தமிழின்பம்/ஆண்மையும் அருளும்

VII. இருமையில் ஒருமை

31. ஆண்மையும் அருளும்

நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக இம்மாநிலத்தில் மண்ணாலும் பெண்ணாலும் மறப்போர் நிகழ்ந்து வருகின்றது. உலகிலுள்ள மக்கள் ஒரு வயிற்றுப் பிறந்தாற்போல் ஒற்றுமையாக வாழத் தலைப்பட்டால், போர் ஒடுங்குமென்று மும்மையும் உணர்ந்த மூதறிஞர் கருதுகின்றார்கள். ஆறறிவுடைய மாந்தர் அமர்க்களம் புகுந்து, அடுபோர் புரிந்து, குருதி சொரிவதை நினைக்கும் போது அறிஞர் நெஞ்சம் குலைவது இயல்பேயன்றோ? இதனாலேயே இந்நாட்டில் முறை திறம்பாது அரசாண்ட மன்னர்கள் மாறுபட்ட அரசரோடு மலைய நேர்ந்தக்கால் அறநெறி விலகாது அமர் விளைத்தார்கள்.

அருளும் ஆண்மையும் இனிதமைந்த பண்டை அரசர், மாற்றாரொடு போர் தொடங்கு முன்னே, மதிநலம் வாய்ந்த தூதுவரை அவர்பால் அனுப்பி நீதிபெற முயன்றார்கள். இவ்வாறு வெம்போர் விலக்கும் விழுமிய கருத்துடன் வேற்றரசிடம் தூது செல்லும் அறிஞரை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் ஆகாவென்று அரச நீதி முறையிடுகின்றது. அயோத்தி மன்னனுடைய தூதனாய் இலங்கை மாநகருக்குச் சென்ற அனுமன்மீது சீற்றமுற்று, அவனைச் சிதைக்கக் கருதிய அரக்கு மன்னனை நோக்கி, அறிவு வாய்ந்த வீடணன்,

“மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் துாய்தன் றாம்என
ஏதுவிற் சிறந்தன எடுத்துக் காட்டினான்”

என்று கவியரசராகிய கம்பர் கூறுமாற்றால், தூதரைக் கொல்லும் பாவம், மாதரைக் கொல்லும் மாபெரும் பாவத்தை ஒப்பதாகும் என்பது நன்கு விளங்குகின்றது. இவ்வாறு தூது போக்கியும் நேர்மை எய்தாத நிலையிலேயே, அருள் நிறைந்த அரசர், வேறு வகையின்றி வெம்போர் புரிவார்கள்.

மாற்றரசர், செந்நெறி விலகி, சீர் முறை தவறிப் புன்மையே புரியினும், அவரது அடாத செய்கையைப் பொறுத்து, இயன்ற வரையில் போரைத் தடுக்க முயல்வதே அறம் திறம்பாத அரசர் செயலாகும். இத்தகைய பெருமை, அயோத்தி அண்ணலாகிய இராமனிடமும் குருகுல முதல்வனாய தருமனிடமும் தலைசிறந்து விளங்கிற்று. தாயின் மொழியைத் தலைக்கொண்டு, நாடு துறந்து, காடு புகுந்த இராமனுடைய காதல் மனையாளை, இலங்கை வேந்தன் வஞ்சனையால் கவர்ந்து அசோக வனத்தில் வைத்தான். மங்கையைப் பிரிந்த மன்னன் மலையும் காடும் அலைந்து திரிந்து மதங்க வனத்தில் வானரத் தலைவனைத் துணைக் கொண்டு. கடல் சூழ்ந்த இலங்கையில் தன் காதலி சிறையிருந்ததை அறிந்து, கருங்கடலைக் கடப்பதற்குக் கல்லால் அணை அமைத்து, வானர சேனையோடு இலங்கையின் நகர்ப்புறம் எய்தினான். ஆயினும், தனக்குத் தவறிழைத்த இலங்கை வேந்தன் மீது போர் தொடங்கு முன்னே, அம் மன்னன், சீதையை விடுவானா என்று அறியுமாறு அங்கதனை அவனிடம் தூதனுப்பக் கருதினான். இவ்வாறே சூதினால் அரசிழந்து, பன்னிராண்டு படர்கானகத்தில் துயர் உழந்து, அப்பால் ஒராண்டு ஒருவரு மறியாது ஊர் நடுவே கரந்துறைந்து முடிந்த பின்னும், வழிக்கு வாராத வணங்காமுடி மன்னன் மீது படையெடுக்கு முன்னே குருகுல மன்னன் கண்ணனைத் தூதனுப்பிக் கடும்போர் விலக்கக் கருதினான்.

