தந்தை பெரியார், கருணானந்தம்/016-021



14. அழித்தார்


வயது வந்தோர் வாக்குரிமை பெற்ற முதல் தேர்தல் காங்கிரஸ் தோல்வி - ரயில் நிலைய இந்தி அழிப்பு - திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் - தென்பகுதி ரயில்வேமென் யூனியன் - சுயமரியாதைப் பிரசார நிறுவனம் - பிள்ளையார் உடைப்பு - புத்தர் மாநாடு குலக்கல்வி எதிர்ப்பு - பர்மா மலேயா பயணம் - 1952 முதல் 1954 முடிய.

னக்கு இருபத்தொரு வயதாகி விட்டதா; இந்தா வாக்குச்சீட்டு! ஜனநாயகத்தை நிலை நாட்டி விட்டோம்; எங்களை மறக்காதே என்று காங்கிரசார், தாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த புதிய வாக்குரிமைத் திட்டத்தின் கீழ் 1952-ஆம் ஆண்டில் புதிய பொதுத்தேர்தலை நடத்தினர்; வெற்றி தமக்கே என்று உறுதியாக நம்பினர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் - அதாவது சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில் - 375 சட்டமன்ற இடங்களில், 371 இடங்களுக்குக் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கடந்த 1951 அக்டோபர் 21ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய முன்னணி சார்பில் நிறைய வேட்பாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுக் கட்சி பெரியாரின் பரிபூர்ண, நிபந்தனையற்ற. ஆதரவை முழுமையாகப் பெற்றிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், தனது மதுரைப் பொதுக்குழுவின் தீர்மானப்படி, திராவிட நாடு பிரிவினைப் பிரச்னையில் நம்பிக்கை வைத்துப், பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறச் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் வாதாட விருப்பமுள்ளவர்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால், அவர்களை ஆதரித்தது. சிறையிலிருந்தவர்கள், தலைமறைவாயிருந்தவர்கள் ஆகிய கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் போட்டியிட்ட அதிசயமெல்லாம் நடந்தது.

கடந்த 27 ஆண்டுகளாகத் தாம் செய்து வந்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முழுவலிமையுடன் பெரியார் செய்து வந்தார். அது நல்ல பயனைத் தந்தது. இந்தப் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில், காங்கிரசு 152 இடங்களையே பெற முடிந்தது. காங்கிரசல்லாதவர் 223 இடங்களைச் சட்டமன்றத்தின் தேர்தலில் கைப்பற்றினர். இதில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றோர் 43 பேரும் இருந்தனர். காங்கிரசல்லாத மந்திரி சபை அமைய எல்லா வாய்ப்புகளும் இருந்தன. வெற்றி பெற்ற மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் விடுவிக்கப்பட்டனர். முதல் மந்திரியாயிருந்த குமாரசாமி ராஜா தேர்தலில் தோல்வியுற்றும், பதவியை விடுவதாயில்லை. இந்நிலையில் டெல்லி ஆட்சி பீடம் சென்னை மாகாண கவர்னராக ஸ்ரீ பிரகாசாவை நியமித்தது. இவர் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் ஒருங்கே பயின்றவர், காங்கிரஸ் கட்சிக்காரர், இந்திப் பிரியர். எனவே இது ஒழுங்கற்ற நியமனம் என்று பெரியார் இதனைக் கண்டித்தார். 1952 மார்ச் 12-ஆம் தேதி கண்டன நாள் கொண்டாடி, கவர்னருக்குக் கருப்புக் கொடி பிடிப்பதெனப் பெரியார் முடிவெடுத்தார். அதன்படிச் சென்னையில் எம்.கே. தங்கவேலர், ஆற்காடு இளங்குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். போலீசார் தடியடி தர்பார் நடத்திப் பல தோழர்களைக் காயப்படுத்தினர். இந்தப் பிரச்சினையில், திராவிட முன்னேற்றக் கழகம், திட்டமிட்டபடிக் கருப்புக் கொடி பிடிக்கவில்லை. தனித்தன்மையுடன் திராவிடர் கழகம் இந்தப் கருப்புக் கொடிக் கிளர்ச்சியினை நடத்திட வழிவிட்டு, ஒதுங்கிக் கொள்வதாக, அண்ணா அறிவித்தார்.

காங்கிரஸ் மேலிடம், தனது கட்சிக்காரர் எந்தக் காரியத்திற்கு அனுகூலமாயிருப்பாரென ஸ்ரீ பிரகாசாவை அனுப்பியதோ, அதை அவர் செவ்வனே செய்து முடித்தார். காங்கிரஸ் இந்த முறை பெற்றிருந்த வாக்குகள் 66,77,588 ஆகும். ஆனால் காங்கிரசுக்கு எதிர்ப்பாக சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் 1,26,65,126 ஆகும். எனினும் 156 உறுப்பினர்களை உடைய காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியைக் கவர்னர் அழைத்து மந்திரிசபை அமைக்கக் கேட்டுக் கொண்டார். 166 உறுப்பினர்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத் தமது எண்ணிக்கையை கவர்னரிடம் காட்டியும், உதாசீனம் செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் தமது வழக்கம்போல் திருகிக்கொண்டனர். இந்நிலையில் சிறுபான்மை வாக்குப் பெற்ற, சிறுபான்மைக் காங்கிரஸ் கட்சி, அரியணை ஏறும் வாய்ப்பளிக்கப்பட்டது. தலைவர் யார்? ஆந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து போனதால், இந்த 156 பேரில் சுமார் 50 பேர்தான் அந்தப் பகுதியைச் சார்ந்தவர் இருந்ததால், அவர்களில் யாரும் முந்தைய வழக்கப்படித் தலைவராக முடியவில்லை. இருந்த ஏனைய உறுப்பினர்களில் யாருமே தலைவர் பொறுப்புக்குத் தகுதியானவராகக் காங்கிரஸ்காரர்களுக்குத் தோன்றாததால், அதிலும் குறுக்குவழி தேடினர்.

கொல்லைப்புற வழி என்று பெரியார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவாறு, சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியாரை மேல்சபை உறுப்பினராக்கிப், பின் கட்சித் தலைவராக்கிச் சென்னை மாகாண முதல்வராகத் திணித்து விட்டனர். தமது வாழ்நாளில் எங்கும், எப்போதும், தேர்தலுக்கு நின்று, பொதுமக்களால், அவர்கள் வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப் பெற்ற வழக்கமே ராஜாஜிக்குக் கிடையாது. எனவேதான் ஆச்சாரியாரின் இந்தக் குறுக்கு வழிக்குக் கொல்லைப்புற வழி என்ற கொச்சையான பெயரே நாட்டில் திலைத்து விட்டது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க கவர்னர், மத்திய சர்க்கார் மந்திரி, சென்னை மாகாண முதன் மந்திரி, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகிய எந்தப் பதவியும் நியமனப் பதவிதான் ஆச்சாரியாருக்கு. அவர் எங்கேயாவது ஓட்டரா என்பது கூடப் பெரியாருக்குச் சந்தேகம். அரசியல் துறையை ஒழுக்கக் கேடாகவும் நாணயக் கேடாகவும் ஆக்குகின்ற இந்தக் காரியம், “மன்னிக்க முடியாத துரோகம்” என்றார் பெரியார்.

எப்படியோ; ஆச்சாரியார் 1952 ஏப்ரல் 11-ல் முதல் மந்திரியானார். முடத் தென்னைமரம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தால் வர்ணிக்கப்பட்ட மாணிக்கவேலர்-தாம் திராவிடநாடு ஒப்பந்தத்தில் காமன்வீல் கட்சிக்காகக் கையெழுத்துப் போட்டிருந்ததும் - ஆச்சாரியார் வீசிய பதவி வலையில் சிக்கிவிட்டார். அந்த வலை விரித்தபடியேதான் இன்னும் காத்திருக்கிறது என்றார் பெரியார். அதற்கேற்பப் பின்னாளில், உழைப்பாளர் கட்சித் தலைவர் இராமசாமி படையாட்சியார் அந்த வலையில் வீழ்ந்தார். ஆகவே இரு வன்னிய குல க்ஷத்திரியத் தலைவர்களும் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவுடன் வாக்குப் பெற்றதற்கு முரணாகக் காங்கிரசுடன் இணைந்தனர். இதில் விதி விலக்காக விளங்கிய கொள்கை வீரர், ஏ.கோவிந்தவாமி ஒருவரே!

(இவர் 1953-ல் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகச் சிறப்புடன் பணியாற்றினார். தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி கண்டார். அண்ணா அமைச்சரவையிலும், கலைஞர் அமைச்சரவையிலும் வீற்றிருந்து, 1969 -ல் மரணமடைந்துவிட்டார். எளிமையும், இனிமையும், உறுதியும் படைத்தவர். இவர்க்குப்பின் இவர் துணைவியார் பத்மாவதி அம்மாள் அதே தொகுதியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரானார்.)

அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும், காங்கிரஸ் ஒரே கட்சியாக அதிக இடங்களைப் பெற்றிருக்கிறதே என்று கவர்னர் கூறிய சமாதானம், நேர்மையானதல்ல என்றார் பெரியார். “இந்தத் தேர்தலால் மூன்று நான்கு கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. அதிகாரிகளுக்கும் சர்க்கார் சிப்பந்திகளுக்கும் எவ்வளவோ தொல்லை. பிரிட்டிஷார் ஆட்சி ஒழிய வேண்டுமென்றும், மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்றும் பாடுபட்டது. இந்த எதேச்சாதிகார நியமன மந்திரிகளைக் கொண்ட - மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத சர்க்காரை, ஆட்சியை அமைக்கத்தானா? இது ஒழிய வேண்டாமா? இப்போது என்முன் உள்ள பிரச்னை இதனைத் தனியே ஒழிப்பதா? கூட்டு முயற்சியாலா? என்பது தான் காங்கிரஸ் ஆட்சி ஒழியவேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள், பிரகாசம் குழுவினர், மற்றும் (தி.மு.க. ஆதரவு பெற்ற) சில சுயேச்சைகள் அக்கறையுடனிருப்பார்கள் எனினும், கம்யூனிஸ்டுகள் தங்கள் தலைமையின் கட்டளைப்படி நடப்பவர்கள்; பிரகாசம் குழுவினர் நமது கிளர்ச்சிகளை ஆதரிப்பார்களா என்பது புரியவில்லை; மற்றவர்கள் சிறை அடி உதை தண்டனைக்கு நம்மோடு வருவார்களா என்பது தெரியவில்லை - எனவே கழகத் தோழர்கள் எப்படியும் ஒரு கிளர்ச்சிக்குத் தயாராயிருங்கள்” என்று பெரியார், 1952 ஏப்ரல் 11, மே 4 ஆகிய நாட்களில் “விடுதலை” தலையங்கம் வாயிலாகத் தமது எதிர்ப்பு முரசினை ஒலித்து விட்டார்.

சாம்பல் பூத்துக் கிடந்த இந்தித் தீயினை ஊதி விட்டனர் காங்கிரஸ்காரர். 1952-ல் ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றில் இந்திப் பெயர்கள் தலைமையிடம் பெறுமாறு, பலகைகள் வண்ணம் தீட்டப்பெற்றிருந்தன. மத்திய அரசின் இந்தி திணிக்கும் இந்தப் போக்கினைக் கண்டித்து, அந்த இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிப்பது என்று பெரியார் முடிவு செய்தார். ஆகஸ்டு 1-ஆம் நாள் இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி; இந்தி எழுத்துக்களை அழிப்பது, அவர்களாக அழிக்கும் வரையில் ஒவ்வோராண்டும் ஆகஸ்டு 1ஆம் நாள் இந்தி எதிர்ப்புநாள் என்று பெரியார் பிரகடனம் செய்தார். அதையே திராவிட முன்னேற்றக் கழகமும் பின்பற்றியது. 1952 ஆகஸ்டு 1-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிக்கப் பெரியார் வந்தார். தி.மு.க. போராட்டக் குழு, திருச்சியில் இதே பணியினை ஆற்றிட மு.கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது. தந்தை பெரியார் அதிகாலையில் ஒரு பக்கத்துப் பலகைகளிலிருந்து இந்தி எழுத்துக்களை அழித்திருந்தார். தனயனும், தந்தையும் தனித்தனியே ஊர்வலமாகத் திருச்சி நகரில் எதிரெதிராக வந்தனர். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்குக் கலைஞரும் சென்று மற்றொரு பக்கத்தில் இந்திப்பெயரை அழித்தார்.

இம்மாதிரியான இந்திப் பெயர்ப்பலகை எழுத்துகளைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தார்கொண்டு அழித்தபோது, காங்கிரசாரும், தமிழ் அரசுக் கழகத்தாரும் மண்எண்ணெய் கொண்டு துடைக்கும் பணியினைக் கழக எதிர்ப்பாகச் செய்து வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ராஜாஜி ஆட்சி, யாரையும் கைது செய்யாமல் விட்டு விட்டது. ஆச்சாரியாருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் கருப்புக்கொடி பிடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள் பெரியாரை வேண்டினார்கள். ஆனால், நம்மவர்களே துரோகிகளாக மாறி, அவர்களுடன் சேர்ந்து கொண்ட இழிசெயலைப் பார்க்கும்போது, அவர்களுக்குக் கருப்புக்கொடி போதாது என்று கருதுகிறேன். வேறு ஏதாவது செய்யலாம். வீணே காங்கிரஸ்காரரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லையே? என்றார் பெரியார். நம்முடைய போராட்டம், இந்திய யூனியன் ஆட்சியையே ஒழித்துக் கட்டி, நமது சென்னைராஜ்யத்தை விடுவித்துத், தனிச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்பதுதானே? என்றும் பெரியார் 9.7.1952 “விடுதலை” தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதினார்.

