தமிழின்பம்/அழகும் முத்தும்

24. அழகும் முத்தும்

தமிழ் நாட்டிலே புலவர் பாடும் புகழுடையார் என்றும் உள்ளார். அன்னவருள் ஒருவர் ஐம்பதாண்டுக்கு முன்னே நெல்லையம் பதியில் வாழ்ந்தார். அவர், முத்தமிழ்ச் சுவை தேர்ந்த வித்தகர்; முத்துச்சாமி என்னும் பெயரினர். அந்நாளில் ஆக கவியாய் விளங்கிய அழகிய சொக்கநாதர் அவ் வள்ளலின் ஆதரவைப் பெற்றார். ஆற்றிலே நீராடச் செல்லும் போதும். மேடையிலே நின்று மெல்லிய தென்றலைத் துய்க்கும் போதும், கோடையிலே குளிர் பூஞ்சோலையிற் சென்று உலாவும் போதும் அழகிய சொக்கர் அவ்வள்ளலின் குறிப்பறிந்து கவி பாடுவார்; அவர் இன்புறக் கண்டு தாமும் இன்புறுவார்.

ஒரு நாள். அச் செல்வர். அழகிய சொக்கருடன் உலாவி வரும்பொழுது, கரும்புத் தோட்டத்தின் அருகே கான மயில் ஒன்று ஆடக் கண்டு களிப்புற்று நின்றார். இளங்காற்றிலே ஆடிய கரும்பின் தோகையும், இன்பப் பெருக்கிலே ஆடிய மயிலின் தோகையும் அவர் கண்ணைக் கவர்ந்தன. அந் நிலையில் அழகிய சொக்கரை நோக்கிக் கரும்புக்கும் கான மயிலுக்கும் பொருந்தும் கவியொன்று பாடும்படி அவர் வேண்டினார். கவிஞரும் அக்காட்சியைக் கண்டு களிப்புற்று உடனே பாடலுற்றார்:

"மேனியெல்லாம் கண்ணுறலால் வேள்விரும்பும்
                                  தன்மையினால்
ஆணபசுந் தோகையினால் ஆடலினால் - மீனவன்நேர்

மானபரா! நெல்லைநகர் வாழுமுத்துச் சாமிமன்னா!
கானமயில் ஒப்பாம் கரும்பு"

என்ற சொக்கர் பாட்டின் சுவையறிந்து இன்புற்றார் வள்ளல். "மயிலுக்கு மேனியெல்லாம் கண் கரும்புக்கும் மேனியிலே கண்(கணு). மயிலைச் செவ்வேள் விரும்பி வாகனமாகக் கொண்டான் கரும்பை மாரவேள் விரும்பி வில்லாகக் கொண்டான். இன்பவுணர்ச்சியுற்ற போது மயில், தோகையை விரித்து ஆடும்; இளங்காற்று வீசும்போது கரும்பின் தோகையும் அசைந்து ஆடும். எனவே, கானமயில் ஒப்பாகும் கரும்பு" என்ற கருத்தமைந்த கவியைக் கேட்டு வள்ளல் மனமகிழ்ந்தார்.

கரும்புத் தோட்டத்தைக் கடந்து சாலையின் வழியே நடந்தனர் இருவரும். வளமான வாழைத் தோட்டம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. மேல் நோக்கி விரிந்த இலைகளையும், தரை நோக்கித் தாழ்ந்த பசுங்குலைகளையும் கண்ட வள்ளல், அருகே தின்ற கவிஞரை நோக்கினார்; 'காய்' என்று தொடங்கி இலை என்று முடியும்படி ஒரு கவி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உடனே வந்தது. செந்தமிழ்ப் பாட்டு:

"காய்சினம்இல் லாதான் கருணைமுத்துச் சாமிவள்ளல்
வாய்மையுளான் பாடி வருவோர்க்குத் - தாய்நிகர்வான்
எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில்
இல்லையென்ற சொல்லே இலை"

என்று சொக்கர் சொல்லிய வெண்பா வள்ளலின் உள்ளத்தைத் தொட்டது. இலையையும் குலையையும் நோக்கி நின்ற வள்ளலைத் தலைகவிழச் செய்தது அப்பாட்டு. காய் என்றெடுத்து இலையென்று முடித்த கவியிலே அப்படி என்ன பொடியைப் போட்டு விட்டார் சொக்கர்? அவ் வள்ளலிடம் அமைந்திருந்த குணங்களையே பொருளாக வைத்து, அவர் எடுத்துக் கொடுத்த இரு சொல்லையும் ஆதியும் அந்தமுமாக அமைத்து ஆனந்தமாகப் பாடிவிட்டார். முத்தமிழை ஆதரித்த முத்துச்சாமி வள்ளலை வாயாரப் புகழ்ந்து பாட எப்போது வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த கவிஞர் இப்போது தம் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அப்பாட்டின் நயத்தைச் சிறிது பார்ப்போம் :

