தமிழின்பம்/அமுத சுரபி

14. அமுத சுரபி[1]


ளவேனிற் காலம், இளங்காற்று, இனிமையாக வீசுகின்றது. நீலவானத்தில் நிறைமதி எழுந்துவருகின்றது. இன்பமயமான அவ்வேளையில் மணிபல்லவம் என்ற தீவகத்தில் காட்சி தருகின்றாள் ஒரு மங்கை.

மணிமேகலை என்னும் பெயருடைய அந்நல்லாள் வெண் மணற்குன்றுகளையும், விரிபூஞ் சோலைகளையும் கண்டு வியந்து உலாவுகின்றாள். நன்மணம் கமழும் பூஞ்சோலையின் அருகே,

"மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி”

அவள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. அத் திருக்குளத்தின் தெள்ளிய அலைகளில் வெண்ணிலாவின் ஒளி கலந்து விளையாடும் காட்சியையும், கண் போல் மலர்ந்த கருங்குவளையின் செவ்வியையும் கண்டு மனங்குளிர்ந்து நிற்கின்றாள் மணிமேகலை.

அப்போது அப் பூம்பொய்கையின் அலைகளிலே மிதந்து, கரையை நோக்கி வருகின்றது ஒரு திருவோடு. தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த திருவோட்டைத் தலை வணங்கி, மலர்க் கரத்தால் எடுக்கின்றாள் மணிமேகலை. அத் திருவோடுதான் அமுதசுரபி; எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு கொடுக்கும் உயரிய பாத்திரம். அதுவே, அறம் வளர்க்கும் அருங்கலம்; பசிப் பிணியை வேரறுக்கும் படைக்கலம்.

இத்தகைய அமுத சுரபியைக் கைக்கொண்டு அற்றார்க்கும் அலந்தார்க்கும் தொண்டு செய்ய ஆசைப்பட்டாள் மணிமேகலை; "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்னும் உண்மையை உள்ளத்திற்கொண்டு அருளறம் புரியத் தொடங்கினாள்; வருந்தி வந்தவர் அரும்பசி களைந்து, அவர் திருந்திய முகங்கண்டு திளைத்தாள். அவள் ஆற்றிய பணியால் தமிழகத்தில் பசிப்பிணி ஒழிந்தது.

இன்று தமிழகம் என்றுமில்லாத கடும்பஞ்சத்தின் வாய்ப்பட்டுப் பரிதவிக்கின்றது. "மாதம் மூன்று மழையுள்ள நாடு வருஷம் மூன்று விளைவுள்ள நாடு” என்று புகழப்பெற்ற தமிழகத்தில் இப்போது எல்லோரும் வயிறார உண்பதற்குப் போதிய உணவில்லை. குடிகளுக்குப் படியளக்கும் பொறுப்புடைய அரசாங்கம், பொறி கலங்கி வடநாட்டையும் பிறநாட்டையும் நோக்கி வாடி நிற்கின்றது. "பசியற்ற நாடே பண்புற்ற நாடு" என்பது பழந்தமிழர் கொள்கை. அதனாலேயே முன்னாளில் இந்நாட்டையாண்ட மன்னர்கள் பயிர்த் தொழிலைக் குறிக்கொண்டு பேணினார்கள்; காடுகளை வெட்டித்திருத்தி நாடாக்கினார்கள்; ஆற்றிலே அனைகள் கட்டினார்கள்; ஒல்லும் வகையால் உழவரை ஆதரித்தார்கள்; சுருங்கச்சொல்லின், தமிழகத்தை ஒர் அமுத சுரபியாக்க ஆசைப்பட்டார்கள்.

பாரத நாடு இன்று தன்னரசுபெற்ற தனி நாடாகத் திகழ்கின்றது. வல்லரசு நீங்கிவிட்டது; நல்லரசு நிலவுகின்றது. 'நாட்டிலே உண்ண உணவில்லை' என்று ஒருவரும் வருந்தாதபடி வளம் பெருக்கிக் குடிகளைக் காப்பதன்றோ நல்லரசின் முதற் கடமை? தமிழ்நாட்டுக் கவிஞராகிய பாரதியார், வருங்காலப் பாரத அரசாங்கத்திற்கு-சுதந்தர அரசாங்கத்திற்கு -அடிப்படையான பொருளாதாரத் திட்டமொன்று வகுத்துப் போந்தார்:

"இனிஒருவிதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனிஒருவனுக் குணவில்லை.எனில்
சகத்தினை அழித்திடுவோம்”

