தமிழர் தோற்றமும் பரவலும்/முதல் சொற்பொழிவு




தமிழர் தோற்றமும் பரவலும்


முதல் சொற்பொழிவு


பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள்

வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, மற்றும் இலங்கையின் பழமை, நிலஇயல் அறிவின் தொடக்க காலத்துக்கே கொண்டு செல்கிறது. ஏழ(ற)த்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான 'முந்தைக் கேம்பிரியன்' என்ற நிலஇயல் ஊழிக்காலத்திற்கும் (Pre cambrain Era), 240 கோடி முதல் 65 கோடி ஆண்டு வரையான 'மெலோ ஸோயிக்' என்ற இடைப்பேருழி ஊழிக்காலத்திற்கும் (Mesozoic Era) இடைப்பட்ட காலமாம் பலேயோஸோயிக் (Palaeozoic) தொல்பேரூழி என்ற ஊழிக் காலத்திலிருந்தபடி மூன்றுபக்கங்களிலும் கடலால் சூழப்பெற்ற இந்தியத் தீபகற்பம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நடுவிடமான ஆஸ்திரேலியா முதல், தென் அமெரிக்கா வரையான கோண்டவனம் என்ற பெருநிலப் பரப்பு இருந்தது. மெலோஸோயிக் ஊழியின் இறுதிக் காலத்தே, கோண்டவனம் என்ற இப்பெருநிலப்பரப்பு உடைந்துவிட்டது. பெரும்பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலாயின தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மட்டும் அக்காலகட்டத்திலும் பிரிவுறாமல், பெருங்கற் பாறையாம் பாலத்தால் இணைந்திருந்தன. அவ்வாறு இணைந்திருந்த அப்பகுதிக்கு “லெமூரியா” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. மெஸோஸோயிக் ஊழிப்பருவத்தைச் சேர்ந்த 200 முதல் 150 கோடி ஆண்டுகள் வரையான “ஜுராஸிக் (Jurassic) என்ற வரலாற்றுக் கால கட்டத்தில், தென் அமெரிக்காவில் வடகிழக்கில் உள்ள பிரேஸின் நாட்டில் உள்ள ஜலுரா என்ற மலையில் பாறை தோன்றிய காலம் இந்தியத் தீபகற்பத்தின் கீழ்ப்பால் பகுதி கடலுள் மூழ்கிவிட, வங்காள விரிகுடாவின் தோற்றத்திற்கு வழிவகுத்து விட்டது. (சொற்பொழிவின் ஈற்றில் உள்ள குறிப்பு:1 காண்க). பனிக்கட்டி காலமாம் ‘கிலேசியல்’ (Glacial) ஊழியின் இறுதியில் தாழ் நிலையில் இருந்த கடல்மட்டம் பனிப்பாறைகள் உருகியதால் மீண்டும் உயர்ந்து நனிமிகப் பரந்த கடல் நீரடிப்பாறை உருவாகும் நிலைக்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தில்தான் சுமத்திரா, ஜாவா மற்றும் போர்னியோ போலும் கிழக்கிந்திய நாடுகள் பிரிவுண்டு தனித்தனி நாடுகள் ஆயின. இந்நிலஇயல் நிகழ்ச்சி. வேதம், இதிகாசம், புராணங்களில் பெரும்பிரளயங்களாக, அதாவது கடல்கோள்களாக விளக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவு நடைபெற்ற காலத்தில் வாழ்ந்திருந்த மனுவே, மனித இனத்தின் தந்தை ஆனார்.

பாகவத புராணக் கணக்குப்படி, மலய மலையை நடுவிடமாகக் கொண்ட திராவிட தேசத்தின் நடுப்பகுதி, இப்பேரழிவிலிருந்து பிழைத்து நிலை கொண்டு விட்டது. திருமாலின் (சமஸ்கிருத விஷ்ணுவின்) முதல் அவதாரம் எனக் கருதப்படுவதாய ஒரு மீன், கடல்நீரில் மூழ்கிவிடுவதினின்றும் தன்னைக் காப்பாற்றிவிடுமாறு மனுவுக்கு, அருகில் ஒரு படகைக் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய அரசர்களாகிய பாண்டியரின் அரசச் சின்னம் மீன் என்பது, ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கடல் கோள்களைச் சார்ந்த கற்பனைக் கவிதைகள் இந்நாட்டிற்குப் புதியன அல்ல. (அடிக்குறிப்பு-2 காண்க) பண்டை உலகத்தின் மற்ற நாடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லா நிலையில், ஈப்ரு பாபிலோனியா மற்றும் சுமேரியா நாடுகளில், இதுபோலும் கற்பனைக் கூற்றுக்கள் உள்ளன. நிலஇயல் நூல் அறிவு ஐயத்திற்கு இடம் இன்றி ஆராயப்பட வேண்டியவை ஆதலின், இதுபோலும் கற்பனைகளை ஒட்டு மொத்தமாகத் தள்ளிவிடாமல், அவையும் சில வரலாற்று மரபின் அடிப்படையில் எழுந்தன என்றே கொள்ளுதல் வேண்டும். வேறோர் இடத்தில் பாபிலோனியக் கற்பனைகளுக்கும், இந்தியக் கற்பனைகளுக்கும் இடையில் பொருந்தத்தக்க ஒற்றுமை இருப்பதைக் குறிப்பிட்டுள்ளேன். கடல்கோள் குறித்து மெசபடோமியக் கற்பனைக் கதை ‘மீன்', ‘நீர்’ ஆகிய இரு சொற்களை அழிவுறாமல் பெற்றுள்ளது என்பது வியப்பிற்கு உரியது (Census of India 1931 page 366) (அடிக்குறிப்பு 3 காண்க.)

நிலநூல் சான்றுப்படி, நனிமிகப் பழங்காலப்பாறைகள், அவை தக்கிண மலைச் சரிவுகளாயினும், அல்லது, தென்னாட்டுப் படிக்கல் பாறைகளாயினும், உலக அரங்கில், நனிமிகப் பழங்காலத்தே தோன்றிய நிலப்பரப்பாகிய இந்தியத் தீபகற்பத்தில் காணப்படுகின்றன. நீலகிரி, பழநி, ஆனைமலை ஆகிய மலைகள் தொல்லூழிக் காலத்தைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. தென் இந்தியப் பழங்கற்கால (Paleolithic) மனிதன், காடுகளில் வாழவில்லை; மாறாக மலைநாட்டுச் சமவெளிகளிலேயே வாழ்ந்தான் என்பது வல்லுநர்கள் கருத்து (குறிப்பு 4 காண்க.) அவன் மற்ற நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல, அறவே காட்டுமிராண்டி அல்லன். ஆகவே, தென் இந்தியர், பழங்கால மனிதனுக்கும் முற்பட்ட நனிமிகப் பழங்கால அம்மண்ணுக்கே உரிய மக்களைக் கொண்டதாதல் வேண்டும். பின்வரும் பகுதிகளில் நான் காட்ட இருக்குமாறு, இவர்கள் மண்ணோடு பிறந்த தொல்முது குடிமக்களின் வேறு வகையாகக் காட்டவல்ல, ஐயத்தொடுபட்ட சிறு மரபுச்சான்றுதானும் இல்லா மூதாதையர் ஆவர்.

வடஇந்தியா மற்றும் மத்தியதரைக்கடற்பகுதி மூதாதையர்கள், இன்று நிலைத்த குடியினராய் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கடந்து செல்லும் இடைவழியாகத் தென்இந்தியா அமைந்திருந்தமையே, தென் இந்தியாவுக்கும், மத்திய தரைக்கடற்பகுதிக்கும் இடையில் நிலவும், மனித இனம் மற்றும் பிறவகையான ஒருமைப்பாடுகள் உண்மைக்குக் காரணமாம். (டாக்டர் இ. மக்லியன். Dr. B. Maclean) வட அமெரிக்க இந்தியர்களும், எகிப்தியப் பழங்குடியினரும் தாங்கள் நாடு விட்டு நாடு வந்தவர். அதாவது வந்தேறியவர்கள் என்ற மரபினைக் கொண்டுள்ளனர் என்பதும், திருவாளர் ஈரென் (Heeren) அவர்கள், எகிப்திய நாகரீகத்துக்கு இந்திய மூலத்தை அடிப்படையாகக் கொள்வதற்கு, எகிப்திய மண்டை ஓட்டினை அடிப்படைச் சான்றாகக் கொள்வதும் வியப்பிற்கு உரியவாம். எகிப்தியரின் தொடக்ககால வாழிடமும், ஆப்பிரிக்காவின் வடகிழக்குக் கடற்பகுதியும் ஆகிய “புன்ட்” (Punt) என்ற பகுதி மலபார் கடற்கரையோடு கூடிய, பாண்டியர் நாடாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. ஆனால், இதை உறுதி செய்ய, நல்ல வலுவான அகச்சான்றுகள் மேலும் தேவை (அடிக்குறிப்பு : 5: காண்க.)

பண்டைத் தமிழரின் தோற்றம் குறித்த ஆய்வுக் களத்தில், போதுமான எண்ணிக்கை உள்ள கொள்கைகள் இருக்கின்றன. அவற்றுள் நனிமிக இன்றி அமையாதன சில பற்றி ஆய்வு செய்ய நான் முன்வருகின்றேன். திராவிடர்கள், தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி பேசும், தென்னிந்தியப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும், பண்டைத்திராவிடரின் வழிவந்தவர் என்ற கோட்பாடு மேற்கொள்ளப்பட்டது. இனம் பற்றிய கண்ணோட்டத்தில், பொதுவாகப் “பஞ்சமர்” (இப்போது அரிசனங்கள், என்ற பெயரால் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்) ஆதிதிராவிடர்களாகப் பெயர் சூட்டப்படும்போது, பிராமணர்கள், ஆரிய இனத்தவராகக் கருதப்பட்டனர். அவ்வாறு கொள்வதால் ஆம் உய்த்துணர்வு, திராவிடர்கள், தென்னிந்தியாவுள் நுழைந்து பெருமளவில் நிலைத்த குடியினராய் வாழத் தொடங்குவதன் முன்னர், காடுகளில் வாழ்ந்தவரும், நாகரிகம் அற்றவரும், படையெடுத்து வந்தவர்களால் வென்று அடிமை கொள்ளப்பட்டவரும் ஆன அந்நாட்டுப் பழங்குடியினர், ஆதித்திராவிடர்கள் என அழைக்கப் பெற்றனர். திராவிடர்களைப் போலவே, ஆரியர்களும், இந்தியப் பெருநாட்டிற்குப் படையெடுத்து வந்தவர்கள் என்ற கொள்கை, பொதுவாக இன்று நிலவுகிறது. இந்த நாட்டிற்கு ஆரியர்கள் படையெடுத்து வந்ததற்கு நனிமிக நீண்ட காலத்துக்கு முன்னரே, திராவிடர் படையெடுத்து வந்தனர் என்ற கொள்கையும் மேற்கொள்ளப்பட்டுளது. இக்கோட்பாட்டிற்கு ஆதரவாக வேத இலக்கியங்களில், குறிப்பாக, ரிக்வேத சமிதாக்களில் குறிப்பிடப்படும் தஸ்யூக்கள் மற்றும் தாஸர்கள், படையெடுத்து வந்த ஆரியப் பெருங்கூட்டத்தால், வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாக மாற்றப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. இது பற்றி, நாம் பின்னர் ஆராய்வாம். இதற்கு ஆதரவாகக் கூறப்படும் சான்றுகள் போதுமானவை அல்ல; முடிந்த முடிவாக ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறுவது, இப்போது போதும். இது, திராவிடர்கள் யார் என்ற வினாவிற்கு விடைகாண நம்மைத் தூண்டுகிறது. இதிலும், வரலாற்றுப் பேரறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை. ஆரியப் படையெடுப்பின்போது இந்தியாவில், நனிமிக வளர்ச்சி பெற்ற, ஒழுக்கம் நிறை திராவிட நாகரீகம், நிலை கொண்டு இருந்தது; திராவிடர் என்பார், மத்திய தரைக்கடல் இனத்தவரின் ஒரு பிரிவினர்; என்பனவே நடைமுறையில் இருந்த கொள்கைகளாம். இவற்றின் விளைவாகத் திராவிட நாகரீகம் வெளியிலிருந்து பெறப்பட்டதாக உரிமை கொண்டாடப்பட்டது. எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரீகத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது (குறிப்பு: 7 காண்க.).

