெளிவரும் “பிளிட்ஸ்” வார இதழ் தென்னாட்டுக் காரல் மார்க்ஸ் பெரியார்தான் என வர்ணித்து, மே திங்களில் தொடர் கட்டுரை எழுதியது. 14.7.1955 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் இந்தி பற்றிப் பெரியாரின் கருத்துக்கள் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருந்தன. அகில இந்தியாவும் இந்தி எதிர்ப்பில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்று கூர்ந்து கவனித்து வந்த நேரம். இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற டெல்லியின் விருப்பம், ஆத்திரம், மீண்டும் தலை காட்டிற்று! வடநாட்டார் தமது ஆதிக்க உணர்வின் அடிப்படையில், இந்தித் திணிப்புக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாயினர். இதனைத் தடுத்து நிறுத்தும் துணிவோ அதிகாரமோ இன்றிக், காமராசரும் இயலாத நிலையில் நின்றார். அமைதியான சூழ்நிலையில் தமிழகத்தைக் கட்டிக்காத்து வந்த பெரியாரைத் தூண்டிவிட்டது ஆணவ ஆட்சி. சென்ற ஆண்டே எச்சரித்தது போல், இனி இந்தி எழுத்துக்களை அழிப்பதோடு நிறுத்தமாட்டோம்; தீவிரமான முயற்சியில் இறங்குவோம் என்று கருத்தறிவித்ததற்கிணங்கத், திருச்சியில், 17.7.1955 அன்று நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, ஆகஸ்டு 1ம் நாள் இந்தி எதிர்ப்பின் அறிகுறியாய், இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவோம் என முடிவு செய்துவிட்டது! 20.7.55 “விடுதலை” நாளேட்டில் ‘கொடி கொளுத்தும் தீர்மானம்’ என்பது பற்றிப் பெரியார் தலையங்கப் பகுதியில் விளக்கமளித்திருந்தார்.

“குமரன் காத்த கொடியைக் கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள்! உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்பியூனிஸ்ட் கட்சிதான் என்கிறார்கள். நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த மட்டிலும் அது அத்தனையும் பொய்யாகி விட்டது.

குமரன் காத்த கொடி இதுவல்ல! காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய், எத்தனைமுறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது, இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும்! கடைசியாக இருந்த கட்சிக்கொடியின் அமைப்பில், ராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பொறித்து, மத்தியில் வைத்து, இதுதான் அரசாங்கக்கொடி, தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான்,” என்று பெரியார் விளக்கினார். இதற்காக ஜூலை 22 முதல் 31 வரை ஊரூராக இரயிலில் பிராயணம் செய்து தோழர்களை நேரில் சந்தித்து, உற்சாகமளித்து வந்தார். எல்லா ஊர்களிலும் யார் யார் எந்தெந்த இடத்தில் கொடி கொளுத்துவார்கள் என்பது வெளிப்படையாக, விவரத்துடன், எப்போதும் போல் திராவிடர் கழகத்தால் முன்னதாகவே வெளியிடப்பட்டு வந்தது. பத்தாயிரம் தோழர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர். ஆண்டாண்டு வெளியாகும் தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலைக் காட்டிலும் இது நீண்டிருந்தது. கடந்த 1952, 1953 ஆண்டுகளில் ராஜாஜியும், 1954 ஆம் ஆண்டில் காமராசரும் முதல்வர்களாக வீற்றிருந்தபோது, இந்தி எழுத்து அழிக்கும் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவந்தார்கள், மற்றவர்கள் கேட்டபோது, தார் கொண்டு அழித்ததை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தால் சீக்கிரமாகவும் சிக்கனமாகவும் விவகாரம் முடிந்து விடும்; ஆனால் நடவடிக்கை எடுத்தால் விரயமும் விபரீதமும் ஏற்படும் என்று ஆட்சியாளர் சமாதானம் கூறி வந்தனர்.

1955 கொடி கொளுத்தும் போராட்டம் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. என்ன நேருமோ என்ற கவலை மக்கள் முகத்தில் தோய்ந்திருந்தது. எது நேரினும் சரியே என்ற உறுதி கருஞ்சட்டையினர் முகத்தில் பொலிந்தது. இந்தச் சூழலில்தான் காமராசர் 30.7.1955 அன்றே, தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும்; எப்படியும் திணிக்கப்படமாட்டாது. என நான் உறுதி கூறுகிறேன். இந்த என் உறுதிமொழியை நம்பித் திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று தமிழகத்து முதலமைச்சரான காமராசர் தெளிவாகக் குறிப்பிட்டார். குருடனுக்கு வேண்டியது கண்தானே? பின்னர், ரயில் நிலையைப் பலகைகளில் தமிழ் எழுத்து பெரிதாக மேலே எழுதப்பட்டுவிட்டது. இது பெரியார்க்கு வெற்றிதானே?

தண்டவாளங்களைப் பெயர்ப்பதால் வெள்ளையனை விரட்ட முடியுமென நினைத்தவர்கள் ஆட்சியில், தேசியக் கொடியைக் கொளுத்துவதால் இந்தியை விரட்ட முடியுமென நினைப்பது தவறா? காமராசரின் உறுதிமொழியைப் பெரிதும் நம்பி, இது இப்போதைக்கு போதும்; எனவே கொடி கொளுத்தும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுகிறது; நிறுத்தப்படவில்லை - என்பதாகப் பெரியார் தம் தோழர்களுக்கும், நாட்டுக்கும் ஒரே நற்செய்தியினை உடனே வழங்கினார்! ஆயினும், அத்துடன் பெரியாரை விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்? காமராசர் மிரட்டல், நாயக்கர் வாபஸ் என்றெல்லாம் தலைப்புத் தந்தார்கள், பெரியார்தான் அவர்களைச் சும்மா விட்டு வைப்பாரா?

“இந்தப் பிரச்சனையில் காமராசருக்கும் எனக்கும் பகை மூட்டிவிடப் பார்த்தார்கள். நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காமல் விட்டாலும், எப்படியும் அவரைத் தூற்றுவார்கள்; உசுப்பி விடுவார்கள்! ஆனால் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை, தேசியக் கொடியைக் கொளுத்தினால் அரசாங்கம் கையைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்க்கும் என்று எதிர்பார்க்கிற பைத்தியகாரர்களல்ல நாங்கள். எந்த வித அடக்குமுறைக்குமே தயாராகத்தான் இதில் நாங்கள் இறங்கியுள்ளோம். கொடி என்றால் என்ன பிரமாத மகத்துவம்? களிமண்ணைக் கடவுள் என்பதற்கும் முழக் கந்தல் துணியை தேசியக் கொடி என்பதற்கும் என்ன பிரமாத வித்தியாசம்? பாரத மாதாவின் கொடி என்றால், என் நாட்டில் அன்னிய மொழியைப் புகுத்துவது ஏன்?

என்னைக்கூடப் போராட்டத்தை விட்டுவிட்டதாக அறிக்கை வெளியிடச் சொன்னார்கள். நான் அவ்வளவு ஏமாந்தவனல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று பெரியார் பேசினார்.

1955 ஆகஸ்ட் 7 ஆம் நாள் கல்வி மந்திரி சி. சுப்ரமணியமும், இந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதாகக் கூறினார். வழக்கம் போலவே ஆகஸ்டு 15 துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார். அடுத்து, முடிவு பெறாமல் தொங்கிக் கொண்டிருந்த தட்சிணப் பிரதேச அமைப்புப் பிரச்சனையில் கவனம் செலுத்தினார். இதற்கு எப்போதுமே திராவிடர் கழக ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்ததோடு, 1955 செப்டம்பர் 18 ஆம் நாள் தட்சிணப் பிரதேச எதிர்ப்பு ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனால் போராட்டம் ஒன்று நடந்துதான் தீரவேண்டும் என்றால், அதற்கும் தாம் தயாராயிருப்பதாகவும் பெரியார் கூறினார்.

பெரியாரின் 77 ஆவது பிறந்த நாளை நாடெங்கும் பெரும் சீர்சிறப்புடன் விழாவெடுக்கப்பட்டது. திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்பு வழங்கி மகிழ்ந்தது. புதுவையில் அந்திய ஆட்சி அகன்று, தேர்தலும் நடந்து. புதிய சட்டமன்றம் தொடங்கியிருந்தது. 1.9.35 அன்று தமிழகக் கல்வித் துறையின் இயக்குநராக என்.டி. சுந்தர வடிவேலு எம். ஏ. எல்.டி பொறுப்பேற்றார்.

இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், 3.10.1955 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்புக் கொத்தளத்தின் மீது கொடி மரத்தினடியில் நின்று பேசினார். இந்தி தமிழர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது; இதை உறுதியாக நம்பலாம்; ஆனால் பார்ப்பானை விரட்டுவோம் என்றெல்லாம் வகுப்புவாதம் பேசுகிறார்களே என்று வருத்தமுற்றார். நேரு பண்டிதர் கொடி கொளுத்துவது பைத்தியக்காரத்தனம்; சும்மா விட மாட்டோம் என்றும் மிரட்டினார்.

நேருபிரானுக்குப் பதில் கூறுமுகத்தான், பெரியார் அதே திங்கள் 8ஆம் நாள் திருச்சியில் வீர கர்ச்சனை புரிந்தார்; “நேரு அவர்கள் தமது கடைசிக் கூட்டத்தில், கொடி கொளுத்துவதாகச் சொன்னவர்களைப் பற்றி மிகவும் துடுக்காகப் பேசியிருக்கிறார். அவருடைய பைத்தியகாரத்தனமான காரியங்களில் இதுவும் ஒன்றாகும். திராவிடர் கழகத்தாரை மிரட்ட வேண்டும், திட்ட வேண்டும் என்பது தவிர இதில் வேறொன்றும் இல்லை. கொடி கொளுத்துவதாகச் சொல்லப்பட்ட விஷயம், ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் சமரசமாக முடிந்து போன பிறகு, அதை மறுபடியும் சர்க்கார் தரப்பிலிருந்தே ஏன் கிளப்ப வேண்டும். இந்த அரசாங்கத்தை ஏதாவது மிரட்ட வேண்டுமானால், கொடியைக் கொளுத்துவோம் என்று சொல்வதே போதுமானது என்று தெரிகிறது!

கொடியைப் பற்றிய பிரமாதப்படுத்துவதும், அதை எரித்தால் உலகத்தையே சுட்டெரித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும் வீண் பேச்சே தவிர, மற்றபடி கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்து விட முடியும்? அரசியல் சட்டத்திலாகட்டும், இந்தியன் பீனல் கோடிலாகட்டும், கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது?

“உலகத்தையே படைத்தாகக் கூறப்படும் கடவுள்களே எங்களிடம் அகப்பட்டுத் திண்டாடும் நேரத்தில், உங்கள் அரசாங்கக் கந்தல் துணி எம்மாத்திரம். நாங்கள் ஒளிவுமறைவாக எதையும் செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல், வீட்டுக்குள் கொளுத்தும் அண்டர் கிரவுண்ட் வேலை எங்களிடமில்லை. பகிரங்கமாக முச்சந்திகளில், தெருக்களில், அவரவர் வீட்டுக்கு முன்பு, பலபேர் அறியக் கொளுத்துகிறோம் என்றோமே. அரசாங்கத்துக்குத் தெரிவித்தோமே. உங்களால் என்ன செய்ய முடிந்தது? பாட்னாவில் மாணவர்கள் தேசியச் கொடியை எரித்தார்களே என்ன செய்தீர்கள்? உங்கள் வீரப் பிரதாபம் அப்போது அங்கே போனது?” என வினவினார்.

தர்மபுரி மாவட்டம், நாகரசம்பட்டியில், பெரியார் ராமசாமி கல்வி நிலையத்தை டாக்டர் பி. வரதராசலு நாயுடு திறந்து வைத்துப் பெரியாரின் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். 20.10.1965 ல் நடந்த இந்தத் திறப்பு விழா சிறப்புடன் அமைந்திருந்தது. மேற்கு வங்காள மாகாணத்தின் சிறந்த சமூகத் தொண்டரான ஹரேந்திரநாத் கோலே 9.12.55 அன்று சென்னைக்கு வந்து, பெரியாரைச் சந்தித்து, அளவளாவினார்.

கொடி கொளுத்தும் போராட்டம், தட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம் இவற்றைப் போலவே ஆண்டு தவறாமல் தஞ்சையைத் தாக்கும் புயலின் வெறியாட்டம், இந்த ஆண்டும் கரையோரப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தது. தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்காகப் பெரியார், 7.12.1955 அன்று காமராசரிடம் ஆயிரம் ரூபாய் தந்து உதவினார்.