விதிக்கும் விதியாகும் வில்லைத் தாங்கிய இலக்குவனைத் துணைக்கொண்ட இணையற்ற இராம வீரன் இலங்கை நாதனுடை புயவலியும் படைவலியும் கண்டு பயந்து அவன்பால் தூதனுப்பினான் அல்லன். அவ்வாறே தண்டேந்திய வீமனையும் தனுவேந்திய விசயனையும் துணையாகக் கொண்ட தருமன், நூற்றுவராய் விளங்கிய மாற்றார் படைவலி கண்டு கலங்கிக் கண்ணனைத் தூதனுப்பினான் அல்லன். குடும்போரால் விளையும் கொடுமையையும் கொலையையும் விலக்கக் கருதிய விழுமிய அருளாலேயே இருவரும் மானமும் கருதாது தூதுபோக்கினார் என்பது இனிது விளங்கும். அறம் நிரம்பிய தலைவரிடம் இத்தகைய கரையிறந்த கருணையையும், வரையிறந்த பொறுமையையும் கண்ட வலிமை சான்ற தம்பியர் சில வேளைகளில் வருத்தமுற்றுக் கோபத்தாற் கொதித்தார்கள். மாற்றார் படையைக் கண்டு கலங்காத இளையோர், மூத்தோரது பண்பாட்டைக் கண்டு கலங்கினார்கள். மானத்தால் மனமிடிந்த தம்பியர், மாற்றரசரிடம் வில்லாட இசைந்தனரேயன்றிச் சொல்லாட இசைந்தாரல்வர். தேவியை விடுகின்றானா அன்றி ஆவியை விடுகின்றானா என்றறிந்து வருமாறு இராமன் தூதனுப்பத் துணிந்தபோது, எவருக்கும் இளையாத இலக்குவன் தமையனை நோக்கி, "ஐயனே! இலங்கை அரக்கன் உன் தேவியைச் சிறையில் வைத்தான்; தேவரை இடுக்கண் செய்தான்; அந்தணரை அலற வைத்தான்; இந்திரனுக்கு இடர் விளைவித்தான்; மாயம் விளைவித்துச் சீதையை மயங்க வைத்தான்; சஞ்சலத்தால் நைந்த மங்கைக்கு அஞ்சேல் என்று அபயமளித்த கழுகின் வேந்தனைக் கருணையின்றிக் கொன்றான். இத் தகைய பாவியின் ஆவியைப் போக்காது அருள் காட்டலாகுமோ?" என்று வெகுண்டுரைத்தான். அவ்வுரையை அமையக் கேட்ட அயோத்தி அண்ணல், புன்னகை பூத்து, "புயவலி அமைந்திருப்பினும் பொறையொடும் பொருந்தி வாழ்வதே ஏற்றதாகும். அதுவே அறமுமாகும்” என்று மாற்றம் உரைத்தான்

இவ்வண்ணமே வம்பு செறிந்த வணங்காமுடி மன்னன்பால் கண்ணனைத் தூதனுப்பத் துணிந்தபோது தண்டேந்திய வீமன் தருமனை நோக்கி, "ஐயனே! பன்னலம் திகழும் பாஞ்சாலி, பாவியர் கைப்பட்டு,

"ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்
           புனல்சோர அளகம் சோர
வேறானதுகில்தகைந்த கைசோர
           மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா
           என்றுஅரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்துாற உடல்புளகித்து
           உள்ளமெலாம் உருகி னாளே."