இனம் சார்ந்த அடிப்படை உறுதி செய்யப்படும் போது, உடல் சார்ந்த தனிச்சிறப்பு கணக்கிடப்படுகிறது. ஆதிச்சநல்லூர், பலுஜிஸ்தானத்தில் உள்ள “நல்” என்ற ஊர், மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டவையிலிருந்து வரலாற்றுக்கு முந்தைய மண்டை ஓட்டு அறிவு, ஆராயப்படலாம். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மண்டை ஓட்டுத் தன்மையவான, மொகஞ்சதாரோ மண்டை ஓடுகள், பாபிலோனுக்கு அணித்தாக உள்ள “கிஷ்” (ஓடிண்ட) என்ற நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டனவும், ஆதிச்ச நல்லூரியிலிருந்து எடுக்கப்பட்டனவும், இன்றைய வெட்டர் (Veddahs)களுடையவுமான, மண்டை ஓடுகளின் இனமாம் என்பது, முடிவு செய்யப்பட்ட ஒன்று. திருவாளர் எல்லியோட் சிமித் (Elliot Smith) அவர்கள் முடிவுப்படி, ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள், பண்டைய எகிப்திய இன மண்டை ஓடுகளிலிருந்து வேறு பிரித்துக் காணக்கூடாதனவாம். இந்தியத் தீபகற்பத்தின் தொல்லூழிகாலப் பழங்குடியினர், இனவகையில், நீக்கிரோ இனத்தவர். தென்னிந்தியக் காடுகளில் வாழும் காடவர், மற்றும் இருளர் இன இரத்தத் தொடர்புடையவர். மக்கள் நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்கு, பெரும்பாலும் வில்லும், அம்பும். அவர்கள் வழிபாட்டு நெறி, முதிர்ந்த வழிபாட்டு நெறியாம் மரவழிபாடாம். அவர்கள் ஆஸ்திரேலிய ஆதிமுன்னோரால் இடமாற்றம் செய்யப்பெற்றனர் (குறிப்பு: 8 காண்க). களிமண் கலங்களை வாழ்க்கையில் மேற்கோடல், நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. தாக்கிவிட்டுத் திரும்பும் வளைதடி, கணை, குண்டு ஆகியவைகளை விசைத்து எறியும் ஊதுகுழல், இனமரபுச்சின்னம் அணிதல், ஆகியவை அவர்கள் உடையவாகக் கருதப்படுகின்றன. அடுத்து வந்தது, மத்தியதரைக்கடல் மனித இனம். இந்தியமக்களின், குறிப்பாகத் தென் இந்திய மக்களின் உடல் அமைப்பிற்கும், தென்னிந்திய நாகரீக முதிர்ச்சிக்கும் பெரும் பொறுப்பு, இவ்வருகையே. உழவுக் கலையும், கடல் கடக்கும் கலையும் அவர்களோடு வந்தன. இது மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியிலிருந்தது. அவர்களோடு, அர்மீனிய இனத்தவர் கலந்துவிட்டனர். திருவாளர் தர்ஸ்டன் (Thurstorn) அவர்கள் கருத்துப்படி, அர்மீனியர்க்கே உரிய மண்டை ஓடு, தென்இந்திய இந்தியரின் மண்டை ஓடு போல் உளது (Castes and Tribes of South India Vol. 1) மத்தியதரைக்கடல் இன இயல்பும், அர்மீனிய நாட்டு இன இயல்பும் கலந்த இக்கலவை, தமிழர்களிடை, குறிப்பிடத்தக்க அளவில் காணக்கூடியதாம். கடைசியாக எழுதிய திரு. டாக்டர் குகா அவர்கள் (Dr. Guha) தெலுங்கு மொழியை, மத்தியதரைக்கடல் மொழியோடு இனம்கண்டு, குறுகிய தலையுடைமை கலப்பு, தமிழ்நாடு வரையே பரவியுளது. ஆந்திரதேசம் வரை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

சற்றும் சோர்வுற்றுப் போகாத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், சிந்துவெளிப் பள்ளத்தாக்கின் கண்டுபிடிப்புக்கள், வெளிக்கொணரப்படாதிருந்திருந்தால், மேலே கூறிய கொள்கை மற்றும் அதற்கு இனமான கொள்கை, தெளிவற்ற நிலையிலேயே தொங்கிக்கொண்டிருந்திருக்கும். ஆங்குக் கண்டெடுத்தவற்றை அவற்றிற்குத் தகுதியுடையவாய, மிக்க விழிப்போடும் கருத்தோடும் ஆராய்ந்து பார்த்த, திருவாளர். சர். ஜான் மார்ஷல் (Sir. John Marshal) அவர்கள், சிந்துவெளிக் கண்டு பிடிப்புக்கள், உய்த்துணர வைக்கும் நாகரீகம், திராவிட நாகரீகத்தின் முத்திரையைப் பெற்றுள்ளதாகக் கருதியுள்ளார். இந்நாகரீகத்தின் இயல்பு பற்றி மூவகைக் கருத்துக்கள் உள்ளன. முதலாவது இந்நாகரீகத்தைத் திராவிட நாகரீகமாகக் கொள்ளும் திருவாளர் சர். ஜான் மார்ஷல் அவர்கள் கருத்து. இரண்டாவதாக இதை, இயல்பாலும் கால நீட்சியாலும், ஆரிய நாகரீகமாகக் கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும் உள்ளனர். மூன்றாவதாக இந்நாகரிகம் திராவிட நாகரீகமோ, ஆரிய நாகரீகமோ அன்று: ஆனால் இன்றைய ஆய்வு அறிவுப்படி எந்த ஓர் இனம் அல்லது பழங்குடியினராக உறுதிப்படக் கூற இயலாது எனக்கூறும் மூன்றாவது கருத்தாம். இந்நாகரீகம் பெரும்பாலும் வேத காலத்துக்குப் பிற்பட்டது அல்லது சிறப்பு இயல்பால், கிட்டத்தட்ட தமிழர்களுடையது என்ற ஆய்வினை, மொழியியல் வழி உறுதி செய்வதில் உள்ள இயலாமையினை எல்லோரும் உணர்வர். இத்துறையில் அருள் திரு. தந்தையார் ஈராஸ் (Rel. F. Heras) அவர்களின் முயற்சி குறிப்பிடத்தக்கது. சுமேரிய, பாபிலோனியா, மற்றும் எகிப்து ஆகிய மேற்கிற்குச் சென்று பரவிய, பண்டைய நாகரீகத்தின் முதல் பிறப்பிடம். பஞ்சாப் முதல் பர்ஷிய வளைகுடா வரை பிரிந்து கிடக்கும் இடமாகும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதுபற்றிய மொத்தக்கேள்வி, ஐயத்திற்குஇடம் இன்றி, பெரும் குழப்பத்திற்கு உரியது. இன்று நாம் பொருத்தமுற மேற்கொள்ளவேண்டிய ஆய்விலும், பெரிய அளவிலான மறுக்க இயலாத, நுண்ணிய ஆய்வினைத் தேவைப்படுத்துகிறது.

கி.மு. நாலாயிரத்தாண்டில், பழம்பெரும் நாகரீகத்தின் பிறப்பிடமாம், தென் மெசபடோமியாவில் உள்ள சுமர் (Sumer) என்ற பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட உருவச்சிலைகள், வெட்டு ஓவியங்களின் ஆய்வு, மனித உடல் கூற்று ஆய்வின்படி அவை, தென்னிந்திய மாதிரிகளாம் எனக் காட்டுகிறது. சிந்துவெளிக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே, டாக்டர் ஆல் (Dr. Hall) அவர்கள், எந்த ஒரு புதுக்கருத்தை அள்ளி வீசினாரோ, அது பல்வகையாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிட்டது. சுமேரியர்கள் சிந்துவெளிமக்களே என்பது ஒட்டுமொத்த முடிபாம். அவர்கள், நிலவழியாகவும், கடல்வழியாகவும் பர்ஷ்யாவைக் கடந்து, துருக்கியில் தோன்றிப் பர்ஷிய வளைகுடாவில் சென்று கலக்கும் யூபிரடஸ் (Euphrates) டைகிரிஸ் (Tigris) ஆறுகளின் சமவெளிப் பள்ளத்தாக்கிற்குச் சென்றார்கள். செல்லும் வழியில் தென்மேற்கு ஈரான் நாட்டின் ஒரு பகுதியாகிய ஏலம் (உடூச்ட்) என்ற பழம்பெரும் நாட்டில், நாகரீக விதைகளை விதைத்துச் சென்றனர். சுமேரியர்கள், மற்றும் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு மக்களின் உடற்கூற்று மாதிரிகள் தென்னிந்திய மாதிரிகளாம் என்றால்-இது மறுக்க முடியாத, முரண்பாடற்ற ஒன்று-சிந்துவெளி மக்கள் சிந்துவெளிப்பள்ளத்தாக்கிலிருந்து திராவிடத்திற்கும், திராவிடர், திராவிட நாட்டிலிருந்து சிந்துவெளிக்கும், மக்கள் குடிபெயர்ச்சி இருத்தமைக்கு எல்லாச் சான்றுகளும் உள்ளன. இந்தக் கருத்து எதிர்பாரா இடத்திலிருந்து உறுதிப்படுத்தும் சான்றினையும் பெற்றுளது. ஒனெஸ் (Oannes) என்னும் மனித மீன், நாகரீகக்கலைகளையும் உடன் கொண்டு பர்ஷீய வளைகுடாவைக் கடந்து, எரிடு (Eridu) போலும் சுமேரிய நகரங்களை அடைந்தது என்ற கற்பனைக் கதை, மேலே கூறிய முடிவுக்கு, மேலும் வலுவூட்டுகிறது. பின்னர்ப் பஞ்சாபி நோக்கிய அலை வீசியிருக்குமாயின், திராவிட-மத்திய தரை இனக்கொள்கை, தோல்வியுற்றுப்போகிறது.