மனிதாபிமானத்தின் பாற்பட்ட இந்த நல்லெண்ணச் சமிக்ஞையினைத் தொடர்ந்து, மனித மானத்தின் பாற்பட்ட இந்தி எதிர்ப்புப் பிரச்சினை பெரியாரை ஈர்த்தது. பம்பாயில் முதலமைச்சராக இருந்த பி.ஜி. கெர் தலைமையில் மத்திய அரசு இந்திக் கமிஷன் ஒன்றை நியமித்திருந்தது. தமிழகத்தில் இந்திக்குத் தனிப்பட்ட நிரந்தர எதிர்ப்பு இருந்து வருவது ஏன் என நேரில் பலரையும் விசாரித்து, மெய்காணும் நோக்கத்துடன் அந்தக்குழு 9.1.1956 அன்று சென்னை வந்தது. சென்னையில் அந்த இந்திக் குழுவைத் திராவிடர் கழகம் புறக்கணிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட ஏ.பி. சனார்த்தனம் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. மனந்தளர்ந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்தக் குழுவின் தலைவர், “சென்னையில் சில நாள் தங்கியிருந்த போது, எங்கள் அழைப்பினை ஏற்று ராமசாமிப் பெரியார் வந்து, குழவின் முன்னர் தமது சாட்சியத்தைப் பகர்வார் என எதிர்பார்த்தேன். அவர் வராதது உண்மையில் எனக்குப் பெரிய ஏமாற்றமே” என்றார்.

1953 ல் ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர் கர்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களின் அமைப்பு 1956 ல் பூர்த்தியடைய இருந்தது. ஆனால் எல்லைத் தகராறு தீர்க்கப்படாமல் தொடர்ந்து வந்தது. தமிழகத்துக்கே உரிமையான பல பகுதிகள் நமது ஏமாளித்தனத்தாலும், இளித்தவாய்த்தனத்தாலும் பறிபோகுமோ என்ற அச்சம் நாள்தோறும் இருந்து மிரட்டி வந்தது. தமிழ் மக்கள் ஒருமித்த குரலுடன், எமது பிரதேசத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று முழங்கி வராமல் இல்லை . சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் முனைவராக இருந்து, எல்லைப் பிரச்சினையில் தமிழர் உரிமையை நிலைநாட்ட ஆவலுடைய பிறகட்சிகளின் ஆதரவைத் திரட்டி வந்தார். அது சம்பந்தமாகப் பெரியாரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் ஓர் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பெரியாரையும் அழைத்துக், கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டார். பெரியார் ஐந்து நிபந்தனைகள் சொல்லி, அவற்றை ம.பொ.சி ஏற்றுக்கொள்வதனால், திராவிடர் கழகம் எல்லைப் பிரச்சினையில் அவருடன் முழு வலிமையோடு கலந்து, எதிர்ப்புப் போரில் ஈடுபடும் என்றார். ம.பொ.சி மழுப்பிவிட்டார். குழப்பிவிட்டார். ஆனால், பெரியார் வராதது போல் குற்றம் சுமத்தப்பட்ட போது, 29.1.1956 அன்று வேலூரில் பெரியார், தமக்கும் சிவஞானத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை வெளியிட நேரிட்டது:

எல்லைகளைப் பாதுகாப்பது, அல்லது தக்க வைத்துக் கொள்வது என்பதில் முழுவதும் உடன்பாடு. அடுத்து இந்தி எதிர்ப்பில் மற்றவர்களும் ஈடுபட வேண்டும். மூன்றாவது, படை, போக்குவரத்து, வெளியுறவு தவிரப் பிற இலாகாக்களை மத்திய அரசு, மாநிலங்களிடமே முழுமையாகத் தந்து விட வேண்டும். நாலாவது, சென்னை ராஜ்யத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும். கடைசியாக ஐந்தாவது, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்து முறியடிப்பது, ஆகிய ஐந்துதான். முதல் சந்திப்பில் ஒத்துக் கொண்டு சென்றவர். கம்யூனிஸ்டு முதலிய மற்றக் கட்சியினர் இவ்வளவு நிபந்தனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள் என்று காரணங்காட்டித் தயங்கினார். வெளியூரிலிருந்த பெரியாருக்குத் தந்தியும் கடிதங்களும் அனுப்பிச் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்து கொண்டாவது சென்னை வந்து, தன்னை உடனே சந்திக்க விழைந்தார். அப்படியே பெரியார், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனே சென்னைக்கு விரைந்து, பொது நண்பர் வீட்டில் ம.பொ சிவஞானத்தைச் சந்தித்தார். எல்லைகளை மீட்கும் பிரச்சினை மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொண்டு, மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்வோம். இதில் அனைத்துக் கட்சிகளும் வாருங்கள்; ஒருங்கிணைந்து போராடலாம். என்றார். ம.பொ.சி! அவர் இப்படிப் பின்னடைந்த காரணம் புரியாமல், பெரியார், தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறித் திரும்பி வந்து விட்டார்! தன்னைப் பற்றி வெளியில் தவறாகத் திரித்துக் கூறக்கூடும் என்பதால் பெரியார், ம.பொ.சி பல்டிபற்றி வேலூரில் ஒன்று விடாமல் கூறி முடித்தார்.

20.2.56 அன்று தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கே சொந்தம் என்ற போராட்டத்துக்கு ஆதரவாகப் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெறத் தி.மு.க, தமிழரசுக்கழகம், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகள் முயன்று, வெற்றி பெற்றுத் தந்தன; திராவிடர் கழகமும் காங்கிரசும் இதில் கலந்து கொள்ளவில்லை.

திராவிட மாணவர் கழக மாநில மாநாடு, திரச்சியில் 5.2.1408 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பெங்களூரில் தட்சிணப் பிரதேச அமைப்பு குறித்து இறுதியாக முடிவு செய்ய பிப்ரவரி 1, 2 தேதிகளில் ஒரு கூட்டம் நடந்தது. காமராசர் அங்கே சென்று அதில் கலந்து கொண்டிருந்தபோது பெரியார் நேருவுக்கும் காமராசருக்கும் அவசரத் தந்திகள் அனுப்பினார்:- “தட்சிணப் பிரதேசம் ஏற்படுவதேன்பது தமிழர்களுக்கு வாழ்வா சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லாருக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்.” பின்னர், 23.2. 1956ல் காமராசரே தீங்கையுணர்ந்து தட்சிணப் பிரதேச யோசனையை நிராகரித்தார். அக்டோபரில் இருந்து 15 மொழிவாரி மாகாணங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இந்திய யூனியன் ஆட்சிக்குக் கீழே தனித்தனியே இயங்கும் என்பதாக அரசு ஆணையும் பிறப்பித்தது. மொழிவாரி மாகாணம் வேண்டுமென்பதாக, வெள்ளையன் தனது நிர்வாக வசதிக்காக வைத்திருந்த அப்போதைய அமைப்பு முறையைக் குறை கூறித், தாங்களாகவே, 21 மொழிவாரி காங்கிரஸ் கமிட்டிகளைக், காந்தியாரே ஏற்படுத்தினார். அவ்வாறு ஏற்படுத்திய முதல் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகப் பணி தொடங்கியவரே பெரியார்தான்! அப்படியிருக்க, இப்போது ஏன் மொழிவாரி அரசியல் நிர்வாக அமைப்புக்கு அவர்களே இடையூது செய்கிறார்கள்? என்று வினவினார் பெரியார்.

திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 17.3.1955 அன்று பெரியார், மனிதனுடைய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட இலட்சியம் இல்லாமல் போய் விட்டதாக வருந்தினார். “வாழ்க்கை ஏணியின் முதல் படிகளில் கால் வைக்கும் போதே நாம் எதற்காக ஏறுகிறோம்? ஏறினால் எங்கே போய்ச் சேர்வோம்? என்பதெல்லாம் யோசிப்பதில்லை! பிள்ளை பெறுவதை ஒரு லட்சியமாக நினைக்கிறோம். பிள்ளை பிறந்த பின் கல்விப் பயிற்சி தருவதை இலட்சியமாக எண்ணுகிறோம். படிப்பு முடிந்தால் உத்தியோகம் - தேடுவதை இலட்சியமாகக் கருதுகிறோம். உத்தியோகம் எதற்கென்றால்; பொருள் சம்பாதிக்க! இப்படியே போனால், ஒரு இலட்சியத்தை அடைவதென்பதே இல்லாமல் போய் விடுகிறதே!

ஒருவன் வாழ்வதென்பது, அவன் வாழ்க்கையால் பிறர் சுகம் கண்டார்கள்; பிறர் நன்மையடைந்தார்கள் என்று இருக்க வேண்டும்! இதுதான் முக்கியமானது. மனித வாழ்க்கையின் தகுதியான 1 இலட்சியம் இதுதான் என்றும் கூறலாமே” என்றெல்லாம் பெரியார் கூறினார்.

அண்ணாமலை நகரில் பல்கலைக் கழக மாணவர்களுக்காக 19.2.1956 ல் பெரியார் பேசிய கருத்துக்கள் மாணவ சமுதாயத்தின் சிந்தனைக்குரியவையாம்:- மாணவர்கள் பிஞ்சு அறிவு கொண்டவர்கள். அந்த அறிவு முற்றும் வரை அவர்களுக்கு எதிலும் உறுதியாகப் பற்றும் எண்ணம் பிறக்காது. அறிவு முற்றும் வரையில் மாணவர்கள் எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். படித்துப் பரிட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முழு முயற்சியும் காட்ட வேண்டும்.

பட்டப் படிப்பெல்லாம் அனுபவப் படிப்பைவிட மட்ட ரகமானதுதான், வக்கீலுக்குப் படித்தவர், எதை எப்படிப் புளுகினால் கேஸ் ஜெயிக்கும் என்பதற்காகத், தனக்குப் பொய்யென்று தெரிந்ததையும், மெய்யென்று தீர்ப்பு கூறும் படிச் செய்ய, என்னென்ன தில்லுமுல்லுகள், புரட்டுகள் வேண்டுமோ அத்தனையும் செய்து, பொய்யை ஓங்கி அடித்துப் பேசினால், பெரிய வக்கீல் என்று பெயர் பெறுகிறார். அதனால் வக்கீல்கள் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது! அதே போல் வாத்தியார்களும், புரோபசர்களும் ஏட்டுக்குள் இருப்பதை மட்டும் தெரிந்திருப்பார்கள். முக்கியமான உலக அறிவு இவர்களுக்கு இருக்காது! ஆகவே , உலகத்துடன் பழகினால்தான் பொது அறிவு வளர முடியும் என்றார் பெரியார்.

பம்பாயில் புத்தர் கொள்கைப் பரப்பு மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு, திராவிடர் கழக மாநாடு ஆகிய மூன்று மாநாடுகள் மிகுந்த சீரோடும் சிறப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. பெரியாரும் அவரது அகலாத் தளபதிகளும் மூன்று நாட்களிலும் பங்கு பெற்றுக் கருத்துரைகளும், அறிவுரைகளும் வழங்கிட வேண்டுமெனத் தோழர்கள் விரும்பினர். நெடுநாட்களாக நல்ல முறையில் விளம்பரங்கள் செய்து வந்தனர். பெரியாரும் தமது -சகாக்களோடு, தமது காரிலேயே, 17.3.1956 அன்று புறப்பட்டு, பம்பாய் போய்த் சேர்ந்தனர். மாநாடுகள் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தொடர்ச்சியாகவே எழுச்சியுண்டாக்கும் வண்ணம் நடைபெற்றன.

புத்தருடைய 2500 ஆவது ஆண்டுவிழா 27.5.56 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பில் நடைபெற்றபோது, அதில் பெரியாரும் கலந்து கொண்டார். அதற்கு முதல் நாள் சென்னையில் மிகப்பெரும் பொதுக் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றுப் பெரியார், புத்தர் யாரென்பதைத் தெளிவுப்படுத்தினார், நாடெங்கும் இந்தச் சமயத்தில் புத்தர் விழாவினை மக்கள் சிறப்புடன் கொண்டாட வேண்டுமென்றும் விழைந்தார். "நெஞ்சில் தீரமும் அறிவில் விளக்கமும் ஏற்பட்டவர்கள், குறைந்த அளவுக்கு, இனிமேல் உருவ வணக்கம் செய்வதில்லை: உருவக் கடவுள்களுள்ள கோவில்களுக்கு வணக்கத்துக்காகப் போவதில்லை; எவ்வித மதக் குறியும் இட்டுக் கொள்வதில்லை; என்று உறுதி செய்து கொள்ள வேண்டும், டாக்டர் அம்பேத்கர், துணிவுடன் ஆரியத்திலிருந்து அடியோடு விலகிவிட்டார் நாடாளு மன்றத்திலேயே தனக்குக் கடவுள், ஆத்மா இவற்றில் நம்பிக்கை கிடையாதென்றும் கூறிவிட்டார்.!