வள்ளல், காய் சினம் அற்றவன்; கருணையுற்றவன்; வாய்மை உடையவன்; தாய்மை வாய்ந்தவன். கையால் அவன் அளிக்கும் கொடைக்கு எல்லை பில்லை. அவன் நாவில் இல்லையென்ற சொல்லே இல்லை என்பது பாட்டின் கருத்து. சேர்ந்தாரைக் கொல்லும் தன்மையுடைய தென்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் சொல்லிய முறையில் காய் சினம் என்று கவிஞர் எடுத்த எடுப்பும், ஊழி பெயரினும் பெயரா உரையுடையார் என்று கம்பர் முதலிய கவிஞர் பாராட்டிய காராள குலத்திற் பிறந்த வள்ளலை, வாய்மையுளான் என்று குறித்த வண்ணமும், பெற்ற பிள்ளைக்குப் பால் நினைந்தூட்டும் தாய் போல் பாடி வந்த பாவலர்க்குப் பரிசளித்த தலைவனைத் தாய் நிகர்வான் என்று போற்றிய தன்மையும், எவர்க்கும் இல்லையென்னாது எல்லையின்றிக் கொடுத்த நல்லானிடம் 'இல்லை என்ற சொல்லே இலை' என ஏத்திய அழகும் இப் பாட்டிலே அமைந்திருக்கக் கண்டு எல்லையற்ற இன்பம் அடைவர் தமிழறிஞர். வள்ளலும் கவியரின் சுவையறிந்து களிப்புற்றார்; ஆயினும் தம் பெருமையைப் பாட்டின் வாயிலாகக் கேட்டபோது நாணித் தலை கவிழ்ந்தார்.

ஒருநாள், வள்ளலின் மிதியடி காணாமற் போயிற்று. அதைக் கவர்ந்த கள்வனைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்தினர் காவலாளர். அச் செய்தியை அறிந்த வள்ளல், சொக்கரைப் பார்த்துப் புன்னகை புரிந்து செருப்புக்கும் திருடனுக்கும் பொருத்தமான பாட்டிசைக்கும்படி வேண்டினார். அப்போது எழுந்தது பாட்டு.

"அங்கங் களவால் அதுகண் டுதைப்புறலால்
எங்கும் மிதியடியென் றேசொல்லால் - வெங்கல்
கரடுமுட்களு சாததினால் காமர்முத்துச் சாமி
திருடனைஒப் பாகும் செருப்பு"

என்ற கவியை விருப்பமாய்க் கேட்ட வள்ளல் செருப்புத் தொலைந்ததால் அன்றோ இச் செய்யுள் கிடைத்தது என்று அகமகிழ்ந்தார்.

அப்பாட்டின் சிலேடை நயத்தைப் பார்ப்போம்; "கள்வனுக்கு அங்கம் களவு: செருப்புக்கு அங்கங்கு அளவு; கள்வனது களவு கண்டு உதைப்பார்கள்; செருப்பின் அளவு கண்டு உதைப்பார்கள்; கள்வனை ‘மிதி அடி என்பார்கள். செருப்பையும் மிதியடி’ என்பார்கள். இன்னும் கல்லும், முள்ளும், கரடும் கண்டு அஞ்சாது செல்வான் கள்வன்; அவ்வாறே கல்லும், முள்ளும், கரடும் கண்டு செருப்பு அஞ்சாது” என்பது இப்பாட்டின் பொருள். முத்தமிழ் அறிந்த முத்துசாமி வள்ளல் மகிழ்ந்து அளித்த பரிசுகளைச் சொக்கர் நன்றியுடன் பெற்றுக் கொண்டாரேனும், பொருள் ஒன்றையே அவர் கருதியவரல்லர் வருவாய் மாசம் பத்து வந்தாலும் அதனையே மா சம்பத்தாகக் கொள்ளும் மனப் பண்புடையவர். இரும்பையிழுக்கும் காந்தம்போல், வள்ளலின் இன்சொல், கவிஞரைப் பிணித்தது. அவர் சொல்லில் அமைந்த சுவை, அமுதம் போன்றிருந்தது. அம்மானைப் பாட்டிலே அதைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர்.

"காராள மாமரபிற்
கன்னன்முத்துச் சாமியெனும்
சீராளன் வாய்ச்சொற்கள்
தெள்ள முதம்அம்மான!
சீராளன் வாய்ச்சொற்கள்
தெள்ளமுதம் ஆமாயின்
ஆராய்ந்து தேவர்கள் உண்
டாடுவரோ அம்மானை!
அருமைப் புலவர்கள்கொண்
டாடுவா ரம்மானை!"

என்று அல்லும் பகலும் அவ்வள்ளலின் அமுத மொழிகளைப் பருகி மகிழ்ந்த அழகிய சொக்க நாதர் புகழ்ந்து போற்றுகின்றார். "திருப்பாற் கடலில் எழுந்த தெள்ளமுதைத் தேவர்கள் உண்டு ஆடினார்கள். முத்துச்சாமி மன்னன் என்னும் செந்தமிழ்க் கடலினின்றும் எழுகின்ற சொல்லமுதை அருமைப்புலவர்கள் கொண்டாடுகின்றார்கள்" என்று சொக்கர் பாடிய கவி சாலச் செம்மை வாய்ந்ததாகும். விண்ணிலே உறையும் அமரர் விரும்பி உண்ணும் அமுதம் போல், மண்ணிலே வாழும் புலவர் மகிழ்ந்து போற்றுவது அருந்தமிழ் அமுதமேயென்றும், தெள்ளமுதுண்டு திளைத்த தேவர் மாறிலா இன்பத்தில், மகிழ்தல் போலச் செந்தமிழ் அமுதம் பருகிய புலவரும் செவ்விய, இன்பம் நுகர்ந்து செம்மாந்திருப்பர் என்றும் கவிஞர் அமைத்த உவமை செவிச் சுவையுடைய செல்வர்க்குச் சிறந்த இன்பம் தருவதாகும்.