பின்னர், இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில், கைது செய்யாமல் விட்டதில் ஓரளவு ஏமாற்றமடைந்த பெரியார், இந்தி ஆதிக்கத்தையும், வடநாட்டார் ஆதிக்கத்தையும் ஒருங்கே எதிர்க்கும் ஒரே போராட்டமாக, அடுத்து, இந்திய அரசியல் சட்டத்தையே எரிக்க நேரிடும் என்றார். அவருடைய இந்த முதல் முழக்கம், 7.8.1952, 10.8.1952 “விடுதலை” தலையங்கக் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுகின்றது. ஆனால், அது எப்போது என்பதைப், பின்னர் அறிவிப்பதாயும் பெரியார் தெரிவித்தார்.

1952 தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துத் தாம் செய்த பிரச்சாரத்தின்போது, பெரியார் சில உண்மைகளை உணர்ந்து கொண்டார். விவசாயிகளிடத்திலும், தொழிலாளர்களிடத்திலும் அவர்கள் நல்லவண்ணம் பிடிப்பு வைத்திருந்தனர். சந்தா வசூலித்தனர். அவ்வப்போது கூலி உயர்வு முதலிய சில்லறைச் சலுகைகளைப் போராட்டத்தின் மூலமாகப் பெற்றுத் தந்து, அவர்களை நிரந்தரக் கூலியாட்களாகவே வைத்திருக்கத்தான் கம்யூனிஸ்டுகளின் உழைப்பு உதவியது; இதைப்பற்றியெல்லாம் பெரியார் தீவிரமாகச் சிந்தித்தார். தென்னாட்டில், அதுவும் தமிழகத்தில், விவசாயிகள் என்றாலும் தொழிலாளர்கள் என்றாலும் அனைவருமே திராவிடர்கள்தாம். இவர்களில் ஆரியர் யாரும் வயலிலோ, ஆலையிலோ, தொழிற்சாலையிலோ வேலை செய்வதில்லை. அவர்களுக்கு சாஸ்திரப் பாதுகாப்பே அப்படித்தான். ஆகவே திராவிட மக்களாகிய வேளாண்மையில் ஈடுபடுவோர் தொழிற்சாலைகளில் உழைப்போர் ஆகியோரின் உரிமையினைப் பெற்றுத்தரத் திராவிடர் கழகச் சார்பில், தொழிற்சங்க ரீதியில், தனித்தனி அமைப்புகள் தேவை எனப் பெரியார் கருதினார். இவை, போட்டித் தொழிற் சங்கங்களாகப், பழைய பாணியிலேயே இருக்கக் கூடாது என்றும் நினைத்தார். அதன் விளைவாகத் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேமென் யூனியன் ஆகிய இரு தொழிற்சங்கங்களைப் பெரியார், 1952-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களும் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்ற கொள்கை பெரியாருடைய தல்லவா?

“நமக்கு வேண்டியது தன்மானமும், இனப்பற்றும், இன உணர்ச்சியும்தான். எதை எடுத்தாலும் இனத்தைக் குறிப்பதாக இல்லை. இருந்தால் ஆரிய இனத்தையோ, அதற்குட்பட்ட கிளையையோ குறிப்பதாக இருக்கிறது. இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய சோஷலிஸ்ட், இந்திய இந்து மகாசபை... இப்படியே! இப்போது ஏதோ தொழிலாளி, பாட்டாளி மக்களிடையே சிறிது உணர்ச்சி காணப்படுகிறது. இவர்கள் துணிந்து இந்தியத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து வெளிவந்து, திராவிடர் நிறுவனங்களில் சேர வேண்டும். இப்படித்தான் இனி, இனப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வளர்க்க வேண்டும். அதனாலேயே திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி (திராவிட) இரயில்வேத் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்த யோசனை சொன்னேன். “திராவிட” என்ற பெயரைக் கண்டு யாரும் முகம் சுளிக்க வேண்டாம். அப்படி முகம் சுளிக்கும் அந்தத் துரோகிகள் கூட்டுறவால் நமக்கு நன்மை கிடைக்காது” - என்று பெரியார் எழுதி வந்தார்.

திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கங்களைத் தொடங்கி வைத்தபோது, பெரியார் பேசி வந்ததாவது:- உடலுழைப்பு வேலை செய்கிறவர்கள் எல்லாம் திராவிட மக்கள். பார்ப்பானுக்கும் உடலுழைப்புக்கும் வெகுதூரம். வேறு சில சங்கங்கள் தொழிலாளர்களுக்காக இருந்தாலும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்துக் கொள்ளாதவர்களே அவர்கள். இன்றையத் தொழிலாளி, அன்றாடக் கஞ்சிக்கு அன்றாடம் வேலை செய்பவனாகவே வைக்கப்பட்டிருக்கிறான். போராடிக் கூலி உயர்வு பெற்றாலும் அவனுக்கு என்ன லாபம்? எங்காவது தேர் திருவிழாவுக்குப் போய் அர்ச்சனை செய்துவிடுகிறான்! தொழிலாளிக்கு இரண்டணா அதிகப்படுத்தித் தரும் முதலாளி, பண்டங்களின் விலையை ஏற்றி விடுகிறான். ஆகவேதான், கூலி உயர்வுக்காகப் போராடுவது கேலிக் கூத்து என்கிறேன். நீ ஏன் இப்படிச் தொழிலாளியாகவே இருக்கிறாய்? என்றால்; போன ஜென்மத்தில் செய்த பாவம், என்கிறான், அவனுக்கு உண்மை நிலையை யாரும் எடுத்துச் சொல்வதில்லை. முதலாளியோடு வேண்டுமானால் முட்ட விடுவார்களே தவிர, முதலாளித்துவத்துக்குப்  பாதுகாப்புத் தருகிற சர்க்காரையோ, பார்ப்பானையோ காட்டித் தரமாட்டார்கள். தேர்தலுக்கு நிற்கிற கட்சிகள் தொழிற் சங்கம் வைத்தால், அவர்கள் ஆளுக்குத்தானே ஓட்டுப்போட வேண்டும்? இருக்கிற இந்தியக் கட்சிகளின் ஐக்கமாண்ட் இங்கே இருப்பதில்லை. அதனால், நமது சங்கம் ஒன்றுதாள் திராவிடத் தேசியச் சங்கமாகும். இதுதான் தொழிலாளத் தன்மையையே ஒழிப்பது ஆகும். மேலும், மேல்நாட்டார் போல விஞ்ஞான முறைகளையும் நாம் கையாண்டு வேளாண்மையைப் பெருக்க வேண்டும். என் காலத்திலேயே பூமியைப் பகிர்ந்தளிக்கும் முறை வந்து விடும் என்று நம்புகிறேன். நிலத்துச் சொந்தக்காரன் - நிலத்துக் கூலிக்காரன் என்ற சொல்லே அகராதியில் இல்லாதபடி நாம் செய்வோம் என்று விளக்கிப் பெரியார் விவசாயத் தொழிலாளர் பிரச்னைகளை அணுகினார்.

தென்பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற அமைப்பினைத் தொடங்கும் போதும், பெரியார், திராவிட மக்களே தொழிலாளிகள் தாம்; என்றே தமது கருத்துரையைத் தொடங்கினார். தொழிலாளிகள் ஸ்ட்ரைக் செய்வதால் ஒரு நன்மையும் இல்லை. அவ்வப்போது சிறு சலுகைகளைச் செய்து கொடுத்துவிட்டு, உரிமைக்குரலை எழுப்பாத வாறு கவனத்தைத் திருப்பி விடுவார்கள். வேலையில் தகுதி திறமை பார்த்தாலும், சம்பளத்தில் வேறுபாடு இல்லாமல் சரிசமன் செய்கிறார்களா? பொறுப்பும், பொதுத் தன்மையும் கெட்டுப்போய் நிர்வாகமும் தொழிலாளியும் ஒருவரையொருவர் ஏமாற்றி வருகிறார்கள். சாதாரணமாக, ஒரு ரயிலைக் கவிழ்ப்பதாக வைத்துக் கொண்டால், இதனால் யாருக்கு நட்டம்? பார்ப்பனுக்கா? வடநாட்டு நிர்வாகத்துக்கா? ஆகவே, இந்த நாட்டுக்குத் தகுந்த முறையில் தொழிலாளர் பிரச்சினையை அணுக வேண்டும். இங்குள்ள விசித்திரமான நிலைமை, இந்தப் பாழாய்ப்போன நாட்டில் தவிர உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சூத்திர சாதி, பார்ப்பானுக்கே உழைத்துப் போடவும்; அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றுக்கே வாய்க்கால் வெட்டிவிட்டு, உயர் வாழ்வு வாழவும் ஆன அமைப்பு முறை இங்கு - மட்டுமே உள்ளது. எல்லார்க்கும் எல்லாம் பொது என்று இங்கே பிரித்துக் கொடுத்தாலும், பார்ப்பான் திதி, திவசம் பேராலும், கடவுள் பேராலும் ஆண்டு முழுவதும் நம்மிடம் கறந்து கொண்டுதான் இருப்பான். ஆகையால் முதலாளித்தன்மையுடன் சேர்த்துப் பார்ப்பன உயர்வுத் தன்மை, கடவுள் மத சாஸ்திரக் கட்டமைப்பு யாவற்றையும் ஒழித்தால்தான் எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலை ஏற்பட முடியும் - என்றார் பெரியார்,

பெரியாரிடம், கலப்பு மணத்தால் சாதி ஒழியுமா? என்று கேட்டபோது; வசதி உள்ளவர்கள் கலப்புமணம் செய்து கொண்டால் சமூகம் ஒன்றும் சொல்லாது. அவர்களும் தமது பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்யும்போது, கலப்பு மணச் சாதியில்தான் பார்க்க வேண்டும்; மற்றவர்கள் முன்வர மாட்டார்கள். சாதி ஒழிப்புக்கு அரசாங்கமும் சட்டம் செய்வதோடு, உதவவும் வேண்டும். மத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, சாதியை ஒழிப்பது இயலாது என்று கருத்தறிவித்தார் பெரியார்; 1952 பிப்ரவரி 22-ஆம் நாள் “விடுதலை”யில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். .

1952 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற சென்னை ராஜ்யத் திராவிடர் கழகப் பொது மாநாட்டில், பெரியார், தாம் தலைமை ஏற்க விரும்பவில்லை; வேறு யாரையாவது கேட்டுக் கொள்ள முயன்றும் நிறைவேறவில்லை ; அதாவது, தகுந்தவர்களாக யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வரவேற்புக் குழுவின் தலைவராகிய பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, செயலாளராகிய சேலம் கே. ராஜாராம் பி.ஏ. ஆகியோர் விரும்பியவாறு தாமே தலைமை ஏற்க நேரிட்டதாகவும், அதனாலேயே தாம் புதிய திட்டங்களோ கிளர்ச்சிகளோ அறிவிக்க இயலவில்லை என்றும் பெரியார் வருந்தினார். தகுதியான நண்பர்கள் கிடைக்காதது குறித்தும், மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகள் மூன்று:- முதலாவது வருணாசிரம மூடநம்பிக்கை ஒழிப்பு; இது கடவுள், மதம், பார்ப்பானுக்கு விரோதம் இரண்டாவது, திராவிட நாடு பிரிவினை; இது சர்க்காருக்கு விரோதம்/ மூன்றாவது வகுப்புவாரி உரிமை; இதையும் நம்மவர்கள், தம்வரையில் அனுபவிக்க முன் வருவார்களே தவிர, இதற்காகப் போராடப் பயப்படுவார்கள்! கழகத்தாரல்லாத வெளியார் கிடைக்காமல் நான் ஏமாற்ற மடைந்தேன் -என்கிறார் பெரியார்.

சேலம் நீதிக்கட்சிப் பிரமுகர் பி.கஸ்தூரிபிள்ளை பெரியாரின் உற்ற நண்பர். கூட்டுறவுத் துறையிலும் மோட்டார் போக்குவரத்திலும் ஈடுபாடு மிக்கவர். கஸ்தூரிபிள்ளையின் இளவல் அப்பாவுபிள்ளை மோட்டார் அதிபர். அதற்கடுத்த இளவல் பொன்னுசாமி பெரியாரின் அன்புத் தோழர், கஸ்தூரிபிள்ளையின் இரண்டாவது மகன் கே. ராஜாராம் சிறுவயது முதல் பெரியாரின் தொண்டராகத் தயாரானவர், பி.ஏ. முடித்ததும் நேரே கழகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, பெரியாருடைய அந்தரங்கச் செயலாளராக விளங்கினார். 1962-1967 இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார். 1971-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுக் கலைஞர் அமைச்சரவைச் சகாவாக விளங்கினார். 1977 தேர்தலில் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின், மக்கள் தி.மு.க., அமைத்தவர்களில் ஒருவரானார். இப்போது,

அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழகச் சிறப்புப் பிரதிநிதியாக டெல்லியில், அமைச்சர் தகுதியுடன், பணியாற்றி வருகிறார்.

காட்சிக்கு எளியராயும், கடுஞ்சொல் இலராயும், யார்க்கும் உதவும் இயல்பினராயும் உள்ளதால், அனைவர்க்கும் நல்லவர். பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இவரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்.

உலக நாடுகள் அனைத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் பலமுறை. சுறுசுறுப்பாக இயங்கித் தம்மிடம் தரப்பட்ட பணியினை வெற்றியுடன் முடிப்பது இவர்க்குக் கைவந்த கலையாகும்! ஒரே மகனைத் தந்த இவர் துணைவியாரும், பின் இவரது தந்தையாரும் 1978-ல் மறைந்தது பேரிழப்பாகும்!

