தமிழின்பம்/காதலும் கற்பும்

III.காவிய இன்பம்

11. காதலும் கற்பும்.[1]

காதல் என்பது காதுக் கினிய சொல்; கருத்துக்கினிய பொருள். காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு; காதல் இல்லையேல் ஒன்றும் இல்லை. "காதல், காதல், காதல் - இன்றேல் சாதல், சாதல், சாதல்" என்று பாடினார் பாரதியார். ஆயினும், அச்சொல்லை எல்லோரும் கூசாமல் பேசுவதில்லை. சின்னஞ் சிறியவர் காதில் அது விழலாகாதாம். கன்னியர் வாயில் அது வரலாகாதாம். இப்படி ஏன் அச்சொல் ஒதுக்கப்படுகின்றது? தமிழ்க் கவிகள் காதல் என்ற சொல்லை எடுத்தாளவில்லையா? நீதி நூல்களில் அச்சொல் வரவில்லையா? திருப்பாடல்களில் அஃது இடம் பெறவில்லையா? காவியங்களிலும், நீதி நூல்களிலும் திருப்பாசுரங்களிலும் பயின்ற அழகிய தமிழ்ச் சொல்லை ஏன் கூசிக் கூசிப் பேச வேண்டும்? தேவாரத்திலே அடியாரது காதல் பேசப்படுகின்றது.

"காதலாலே கருதும் தொண்டர்
காரணத்தர் ஆகி”

நின்ற சிவபெருமானைச் சுந்தரர் பாடுகின்றார். இன்னொரு பெரியார் - திருஞானசம்பந்தர் - இறைவன் திருநாமத்தை ஓதும் காதலடியார் பெருமையைக் கூறுகின்றார்.

"காத லாகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"

என்பது அவர் திருப்பாட்டு. இவ்வாறு தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களில் பயின்ற காதல் என்ற சொல்லைக் கடி சொல்லாகக் கருதலாமோ?

காதல் என்ற சொல்லின் பொருள்தான் என்ன? அன்பு என்றாலும் காதல் என்றாலும் பொருள் ஒன்றே. பெற்றோர்க்குப் பிள்ளையிடம் உள்ள அன்பு காதல்தான். 'கடந்த பேர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்' என்று கவிஞர் பாடவில்லையா? பெற்ற பிள்ளையைக் காதலன் என்று கூறுவதுண்டு. வாலியின் மைந்தனாகிய அங்கதனை 'வாலி காதலன்' என்று குறிக்கின்றார் கம்பர். இவ்வாறே நண்பனையும் காதலன் என்று கவியரசர் கூறுவர். கங்கைக் கரையிலே இராமனுடைய நண்பனாயினான் குகன்; அவன் அன்பிற்குக் கங்கை கரையில்லை. அது கண்ட இராமன்,

"சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்”

எனவே பக்தியும் காதல்; பிள்ளைப் பாசமும் காதல்; நேசமும் காதல்; சுருங்கச் சொல்லின் தலைசிறந்த அன்பே காதல்.

இவ்வளவு விரிந்த பொருளில் வழங்கிய காதல் என்ற சொல், இப்பொழுது ஆண் பெண் என்னும் இரு பாலாரிடையே உள்ள அன்பையே பெரும்பாலும் குறிக்கின்றது. காதலன் என்றால் கணவன்; காதலி என்றால் மனைவி. இவ்விருவரையும் இல்வாழ்க்கையில் இழுப்பது காதல், பின்பு இல்வாழ்க்கையை நல்வாழ்க்கையாக நடைபெறச் செய்வதும் காதல். கண்ணிரண்டும் ஒன்றையே காண்பதுபோல இல்வாழ்க்கையில் ஈடுபட்ட இருவரையும் ஒரு நெறிப்படுத்துவது காதல். "காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்பவே" என்றார் ஒரு கவிஞர்.

ஆதியில், காதல் மணமே தமிழ் நாட்டில் சிறந்து விளங்கிற்று. காதல் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத உடல் போன்றது என்பது தமிழர் கொள்கை. காதலுற்ற கன்னியர், தம் கருத்து நிறைவேறும் வண்ணம் காமனை வேண்டிக்கொள்ளும் வழக்கமும் முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகின்றது. காதல் விளைக்கும் தேவனைக் 'காமன்' என்றும், 'காமவேள்' என்றும் தமிழர் அழைத்தனர். தாம் கருதிய காதலனைக் கணவனாகப் பெறுவதற்கும், பிரிந்த கணவனை மீண்டும் அடைவதற்கும், காமன் கோயிலிற் சென்று மங்கையர் வழிபடும் வழக்கம் அந்நாளில் இருந்தது. கோவலன், மாதவி என்னும் நடிகையின் மையலிலே முழ்கித் தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்திருந்தபோது, 'காமவேள் கோயிலிற் சென்று தொழுதால் கணவன் மீண்டும் வந்து சேர்வான்' என்று அக்கற்பரசியிடம் அவள் உயிர்த் தோழி எடுத்துரைத்தாள்.

"கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்"

என்று கூறினாள் தோழி. இதனால், காவிரிப்பூம்பட்டினத்தில் அந்த நாளிலே காமன் கோயில் இருந்த தென்றும், குலமாதர் அங்குச் சென்று வழிபடும் முறை இருந்ததென்றும் நன்றாக விளங்குகின்றன. இன்றும், தமிழ் நாட்டின் பல பாகங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'ஈசனுடைய நெற்றிக் கண்ணால் காமன் எரிந்துபோனான்' என்று வாதிப்பாரும், அப்படியில்லை என்று சாதிப்பாரும் இக்காலத்தும் தமிழ் நாட்டிலுண்டு.

காமம் என்ற சொல்லும், காமன் என்ற பெயரும் தமிழ் நூல்களிலே எடுத்தாளப்பட்டாலும் இன்று அவை இழிந்த பதங்களாகவே எண்ணப்படுகின்றன. காமம் என்பது வடசொல்; இன்பம் என்னும் பொருள் அதற்குண்டு. உறுதிப் பொருள்களைத் "தர்மார்த்த காம மோட்சம்” என்று வடமொழியாளர் கூறுவர். இவ்வடமொழித் தொடருக்கு நேரான தமிழ், "அறம் பொருள் இன்பம் வீடு” என்பது. எனவே, காமம் என்பது இன்பம் என்ற பொருளைத் தருகின்றது. திருவள்ளுவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்று தெரிகின்றது. அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றி எழுதிய திருவள்ளுவர் இன்பப் பகுதிக்குக் காமத்துப் பால் எனப் பெயரிட்டார் என்றால், அவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்பது தெரிகின்றதல்லவா?

ஆயினும், கால கதியில் காமம் என்பது துன்மார்க்கத்திற் பெறும் இன்பத்தைக் குறிப்பதாயிற்று. காமி, காமுகன் முதலிய சொற்கள் தூர்த்தன் என்ற பொருளிலே வழங்குகின்றன. காமுகன், கல்வி கற்பதற்கும் தகுதியற்றவன் என்று நன்னுால் கூறுகின்றது.

இனி, காதலுக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பைச் சிறிது பார்ப்போம்; காதல் என்பது உணர்ச்சி, கற்பு என்பது ஒழுக்கம். உணர்ச்சியால் ஒன்றுபட்ட நம்பியும் நங்கையும் (தலைமகனும் தலைமகளும்) ஒருவரையொருவர் தமக்கே உரியவராகக் கொண்ட நிலையிலே தோன்றும் ஒழுக்கமே கற்பு என்பர்.

சீதையின் காதலில் வைத்து இந்த உண்மையைக் காட்டுகின்றார் கம்பர். மிதிலை மாநகரத்தில் கன்னி மாடத்தின் மேடையிலே நின்ற சீதையும் விதியின் வழியாகச் சென்ற இராமனும் தற்செயலாக ஒருவரை யொருவர் நோக்கினர். இருவர் கண்ணோக்கும் ஒத்தது; காதல் பிறந்தது. காதலர் இருவரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் புகுந்து உறவாடினர்.

இந்த நிலையில் இராமன் தன்னுடன் வந்த தம்பியோடும் முனிவரோடும் வீதியிற் சென்று மறைந்துவிடுகின்றான். அவன் இன்னான் என்று அறியாள் சீதை. அவன் எங்கே சென்றான் என்பதும் உணராள்; ஆயினும், அவனையே கருத்தில் அமைத்துக் கரைந்து உருகுகின்றாள். அந்த வேளையில் ஒடி வருகின்றாள் அவள் தோழியாகிய நீலமாலை; ஆனந்தமுற்று ஆடுகின்றாள்; பாடுகின்றாள். "தோழி! என்ன செய்தி?’ என்று கேட்கின்றாள் சீதை. அப்போது தோழி சொல்கின்றாள்: "அயோத்தி அரசனுடைய மைத்தன்; அஞ்சன வண்ணன்; செந்தாமரைக் கண்ணன்; அவன், தம்பியோடும் முனிவரோடும் நம் மாளிகைக்கு வந்தான்; உன் திருமணத்திற்காக வைத்திருந்த வில்லைக் கண்டான்; எடுத்தான்; வளைத்தான்; ஒடித்தான்” என்று கூறி முடிக்கின்றாள்.