இரண்டாவதாக, திராவிடரின் தோற்றம் அல்லது மூலம் குறித்த மனித இன் ஆய்வியல் கருத்தும் நமக்குக் கிடைத்துளது. திருவாளர் எச்.ரிஸ்சிலி (H. Risley) அவர்கள் கருத்துப்படி திராவிடர்கள் குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட தலை, பரந்த மூக்கு, நீண்ட முன்கைகளை உடையவர். அவர்கள், தொடக்கத்தில் பழங்கால மூல மக்களாக இருந்து, பின்னர், ஆரியர், சாகர், அல்லது சித்தியன், மற்றும் மங்கோலிய இனத்தோடு கலந்துவிட்டனர் (The people of India page :46) திராவிட மக்கள் தொகைக்கு வேறு வேறு பட்ட நால்வகை இனமூலங்கள் அடிப்படைக் கூறுகளைத் தத்தம் பங்காக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட ஆஸ்திரேலியர் இன உறவு, இன்றைய துருக்கி நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த, சிந்திய மக்கள் திராவிட மக்களுக்கிடையிலான உறவு, திராவிடர் மங்கோலிய மக்களுக்கு இடையிலான உறவு, மற்றும்-திராவிடர் இந்தியப் பெருமலைக்கு அப்பால் உள்ள நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு, ஆகிய இக்கோட்பாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாதன; அடிப்படைச் சான்றுகள் அற்றன என்பது, தகுதி வாய்ந்த அத்துறை வல்லுநர்களால் சான்று காட்டி நிலைநாட்டப்பட்டு விட்டன. திருவாளர் குரூக் (W. Crook) அவர்கள் எடுத்துவைத்த, ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் திராவிடர் என்ற கொள்கையும், மேலே-சொல்லப்பட்டவை போல ஏற்க முடியாத ஒன்று. தமிழர்களை, இன்றைய கிரேக்க நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த கிரீட்டன் (Cretan) என்ற மக்களில் ஒரு பிரிவினரும், தங்களின் பிணம்புதை நடுகல்லின் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, தங்களை ‘டிரெம்மிலி’ (Tremmili) என்ற அழைத்துக் கொள்பவரும் ஆகிய, சிற்றாசியா (Asia-Minor) வைச் சேர்ந்த “லிசியன்” (Lycian) மக்களோடு இனம் காணும் முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு 10 : காண்க). வலுவற்ற எதிர்பாராச் சொல் வழங்கலாம். “டிரெமிலே” என்பதை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் திராவிடர், கிரேக்கத்திற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட நாடாம் ஏஜியன் (Aegean) மக்களின் ஒரு பிரிவாம்-என வாதிடப்படுகிறது. தமிழர் நாகரீகம், அகழ் ஆய்வுச் சான்றுகளின் அடிப்படையில், கி.மு. 2500 ஆண்டுக்குப் பல ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்குத் தள்ளப்படும் நிலையில், ஏஜியன் நாகரீகம், வரலாற்று அடிப்படையில் கி.மு. 2500 ஆண்டளவில்தான் தொடங்குகிறது. லிசியன் மக்கள், கிரேக்கர் அல்லர் என்பதும், அதுபோலவே கிரேக்க மொழி வழங்கும். ஆனால் கிரேக்கர் அல்லாதாராகிய எல்லெனிஸ்டிக் (Hellenistic) இனத்தவரோடு இரத்தத் தொடர்பு உடையவர் என்பதும், எல்லாத் திறத்தவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனவாம். ஒருவேளை அவர்கள் பண்டைய கிரேக்கர் வீரகாவியக் களமாகிய “திராய்” (Troy) நகர மக்களாகிய “த்ரோஜன்” (Trojans) இனத்தவரோடு இரத்தக்கலப்புடைய வராகலாம். இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படுமாயின், தமிழ் மக்களின் ஒரு பிரிவினர், புதியன காணும் முயற்சியாக, சிற்றாசியாவில் குடியேறினார்; “டிரெம்மிலி” (Tremmili) என அறியப்பட்டனர் என்ற முடிவை மேற்கொள்வது முறையாக இருக்கக்கூடும். இந்தக் குடியேற்றம், இக்காலத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, பர்மா, மற்றும் மலேயா நாடுகள் மற்றும் பிறநாடுகளில் குடியேறியதற்கு ஒப்பாகும்.

மனித இன உடற்கூறு வேறுபாடு உணரவல்லார்களின் கற்பனைகளுக்கு முடிவே இல்லை. (குறிப்பு : 11 காண்க) தொல்பொருள் ஆய்வு மற்றும் வரலாறுகள் வெளிப்படுத்தும், தென்இந்தியாவில் மக்கள் வாழ்க்கை, பழங்கற்காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து வந்துளது என்ற உண்மையிலிருந்து எதுவும் தப்பமுடியாது. திராவிடர்க்கு முந்தியவர்கள், பழங்காலக் கர்த்தாக்களாகத் திராவிடர், கற்கால முடிவின் இறுதிக்காலத்தில்தான் வெளிஉலகிற்கு அறிய வந்தனர் என்பது ஒருகருத்து. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இனத்தவர் பிரதிநிதிகளாக விளங்கும். குறும்பர், இருளர், தோடர், இலங்கைவாழ் வெட்டர் ஆகியோர்தாம் திராவிடர்க்கு முந்திய இனத்தவரில் எஞ்சி உள்ள சிலர் ஆவர். தென் இந்தியப் பழங்குடியினரிடையே ஆப்பிரிக்க நீக்ரோ, அல்லது மலேசியா-பாலனீசிய நீகிரிட்டோ (Negrito) மக்களின் இனமூலம் காணப்படுகிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடான முடிவாம். இந்த நீகிரிட்டோ இனமூலம், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியச் செல்வாக்கின் விளைவு அன்று. மாறாக, அது, மலேசியாவிலிருந்து வந்தது என நம்பப்படுகிறது. திருவாளர் தர்ஸ்டன் (Thurston), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த சகை (Sakai) இனத்தவரோடு ஒருமைப்பாடு காண முயல்கிறார். தென்இந்தியாவுக்கும், மலேசியா மற்றும் பொலனிசியாக்களோடு, வாணிகப் போக்குவரத்து, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நடைபெற்றிருக்க வேண்டும். இந்நாடுகளின் மக்கள், தென்னிந்தியாவில் குடியேறினர். தென்னிந்திய மக்கள் சமூகத்தவரோடு, இரண்டறக் கலந்தனர் என்பன உறுதியாக நிகழக்கூடியனவே. மலேசிய மொழிகளை ஆராய்ந்து பார்க்கின், திராவிடமொழிகளில், மலேசியச்சொற்கள் சிலவாக மிகவும் அரிதாக இடம்பெற்றிருக்கும் போது, மலேசிய மொழிகளில், பெரும் எண்ணிக்கையிலான இந்தியச் சொற்கள், குறிப்பாகத் தென்இந்தியச் சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது, பெரும் எண்ணிக்கையிலான பழந்தமிழர்கள் மலேசியாவில் வாழ்ந்தனர்; அதற்கு நிகராகச் சிறு அளவிலான மலேசியர்கள், தென்இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது. மற்றுமொரு கருத்து, திராவிட மொழியும், மற்றும், வடகிழக்கு இந்திய மலையிலும் காடுகளிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியாம் முண்டா மொழியும் இரண்டறக் கலந்திருப்பதையும், அதன் விளைவாம் பழங்குடியினரிடையே இனக்கலவையையும் சுட்டிக் காட்டுகிறது. முண்டா மொழிகள் உண்மையான தமிழகத்துள் ஊடுருவியுளவா என்பது வெளிப்படக் கேட்கும் கேள்வியாகும் (குறிப்பு :13 காண்க) இம்முண்டா மொழிகளின் ஆதிக்க அடையாளத்தைக் கோதாவரி எல்லைவரை, ஒருவர் காணும்போது அதற்கு அப்பாலான தெற்கில், அதன் ஆதிக்க உண்மையைக் காட்டவல்ல, ஏற்கக்கூடிய சான்று எதுவும் இல்லை. இது, முறையான மொழி இயல் ஆய்வினால் மட்டுமே முடிவு செய்யப்படும். திராவிட மொழிக் குழுவைச் சேர்ந்ததாக மதிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமொழியைக் கொண்ட பிராகுயி மொழி, இடம் பெற்றிருப்பது திராவிடர் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்ற கூற்றிற்கு ஆதரவாகக் காட்டும் வாதம் ஆகும். தெற்கு பலுஜிஸ் தானத்தைச் சேர்ந்த “காலட்” (Kalat) நாட்டின் ஒரு பகுதியாகிய “கானட்டே” (Khanate) என்ற இடமே பிராகுயி மொழியின், பிறப்பிடமாக மதிக்கப்படும் என்றாலும், அம்மொழிச்சொற்கள் பலுஜிஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலும் இன்றும் காணப்படுகின்றன. அவர்கள் மத்தியதரைக்கடற்பகுதி நாடுகளில் ஒன்றான சிரியா நாட்டு அலெப்போ (Aleppo) நகரத்திலிருந்து வந்து குடியேறிவர் என்பது, அவர்கள் மரபு வழி வரலாறு. மனித இனப்பிரிவுப்படி பார்த்தால், அவர்கள், வடபாகிஸ்தான், மற்றும் தென்கிழக்கு ஆப்கனிஸ்தான்களின் பழங்குடியினராகிய பதான்கள் (Pathans), அல்லது உண்மையான பலுஜிஸ்தானத்து மக்களின் வேறுபடக் காணப்படுகின்றனர். முடிந்த முடிபாக, அவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர். முறையாக ஆய்வு செய்யப்பட்டால், பிராகுயி மொழி, தன் சொற்களை வளப்படுத்தியது ஆரிய மொழியே ஆயினும், அவ்வாரிய மொழியோடு எவ்வித உறவும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும். அதில் தென்னிந்தியத் திராவிடமொழிகளின் சாயலை ஒருவர் காணக்கூடும். அதுவே முதலாவதும், மிகச்சிறந்ததுமான நேரடி மொழி ஒட்டு ஆகும். அதில் இடம் பெற்றிருக்கும் பெயர்ச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள், திரிபுப் பெயர்ச்சொற்கள், இவை போலும் பிற சொற்கள் அனைத்தும், திராவிடமொழிக் குறியீடுகளாகக் கொள்ளப்படுகின்றன. (குறிப்பு :14 காண்க) இது, பலுஜிஸ்தான் வழியாகத் திராவிடர்கள் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்தனர் என்ற உண்மையைக் காட்டவலியுறுத்தும் சான்றாகக் கொள்ளப்பட்டது. இன்றைய மனித இன ஆய்வாளர்கள், அம்மொழியில் திராவிட மொழி இனக்கூறுகள் இடம் பெற்றிருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே நிலையில், பிராகுயி மக்கள், திராவிடர்கள் என்பதினும், அவர்கள் துருக்கிய இனத்து இரானிய இனத்தவராவர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அது, திராவிடர்களின் பழங்குடியேற்றத்தைக் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு. தென்னாட்டிலிருந்து திராவிடர்களின் ஒரு பிரிவினர் வடக்கிற்கும், வடமேற்கிற்கும் சென்று அங்கேயே நிலைத்த குடியினர் ஆயினர் எனக் கூறினால், அதை மறுக்க என்ன ஆதாரம் இருக்கிறது என நான் கேட்கின்றேன். வரலாற்றுக்கு முந்திய காலத்தில், இராஜபுதனத்திலும், மத்திய இந்தியாவிலும் திராவிடர்களின் பரவல் இருந்தது என்பது, திராவிட மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளாகிய, “வில்லி” (Villi) மற்றும் “சந்தால்” (Santal) மொழிகளில் இன்றும் பரவலாக இருப்பதிலிருந்து காணப்படுகிறது. பெரும்பாலும் திராவிட இனத்தைச் சேர்ந்தனவாகிய மோகன்லாதாரோ எழுத்துப் படிவங்களை இச்சான்றுகளோடு இணைத்துக் கொள்க. (குறிப்பு: 15 காண்க) மேலும், மெசபடோமிய நாட்டின் வடக்குப் பகுதியில், யூபிரெட்டஸ் ஆற்றின் வளைவில் உள்ள நாடாகிய மிடன்னியில் (Mitanni) வழங்கும் “கரியன்” (Kharian) மற்றும் “ஹூரியன்” அல்லது “ஹரியன்” (Hurrian) மொழிகள், திராவிட மொழிபோலும் மொழிகளில் சில ஆகும். ஒலிஇயல், இலக்கணம், மற்றும் சொல் அமைப்புகளில் காணப்படும் ஒருமைப்பாடு கருத்தில் இருக்கத்தக்கதாம். மிட்டானிய மக்கள், கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் எகிப்தியரோடு தொடர்ந்து போரிட்டனர். அவர்களின் சிற்றரசியர்களை மணந்துகொண்டனர். அதேவழியில் ஈரான் நாட்டுத் தென்மேற்கு நாடாகிய “எலாம்” (Elam) நாட்டில் பண்டு வழங்கிய “எலாமிடே” (Elamite) என்ற மொழிக்கும், “பிராகுயி” மொழிக்கும் இடையிலும் ஒருமைப்பாடு கண்டறியப்பட்டது. மேற்கு ஆசியாதான் “மிட்டானி” மற்றும் “எலாமிடே” மக்களின் தாயகமாம். சுமேரியன் மொழிகள் இயல்பால், தனிச்சொற்களை, வடிவமைப்பிலோ, பொருளிலோ திரிபு ஏதும் இல்லாமலே தொகைச் சொற்கள் ஆக்குவனவாம். திருவாளர் ஸ்கானர் (Schoener) அவர்கள், திராவிட ஊர்ப்பெயர்கள் சிலவற்றை, மெசபடோமியாவிலும், ஈரானிலும் தேடிக் கண்டுள்ளார். Brown JAOS 1930. P.273. காண்க.)