1952-ஆம் ஆண்டில் பெரியார் செய்து வைத்துள்ள மற்றொரு மகத்தான செயல், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அமைத்ததாகும். சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் தொட்டு, அதை ஒரு ஸ்தாபனமாக சொசைட்டி ஆக்டின் கீழ்ப் பதிவு செய்திடப், பெரியார் ஆவல் கொண்டு தொடர்ந்து முயன்று வந்தார். இதன் கொள்கை, திட்டம் விதிகள் எல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டன. கடைசியில் 1940-ஆம் ஆண்டில், ‘இதை சொசைட்டி ஆக்ட்டின்படிப் பதிவு செய்ய முடியாது’, கம்பெனி ஆக்டின்படி ரிஜிஸ்டர் செய்யலாம்; என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்! கம்பெனி ஆக்டின்படிச் செய்தால் நிர்வாகத்திற்குக் கஷ்டம் ஏற்படுமே என்று பெரியார் சிறிது தயங்கிக் கொண்டிருந்த வேளையில், சேலம் மாநாட்டுத் தீர்மானத்தால் பெரியாரிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த நண்பர்களான பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன், விருது நகர் வி.வி. ராமசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், கி.ஆ.பெ. விசுவநாதம், ஜே.எஸ்.கண்ணப்பர், சாமி. சிதம்பரனார், எஸ்.இராமநாதன், வை.சு. சண்முகம் ஆகியோர் 1945-ல் சுயமரியாதைச் சங்கம் (செல்ஃப் ரெஸ்பெக்ட் லீக்) என்பதாக ஒன்றை ரிஜிஸ்டர் செய்துவிட்டனர்.

பின்னர், 1948-49 ஆண்டு வாக்கில், மீண்டும் ஓர் ஏற்பாடு செய்யத் திட்டமிடும்போது, அதில் தங்கள் பெயர் இருக்காது என்று கருதிய சிலர், ஏதோ சதி செய்வதாகப் பெரியார் யூகித்தார். அதன் விளைவுதான், அவசரத்தில் ஸ்தாபனத்தைப் பதிவு செய்வதைக் காட்டிலும், ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே மணியம்மையார் திருமணத்தைப் பெரியார் முடிக்க வேண்டியதாயிற்று. ஆகவே 1952ல் வசதியான சூழ்நிலை வந்து விட்டதாகக் கருதியதால் பெரியார் திருச்சியில் 22.9.1952 அன்று பதிவு செய்தார்.

ஸ்தாபனத்தின் பெயர் பெரியார் செல்ஃப் ரெஸ்பெக்ட் பிராப்பகண்டாஇன்ஸ்டிடியூஷன் என்பதாகும். புதிய  மெமோரண்டத்தின் படி ஆயுள்கால உறுப்பினர்கள்:- ஈ. வெ. ராமசாமி, தி.பொ. வேதாசலம், ஈ.வெ.ரா.மணியம்மையார், ஏ.என். நரசிம்மன் (ஆனைமலை), ஈ. திருநாவுக்கரசு (வேலூர்); தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக சபை உறுப்பினர்கள்:- எஸ்.குருசாமி, வி. வீராசாமி, தஞ்சை ஆர். சொக்கப்பா மற்றும் ஐந்து பேர்:- ஆனைமலை ஏ.சி. ராமகிருஷ்ணம்மாள், நாகரசம்பட்டி, விசாலாட்சி அம்மாள். நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம், திருச்சி வி. ராமச்சந்திரன், திருச்சி எம்.எஸ் சுந்தரம், ஸ்தாபன சொத்து 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை; ஆண்டு வருமானம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை,

பெரியாருடைய வாழ்க்கையில் ஈரோடு, திருச்சி சென்னை தவிர, ஏதாவது வேறொரு ஊருக்கு அவர் அதிகமான தடவைகள் போயிருக்கிறார் என்றால், அந்தச் சிற்றூர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டிதான்! 1967-ல் அண்ணா முதல்வராகி அங்கு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது பெரியார், இதுவரையில் இது என்னுடைய ஊர். இனி இது உங்களுடைய ஊர் என்றே கூறினார். சேனைத் தலைவர் எனப்படும் சிறுபான்மைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்த மிகப் பெரிய சுற்றமுள்ள ஒரு குடும்பமே அங்கு தன்னைத் தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதில் சிறந்த என்.வி. சுந்தரம் மூத்த சகோதரர். இவர் தங்கை என்.வி, விசாலாட்சி அம்மாள், இயக்கத்தின் சகல நடவடிக்கைகளிலும் பங்குபெற்றவர். சுந்தரம் அவர்களின் மூத்தமகன், 8.10.1926-ல் பிறந்த சம்பந்தம்.

கே. ராஜாராமும் இவரும் ஒன்றாக அ.ஆ. படிக்கத் தொடங்கி, சேலம் கல்லூரி வரை சென்றவர்கள். இயக்கத்தில் வெளியே தெரியக்கூடிய பொறுப்பு என்றால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரஸ்தாபனத்தின் உறுப்பினர் 1949 முதல் இன்று வரை, “விடுதலை“ மேனேஜர் 1.11.1970 முதல் இன்றுவரை. ஆனால் தன் பெயரை வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியாரின் நிழலாக எப்போதும் உடனிருந்தவர். முக்கியமாகப் பெரியார், மருத்துவ மனைகளில் உடல் நலிவுற்றிருக்கும் போது, இவர் கட்டாயம் அங்கிருப்பார்.

பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு வகையினர், பேச்சையும் எழுத்தையும் பார்த்துக் கேட்டுப் படித்துப் புரிந்து கொள்பவர் பலர். ஆனால் அவரது ஒவ்வோர் அங்க அசைவு அல்லது முக்கல் முனகல் போன்றவைகளுக்கும் பார்வைக்கும் பொருள் புரிந்து செயல்படுவோர் மிகமிகச் சிலர்; அந்த சிலரிலும் சிறப்பானவர் இந்தச் சம்பந்தம். அற்புதமான நினைவாற்றல் இவரது தனித்திறன். பெரியார்  சம்பந்தப்பட்ட கழகக் காரியங்களில் இவரறியாதது ஏதுமில்லை . இன்றைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பல காரியங்களை இயக்கி வருகின்ற சூத்திரதாரி இவரென்பதை நெருங்கிப் பழகிய சிலர் நன்கறிவார்கள். அதனால் வேறுவகையில் பாதிக்கப்பட்ட சிலருக்கு இவரைக் கண்டால் வெறுப்பு!

நான்கு பெண்மக்களுக்குத் தந்தை. விபத்தில் இடுப்பில் ஏற்பட்ட ஊனம், அதிகம் நடமாடமுடியாத நிலை, எனினும் ஊக்கம் குறைவதில்லை. நண்பர்களும் நல்லுரை நாடுவோரும் ஏராளம். சுற்றம் பெரிதும் கற்றறிந்தார் கூட்டமே!

பெரியார் தொண்டராக மட்டுமில்லாமல், மணியம்மையாருடைய காலத்திலும், இளையவரான வீரமணி காலத்திலும் தனது பணிகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, இனித் திராவிடர் கழகம் இயங்காது, என விஷமிகள் பிரச்சாரம் செய்தனராம். இதற்குப் பெரியார் அரியதோர் உதாரணம் கூறினார்; “துணியில் ஒன்று நீட்ட நூல்; மற்றொன்று குறுக்குநூல்; இரண்டுமிருந்தால்தான் துணியென்று பேர். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் திராவிடர் கழகம். இறுதி இலட்சியத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. சுயமரியாதைக் கொள்கைகளைக் கொண்டிராத தனித்திராவிட ஆட்சியைச் சுயமரியாதைக்காரர்கள் ஏற்க மாட்டார்கள். வைதிகத்திலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிய தனித்திராவிட ஆட்சியைத் திராவிடர் கழகத்தார் விரும்பமாட்டார்கள்.

திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படும் அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கத்துக்கு வேலை இருக்கிறது! சுய மரியாதை இயக்கம் அரசியல் நாற்றம் இல்லாதது. சர்க்கார் ஊழியர் உள்ளிட்ட எவரும் இதில் கலந்து கொள்ளலாம். இது திராவிடர் கழகத்துக்கு உற்ற துணையாக இருந்து வரும். இதிலுள்ள உறுப்பினர் யாவரும் திராவிடர் கழகத்திலும் உறுப்பினராயிருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சுயமரியாதைக் கொள்கைகளைப் பிடிக்காத சிலர் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தார்களே தவிரத், திராவிடர் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இருப்பவர்கள், சுயமரியாதைக் கொள்கைகளை அலட்சியப் படுத்தாததால்தான், சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரத்தைக் திராவிடர் கழக மேடைகளிலேயே செய்து வந்தார்கள்” என்றார்.

பெரியாரின் அரிய இந்த விளக்கத்துக்குப் பிறகு விஷமிகள் வாயடைத்துப் போயிற்று. 1953-ஆம் ஆண்டுத் துவக்கத்தில்,  பெரியாருக்குச் சிறிது உடல் நலமில்லை. எல்லாம் இரண்டொரு நாள்தான். சென்னை பெரம்பூரில், 1953-ஜனவரி இரண்டாம் நாள், தென்பகுதி ரயில்வே மென் யூனியனைத் தொடங்கிவைத்தார். எஸ், ராகவானந்தம், வி.வீராசாமி, என்.ஜீவரத்தினம் உடன் கலந்து கொண்டனர். ஆந்திர மாகாணம் சென்னையிலிருந்து பிரிந்து போகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. சென்னை மாநகரம் யாருக்கு என்ற வினாக்குறி விசுவரூபமெடுத்து நின்ற நேரம். புகழ் வாய்ந்த சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கம் பெரியாரை அழைத்து, 5.1.53 அன்று, ஆந்திரப்பிரிவிளை குறித்து அவர் கருத்தைப் பேசுமாறு வேண்டிற்று. ஆந்திரப் பிரிவினை பற்றித் திராவிடர் கழக மத்தியக் கமிட்டி 11-ஆம் நாள் கூடிக் கலந்து பேசியது. 12-ஆம் நாள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் பேசும்போது, அந்நியர் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தவிர்க்கவே தாம் தனிதாடு கேட்பதாகப் பெரியார் விரிவுரை நிகழ்த்தினார். பொங்கல் விழாச் செய்தியாக, மக்கள் எல்லாரும் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், மதச்சின்னங்களான நெற்றிக்குறி இடுதலை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பெரியார் அன்பும் கனிவும் பொங்கிடத் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பெரியார் சுற்றுப் பயணங்களில், குடி அரசுப் பதிப்பக வெளியீடுகளுடன் திருக்குறள் மலிவுப் பதிப்பும் கிடைக்குமென்ற விளம்பரங்கள் இப்போதெல்லாம் “விடுதலை” நாளேட்டில் வெளிவந்தன. போலீஸ்காரர்கள் சங்கம் அமைத்ததை முதலமைச்சர் ராஜாஜி விரும்பவில்லை. கடுமையான அடக்குமுறை நடவடிக்கை எடுத்து, அதைக்கலைக்குமாறு செய்துவிட்டார். போலீசாரே அடி உதை வாங்கிய நிலைமையை அன்று நாடு கண்டது. பெரியாருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படலாம் என, மந்திரிசபை அமைத்திருந்த ஓர் ஆராய்ச்சிக்குழு அறிவித்திருந்தது. முந்திய அமைச்சரவையின் இந்த ஏற்பாட்டை ஆச்சாரியார் ஒழித்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வடிகட்டும் பன்னாடை முறை (செலக்ஷன் தேர்வு) முந்திய அமைச்சரவையால் நிறுத்தப்பட்டதை, ஆச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்தார். சலவைத் தொழிலாளர் தமது குலத் தொழிலையே செய்து வரவேண்டும் என்றார். மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில், பார்ப்பனரல்லாத மாணாக்கர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப், பார்ப்பன மாணவர்க்கே தைரியமாய் அளித்தார். இலஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். பார்ப்பன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பதவி உயர்வு தந்தும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை அழுத்தி வைத்தும், ஆச்சாரியார் தமது இனப்பற்றைச் காட்டினார். இவற்றையெல்லாம் “விடுதலை” ஏடு வெளிப்படுத்திட வகை செய்தார் பெரியார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு.  சர்.சி.பி. ராமசாமி அய்யர் துணைவேந்தராக நியமனம் பெறுவதையும் 16.1.53-ல் பெரியார் கண்டித்தார்.

சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் பெரியாருக்கு நல்ல வரவேற்பு: தேநீர் விருந்து; பெரியாரின் கருத்துரை கேட்க மக்கள் திரண்டனர். மணியம்மையார் வயிற்று நோயினால் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் நர்சிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டு, ஓர் அறுவை சிகிச்சை மூலம் கட்டி ஒன்று அகற்றப்பட 26.1.53 முதல் இருவாரங்கள் தங்கியிருந்தார். பெரியார் தனியே கூட்டங்களுக்குச் சென்றுவர நேர்ந்தது! இந்த நிலையிலும், ஜனவரி 26 துக்கநாள் என்பதை நினைவூட்டப் பெரியார் மறக்கவில்லை. நாடகமும் சினிமாவும் பொதுமக்கள் வாழ்வில் பெருமளவுக்கு ஊடுருவி, ஒழுக்கத்தையும் முன்னேற்றத்தையும் கெடுக்கின்றன என்ற முறையில் பெரியார் 30.1.53 அன்று “விடுதலை”யில் கட்டுரை தீட்டினார். அதேபோல் 4.2.53 அன்று “புரட்டு! இமாலயப் புரட்டு! அரசியலை மக்கள் முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை. முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். அதுதான் ஜனநாயகம்! என்ன சொல்லுகிறீர்கள்? ஈ.வெ.ரா.” - என்ற ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டார். 1.2.53 சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில், சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டார் பெரியார். மொழிவாரிப் பிரிவினை என்பது சுத்த சுயநலத்தின் அடிப்படையில் பிறந்ததே! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் யாவும் ஒரு மொழியே! என்றார் பெரியார். இந்தக் கூட்டத்தில் டி.கே. சண்முகம், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற நடிகர்களும் பங்கேற்றனர்.