இன்னும், 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் கட்டுரைக் கிணங்க, கல்வியின் அருமையறிந்து ஆதரித்த இம்மன்னனது பெருமையை,

"மாணுறஎல் லாம்படித்த
மன்னன்முத்துச் சாமிவள்ளல்
ஆண்மைத் திறத்தில்மத
யானைகா ணம்மானை!
ஆண்மைத் திறத்தில்மத
யானையென்ட தாமாயின்
காணுமிவன் அங்கங்
கருமையோ அமமானை
கற்றவர்க்கங் கங்கருமை
காட்டுவான் அம்மானை"

என்று அம் மன்னனது அருமைக் குரியவராய் விளங்கிய கவிஞர் ஆர்வமுற எழுதியமைத்தார். இயலிசை நாடகமென்னும் முத்தமிழையும் முறையாகக் கற்ற நற்றமிழ்ச் செல்வனை, மானுற எல்லாம் படித்த மன்னன்” என்று கவிஞர் மனமாரப் புகழ்ந்தார்; அறிவும் ஆண்மையும் ஒருங்கே யமைந்த வள்ளலை விழுமிய வேழத்திற்கு உவமை கூறினார். வேழத்தின் மேனி கருமை காட்டும் என்றும், வள்ளல் கற்றவர்க்கு அங்கங்கு அருமை காட்டுவான் என்றும் கவிஞர் பாராட்டினார்.

ஆண்மையும் அழகும் வாய்ந்த அவ் வள்ளலைத் தலைவனாக வைத்து ஒரு காதலும் பாடினார் கவிஞர். பொதிய மலைச் சாரலில் வேட்டையாடப் போத்த முத்துசாமி மன்னர்,

"சில்லென்று பூத்த செழுமலர்ப்பூங் காவனத்தில்
வில்லொன்று செங்கையுடன் மேவி வரும்போதில்"

ஒரு கட்டழகியைக் கண்டு காதலுற்றார்: அவள் ஊரும் பேரும் கேட்டார். மாற்றம் ஒன்றும் பேசாமல் தலைகவிழ்ந்து நின்றாள் மங்கை. அது கண்ட தலைவர்,

"ஊமையோ, வாயிலையோ ஒர்வசனம் நீஉரைத்தால்
தீமையோ வாய்திறந்து செப்பினால் ஆகாதோ'

என்று பின்னும் வினவினார். அப்போது அவள் வாய்திறக்கவில்லை; 'வாய் இல்லையோ' என்று கேட்டுப் பார்த்தோம். பலிக்கவில்லை; 'மனம் காயோ' என்று கேட்டுப் பார்க்கலாம் எனக் கருதி மேலும் பேசலுற்றார்:

"வெள்ளரிக் காயா, விரும்பும்அவ ரைக்காயா
உள்ளமிள காயாஒருபேச் கரைக்காயா"

என்று நயமுறக் கேட்ட போது, நங்கை புன்னகை புரிந்தாள் என்று காதற் பிரபந்தம் கூறிச்செல்கின்றது.

வாக்கு வளம் உடைய அழகிய சொக்கர். நெல்லையம் பதியிலே கோயில் கொண்டுள்ள சாந்தி மதியம்மையின்மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடினார். அதன் சுவையை ஒரு பாட்டால் அறியலாம்.

"வாரா திருந்தால் இனிநானுன்
வடிவேல் விழிக்கு மையெழுதேன்
மதிவாள் துதற்குத் திலகமிடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்

பேரா தரத்தி னொடுபழக்கம்
பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு சுவைப்பால் இனிதுாட்டேன்
பிரிய முடன் ஒக் கலையில்வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்

தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக! வருகவே!"

என்ற சொக்கர் கவிதையைக் காதாரக் கேட்டார் வள்ளல். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டது. செவிச் சுவையுடைய கவிஞரது செவிக்கு ஒரு செவ்விய பரிசளிக்க அவர் விரும்பினார். காந்தி மதியம்மை முன்னிலையில் பிள்ளைத்தமிழ் அரங்கேறியவுடன் வள்ளல் தாம் அணிந்திருந்த வயிரக் கடுக்கனைக் கழற்றிக் கவிஞர் காதிலே மாட்டி மகிழ்ந்தார். "செவிச் செல்வமே செல்வத்துட் செல்வம்" என்று அக்கடுக்கனைப் புகழ்ந்து வயிரப் பரிசளித்த வள்ளலை வாயார வாழ்த்தினார் சொக்கர்.