தந்தை பெரியார், நீலமணி/பெரியாரைப் பெற்றெடுத்த பாக்கியசாலிகள்

3. பெரியாரைப் பெற்றெடுத்த பாக்கியசாலிகள்...

"மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்."

- தந்தை பெரியார்

தமிழ்நாட்டில் பண்டை கோயமுத்துார் மாவட்டத்திலிருந்த ஈரோட்டில் வைணவ பக்தரான வெங்கடப்ப நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார்.

அவரது மனைவியின் பெயர் சின்னத் தாயம்மையார் என்று அழைக்கப்படுகிற முத்தம்மாள்.

கணவன் மனைவி இருவருமே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடவுளிடம் மிகுந்த பக்தியும் ஈடுபாடும் உடையவர்கள்.

வெங்கடப்ப நாயக்கர் படிக்காதவர். அதனால் அன்றாடம் பல இடங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

வெங்கடப்பநாயக்கரின் மனைவி மிகுந்த குணவதி. நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவர்.

குடும்பத்திற்காகத் தன் கணவர் மட்டும் கடுமையாக உழைப்பதைக் கண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

கணவரோடு சேர்ந்து சின்னத்தாயம்மையாரும் கூலி வேலை செய்யப் புறப்பட்டார்.

மனைவியிடம் மட்டற்ற அன்பு கொண்டவர் வெங்கடப்ப நாயக்கர். தன்னைப் போல கல் உடைப்பது, மண் சுமப்பது போன்ற வேலைகளை மனைவியும் செய்வதை அவர் மனம் ஏற்கவில்லை.

"இருவருமாகச் சேர்ந்து உழைத்தால் பற்றாக்குறை இருக்காது. குடும்பமும் விரைவில் முன்னேறிவிடும். பிறகு சுயமாக ஏதாவது தொழில் செய்து பிழைக் கலாம்” என்று கணவருக்கு ஆறுதல் கூறினார். மனைவியின் ஆதரவும், உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளும் வெங்கடப்ப நாயக்கருக்கு உடம்பில் புதிய ரத்தம் பாய்ச்சியது போல் மிகுந்த தெம்பை அளித்தது.

கருமமே கண்ணாக இருவரும் கடுமையாக உழைத்தனர். சின்னத்தாயம்மையார் கூறியது போல் வருவாய்க்கு ஏற்றபடிச் சிக்கனமாகச் செலவு செய்து; வீண் ஆடம்பரங்கள் ஏதுமின்றி குடும்பத்தை நடத்தினார்.

சிறுகச் சிறுக மாதா மாதம் பணம் சேமித்து மிகக் குறுகிய காலத்திற்குள் தன் கணவர் கையில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார்.

வெங்கடப்ப நாயக்கர் நெகிழ்ந்து போனார். இவ்வளவு பொறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த மனைவி கிடைத்தது கடவுள் அருளே என்று மனம் மகிழ்ந்தார்.

மனைவி கொடுத்த பணத்தைக் கொண்டு வெங்கடப்ப நாயக்கர் ஒரு மாட்டு வண்டி வாங்கினார்.

அவ்வண்டியில் வாடகைக்குச் சரக்குகளை ஏற்றி அருகிலுள்ள ஊர்களுக்கு சந்தைக்கும் கொண்டு போய் பொருள் சேர்த்தார்.

ஓரளவு பணம் சேர்ந்ததும் மாட்டுவண்டி ஓட்டிப் பிழைப்பதை நிறுத்தினார். வண்டி விற்ற பணத்துடன் தன்னிடமுள்ள பணத்தையும் போட்டு மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.

வேலைக்கு ஆட்களை அமர்த்திக் கொள்ளாமல் கணவரும் மனைவியுமாக இருவருமே மளிகைக் கடையில் முழு நேரமும் உழைத்தனர். வெங்கடப்ப நாயக்கர் அங்குமிங்கும் ஓடி அலைந்து நல்ல சரக்குகளாகவே வாங்கி வியாபாரம் செய்தார்.

இதனால் மக்களிடையே அவரது கடை பிரபலமாயிற்று. வியாபாரம் அமோகமாகப் பெருகிப் பணப் புழக்கம் அதிகமாயிற்று.

சிறியதாய்த் துவங்கப்பட்ட மளிகைக் கடை நாளுக்கு நாள் விருத்தியடைந்து பெரிய மண்டிக் கடையாக உருவாயிற்று.

சில்லரை வியாபாரத்துடன் -

மொத்த வியாபாரமும் செய்யுமளவிற்கு வெங்கடப்ப நாயக்கருக்கு வசதியும் அந்தஸ்தும் உயர்ந்து விட்டது.

ஆயினும் -

கணவன் மனைவியரிடையே துளிக்கூட கர்வம் தலை தூக்கவில்லை.

எல்லோரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகினார்கள்.

அவரிடம் பல ஆட்கள் வேலை செய்தார்கள். எல்லோரும் அவரை முதலாளி என்றே அழைத்தார்கள். புதிய வீடு ஒன்றும் வாங்கினார்.

இப்படி நிறை வாழ்வு வாழ்ந்தும் -

வெங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத்தாய் அம்மையாருக்கும் உள்ளத்தில் பெரும் குறையொன்று சதா உறுத்திக் கொண்டேயிருந்தது.

அது அவர்களுக்கென்று மக்கட்பேறு இல்லாத பெருங்குறைதான்.

கணவரும் மனைவியும் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானதருமங்கள் இல்லை.

சதா இறைவனை வழிபட்டே வந்தனர். தன் வீடு தேடி வரும் அடியார்க்கும், ஏழைகளுக்கும் சின்னத் தாயம்மையார் முகமலரச்சியுடன் அமுது படைத்து அவர்களது ஆசி பெற்றார்.

இத்தனை போதாது என்று -

சின்னத்தாய் அம்மையார் தவறாமல் விரதம் நோன்பு ஆகியவற்றை பக்தியுடன் நிறைவேற்றி வந்தார். இறுதியில் -

ஒருநாள் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்த்து விட்டதாக கணவன் மனைவி இருவருமே மகிழ்ந்தனர்.

1877-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சின்னத்தாயம்மையார் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கணவரும் மனைவியுமாக அக்குழந்தைக்கு திருமாலின் பெயரான கிருஷ்ணசாமி என்கிற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

கிருஷ்ணசாமிக்கு இரண்டு வயதாகும்போது 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு 'இராமசாமி' என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது. வெங்கடப்ப நாயக்கரின் உழைப்பும், நாணயமும் தொழில் நேர்மையும் மேலும் அவரை உயர்த்தியது.

கோயமுத்துார் மாவட்டத்திலுள்ள பெரு வணிகராகவும் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராகவும் வெங்கடப்ப நாயக்கர் விளங்கினார்.

செல்வம் உயர உயர் அவரிடமுள்ளதரும சிந்தனையும், பக்தி மார்க்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.