தமிழவேள் திருத்தசாங்கம்

தமிழவேள் திருத்தசாங்கம்

தொகு

ஆசிரியர்: முல்லைவாணன்

தொகு
பெயர்
விரையார் இளந்தென்றால் வீசுபுகழ்ப் பேச்சும்
உரையார் நறுமன்ற ஊக்கும்- நுரையார்
வாராழிச் சிங்கை வளத்தொண்டன் சாரங்கன்
ஓராழி யானென் றுரை.
பாட்டுடைத்தலைவன்பெயர்
சாரங்கபாணி
(தோற்றம்:11 மே, 1903; மறைவு: 16 மார்ச், 1974)
(தமிழர் சீர்திருத்தச்சங்கத்தில் பட்டிமன்றம், பேச்சுப்பயிற்சி நடத்தியமை)
நாடு
உலகத் தமிழாய்வின் ஒண்புகழ்கேட் டீயோ
நிலவித் தணக்கும் நிலவே- உலவித்
தண்ணரும் பாய்ச்சுந் தகவார்க்குச் சீர்செய்த
ஒண்மையன்வாழ் சிங்கையென் றோது.
அவர் நாடு
சிங்கப்பூர்
(முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்குச் சிறப்புச்செய்தமை)
ஊர்
பழிக்கொடிய இந்தியருள் பைந்தமிழர் சேரார்
மொழிக்கொடியின் கீழவர்கள் மூள்வார்- இழுக்கொடிய
வாழ்வாரென் றேயுரைத்த வள்ளால்ஊர் சொல்கதிரே
தாழ்விலாரொன் றாரூர் தனை.
அவர்பிறந்த ஊர்
திருவாரூர்
(சிங்கப்பூர் இந்தியப் பேராயக் கட்சித் (காங்கிரசுக் கட்சி) தலைவர் (1964) இந்தியர் என்ற அடிப்படையில் ஒன்றுபடச் சொன்னபோது தமிழ் அடிப்படையில் தமிழர் ஒன்றுகூடுவர் என்று வலியுறுத்திப்பேசியமை)
ஆறு
முரசிதழில் பேரவையும் முன்னே றெழுத்தர்
உரசிபுக ழாமா றுயர- அரசவினைத்
தாமென்ன பல்பெயரில் தாங்கொண்ட நல்வினையா
றாமென்று கிள்ளாய் அறை
ஆறு
நல்வினை (நல்லசெயல்கள்)
(எழுத்தாளர் பேரவையைத் தொடங்கியதோடு 'அண்ணாத்துரை அறிஞரா?' என்பன போன்ற பல்வேறு தலைப்புக்களில் அவர்களை எழுதும்படி செய்து எழுத்தாளர்களின் திறனை வளர்த்தமை
மலை
மலையாய்த்தொண் டாற்றி மகிழ்ந்தவெண் தாடி
அலைபாய்ச்சிங் கைவருகை அண்ண- உலைவாயைப்
போன்றார் புறந்தள்ளிப் பொய்கொன்றான் ஆர்மலைக்கும்
சான்றான் எனவண்டே சாற்று
மலை
எதிர்ப்புக்கள் என்னும் மலை
(தந்தை பெரியார் சிங்கப்பூர்க்கு வந்தபோது ஏற்பட்ட பெருத்த எதிர்ப்புக்களைத் தகர்த்து அவருக்குச் சிறப்புச் செய்த செயல்)
ஊர்தி
பட்டைகொட்டைப் பூணூல் பலவும் அணிந்துசாதி
முட்டையிடல் போல்சங்க முன்வாலேன்- வெட்கமிலாச்
செய்கை இதைநீக்குஞ் சீர்திருத்தம் தான்தோழி
பெய்வானிற் கூர்தியெனப் பேசு
ஊர்தி-(வாகனம்)
சீர்திருத்தம் என்ற வாகனம்
(சாதியின் பெயரால் தமிழ் அமைப்புக்கள் அமையக் கூடாது என்ற கொள்கை கொண்டவர் தமிழவேள்)
படை
செந்தமிழர் மூடரெனச் செப்பிய நேருமனம்
நொந்துசெலக் கார்கொடியைத் தூக்கிவிட்டான்- வெந்தவுளப்
பேராயர் கண்மறைத்தான் பீடதுவே தன்படையாம்
சீராய்வாங் கென்குயிலே செப்பு
படை (ஆயுதம்)- கறுப்புக்கொடி
(நேரு அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்டியது; அதனால் பேராயத்தார் கண்களுக்குப் புலப்படாது தலைமறைவாயிருந்தமை)
முரசு
மாணிக்க னார்சிலம்பும் மாப்போசி யின்தெலுங்கும்
பேணித் தவிர்ததான்காண் பொற்றொடீஇ- மாணிக்கம்
போல்வான் தெலுங்கப் புரப்பில்லம் ஒப்பாத
சால்பைத் தமிழ்முரசாய்ச் சாற்று
முரசு- தமிழ்முரசு
(முத்து இராச மாணிக்கனாரைக் கொண்டு சிலப்பதிகாரத் தொடர்சொற்பொழிவு நடத்தியமை; ம.பொ.சி.அவர்கள், தெலுங்கில் பேசியபோது தமிழவேள் தமிழிலேயே அவருக்கு விடைதந்தமை; தான் இருந்தவரை 'தெலுங்க சமாசம்' தொடங்கவிடாது தடுத்துவந்தமை)
மாலை
மக்கள் செயல்கட்சி மாண்பார் தலைவர்களை
ஒக்க தமிழ்த்திருநாள் ஓர்ந்துரைத்தான்- சிக்கலின்றி
வாழக் குடியுரிமை வாகைகொண் டானென்றே
வேழமே சொல்லி விரை
மாலை
குடியுரிமை எனும் வாகைமாலை
(மக்கள் செயல் கட்சியை -ம.செ.க- ஆதரித்து அக்கட்சி ஆட்சிக்கு வர ஆசிரியஉரையைத் தீட்டித் தமிழர் திருநாள் விழாக்களில் அக்கட்சியின் தலைவர்களைச் சிறப்புரையாற்றச் செய்தமை)
கொடி
அறுப்பகத்தின் பக்கம் அருந்தமிழப் பள்ளி
மறுப்பரசு செய்யதிரு மாலைச்- சிறிதிடம்
வேண்டினன் இல்லை விளக்கணைத்தான் கல்விக்கொடி
ஊன்றினன்என் றன்பே உரை
கொடி
கல்விக்கொடி
(வாசுகி தமிழ்ப்பள்ளிக்காகக் கோயில் நிலத்தைக்கேட்டு அது கிடைக்காமற்போகவே, கோயிலின் விளக்கணைத்துத் தலைமறைவாயிருந்தமை)
பார்க்க
தமிழவேள் திருஅம்மானை
தமிழவேள் திரு சாரங்கபாணி அவர்களைப்பற்றி மேலும் தகவல் அறிய பார்க்கவேண்டிய நூல்: கவி்க்குலம் போற்றும் தமிழவேள் தொகுப்பாசிரியர்: மு.தங்கராசன், தமிழவேள் நாடக மன்றம், சிங்கை-2775.