அப்பொழுது சீதையின் மனம் ஊசலாடத் தொடங்கிற்று; கவலையும் உண்டாயிற்று. வில்லை எடுத்து வளைத்து ஒடித்த வீரன், தான் கன்னி மாடத்திலிருந்து கண்ட ஆடவனோ? அல்லனோ? என்ற ஐயம் பிறந்தது. அவனாகத்தான் இருக்க வேண்டு மென்று ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, தோழி சொல்லிய அடையாளங்களை மீளவும் நினைத்துப் பார்த்தாள்.

"கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின்
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையினால்
ஆம்அவ னேகொல்என்று ஐயம் நீங்கினாள்.”

ஆனால், நொடிப்பொழுதில் மற்றொரு கருத்து அவள் மனத்தில் புகுந்தது. "என் தோழி சொல்லிய அடையாளங்கள் எல்லாம் உடைய மற்றொருவன் வில்லை வளைத்து ஒடித்திருந்தால் நான் என்ன செய்வேன்? என்று அவள் எண்ணினாள்; ஏங்கினாள்.

அந்த ஏக்கத்தினிடையே ஒர் ஊக்கம் பிறந்தது; உணர்ச்சியினிடையே ஒழுக்கம் எழுந்தது. காதல் கற்பாக உருவெடுத்தது. "அவன் அல்லனேல் இறப்பேன்’ என்று சீதை முடிவு செய்தாள். கண்ணாற் கண்ட காதலனும் வில்லை ஒடித்த வீரனும்

ஒருவனேயாயின் அவனை மணம் புரிந்து வாழ்வேன்; இல்லாவிட்டால் இறந்து படுவேன்” என்று உறுதி கொண்டாள் சீதை. கற்பு நெறி என்பது இதுதான். காதலனையன்றி மற்றோர் ஆடவனை மனத்திலும் கருத ஒருப்படாத உறுதியே கற்பு எனப்படும். இதையே திருவள்ளுவர் வியந்து பாடினார்.

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

 திண்மைஉண் டாகப் பெறின்"

என்பது அவர் திருவாக்கு.

கற்புடைய மாதரிடம் மென்மையும் உண்டு; மனத்திண்மையும் உண்டு. பொறுக்கும் திறமும் உண்டு; மாறுபட்டோரை ஒறுக்கும் திறமும் உண்டு. சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகியிடம் இவ்விரு தன்மைகளையும் பார்க்கின்றோம். கொண்ட கணவன் அவளுக்குக் கொடுமை செய்தான்; செல்வத்தையெல்லாம் செலவழித்தான். அல்லும் பகலும் அயலார் அறியாமல் கண்ணீர் வடித்தாள் கண்ணகி; மங்கல அணியைத் தவிர மற்றைய நகைகளையெல்லாம் மறந்தாள்; தன்னை அழகு செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அறவே துறந்தாள்.

 "அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப

பவள வாள்துதல் திலகம் இழப்ப

மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று கூறுகின்றது சிலப்பதிகாரம். அடக்கமும் பொறுமையும், கற்பும் கண்ணிரும் கண்ணகியின் வடிவம். "கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்" என்று ஆழ்வார் பாடிய திருப்பாட்டுக்கு ஒர் எடுத்துக் காட்டாக அமைந்தாள் கண்ணகி.

இத்தகைய மென்மையும் பொறுமையும் வாய்ந்த கண்ணகி, மதுரை மாநகரில் தன் கணவனை இழந்த போது வன்மையின் வடிவம் கொண்டாள்; கற்பெனும் திண்மை அவ்வடிவத்திலே களிநடம் புரிந்தது. அத்திண்மையைக் கண்டு திடுக்கிட்டான் அரசன்; அப்பால் அவள் பேசிய திடமொழியைக் கேட்டபோது மயங்கிவிழுந்து மாண்டான். தவறு செய்த அரசனைக் கற்பின் திண்மையால் ஒறுத்த கண்ணகி, வீரபத்தினியாகத் தமிழ் நாட்டிலே போற்றப்பட்டாள். அன்று முதல் இன்றளவும் கண்ணகி, மாதர்குல மணி விளக்காய், வீரக்கற்பின் விழுமிய கொழுந்தாய் விளங்குகின்றாள்.


  1. சென்னை வானொலி நிலையத்திலே பேசியது; நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.