புத்தர் இந்நாட்டில் பிறந்தார், வளர்ந்தார், உண்மைகளைக் கண்டறிந்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இங்குதான் விரட்டியடிக்கப்பட்டார்! அவர் கொள்கைகளை இருட்டடிப்புச் செய்து விட்டார்கள். அவர் கொள்கைகளை நினைத்தால் கூட மனத்தைக் கழுவ வேண்டும் என்ற அளவுக்குப் புத்தரை வெறுக்கும் மனப்பான்மையை உண்டாக்கிவிட்டனர். இராமாயணத்தில் இராமன் கூறுவதாக, ‘புத்தன் ஒரு நாஸ்திகன்; திருடன்: அயோக்கியன்’ என்று இழிவு கற்பித்து வைத்தார்கள், நாயன்மார்கள் ஆழ்வார்களெல்லாரும் உண்டாக்கப்பட்டு, அவர்களும் புத்தரை இழிவுப்படுத்தி இருக்கின்றனர்.

டாக்டர் மல்லலசேகரா விளக்கமாகச் சொன்னார்:- “புத்தர் என்பதாக ஒருவரும் பிறக்கவில்லை. சித்தார்த்தன் புத்தியை உபயோகித்ததால் புத்தரானான். ஆகவே அறிவை உபயோகிக்கச் சொன்னார் புத்தர் என்று. அறிவுக்குப் பொருத்தமானதை நம்பு என்று நாம் சொல்வதற்காக, ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்” என்றார் பெரியார்!

திருச்சியில் தி.மு.க இரண்டாவது மாநில மாநாடு 1956 மே 17, 18, 19,20 நான்கு நாட்கள் நடைபெற்றது. 1957 பொதுத்தேர்தலில் தி.மு.க ஈடுபடலாமா எனப்பொது வாக்கெடுப்பு அங்கே நடத்திப் பார்த்ததில்; ஆதரவாக 56, 942 வாக்குகளும், வேண்டாம் என 4203 வாக்குகளும் கிடைத்தன. தி.மு.க தேர்தலில் ஈடுபட்டுத் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் என்றார் அண்ணா .

மாசி மாதத்திலே ஸ்ரீ ராம நவமி வருகிறதல்லவா? அன்றைக்கு வடநாட்டில் ராம லீலா கொண்டாடி, இராவணன் முதலியோர் உருவங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். வடநாட்டில் இராவணனைக் கொளுத்தும் போது, தென்னாட்டில் ஏன் இராமன் கொடும்பாவி கொளுத்தக் கூடாது? என்று பெரியார் கேட்டார். ஒரு பொய்யான கற்பனைக் கதையிலிருந்து தென்னாட்டு மக்களை அவமானப்படுத்தும் காரியத்தைப் பார்ப்பனரும் வடநாட்டாரும் செய்தால் - அதைச் செய்ய அவர்களுக்கு உரிமையிருந்தால் அவர்களுக்குப் புத்தி வரும்படியான ஒரு காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இன்றைக்கு ராமநவமி என்கிறார்கள்; நமது இளைஞர்களும் மாணவர்களும் இம்மாதிரியான இழிவுபடுத்தும் செயல்களில் ஏமாறாமல் இருக்க வேண்டும். இவற்றில் பங்கு கொள்ளக்கூடாது. அவர்கள் இராவணனைக் கொளுத்துவதற்குப் பதில் தருவது போல், நாம் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? என்று சிந்தித்துச் செயல்பட வேண்டுகிறேன் என்றார் பெரியார். மேலும், 1956 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் கும்பகோணம் மகாமகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது. இதன் பித்தலாட்டங்களைப் பெரியார் ஆதார பூர்வமாக அம்பலப்படுத்திக், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளும் இம்மாதிரியான அறிவீனமான செயல்களில் நமது மக்கள் ஈடுபடவேண்டாமென அறிவுறுத்தினர். மிஸ் மேயோ நமது முட்டாள்தனமான பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்தாள் என்று கோபித்துக் கொண்டோமே - நாம் அதற்குப் பிறகாவது திருந்தியிருக்கிறோமோ? மேயோ சுற்று மெய்யா பொய்யா என்று கோவை அய்யாமுத்துவைக் கொண்டு அப்போதே. அறிவு விளக்கப் புத்தகம் போட்டேனே!- என்ன பயன்? என்று கேட்டார் பெரியார்,

மதுரையில் டி.கே.எஸ் சகோதரர்களின் ராஜராஜ சோழன் நாடகம் நடந்தது. ஒரே நாளில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும், 13.6.1956 அன்று, நாடகத்துக்குத் தலைமை தாங்கிக் கருத்துரை வழங்கினார்கள்.

மதுரை சங்கரன் பிள்ளை என்பவர் பெரியாரின் நண்பர். அவரே பின்னாளில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகி, இன்றைய நவீன நாடகத்தின் தந்தையானார், டி.கே.எஸ் சகோதரர் நால்வரும், பெரியாரின் கொள்கைகளில் முழு ஈடுபாடு இல்லாவிடினும் நல்ல அன்பும் மதிப்பும், பெரியாரிடமும் அண்ணாவிடமும் கொண்டாடிருந்தவர்கள். கலைஞர் ஆட்சியில் டி.கே.சண்முகம், அவர் மறைந்த பின்பு டி.கே பகவதியும் மேலவை உறுப்பினராக இருந்தார்கள், தமிழ் நாடக வளர்ச்சியில் அவர்கள் பெரும் பங்கு கொண்டவர்கள் டி.கே.சண்முகம் நன்கு பயின்று, தேர்ந்து தெளிவு கொண்டு, அரசியல் ஆர்வமும் படைத்திருந்தார். அவர்கள் வளர்த்த நாடகக்கலை யாரிடமோ சிக்கித் தவிப்பதாக நாடு நினைக்கிறது.

குன்றக்குடியில் பெரியார் பேசும்போது, பொது ஒழுக்கம் கெட்டுப் போன வரலாற்றைக் கோடிட்டுக் காட்டினார்:- மிருகப் பண்புகளே நமக்குத் தெய்விகப் பண்புகளாய் ஆயின. கடவுள், சமயம், பார்ப்பான் முதலியவற்றால், மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ தேவையில்லாதவைகளே கடமைகளாக ஆக்கப்பட்டன. மனிதனை மனிதன் இம்சிப்பது, வஞ்சிப்பது போன்ற துஷ்ட மிருகங்களில் குணமே தெய்விக குணங்களாய் அமைந்துவிட்டன. அயோக்கியர்களுக்கும், துரோகிகளுக்கும் அரசியலில் முதலிடமே கிடைப்பது போலக் கடவுள், சமயத் துறையிலும் ஆகி, ஒழுக்கக்கேடு மலிந்து விட்டது. இதற்கு ஏதாவது பரிகாரம் தேட வேண்டுமானால், கடவுளும் சமயமும் பயன்படாது. ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது என்றார் பெரியார்.

24.6.56 அன்று கடலூர் நகரசபை பெரியாருக்கு வரவேற்பளித்துக் சிறப்பித்தது. ஜூலை முதல் தேதி திருச்சியில் பெரியார் கலந்து கொள்ளும் மாபெரும் ஊர்வலம். அன்றைக்குப் பெரியாருக்கு உயர் இரத்த அழுத்தம் - ஹைபிளட்பிரஷர் 170 இருந்தது. இருந்தாலும் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதோ, நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாய்ப் போவதோ பெரியாருக்கு அறவே பிடிக்காத செயல்களாதலால், அதே நிலையில் பெரியார், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து சுற்றுப் பிரயாணமும் சென்றார்.

1956 ஜூலை 8-ஆம் நாள் ஈரோட்டில் நடந்த புத்தர் மாநாட்டில் பெரியார் பங்கேற்று உரையாற்றும்போது, புத்தரைப் பின்பற்றி வேத மத சாஸ்திரங்களை ஒழிப்பதே எங்கள் இலட்சியம் என்றார். வான்மீகி ராமாயணம் சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டி, இராமன் சாதாரண மனிதனுக்குக் கீழானவன்; சீதை விபச்சாரி என்பதெல்லாம் எடுத்துக் கூறினார். இராமன் பட எரிப்புக்குக் கால் கோள் விழா போல, அன்றையப் பொதுகூட்டத்தில் இராமன் படம் எரிக்கப்பட்டது. அடுத்த வாரமே 15.8.56 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் “விடுதலை” ஆசிரியருமான குத்தூசி குருசாமி ஒரு இராமன் படத்தைக் கொளுத்தினார். அவர் மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டு, இழுக்கப்பட்டு, அவருக்கு 6.12.55 அன்று 5 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 22.7.56 சிவகங்கையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். கி.வீரமணி பி.ஏ (ஆனர்ஸ்) கொடி ஏற்றி வைத்தார்.

திருச்சியில் 21.7.56 அன்று கூடிய நிர்வாகக் குழுவில். 1.8.56 அன்றைய தினம். நாடு முழுவதும், பெயர் கொடுத்துள்ள 8000 தொண்டர்கள் இராமன் படம் எரிப்பார்கள் என்றும், சென்னை வேப்பேரி டிராம்ஷெட் இடத்தைக், கழகத்துக்காக 1 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டது என்றும், அது 50 மனை (கிரவுண்டு) பரப்புள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டது.

இராமன் பட எரிப்புக் கிளர்ச்சிக்கு முந்திய வாரமே, அரசுத் தரப்பில் கெடுபிடிகள் துவங்கின. ஊர்வலம், பொதுக் கூட்டங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. எப்படியும் இராமன் படம் கொளுத்தத் தோழர்கள் தீவிரமாயிருந்தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கும் பொதுக் கூட்டத்துக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரியார் “விடுதலை”யில் தொடர்ந்து எழுதி, விளக்கி வந்தார். பெரியாரிடம் பேரன்பு பூண்ட டாக்டர் வரதராசலு நாயுடு, குன்றக்குடி அடிகளார் இருவருமே இராமன் பட எரிப்புக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு கோரினார். பெரியார் அமைதியுடன் அவர்களிருவருக்கும் அதன் மூலம் தெளிவில்லாத நெஞ்சங்களுக்கும் தெளிவுரை புகன்றார். இராமன் அவதாரமல்ல; சாதாரண மனிதன்தான் என்று, ராஜாஜி, சங்கராச்சாரியார், வால்மீகி, டி.கே.சி மறை மலையடிகள், திரு.வி.க காந்தியார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். இராமன் படத்தை எரிக்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், வாத முறையில் ஏதும் கூறவில்லையே! என்னிடத்தில் உள்ள அன்பினால், உரிமையால், கேட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த இராமனோ, அல்லது பிற இந்துக் கடவுள்களோ எரிக்கப்பட வேண்டும். என்பதற்கு, நான் எடுத்துக் காட்டுகின்ற ஆதாரக் காரணங்களை மறுத்துவிட்டுப், பிறகு எரிக்க வேண்டாம், உடைக்க வேண்டாம் என்று கட்டளையிடட்டும்! நான் ஏற்றுக் கொள்கிறேன்! நான் தவறே செய்யலாம்; ஆனால் என்னைக் குறை கூறுவதனாலோ, தண்டிப்பதனாலோ என்னைத் திருத்துவதாகுமோ?

எனக்குக் கெட்ட பெயர் வருவது பற்றியோ, தண்டனை கிடைப்பது பற்றியோ, என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதாவது இலட்சியம் செய்வதாயிருந்தால் இந்த காரியத்தில் பிரவேசித்து இருக்கமாட்டேன். என் வாழ்நாளில், தமிழர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற காட்டுமிராண்டித் தன்மையான கடவுள் - சமயப்பற்றும், இழிவுத் தன்மையும் கடுகளவு குறைந்தாலும், நான் வெற்றி பெற்றவனாவேன் மன்னித்தருள்க!” என்றார்.

