தந்தை பெரியார், நீலமணி/பகுத்தறிவுச் சோதியின் சுயமரியாதைப் பயணம்

39. பகுத்தறிவுச் சோதியின் சுயமரியாதைப் பயணம்...

"பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை."

- தந்தை பெரியார்

1879 - செப்டம்பர் 17-ல் ஈரோட்டில் பிறந்தார்.

தந்தை - வெங்கடப்ப நாயக்கர்

தாயார் - சின்னத் தாயம்மை

1885 - பள்ளியில் சேர்ந்தார்.

1891 - பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தப் பட்டார்.

1892 - வியாபாரத்தில் ஈடுபட்டார்.

1898 - 19வது வயதில் நாகம்மையை (13 வயது) மணந்தார்.

1902 - கலப்புத் திருமணங்கள் நடத்தி வந்தார்.

அனைத்து சமயத்தினர் - சாதியினருடன் சேர்ந்து விருந்து உண்டார்.

1904 - ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார். (அக்குழந்தை 5 மாதத்தில் இறந்தது பின்னர் குழந்தையே இல்லை.)

1907 - காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோடில் காலரா நோய் பரவிய போது யாரும் உதவிக்கு வராத நிலையில், துணிந்து மீட்டுப் பணியாற்றினார்.

1909 - எதிர்ப்புக்கிடையில், தங்கையின் மகளுக்கு விதவா மறு திருமணம் செய்து வைத்தார்.

1911 - தந்தையார் இறந்தார்.

1917 - ஈரோடு நகர மன்றத் தலைவரானார். நகரில் குடிநீர், சுகாதார வசதிகளைச் செய்தார். 28, மதிப்பு மிக்க பதவிகளை வகித்தார்.

1918 - காங்கிரசு மாநாடுகளை முன்னின்று நடத்தினார்.

1919 - நகர மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினர் ஆனார்.

1920 - மதிப்பு மிக்க பதவிகள் அனைத்திலிருந்தும் விலகினார். காங்கிரசு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1921 - ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் நடத்தினார். கள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட தமக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

1922 - கள்ளுக்கடை மறியல் செய்ததால் கோவைச் சிறையில் வைக்கப்பட்டார்.

1923 - குடியரசு பத்திரிகையைத் தொடங்க அரசாங்கத்தில் பதிவு செய்தார் (19.1.1923).

1924 - தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தில் தலைவராய்ப் பணியாற்றினார். வைக்கம் போராட்டம், இரு முறை சிறை வைக்கப்பட்டார். வெற்றி கண்டார். வைக்கம் வீரர் என்று புகழப்பட்டார்.

வ.வே.சு. ஐயர் சேரன் மாதேவியில் காங்கிரசு இயக்கத்தில் நிதியுதவி பெற்று நடத்தி வந்த குரு குலத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை எதிர்த்தார்.

1925 - குடியரசு வார இதழைத் தொடங்கினார் (ஈரோடு 2-5-1925). காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாட்டில் வகுப்புரிமை தீர்மானம் கொண்டுவர முயன்றார். தோல்வி அடைந்தார். அதனால், காங்கிரசை விட்டு வெளியேறினார்.

1927 - காந்தியாரைச் சந்தித்தார் (பெங்களுர்). 'திராவிடர்' நாளிதழுக்கு ஆசிரியராக விளங்கினார். தம் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப்பெயரை விலக்கினார்.

1928 - ருவோல்ட் (Revolt) என்னும் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார் (17.11.1928).

1929 - செங்கல்பட்டு முதல் மாநில சுயமரியான்த மாநாடு நடைபெற அடிப்படையாக இருந்தார். நாகம்மையாருடன் மலேசியா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

1930 - மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பினார். பயண நாட்களில் தாடி வளர்க்க நேர்ந்தது; நிலையானது.

1932 - எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, இங்கிலாந்து, வேல்சு, சுபெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி, பிரான்சு, இலங்கை முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் (13.12.1931 முதல் 11.11.1932) வரை மேற்கொண்டார். 11 மாதத்திற்குப் பிறகு ஈரோடு திரும்பினார்.

1933 - நாகம்மையார் மறைந்தார் (11.5.33). 21.5.1933 முதல் மேதினம் கொண்டாட கூறினார். 'புரட்சி' வார இதழ் தொடங்கப்பட்டது.

1934 - புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு, 'பகுத்தறிவு' இதழ் தொடங்கப்பட்டது.

1935 - நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்தார்.

1938 - இந்தித்திணிப்பை எதிர்த்துச்சிறை சென்றார் (பெல்லாரி சிறையில் வைக்கப்பட்டார், 2 ஆண்டு சிறைக் காவல் தண்டனை - 2000 - ரூபா).

சிறையிலிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (29.12.1938). 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். பெண்கள் மகாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1940 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். பம்பாயில், ஜின்னா, அம்பேத்கர் முதலியோரைச் சந்தித்தார். கவர்னர் ஜெனரல், கவர்னர், இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தியும் அமைச்சரவைப் பதவியைப் புறக்கணித்தார்.

1942 - 'திராவிடாநாடு' பிரிவினைக் கொள்கையை எழுப்பினார்.

1943 - சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்படும் என்று உலகுக்கு அறிவித்தார் (Test Tube Baby).

