தந்தை பெரியார், நீலமணி/நினைத்ததை முடிப்பவர்
"வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது.
இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?"
- தந்தை பெரியார்
பணத்தை வாரி இறைத்துச் சிலர் பதவியைப் பிடிப்பார்கள். பதவிக்கு வந்தபின், செலவழித்த பணத்தை
வட்டியும் முதலுமாக மக்களிடமிருந்தே கறப்பார்கள். மக்கள் சேவைக்கென்று மனப்பூர்வமாகப் பதவி ஏற்பவர்களே உண்மையாக மக்களுக்குத் தொண்டாற்றுவார்கள்.
ஈ.வெ.ரா. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பதவிக்காக என்றுமே அவர் ஆசைப்பட்டதில்லை. ஆனால் தேடி வந்த நகர சபைத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தார்.
இரவும் பகலும் நகர மக்களின் நலம் பற்றியே சிந்தித்தார். மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து அவ்வப்போது ஆவன செய்தார். இதனால் அவரது பதவிக் காலத்தில் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது.
சிறந்த வியாபாரத் தலமாக விளங்கிய ஈரோட்டுக் கடைத்தெரு மிகவும் குறுகலாகவும் நெருக்கமாகவும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதற்கு என்ன வழி செய்யலாம் என்று ஈ.வெ.ரா. தீவிரமாகச் சிந்தித்தார்.
கடைத்தெருவிலுள்ள கடைகளில் பாதிக்கு மேல் இடித்தாலன்றி; வீதியை விரிவுபடுத்த முடியாது என்று உணர்ந்தார்.
அப்படிச் செய்ய முனைந்தால், பழைய கடைக்காரர்களும் பெரும் பணக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். தன்னிடம் சண்டைக்கு வருவார்கள் அல்லது கிளர்ச்சி செய்வார்கள்.
இதைத் தவிர்க்க ஈ.வே.ரா. உடனே நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். தன் யோசனையைப் பொது நலன் கருதி ஏற்க வேண்டுமென்று எடுத்துக் கூறினார்.
சிலர் இதை வரவேற்றாலும் பலர் எதிர்த்தனர். பணக்காரர்களின் பகையையும் பழைய கடைக்காரர்களின் விரோதத்தையும் சந்திக்க வேண்டிவரும். அதற்குப் பணிந்து பிறகு திட்டத்தை நிறுத்துவதை விட இதை ஆரம்பிக்கவே வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் ஈ.வே.ரா. எதிர்ப்புகளைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்ல அவர்.
பெருமைக்காகப் பதவி வகிப்பதை விட மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் பதவியை இழந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினார்.
உடனே 'நில ஆக்கிரமிப்பு' என்னும் பெயரால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் பெரிய பெரிய மாடிக் கடைகளையும் இடித்துத் தள்ளினார். கடைத் தெருவைத் தேவையான அளவிற்கு அகலப் படுத்தி விட்டார்.
பொதுமக்கள் கடைத்தெருவின் அழகைக் கண்டு வாயாரப் புகழ்ந்து பாராட்டினர். பணக்காரக் கடைக்காரர்களும் தற்சமயம் ஏற்பட்டுள்ள அதிகமான செளகரியங்களை உணர்ந்து சமாதானமாகி விட்டனர்.
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே ஈ.வே.ரா. எடுத்த முடிவு இன்றும் அவர் புகழ் பரப்பும் அழகிய கடைத் தெருவாக காட்சியளித்து வருகிறது. எந்தக் காதுகளால் இராமசாமியைப் பற்றி ஒவ்வொருவரும் நிதம் கூறும் புகார்களைக் கேட்டு வெங்கடப்பர் மனம் வருந்தினாரோ -
இன்று அதே காதுகளில் ஈ.வே.ரா.வைப் பற்றி மக்கள் தேடிவந்து கூறிவிட்டுப் போகும் புகழுரைகளைக் கேட்டு வெங்கடப்பர் பூரித்துப் போனார்.
ஆனால் அந்த மகிழ்ச்சியை அதிக நாள் அனுபவிக்காமல் வெங்கடப்பர் 1911-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
வைணவ சம்பிரதாயப்படித் தந்தையின் உடலைத் தகனம் செய்ய வேண்டுமென்று விரும்பினார் கிருஷ்ணசாமி.
ஆனால் ஈ.வே.ரா. பிடிவாதமாகத் தந்தையின் உடலைத் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தார்.
தந்தையின் நினைவாக அந்த இடத்தில் ஒரு சமாதியையும் கட்டி முடித்தார்.