அமெரிக்காவில், மீஸிஸிப்பி ஆறு கடலோடு (குறிப்பு: 16 காண்க) கலக்கும் இடத்து நகராம் மெம்பிஸ் (Memphis) என்ற கடற்கரை நகரில், ஓர் இந்தியக் குடியிருப்பு இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கு வழங்கும் ‘ஊர்’ என்ற சொல், தூய தமிழ்ப்பெயர் போலவே ஒலிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில், “ஊர்” என்ற சொல், தென்னிந்தியாவில் உள்ள சிற்றூர் அல்லது நகரத்தைக் குறிக்கும். இந்த இடத்தில், பேரூழிவெள்ளப் பெருக்கிற்கு முற்பட்ட நிலப்படிவத்தில், சூரர

மகளிர் அணியும் நீலகிரிக்கு உரியதான ஜெபமாலை கண்டுபிடிக்கப்பட்டது. (O.G.S. Crawford Antiquity: Vol VI.p. 259) திராவிடரின் பிறப்பில் இவை அனைத்தும் ஏற்கும் பொறுப்பு என்ன? இவை அனைத்தும் ஒரு மொழி, அம்மொழி பேசும் மக்களோடு, குடி பெயர்ந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்து திராவிடர்கள், மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர் என முடிவு செய்யலாமா? உண்மையில் அது வேறு வழியாதலே உறுதி ஆதல் வேண்டும்.

“அனாஸர்” என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்படும் “தாஸர்” அல்லது “தஸ்யூர்”களை (குறிப்பு:17 காண்க)த் திராவிடர்களோடு இனம் காண்பது மற்றுமொரு மனித இயல் தொடர்பான, விளங்காப் புதிர். “அனாஸா” எனும் சொல் பல்வேறு வகையாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சிலர், “அனாஸா”, மூக்கற்றவர் (குறிப்பு : 18 காண்க) எனப் பொருள் கொண்டு, தட்டையான மூக்குடைய திராவிடப் பழங்குடியினரோடு தொடர்புபடுத்துகின்றனர். திரு. சாயனா (Sayana) அவர்கள், பேச்சு அற்றவர் எனும் பொருள் உடையதான “ஆஸ்யரஹித்” எனப் பொருள் கொண்டுள்ளார். அவ்வாறு கூறுவதால், அவர்கள் ஊமைகள் என்பது பொருள் அன்று. இலக்கிய அளவில் செம்மையுறப் பெற்ற சமஸ்கிருதம் போல் அல்லாமல். பொருள் விளங்கா மொழி பேசுபவர் என்பதே அதன் பொருளாம். இத்தஸ்யூக்களை, யாதேனும் ஓர் இனமூலம் அல்லது வேறோர் இனமூலத்தோடு இனம் காணும் முயற்சியில் அவர்களை, இரானியர்களோடு இனம் காண்பது போலும் கற்பனைத்திறம் வாய்ந்த பலப் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாகரீகம் அற்ற, காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து, தங்களுக்கு எனத் திருந்திய மொழி இல்லாத, சமயக்கட்டுப்பாடு அற்ற மக்களாக அவர்களை மதிப்பதே, மிகவும் ஏற்புடைய விளக்கமாகும். இருக்குவேத சமிதாவின் மூன்றாவது மண்டலம், தம் பெயர் இடம் பெறும் விஸ்வாமித்திர முனிவர்க்குப் பிறந்த மக்களாவர் தஸ்யூக்கள், எனக்குறிப்பிடுகிறது. “அய்த்திரேய பிராமணர்”. சில வரலாற்று ஆசிரியர்கள் சார்த்த விரும்புவதுபோல் தஸ்யூக்கள், திராவிடர்களாகக் கருதப்பட்டால், விசுவாமித்திர முனிவர் தாமும், திராவிடர் ஆதல் வேண்டும். ஆனால், தஸ்யூக்கள், ஆரியர் அல்லர் என்பது முடிந்த முடிவு. ஆரியப் படையெடுப்பு எனக்கூறப்படும் ஒன்று நடைபெற்ற காலத்தில், தஸ்யூ திராவிடர்கள், பஞ்சாபிலும், கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தனர்; அவ்வாரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்; தெற்கு நோக்கி ஓடினர்; அத்தென்னாட்டையே, தங்கள் தாயகமாகக் கொண்டு விட்டனர் என்ற கருத்துநிலைத்து நிற்காது. இந்தியா முழுதும், ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாகவே இருந்தது; அது முதலில் படையெடுத்து வந்த திராவிடர்களால் முதன்முதலிலும், அடுத்துப் படையெடுத்துவந்த ஆரியர்களால் அடுத்தும் நாகரீகம் உடையதாக ஆக்கப்பட்டது எனக்கூறுவது, மரபு நெறிக்கு ஏற்புடையதாகாது. இக்கருத்து தொல்பொருள் ஆய்வு அளிக்கும். விலைமதிக்க வொண்ணா வரலாற்று உண்மைகளைப் புறக்கணிப்புதாகிவிடும். தென் இந்தியாவில் நிலம் தோன்றிய காலம்முதல் (Paleolithic), புதிய கற்காலம் வரையும் (Neolithic), புதிய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையும் (Neoalithic), பெருங்கற்காலம் முதல் இரும்புக் காலம் வரையும் (Iron Age) நாகரீகத்தின் இடையற்றுப் போகாத் தொடர்ச்சி (குறிப்பு: 19 காண்க) நமக்கு இருந்து வந்துளது. மண்ணுக்கே உரிய தொல்பழங் காலத்ததாய இந்நாகரீகம், படையெடுத்து வந்த திராவிடர்களால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க இயலாது. முடிவு காணமாட்டா இச்சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளத் திராவிடர்களின் ஆதிமுன்னோர் (Proto Dravidian) என்ற கற்பனைக் கருத்து எடுத்து முன்வைக்கப்பட்டுளது. திராவிடர் படையெடுப்பு என்பது எவ்வாறு வலுவற்றதோ, அதுபோலவே, திராவிட ஆதி முன்னோர் என்ற கற்பனையும் வலுவற்றது தான். (குறிப்பு : 20 காண்க.) பண்டைத் தமிழர்கள், தென்னிந்தியாவின், கற்கால நாகரீகத்தின் சொந்தக்காரர்; உரிமையாளர் என்பதே. என் மாற்ற முடியாத, தீர்ப்பு ஆகும். (குறிப்பு : 21 காண்க)

மேலும், பன்மொழி ஆய்வாளர்கள், மற்றும், மொழி வளர்ச்சி ஆய்வாளர்களின் சான்றும் நமக்கு உளது. ஓர் இனத்தின் மூலம் பற்றிய ஆய்வுக்கு அவ்வினத்தின் மொழியைவிட, அவர்கள் நாகரீகம் ஓர் அளவுகோல் ஆகாது. சமஸ்கிருத தர்மா என்ற சொல்லைப் போலவே இனம் என்ற சொல்லையும், மொழிபெயர்த்தல் அருமை உடையது; எளிதில் இயலாதது; இரண்டு சொற்களும் பொருள் தெளிவில்லாமல் சொற்செறிவு இல்லாமல் ஆளப்படுகின்றன. மேலும் கூற விரும்புகின்றேன். அப்பொருள் பற்றிய ஆய்வாளர்களால், அவை வரன் முறையில்லாமல் ஆளப்படுகின்றன. இனம் பற்றிய பொருள் குறித்த, அண்மைக் கால ஆராய்ச்சியாளர்கள், நம் கருத்துப் படியே, இனம் என்பது ஒரு கற்பனை தொல்லை மிகத் தரும் கற்பனை என்ற முடிவுக்குச் சரியாக வந்துள்ளனர். (See Julian Huxley:-Race in Europe Oxford pamphlets. No.5-1939)