1944 - நீதிக்கட்சி - திராவிடர் கழகமாக மாறியது (27.8.1944). கல்கத்தா 'ரேடிகல் டெமாக்ரடிக் கட்சி' மகாநாட்டில் கலந்து கொண்டார். கான்பூர் பார்ப்பனரல்லாத - பிற்படுத்தப்பட்டோர் மகாநாட்டில் கலந்து கொண்டார் (29, 30, 31-12-1944).

1947 - ஆகஸ்ட் 15 - துக்க நாள் என அறிவித்தார் (அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து.)

1948 - கட்டாய இந்தி எதிர்ப்பு மாநாடு நடத் தினார் (17.7.1948). திருக்குறள் மாநாடு நடத் தினார்.

1949 - மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார் (9.7.1949). உடுமலைப் பேட்டையில் தடை உத்தரவை மீறிச் சிறைப்பட்டார்.

1950 - குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 'பொன்மொழிகள்' - என்ற நூலுக்காக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.

1952 - குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடினார்.

1953 - பிள்ளையார் சிலையை உடைத்தார். தொடர் ரயில் வண்டி நிலையங்களில் எழுதப்பட்டிருந்த இந்திப் பெயர்களை அழித்தார் (1.8.1953).

1954 - குலக்கல்வித்திட்ட எதிர்ப்பால், இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

1955 - இந்தித் திணிப்பை எதிர்த்துத் தேசியக்கொடியை எரிக்கத் தீர்மானித்தார் (1.8.1955). மத்திய, மாநில அரசுகள் - இந்தியைத் திணிப்பதில்லை என்று அறிவித்ததால், கொடி எரிப்புத் திட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தார்.

1956 - இராமன் படத்தை எரித்தார். 'தட்சணப் பிரதேசம்' என்ற அமைப்பை எதிர்த்து, அரசைக் கைவிடச் செய்தார்.

1957 - திருச்சியில் வினோபாவைச் சந்தித்தார்.

சாதிக்குப் பாதுகாப்பாக உள்ள அரசியல் சட்டத்தை எரிக்கத்துண்டினார் (26.11.1 957).

1959 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். கான்பூர், இலக்னோ, டில்லி, பம்பாய் ஆகிய இடங்களில் குடியரசுக் கட்சியின் கூட்டங்களிலும், கல்லூரிகளிலும் பேசினார்.

1960 - தமிழ்நாடு பிரிவினை கோரி தமிழ்நாடு நீங்கிய தேசப்படத்தை எரித்தார்; கைதானார்.

1964 - நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எரித்தார்.

1965 - நாடெங்கும் இராமாயணத்தை எரிக்கச் செய்தார் (6.4.1965).

1967 - பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.

★ தமிழக முதல்வர் அண்ணா பெரியாரைச் சந்தித்தார். ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்.

★ முதன் முதலில் திருச்சியில் பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்டது (17.9.1967).

★ சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெற்றது.


1968 - தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார்.

1969 - இன இழிவை நீக்கக் கோவில் கர்ப்பக்கிரகங்கள். கிளர்ச்சி பற்றி அறிக்கை வெளியிட்டார்.

1970 - 'உண்மை' இதழைத் தொடங்கினார். யுனெசுகோ இவருக்கு விருது வழங்கிப் பாராட்டியது.

1971 - கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராய் இருந்த காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.

★ பெரியார் கோரிக்கை நிறைவேற வழி வகுக்கப்பட்டது (12.11.1971).

★ 'மாடர்ன் ரேசனலிசுட்' ஆங்கில இதழ் தொடங்கினார்.

1973 - இன ஒழிப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார் (சென்னை 8, 9, 12, 1973).

★ தியாகராய நகரில் இறுதிச் சொற்பொழிவாற்றினார் - (19.12.1973)

★ 24.12.1973 - ல் பெரியார் மறைந்தார்.

★ 25.12.1973 இலட்சக்கணக்கான மக்கள் 'அய்யா... அய்யா' என்று கண்ணீர் சிந்தி அழ; அய்யாவின் உடல் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.

★ இத்தொகுப்பிற்கு உதவிய மிகுந்த நன்றிக்கு உரியவர்கள்: பெருமதிப்பிற்குரிய சாமி சிதம்பரனார்; பெருமதிப்பிற்குரிய கருணானந்தம்; பெருமதிப்பிற்குரிய டாக்டர் கு.வணங்காமுடி ஆகியோர்.

இந்நூலை எழுதிய அமர் திரு.கே.பி.நீலமணி அவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும்; இலங்கை வாழ் தமிழர்களின் கண்ணீர்க் கதையையும், அந்தக் குழந்தைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘தென்னைமரத் தீவினிலே’ என்ற நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றவர்.

இவர் எழுதிய ‘கவிமணியின் கதை’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இதே நூல் 13 வாரங்கள் சென்னை வானொலியில் ஒலிபரப்பாயிற்று. இவர் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற சங்கீத நூல், கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது.

இவர் எழுதிய மாஸ்டர் ராஜா என்ற சிறுவர் நாவல், தொலைக்காட்சித் தொடராக 13 வாரங்கள் ஒளிபரப்பாகியது. இந்தத் தொடரை சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்த திரு. எஸ். எஸ். ஆர். கலைவாணன். கார்த்திக் சரண் அவர்கள் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாவதில் பெரும் பங்குவகித்தார்.