தந்தை பெரியார், நீலமணி/ஈரோட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

11. ஈரோட்டில் நிச்சயிக்கப்பட்ட
திருமணம்

"ஆணுக்குப் பெண் சரிநிகர் ஆவாள். சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்று ஆள் அல்ல பெண்! அடிமை இல்லை அவள்! சமமானவர் - வாழ்க்கைத் துணைவி அவள்."

- தந்தை பெரியார்

உலகில், எல்லா நற்குணங்களும் பொருந்திய ஒருவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது.

வெங்கடப்பர் சிறந்த பக்திமான், நேர்மையானவர், உழைப்பாளி, இரக்க குணமுடையவர், திறமையான வியாபாரி - இத்தனையிருந்தும், பகுத்தறிவுப்பார்வையில் அவர் பின் தங்கி விட்டார்.

மண்டிக்கடையை மகனிடம் ஒப்புவித்த சில வருஷங்களிலேயே இராமசாமியின், அதிபுத்திசாலித் தனத்தையும், வாதத்தில் மற்றவர்களை மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலுள்ள திறமையையும் கண்டு வியந்து போனார்.

பணம் கொடுப்பதிலும்; வராத கடனை வசூலிப்பதிலும் இராமசாமி காண்பிக்கும் கறாரும் கண்டிப்பும், தந்தையை பிரமிக்கச் செய்தது.

இராமசாமியின் அறிவுக் கூர்மையும், தொழில் திறமையும் வியாபாரிகளிடையே பிரபலமாயிற்று.

மண்டிக்கடைக்காரர்கள் மத்தியிலே ஏற்படும் சண்டை சச்சரவுகள்; கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் தகராறுகள், இவை எதுவானாலும் மத்தியஸ்த்தத்திற்கு, அவர்கள் இராமசாமியிடம்தான் வருவார்கள்.

இராமசாமி இருசாரருடைய பிரச்சினையையும் நன்கு புரிந்து கொண்டு நியாயம் வழங்குவார். இராமசாமியின் தீர்ப்பில், இரு சாராருமே மகிழ்ச்சியோடு செல்வார்கள்.

தொழில் வட்டாரத்திலிருந்து; இராமசாமியின் இந்த மத்தியஸ்த்தப் புகழ் மெல்ல ஊருக்குள்ளும் பரவி - ஊரில் எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதை இராமசாமி வந்து தீர்த்தால் சரி என்கிற நிலைமை உருவாகி விட்டது.

தன் தந்தையாரைப் போலவே, ஈரோட்டில் இராமசாமியின் புகழும், செல்வாக்கும் நாளுக்கு நாள் பெருகி வந்தது. ஊரே புகழ்ந்தது.

மகனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்துப் போன சின்னத்தாயம்மையார், இராமசாமிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தைக் கணவரிடம் கூறினார்.

வெங்கடப்பரும், இதுவே நல்ல தருணம் என்று மாமன் மகளான நாகம்மையை, இராமசாமிக்கு மண முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். நாகம்மை, தாதம்பட்டி, அரங்கசாமி - பொன்னுத்தாயி தம்பதியரின் மகள்.

இராமசாமி, நாகம்மையை நன்கு அறிவார். உறவு என்பதோடு, சிறு வயது முதலே, ஒன்றாய்ப் பழகி; ஓடி விளையாடி வந்தவர்கள். ஒருவர் குணத்தை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசித்து வந்தனர். ஒரு திருமணத்திற்கு, இதைவிடச் சிறந்த வேறு என்ன பொருத்தம் வேண்டும்!

நாகம்மையின் பெற்றோர், பெரிய செல்வந்தர்கள் அல்ல என்றாலும்; பொருளாதார நிலையை ஒரு பொருட்டாக இரு குடும்பத்தாரும் கருதவில்லை. சாத்திர சம்பிரதாயங்களோடு, ஈரோடு நகரமே வியக்கும் வண்ணம் அதிவிமரிசையாக இராமசாமி நாகம்மை திருமணம் நடைபெற்றது. இராமசாமிக்கு அப்போது வயது 19, நாகம்மையாருக்கு வயது 13.

திருமணத்திற்கு ஏராளமான பிரமுகர்களும், வியாபாரிகளும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

நம்ம நாயக்கர் வீட்டுத் திருமணம் என்று ஊரே திரண்டு வந்து பந்தலில் கூடியிருந்தது.

இராமசாமி மறவாமல் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

பிள்ளைப் பிராயத்தில் படிப்பு;

வாலிப வயதில் திருமணம்.

இராமசாமி இந்த இரண்டாவது கட்டத்தில் இருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு பொறுப்பும், கடமைகளும் அதிகம் என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

ஆனால் இராமசாமி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே இருந்தார்.

இன்னும் சொல்லப் போனால் - தொட்டதற்கெல்லாம் பெற்றோரின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திர மனிதனாகவே இப்போது அவருக்குத் தோன்றியது.