நாகரீக அடிப்படைக்கு நனிமிகு மதிப்பும், இன அடிப்படைக்கு நனிமிகக் குறைந்த மதிப்பும் கொடுப்பதே, மக்கள் இனம் பற்றிய அண்மைக்கால ஆய்வாளர்களின் முறையான ஆய்வின் குறிப்பிடத் தக்க விளைவாம். ஐரோப்பாவைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆங்கு இலத்தீன் நாகரீகம், மற்றும் ஆங்கில ஜெர்மானியர் நாகரீகம் என்பனவற்றைத்தான் அறிகிறோமே ஒழிய, இலத்தீன் இனத்தை ஆங்கில ஜெர்மானிய இனத்தை அறிய முடிவதில்லை. அதே வழியில்தான், இந்தியாவின் ஆரிய திராவிட நாகரீகங்களை மதிப்பிடல் வேண்டும். ஏறத்தாழ 1858 ஆண்டு அளவில், ஆரியன் என்ற நலங்கெட்ட இச்சொல், மதிப்புமிகு கீழ்த்திசை மொழி ஆய்வாளர், திருவாளர் மாக்ஸ் முல்லர் (Max Muller) அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேதகு வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) அவர்களைப் போலத் திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்களும், ஆரியன் என்ற சொல், ஆரியமொழி பேசும் ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்கும், என்ற அளவோடு நின்றிருந்தால், உலக அமைதிக்குப் பாராட்டக்கூடிய பெருந்தொண்டு புரிந்தவராய் இருந்திருப்பார். ஆனால், போகூழ் செய்து விடுவதுபோல், திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள், இணையான ஆரிய இனம் பற்றியும் பேசிவிட்டார். இத்தவறான கருத்து, ஏனைய தவறான கருத்துக்களைப் போலவே, மிகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று விட்டது. இக்கருத்தின் பின்விளைவு திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள் “நான், ஆரியன் என்று சொன்னால் நான் இரத்தத்தையோ, எலும்பையோ, அல்லது மயிரையோ மண்டை ஓட்டையோ பொருள் கொள்ளவில்லை; ஆரியமொழி பேசும் மக்கள் என்பதே நான் கொள்ளும் பொருள். என்னைப் பொறுத்தவரை, நீண்ட சொற்பொருள் தொகுதி, அல்லது குறுகிய இலக்கணம் பற்றிப் பேசும், மொழி இயல் ஆய்வாளர் எத்துணைப் பாவியோ, அத்துணைப்பாவி ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியக் கண், ஆரியமயிர் பற்றிப் பேசும், மனித இன ஆய்வாளனும்” என மறுவலும் மறுவலும், விளக்கம் அளிக்கும் அளவு அத்துணைப் பெரிதாம். (Biographies of words and the Home of the Aryans. London 1888. P 120) ஆனால் அவர் அறிவுரை காலங் கடந்தது. அக்கருத்து ஆழ வேர் விட்டு, உள்ளத்தை அழுந்தப் பற்றிக் கொண்டுவிட்டது. ஹெர் ஹிட்டலர் கையில் யூதர் அனுபவித்த அடக்குமுறைக் கொடுமை அதன் கொடிய விளைவுகளில் ஒன்று. எது எப்படி ஆயினும், உண்மை காண்பிகளும் அறிவியல் அறிவாளர்களும், ஆரிய இனக்கொள்கை முற்றிலும் தவறானது எனக் கொண்டுள்ளனர்.

அதே வழியில், திராவிட இனம் பற்றிய கொள்கையை நாமும் நோக்குதல் வேண்டும். ஆரிய இனம் என்பது ஒரு கற்பனையாயின், திராவிட இனம் என்பது அதனினும் பெரிய கற்பனை ஆகும். திராவிடர் என்ற சொல், (குறிப்பு : 22 காண்க) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளைப் பேசும், ஒரு மக்கள் கூட்டத்தினைக் குறிக்கும் ஒரு பெயர். அம்மொழிகளில், நனிமிகப் பழைய மொழி தமிழ். என் கருத்தில், அவற்றின் தாய்மொழி என்பதை நம்ப, நீண்ட பெரும் கற்பனை ஏதும் தேவை இல்லை. கன்னட மொழியின் தொன்மைக்கான உரிமை, அண்மையில் எழுப்பப்பட்டது என்றாலும், தென்னிந்தியாவில், சமஸ்கிருத மொழி தன் ஆதிக்க முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த்தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வளம் பெற்ற மொழிகள் ஆயின என உறுதியாகக் கொள்வதே நலமாம். ஆகவே திராவிடன் என்ற சொல்லுருவம், நாம் உறுதியாகக் கூறலாம், தொடக்கத்தில், தமிழ் மொழி, மற்றும் அதனின்றும் பிறந்த மொழிகளைக் குறிக்கவே வழங்கப்பட்டது என்று. நாகரீக வளர்ச்சியின் ஏற்ற இழிவுகள் மெதுவாக இருந்த, நாகரீகமுதிர்ச்சி அற்ற தொல்லுழிக் காலத்தில், மக்கள் நாகரீகம் அற்றவர்களாய்க் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வாழ்ந்தனர். இப்பல்வேறு பழங்குடிகளைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த சூழ்நிலை, அவர்களின் ஒழுக்கம், உள்ளுணர்வு, உடல் வளர்ச்சிகளில் அளந்தறிய மாட்டாத அளவு செல்வாக்குப் பெற்றுவிட்டது. அவர்கள் வாழ்ந்த இடத்தின் சூழ்நிலைகளின் வற்புறுத்தலால், அவர்கள் சில ஒழுக்கம், சில வகையான உணவு உண்ணு நீர் உடைகளை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களுக்குள்ளாகவே மணந்து கொண்டனர். இவ்வகையில் வாழ்க்கையில் ஒரு பொதுநோக்கு, மற்றும் மனவளர்ச்சி ஆகியவை, அவர்களிடையே, தங்களுக்கு உள்ளாகவே ஒருவனைத் தலைவனாகக் கொண்ட, ஒரு வலுவான கூட்டமைப்புக்குக் கொண்டு சென்றன. இந்தியாவின், அதிலும், சிறப்பாகத் தென் இந்தியாவின் தொல் பெரும் வரலாற்றின் பிரதிபலிப்பு, மற்றும் அறிவு, பழங்குடியினரிடையேயான, இந்த இரத்த உறவு ஒன்று கூடி வாழ்தல், ஒரு குழுவுக்கே உரிய உள்ளுணர்வு, ஒரு குழுவுக்கே உரிய தூண்டுதல், ஆகியவற்றிற்கு வழிகாட்டிற்கு என்பதைக் காட்டும். அது பழங்குடியினர் கூட்டமாகவோ, சாதிக் கூட்டமாகவோ தொழில்முறைக் கூட்டமாகவோ இருக்கலாம். ஆனால், குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கூட்டமாகக் கூடி வாழும் அமைப்பு அங்கு இருந்தது; அது நாட்டையும், சமுதாயத்தையும் குடியாட்சி நெறிக்குக் கொண்டுசெல்லத் துணை நின்றது. ஆகவே, திராவிட மொழி வழங்கும் நாட்டில் வாழ்ந்த மக்கள், தென்னிந்திய நாகரீகம் என்றும், மேலும் வரையறுத்த நிலையில் தமிழ் நாகரீகம் என்றும் இன்று நாம், பரவலாகப் பெயரிட்டு அழைக்கும், பல்வேறுபட்டவர் ஒன்று கூடி வாழும் ஒரு வாழ்க்கையை ஆனால் ஒரே மூலத்தில் தோன்றி, ஒரே சாடில் உடைய வாழ்க்கையைக் கண்டு வளர்த்தனர். (குறிப்பு: 23 காண்க).

சில மக்களால், பல நூற்றாண்டுக் காலம் குறிப்பிட்ட சூழ் நிலையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின், குறிப்பிட்ட சில பாணிகள், மனித மாதிரிகளில், தமக்கே, உரிய தனித்தன்மை வாய்ந்த, சில வடிவங்களைத் தோற்றுவித்துவிட்டன. தோல், உடல் நிறம், மூக்கமைப்பு ஆகியவற்றின் இனம் சார்ந்த வேறுபடுத்திக் காட்டும் தனி இயல்புகளெல்லாம், வாழும் இடத்தின் வெப்ப, தட்பங்கள், நில இயல்களின் ஈர்ப்பாற்றலின் விளைவாம். இப்போது, மங்களூரைச் சார்ந்த மக்கள், மலையாளர்களைக் காட்டிலும் அழகாக இருக்கும் அதே நிலையில், மலையாளிகள், பொதுவாகத் தமிழர்களைக் காட்டிலும் அழகானவர். ஆரியன் என்ற சொல் எங்கெல்லாம் ஆளப்படுகிறதோ, அது ஆரிய மொழி பேசும் ஆரிய வர்த்தத்தில் வாழ்பவனைக் குறிக்கும்: அல்லது சிறந்தவன், மதிக்கத்தக்கவனைக் குறிக்கும். பண்டை இந்திய நில இயல் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் ஆரியவர்த்தம், மத்தியதேசம். தஷினபாதம் அல்லது திராவிடம் என்ற மூன்று பெரும் ஆட்சிப் பரப்புச் சார்ந்த பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பதிற்றுப்பத்தின்படி ஆரியவர்த்தம் அல்லது ஆரிய நாடு, தண்டகாரண்யம் என்ற பெருங்காட்டைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திராவிட மொழி பேசும் திராவிட நாட்டில் வாழ்பவன், திராவிடன் ஆவன். இந்தியாவின் இலக்கியங்களில், ஆரியன் என்றோ, திராவிடன் என்றோ, இனம் சார்ந்த வேறுபாடு எதுவும் இல்லை. திராவிடம், பழந்தமிழர்களின் தாயகம், திராவிடம் என்பது, அங்கம், வங்கம் மகதம் என்பனபோல் ஒரு இடத்தின் பெயர். திராவிடம் அல்லது திரமிடம் என்ற சொல் வடிவம், பொதுவாகத் தமிழ் அல்லது “தமிள்” என்ற சொல்லின் திரிபாக, அடையாளம் காணப்படும் “தமிள” என்ற பழைய சொல்வடிவின் வளர்ச்சிநிலை ஆகும்.

திராவிடர் என்றால், தமிழ் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் மட்டுமே ஆவர் என நாம் கருதத் தக்கவரான திராவிடர்களின், தோற்றம் அல்லது மூலம் பற்றிய ஆய்வின்போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதங்களாகிய இருமொழி இலக்கியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களில் விளக்கியபடி தமிழகம் என்பது வடக்கில் திருப்பதி மலையாலும் ஏனைய மூன்று பக்கங்களில் கடலாலும் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். அப்படி என்றால், ஆந்திர தேசம் அல்லது மைசூர் மற்றும் கன்னடங்களின் ஒரு பகுதி, தமிழ் நாட்டோடு சேர்க்கப்படவில்லை என்பது பொருள். தமிழகம் முழுவதையும் தனக்கே உரிய இயல்பில், ஐந்து இயற்கைப் பிரிவுகளாக அதாவது திணைகளாகப் பிரித்திருப்பது: (குறிப்பு 24) வாடைக்குளிரைப் புகழ்ந்து, பாலை வெப்பத்தை வெறுத்தல், ஆசியாவில் உள்ளதுபோலும் மேட்டுச் சமவெளிகள் இல்லாமை, பண்டை பாபிலோனிய நாடாகிய “சால்டியன்” (Chaldean) நாட்டுக் கொடிமுந்திரியும் அத்தியும் இல்லாமை, சங்க இலக்கியங்களில் தன் நாட்டுக்கே உரிய மாவடை, மாவடைகள் குறிப்பிட்டுள்ளமை ஆகிய இவை அனைத்தும், தென்னிந்திய நாகரீகத்திற்கே உரிய, தனிப்பண்புகளைச் சுட்டுவனவாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை அளிக்கும் சான்று

