தமிழின்பம்/சித்திரை பிறந்தது

7. சித்திரை பிறந்தது[1]


தமிழ்நாட்டில் கூனியாகிய பங்குனரி மாதம் கழிந்தால் எங்கும் மங்கல ஒலி. "கூனி குடி போகாதே; ஆனி அடி கோலாதே" என்பது பழமொழி. இப்படிக் கூனியும் ஆணியும் கூடாவென்று கருதும் தமிழர், சித்திரையைச் சிறந்த ஆர்வத்தோடு வரவேற்கின்றார்கள்; தமிழ் ஆண்டுப் பிறப்பை அதன் தலைநாளில் அமைத்துக்கொண்டாடுகின்றார்கள்; அந்நாளைப் புனித நாளாகப் போற்றுகிறார்கள். அதன் காரணம் என்ன?

சித்திரை மாதத்தில் இளவேனிற் காலம் தொடங்குகின்றது. வசந்தம் என்னும் இளவேனில் இன்ப சுகம் தரும் காலம். அப்போது, பசுமையான செழுஞ்சோலை பார்க்கு மிடமெங்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும். மாஞ்சோலை மெல்லிய தளிராடை புனைந்து இலங்கும்; வேம்பின் கொம்பிலே பூத்த சிறு வெண்மலர்கள் புதுமணம் கமழும்; தென்னை மரங்கள் இனிமையான இளநீரைத் தரும்; பனை மரங்கள் சுயைான பதநீரைக் கொடுக்கும்.

வசந்தகாலம் பிறந்ததென்று மகிழ்ந்து, பசுங்கிளிகள் மொழிபேசி, மரக்கிளைகளிலே கொஞ்சிக் குலாவும்; கருங்குயில்கள் மறைந்து நின்று கூவும்; "மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இன்இளவேனில் வந்தனன்' என்று குயில் கூவுவதாக இளங்கோவடிகள் பாடுகின்றார். எனவே, இளவேனிற் காலம் மன்மதன் மகிழ்ந்து ஆட்சி செய்யும் காலம்.

புதுமணம் புரிய விரும்புவோர் சித்திரையின் வரவை மெத்த ஆசையுடன் நோக்குவர். திருமணத்திற்குரிய சூழ்நிலை அப்போது இயல்பாக அமைந்திருக்கும்; பகலவன் ஒளி தருவன். வீடுதோறும் நெல்லும் பிறவும் நிறைந்திருக்கும். தென்றல் என்னும் இளங்காற்று வீசிக்கொண்டிருக்கும். இனிய திருமணம் இன்பமாக நடைபெறும்.

இத்தகைய இன்பம் நிறைந்த இளவேனிலின் சுகத்தை ஈசனுடைய பேரின் பத்திற்கு நிகராகப் பாடுகின்றார் வடலூரடிகளார். இளங்கோடையிலே, இளைப்பாற்றிக் கொள்ளுதற்கேற்ற செழுஞ் சோலையாகவும், ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தெண்ணிராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாகவும் ஈசனது இனிய கருணையைக் கண்டு போற்றுகின்றார் அக்கவிஞர்.

எனவே, இயற்கை அன்னை இனிய கோலத்தில் இலங்கும் காலம் இளவேனிற் காலம். மாந்தர் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய இன்பம் பொங்குங்காலம் இளவேனிற்காலம். பனியால் நலிந்த மக்கள் பகலவன் ஒளியைக் கண்டு, "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்' என்று இன்புற்று ஏத்தும் காலம் இளவேனிற் காலம். ஆகவே, இயற்கையோடு இசைந்து வாழ்ந்த பழந்தமிழ் மாந்தர், இன்பநெறி காட்டும் இள வேனிற் பருவத்தின் முதல் நாளைத் தமிழ் ஆண்டின் தலைநாளாகக் கொண்டது மிகப் பொருத்த முடையதன்றோ?


  1. 'பாரத தேவி'யின் சித்திரை மலரில் எழுதியது.