பெரியாரையும் குருசாமியையும் எதிர்பாராத விதமாக 1ந் தேதி காலையே கைது செய்து வைத்திருந்து, பெட்டி படுக்கையுடன் தயாராகப் போயிருந்தும், அன்று மாலை இருட்டான நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பெரியாருக்கே ஏமாற்றந்தான்! முன்கூட்டியே தடை முதலியவை பிறப்பிக்கப்பட்டபோது, 1ந் தேதியைத் தவிரத் தொடர்ந்தும் கொளுத்தலாம், எனப் பெரியார் அனுமதித்திருந்தார். ஆனால் ஒரே நாளிலும், முன்கூட்டியும், எல்லா ஊர்களிலும் இராமன் படம் எரிக்கப்பட்டது. அதில் 4000, 500 பேர் ஈடுபட்டார்கள். 1000, 1500 பேரைக் கைது செய்திருந்தார்கள். என்றாலும், பெரும்பாலான ஊர்களில் போலீஸ் தடபுடல் குறைவாயிருந்ததால் பட எரிப்பு வெற்றியுடன் முடிந்தது. எனவே, தோழர்கள் விருப்பத்துக்கு மாறாக, ஒரு நாள் போதும் என்று அறிக்கை தந்து விட்டார் பெரியார் இந்தக் கிளர்ச்சியும் பெரியாரின் இதர கிளர்ச்சிகளைப்போல் குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தந்ததில் பெரியாருக்கு அகாலியாக்களிப்பு மறு சிலர்ச்சியை எதிர் பாருங்கள் இந்த முறை நல்ல முடிவுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என்று பெரியார் தமது அறிக்கையை முடித்திருந்தார். கொளுத்தியது குற்றமல்ல என்பதே பெரியாரின் வாதம்.

இப்போது திராவிட நாடு எது? அல்லது. ஏது? என்ற கேள்விகளுக்குப் பெரியார் 19.8.1956 ல் திருவண்ணாமலையில் பதில் கூறினார்:- வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் சென்னை மாகாணமாக இருந்ததைத்தான் திராவிட மாநாடு என்றும், தனியே சுதந்திர ஆட்சியுடன் பிரித்துத் தரப்பட வேண்டும் என்றும் வெள்ளைக்காரரிடம் கோரியிருந்தேன். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ; எனினும் நாங்கள் முஸ்லிம்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டுப் போய் விடுகிறோம் என்று கூறி வெள்ளையன் நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டாருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். இப்போது ஆந்திரம் பிரிந்து விட்டது. அடுத்து சென்னை மாகாணத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு மாவட்டம் தென் கன்னடம் கர்நாடகத்தோடும், தென் மலபார் கேரளத்தோடும் போய்விடும். மிச்சமுள்ளது தமிழ்நாடு. அந்தத் தனித்தமிழ்நாடே திராவிடநாடு; அதற்குத்தான் இனிச் சுதந்திரம் கேட்போம் என்று ஆய்வுரை புகன்றார் பெரியார்.

அடுத்து, 28-ஆம் நாள் மேலக்கற்கண்டார் கோட்டையிலும், 29.8.56 அன்று திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பெரியார் அரிய உரை ஆற்றினார். நமது இலக்கியங்கள் வெறும் பக்திப் பாடல்தானே? தேவாரம் திருவாசகமெல்லாம் தமிழனின் வேதங்களாம்! கடவுளைக் கண்ணே மணியே என்று பிராத்தித்தால் அது வேதமாகுமா? அல்லது இலக்கியமாகுமா? ஆரியம் இங்கு வருவதற்கு முன்பு இருந்த இலக்கியமோ கலையோ ஒன்றாவது நமக்குக் கிடைத்ததா? மிகப்பழைய நூல் என்று சொல்லப்படும் தொல்காப்பியத்திலேயே ஆரியம் கலந்து விட்டது! சிலப்பதிகாரத்தில் ஆரிய மடமை கலக்காமல் ஒரு பத்து வரியாவது கிடைக்கிறதா?

யாரோ சில புலவர்கள்தாம் வள்ளுவர் அவ்வை கபிலர் போன்றவர்கள், ஒழுக்கத்தைப் பற்றிப் பாடினார்கள். மற்றவர்கள் எதுகை மோனையுடன் பாடிப் பிச்சைக்கோ பக்திக்கோ எழுதி வைத்தனர். ஒழுக்கத்திற்கான இலக்கியம் இல்லை, கலை இல்லை, கல்வி இல்லை, மதம் இல்லை, அரசும் இல்லையே?- என்று பெரியார் மிக்க வேதனையுடன் குறிப்பிட்டார்.

பெரியாரின் 78-வது பிறந்தநாள் நாடெங்கிலும் மிக எழுச்சியும் உணர்ச்சியும் கொப்புளிக்க கொண்டாடப்பட்டது.“விடுதலை” ஏடு சிறப்பு இதழ் வெளியிட்டது. இந்தியத் துணை ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பெரியாரின் சேவைகளைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினார். டாக்டர் வரதராசலு நாயுடு பெரியாருக்குச் சிலை எடுத்துச் சிறப்பிக்க வேண்டுமென எழுதினார். புரட்சிக் கவிஞர், டாக்டர் சுப்பராயன், கஜபதி நாயகர், ஆதித்தன், திருக்குறள் முளிசாமி, பி. ரத்னசாமிப்பிள்ளை ஆகியோரும் கட்டுரை தந்தனர். புதிதாக வாங்கப்பட்ட டிராம் ஷெட் சீர்திருத்தம் செய்யப்பட்டுப் புதிய தோற்றமும் ஏற்றமும் பெரியார் திடல் எனும் போற்றற்குரிய பொலிவு மிக்க புதுமைப் பெயரும் கொண்டு அழகின் எழிலின் இருப்பிடமாய்க் கோலங்கொண்டிருந்தது. அங்குதான் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாகப் பயங்கரமான ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். தம் தோழர்கள் மீது அவர்க்கிருந்த அசையா நம்பிக்கையைக் காண்பித்தது இது. அதாவது 5000 தோழர்கள் தூக்கு மேடை ஏறவும் தயாராயிருங்கள். தானேவரும் திராவிட நாடு - என்றார் பெரியார், துந்துபி முழங்கிடக் குடந்தை நகராட்சி மன்றம் பெரியாருக்கு 9.9.56 அன்று வரவேற்பு வழங்கிற்று. தலைவர் டாக்டர் வி.ஆர். மூர்த்தி, துணைத்தலைவர் பி.ஆர். பொன்னுசாமி, எஸ். கே. சாமி ஆகியோர் முன்னின்று விழா நடத்தினர்.

கோவையில் திவான் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் திடீரென்று 15.9.56 அன்று காலமானார். திராவிடர் இயக்கத் தொடர்பில்லாதவராயினும் திராவிடராயிற்றே! பெரியார், அவரது இறுதியாத்திரையில் பங்கேற்று, ஈரோடு வந்து, இரவோடு இரவாகச் சென்னை புறப்பட்டார். மறுநாள் தமக்குப் பிறந்த நாளாயிற்றே! ஈரோட்டிலிருந்து வேன் புறப்பட்டபோது, சென்னையில் பெரியார் திடல் சீரமைப்பு வேலைகளுக்குத் தேவைப்பட்ட 10 ஒட்டர்களை (ஓட்டர்களை அல்ல!) வேனில் ஏற்றி வந்தார். 10 பேருடைய ரயில் சார்ஜ் மிச்சந்தானே! 20.9.56 அன்று பெரியாருக்கு, நெஞ்சுருக்கும் செய்தி ஒன்று கிட்டிற்று. தூத்துக்குடி மாவீரன் கே.வி.கே.சாமி படுகொலை செய்யப்பட்டதுதான் அது!

திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பட்டியில் பெரியாரின் 78-வது பிறந்த நாளைப் புதுமை தவழக் கொண்டாடி மகிழ்ந்தனர் தோழர்கள். முதற் சிறப்பு தலைமை ஏற்று, நாம் பெற்ற அருஞ்செல்வம் பெரியார் என்று புகழ்ந்துரைத்தவர் தவத்திரு மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார். அடுத்த சிறப்பு பெரியாருக்குச் சமுதாயப் புரட்சி வீரர் என்று பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கல்! மேலும், பொற்கிழி அளித்தல்! பொன்னாடை போர்த்தல்! ஆத்திகம் - நாத்திகம் பற்றி அங்கு நற்கருத்து நவின்றார் பெரியார். மக்களுக்கு ஆத்திகம்நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதேயில்லை. நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவனும் அல்ல; இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவனும் அல்ல. என்னால் கடவுள் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை இன்றளவும் புரிந்து கொள்ளமுடியவில்லை. நான் கண்டிப்பதெல்லாம் கடவுள்களைப் பற்றிய சேதிகளையே! யார் ஒருவன் பார்ப்பன ஆதாரங்களில் கைவைக்கிறானோ அவனுக்குத்தான் நாத்திகப்பட்டம் சூட்டியிருக்கிறார்கள், இது வரையில், குறைபாடுகளை, சமுதாய இழிதன்மையை ஒழிக்க நாங்கள் கையாள்வதுதான் சரியான முறை.

மதத்தின் மேல் குற்றம் இல்லை; அதைச் சார்த்திருப்பவர்கள் நான் குற்றம் செய்து விடுகிறார்கள் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். பார்த்திருப்பவர்களைத் திருத்தும் பொறுப்பு மதத்தினுடையது இல்லையா? மதத்தில் காலத்துக்கு ஏற்ற மாறுதல் செய்ய வேண்டாமா? ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக்காட்டு என்று ஏசு சொல்லியிருக்கிறார். இன்று சாத்தியப்படுமா? மேல் துணியைக் கேட்டால் இடுப்புத் துணியையும் கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கொடுத்து விட்டு நிர்வாணமாய் நிற்க இந்தக் காலத்தில் இயலுமா? காலப்போக்குக்குப் பொருத்தமல்லாதவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்; திருத்திக் கொள்ள வேண்டும் - என்பதாக ஆய்ந்து மொழிந்தார் பெரியார்.

வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஆதிதிராவிட மக்கள் ஏதேதோ பிதற்றியதாக அறிந்து, பெரியார் தமது 78-ஆவது பிறந்த நாள் விழாவில், சென்னை பெரியார் திடலில், அதைக் குறிப்பிட்டுச் சொற்பொழிவாற்றினார்: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதம் என்று புரிந்து 1950-ல் அதை எடுத்துவிட்டார்கள். நாங்கள் இடையறாது செய்த கிளர்ச்சியின் பயனாய் சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். படிப்பு பதவி, சமூகம் ஆகியவற்றில் பின் தங்கியவர்களுக்குச் சலுகைகள் செய்யலாம் என்பதே அந்த அரசியல் சட்டத் திருத்தம். அதனால் ஆதித்திராவிட மக்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சாரம் முழுவதுமே கிடைத்து விடுகிறது. மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவேயில்லை” என்பதைச் சுட்டிக் காட்டும்போது, ஆதிதிராவிட “மக்கள், நாங்கள் அவர்களுக்கு எதிராக இதைச் சொல்லுகிறோம் என நினைப்பது நன்றி கெட்ட செயல். ஆதி திராவிடர்களின் கோயில் நுழைவு, தெரு நுழைவுக்காக முதன் முதல் போராடிச் சிறை சென்ற எங்களையா சந்தேகப்படுவது? இன்றைக்கு ஆதித்திராவிட மக்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நமக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?” வெம்பிய நெஞ்சத்தின் வேதனை தோய்ந்த வார்த்தைகளல்லவா?

திராவிட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நரிக்குறவர் போன்ற நாதியற்ற கூட்டத்துக்கும் மனித வாழ்வு நல்கிய மாபெரும் அன்பாளரும் பண்பாளருமாகிய ஆர்.எஸ். மலையப்பன், திருச்சி கலெக்டராக இருந்தபோது, பார்ப்பன நீதிபதிகள் அவரைப் பழிவாங்கி விட்டனர். இந்தத் தீர்ப்பின் உண்மை குறித்துத் திராவிடர் கழக நிர்வாகக் குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் மனங்குமுறுதலுடன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 26. 10.56 அன்று திருச்சியில் மத்திய நிர்வாகக் குழு கூடியதும் அன்றே! இதனுடைய பின் விளைவுகள் அடுத்த ஆண்டில் வெளிப்பட்டன.

அகிம்சையைப் பற்றிக் கேட்டவர்களிடையே பெரியார் பேசினார்:- அகிம்சையைப் பற்றி என்னைக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். இன்று அகிம்சை பிரயோசனப்படாது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி, நாசமாய்ப் போய்விட்டோம். இல்லாவிட்டால் நம்மைச் சூத்திரன், தேவடியாள் மகன், என்று சொல்வதைக் கேட்ட பின்னும், இங்கு ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்க முடியுமா? உலகத்தில் வேறெந்த ஜீவனும் தன் இனத்தைத் தானே அடித்துச் சாப்பிடுவதில்லை ; மனிதனைத் தவிர மனிதனை மனிதன் வஞ்சிப்பது. வதைப்பது, கொடுமைப்படுத்துவது இப்போது வளர்ந்துவிட்டது!

ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்கள் ஆயுதம் வைத்திருந்தார்கள்; கடவுளர்கள் ஆயுதம் வைத்திருக்கவில்லையா? அகிம்சை பேசிப் பேசித்தான் சமணமும் பவுத்தமும் அழிந்தன. சமணர்கள் கையிலும் கத்தியிருந்திருந்தால், சைவர்கள் அவர்களைக் கழுவில் ஏற்றியிருக்க முடியுமா? சைவம் ஆயுதத்தினால்தான் வென்றது! சைவம், அன்பு என்று சொல்வது; தாசி, காதல் என்று சொல்வது போலத்தான்! (திருச்சியில் 21.10.1956 அன்று) எப்படி, பெரியாரின் உவமை?

கழகத்தில் நீண்ட நாள் பிரச்சாரம் செய்தும், மாணவர் இயக்கத்தைக் கட்டிக் காத்தும், சோதனையான நேரத்தில் பெரியாரை நீங்காமல் நிலைத்தும் கழகப் பணியாற்றி வந்த வேலூர் ஏ.பி. சனார்த்தனம் - கேளம்பாக்கம் பொன்னுசாமி அவர்கள் புதல்வியும், கழகப் பெண் பேச்சாளராக முன்னணியில் நின்று, பம்பரமாய்ச் சுழன்று, பணியாற்றியவருமான மனோரஞ்சிதம்-இவர்களிருவரையும் பெரியாரே முன்னின்று தம்பதிகளாக்கினார். திருச்சியில் 4.11.56 அன்று, எளிமையாக நடைபெற்ற இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில், பெரியாருக்கு மனம் நிறைந்து தளும்பும் அளவு மகிழ்ச்சி; கழகத் தோழர்கள் தாமே முன் வந்து, மனமுவந்து, நிறைய அன்பளிப்புப் பொருள்கள் வழங்கியதில் அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் சொல்மாரி பொழிந்தார். ஆர். எஸ். மலையப்பன் பற்றித் தீர்ப்பு வழங்கிய இரு பார்ப்பன ஐக்கோர்ட் நீதிபதிகளை அங்குதான் கண்டித்துப் பேசினார்.

பெரியார் 28, 10.1956 அன்று (வேலுர் நகர் மன்ற வரவேற்பை ஏற்று, அங்கே டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார் 23.11.1956 அன்று மாயூரம் நகராட்சியின் வரவேற்பினைப் பெற்றுக் காமராசரின் திருவுருவப் படத்தினை அங்கு திறந்து வைத்தார். மறுநாள் மாயூரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிலும் பெரியார் பங்கு பெற்றார். 10.12.1956 அன்று, ஈரோட்டில், தமது அண்ணாரின் கடைசிப் புதல்வன் கஜராஜ் திருமணத்தைப், பெரியார் இருந்து நடத்தி வைத்தார்.

வடநாட்டின் இராமசாமிப் பெரியார் என்று உலக மக்களால் புகழ்ந்து ஏத்தப்பட்டவரும், அரசியல் சட்டத்தின் கர்த்தாவும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலரும், ஆன டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 7.12.1956 அன்று திடீரென மறைந்தார். பெரியார் ஆற்றொணாத் துயருற்றார், தமது அருமைச் சகாவின் மறைவினால்! டாக்டர் அம்பேத்கர் மறைவு இயற்கை மரணமா? அல்லவா? அவரது மகனின் நிலை என்ன? இரண்டாம் மனைவியின் நிலை என்ன?இப்படியெல்லாம் அப்போது பத்திரிகைத் தலைப்புகள்?

தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா, 222.12.1956 அன்று சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டு, 27.12.56 அன்று சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மகிழ்ச்சியுற்றுப் பாராட்டினார்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்; தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் அறிவித்ததையும், அதையொட்டி ஒரு போராட்டம் நடத்தப் போவதையும், குறிப்பிட்டுச் சில விளக்கங்கள் கோரி, குன்றக்குடி அடிகளார், பெரியாருக்கு 26.12.1956 தேதியிட்டு ஒரு திருமுகம் அனுப்பினார். அதற்கு நல்ல பார விளக்கங்களுடன் பெரியார் பதில் முடங்கலும் தீட்டியருளினார்: (1) தமிழ் நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும். (2) தமிழ் நாட்டில் தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் தமிழனின் தன்மானத்தையும், தமிழ் மொழியின் தன்மானத்தையும் பற்றியவையாகும். தமிழ் மிலேச்ச மொழி என்பதாலும், தமிழன் சூத்திரன் என்பதாலுமே இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நான் தமிழன் என்று கருதுவது நம் நாட்டிலுள்ள “சூத்திரர்”களையேயாகும்.

நாம் இருவரும் நட்பு முறையில் அன்பர்கள் ஆவோம். கொள்கைகளில் ஒன்றுபட்டவர்களாக இருக்க வாய்ப்பு இல்லாது போயினும், ஒன்றுபட்ட இலட்சியங்களுக்கு மக்கள் நலனையும் தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டுச், செய்ய இயன்றதைச் செய்வோம்! எனவே அருள் கூர்ந்து என் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குற்றமிருப்பின் மன்னித்தருள்க- என்பதாக அமைந்தது பெரியாரின் கடிதம்.

காந்தியடிகளின் முதல் சீடரான ஆச்சாரிய வினோபாபாவே, திருச்சி மாவட்டத்தில் கால் நடையாகச் சென்று, நிலக்கொடை பெற்று வந்தார். சாதி ஒழிப்புப் பிரச்சினையில் பெரியாருடன் ஒத்த கருத்துக் கொண்ட அவர், பெரியாரைச் சந்திக்க விரும்பினார். இராமாயணம் முதலியவைகளையும், கடவுள் புராணங்களையும் ஏன் ஒழிக்க வேண்டுமென ஐயமுற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில், 18.1.37 அன்று காலை 10-45 மணிக்கு, இருவரும் சந்தித்துச் சுமார் இரண்டு மணி நேரம் அளவளாவி, மகிழ்ந்தனர்.

நீங்கள் அரசியலில் நேரடிப் பங்கு பெறாமல் சாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுவதைப் பெரிதும் பாராட்டுகிறேன். இராமாயணத்திலுள்ள நல்ல நீதிகளை எடுத்துக் கொள்ளலாமே? கடவுள், புராண ஒழிப்பு வேலையை நீங்கள் விட்டுக் கொடுத்தால், சாதி ஒழிப்புப் பணியில் உங்களோடு நிறையப்பேர் வரக்கூடுமே? என்ற வினோபாவின் கேள்விக்குப், பெரியார், இராமாயணம் நீதி நூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. மக்களுக்கு நீதி சொல்ல நினைத்தால் உங்களைப் போன்றவர்கள் புதிய நூல் எழுதலாமே! விஷத்தின்மீது சர்க்கரை பூசிக் கொடுத்தால், பொது மக்களில் எத்தனை பேருக்குச் சர்க்கரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விஷத்தைத் துப்பத் தெரியும்? நான் வான்மீகி, கம்பராமாயணங்களைப் படித்தே சொல்லுகிறேன். கடவுள்கள், பதிவிரதைகள் என்று சொல்லப்படுகின்றவர்களிடம், கொஞ்சங்கூட நாணயமோ, யோக்கியதையோ, ஒழுக்கமோ இருக்கவில்லை. ஒரு கடவுள் உண்டு என்கிறவர்களிடம் நான் தகராறுக்குப் போவதில்லை. ஆனால் என்னுடைய சாதி ஒழிப்புப் பணிக்கு, அந்த ஒரு கடவுள் தடையாயிருந்தாலும், அதுகூட ஒழிந்துதான் ஆகவேண்டும்!

நீங்கள் ஏழெட்டு மாதங்களாக, என் தமிழ்நாட்டு மக்களிடையே, சாதி ஒழியவேண்டுமென்று சொல்லிவருகிறீர்கள்! ஆனால் இதைப் பத்திரிகைகாரர்கள் போடுவதேயில்லை. நான்தான் எனது பத்திரிகையில் இந்தச் சங்கதிகளைப் போடுகிறேன்; என்றார் பெரியார். தமக்கு அதிகமான அளவுக்கு பூமிதானம் கிடைத்திடப், பெரியாரும் ஆவன செய்ய வேண்டினார் வினோபா பாவே. பெரியார்“என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் அரசியலில் ஈடுபட்டு, ஆட்சியைப் பிடிக்கிறவனாயிருந்தால் உங்கள் பிரச்சினைக்கு ஒரே வரியில் உத்தரவு போட்டு விட முடியும் ஆனால் நான் மேற்கொண்டுள்ள சாதி ஒழிப்பு, சட்டத்தினால் மட்டும் ஆகக் கூடியதில்லை. இந்தப் பணியே எல்லாவற்றிலும் முக்கியமானதென்று: நான் கருதுகிறேன்.” எனப் பதிலுரைத்தார். வினோபா பாவேக்கு ஓரளவு தமிழ் தெரியும் ; எனினும், இடையில் ஒரு நண்பர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். இருவரும் மகிழ்வுடன் விடைபெற்றனர். இது ஓர் அரிய சந்திப்பாகும். பெரியாரை அழைத்து வர, வினோபா ஜீப் அனுப்பியிருந்தார். ஆனால் பெரியார் தமது காரிலேயே சென்று வந்தார்

19.1.57, 20.1.57 இரு நாட்களும் திருச்சியில் திராவிடர் கழக, சாதி ஒழிப்பு மாநாடுகள் சீருடன் நடந்தேறின. நாடு முழுவதும் தேர்தல் காற்று சூடாக வீசிக்கொண்டிருந்த நேரம். திருச்சியில் 1956-ல் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில், பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலமாகக் கருத்தறிந்து, தேர்தலில் தி.மு.க. ஈடுபட்டது. காமராசர் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற கொள்கையினடிப்படையில், பெரியார் தமது ஆதரவு முழுவதையும் காங்கிரசுக்கே திரட்டித் தந்தார். காமராசர் ஆட்சியின் சாதனைகளைப் பெரியார் போல் ஒழுங்காகப் பட்டியல் போட்டுக் காண்பிக்கக், காங்கிரஸ்காரர்களாலும் இயலவில்லை. முக்கியமான பிரச்சார இயந்திரமே பெரியார்தான்! கண்ணீர்த்துளிப் பஞ்சபாண்டவர்களை முறியடிப்போம்! புறப்படுங்கள்! - என்று பெரியார் கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தினார். திட்டம் ஏதுமில்லா ஊதாரிகள், கண்ணீர்த்துளிகள் - என்று விமர்சித்தார் பெரியார். காங்கிரஸ் ஆதரவு என்பது சில இடங்களில் பார்ப்பனரை ஆதரிக்கும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அப்போதும் பெரியார் பின்வாங்கவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்தும் பெரியார் பேசி வந்தார்.

காஞ்சிபுரத்தில் அண்ணா , உடுமலையில் மதியழகன், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத், குளித்தலையில் கலைஞர் மு.கருணாநிதி, சேலத்தில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் - இவருக்கு உதயசூரியன் சின்னம் கிடைக்காமல் கோழிச்சின்னம் கிடைத்ததையும் கிண்டல் செய்து பேசினார்கள்) ஆகிய ஐந்து பேரையும் நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள் திராவிடர் கழகத்தார். ஐந்தில் இரண்டு பழுதில்லை என்ற பழமொழியே மெய்யாயிற்று. தி.மு.கழக வேட்பாளர்கள் தோற்கத்தோற்க, மண்ணைக் கவ்விய கண்ணீர்த் துளிகள் என்ற பட்டியல், கவிஞர் கண்ணதாசன், முதல் பெயராய்த் திகழ, நாள்தோறும் “விடுதலை”யில் வெளிவந்தது. இந்நிலையில் காமராசர் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது கிடைத்திருந்த முடிவின்படி வெற்றி பெற்ற 34 பேரில் 23 பேர் காமராசர் ஆதரவாளர்கள். எனவே பெரியார், வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தார். அன்று 6.3.1957. சென்னையில் 78 ஜோடிக் காளைகள் பூட்டிய ரதத்தில் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முன்னின்று நடத்தப் பெரியார் ஊர்வலம் வந்தார். காமராசர் ஆட்சி அமைந்தது. அண்ணாவைச் சேர்த்துப் பதினைந்து பேர் சட்டமன்றத்திலும், சம்பத்தைச் சேர்த்து இருவர் நாடாளுமன்றத்திலும் ஆக, முதன் முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம், சட்ட சபைப் பிரவேசம்

பெரியாருடைய வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகளுக்கோ, தீரமிக்க போராட்டங்களுக்கோ பஞ்சமில்லை. எனினும் இந்தியாவில் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்கதான கோர்ட் அவமதிப்பு வழக்கு - கண்ட்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்- 1957-ல் நடைபெற்றது, பெரியாரின் வீர வரலாற்றுக் காவியத்தில் ஒரு பொன்னேடாகும். என்ன அந்த நீதிமன்ற அவமதிப்பு?

