தந்தை பெரியார், நீலமணி/வைக்கம் வாழ்த்திய ஈ.வெ.ரா.

21. வைக்கம் வாழ்த்திய வீரர் ஈ.வெ.ரா.

"மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ; பூமிப்பிளப்பில் அமிழச் செய்யாமலோ; சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."

- தந்தை பெரியார்

கேரளாவில் வைக்கம் என்பது மிகவும் அழகான ஊர். இங்குள்ள கிருஷ்ணன் கோவில் மிகவும் பிரசித்தமானது. நாட்டில் நாலா திசைகளிலிருந்தும் மக்கள் வைக்கம் வந்து கண்ணனை தரிசனம் செய்து போவார்கள்.

ஆனால் -

உள்ளூரில் வசிக்கின்ற அரிசனங்கள் ஆலயத்தின் அருகில் கூடப் போகக் கூடாது.

உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்வதற்குக்கூட அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது.

காங்கிரஸ் இயக்கத்தின் சிறந்த கொள்கைகளில், தீண்டாமை ஒழிப்பு முக்கியமானதாகும். பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவும்; அரிசனங்கள் கொடுமைப் படுத்தப் படுவதை தடுத்து நிறுத்தவும்; கடவுள் அனைவருக்கும் என்பதை அரிசன ஆலயப் பிரவேசத்தின் மூலம் நிரூபிக்கவும் காந்திஜி சத்தியாக்கிரகப் போராட்டங்களை ஊக்கு வித்தார்.

வைக்கத்தில் அரிசனங்களை உயர் சாதியினர் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தனர். அதைக் கண்டித்து கேரளாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் வைக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்கள்.

திருவிதாங்கூர் மன்னர் அப்போராட்டத்தை அடக்க எண்ணினார். சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்தது அரசாங்கம்.

வைக்கத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தத் தலைவர்கள் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈ.வெ.ரா. அப்போதுதான் ஈரோடு வந்திருந்தார். அவருக்கு உடம்பு சரியில்லை. வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வைக்கம் சத்தியாகிரக நிலைமை பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டது.

செய்தி கேள்விப்பட்டவுடன், தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல், ஈ.வெ.ரா. வைக்கம் புறப்பட்டுப் போனார்.

ஈ.வெ.ரா. வந்துவிட்ட செய்தி அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், முன்னிலும் உற்சாகமாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னர் ஆள் அனுப்பி ஈ.வெ.ரா.விடம் போராட்டத்தை கைவிடும்படிக் கேட்டுக் கொண்டார்.

அப்படியானால் ஆலயத்தை அரிசனங்களுக்குத் திறந்து விடுங்கள் என்று ஈ.வெ.ரா. கூறினார்.

மன்னர் ஆணைப்படி அதிகாரிகள் ஈ.வெ.ராவையும் கைது செய்து வைக்கம் சிறையில் அடைத்தனர்.

கணவர் கைதாகி சிறையில் இருப்பது அறிந்த நாகம்மையார் உடனே வைக்கம் புறப்பட்டார். கணவர் விட்ட இடத்திலிருந்து போராட்டத்தை தொண்டர்களுடன் நடத்தினார்.

நாகம்மையாரைப் பின் தொடர்ந்து, கேரளப் பெண்களும், தமிழகப் பெண்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தீவிரமாகப் போராடினார்கள். இதற்குக் காரணம், ஈ.வெ.ரா.வும் அவர் மனைவியும் என்பதை அறிந்த மன்னர் ஈ.வெ.ரா.வை வைக்கம் சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

வைக்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மன்னர் ஆணையை மதிக்காமல், ஈ.வெ.ரா. போராட்டத்தைத் தொடரவே 1922-ம் ஆண்டு, ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது அரசாங்கம். ஈ.வெ.ராவைச் சிறையில் அடைத்தது.

கணவர் சிறை சென்றதால், நாகம்மையார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

கேரளா முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்த நாகம்மையார்; தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும் -

'அரிசனங்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு' என்று பிரசாரம் செய்தார். போராட்டம் வலுத்தது. மக்கள் ஆதரவு பெருகியது. மன்னர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இறுதியில் -

அரிசனங்கள் கோவிலுக்குள் செல்லலாம் - என்று ஆணை பிறப்பித்தார்.

முதல் அரிசன ஆலயப் பிரவேசம் நடந்த ஊர் வைக்கம் என்ற புகழ் பெற்றது.

முதல் ஆலயப் பிரவேசத்தின் வெற்றிக்குக் காரணமாயிருந்த ஈ.வெ.ரா.வை மக்கள் 'வைக்கம் வீரர்' என்று பெருமையாக புகழ்ந்தார்கள்.

வைக்கத்தில் நடைபெற்ற இந்த முதல் ஆலயப்பிரவேச வெற்றியைத் தொடர்ந்து கேரளத்து ஆலயங்களிலெல்லாம் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.

பிறகு, இந்தியா முழுதும் இந்தச் செய்தி பரவியது. ஈ.வெ.ரா.வை முன் மாதிரியாகக் கொண்டு அம்பேத்கர் உட்பட பல தலைவர்கள், வட இந்தியாவில் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார்கள்.