அந்நிலையில் தலைகவிழ்ந்து பொறுத்திருந்த நமக்கும் நம் மரபினுக்கும் என்றும் தீராத வசை தந்தீர்; அப்பால் பதின்மூன்றாண்டு காட்டிலும் நாட்டிலும் கழித்த பின்னரும் அமர் புரிந்து, மாற்றரசர் உடலம் துணித்து உலகாளக் கருதாது, இன்னும் தூதனுப்பி பணிந்து இரந்து புவி பெற்று உண்டு இருப்பதற்குத் துணிகின்றீரே! அந்தோ! அரவுயர்த்தோன் கொடுமையினும், முரசுயர்த்தோய்! உமது அருளுக்கு அஞ்சினேன். ஐயோ! இந்தத் தமையன், வாடுகின்ற மடப்பாவை வரம் முடித்தான் இளையவர் கூறிய வஞ்சினம் முடித்தான்;

"மலைகண்ட தெனஎன்கை மறத்தண்டின்
       வலிகண்டும் மகவான் மைந்தன்
சிலைகண்டும் இருவர்பொருந் திறல்கண்டும்
       எமக்காகத் திருமால் நின்ற
நிலைகண்டும் இவள்விரித்த குழல்கண்டும்
       இமைப்பொழுதில் நேரார் தம்மைக்
கொலைகண்டு மகிழாமல் அவன்குடைக்கீழ்
       உயிர்வாழக் குறிக்கின் றாயே"

என்று கொதித்துக் கூறினான். அப்போது "அறநெறி யுணர்ந்த தருமனது உரைவழி நிற்றலே தக்கதாகும்" என்று கண்ணன் எடுத்துரைக்க, வெம்மை சான்ற வீமனும் அடங்கி நின்றான்.

அப்பால், போர் நிகழ்ந்த போது மானத்தால் மனம் கொதித்த தம்பியைத் துணைக்கொண்டு அயோத்தி மன்னன் இலங்கை வேந்தனை வென்றான். செம்மை தவறிய சுயோதனன் செயல்கண்டு சிந்தை யறிந்த தம்பியரைத் துணைக்கொண்டு, குருகுல வேந்தனும் மாற்றாரை வென்றான். அறம் திறம்பாத இவ்வரசர் இருவரும் பொறுமை யென்னும் பெருமைக்கோர் இருப்பிடமாய் இலங்கினர்; மாற்றார் சிறுமை செய்யினும் அச்சிறுமையைத் தம் பெருமையாற் பொறுத்து அற நெறியில் தலை நின்றனர்; பகைவரது மிகையால் போர் செய்ய நேர்ந்தபோதும், அறம் திறம்பாத முறையில் அமர் நிகழ்த்தினர்.

படைக்கல மிழந்து எளியராய் எதிர்ப்படும் பகைவரை, அருள் வாய்ந்த அரசர், எஞ்ஞான்றும் தமது படைக்கலத்தால் நலியச் செய்வதில்லை. வெள்ளி மாமலை யெடுத்த இராவணன் படைக்கல மிழந்து, எளியனாய்த் தனக்கு எதிரே போர்க்களத்தில் நிற்கக் கண்ட கோசல நாட்டு வள்ளல், அருள் அளாவிய ஆண்மையோடு,

"ஆளை யாஉனக் கமைந்தன
        மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை
        இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன்"

என்று கவியரசர் கூறுமாறு பகையரசனுக்கு விடை கொடுத்தனுப்பினான்.

அவ்வாறே, வில்லாண்மையில் தலைசிறந்து விளங்கிய விசயன், போர்க்களத்தில் படைக்கலம் இழந்து எளியனாய் நின்ற கர்ணனது நிலைகண்டு தளர்ந்து, அவன்மீது அம்பெய்தலைத் தவிர்த்த ஆண்மை இராமனது உயரிய அருளை நிக்ர்ப்பதாகும்.

"அன்று போர்புரி சேனை யின்பதி
       யான வீரனைநீ
இன்று போய்இனிநாளை வாஎன
       இனிதி யம்பினனால்
வென்றி கூர்வரி வின்மை யால்அடல்
       வெவ்வ ரக்கரைமுன்
கொன்ற காளையை ஒத்த பேரிசை
       கொண்ட ஆண்மையினான்"

என்று வில்லி, விசயனது பெருமையைப் போற்றிப் புகழ்ந்தார். -

இங்ஙனம் இம்மாநிலத்தில் அறநெறி மறநெறியோடு மாறுபடும்பொழுது இறுதியில் அறமே வெல் லும் என்பது ஒருதலை. "பொறுத்தார் பூமி யாள்வார்” என்னும் பொய்யாமொழிக்குக் கோசல நாட்டு வீரனும் குருகுலக் குரிசிலும் இணையற்ற சான்றாவர்.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
 பொன்றும் துணையும் புகழ்"
                             -திருவள்ளுவர்