முறையாக அகழ்ந்து ஆராய்ந்தால், மிகச் சிறந்த நல்ல பலன் அளிக்கவல்ல, நனிமிகப் பழைய இடங்கள் தென் இந்தியாவில் இருக்கவும், தொல்பொருள் ஆய்வுத் துறை, அதில் சிந்தனை செலுத்தாமல் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்துகொள்வது வருந்தத்தக்கது. இவ்வழியில் நல்ல பல பணிகள் ஆற்றிய முன்னோடி, புதியன காணும் முயற்சியாளர். திரு. புரூஸ் புட்டே (Bruce Foote) (குறிப்பு: 25) அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நீலகரியின் வரலாற்றுக்கு முந்திய நிலைகுறித்த, தம்தம் ஆய்வில், திருவாளர் பிரிக் (Breeks) (குறிப்பு: 26) அவர்கள் ஆற்றிய பணியும், மற்றும் திரு. அ. ரே. (A. Rea) அவர்கள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவராம். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை ஆய்ந்து அறிய உளமார்ந்த உண்மையான முயற்சி மேற்கொண்ட இவர்கள் போலும் தொடக்ககாலத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அளித்திருக்கும் சான்றுகளின் வலிமையே, என் ஆய்வுக் கட்டுரைக்கு நான் அடிப்படையாகக் கொண்ட மெய்யான பயன்மிகு அகச் சான்றுகளாம். திருவாளர் புரூஸ்புட்டே அவர்கள், ஏனையவற்றிற்கு இடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் தாம்பிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள ஆதிச்ச நல்லூரில், நூற்றுப் பதினான்கு ஏக்கர்களுக்கும் மேலான, மிகப்பரந்த இடத்தில் உள்ள, மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, பிணம் புதை குழிகளை ஆராய்ந்தார். ஆதிச்ச நல்லூரில் உள்ள இப்புதை குழிகள், புதிய கற்காலத்தை அடுத்துவந்த இரும்புக் காலத்தனவாகக் கொள்ளப்பட வேண்டும்; இவற்றிற்குக் குறிப்பிடத்தக்க இணையான புதைகுழிகள், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சிற்றூர்க்கு அடுத்த இடங்களிலும், பழநி மற்றும் ஆனை மலைச் சரிவுகளிலும், நீலகிரியிலும், கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தென் ஆற்காடு, அனந்தப்பூர், பெல்லாரி மற்றும் கர்னூல் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

பழங்கற்கால மனிதன் வாழ்ந்த இடங்கள் எவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் கல்லில் செய்யப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த, அவர்களின் கருவிகள், நான் முன்பே கூறியது போல், தென் இந்தியப் பழங்கற்கால மனிதன், ஏனைய நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல், அறவே நாகரீகம் அற்றவன் அல்லன் என்பதை உய்த்துணரக்கூடிய அளவு, எண்ணிக்கையாலும் அளவிறந்தன! வகையாலும் அளவிறந்தனவாம். பழைய கற்கால மனிதனின் கருவிகள் பெரும்பாலும் தென் இந்தியாவில் எளிதில் கிடைக்கும் கனிமமாம், படிகக்கல்லில் செய்யப்பட்டன. (குறிப்பு : 28). பெல்லாரிக்கு அணித்தாக உள்ள, தஷிண பீடபூமியிலும், மற்றும் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியிலும், பெருமளவில்

கண்டெடுக்கப்படும் பழங்கற்கால மனிதனின் கருவிகள், சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்புநிற மணிக்கல், சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரக் கனிமப் படிகக்கல் ஆகியவற்றில் செய்யப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட பழங்கற்காலக் கருவிகளில் பத்துக் கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, பல்வேறு வடிவுடையவாயினும், முன் வரிசையில் வைக்கப்படுவன கூரிய நீண்ட உருளை வடிவங்களாம். அந்தப் பத்தாவன: கோடரி, ஈட்டி, மண் அல்லது மரம் தோண்டு கருவி, வட்டவடிவான கருவி, கைக்கோடரி, கத்தி, தோல்மெருகிடும் கருவி, சலாகை, மற்றும் சம்மட்டி, தென்கடல் தீவுகளில் வாழ்பவர்கள் செய்வதுபோல், முதியவர்கள் தீயின் உதவியால், அடிமரத்துண்டங்களைக் குடைந்து வள்ளம் எனப்படும் சிறுபடகுகளைச் செய்யும்போது, நீண்ட முட்டை வடிவினதான வெட்டுக் கருவியின் முனை, கரிந்து போன மரப்பட்டைகளின் மிகை நீக்கிச் செப்பம் செய்யவல்ல கைக்கு அடங்கிய நல்ல கருவி ஆகும். புதிய கற்கால மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கருவிகளில் ஒன்றான, தோல் மெருகிடும் கருவி, பழைய கற்கால மக்கள் வேட்டை ஆடிக் கொன்ற விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்தினர் என்பதைக் காட்டுகிறது. தீயைப் பயன் கொள்ளுதல் தெரிந்திருக்கவேண்டும் என்பது ஊகித்து அறியப்படுகிறது. என்றாலும், நெருப்பு அல்லது மட்பாண்டத் தொழில் இருந்தமைக்கான அறிகுறி எதையும் நாம் காணவில்லை. ஆனால், அவர்தம் கருவிகள் வடிக்கப்பட்டிருக்கும் திறன், மற்றும் வேலைப்பாடுகளிலிருந்து அவர்கள் மதிக்கத்தக்க அளவு கலைத் திறம் வாய்ந்த மக்களே என்ற முடிவுக்கு வந்துள்ளார், திருவாளர் பூருஸ் புட்டோ (Bruce Foote) அவர்கள். பற்பல இடங்கள் பழங்கற்காலப் பொருள்களைத் தந்துள்ளன என்றாலும், அலிகூர் (Alicoor) மலைக் குன்றுகளே சிறந்த மைய இடமாம்.

புதிய கற்கால மனிதர் என்பார் தக்கிணத்திற்குப் புகழ் சேர்க்கும் கருப்புக் கல்லைப் பயன்படுத்தியவர் ஆவர். வெளிறிய நிறம் வாய்ந்த படிகக்கல் அவர்களை ஈர்க்கவில்லை. மேலும், அப்படிகக்கல், கரடுமுரடானதும் எளிதில் பிளக்க முடியாததும் ஆகும். திருவாளர் புட் அவர்கள் திரட்டி வைத்திருக்கும் புதிய கற்காலக் கருவிகள் ஓர் ஆயிரம் மாதிரிகளாம். அவற்றை வகைப்படுத்தியதில் தனிச் சிறப்பு வாய்ந்த, கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த 78 இனங்களை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 41 பண்படுத்தப்பட்ட மெருகேற்றப்பட்டவை. ஏனைய 37 மெருகேற்றப்படாதவை. பச்சைநிற மரகதக்கல், படிகக் கூட்டமைப்பு வாய்க்கப் பெறாத செறிவான களிமக்கல் போலும் வண்ணக்கற்களையும் போலவே வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்களும், வழக்கத்தில் வந்துவிட்டன. கிரீட் கிரீஸ் மற்றும் பிற மேலை நாடுகளைப் போலவே தென் இந்தியாவிலும், புதிய கற்காலம், இரும்புக் காலத்தால் தொடரப்பட்டது. புதிய கற்காலத்து மூதாதையர், இரும்புக் காலத்தையும் கடந்து வந்தனர். படிக்கல் பாறையிலும், இரும்பு, நீண்டகாலம் இருக்கக்கூடியது. அதனினும் கடினமானது என அறிந்தனர். ஆகவேதான், புதிய கற்காலத்தைச் சேர்ந்த பழைய சிற்றூர்ப் புறங்களில், இரும்பு காலத்து மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்களை ஒத்த ஒரே நாட்டவராகிய சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்பவர், பித்தளை மற்றும் செம்பினை அறிந்தவராய் இருக்கும்போது, தென் இந்தியா, பித்தளையையோ, செம்பையோ, மேற்கொள்ளவில்லை. பித்தளை மற்றும் செப்பு நாகரீகங்களோடு கொண்ட தொடர்பின் விளைவாக, உலோகக் கலவையை உருவாக்கும் கலை, பெரும்பாலும் இரும்பு காலத்தின் பிற்பகுதியில் கற்கப்பட்டது. அப்படி என்றால், இரும்புக் காலத்தின் தொடக்ககாலம், கி.மு. நான்காவது ஆயிரத்தாண்டுக்கும் முன்னர்க் கொண்டு

செல்லப்படவேண்டும். இந்தத் தொடக்க நிலை இரும்புக் காலத்துக்கு உரியது. சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவரும், நன்கு தெரிந்தவரும் ஆகிய பேராசிரியர் “கெளலாண்ட்” (Professor Gowland) அவர்கள், பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள், மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து, “இரும்பை உருக்குதல், எதிர்பாரா நிகழ்ச்சியாகத் திடுதிப்பென அறியப்பட்டது; இந்த எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத்தொழில், ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த நம் தீபகற்பத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்” எனக் கருத்தறிவித்துள்ளார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதாயின், நான் கேட்கின்றேன், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த கிரிட் (Crete) நாடு. தன் புதிய கற்காலத்திலிருந்து, இரும்புக் காலத்திற்குச் செல்ல இரும்பை எவ்வாறு பெற்றது? கற்கால மக்கள் எல்லாம் காட்டு மக்கள் அல்லர், அவர்களின் வாழிடம் எப்போதும் மலைகள் மேலான சமநிலங்கள்தாம். இரும்பு உருக்கும் உலை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்த்தான், மனிதன் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்; இல்லை என்றால் வேறு எவ்வகையில் அவன் மரங்களை வெட்டிக் காட்டை அகற்றினான்?

இரும்புக் காலத்தின் பிற்பகுதியில், நாகரீகம் அகலப் பெருகிவிட்டது. மக்கள், உலோகக் கலவைகளைக் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டனர். இரும்பை அடுத்தடுத்து, பொன், பித்தளை, செப்புப் போலும் உலோகங்களால் செய்யப்பெற்ற, கருவிகள் மற்றும் உண்கலம் போலும் கலங்களை, நாம் கண்டோம். மட்பாண்டத் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம், பெரிய பாரக்கல் காலத்துக் (Megalithic) கல்லறை முதல் பல்வேறு

இடங்களில் காணப்பட்ட மட்பாண்டங்களில் மீதுள்ள பெரிய எழுத்துக்களாம். இந்தக் காலகட்டம், திராவிடர் தெற்கு நோக்கிக் குடிபெயரத் தொடங்கி, அங்கேயே நிலைத்த குடியினராகி விட்ட காலமாகக் கருதப்பட்டது. இம்முடிவு, தொடக்க நிலை இரும்புக்காலத்துச் செழிப்பான பின்னணிகளைக் கூறத் தேவையில்லை. பழங்கற்கால, புதிய கற்காலத்து மனிதனின் மரபு வழி வாழ்வில் வேரூன்றி நிற்கும், தென்னிந்திய நாகரீகத்தின் அடிப்படையையே புறக்கணித்து விடுவதாகும் சில முடிவுகள், துரதிர்ஷ்டவசமாகக் கருத்தாழம் மிக்க நுண்ணிய சிந்தனை ஏதும் செலுத்தப்படாமலே, வழிவழி வந்த ஆராய்ச்சிப் பேராசிரியர்களாலும் அதையே ஒப்பிக்கும் மாணவர்களாலும், உறுதிப்படுத்தப்படுகின்றன. இதற்குப் பொருந்தும் எடுத்துக்காட்டு புத்தமதம். ஒரு மதமாம் நிலையை முழுமையாக அடைந்துவிட்டது என்பதை நாம் புத்தன் எனக் கூறுவதாகும். இது போகிற போக்கில் கூறியதுதான். நான் காட்ட விரும்பியது என்னவென்றால், மரபினைக் காலம் தோற்றுவிக்கிறது; திராவிட இனம் மத்தியதரைக் கடல் நாகரீகத்தைச் சேர்ந்தது என்ற கொள்கை இன்றுவரை, மறுக்கப்படாமலே, இருப்பதால், அது பெரும்பாலும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகிவிட்டது என்பனவே. அக்கருத்தை மறுக்க வேண்டிய கடும் பொறுப்பு என்மேல் வீழ்ந்துள்ளது.