திருச்சி மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் தஞ்சை மாவட்டத்துக் கள்ளர் வகுப்பில் பிறந்தவர். 30 ஆண்டுகட்கு மேலாக, சீரான நிர்வாகத்திறன் படைத்தவர். குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகைத் தகராறில் அவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப், பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த இரு பார்ப்பன நீதிபதிகள், கலெக்டர் தமிழர் என்பதால், எவ்வளவு தூரம் தாக்க முடியுமோ தாக்கி, அரசு உடனே இவரை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர். இதனை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டது, “இந்து” ஏடு. திருச்சி, வாழ் பொதுமக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவராதலின், மலையப்பன் மீது தீர்ப்பைக் கண்டித்து, ஒரு லட்சம் பொது மக்கள் திரண்டெழுந்த கூட்டத்தில், பழனியாண்டி (பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், தீயிட்டுக் கொளுத்தப்பட்டது “இந்த”ப் பத்திரிகை. இந்த நிகழ்ச்சியும், 4.11.56 அன்று பெரியார் பேச்சும், “விடுதலை” ஆசிரியர் ஈ.வெ.ரா. மணியம்மையார் மீதும், அரசு வழக்குத் தொடர்ந்தது. பெரியார் 4.11.56 திருச்சிப் பொதுக்கூட்டத்தில் மிகத் துணிவுடன் பேசியிருந்தது உண்மையே. இரு பார்ப்பன நீதிபதிகள், ஒரு தமிழராகிய உயர் அதிகாரிக்கு எதிராகத் தீர்ப்பெழுதினார்கள். அட்வகேட் ஜெனரலாகிய ஒரு பார்ப்பனர், கலெக்டருக்காக (அரசுக்காக) வாதாடத் தவறினார். இதை ஆதரித்துப் பார்ப்பன ஏடான “இந்து” கும்மாளம் போடுகிறது. இது ஆரியர் திராவிடர் பிரச்சினையே தவிர வேறில்லை- என்று பெரியார் ஆவேசத்துடன் பேசியிருந்தார்.

வழக்கு விசாரணை 9.4.1957 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார், மற்றொரு நீதிபதி ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் ஐ.சி.எஸ். ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. “குற்றவாளி என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் பெரியாரைக் கேட்டார்கள். “இது சட்ட நீதி மன்றம்; நியாய நீதிமன்றமல்ல! (Court of Law, not Court or Justice) எனவே சட்டத்தின்படி நான் குற்றவாளியாகலாம். ஆனால் நியாயத்தின்படி அல்ல. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. தகுந்த அவகாசம் கொடுத்தால் எனது கருத்துக்களை ஒரு ஸ்டேட்மெண்ட் மூலமாகத் தெரிவிக்கிறேன்” என்று பெரியார் கோரவும் 15 கெடு தரப்பட்டது. 1957 ஏப்ரல் 23-ஆம் நாள் பெரியார் சிறை செல்லத் தயாராகப் படுக்கையுடன்தான் நீதிமன்றம் நோக்கிச் சென்றார். இலட்சியத்தைச் சாதாரணமாக அடைய முடியாது: தக்க விலை கொடுக்கத்தான் வேண்டும் என்பது பெரியாரின் தத்துவமன்றோ?

நீதிபதிகள் அனுமதியுடன் சுமார் 1 மணி நேரம் பெரியார் தமது அறிக்கையைப் படித்தார். (நீதி கெட்டது யாரால்? என்ற 128 பக்கமுள்ள நூலாக அது வெளியாகியுள்ளது) நீதிக்காகப் போராடும் உரிமை முழக்கம் என்றே அதனைக் குறிப்பிட வேண்டும். பெரியாரின் உரத்த குரலில் ஒலித்த அறிக்கையை, நீதிபதிகள் கவனமாகச் செவிமடுத்தனர். பெரியாருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மணியம்மையாரை எச்சரித்து விடுவித்தனர். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கப் பொது மக்களுக்கு உரிமையுண்டு, என்ற கருத்தையும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

“பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்டமுடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன ஐ.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ். ஏ.வெங்கட்ராமன், எஸ். ஓய்.கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதியமாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா ? இல்லை காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! இதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண்டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன் சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் “சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன்” - பெரியாரின் நியாயக் கோரிக்கைச் சாசனத்தின் சில பகுதிகள் இவை!

இந்த முடிவு வெளியாகும் முன்பே, 18.4.1957 அன்று திருச்சியில் கூடிய மத்திய செயற்குழுவில், சாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ஒரு கூறாக, 5.5.57 முதல், பார்ப்பனர் ஓட்டல்களின் முன்புறப் பலகைகளில் உள்ள பிராமணாள் என்ற எழுத்துக்களை அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு முன்னோட்டமாகப் பெரியார் அவர்கள் சென்னை ஆட்சியாளருக்கும், கவர்னருக்கும் ஒரு கடிதம் எழுதி, 27.4.57 “விடுதலை”யில் அதை வெளியிடச் செய்தார். அதில், தமது நோக்கம் சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்படவேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளில் கூடச் சாதியைக் காட்டக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டி, சாதிப்பிரிவு என்பது, நம் நாட்டில் அனுபவப் பூர்வமாகப், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற இரண்டுக்குள் அடங்கிவிடுவதாக உதாரணத்துடன் விளக்கினார். சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக்கொண்டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள் - “தெரிந்தோ தெரியாமலோ பிராமணாள் விடுதி என்று உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து வருகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் போட்டுக் கொள்ளட்டும். அரசு அனுமதியோடு, மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும், ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகட்கு முன்பே நான் சில நகரசபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு, நகரசபை இதில் தலையிடக் கூடாதென்று. பிறகு ரயில்வேயுடன் போராடி, அங்கிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்க செய்தேன். எனவே அருள் கூர்ந்து, 5.5.57க்குள் அமுலுக்கு வருமாறு, ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றி விட்டால் நேரடி நடவடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசியமிருக்காது, என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடிவடைந்தது பெரியார் கடிதம்.

‘பிராமணாள்’ அழிப்புக்கிளர்ச்சி ஏன்? என்ற தலைப்பில் பெரியார், 28.4.57 “விடுதலை” ஏட்டில் ஒரு விளக்கமான அறிக்கையினையும் வெளியிட்டார். எதற்கும் பதிலோ நடவடிக்கையோ காணப் பெறாமையால், திட்டமிட்டபடி, 5.5.57 அன்று, சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராஃப்ட்ஸ் சாலையிலுள்ள முரளி கஃபே என்ற பார்ப்பனர் உணவு விடுதியைக் களமாகத் தேர்ந்தெடுத்துப், போராட்டம் தொடங்கியது. முதல் நாள் கணக்கற்ற மக்கள் கூட்டம். கடையின் முன்னர் மறியல் செய்து, பிராமணாள் என்ற எழுத்துக்களை அழித்திட, ஈ.வெ.ரா மணியம்மையார், விசாலாட்சியம்மாள். மனோரஞ்சிதம் அம்மாள், எஸ்.குருசாமி, எம். கே.டி. சுப்பிரமணியம், மு.பொ. வீரன், டி.எம். சண்முகம், திருவாரூர் தங்கராசு. ஏ.பி. சனார்த்தனம் ஆகியோர் முன் வந்தனர். பெரியாரும் வந்து மேற்பார்வையிட்டார். ஓட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டும். இசையவில்லை, அழிக்க முயன்றவர்களைப் போலீசார் கைது செய்தனர். நாள்தோறும் இந்தக் கிளர்ச்சி இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது. 2.12.57 அன்று 210 ஆம் நாள் கிளர்ச்சி வரையில் கைதாகி தண்டனை பெற்றோர் 837 பேர்.

திருச்சியில் 16.6.57 அன்று நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டின் தலைவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திறப்பாளர் ஏ.பி. சனார்த்தனம். பெரியார், குருசாமி, வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பார்ப்பனர் ஓட்டலில் யாரும் உண்ணுவதில்லை என முடிவு மேற்கொள்ளப்ட்டு, அவ்வாறு புறக்கணித்தோர் பட்டியல் தினந்தோறும் “விடுதலை” யில் வெளிவந்து கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டத்திலிருந்து, சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை ஒன்று, 20.6.57 அன்று புறப்பட்டு, நடந்தே பிரச்சாரம் செய்து கொண்டு, 30.7.57 அன்று சென்னை வந்து சேர்ந்தது. 22 கருஞ்சட்டை வீரர்களடங்கிய இப்பட்டாளத்தின் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம்; தளபதி ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. வழியெங்கும் கழகத் தோழர்கள் வரவேற்று, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர். இவர்கள் செலவுக்கு, சென்னையில் அழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர்க்கும் சேர்த்து, நிதியும், அரிசி பருப்புச் சாமான்களும் குவிந்தன. பிரச்சாரப் படையினர் இவற்றையும் விடாமல் திரட்டி வர, இவர்கள் பின்னால் ஓர் இரட்டை மாட்டு வண்டியும் தொடர்ந்தது. சாதி ஒழிப்புப் படையினர் சென்னை சேர்ந்த போது, அவர்களுக்குக் கழகம் மாத்திரம் வரவேற்புத் தந்து மகிழவில்லை அரசும் அவர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தது? சாதி ஒழிப்புப் படையின் தலைவருக்கும், தளபதிக்கும் 2.8.57 அன்று 5 வாரம் சிறைத் தண்டனைப் பரிசு கிடைத்தது!.

23.7.57 அதிகாலை 1.40 மணிக்கு டாக்டர் பி. வரதராசலு நாயுடு காலமாகி விட்டார். “தலைமையிடம் காலி” என்று பெரியார் “விடுதலை”யில் எழுதினார். 40 ஆண்டுகட்கு மேலாகப் பழகியவர். தமிழகக் காங்கிரசை நிலைநிறுத்திய நாயுடு - நாயக்கர் - முதலியார் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவர். அவரைவிட ஜூனியர்களெல்லாம் பெரிய நிலைக்கு வந்தும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராக இருந்ததால், மேலே உயர முடியவில்லை. ஏராளமான வருமானத்தை இழந்து விட்டுத்தான், அவர் காங்கிரசில் உழைத்தார். காங்கிரசால் பலனடையாத தலைவரும் அவர்தான். இனி அவருக்குப் பின் அங்கு தலைவர்களே கிடையாது என்று டாக்டர் நாயுடு அவர்களின் மனைவியார் ருக்மணியம்மாள் அவர்களுக்குப் பெரியார் தெரிவித்துக் கொண்டார். (கலைஞர் ஆட்சியில் டாக்டர் நாயுடுவின் மனைவியாருக்கு அரசினர் தோட்டத்தில் இலவசமாக வீடு ஒன்று குடியிருக்கத் தரப்பட்டிருந்தது)

1957 ஆகஸ்டு 15 வழக்கம் போல் பெரியார் கண்ணோட்டத்தில் துக்க நாள்! ஆனால், இந்த ஆண்டு பெரியாரின் ஆத்திரம், எந்த ஒரு குறிப்பிட்ட நாளின் மீது அல்ல: இதற்குக் காரண கர்த்தாவான் காந்தி மீது திருச்சியில் கூடிய நிர்வாகக் குழுவில், காந்தி பொம்மையை உடைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நாளாக,ஆகஸ்டு 13 தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்திப் பெரியார் பல பொதுக்கூட்டங்களில் பேசினார். “காந்தியால் நமது சமுதாயத்திற்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை அவரால்தான் நாம் வட நாட்டார்க்கும் பார்ப்பானுக்கும் அடிமைகளாக இருக்கிறோம். காந்தியால் ஒழுக்கக் கேடும், பித்தலாட்டமும் அரசியல் சூதாட்டமும், ஜனநாயக வஞ்சகமும் வளர்ந்து விட்டன. சுயராஜ்யம் பெற்றுப் பத்தாண்டுகளாகியும், என்ன பலன்? காந்தி ஒன்றும் அவதார புருஷரல்லர். பார்ப்பான், பாமர மக்களுக்கு அப்படி ஓர் நம்பிக்கையை உண்டாக்கினான். அவர், வர்ணாசிரம தர்மம் அப்படியே இருக்க வேண்டும் என்றவர். தீண்டாதவர்களுக்கு, எல்லாமே தனியாக அமைத்துத் தர வேண்டும் என்றவர். நானே இந்த நாட்டிற்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் வைக்க சொன்னேன்; அவர் மறைந்த அன்றைக்கே இப்போது, காந்தி சிலையை உடைப்போம்; காந்தி படத்தைக் கொளுத்துவோம் என்கிறேன். காந்தி செய்து பித்தலாட்டங்களை ஜின்னாவும், அம்பேத்கரும் அறிந்ததைவிட, நான் நன்றாக அறிந்தவன். காந்தி செய்த மோசடிகளை மக்களுக்குத் தெரிவிப்பேன். அவர் தவறே செய்யவில்லை என்று வேண்டுமானால் யாராவது என்னிடம் வாதாடிப்பார்க்கட்டும்! காந்தி படத்தை எரிக்கக் கூடாது என்பவர்கள், சாதி ஒழிய வேறு ஒரு வழி சொல்லட்டுமே” என்றார் பெரியார்.