1946ல் ராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முதலாகத் கதாநாயக நடிகர் எம்.ஜி. ராம்சந்தர், வசனகர்த்தா மு.கருணாநிதி. இருவரும் நண்பர்கள். 1953-ல் எம்.ஜி.ஆர். புரட்சி நடிகராகிக் கலைஞரால் தி.மு.கழத்தில் சேர்க்கப்பட்டார். வீரசாகசம் புரிதல், பண்பாளராக நடித்தல் ஆகிய புதிய உத்திகளால் பெருமளவு மக்களைத் தம் ஆதரவாளராக்கி வைத்துக் கொண்டார். 1967, 71. இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். 1972-ல் கழகத்தை நீங்கி அண்ணா தி.மு.க. தொடங்கினார். தி.மு.க.வில் வாய்ப்புக் கிட்டாதென எண்ணியோர் அங்கு விரைந்தனர். தாய்க்கழகத்தை அழித்திடும் நண்டு சிப்பி வேய் கதலிபோல் அ.இ.அ.தி.மு.க. தோன்றி 1971-ல் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிட மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக முதல்வரானார். பெரியார் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் மாவட்டம், ஒலி ஒளி நாடகம், விழா முதலியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.


குடந்தைக் கல்லூரியில் பார்ப்பன பிரின்சிபாலின் அட்டூழியங்களையும், வாஞ்சூகமிஷன் சென்னையைப் பொதுத் தலைநகராக்கலாம் என்று பரிந்துரை செய்த அக்கிரமத்தையும், காமராசருக்குக் காங்கிரஸ் மத்தியக் காரியக் கமிட்டியில் இடந்தராத அநீதியையும், முதல் தமிழராசு வி.என். சுப்பராயன் சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டதையும், இங்கிருந்த 69 ஐ.சி.எஸ். அதிகாரிகளில் 44 பார்ப்பனர், 6 கிறிஸ்துவர், 2 வெள்ளையர், 1 வெளிமாகாணத்தார் போகப் பார்ப்பனல்லாதார் 4 பேர் என்ற கொடுமையையும், 29 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 19 பார்ப்பனர், 3 மலையாளி, 1 கிறிஸ்துவர், தமிழரும் மற்றோரும் சேர்ந்து 5 பேர்தான் என்ற நிலைமையையும் “விடுதலை” வெளிச்சம் போட்டுக் காட்டியது. 16.2.53-ல் பெரியாரும், எம். பக்தவத்சலமும் தமிழக உரிமைப் பாதுகாப்புக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

திருச்சியில் 15.2.53 அன்று நடந்த திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், 22-ந் தேதியன்று வாஞ்சூ அறிக்கைக் கண்டனநாள் கொண்டாடி, முழுக்கடையடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்திட முடிவெடுக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாதுக்கு எஸ். குருசாமி தலைமையில் கருப்புக்கொடி பிடிப்பதென்றும், பெரியார் மேற்பார்வையிடுவதென்றும் முடிவு. இம்மாதிரிச் சிக்கல்களுக்குக் காரணமே பிரதமர் நேருதான் என்றும், விருந்தாளி சர்க்கார் (ஆந்திரா) சென்னையில் தங்கவேண்டாம் என்றும் பெரியார் சாடினார். அன்றைய தினம் (22.2.53) டபிள்யூ. பி.ஏ. சவுந்தர பாண்டியனார் மறைந்து போனார். பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு, அனுதாபத் தந்தியை அன்னாரின் குடும்பத்துக்கு அனுப்பினர்.

1947-ல் சுதந்திரத் தமிழரசு கேட்கத் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. 1953-ல் வெளியார் சுரண்டலற்ற தமிழகம் அமைந்தால் போதும் என்கிற அளவுக்குத் தமது கொள்கையைச் சுருக்கிக் கொண்ட போதிலும்; அவர் காங்கிரசில் இருந்து கொண்டே, பிரச்னைக்குரிய விஷயங்களைச் சொல்கிறார் என்று கருதி, அவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்கக், காங்கிரஸ் மேலிடம் அனுமதி மறுத்தது. 3.3.53 அன்று மதுரையில் பேசிய முதலமைச்சர் ராஜாஜி, பெரியார் மிகுந்த நுண்ணறிவு படைத்தவர்; பொதுத் தொண்டும் தன்னலமற்ற தன்மையுமே எங்களிருவரையும் பிணைத்தது என்று பெரியாரைப் பாராட்டினார். கவர்னர் ஸ்ரீ பிரகாசா, “திராவிடர் கழகம் இந்தியை எதிர்த்தாலும் அதில் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன். தவறான கொள்கைக்கு இடைவிடாத உழைப்பை வீணாக்குகிறார்களே என அனுதாபப்படுகிறேன்” என்றார். சென்னை சட்ட மன்றத்தில், ஏ. கோவிந்தசாமி, திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டுமெனக் கோரும் உத்தியோகப் பற்றற்ற தனியார் தீர்மானம்  கொண்டு வந்தார். சோவியத் தலைவர் ஸ்டாலின், 1953 மார்ச் 6-ஆம் நாள் மறைந்த போது, “இமயமலை சாய்ந்ததா?” என்று வினவிப் பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைப் புலப்படுத்தினார். உலகப் பெரியார்களில் இவர்தான் கடைசிப் பெரியார் என்றும் அறுதியிட்டுக் கூறினார். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை தோழர் எஸ். ஆர். சாமி மறைந்ததற்கு மிகவும் மனம் வருந்திக், கொள்கை வீரரான அவர் அநாதரவாக விட்டுச் சென்ற குடும்பத்திற்கு உதவி நிதி திரட்ட வேண்டுகோள் விடுத்துத், தாம் 100 ரூபாய் தந்து வழிகாட்டினார். அதே போலத் தமது நெருங்கிய சகாவும் பகுத்தறிவுப் பேராசானுமாகிய கைவல்யம் 22.4.53-ல் மறைந்தபோது தலையங்கம் எழுதி “விடுதலை” வாயிலாக அங்கலாய்த்தார். கோவையில் 6.5.53-ல், சர்.ஆர்.கே. சண்முகம் மறைவினால் மிகுந்த துயருற்று, அனுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டார் பெரியார்.

சென்னையில் 23.3.53 அன்று நடைபெற்ற சிறப்பான சாதி ஒழிப்பு மாநாட்டில், பெரியாருடன், காமராசர், டாக்டர் சுப்பராயன், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கலந்து கொண்டனர். பெரியார் பெங்களூர், புதுச்சேரி முதலிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்று வந்தார். நாடெங்கும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் -இவை நடத்திய கூட்டம், மாநாடுகளில் பங்கேற்றார். திருச்சி பெரியார் மாளிகையில், பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி துவங்கினார். “விடுதலை”யில் பக்தியைப் பரப்பிடவே இசை பயன்படுத்தப்படுவதைத் கண்டித்தும், திராவிடக் கல்வி ஓடையில் ஆரிய முதலைகளின் அட்டகாசத்தை வெளிப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டார். டெல்லியில் பெரிய செயலாளர்களாக இருந்த ஐ.சி எஸ். பார்ப்பன அதிகாரிகளான எஸ். ஏ. வெங்கட்ராமன், எஸ். ஒய். கிருஷ்ணசாமி ஆகியோர் மீது ஊழல் குற்றம் சுமத்தி, வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுகிறவரை “விடுதலை” ஓயவில்லை . நினைவூட்டி வந்தது! 5.5.53 திருச்சியில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், தனக்கும் பெரியாருக்கும் வெளியாரை நம்பிப் பிழைப்பது பிடிக்காது என்றார். 25.4.53 லால்குடியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் நடிகர் சிவாஜிகணேசன் கடைசியாகவும், நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதன் முறையாகவும் பங்கேற்றனர்.

ஈரோட்டிலிருந்த சில பழைய கட்டடங்களை விற்று விட்டுப், புதிதாக ஒன்று நகரமன்றமாக (Town I fall) அமைக்க விரும்பிப், பெரியார், சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் அறிவிப்புத் தந்திருந்தார்.

1952-ல் கொல்லை வழியாக ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார். தமது வழக்கமான, சூத்திரர் கல்வி வளர்ச்சியில் கைவைக்கும்  வேலையை, ஆரம்பித்தார். 6000 கிராமப்புறப் பள்ளிக்கூடங்களை மூடுமாறு ஆணையிட்டார். மீதமிருந்த பள்ளிகளிலும், பாதி நேரடி படிப்பு மீதி நேரம் பிள்ளைகள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய, அதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேறுபாடு மறந்து, இதனைக் கண்டித்தனர். காமராசரே எதிர்த்தார். காங்கிரசிலிருந்த தமிழர்களும், பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் எதிர்த்தன. குல்லுகபட்டரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நாடே கொதித்துக் குமுறிக் கிளர்ந்தெழுந்தது. ஆச்சாரியார் மூர்க்கத்தனமாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் குலக்கல்வி எதிர்ப்பு முனையை உருவாக்கிற்று. சட்ட மன்றம் நடந்த 15 நாளும் சென்னையில் அறப்போர் மறியலை நடத்திற்று.

“வருணாசிரம முறையை ஜனநாயகத்தின் பேரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக 27.5.53 அன்று கணபதி உருவப் பொம்மையை மாலை 6.30 மணிக்குத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கிவிடுங்கள். புத்தர் விழாக் கொண்டாடிப் பிள்ளையாரைச் சரியாக உடையுங்கள். ஆச்சாரியாரே மாறிவிடுவார்”- என்று பெரியார் தம்முடைய போர்ப் பிரகடனத்தை அறிவித்தார். பெரியார் திருச்சியில் பிள்ளையாரைத் தாமே உடைப்பதாக முடிவெடுத்தார். இதற்குள் பெரியாருக்குக் கொடும்பாவி கொளுத்திடவும், அவர் உருவத்தை உடைக்கவும் சில மாற்றார் முயன்ற போது, பெரியார் தாமே முன்வந்து, “என் படமும், அதைக் கொளுத்தப் பணமும் நானே தருகிறேன், வாருங்கள்”. என்று மாற்றாரை மனமுவந்து அழைத்தார். குன்றக்குடி அடிகளார் தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தார்; கணபதி உருவம் கல்தானே? உடைப்பதில் தவறில்லை என்றார். ஆனாலும் கயவர்கள் சும்மாயிருப்பார்களா? காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். திருச்சியில் பெரியார் மாளிகையைக் கொளுத்த வந்த ஒருவன் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டான். இதனால் பெரியார் மாளிகையை இன்ஷ்யூர் செய்யும் ஒரு நன்மைதான் விளைந்தது! சென்னையில் நிரம்ப எண்ணிக்கையுள்ள கழகத் தோழர்கள் தாக்கப்பட்டு இரத்தக் காயமுற்றனர். அதனால் அடுத்து நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் “27ந் தேதி இரத்தத் துளிகள்”என்போர் பார்ப்பானே வெளியேறு! சி.ஆர். ஆட்சி ஒழிக! என முழக்கமிட்டு வந்தனர். திருத்தணியிலும் தமிழர்மீது தடியடி தர்பார் நடைபெற்றது

மாயூரம் வட்டம் நடுத்திட்டு என்ற சிற்றூரில் ஒரு சைவக்குடும்பத்தில் சீனிவாசபிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதியரின் இளைய பிள்ளை அரங்கநாதன், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராகச் சேர்ந்து பண்டார சந்நிதியின் அருள் நோக்கால், தனது

திறமை, புலமை, நேர்மைப் பண்புகளின் உயர்வால், கந்தசுவாமித் தம்பிரான் என்னும் துறவியானார். 1919-ல் தெய்வசிகாமணி அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற பெயரோடு குன்றக்குடி மடத்தின் இளைய பட்டம் சூட்டப்பெற்றார். 1952-ல் மகா சந்நிதானமாக உயர்ந்தார். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து, இந்த நூற்றாண்டுக்கேற்ப மதவாதிகளைச் சீர்திருத்த, எண்ணி அருள்நெறித்திருக் கூட்டம் அமைத்தார். பின்னர் தெய்வீகப் பேரவையும் நிறுவினார். சம்பிரதாயத்தை முறியடித்து. இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோசைனா, இந்தோனேசியா, சோவியத் ருஷ்யா முதலான வெளிநாடுகட்கு விமானப் பயணம் செய்தார். நேரு. ராஜாஜி போன்றாரைக் குன்றக்குடி மடத்துக்கு வருகை தரச்செய்தார். பறம்பு மலையில் ஆண்டுதோறும் பாரிவிழா நடத்துவார்.

பெரியார், அண்ணா , கலைஞர் மூவரிடத்தும் அளவற்ற அன்பு பூண்டிருந்தவர். கலைஞராட்சியில் மேலவை உறுப்பினராகச் சட்ட மன்றத்தில் அமர்த்தப் பெற்றார். தமிழில் அர்ச்சனைத் திட்டத்தின் கர்த்தா இவரே. இந்தியாவில் தமிழர் வாழ்வு சிதையும் என உணர்ந்தவர்; உணர்த்தியவர்.

பெரியாரும் குன்றக்குடி அடிகளாரிடம் மிகுந்த பிரியமும் மதிப்பும் கொண்டிருந்தார்; மரியாதையுடன் மகா சந்நிதானம் என்றே அழைப்பார். இவரும் அஞ்சாமல் கழகத்தாருடன் பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். எந்த ஆதீனகர்த்தரிடமும் காணப்படாத முற்போக்கும் புதுமையும் துணிவும் தெளிவும் இவரிடம் காணப்படுவதால் குன்றக்குடி அடிகளாரைப் புரட்சித் துறவி என நாடு அழைக்கிறது.

13.6.53 திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடிற்று. அக்கிரகார ஆரம்பக்கல்வி எதிர்ப்புக்காக, ஜூலை 14 முதல் சட்டசபைமுன் மறியல் செய்வது, வி.வீராசாமி எம்.பி. இதற்குத் தலைமை ஏற்பது, 20-ந்தேதி முதல் வெளியூர்களிலும் மறியல் தொடங்குவது - என்று முதல் தீர்மானம். அடுத்து, வழக்கம்போல் ஆகஸ்டு 1-ல் ரயில் நிலைய இந்தி எழுத்து அழிப்பு, தமிழரின் எல்லைப் பாதுகாப்புக்காகப் போராடிய ம.பொ. சிவஞானத்தை நேரு பண்டிதர் முட்டாள் எனத் தாக்கியதைத் திராவிடர்கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழர்களை இழிவுபடுத்திய செயலாக எடுத்துக்கொண்டன. தி.மு.க. இதனாலேயே ஜூலை 14-ல் ரயில் நிறுத்தப் போராட்டம் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தொடங்கிற்று. தி.மு.க. நாளேடு “நம்நாடு” 15.6.53 அன்று துவக்கப்பெற்றது. 

