தந்தை பெரியார், நீலமணி/தாய்ப்பறவையைத் தேடி
"போட்டி, தேர்தல் வரைத்தான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்துவிட்டால், இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும்."
- தந்தை பெரியார்
வெள்ளை மனம் படைத்த அண்ணாவின் அளப்பரிய செயல், தோல்வியின் துயரத்தில் துவண்டு போயிருந்த தந்தை பெரியாரை -
வெற்றிக் களிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
இடையில் கழிந்த பதினேழு ஆண்டுகள் மறைந்து போய், ஆதியில் கண்ட அண்ணாதான் பெரியாரின் கண்களில் தோன்றினார்.
கருத்து பெரியாரின் ஆசி பெறாமலே, தனி திராவிட முன்னேற்றக் கட்சியைத் துவக்கியவர் அறிஞர் அண்ணா! 1962 - ல் தோல்வியுற்ற அண்ணா, இம் முறையும் தேர்தலில் போட்டி இட்டார்.
அண்ணாவின் வெற்றிக்காகத் தமது சுதந்திரா கட்சி மூலம் அரும்பாடு பட்டவர் இராஜாஜி. மேடை தோறும் அண்ணாவைப் புகழ்ந்து மக்களை மனம் மாறச் செய்தவர் இராஜாஜி.
தந்தை பெரியாரின் ஆசிக்குப் பதிலாக அவரது பெரும் எதிர்ப்பில் எதிர்நீச்சல் போட்டவர் அண்ணா!
அந்த நீச்சல் வீரர் இன்று வென்றது மல்லாமல் - அந்த மாபெரும் வெற்றியை -
- ஓர் ஒப்பற்ற குருவிற்கு சிஷ்யன் செலுத்தும் பணிவான காணிக்கையாக? தந்தை பெரியாருக்கு அளித்துவிட்டார்.
இது எவ்வளவு பெரிய காரியம்! உலகில் எத்தனை பேருக்கு அண்ணாவைப் போன்ற அபூர்வ மனமிருக்க முடியும்!
நெகிழ்ந்து போன பெரியாரால் விழி நீரைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அண்ணாவைத் தழுவிக் கொண்டு வாழ்த்தினார்.
பெரிய மனச் சுமை குறைந்தவர்போல, அன்றே பெரியார் சென்னை வந்தார்.
அன்றைய விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் முதல்நாள் காங்கிரசு தோற்றுப் போனதற்கான காரணங்களைப் பற்றித் தெளிவாக எழுதினார்.
அதற்கு அடுத்த மறுநாளிலிருந்து - அண்ணாவின் வெற்றியைப் பாராட்டியும், அண்ணாவின் அமைச் சரவையைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும் தினந்தோறும் தொடர்ந்து எழுதி வந்தார்.
பெரியாரின் முன்னுக்குப் பின் முரணான செயல் பலரை வியப்பிலாழ்த்தியது. எண்ணற்றவர்கள்;
நேற்றுவரை 10 ஆண்டு காலம் காங்கிரசையும் காமராசரையம் ஆதரித்தவர்; திடீரென்று இப்படி அண்ணாவின் பக்கம் திரும்பிவிட்டாரே' - என்று கேள்விக் கணைகளையும்; கடிதக் கணைகளையும் தொடுத்தனர்.
ஆனால் - தனக்குச் சரி என்று பட்டத்தை எடுத்துக் கூறவோ, எழுதவோ என்றுமே தயங்கி அறியாதவர் தந்தை பெரியார்.
ஆயினும் பெரியாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணமானவர் அறிஞர் அண்ணா என்பதை தன்னுடைய நண்பர்களிடம் பெரியார் எப்படிக் கூறினார் என்பதை பெரியாரின் வாய்மொழியாகவே கேட்போம்.
"மானத்தையே தியாகம் செய்ய வேண்டிய சங்கடமான நிலையில் நான் இருந்தேன். அண்ணா பெருந்தன்மையுடன் அந்தச் சங்கடத்தை எனக்குத் தராமல் மிக்கப்பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்."
"தொடர்ந்து நானும் காமராசருடன் சேர்ந்து அவரை எதிர்க்க முற்பட்டால் இராஜாஜியை நம்பித்தான் அவர் ஆட்சி நடத்த வேண்டும்." "அம்மாதிரி நிலை ஏற்பட்டால் அண்ணா தமது ஆட்சியை நிலை நிறுத்த அவர்கள் சொல்லுகிறபடி காரியங்களை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகத் தான் வேண்டும்."
"எனது நிலை பக்கத்து வீட்டுக்காரிக்கு சேலையை இரவல் கொடுத்துவிட்டு அவள் போய் உட்காருகிற இடத்திற்கெல்லாம் போய் ஜமுக்காளத்தை விரிக்கின்ற கதையாகிவிட்டது."
"நாற்பது ஐம்பது ஆண்டுகளாக நாட்டில் ஒரு உணர்ச்சியைப் பரப்பி வந்து இருக்கிறேன்."
- அந்த உணர்ச்சி குன்றிப் போய்விடாமல் பாதுகாப்பது என் கவலையாகிவிட்டது. அதற்காக அண்ணாவிடமிருந்து இராஜாஜியைத் தூர விலக்கி வைக்க வேண்டியிருக்கிறது.
"நான் சொல்லுகிறேன், அண்ணா திருச்சி வந்து என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்; நானே அண்ணாவிடம் வலியச் சென்று 'நான் உங்களை ஆதரிக்கிறேன்' என்று மானத்தை விட்டுச் சொல்லவும் தயாராக இருந்தேன்."
இப்பொழுது சொல்லுங்கள் - தொண்டு எண்ணங்கள் கொண்ட இரண்டு உள்ளங்களின் உயர்வைப்பற்றி,
- வானத்தை விட்டுப் பிரிந்த நிலவு தன்னைத் தேடி வராவிட்டால் நிலவைத் தேடி வானம் புறப்பட்டு வந்திருப்பேன் என்றது.