18.8.57 அன்று வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்தும், சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை ஒன்று புறப்பட்டுக், கால் நடையாகச் சென்னை சென்றடைந்தது. ஆகஸ்டு 1 ந் தேதி எஸ். குருசாமியும் மற்ற சென்னை மாவட்டக் கழகத் தோழர்களும், பிராமணாள் அழிப்புப் போராட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காகக், கொத்தவலால் சாவடிப் பகுதியில், உண்டியல் மூலம் வசூலித்து வந்த போது, போலீசார், இவர்கள் பிச்சை எடுத்தார்கள் என்று கூறி வழக்குப் போட்டு, 3 வாரம், 4 வாரம் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே 14.8.57 அன்று எல்லாரும் விடுதலையானார்கள். கலைவாணர் என், எஸ். கிருஷ்ணன் 1957 ஆகஸ்டு 30 ஆம் நாள் சென்னையில் மறைந்து போனார். நாடகமும் சினிமாவும் நாட்டுக்குக் கேடு என்று நினைக்கும் பெரியாரையும் தம்பால் ஈர்த்த புரட்சி வீரர் கலைவாணர். கடைசி வரையில் திரையுலகில், பகுத்தறிவுக் கசப்பு மருந்தை நகைச்சுவைத் தேனில் குழைத்து ஊட்டி வந்தார். தாமே நொந்து போன நிலையிலும், வந்தாரை வரவேற்று ஆதரிக்கும் வள்ளல் மனம் படைத்தவர் யார் யாரோ தமக்குச் சொந்தமானவரென்று நினைத்து உரிமை கொண்டாடினாலும், அவர் தொடர்பெல்லாம் திராவிட இயக்கத்துடனேதான்! அவர் சிறைப்பட்ட போது பெரியார் உள்ளமுருகினார். மறைந்த போது அளவிறந்த துயருற்றார்.

இந்தித் திணிப்புக்கு மத்திய அரசு மீண்டும் வாலை நீட்டிப் பார்த்தது. “விடுதலை” ஏட்டில், கொட்டை எழுத்தில், 4.9.57 அன்றும், தோடர்ந்தும், ஒரு பெட்டிச் செய்தி வெளியிடப்பட்டது:- இந்திப் பிசாசு மீண்டும் தலையெடுக்கிறது; தமிழர்களே மண்டையிலடிக்கத் தயாராகுங்கள்! - என்பதாக, பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அரசே வெளியிட வேண்டுமெனப் பெரியார் யோசனை கூறிவந்தார். அதனை ஏற்றுக் கொண்டது போல், 13.9.57 அன்று அரசாணை பிறப்பிக்கவே, இது பெரியாரின் வெற்றிதான் என்று கல்வியாளர்களால் பேசப்பட்டது. இந்திப் பாம்பைக் கொல்லுங்கள் என்று, 6.9.57 அன்று தலையங்கம் தீட்டியது “விடுதலை” ஏடு.

நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பாளர்கள் கூட்டம் என்பதாக எல்லாக் கட்சிக்காரர்களையும் அழைத்து நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் தமது பேச்சைப் பற்றிப் பெரியாரே குறிப்பிடுகின்றார்:“அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். ஆங்கிலமே போதனா மொழியாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். பிறகு நான் பேசும் போதும் அதுபோலவே பேசிவிட்டு, - ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன்.

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் - தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னிலையில் ஒரு நாளும் இருக்க முடியாது. தமிழ் வடமொழியைவிட, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும், பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும், இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாக ஆவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாக ஆவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

தந்தை பெரியாரின் 79 - வது பிறந்த நாளைத் தஞ்சைத் தரணி புதுமுறையில் கொண்டாடிச் சிறப்பிக்கத் திட்டமிட்டது. சேலம் போன்ற ஊர்களில் பெரியார் பிறந்த நாளை பொலிவுடன் கொண்டாடி, இந்திச் சனியனைத் தாக்கவும், சாதியைப் போக்கவும், இழிவினை நீக்கவும் உதவியாகப் பெரியாருக்கு வெள்ளியாலான வாள், சம்மட்டி, கேடயம் போன்ற போர்க்கருவிகளைப் பரிசாக வழங்கினர். சென்னை பெரியார் திடலில் 23.9.57 அன்று நடந்த விழாவில் எஸ். ராமநாதன், சி.பா ஆதித்தன் ஆகியோர் பங்கேற்றனர். “கரண்ட்” ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் டி.எஃப் காரகா, 27.9.57 அன்று பெரியாரை வந்து சந்தித்து சென்று, 2.10.57, 9.10.57 தேதி இதழ்களில் நல்ல மதிப்பீட்டுக் கட்டுரை தீட்டியிருந்தார். 9.10.57 அன்று ஆத்தூரில் பேசிய பெரியார், சாதி ஒழிப்புப் போரில் ஈடுபட விரும்புவோர் இரத்தத்தில் கையெழுத்திட்டுத் தமக்கு அனுப்புமாறு கோரினார்.

தஞ்சையில் சாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு 4.11.57 அன்று கோலாகலத்துடன் கூடிற்று. இரண்டு லட்சம் ஈட்டிகள் திரண்டதாகப் பெரியாரே வர்ணித்தார். இந்த மாநாட்டில்தான் பெரியாரை ஒரு தராசில் அமர்த்தி இன்னொரு தட்டில், அவரது எடைக்குச் சரியாக வெள்ளி ரூபாய்களை அள்ளிக் கொட்டித், துள்ளும் உவகையில் உள்ளம் களிகொள்ளக், கருஞ்சட்டையினர் பெருஞ்சாதனை புரிந்தனர். வெள்ளிப் பணத்தைக் கண்டதும், உள்ளம் குளிர்ந்து, ஓய்ந்து விடவில்லை பெரியார். அங்குதான் புதியதொரு போர்ப் பிரகடனத்தைப் புலியேறு போல் முழக்கினார். சாதி ஒழிப்புக்குச் சர்க்கார் இணங்காவிடில் - அதாவது, பிராமணன் என்று ஒரு சாதி கிடையாது சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம் என்று கூறாவிடில் - அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுக்குத் தீ வைப்போம் என்றார் பெரியார். அக்கிரகாரத்தைத் கொளுத்தி, 1000 பார்ப்பனர்களையாவது கொன்றால்தான் சாதி ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம்; அவ்வாறே கொல்லுவோம் என்றார் பெரியார். மக்களே எதிரொலித்து, இப்படியாக முழங்கினார்கள். தீ வைக்கும் நாள் 26.11.57 என்பதையும் பெரியார். அங்கேயே அறிவித்துவிட்டு திருச்சி சென்றார். 6.11.57 அன்று அரசு பெரியாரைத் திருச்சியில் கைது செய்து, அவர்மீது 117, 323, 324, 326, 436, 302 ஆகிய ஆறு செஷன்களில் வழக்குப் பதிவு செய்து, பின்னர் விடுவித்தது. பெரியார் தளர்ச்சியுறவில்லை . 26.11.1957 அன்று நிச்சயம் நாங்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம் என்ற வீரமுரசு கொட்டினார். மீண்டும் பெரியாரை 25.11.67 அன்று, திருச்சியில் கைது செய்து, அந்தச் சிறைப் பறவையின் சிறைக்கோட்டம் நண்ணிய எண்ணிக்கையைப் பதினைந்தாக உயர்த்தி, அவரையும் உயர்த்தியது அரசு!.

சட்டம் கொளுத்துவோர் பட்டியல் “விடுதலை” ஏட்டில் நாள்தோறும் 10 ஆயிரமாகப் பெருகி வந்தது. 26-ம் நாள் மட்டும் நாடு முழுவதும் 30000 பேர் கைதாயினர். 15 பேர் சிறைக் கொடுமையால் மாண்டனர். “நியூயார்க் டைம்ஸ்” ஏட்டில், இந்தியாவில் திராவிடர் கழகத்தினர் இந்திய அரசியல் சட்டத்தையே கொளுத்தி, 2000 பேருக்கு மேல் சிறை ஏகினர் என்று செய்தி ஒன்று பிரசுரமாயிற்று! அரசியல் சட்டத்தைக் கொளுத்தித் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரான எஸ்.குருசாமி கைதாயினார். அவர் இத்தோடு ஒன்பதாம் முறையாகச் சிறை புகுந்தார்.!

சென்னையில் 30.11.57 அன்று, பெரியாரும் வீரமணியும் பேசினார்கள். தனித் தமிழ்நாடு பெறுவதே எங்கள் லட்சியம் என்றார் பெரியார். “மனுதர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்பாகிய அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதில் தவறில்லை. எங்கள் உரிமையை, உணர்ச்சியை மதிக்காமல், நாங்களும் இந்த நாட்டு மக்கள்தான் என்பதைக் கூடக் கருதாமல், எங்களுக்கு அடக்குமுறைதான் பதில் என்றால், என்ன நியாயம்? நாங்கள் என்ன வயிற்றுப் பிழைப்புக்கும், விளம்பரத்துக்குமா இந்தக் காரியம் செய்கிறோம்?” என்று கேட்டார் பெரியார். “இந்த ராஜ்ய மக்களுக்கு எதில் அதிகாரமிருக்கிறது? அரிசி பற்றாக்குறை இருக்கையில், விலை விஷம் போல் ஏறும்போது இங்கிருந்து கேரளாவுக்கு அரிசி போவதைத் தடுக்க முடிகிறதா? இங்கிருந்து 60 கோடி வரியைக் கொண்டு போய், நமக்குப் பிச்சைக்காசு 8 கோடி தருகிறானே. கேட்க முடிகிறதா? அங்கே பலகோடிக் கணக்கில் திட்டங்கள் ஆரம்பிக்கிறானே, இங்கென்ன செய்கிறான்? நெய்வேலியில் ஒரு திட்டம் ஆரம்பித்து. அதற்குள்ளாகவே வட நாட்டார்களைத் திணித்து விட்டனர். பெரம்பூரில் ஒரு கோச் ஃபேக்டரி ஆரம்பித்தான். அதிகாரமெல்லாம் வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும்தானே? திராவிடர்கள் வெறும் கூலிகளாகத்தானே, இருக்க முடிகிறது? இதை எதிர்த்து, இந்த ராஜ்ய அரசாங்கம், கேட்க முடிகிறதா? எனவே நாம் தனியாகப் பிரிந்து கொண்டாலொழிய, நம் மக்களுக்கு நன்மை செய்ய முடியாதென்று, ஆதாரப்பூர்வமாய்க் கூறுகிறேன்” என்றார் பெரியார்.