30.6.53 காலை 9 மணியளவில் 73 வயதடைந்த முன்னாள் அமைச்சரும் வகுப்புரிமைக் காவலருமான எஸ்.முத்தையா முதலியார் தஞ்சை மாவட்டத்தில் தனது கிராமத்தில் மரணமடைந்த செய்தி பெரியாரைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிற்று இழப்பை வெகுவாக உணர்ந்து வருந்தினார் பெரியார்.

14.7.53 அன்று ஆச்சாரியாரின் அடக்குமுறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடியது. முதல் நாள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் முக்கிய ஐவராகிய அண்ணா , நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 14-ம் நாள் சென்னையில் குருசாமி தலைமையில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். 16-ம் நாள் கணக்கின்படித் தமிழகமெங்கும் பெரியாரின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 1700 பேர்; மருத்துவமனையில் 50 பேர்; அடக்கு முறை துப்பாக்கிக் குண்டு தடியடிக்குப் பலி 10 பேர்; கை கால் உறுப்பு இழந்தோர் 10 பேர். 20.7.53 மறியலில் திராவிடர் கழகத் தொண்டர்கள் 2450 பேர் கைதாயினர். ஆங்காங்கு நடைபெற்ற (தூத்துக்குடி கல்லக்குடி) துப்பாக்கிப் பிரயோகங்களைக் கண்டிக்க 24.7.53 அன்று நாடெங்கும் கடையடைப்பும் வேலை நிறுத்தமும் கடைப்பிடிக்க வேண்டினார் பெரியார், சென்னையில் ஊர்வலமும் பொதுக் கூட்டமும் பெரியார் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற்றன. முதல்வர் வீட்டு முன் மறியல் தொடர்ந்தது. அண்ணா குழுவினர் ஐவரும் ஜாமீனில் 24-ம் நாள் வெளிவந்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 500ரூ. அபராதம் கட்டமறுத்து ஐவரும் 3 மாதச் சிறைதண்டனை ஏற்றனர். 1.9.1953-ல் கலைஞர் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுத் திருச்சி சிறைக்கு ஏகினார்.

ஆகஸ்டு 1-ஆம் நாள் ரயில் நிலைய இந்தி அழிப்புப் போர். தொண்டர்களைப் பெரியார் எச்சரித்தார். சென்ற ஆண்டு போலவே செய்ய வேண்டும். அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று மட்டுமே முழக்கமிட வேண்டும். ஜாமீனில் யாரும் வெளிவரக்கூடாது என்றும் தாம் சேலத்தில் இந்தி அழிப்பதாகவும் பெரியார் அறிவித்தார். அத்துடன், தொண்டர்களைச் சந்திக்கத் தாம் ரயில் மார்க்கமாக 28, 29 நாட்களில் சுற்றுப் பயணம் வருவதாகவும், ஆங்காங்கு தோழர்கள் வந்து ரயில் நிலையத்தில் தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் பெரியார் கூறியிருந்தார். ஆகஸ்டு 1 போராட்டம் அமைதியாகவும் வெற்றியுடனும் நடைபெற்றதெனினும், ஜூலை 14, 20 ஆகிய இருநாட்களிலும் திராவிடர்கழகம் தொண்டர்கள் 5,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 3,000 பேர் விடப்பட்டதாகவும், 1,500 பேர் தண்டிக்கப்பட்டதாகவும், 500பேர்  இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் 12.8.53 “விடுதலை” கூறியது. பெரியார் ஈரலில் (லிவரில்) ஏதோ கெடுதல் என்று மருத்துவர்கள் கூற்றின்படி ஓய்வு எடுத்து 5,6 நாள் சிகிச்சை பெற நேர்ந்தது. எனினும், ஆகஸ்டு 15 துக்கநாள் அனுசரிக்கும் வழக்கம் அந்த ஆண்டும் கைவிடப்படவில்லை.

திருச்சி வீரபத்திர செட்டியார் என்ற பெயர் 1953-ம் ஆண்டு பத்திரிகைகளில் மிகவும் பிரபலம். பெரியார், பிள்ளையாரை உடைத்ததற்காக அவர்மீது 195, 195A, பிரிவுகளின் கீழ், இவர் திருச்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 13.8.53-ல் வழக்குப் போட்டார். அது செஷன்ஸ் வரை சென்று 13.1.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது, அத்துடன் சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் சென்று 13.10.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. (இம்மூன்று நீதிமன்றங்களிலும் தேதி13.)

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிப் பதிவு செய்து கொள்ளப்படவேண்டும்; இல்லாவிட்டால் செல்லாது என்று 1953 ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. பெரியார் அந்தத் துறையிலும் தொடர்ந்து போராட வேண்டியதாயிற்று. இந்திய வரலாற்றில் 1953 செப்டம்பர் 3-ஆம் நாள் ஒரு சிறப்புமிக்க மறப்பதற்கரிய திருநாள்! என்ன? டெல்லி மாநிலங்கள் அவையில், டாக்டர் அம்பேத்கார், தனது இனத்தாரிடம், உயர்சாதி இந்துக்கள் தொடர்ந்து இப்படியே நடந்துவந்தால், தானே அரசியல் சட்டத்தைக் கொளுத்தப்போவதாக அறிவித்தார்! இதற்கு ஏழெட்டுத் திங்களுக்கு முன்னரே பெரியார் இவ்வாறு கூறிவிட்டார். 17.9.53 அன்று பெரியாரின் 75-வது பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடுமாறு, திராவிடர்கழகத்தின் நிர்வாகத் தலைவர் தி.பொ. வேதாசலம் வேண்டுகோள் விடுத்தார். மாயூரத்தில் 6.9.53 அன்று திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்திய சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானத்தை, யாரோ தாக்கிவிட்டார்களாம்.

சென்னையில் தமிழ்ப்பெரியார் திரு.வி. கல்யாண சுந்தரனார், திருவுருவப் படத்தினை 13.9.53 அன்று பெரியார் திறந்து வைத்துப் பலபடப் புகழ்ந்தார். 17-ந் தேதி ஈரோடு சென்றிருந்த போது, தமது 70-வது வயதில் அத்தமிழ்ப் பெரியார் மறைவுச் சேதி கேட்டுக், கதறித் துடித்துப் பதறிய பெரியார், உடனே புறப்பட்டு, மணியம்மையார். ஈ.வெ.கி. செல்வனுடன் சென்னை வந்தடைந்தார். 18-ந் தேதி “விடுதலை”யில் தமிழ்ப் பெரியார் மறைந்தார் என்று தலையங்கம் எழுதினார். நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அந்தோணிப்பிள்ளை போன்ற ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்களுடன் பெரியாரும் இடுகாட்டுக்கு நடந்து சென்றார். மதுரையில் 20.9.53 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பொன்மலையில் மிகச் சிறப்புடன் தென்பகுதி ரயில்வேக் தொழிலாளரின் முதலாம் ஆண்டு மாநாடுகள் 26, 27 தேதிகளில் நடைபெற்றபோது, பெரியார் மிகுந்த பெருமிதத்துடன் கலந்துகொண்டார்.

திருச்சியில் அக்டோபர் 2-ம் நாள் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் பேசும் போது பிள்ளையார் உடைப்புக்குப் பிறகு இப்போது கிருஷ்ண விக்கிரமும் உடைக்கப் போவதாகக் கூறிக் கிருஷ்ணனின் யோக்கியதை என்ன என்றும் பெரியார் விளக்கமுரைத்தார். பிள்ளையாரை உடைத்தபோது, பெரியாருக்கு மறுப்பாக, அப்போது எடுக்கப்பட்ட ஜெமினி அவ்வையார் திரைப்பட விளம்பரத்தில், நிறைய விநாயகர் உருவத்தை அச்சடித்து நாடெங்கும் ஒட்டினர். முதல்வரான ஆச்சாரியார் வேண்டுமென்றே இரண்டு முறை அந்தத் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றார். பெரியார் கிருஷ்ணன் பொம்மையையும் உடைப்பதாகச் சொன்னவுடன் திராவிட இயக்கங்களை “எறும்பும் மூட்டைப் பூச்சியும் போல் நசுக்கி விடுவேன்” என்பதாக ஆச்சாரியார் சூளுரைத்தார். (1967-ல் இவர் நிலை என்ன?) திராவிட ஆடுகள் மோதிக் கொள்ளும்போது சிந்தும் இரத்தத்தை ஆரிய நரியாகிய ஆச்சாரியார் வர்க்கம் நக்கிக் குடிப்பதாக “விடுதலை” கார்ட்டூன் வெளியிட்டது. உருவ வழிபாடு ஒழிப்புக் கழகம் என ஒன்றைத் திருச்சி மையத்தில் அமைத்துப் பேராசிரியர் சி. இலக்குவனார் அதன் பொறுப்பாளராக இருந்து, அதே பிரச்சாரத்தை நடத்திவருமாறு பெரியார் ஓர் ஏற்பாடு செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்டோபர் 10,11 தேதிகளில் நடைபெற்ற சுயமரியாதை, திராவிடர் கழக மாநாடுகள் சரித்திரப் புகழ் பெற்றுவிட்டன. இங்கு தான் பெரியார், “திராவிடத் தோழர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் தாக்குவதற்காக அல்ல; தற்காப்புக்காக” “பார்ப்பானே வெளியேறு; திராவிடனே தயாராயிரு” என்பது சுருக்கமான, சுருக்கென்று தைக்கும், உருக்கமான முழக்கம்! திராவிடர் கழகம், வியாதி வந்தபின் குணப்படுத்தும் வைத்திய இலாக்கா அல்ல, வியாதி தோன்றுவதற்கான மூலகாரணங்களைக் கண்டு பிடித்து, ஒழித்து, வியாதி பரவாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாகத் தடுக்கும் சுகாதார இலாக்காவாகும். என்று எல்லாருக்கும் புரிய வைத்தார் பெரியார்.

ஓமந்தூர் ராமசாமியார்கூட, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் தீங்கானது எனச் சுட்டிக் காட்டினார். ஆனால் நம்மவராகிய பி.டி. இராசன் “பார்ப்பனர் மேல் துவேஷமோ குரோதமோ எதற்கு?” என்பதாக உபதேசம் செய்தார். அதேபோல, ஆச்சாரியாரின் சீடராக நிதி மந்திரி சி. சுப்பிரமணியம், திராவிடர் கழகப் போக்கு சரியில்லை என, விஷயங்களைத் திரித்துக் கூறி, விஷமப் பிரசாரம் செய்தார். “விடுதலை” ஏடு இவற்றையெல்லாம் தக்க முறையில் எடுத்துக்காட்டியதோடு, ஆச்சாரியார் டெல்லி அமைச்சராக இருந்தபோது, 1947-ல் சப்ளை கைத்தொழில் இலாக்காவில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்திருந்ததையும் அம்பலப்படுத்தியது. கொலை வழக்கில் கம்யூனிஸ்டு பாலதண்டாயுதம் ஆயுள் தண்டனை பெற்றார். ஜில்லா போர்டுகளை ஒழிக்க அரசு திட்டமிட்டது. திருச்சியில் மாணவர் கழக மாநாட்டில் கடலூர் வீரமணியும் பட்டுக்கோட்டை அழகிரி மகன் துலிப்பும் பங்கேற்றனர். பெரியார் 8.11.53 அன்று ஈரோடு சண்முக வேலாயுதம் துவக்கிய ஈரோட்டுப் பாதை என்ற தமிழ் வார ஏட்டைத் தொடங்கி வைத்தார்.

“கண்ணீர்த் துளிகளின் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளால், பொதுமக்களுக்கு ஒரு விதமான அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு உண்மைகளை உணர்த்த வேண்டி ஆச்சாரியார் கல்வி எதிர்ப்பபுப் படை ஒன்று புறப்படும். 25 உறுப்பினர் கொண்ட இதற்குத் தலைவராக கி. இலக்குவனாரும், செயலாளராக டி.வி. டேவிசும் இருப்பார்கள்” என்று பெரியார் 13.11.53 அன்று அறிவித்தார். அடுத்து, திருச்சியில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து, டிசம்பர் 2, 3 தேதிகளில் மதுரையிலிருந்து ஒன்றும், ஈரோட்டிலிருந்து மற்றொன்றுமாக, ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படைகள் புறப்பட்டுச் சென்னை சென்றடையும் என்றார். திருச்சிக் குழுவுக்கு முதல் நாளே பெரியாருக்குக் கடுங்காய்ச்சல் கண்டது. 21.11.53 முதல் ஒருவாரம் திருச்சியில் தங்கிப் பார்த்தார். ஆனைமலை நரசிம்மன் உடனிருக்க, 28-ஆம் நாள் சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்ந்தார். அன்பர்கள் நிறைய வந்து, தந்தை பெரியாருக்குத் தொந்தரவு தரவேண்டாமென அறிக்கையும் வெளியிடப்பட்டது. கிட்னி எனும் மூத்திர கோசத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. எப்படியோ, யாராலோ, 30.11.53 அன்று (20 ஆண்டுகட்கு முன்னதாக) பெரியார் காலமாகிவிட்டார் என்ற வதந்தி விரைவாகப் பரவி, மருத்துவமனைக்கு ஏராளமானோர் படையெடுக்கத் தொடங்கினர். உண்மை தெரிய வந்த பின்னரே, மக்களுக்கு மன ஆறுதல் பிறந்தது. 7.12.53 அன்று மருத்துவமனையினின்றும் விடுவிக்கப்பட்டு, நேரே ஈரோடு சென்று ஓய்வெடுத்து, 19-ந் தேதிதான் பெரியார் சென்னை திரும்பினார். முன்னரே கழகப் பொதுச் செயலாளர் குருசாமி, பெரியாரை எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்துத் தொந்தரவு தரவேண்டாமென்றும்; கூட்டத்தில் தலைவர், இதர பேச்சாளர் யார் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டுமென்றும் அறிவித்தார்.