திராவிடர்களின் தென்னிந்தியக் குடிபெயர்ச்சியை ஒப்புக்கொள்பவர்களும் கூட, இந்நாகரீகத்தின் அடிப்படையில் ஓர் ஒருமைப்பாடு இடங்கொண்டிருக்கும் உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனைய பிறவற்றினும் மேலாக, மட்பாண்டம். பிணம் புதைக்கும் முறை என்ற இரண்டு பொருள்களில் ஒருமைப்பாடு நன்கு பிரதிபலிக்கிறது. இவ்வுண்மைகளை எவ்வளவு சுருக்கமாக முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக உங்கள் முன் வைக்குமாறு உங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த உரிமையை

இரந்து கேட்டுக்கொள்கிறேன். முதற்கண் மட்பாண்டத் தொழிலை எடுத்துக் கொள்வோம். தென் இந்திய நாகரீகத்தைக் கற்காலம் தொடங்கி வளப்படுத்திய, தொழில் சார்ந்த கலைகளில் தொடங்குவதற்கு அடித்தளம் இட்டவை, பீங்கான், மட்பாண்டங்களாம். நான்கு வகைக்காலப் பிரிவுகளை, வேறு பிரித்துக் காணலாம். 1) புதிய கற்காலம், 2) கற்கால இரும்புக் காலங்களின் இணைந்த காலம் 3) முழுமையான இரும்புக் காலம் 4) பொதுவாக வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலம் என அழைக்கப்படும், இரும்புக் காலத்துக்குப் பிற்பட்ட காலம் புதிய கற்காலத்துக்கே உரிய, மட்பாண்டங்கள், மங்கலான் வண்ணமும், கரடுமுரடான மேல்புறமும் உடையவை. இரும்புக்கால மட்பாண்டங்கள், பளிச்சிடும் வண்ணமும், மெருகேற்றப்பட்ட மேல்புறமும் கலைக்கண்ணோடு கூடிய வடிவமைப்பும் கொண்டவை. குவளை மற்றும் பாண்டங்களின் மீது மனித உயிரினங்களின் உருவங்கள் வரையப்படாமை, தென் இந்தியாவின் தொடக்ககால மட்பாண்டங்கள் ஒரு சிறப்பு இயல்பு. ஆனால் நீலகிரியில் உயிரினங்களின் வடிவங்களோடு கூடிய, கணக்கிலா மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை விலங்கு உருவங்களைப் போலவே மக்கள் உருவங்களையும் கொண்டுள்ளன. நீலகிரியில் உள்ள புதைமேடுகள், விட்டம் அல்லது கூம்பிய வடிவுடைய அடித்தளங்கள்மீது ஒடவிடப்பட்ட சக்கரங்கள், புறத்தே அழுத்தப்படாத குறியீடுகளைக் கொண்ட பாண்டங்கள், மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட கட்டுக்கம்பிணைப்புத் தகடு ஆகியவை இருந்தமைக்கான சான்றுகளைக் கொண்டுள்ளன. தக்ஷிண பீடபூமியில், இலைமாதிரி ஒப்பனைகள், முலாம்பழ வடிவிலான கிண்ணங்கள், மலர்வடிவிலான கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அழகு செய்யப் பெறாதன, மற்றும் அழகு செய்யப்பெற்றன ஆகிய இருவகைகளும் கிடைக்கப்பட்டுள்ளன. கைகளால் செய்யப்பட்டனவும்

பெரும்பாலும் அருகிச் சக்கரங்களால் செய்யப்பட்டனவும், கிடைத்தன. சமஸ்கிருதப் பண்பாட்டின், தாக்குதலுக்கு முன்பே, மட்பாண்டத் தொழில், அழகிலும் வடிவமைப்பிலும் உயர்ந்த, முழு வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. எகிப்திய, கிரேக்க, இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களைச் சார்ந்த வெள்ளைக் களிமண்ணால் ஆன குவளைகளுக்கு இணையான குவளைகளுக்கு நனிமிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிற்றாசியாவின் (Asia Minor) வடமேற்கில் உள்ள பழைய டிராய் (Troy) நகரில் உள்ள இடிபாடுகளில் காணப்பட்ட பாண்டங்களோடு முழுவதும் உருவு ஒத்த புதிய கற்காலத்துப் பாண்டங்கள் கணக்கில நமக்குக் கிடைக்கின்றன. மேலும், பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட செம்பழுப்பு நிறக்கல் சவப்பெட்டி, இராக் நாட்டுப் பாக்நாத், இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களில் காணப்பட்ட செம்பழுப்புச் சவப்பெட்டிகள் போன்றுள்ளன.

மண்பாண்டத் தொழிலோடு நெருக்கமான தொடர்புடையது. தென் இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மற்றுமொரு அசைக்க ஒண்ணாச் சான்றாகிய, பிணம் புதை பல்வேறு வகைகளாம். ஐவகைப் பிணம் புதைக்கும் முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

1) பெரிய தாழிகளில் புதைக்கும் புதைகுழிகள் வயநாட்டிலும், ஆதிச்சநல்லூரிலும் காணக்கிடக்கின்றன. இங்கு, மண்பாண்டத் தொழில், பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தாழிகளில் சில, முழு உடலையும் அடைக்குமளவு பெரியன. எரியூட்டல் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. திருநெல்வேலித்தாழிகள், மட்கலம் மற்றும் பிற பொருள்களால் நிறைந்தும், சுற்றிலும் பல்வேறு பொருட்களால் சூழப்பட்டும் இருக்கும்போது, இங்குள்ள மண்டைஓடு, தொடக்கக் காலத்திய நீண்ட தலையை உடைய பழங்குடியினர் இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. வயநாட்டுப் பகுதிகளில் உள்ள தாழிகள், இரண்டு அல்லது மூன்று மட்பாண்டங்களைக் கொண்டுளது. ஆனால் பொருள்கள் எதுவும் சுற்றி இருக்கவில்லை. அப்பாண்டங்களின் வடிவமைப்பு, அகத்தே சிவப்புப் புறத்தே மெருகேற்றப் பட்டதுமாம். மிகவும் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால், சங்க இலக்கியங்களில் ஒன்றான மதிப்புமிகு புறநானூறு, தாழியில் புதைப்பதை நால்வேறு இடங்களில் குறிப்பிட்டுளது.


1 கலம்செய் கோவே! கலம் செய் கோவே!

 இருள்திணிந்தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
    அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
    நளந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!
    ...................
தாழி, வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே” -புறம்:228
“கவி செந்தாழி”  புறம்:238
“வயன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
 அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே. -புறம்:256
“கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்காடு” -புறம்:264

2. கால்கள் உடைய தாழி: இவை பல்வேறு அளவு உள்ளவாகியவும், கற்பலகைகளால் மூடப்பட்டனவுமான கல்லறைகள், சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் டெயிலர் சாலையில் உள்ள “பவுன்டெனாய்” (Fontenoy) என்ற பெயருடைய வீட்டில், மேலே கூறியது போலும் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது. சிறியவும், பெரியவுமான பல இருந்தன. பெரியவை, நீண்ட வடிவில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட இணையான கால்களைக் கொண்டவை. எல்லாவற்றிலும், சிறியன நாற்சதுர வடிவில் நான்கு கால்களை உடையன. மேலும், மூன்று கால்களையும், நான்கு கால்களையும் உடைய தாழிகளும் இருந்தன. அவற்றுள் மூன்று கால்களை உடைய தாழிகள், வட ஆர்க்காடு மாவட்டத்தில் தனிச்சிறப்புடையன.

3. தோண்டி எடுக்கப்பட்ட குடவரைக் கல்லறைகள் குடக்கல்லு, அல்லது குடைவடிவிலான கல்லால் ஆன கல்லறைகள். வட்டவடிவான நான்கு அடி ஆழம், 6 முதல் 8 அடி சுற்றளவு உள்ளதாக, செங்குத்தாகத் தோண்டப்பட்ட கல்லறை இது. ஒரு கல் அதை மூடி இருக்கும். செங்குத்தான இருகல்லும், அவற்றின் மீது தட்டையான கல்லும் கொண்ட, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய கல்லறை எனும் பொருளில் “டால்மென்” (Dolmen) என்றும் அழைக்கப்படும். இக்குடவரைக் கல்லறைகளுக்கும், பெரிய தாழிகளுக்கும் இடையில், ஒரு தொடர்பு இருப்பதை உணரலாம்.