என்பது அக்கவிஞரின் வாக்கு. இயற்கை வளம் நிறைந்த பாரத நாட்டில் பசிப்பிணியை ஒழித்தல் அரிதன்று. கங்கையும், கோதாவரியும், காவிரியும் பாய்கின்ற வளநாட்டில் உணவுப் பஞ்சம் தலை காட்டலாகுமோ? இன்று வளர்ந்தோங்கி வருகின்ற விஞ்ஞானக் கலைகளின் உதவியால் விளைபொருள்களைப் பெருக்கி, பாழிடங்களையெல்லாம் பயிர் முகங்காட்டும் பழனங்களாக்கி, பாரத நாட்டை ஒர் அமுத சுரபியாக உருவாக்குதல் அரிதாகுமோ?

உடலை வளர்ப்பது உணவு; உயிரை வளர்ப்பது அறிவு.

"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”

என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அறிவுப் பசி இப்பொழுது தமிழ்நாட்டிலே அதிகரித்து வருகின்றது. அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை - அருங்கலை நிறைந்த தமிழ்மொழியைப் 'போற்றாதே ஆற்ற நாள் போக்கினோமே' என்ற உணர்ச்சி ஆங்கிலங்கற்ற அறிஞருள்ளத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. பாரத நாட்டின் அங்கங்களாக அமைந்த ஒவ்வொரு மாகாணத்திலும் அவரவர் தாய்மொழியின் வாயிலாகவே அறிவு ஊட்டப்படவேண்டும் என்ற கொள்கை உரம்பெற்று வருகின்றது. இவை யெல்லாம் பாரத நாட்டில் எழுந்துள்ள அறிவுப் பசியைக் காட்டும் அறிகுறிகள். இத்தகைய பசி, ஒல்லையில் வந்துவிடும் என்பதை முன்னரே அறிந்த பாரதியார், தமிழ் மக்களை நோக்கி,

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்துஇங்குச் சேர்ப்பீர்!”

என்று பணித்துப் போந்தார்.

தமிழ் மொழியிலே மறுமை இன்பத்தை அடைய வழிகாட்டும் மெய்ஞ்ஞான நூல்கள் மட்டும் இருந்தாற் போதாது; இம்மை யின்பம் பெறுதற்கேற்ற விஞ்ஞான நூல்களும் வேண்டும் என்று பாரதியார் ஆசைப்பட் டார்; அப் பணியிலே தலைப்படும்படி அறிவறிந்த தமிழ் மக்களை வேண்டினார். எனவே, அறிவுப் பசி யைத் தீர்க்கும் அருங்கலைச் சுரபியாகவும் விளங்குதல் வேண்டும்.

தமிழ்மொழியின் தனிப் பண்புகளைத் தமிழ் நாட்டாருக்கு அமுதசுரபி வாரி வழங்கும் என்று நம்புகின்றோம். இனிமை என்பது தமிழின் தனிப் பண்பு.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"

என்று பன்மொழி யறிந்த பாரதியார் பாடினார். அவருக்கு முன்னிருந்த அறிஞர்களும் கவிஞர்களும் மதுரம் நிறைந்த தமிழின் அருமையை மனமாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தியுள்ளார்கள். 'என்று முளதென்தமிழ்' என்று தமிழின் வாசி யறிந்து ஆசி கூறினார் கம்பர். இத்தகைய இனிமை வாய்ந்த மொழியை - மூவாச் சாவா மொழியைப் பிறப்புரிமையாகப் பெற்ற பெருமை என்றும் தமிழருக்கு உண்டு. ஆயினும், தம்பெருமை தாமுணராத் தன்மையராய்த் தமிழர் இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைத் தட்டி எழுப்பி, தமிழ் அமுதை ஊட்டி,

"தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!"

என்று ஊக்குதலே அமுதசுரபி செய்தற்குரிய அருஞ்சேவையாகும். 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக' என்று மணிமேகலையின் கையில் அமைந்த அமுதசுரபியை அன்று வாழ்த்தினாள் ஆதிரை என்னும் நல்லாள். தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையம்பதியிலே இன்று எழுகின்ற தமிழ் மயமான 'அமுதசுரபி'யைத் 'தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்க' என்று வாழ்த்துகின்றோம்; வரவேற்கின்றோம்.


  1. அமுத சுரபி' என்னும் தமிழ் மாதப் பத்திரிகையின் தலையங்கமாக எழுதப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழின்பம்/அமுத_சுரபி&oldid=1412137" இலிருந்து மீள்விக்கப்பட்டது