சட்ட சபையில் முதலமைச்சர் ஆச்சாரியாருக்கு எதிராக டாக்டர் வரதராசலு நாயுடு போர்க் கொடி உயர்த்திச், சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க ஆரம்பித்தபோது நேருபிரான் தலையிட்டு, டாக்டர் நாயுடுவைக் கண்டித்து, ஆச்சாரியாரைக் காப்பாற்றினார். ஆந்திரம் பிரிந்ததால் இனிச் சட்டமன்ற நடவடிக்கைகள் தமிழிலேயே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. ஆச்சாரியார் சட்டமன்றத்தில், இதுவரை நடந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட சம்மதம் உடையதாக்க முயற்சி எடுத்துள்ளதாகக் கூறி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்தால்தான் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டினார்.

1953 டிசம்பர் 20-ஆம் நாள் சென்னையில் நபிகள் நாயகம் பிறந்த தினவிழா. பெரியாரும் முதல் மந்திரி ராச கோபாலாச்சாரியாரும் கலந்து கொள்ளும் அதிசயத்தைக் காண, மக்கள் வெள்ளமாகத் திரண்டனர். மாலை 6 மணிக்குத் துவங்கும் கூட்டத்திற்குப் பெரியார் தமது வழக்கப்படி 5.30 மணிக்கே வந்துவிட்டார். முதல்வர் 6.20க்கு வந்தார். பெரியார் எழுந்து பணிவுடன் வணங்க, முதல்வரும் பதிலுக்கு வணங்க, இருவரும் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்தனர். அன்பார்ந்த எதிரிகளான நண்பர்களை ஒருங்கே கண்டு, நாடு வியந்தது! பெரியார் உடல் நலமில்லாதிருந்ததை அறிந்திருந்ததால், அடுத்த நாள், 21.12.53 காலை 9.30 மணிக்கு, முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றம் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று பெரியாரின் இல்லம் போந்து, நலம் விசாரித்து 45 நிமிட நேரம் தங்கியிருந்தார்! மணியம்மையாரிடமும் நலம் கேட்டறிந்தார்.

“ஒரு பெரியாரை நாம் கொண்டாடுவது ஏதோ பலன் கிடைக்கும் என்பதற்காக அல்ல. அவருக்கு அதனால் நன்மையும் இல்லை. அவருடைய போதனைகளைப் பின்பற்றுமாறும், அவருடைய நடத்தைகளைச் செயல்களை நம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்றுமாறும் மக்களுக்கு உணர்த்தவேயாகும். எந்த ஒரு கொள்கையும் உலகத்திலுள்ள எல்லாத் தரப்பு மக்களாலும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படுமாறு சொல்வது அரிது. ஆனால் நபி அவர்களின் உபதேசங்கள், கோட்பாடுகள், நடப்புகள் இவைகளில் பல எல்லாராலும் ஒப்புக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் தகுந்தவை. மறுக்க முடியாதவையாக இருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். என்னைப் பொறுத்தவரை நபி அவர்களை ஒரு மகான் என்று கருதுவதில்லை! மனிதத்தன்மை படைத்த சிறந்த மனிதனாகத்தான் கருதுகிறேன். ஒரு கடவுள் உண்டு, பல கடவுள் இல்லை என்று அவர் சொன்னாரே? இது உனக்கு ஏற்புடையதா? என்று கேட்டால் ஆயிரம் கடவுள்களைக் கட்டி அழுகின்ற நம் மக்களுக்கு இது . எவ்வளவோ மேல்; முதலில் இதை ஒப்புக் கொள்ளட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பேன். அடுத்து நபி அவர்கள் சொன்னது, மனித சமுதாயத்தில் உயர்வு தாழ்வு பேதமில்லை; அனைவரும் சமமான  தன்னை நோக்கியே தவிர, வேறு யாரை நோக்கியும் அல்ல என்றார் ஆச்சாரியார். அது நூற்றுக்கு நூறு மெய்தான் என்றார் பெரியாரும்.

50 ஆண்டுகட்கு முன் பெரியார், வீட்டைத் துறந்து, காசி வரை சென்றாரல்லவா? அதற்குக் காரணமே தந்தையார் வெங்கட்ட நாயக்கர் அவரைக் கோபித்துக் கொண்டதுதான்! தனது மானத்துக்கு இழுக்காக மகன் கைமாற்று வாங்கியதால் கோபம் கொண்டார். இராமசாமி ஏன் கடன் வாங்கினார்? ஈரோடு சிதம்பரனார் பூங்கா அருகில் இப்போதும் 30 ஏக்கர் பூமி மிகவும் மதிப்புள்ள சொத்தாக விளங்குகிறது. இது அப்போது 3000 ரூபாய்க்கு மலிவாக விலைக்கு வந்தது. இதை வாங்கிப் போடலாமா என்று கேட்டதற்குத் தந்தை பண விரயம் எனக் கூறி மறுத்தார். செல்வக் குமார முதலியார் என்பவரிடம் கடன்பெற்று. நிலத்தை வாங்கித் தந்தை பெயருக்கே சாசனம் செய்தார் இராமசாமி. இப்போது அந்தச் சொந்த இடத்திலேயே பிரம்மாண்டமான பந்தல் அமைத்து, ஆச்சாரியார் கல்வித் திட்ட மாநாடு 1954 சனவரி 24-ஆம் நாளும், புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடு 23-ஆம் நாளும் நடைபெற ஆவன செய்தார் பெரியார். ஈரோட்டில் மக்கள் வெள்ளமாய்த் திரண்டனர். புத்தர் மாநாட்டு வரவேற்புக் குழுவுக்குத் தலைவர் தி.பொ.வேதாசலம், செயலாளர் சேலம் கே.ராஜாராம். தலைமை ஏற்றிட சிலோனிலிருந்து புத்தர் கொள்கை வித்தகரான டாக்டர் ஜி.டி. மல்லலசேகராகவும், மாநாட்டைத் திறந்து வைக்க டாக்டர் அம்பேத்காரின் தளபதியான பி.என். ராஜ்போஜ் எம்.பி.யும் வந்தனர். 23.1.54 காலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வில்லுப் பாட்டும், இரவு எம்.ஆர். ராதாவின் நாடகமும், 24-ந் தேதி காலை ராதா தலைமையில் மாபெரும் ஊர்வலம். கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் குருசாமி, செயலாளர் டி.வி. டேவிஸ், மாநாட்டுக்குத் தலைமை தாங்கிட டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜமும், திறந்து வைத்திடத் தினத்தந்தி உரிமையாளர் சி.பா. ஆதித்தனும் வந்திருந்தனர். பெரியாரின் பேரூரை இரு நாட்களும்! ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த இளம் மாணவர்களில் 50 சதவீதமும், மாணவிகளில் 70 சதவீதமும் படிப்பை நிறுத்திவிட்ட மனம் பதறும் புள்ளி விவரத்தைப் பெரியார் வெளியிட்டார்.

“நமது கொள்கைதான் புத்தரின் கொள்கை என்று டாக்டர் மல்லலசேகராவே சொல்லிவிட்டார். உலக புத்த ஐக்கிய சங்கம் போன்ற 53 சங்கங்களின் தலைவர் அவர். நமது இந்திய சர்க்காரும் புத்தருடைய தர்ம சக்கரத்தைக் கொடியிலும், அசோக ஸ்தூபியை சின்னத்திலும் வைத்துள்ளது. புத்தர் பிறந்த நாள் அரசு விடுமுறை விடுகிறார்கள். ஆனால் இந்து மதத்துக்கு விரோதமாக பக்கர் சொன்னவைகளை ஏற்றுக் கொள்வார்களா? நாம்தான் எடுத்துக்காட்ட பிறவியே என்பது. நம்மில் சிலர்கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் நடப்பில் இல்லை! நபி அவர்களின் உபதேசம் அமுலில் இருக்கிறது. அடுத்து, விக்கிரக ஆராதனையைக் கண்டித்தார்; மேலும், தான் என்ன சொல்லியிருந்தாலும், தமது பகுத்தறிவு கொண்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தான் கடைசி நபி என்றார். நீங்கள் இது பற்றி எப்படி எண்ணினாலும், அவருக்குப் பிறகு யாருமே இவ்வளவு சிறந்த கருத்துகளைக் கூறவில்லை என்பதைத்தான் நான் சொல்ல முடியும்!”- என்று பெரியார் நபிகள் விழாவில் சொற்பொழிவாற்றினார்.

சுற்றுப் பயணப் பொதுக் கூட்டங்களில், பார்ப்பானே வெளியேறு என்ற தத்துவத்தைப் பெரியார் விளக்கினார். “வெள்ளைக்காரனாவது நம்மைத் தொடச் சம்மதித்த அந்நியன், இங்குள்ள அந்நியனாகிய பார்ப்பான் நம்மைத் தொட்டால் தீட்டு என்கிறானே! வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்ற என்னென்ன செய்தோமோ அப்படிப்பட்ட காரியங்களை இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்கும் செய்துதான் தீர வேண்டும். ஆனால் நாங்கள் முட்டாள்களல்ல; அவர்கள் செய்த காரியங்களைத் திருப்பிச் செய்ய தண்டவாளத்தைப் பிடுங்கினாலும் தந்திக் கம்பியை அறுத்தாலும், ரயிலைக் கவிழ்த்தாலும், தபாலாபீசைக் கொளுத்தினாலும் நமக்குத் தான் நட்டமே தவிரப் பார்ப்பானுக்கல்லவே! ஆச்சாரியாரே சொல்லிவிட்டார், இப்போது நடப்பது தேவாசுரப் போராட்டம் என்று காந்தியார் இவர்களை எவ்வளவோ உயரத்தில் தூக்கி நிறுத்தினாரே அவரையே ஒரு பார்ப்பான் சுட்டுத் தள்ளிவிட்டானே! இந்தப் பார்ப்பனர் இப்போது நாம் படிக்கவே கூடாதென்று சட்டம் கொண்டு வந்து விட்டாரே! ஆகவே இன உணர்வு பெறுங்கள். பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை எதிர்த்ததாக வரலாறே கிடையாது. ஆனால் நாமோ?

முதலில் இன்று நடைபெறும் புரோகித ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நேரு புரோகிதர் பரம்பரை, சென்னை மாகாண முதன் மந்திரி புராகிதரின் பேரர். இப்போது ஆந்திராவில் முதன் மந்திரியானவரும் புரோகிதரின் மகன். ஆகவே அரசியலிலும் சமுதாயத்திலும் “புரோகித ஆட்சி ஒழிய வேண்டும் என்பதற்குப் பொருள் ஒன்றுதான்! இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியாய் முப்படை வைத்திருந்தவன் இன்று எங்கே? இந்தியாவில் 562 சிற்றரசர்கள் வாழ்ந்தார்களே, இன்று அவர்களின் கிரீடங்கள் எங்கே? ஜமீன்தார்கள் ஒழிந்தார்கள். பணக்காரன் ஒழிக்கப்படுகிறான். ஆகையால், அன்னச் காவடிப் பார்ப்பான் நமக்கு எம்மாத்திரம்?” என்று பெரியார் வினாவிலேயே விளக்கங்கள் தந்தார். பெரியாரின் போராட்டம்  வேண்டியுள்ளது. அதாவது, “இன்றைய தினம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கடவுள் மத சாஸ்திர புராண இதிகாச ஒழிப்பே புத்தர் சொன்னவை ஆகும். எனவே நாம் புத்தர் மாநாடு நடத்துகிறோம்”– என்று பெரியார் விளக்கம் உரைத்தார். தொடர்ந்து பற்பல ஊர்களிலும் புத்தர் கொள்கை விளக்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பிப்ரவரி முதல் வாரத்தில் பெரியார் சில நாள் உடல் நலமின்றி ஓய்வில் இருந்தார்.

சென்னையில் ஒரு விழா நடத்திக் கோவை விஞ்ஞானி ஜி.டி.. நாயுடு தாம் கண்டுபிடித்த அருமையான அறிவியல் கருவிகளைத் தொழில் ரீதியாகப் பெருமளவில் தயாரிக்க மத்திய அரசு தடையாயிருப்பதால், அவற்றை வரிசையாக வைத்துச், சம்மட்டியால் தூள் தூளாக உடைத்து நொறுக்கினார். கடிகாரம், ரேடியோ போன்ற அரிய பொருள்கள் வீணாயின. பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். நாயுடு தமது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இப்படிச் செய்ததுதான் சரி என்று அண்ணா உள்படப் பலர் கருத்துரைத்தபோது, பெரியார் மாத்திரம் மாறுபட்டு, நாயுடு செய்தது முட்டாள்தனம் என்று உரைத்தார். இது நடந்தது 30.1.1954 அன்று. ஆனால், அடுத்த திங்கள் சட்டமன்ற மேலவைக்கு நடந்த ஒரு தேர்தலில் (எம்.எல்.சி) ஜி.டி. நாயுடு போட்டியிட்ட போது, அவருக்கே அனைவரும் ஆதரவு நல்கிட வேண்டுமெனப் பெரியார் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

மார்ச் மாதத் துவக்கத்திலும் பெரியாருக்கு உடல் நலங் குன்றியதேனும், சுற்றுப் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குத் தமக்கே உரிய தனித்த சிறப்பியல்பினுக்கேற்பத், தவறாமல், சங்கடத்துக்கிடையிலும் சென்றார். ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு இன்னும் மங்காமல் மறையாமல் தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்கும் எந்தப் போராட்டத்துக்கும் நான் தயார் என்று, தங்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டு, நூற்றுக்கணக்கான தோழர்கள் தந்தை பெரியாருக்குக் கடிதங்கள் அனுப்பிய வண்ணமிருந்தனர். மார்ச் 27, 28 தேதிகளில் நாகையில் நடைபெற்ற இயக்க மாநாடுகளில், தீர்மானம் ஒன்று நிறைவேற்றி; ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை ஒன்று நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து மறுநாளே புறப்படுவதென்றும், வழிநெடுகப் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை சென்றடைவதென்றும் திட்டமிடப்பட்டது.