இதற்கிடையில் நேரு பிரான் “இந்திய அரசியல் சட்டம் பிடிக்கவில்லையானால் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று கூறிப், பெரியாரைத் தூண்டிவிட்டார். அத்துடன் “இந்த அரசியல் சட்டம் பிடிக்கவில்லையானால், ஜெயிலிலோ, பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலோ இருக்கத்தான் அவர்கள் லாயக்கானவர்கள்” என்றும் ஆத்திரத்தைக் கொட்டினார். எப்போது? பெரியார் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது - எங்கே? அதே திருச்சி நகரில்

“தமிழ் உணர்ச்சிக்குத் தாயகமான திருச்சி நகரில் 20, 30 ஆயிரம் மக்களிடையே இப்படிப் பேசிவிட்டுத் திரும்பிப் பத்திரமாகத் தன் ஊருக்குப் பறந்து சென்றிருக்கிறார், 8000 போலீஸ் காவலுடன், இந்தியாவின் முதல் மந்திரியாயிருக்கும், பார்ப்பனப் புரோகித சாதியைச் சேர்ந்த, பண்டித ஜவகர்லால் நேரு இது. தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக், கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்டது. என்னும் பழமொழி போல இருக்கிறது!.

இந்த பனியா - பார்ப்பான் ஆட்சி ஏற்பட்ட பின் தமிழர்கள் சிறைக் கைதிகள் போல்தான் இருக்கிறோம்! அங்குள்ள கான்விக்ட் வார்டர் போலத் தமிழ்ச் சேவகர்கள். தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழர்கள் மந்திரிகளாக வந்தாலும், அதே கான்விக்ட் வார்டர் நிலைதான்!

தமிழ் மக்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய கடமை என்ன? அரசியல் சட்டம் ஏன், யாருக்காகக் கொளுத்தப்பட்டது? நான் உட்பட 3000 பேர் எதற்காகச் சிறை பிடிக்கப்பட்டோம்.

பார்ப்பனர்களைக் குத்தியதற்கா? கொன்றதற்கா? பார்ப்பனச் சேரியில் நெருப்பு வைத்துக் கொளுத்தியதற்கா? பார்ப்பனப் பெண்களை இம்சித்ததற்கா? இல்லை இல்லவேயில்லை! மற்றவர்கள் இதற்காகச் சிறையில் இல்லை ! என் ஒருவன் மீது தான் குத்தச் சொன்னதாகவும், கொல்லச் சொன்னதாகவும், கொளுத்த சொன்னதாகவும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்; அதுவும் ' வெள்ளரிப் பழத்திற்குப் பூண்போட்டுக் கெட்டிப்படுத்துவது' போன்ற குற்றம்தான் சாட்டப்பட்டிருபறெது.

சாதி காப்பாற்றப்படும் சட்டம் எங்களுக்கு வேண்டாம்; அதைத் திருத்து! என்பதற்கு அறிகுறியாக, அறிக்கையெல்லாம் வெளியிட்டு, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொளுத்துவதன் மூலம் அறிவுறுத்திக் காட்டினோம். அதற்காகக் குழந்தைகள், குஞ்சுகள், பெண்கள், வயோதிகர்கள், கர்ப்பிணிகள், இளைஞர்கள் உட்படப் பத்தாயிரம் பேர் கொளுத்தியதில், 7000 பேரை விட்டுவிட்டு, 3000 பேரைச் சிறையிலடைத்து, ஊசிப் போன சோளக் கஞ்சியையும், களிமொத்தையையும் உண்ணச் சொல்லிக்; கடும் வேலை கொடுத்துக் கொடுமைப்படுத்தும் இந்த அட்டூழியத்துக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? சிறையில் கொடுமைக்காளானவர்களில், லட்சக்கணக்கான ரூபாய்ச் சொத்து, ஆயிரக்கணக்கான ரூபாய் ஆண்டு வரும்படி உள்ள செல்வான்களும், உயர்தர வாழ்க்கையில் உள்ளவர்களும் இருப்பது: இந்த அரசுக்கே தெரியுமே!

இதில் தேருவின் துணிவோ, தீரமோ, கெட்டிக்காரத்தனமே! ஒன்றுமில்லை , தமிழனின் மானமற்ற, சுயநல, ஈனப்பிழைப்பும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையுத்தான் புரிகிறது!

என்மீது அடுத்த இரண்டொரு நாளில், கொலைக்குற்ற வழக்கு விசாரணை நடக்கப்போகிறது. என் தோழர்கள் சிறையில் கிடக்கிறார்கள். விசாரிக்கின்ற நீதிபதிகளை எதிரில் வைத்துக்கொண்டு, ஒரு பெரிய ஆட்சித் தலைவர், ‘இவர்களைவிடாதோ இவர்கள் சிறையிலிருக்கத்தக்கவர்கள். மன்னிக்கத்தக்கவர்களல்ல’ என்பது போல் பேசினால், இந்த ஆட்சி எவ்வளவு நீதியும், நேர்மையும், நாணயமும் உள்ள ஆட்சியாகும்.

12 ந் தேதி வழக்கு விசாரணை: திருச்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆறு செக்‌ஷன்களின் கீழ் தொடரப்பட்ட என் மீதான வழக்கு, இப்போது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை, 9ந் தேதி திருச்சியில் வந்து நேரு இப்படிப் பேசினால், எக்காளமிட்டுச் சென்றால், இந்த ஆட்சியின் கொடி, ஆட்சியின் சட்டம் இவைகளை மட்டுமல்லாமல்; ஆட்சி முறை, ஆட்சி நீதி, ஆட்சி பீடம் இவற்றையும் சுட்டுப் பொசுக்குவது தானே சரியாகும். நமக்கு இப்போது நலமான வாழ்வோ, நீதியோ கிடைக்குமோ? சிந்தித்துப் பாருங்கள்! தமிழர்களே! சிந்தித்துப் பாருங்கள்! தமிழர்களே!” 11.12.57 “விடுதலை”யில் இது பெரியார் தலையங்கம்.

திருச்சியில் பெரியார், 6.11.57 அன்று கைதாகி, அவர்மீது ஆறு செக்‌ஷன்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதல்லவா? திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் 1957 அக்டோபர் 5 ஆம் நாளும், பசுபதிபாளையத்தில் 13 ஆம் நாளில், திருச்சியில் 20 ஆம் நாளும், பெரியார் பேசிய பேச்சுக்களுக்காகத்தான் வழக்கு. திருச்சி மாவட்ட செஷனஸ் நீதிபதி எஸ். சிவசுப்பிரமணிய நாடார் 14.12.57 அன்று, இந்த மூன்று பேச்சுக்களும் தனித்தனியே ஆறுமாதத் தண்டனை அளித்து, மூன்றையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார்.

அந்தப் பிரதிநிதி பெற்ற தீர்ப்பின் சில பகுதிகள், என்றும் நினைவில் கொள்ளத் தக்கவை; பெரியாரைப் பற்றிய சரியான மதிப்பீடு:- “மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிடப் பெருங்குடி மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்கள். பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பொருளை உடைய சூத்திரன் என்ற இழிபட்டத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்யப்பட்டதுடன், அதை நம்புவதற்காக வேத சாஸ்திர புராண இதிகாசங்களும் பார்ப்பனரால் எழுதப்பட்டன. திராவிடர்கள் சாதாரண ஊழியர்களாக உழல்கையில், பார்ப்பனர்கள் உத்தியோக மண்டலம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள்.

வெள்ளைக்காரர் ஆட்சி இந்நாட்டை விட்டுப் போனதும் நிலைமை மேலும் மோசமாயிற்று.

இந்திய அரசியல் சட்டம் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது. பிரதமரும் ஜனாதிபதியும் பார்ப்பனர்கள். இராஜ்ய மந்திரிகளோ, அதிகாரமற்றவர்கள். இந்நிலையில் அரசியல் சட்டத்தைத் திருத்துவதோ அவ்வளவு எளிதல்ல; எனவே சட்டவரம்புகளுக்கு உட்பட்டுச், சாதியை ஒழிப்பதென்பது, இயலாத காரியம். அதனால் தான் ஜின்னா அவர்கள் கத்தியைக் காட்டிப் பாகிஸ்தானைப் பெற்றுக் கொண்டார்.

ராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்ததும் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 30 நாட்களில் அதைத் திரும்பப் பெறாவிடில் பார்ப்பனர்களைக் குத்தும்படி எதிரி (பெரியார்) பொதுமக்களைப் பார்த்துச் சொன்னதும் ஆச்சாரியார் பதவியை விட்டே விலகினார். ஆகவே சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே வழி, பலாத்காரத்தைப் பயன்படுத்தித், தமிழ்நாட்டை விட்டுப் பார்ப்பனர்களை விரட்டுவதே ஆகும். இந்த அதி தீவிரத் திட்டத்தைக் கையாளுமுன்பு, இந்திய அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும். அதன்மூலம் சாதி ஒழிப்புக்கு வகை செய்யப்படாவிட்டால், காந்தி படத்தை எரிக்க வேண்டும். அதிலும் பயனில்லையானால், காந்தியார் சிலைகளை உடைக்க வேண்டும். இவற்றிலும் பயன் ஏற்படாவிட்டால், நேருவின் கொடும்பாவியையும், அடுத்து நேருவின் படத்தையும் எரிக்க வேண்டும்!

இவை அத்தனை முயற்சிகளிலும் வெற்றிகிட்டாவிடில், பார்ப்பனர்களை அடிக்கவும் உதைக்கவும் கொல்லவும் வீடுகளைக் கொளுத்தவும் வேண்டும். எதிரிக்கு 78 வயது முடிந்து 79 தொடங்கியுள்ளதால் இனி தாம் நீண்டநாள் வாழ்த்து வெற்றியைக் காண்போமா என்ற அய்யத்தால், விரைந்து இத்தகைய செயல்களைச் செய்ய நினைக்கிறார்; அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்டுகிறார்.

கண்ணை மூடிக் கொண்டு இவரைப் பின்பற்றுகிறவர்கள் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அதனால் இவருடைய திட்டங்களால், பயங்கர விளைவுகள் ஏற்படத்தான் செய்யும்.

பிரதமர் பேச்சினால் இந்தத் தீர்ப்பு பாதிக்கப்படலாம் என எதிரி நினைக்கிறார், அவர் நம்பத் தயாராயிருப்பாரானால், அவருக்குத் தெரிவித்துக் கொள்வேன், இத்தீர்ப்பு நீதியுணர்வோடும் நல்ல மனச்சாட்சியோடும்தான் எழுதப் பட்டுள்ளது."

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுத் தலைவணங்கித் தமிழர்களின் தன்மானத் தந்தை, இன்முகத்தோடும் அடலேறு போன்ற எடுப்பான தோற்றத்தோடும், ஆறுமாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்கச், சிறை புகுந்தார்!

உலக வரலாற்றில், தனது நாட்டின் அரசியல் சட்டத்தையே எரித்து, மாபெரும் கிளர்ச்சி செய்த முதல் தலைவர் பெரியார்தான்.! அதனை நிகழ்த்திக் காட்டிய மாபெரும் நிகரற்ற வீரரைத், தமது பதவி காரணமாய்ப் பண்டித்தேரு, ‘அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது Childish nonesense. மூட்டை முடிச்சுகளோடு அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும்’ என்றாரே அதே நேரு பண்டிதர். 1958 ஜனவரி 6 ஆம் நாள் சென்னை மீனம்பாக்கம் வந்திறங்கிய போதும், மாலையில் சென்னை மவுண்ட் ரோட்டில் வலம் வந்தபோதும், லட்சக்கணக்கான கருங்கொடிகள் உயர்ந்து நிற்க, “நான்சென்ஸ் நேரு! Go Back ! திரும்பிப்போ” என்ற முழக்கம், இடியோசையாய்ச் செவிப்பறையைக் கிழிக்க - போலீஸ் தடியடி தர்பார் நடத்த - இருவர் பலியாக - இப்படி ஓர் எதிர்ப்பை இதுவரை கண்டதில்லை என நேரு திகில் கொள்ள இம்மாதிரிப் போராட்டத்தின்போது, தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டும் நிகழ்த்திக் காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம்.!

21.12.57 “விடுதலை”யில் இப்படி ஒரு வினா எழுப்பப் பட்டிருந்தது:- தேசியம் பேசும் தமிழா! இந்நாட்டில் நீ இவற்றை எங்காவது காணமுடியுமா? பிராமணாள் முடிதிருத்தகம், பிராமணாள் லாண்டிரி, கொத்து வேலை தோதாத்ரி அய்யங்கார். மரமேறி மகாதேவசர்மா, மாடுமேய்க்கும் மாதவராவ், பிணம்சுடும் பிச்சுமணி தீட்சிதர், ஏர் உழும் ஏகாம்பர அய்யர், நடவு நடும் நாகலட்சுமி சுப்புணி அய்யர் சாணம் எடுக்கும் விசாலாட்சி சீனு சாஸ்திரி,.........?