4 மலபார் “தொளி” என்பதனோடு தொடர்புடைய, தோண்டிய அறையினவாய புதை குழிகள் பாறைகளில் நேர்மூலையினவாக வெட்டப்பட்டு, குடை வடிவான கூரையின், மையத்தே திறந்திருக்கும். ஒரு பெரிய கல் மூடியாக இருக்கும். இவ்வகையில் வியப்பிற்கு உரியது என்னவென்றால், “தொளி” என்ற இந்தப் பெயர். இத்தாலிநாட்டுக் கிரீட்டில் உள்ள சல்லறைக் குழிகளுக்கும் இட்டு வழங்கப்பெறுகிறது என்பது. கிரீட்டில் அது. கருங்கல் கடகால் மீது செங்கல்லால் கட்டப்பெற்ற தேன் கூடு வடிவமுள்ள கல்லறை. கிரீட் மன்னன் மினோயன் (Minoan) பெயரால் வழங்கும், கி.மு. 3000க்கு 1500க்கும் இடைப்பட்ட காலமாம் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தனவாகிய முத்திரைகள், பன்னிறப் பூவேலை செதுக்கு வேலை அமைந்த குவளைகள், குத்துவாள் முதலியன, திருவாளர் குலோட்ஸ் (Glotz) அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தொளை’ என்பது, துளை எனும் பொருள் உடையதான தமிழ்ச் சொல். இவையெல்லாம் கிரீட் நாட்டில், குடும்பக் கல்லறைகளாம். அதே குலமரபு, அவர்கள் விரும்பும் பொருள்கள் மீதும் கைவைத்துள்ளன. அதாவது, அக்கல்லறைகளுள் வைக்கப்பட்டுள்ளன. (The: Aegean Civilzation. P. 133-37)

5. தென் இந்தியாவைக் காட்டிலும், தஷிண பீடபூமியில் மிகுதியாகக் காணப்படும், வட்டக்கல் மூடி அறை கல்லறைகள் ஐதராபாத்தில் மெளலா அலி என்னும் இடத்தில் உள்ள, இத்தகைய கல்லறை ஒன்று, ஒரே காலத்தில் இருபதுபேர், நிமிர்ந்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இறந்தார் உடலைக் கொளுத்தும் வழக்கம் இருந்தமைக்கான அகச்சான்று எதையும் காட்ட இயலாமை கூறிய புதை முறைகளில் காணலாம் பொது இயல்பாகும். கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியமான மணிமேகலையில், இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகள், ஐந்து கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஒன்று சுடுதல், அடுத்த ஒன்று. சுடுதலோ, புதைத்தலோ அல்லாமல், வெற்றிடங்களில் வீசிவிடுதல். இது இடுதல், இவ்விரண்டும், ஆரியப் பண்பாட்டின் செல்வாக்கைக் காட்டிக் கொடுப்பதாக நான் கருதுகின்றேன். ஏனைய மூன்றும், தென் இந்தியாவுக்கே உரியனவாம். ஆழ்ந்த குழிகளில் புதைக்கும் (தொடுகுழிப்படுவோர்), மண் தாழிகளுள் அடைத்துப் புதைத்தல் (தாழ்வயின் அடைப்போர்), தாழியில் இட்டுக் கவித்தல் (தாழியின் கவிப்போர்). “சுடுவோர், இடுவோர், தொடுகுழிப்படுப்போர், தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்” (மணி 6: 66-67). இது பண்டை முறையிலான பிணம்புதை முறைகள், தொடர்ந்து இருக்கும் நிலையில், கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தில், புதுமுறைகளும், மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது.

நீலகிரிப் புதைமேடுகள் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. இவையல்லாமல், வேறுவகைக் கல்லறைகள், பாண்டுகுழிகளாம். அவை, படுகுழி அளவுக் கல்லறைகளோடு ஒப்பிடத்தக்கதாம். இவற்றோடு, குறும்பர் மற்றும், இருளர்க்கு உரியன. வீரக்கல் எனப்படும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறை (Cromlech) இவை போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் நினைவாக நாட்டப்படும். கல்லறை சார்ந்த கல் அன்று. இக்கற்கள் எல்லாம், வீரக்கல் மாசக்கல் மகாசதிக்கல் என அழைக்கப்படும். (உதாரணம் நீலகிரி காண்க.) இக்கல்லறைகளில், பல்வேறு காலங்களைச் சேர்ந்த பலபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள், வேல், சிறிய ஈட்டி, அம்பு, கத்தி,வெட்டுவாள், அரிவாள்களும் அவற்றுள் அடங்கும். இவை, கல் மற்றும் இரும்புகளால் செய்யப்பட்டன. அவற்றுள் சிலவற்றிற்கு, மரக் கைப்பிடிகளும் பொருத்தப்பட்டிருந்தன. மட்பாண்டப் பொருள்களும், மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மண்டை ஓடுகளும் வெளிக்கொணரப்பட்டன. பித்தளையால் செய்யப்பட்ட அணிகள், கருவிகள் ஜெபமாலைமணிகள், அபிரகத்துண்டுகள், நெல்உமி, தினை உள்ள பானைகள், ஆதிச்ச நல்லூரில் கண்டதுபோலும் மணிமுடிபோலும் அணிகள் ஆகியன, பல்வேறு கல்லறைகளில் காணப்பட்டன. (A.R.S. Of India. 19023 P. 111-140)நீலகிரி மண்பாண்டங்களில், விலங்குகளின் உருவம் காணப்பட்டபோது, ஆதிச்ச நல்லூரில் பித்தளையால் வார்க்கப்பட்ட விலங்கு உருவங்கள் காணப்பட்டன. இவ்வாறு காட்டப்பட்ட, வீட்டில் வளர்க்கப்பட்ட விலங்குகள், எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல் கோழி, முதலியன, கொடு விலங்குகள், புலி, யானை, மற்றும், மறிமான் முதலியன. இரும்பு மண்வாரி, அரிவாள், நெல் மற்றும் தினைகளின் உமி, சிறிய ஆடைகளை நெய்யும் அறிவு, நல்ல பருவத்துக் களிமண்ணால் செய்து சுடப்பட்ட மட்பாண்டங்கள், விரிவான உலோகத் தொழில்கள் ஆகியவற்றிலிருந்து அறியப்பட்டவாறு ஆதிச்சநல்லூர் நாகரீகம், உழவுத் தொழில் அறிவோடு கூடிய, கால மாற்றத்திற்குரிய நாகரீகமாம். இரும்பு மிக அதிகமாகப் பயன்பட்டிருந்த நிலையில், பித்தளையும் செப்பும் அருகியே இருந்தன.

பெரும்பாலும் பிற்காலத்தனவாய குகைக்கல்லறைகளில் உள்ள பொருட்களை ஆராய்ந்து பார்க்கச் சென்றால், காணக்கூடிய கால முரண்பாட்டினை, காலவழு அதாவது பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும், முற்காலப்பண்புகளைப் பிற்காலத்திற்கும் கொண்டு செல்வதைக் காணலாம். தொல் பழங்காலத்தைச் சேர்ந்தனவாய நீண்ட உருளை வடிவிலான ஜெபமாலை மணிக்கற்கள், கி.பி. 100க்கும் 200க்கும் இடைப்பட்டனவாய, நாணயங்களோடு கலந்துள்ளன. இவை ஆந்திரநாட்டுக் கிருஷ்ணா மாவட்டத்தில் காணப்படுபவை. கோவை மாவட்டத்துச் சூலூரில் உள்ள பாரக்கல் காலத்துக் கல்லறைகளில், கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, எரான் வகை (Eran) நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டதைச் சேர்ந்த தங்கல் எனும் இடத்தில் உள்ள ஒரு கல்லறையில், கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தனவாய, இரும்பாலான மீன் பிடிமுள், அழகுற வடிவமைக்கப்பட்ட மண்பாண்டங்கள், மூக்கு, காது அணிகள் கண்ணாடி வளையல்கள், துளையிடு கருவியால் முத்திரை இடப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்துக் கழுகுமலைச் சவக்குழியில், மண்குழாய்கள் இரும்பால் செய்யப்பட்ட கருவிகள். சோழர் காலத்தன போலும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்லறைகளெல்லாம், தொல்பெருங் காலத்து அழியா அமைப்பு நிலைகள் எல்லாம் சோழர் காலம் வரையும் எவ்வாறு அழியாது இருந்து வந்துள்ளன என்பதொன்றையே காட்டுகின்றன. இவையெல்லாம், இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கீரிட் நாட்டில் உள்ளனவாக நாம் கண்ட, குடும்பக் கல்லறைகளாம். இத்தாலி நாட்டவர், காலாகாலமாக இறந்தவர்களை அவர்கள் விரும்பிய பொருள்களோடு, ஒரே பிணக் குழியில் புதைத்து வந்தனர். மலபாரில் இன்றும் கூட ஒவ்வொரு வீட்டின் தென்பகுதியில், வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக இறந்து வருபவர்களைச் சுட்டு எரிக்கும் சுடுகாடு உளது. தென்இந்திய நாகரீகம், புதிய கற்காலம் முதல், சோழர் காலம் வரை, இழையோடிக்கிடக்கும் நாகரீக ஒருமைப்பாட்டிற்கு இது மற்றுமொரு அகச்சான்று.

ஒப்பிட்டுப் பேசுவதாயின், கி.மு. 4000 ஆண்டைச் சார்ந்த, புதிய கற்காலத்து எகிப்து நாகரீகத்தில் கல் அறிவுதான் இருந்தது; இரும்பு அறியப்படவில்லை. தென் இந்தியாவைச் சார்ந்த, புதிய கற்காலத்து மண்பாண்டங்கள் அரச இன ஆட்சிமுறைக்கு முற்பட்ட எகிப்தில் காணப்பட்டு, தென் இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையில், கற்காலத்திலேயே இருந்த உறவினை, உறுதிப்படுத்தத் துணைபுரிகின்றன. திரு. டாக்டர். ஹால் (Dr.Hall) அவர்கள், ஆய்வின்படி, கிரேக்க நாட்டிற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட ‘‘ஏகியன்’’ (Aegean) நாட்டுப்பள்ளத்தாக்கைச் சார்ந்த புதிய கற்காலத்து நாகரீகத்தின் மீதுதான் ஆதிக்கத்தைச் செலுத்தியது, எகிப்து நாட்டுப்புதுக்கற்கால நாகரீகம்தான். இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கிரீட் நாட்டின், கி.மு. 2500க்குப் பிற்பட்டதான ‘‘மினோயன்’’ (Minoan) எனப்படும். பித்தளை நாகரீகம், ‘‘ஏகியன்’’ நாகரீகத்தின் வளர்ச்சியே. இவ்வகையில், தொல்பழம் நாகரீகங்கள் எல்லாம், தமக்குள்ளாகவே, ஒன்றிடமிருந்து ஒன்று கடன் வாங்கப்பட்ட நாகரீகம்தான் என்பதைக் காண்கிறோம்; ஆனால், திருவாளர் ஹெரோடோடஸ் (Herodotus) அவர்கள் விட்டுச்சென்ற அனைத்து அகழ் ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும், கிரேக்க, மற்றும் எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரீகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்? என்பதை அறிய, நல்ல வழிகாட்டியினை நமக்கு அளிக்கவில்லை; அவை இரண்டுமே, வெளியிலிருந்து வந்து குடியேறியவை என்ற அழுத்தமான மரபுவழிக்கொள்கையை உடையன. அவை ஆரியமொழி எதையும். அதாவது ஆரிய அடிப்படை எதையும், பேசவில்லை. அங்ங்னமாகவே, அவை தொல்பழங்காலத் திராவிட நாகரீக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக்கிடப்பதாம். கிரீட், பித்தளை மற்றும் செப்பு நாகரீகத்திலிருந்து, எத்தகைய இடையறவும் இல்லாமல், இரும்பு நாகரீகத்துக்குச் சென்று விட்டது. இந்தியாவிலும், நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரீகம் என்பது போலும் ஒரு நாகரீகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச்சூழ்நிலைகளையெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த, தொல்பழம் நாகரீகம், திராவிட மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவை என்பதை எவனொருவனும் உய்த்துணரலாம். மொழி இடம் பெயர்ந்தது. அம்மொழியோடு, அம்மொழி பேசும் மக்களும் குடிபெயர்ந்தனர். ஆகவே, எதிர்கால நாகரீகம், மத்தியதரைக் கடல் கடற்கரையில் பிறக்கவில்லை; மாறாக, இந்தியத் தீபகற்பத்தின் கடற்கரைகளில், காவேரி, தாம்பிரபரணி, பெரியாறு, அமராவதி மற்றும் கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா போலும் பேராற்றங்கரைகளிலேயே பிறந்தன என்பதே என் ஆய்வுக் கட்டுரையின் முடிவாம்.