மார்ச் மாதம் 30-ஆம் நாள் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண அரசியலிலிருந்து வீழ்த்தப்பட்டார். அன்றோடு அவர் வகித்த அரசுப் பதவி ஆட்டங்கண்டது. புதிய சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில், காமராசருக்கு 93 வாக்குகள். உடல் நலமில்லை என்ற போலிக்காரணங்காட்டி, எதிர்ப்பினைத் தாங்க இயலாமல் ஒதுங்கிய ஆச்சாரியாரின் சீடரான சி. சுப்பிரமணியம் பெற்ற வாக்குகள் 41. “பார்ப்பனர் தோற்றனர். திராவிடர் வென்றனர். திராவிடர் பெற்ற வெற்றி நிலையாக இருக்க ஆவன செய்ய வேண்டும்” என்றார் பெரியார். காமராசர் பெரியாரின் ஆதரவு கோரினார். கல்விச் சாலைகளிலும், அரசு அலுவல்களிலும் வகுப்பு வாரி உரிமையை அமுலாக்கம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார். எனவே, இனி ஆச்சாரியாரோ, அவர் தொண்டரடிப் பொடிகளோ முதலமைச்சராகாதவாறும் பார்த்துக் கொள்வதாகவும் காமராசர் கூறினார். இந்தச் சூழ்நிலையில் காமராசரை விட்டால் நல்ல தமிழர் ஒருவர் முதல்வராக வருவது சாத்தியமில்லாது போய்விடுமே என்று பெரியார் கவலைப்பட்டார். அதன் விளைவு 1954 ஏப்ரல் 13-ஆம் நாள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்ற குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார், காமராசருக்குத் தம் ஆதரவை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தார். முப்பதாண்டுகளாகத் தாம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஒருசிறிய மாறுதலைச் செய்து கொண்டார். காங்கிரஸ் ஆதரவு என்பதாகவே துவங்கியது. அதுகூடத் தமது வகுப்புரிமைக் கோரிக்கைக்குக் காமராசர் இணக்கம் தெரிவித்த அடிப்படையில்தான்!

தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உறுதியான தலைவரும், பெரியாரிடம், பேரன்பு பூண்டவரும், இரா. சொக்கப்பாலின் (அத்தையன்பர்) மாமனுமாகிய நெடும்பலம் என்.ஆர். சாமியப்பா மறைவு பெரியாருக்கு ஒரு பேரிழப்பாகும். (இரா. சொக்கப்பா, பேங்க் ஆஃப் தஞ்சாவூர், செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபன டிரஸ்டில் உறுப்பினராயிருந்தார். நெருக்கடி நிலையின் போது ராஜிநாமாச் செய்து விட்டார்.)

திருச்சி வே.ஆனைமுத்து பி.ஏ., கொள்கைப்பற்றும், நல்ல விஷய ஞானமும் உள்ள தொண்டர். பெரியார் இவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தார். இயக்கத்திற்கு இவர் ஆற்றிய மற்ற பணிகளைவிடச் சிறந்தது பெரியார் சிந்தனைகள் என்ற நூல் தொகுப்பே ஆகும். திருச்சி சிந்தனையாளர் கழகம் அமைத்து, அதன் சார்பில் இதனை வெளியிட்டார். இவருக்கு உறுதுணையாயிருந்தவர் நோபிள் பிரஸ் உரிமையாளரும், “பஞ்சாயத்துச் செய்தி” ஆசிரியருமான கோவிந்த ராஜுலு - இருவரும் பாராட்டிற்குரியோரே.

குடந்தை ஏ.எம். ஜோசப் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட காலமுதல் அரும்பணியாற்றி வருபவர். தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் முழு ஆதிக்கத்திலிருந்து  விவசாயத் தொழிலாளர்களை மீட்டு, திராவிட இயக்கத்தின் ஆதரவில் கொண்டு வர முயன்று வெற்றியும் பெற்றார். சிறந்த பேச்சாளர், தொய்வு இல்லாத இயக்கப் பணியாளர்.

திருவாரூர் கே.தங்கராசு எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தை எம்.ஆர். ராதா நடத்திப் புகழ் சேர்த்தார், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த நேரத்தில் திராவிடர் கழக மேடையேறிய தங்கராசு மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பெரியார் காலத்தில் அவரது அன்புக்குப் பாத்திரமாய் இருந்து வந்தார். மறைந்த பிறகு, தனிக் கட்சி தொடங்கும் ஆவலினால் தடம் மாறினார். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவணைப் போடும் “தங்கராசு திராவிடர் கழகம்” இயங்கி வருகின்றது. தங்கதுரை என்ற ஒரு திரைப்படமும் இவர் எழுதியதே.

ஏப்ரல் 10, 11 தேதிகளில் மதுரை மாவட்ட மாநாடுகளிலும், அடுத்த நாள் நடந்த பொதுக் கூட்டங்களிலும், பெரியார் காமராசருக்கு வேண்டுகோளாக, டெல்லிக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும், பார்ப்பனரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிட வேண்டும் என்றும், தெரிவித்து வந்தார். காமராசர் பதவி ஏற்றவுடன் பெரியாரை வந்து சந்தித்து வணங்கி மாலை சூட்டினார்! முதல் நற்செயலாக, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்! சட்டமன்றத்தில் ஆச்சாரியாரின் கல்வி அமைச்சராக இருந்து, இதைப் புகுத்திய சி. சுப்ரமணியமே தொடர்ந்து, கல்வி அமைச்சராக இருந்து, இதை ஒழித்திட வகை செய்து, தமிழ் மக்களின் ஒருமித்த பாராட்டைப் பெருமிதத்துடன் பெற்றார் காமராசர்! சிறப்புடன் சென்னையில் வரவேற்கப்பட்ட தந்தை பெரியார் “சனியன் ஒழிந்தது” என்று மகிழ்ச்சியில் திளைத்தார். 16.4.54 அன்று இதை ஒட்டி, விருந்தொன்றும் நடந்தது. சென்னையில் சர்தார் கே. எம். பணிக்கர் பெரியாரைச் சந்தித்து, ஒருமணியளவு, உரையாடி மகிழ்ந்தார்.

ஆச்சாரியார் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை தஞ்சையிலிருந்து சென்னை வந்து சேர்ந்த போது, திருவல்லிக்கேணி கடற்கரையில், 14.4.54 அன்று, பிரம்மாண்டமான மகிழ்ச்சி வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது. சென்னையில் மேடையில் அவர்களை நிறுத்தி, அறிமுகப்படுத்திய பெரியார். இவர்கள் வந்து, இங்கு போராடிச் சிறை செல்ல எண்ணினார்கள்! பாவம், ஏமாந்தார்கள்! காமராசர் இவர்களை ஏமாற்றி, ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்றார். நான் ஆச்சாரியார் முதல்வராக இருந்தபோது கூட, லஞ்சத்துக்கு வழிவிட மாட்டாரென்று பாராட்டினேன், வந்ததும், பொது ஒழுக்கம் மிகுந்து, லஞ்சப் பழக்கம் ஒழியக் கண்ட்ரோலை எடுத்தார்; நமது சேலம் தீர்மானப்படிக் கைத்தறியாளர் பிரச்சினையைக் கவனித்தார்; நம் விருப்பப்படித் தஞ்சை பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார்! 

இதைப் பார்த்த ஜீவானந்தமும் ராமமூர்த்தியும், ஆள்வது ராஜாஜியா ராமசாமிப் பெரியாரா என்றனர். சட்டசபைக்கோ பதவிக்கோ செல்லாத நாம், யார் நல்லது செய்தாலும் பாராட்டுவது போல் இதையெல்லாம் பாராட்டினோம்!. கல்வித்திட்ட எதிர்ப்பின் வலிமை புரியாமல், எடுத்துச் சொன்னவர்களெல்லாருமே இராமசாமி நாயக்கரின் ஆள் என்று கருதி, ஆணவமாக இருந்ததால், ஆச்சாரியார், இன்று நானே வருந்தும்படியாக வெளியேறிவிட்டார்.

தமிழர் முதல்மந்திரியாக வந்திருப்பதால் மட்டுமல்ல; கல்வித் திட்டத்தை உடனே எடுத்ததால்தான் காமராசர் மந்திரி சபையை நான் பாராட்டுகிறேன் - என்பதாகப் பேசினார் பெரியார். அதே போல, 22, 23 தேதிகளில் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடுகளிலும், புதிய மந்திரி சபையை வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பின், பார்ப்பனரல்லாத ஆந்திரால்லாத தெலுங்கரல்லாத ஒரு தமிழர் முதன் மந்திரியாக வந்து, அதுவரை (பின்னர் ஆர். வெங்கட்ராமன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.) ஒரு பார்ப்பன மந்திரிகூட இல்லாமல் அமைச்சரவை அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். இந்த மாநாடுகளில் எஸ். குருசாமி, வி.வீராசாமி எம்.பி., என். ஜீவரத்தினம் ஆகியோரும் பங்கேற்றனர். கி. வீரமணி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். திருச்சியில் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை ஆனைமலை நரசிம்மனும், சேலம் ராசாராமும் 10 நாள் வரையில் நடத்தி வந்தனர். திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 30.5.54 அன்று திருச்சியில் கூடிப், பல முக்கிய தீர்மானங்களை இயற்றியது. அதில் 16-ஆவது தீர்மானம், ஒருவர் அதிகபட்சமாக 10 ஏக்கர் நிலந்தான் வைத்திருக்கலாம் என்று காமராசர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ததாகும்.

தபால் கார்டுகள் எழுதும்போது “பார்ப்பனத் துவேஷி” என்று முதலில் குறிப்பிட்டுவிட்டுப் பிறகு எழுதத் துவங்குங்கள், என்று, 1.6.54 அன்று பெரியார் சிதம்பரத்தில் பேசும்போது, தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

சர். சி.பி. ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிவிட்டு விலகுவது கேள்வியுற்றுப் பெரியார் மகிழ்ந்தார். கோயில் அர்ச்சனைகள் வடமொழியில் இல்லாமல் தமிழிலேயே நடைபெற வேண்டுமென்று குன்றக்குடி அடிகளார் கோரி வந்ததை; வடமொழி விரட்டல் பாராட்டுக்குரியது என “விடுதலை” ஏடு 28, 6.54-ல் தலையங்கம் தீட்டியது.

1.7.54 அன்று வழக்கம் போலவே திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாறு பெரியாரின் வேண்டுகோள் வெளிவந்தது. அடுத்து 1.8.54 அன்று முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் செய்ததுபோல் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி  எழுத்துகளை அழிக்க வேண்டும். ஆனால், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டுத் தாம் முதல்வரானதை உறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. இந்த இடைத் தேர்தலில் காமராசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதனால், தாம் நடத்தும் ஆகஸ்டு 1-ந் தேதி போராட்டம் அவருக்கு ஏதாவது பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்துவிடுமோ என அஞ்சி, அதை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் பெரியார். இதற்காக 4,5 தேதிகளில் ரயில் மார்க்கமாகப் பல ஊர்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று, தோழர்களை ஆங்காங்கே சந்தித்து, ஊக்கமளித்தார். “தோழனே! தமிழ்நாட்டில் 500க்கு மேல் ரயில் நிலையங்கள் உள்ளன. நீ எந்த ஊரில் இந்தியை அழிக்கப் போகிறாய்? இந்தி படிக்காதவனுக்கு உத்தியோகமில்லை; நாடாளுமன்றமில்லை; நாட்டிலும் இடமில்லை என்கிறான். நாம் ஏற்கனவே இரண்டாண்டுகளாக இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம். “அழித்தால் என்ன? நடவடிக்கை எடுத்தால் அதிகம் செலவாகும். ஆனால் 2,200 ரூபாய் செலவில் நாங்கள் உடனே எழுதி விடுகிறோம்!” என்கிறார் நமது துணை ரயில்வே மந்திரி அளகேசன்! எனவே இந்தத் தடவையும் நாம் அழித்ததை அவர்கள் எழுதினால், இனி வேறுமுறைகளைப் கையாள்வோம் என எச்சரிக்கை தருவோம்” என்று பெரியார் பேசி வந்தார்.

“ஆந்திர மாகாணம் தனியே பிரிந்து சென்று விட்டது. கேரள மாநிலம் அமையவில்லை . மலையாளம், தென் கன்னடம் ஆகிய இரு ஜில்லாக்கள் தான் எஞ்சியிருக்கின்றன. அவையும் நீங்கினால் தனித் தமிழ்நாடுதான். அப்படியிருக்க, இன்னும் ஆந்திரர் மலையாளிகள் தொல்லையும், பார்ப்பனர் தொல்லையும் தமிழ்நாட்டில் நீடிப்பதா? மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாட்டில் பார்ப்பனர் 2¾ சதவீதம், கிறிஸ்தவர் 100க்கு 4 பேர், முஸ்லீம்கள் 100க்குச் சுமார் 5 பேர், மலையாளிகள் 100க்குச் சுமார் 8 பேர் கன்னடத்தார் 100க்குச் சுமார் 5 பேர். ஆகவே நூற்றுக்கு 25 பேராக உள்ள இந்தத் தமிழரல்லாத கூட்டத்தார், தமிழ்நாட்டில் சாதாரண உத்தியோகங்களில் 100க்கு 75 பேராகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதில் குறிப்பாக, மலையாளிகள் தொல்லையே பெருந்தொல்லை! வகுப்புவாரி உரிமையில் இவர்களும் பார்ப்பனரல்லாதார் என்ற பாதுகாப்பில் நுழைந்து விடுகிறார்கள்! ஆனால் இவர்கள் ஆரியக் கலாச்சாரம், ஆரிய மொழி, நடையுடை பாவனை, ஆரிய வருணாசிரம் ஏற்பாடு இவற்றையே முழுமையும் கையாளக் கூடியவர்கள், அதனால், பார்ப்பனர்களும் தாங்களில்லாத இடங்களுக்கு இவர்களிருப்பதையே ஆதரிக்கிறார்கள். சென்னை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள்:- தலைமைச் செயலாளர், தலைமை  எஞ்சினியர், தலைமை மருத்துவர்கள், பிரின்சிபால்கள், போலீஸ் டிப்டி கமிஷனர்கள், மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் இப்படி முக்கிய பதவிகளில் மலையாளிகளே வீற்றிருக்கிறார்கள். இவை ஆச்சாரியாரின் காலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியே நீடித்தால் தமிழன் வாழ்வது எப்போது?

சமீப காலத்தில் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் தமிழர்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழர்கள் நல்லவண்ணம் யோசித்துக் கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே எனது 76-ஆவது பிறந்த நாள் செய்தி” என்று பெரியார், 17.9.54 “விடுதலை” ஏட்டில் அறிக்கை வெளியிட்டுத் தமிழ் மக்களின் உறங்கும் இன உணர்வினைத் தட்டி எழுப்பிவிட்டார்!

தமது பிறந்த நாள் விழாக் கூட்டங்களிலும் ஏனைய பொதுக் கூட்டங்களிலும் பெரியார் இராமாயண, ஆபாசப் புரட்டுகளை விளக்கினார். குறிப்பாகச் சென்னையில் நாள் தவறாமல் ஒவ்வொரு வட்டத்திலும் இராமாயண விளக்கச் சொற்பொழிவுகள் நடந்து வந்தன. வால்மீகி இராமாயணத்தை ஓரெழுத்து விடாமல் படித்து, ஆய்வு செய்து, பாத்திரங்களின் தன்மைகளை முற்றிலும் உற்றுணர்ந்து, தெளிவாகப் புரிந்து வைத்திருந்த பெரியார், அந்த இதிகாசம் விளைத்த நாசத்தை எடுத்து அணுஅணுவாய்ப் பிளந்து காட்டிய வேகத்தை, “இந்து” பத்திரிகையே வயிற்றெரிச்சலோடு கூக்குரலிட்டு எழுத நேரிட்டது. பதவி நீங்கிய ஆச்சாரியாரும், பெரியாரின் எதிர்ப்பு அணியில் நின்று, பக்திப் பிரச்சாரங்களைச் சபாக்களில் நடத்திடத் துவங்கினார்.

ஆயிரம் விளக்குப் பகுதியில் போலீஸ் அதிகாரியின் வீடு இருந்ததால், அங்கு பெரியாரின் இராமாயணப் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஒலி பெருக்கி அனுமதி தரவில்லை! 14.11.54 அன்று, விடாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொல்லிப், பெரியார், தமது தொண்டையும் வயிறும் வலிக்க வலிக்க, உரத்த குரலில், அந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பேசி விட்டுத்தான் வீடு திரும்பினார்.

புதுவை ராஜ்யத்தைவிட்டு 2.11.54 அன்று பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறினர். ராஜ்ய மக்கள் விடுதலை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரியார் அன்பாக வளர்த்து வந்த சீட்டா 27.10.54 அன்று மறைந்து போனது. தமது பாசத்திற்கும் வாஞ்சைக்கும் வடிகாலாக விளங்கிய சீட்டாவின் மறைவு பெரியாரையும் சிறிது உலுக்கியது. பர்மா நாட்டின் தலைநகரான இரங்கூனில் நடைபெறும் மூன்றாவது பவுத்த மாநாட்டுக்கு வருகை தருமாறு பெரியாருக்கு அழைப்பு வந்திருந்தது. மன ஆறுதலுக்காக, உடனே ஒத்துக்கொண்டார்.

பெரியாரின் வான்மீகி ராமாயணப் பிரச்சாரத்துக்கு எதிரொலி போல நடிகவேள் எம்.ஆர். ராதா ஊரூராக ராமாயண நாடகத்தை நடத்தி வந்தார். அதில் வால்மீகியின் சித்தரிப்புப்படியே இராமன் குடிகாரன். ராதா இராமனாக வேடம் புனைந்து கையில் கள் மொந்தையுடன் மேடையில் வருவார். ஆத்திக மனம் புண்படாதோ மதுரையில் 2.12.54 அன்று எதிரிகளின் கைக்கூலிகள் நாடகக் கொட்டகையில் புகுந்து பயங்கரமான கலகம் விளைத்தனர். அவர்களைக் கையோடு பிடித்து வழக்குகூடப் போடப்பட்டது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். திருச்சியில் ராதா நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதை மீறி அவர் நாடகம் நடத்தப் போவதாக அறிவித்தார். 18.12.1954-ல் திருச்சியில் ராதா கைதானானர். அதே போல மீண்டும் கும்பகோணத்திலும் கைதானார். நாடகங்கள் திராவிட இயக்கத்தாரின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கணக்கிட்ட காங்கிரஸ் ஆட்சி, ஆரிய சூழ்ச்சிக்குப் பலியாகி, நாடகங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றினைச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தது. திராவிடப் பார்லிமெண்டரி கட்சியும், பிற எதிர்க்கட்சியினரும் எதிர்த்தனர். நாட்டு மக்களும் வெளியில் எதிர்ப்பினை உணர்த்தினர். 7.12.54 அன்று இந்த மசோதா செலக்ட் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பெரியார் தாயகத்திலில்லாத நிலையிலும், தி.பொ. வேதாசலம் 19.12.54 கண்டன ஊர்வலம் திராவிடப் பார்லிமெண்டரி கட்சித் தலைவர் எஸ்.சுயம்பிரகாசம் தலைமையில் நடைபெறுமென அறிவித்ததற்கிணங்க, மக்கள் தமது மறுப்பையும், வெறுப்பையும் கண்கூடாகக் காட்டினார்கள். என்ன செய்து, என்ன பயன்? 21.12.54 அன்று நாடகக் கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1954-நவம்பர் 23-ஆம் நாள் சென்னையை விட்டுப் புறப்பட்ட பயணிகள் கப்பல் எஸ்.எஸ். ஜலகோபால், சென்னை துறைமுகத்தில் இவ்வளவு பெரிய கருஞ்சட்டைக் கூட்டத்தைக் கண்டு, மறுபுறத்திலுள்ள கருங்கடலுக்கு ஒப்பிட்டிருக்கும். ரங்கூன் பவுத்த மாநாட்டுக்குப் பயணமான தந்தை பெரியாருடன் மணியம்மையார். ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஆனைமலை ஏ.என். நரசிம்மன், சேலம் கே.ராசாராம் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர். ஐந்து நாள் கழித்து, இரங்கூன் துறைமுகத்துக்கு, ஜலகோபால் கப்பல் 28.11.54 காலை 8.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தது. பெருமகனாரின் வருகை குறித்து பர்மாவிலுள்ள பர்மன், பர்மாஸ்டார், தொண்டன் ஆகிய ஏடுகள் பிரமாதமான முறையில் விளம்பரம் செய்து வந்ததால், பெரியாரைச் சிறந்த முறையில் வரவேற்றிட ஏராளமான பர்மிய மக்களும், தமிழ் மக்களும் திரண்டு காத்திருந்தனர், நன்கு அலங்கரிக்கப்பட்ட காரில் அமர்த்திப் பெரியாரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பர்மிய விடுதலை வீரர் அவுங்சான் கல்லறைக்குப் பெரியார் 30.11.54 அன்றைய தினம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பவுத்தர் மாநாட்டிற்கு வந்திருந்த ஏராளமான அறிஞர்கள் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்கள். 3.12.54 அன்று பெரியார் தமது அரிய கருத்துரையினை பவுத்தர் மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே வழங்கினார். டாக்டர் மல்லலசேகரா பெரியாரைச் சந்தித்துத் தனியே உரையாடினார். 5.12.64 அன்று டாக்டர் அம்பேத்கார் பெரியாரைச் சந்தித்துத், தாம் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்துவிட்டதாகக் கூறிப் பெரியாரையும் பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்து மதத்தில் இருந்து கொண்டே அதனை ஒழிக்கவே தாம் விரும்புவதாகவும், பவுத்தராக மாறிவிட்டால், இந்து மதத்தைத் திருத்தவோ, இந்துப் பிடிப்பிலிருந்து மக்களை மீட்கவோ தமக்கு உரிமையின்றிப் போகுமென்றும் விளக்கிப், பெரியார் அதற்கு உடன்படவில்லை. ஆயினும், டாக்டர் அம்பேத்கார், பெருங்கூட்டத்தோடு பவுத்தமதத்திற்கு மாற வேண்டுமென்ற தமது விழைவினைப் பெரியார் அம்பேத்காரிடம் தெரிவித்தார்.

பர்மாவிலிருந்த தமிழர்களான மயிலை பார்த்தசாரதி, தொண்டன் ஆசிரியர் ஏ.எம். இபுராகிம், கவிஞர் நாரா நாச்சியப்பன் ஆகியோர், பெரியாருக்கு நிறைய வரவேற்பும் தேநீர் விருந்தும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். அவுங்சான் படத்திறப்பு, நபிகள் நாயகம் விழா, இந்திய தேசிய ராணுவ வீரர்கள் கூட்டம், தொழிலாளர் சங்கக்கூட்டம் ஆகியவற்றில் பெரியார் கலந்து கொண்டார். 8.12.54 ஒருநாள் மோல்மீனுக்கு விமானத்தில் சென்று வருவதற்குள், இரங்கூனில் பெரியார் தங்கியிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் போன்ற சில பொருள்கள் திருட்டுப் போயிருந்தன!

1954 - டிசம்பர் 11-ஆம் நாள் இரங்கூனிலிருந்து சங்கோலியா என்ற கப்பலில் பெரியார் தமது குழுவினருடன் புறப்பட்டபோது பர்மாவிலிருந்த தோழர்கள், கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர், 14-ந் தேதி காலை 11 மணியளவில் பெரியார் பினாங்குத் துறைமுகம் சென்று அடைந்தபோது, அங்கும் மகத்தான வரவேற்பு பெரியாருக்காக காத்திருந்தது. மலேயா நாட்டில் பெரியாருக்கு ஒரு நாள்கூட ஓய்வு தராமல் அவர் அதை என்றுமே விரும்புவதில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ ஏராளமான கணக்கற்ற நிகழ்ச்சிகளைத் தோழர்கள் அன்புடன் ஏற்பாடு செய்திருந்தனர். முன்கூட்டியே திட்டமிட்டுப் பெரியாரின் சுற்றுப் பயணம் முடிந்ததும், அப்படியே 28.12.1954 முதல் 8.1.1955 வரை சிங்கப்பூரில் பெரியார் தங்கிப் பல்வேறு பொதுச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1955 ஜனவரி 9-ஆம் நாள் காலை 11 மணிக்கு, எஸ். எஸ். ரஜுலா கப்பலில், பெரியார் தம் உடன் வந்திருந்த குழுவினருடன் புறப்பட்டு, 17.1.55 காலை 7 மணிக்குச் சென்னைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். மலேயா ரேடியோவில் பெரியாரின் செய்தி ஒன்றினை ஒலிப்பதிவு செய்து கொண்டு போய் ஒலிபரப்பினார்கள். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது, தம் இயல்புக்கு மாறாகப் பெரியார், கண்களில் நீர் மல்க, விடை பெற்றார்! ஏறத்தாழ இரு திங்களுக்கு மேலாகவே தாய் முகங்காணாச் சேய்போல் வாடிய தமிழ் மக்கள் வாடிய பயிருக்கு மழை போன்ற பெரியாரை வரவேற்றுக் களிப்பில் கூத்தாடினர்!

பெரியார் இங்கில்லாத காலத்தில் நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றிய காமராசர் ஆட்சி, ஒரு நல்ல சட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. கோயில் டிரஸ்டியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரையும் சேர்த்துக் கொள்ளலாம் (கட்டாயமில்லை. கட்டாயம் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கலைஞர் ஆட்சி திருத்தியது) என்று 30.11.54-ல் நிறைவேறிய சட்டமே அது.

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால் எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன், கீழே விழுந்து, பல கஷ்டங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

கட்டை வண்டி ஏறுகிறவன் ரயிலை வெறுப்பான்; பின் ரயிலின் அவசியத்தை உணர்ந்து ரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது; மண்ணெண்ணெய் கூடாது; என்று கூறியவர்கள் கூட, இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தியிருக்கிறார்கள்.

உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி, முன்னேறிக்கொண்டு போகும் போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக்கொண்டு போகிறது. 2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும், ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும் புராண சாஸ்திர சம்பிரதாயங்களில் ஏன் சூத்திரப் பட்டம் இருக்க வேண்டும் என்று கேட்பது தப்பா?

அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக அமெரிக்க நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம் பிற இனத்தவர்களுடன் சரிசமானமாக வாழும் நிலையை ஏற்படுத்திக் கொண்டது! 

சீனாவில் சன்யாட்சென் தோன்றினார். மாறுதலை உண்டு பண்ணினார். ஐரோப்பாவின் நோயாளி என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால்பாட்சா தோன்றி மாறுதலை ஏற்படுத்தினார்! ஆனால் தமிழ் நாட்டில் சித்தர்களும் புத்தரும் வள்ளுவரும் தோன்றிச் சாதி ஒழிய வேண்டும் மாறுதல் வேண்டும் என்று கூறியும், மாறுதல் காண முடியவில்லையே!

அது போகட்டும்! நம் தாய் நாட்டுக்குத் தமிழ் நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை; கோயிலில், வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; சாஸ்திரம், புராணம் எல்லாமே வடமொழியில்! இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்! சங்கீதம் தெலுங்கில்தான் வரும், தமிழில் வராது!

நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! அதற்காகப் பாடுபடுபவர்களுக்கு உதவியாக இருங்கள்! என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் சாதி ஒழிப்பேயாகும்! என்று மலேயா நாட்டில் முதல் கட்டமாகக் கோலப்பிறை செயிண்ட் மார்க் பள்ளித் திடலில், 1954-டிசம்பர் 16-ஆம் நாள், பெரியார் சொற்பெருக்காற்றினார். பினாங்கு நகரிலிருந்து வெளிவரும் சேவிகா இதழ் இதனை வெளியிட்டிருந்தது.