தமிழின்பம்/தமிழாசிரியர் மகாநாடு

தமிழ் இன்பம்


I. மேடைப் பேச்சு

1. தமிழாசிரியர் மகாநாடு

தலைமை உரை

கல்வித்துறை அமைச்சர் அவர்களே! ஆசிரியத் தோழர்களே!

'கற்றாரைக் காண்பதுவும் நன்று; கற்றார் சொற் கேட்பதுவும் நன்று. கற்றாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ என்பர் நற்றமிழ் வல்லார். அந் நலத்தை இம் மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் எனக்குச் சிறப்பாகத் தந்த அன்பர்களை மனமாரப் போற்றுகிறேன்.

இம் மாநாட்டிலே தமிழ்த்தாயின் மணிக்கொடி ஏறக்கண்டேன்; மனம் களித்தேன். வில்லும் கயலும் வேங்கையும் தாங்கிய மணிக்கொடி, முத்தமிழ் வளர்த்த மூவேந்தரையும் நம் மனக் கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. அன்பர்களே! இன்று நாம் அனை வரும் அரசியல் வானத்தையே நோக்கி நிற்கின்றோம்.[1] சென்ற ஆண்டிலே விடி வெள்ளி தோன்றிற்று; இன்று கிழக்கு வெளுத்துவிட்டது. இதுவரை மேற்கு நோக்கிய முகங்களெல்லாம் இன்று கிழக்கு நோக்கி நிற்கின்றன. இன்னும் பதினைந்து திங்களில் நாமிருக்கும் நாட்டை நாமே ஆளப்போகின்றோம். இந்திய நாடு இந்தியர்களுக்குச் சொந்தமாகப் போகின்றது. அந்த முறையில் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்பதில் தடையும் உண்டோ? தமிழ்நாடு தன்னரசு பெறும் என்று எண்ணும்பொழுது தமிழர் உள்ளம் தழைக்கின்றது; தொண்டர் உள்ளம் துள்ளுகின்றது. தமிழ்த்தாய், முன்னாளில் எய்தியிருந்த ஏற்றமும் தோற்றமும் அலை அலையாக மனத்திலே எழுகின்றன.

சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று குலத் தமிழ் மன்னர், நித்தம் தமிழ்வளர்த்த நீர்மை நம் நினைவிற்கு வருகின்றது. சேரநாட்டு மாளிகையில், மெல்லிய வீரமஞ்சத்தில் கண்ணுறங்கும் தமிழறிஞர் ஒருவருக்குக் கவரி வீசி நிற்கும் காவலனை மனக் கண்ணெதிரே காண்கின்றோம். சோழ நாட்டு மாநில மன்னன், தமிழ்த்தாயின் திருவடி தொழுது, 'நான் பண்டித சோழன்' என்று இறுமாந்து பேசும் இனிய வாசகத்தைக் கேட்கின்றோம். சங்கத் தமிழ் மணக்கும் மதுரையில் அரியாசனத்தில் அமர்ந்து, ஆசிரியரின் சிறப்பையும், அவர்களை ஆதரித்தற்குரிய முறையையும் அழகிய பாட்டால் எடுத்துரைக்கும் பாண்டியனைப் பார்க்கின்றோம். "உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்று பாண்டியன் அன்று பிறப்பித்த ஆணை என்றென்றும் தமிழ்நாட்டில் நின்று நிலவுதல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

மூவேந்தர் காலத்திற்குப் பின்பு நம் தாய் மொழிக்கு நேர்ந்த சிறுமையை நினைத்தால் நெஞ்சம் உருகும். வேற்றரசர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றிற்று. அவர் மொழியாகிய ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது. எல்லாப் பாடங்களும் ஆங்கில மொழியிலே பயிற்றப்பட்டன. ஆங்கில மாது களிநடம் புரிந்த கல்விச் சாலைகளில் தமிழ்த்தாய் நிலை யிழந்து, தலை கவிழ்ந்து, ஒடுங்கி, ஒதுங்கி நிற்பாளாயினாள். தமிழ் ஆசிரியர்களின் உள்ளம் இடிந்தது; ஊக்கம் மடிந்தது. புகைபடிந்த ஒவியம்போல் புலவர் மணிகள் பொலிவிழந்தார்கள். தமிழ் மாணவர்களும் தமிழை எள்ளி நகையாடத் தொடங்கினர்; அல்லும் பகலும் ஆங்கிலத்தைக் கற்று, ஆங்கிலேயருடைய நடையுடைகளில் மோகமுற்று, தாய்மொழியைப் பழித்தும் இழித்தும் பேசுவாராயினர். இவ்வாறு, கட்டழிந்து பதங் குலைந்து கிடந்த தமிழ் நாட்டில் தமிழ்க்கலை விளக்கம் அவிந்து போகாமல் பாதுகாத்தவர் தமிழாசிரியர்களே யாவர். மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, அருமையும் கருதாது, அவமதிப்பும் கொள்ளாது, அன்று தமிழ்த்தாயின் பொன்னடி போற்றிநின்ற தமிழாசிரியரை இன்று மறக்கலாகுமோ?

'ஆங்கில ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி முறை இந்நாட்டு முன்னேற்றத்திற்கு ஏற்ற தன்று: அதனை மாற்றியே தீரவேண்டும்' என்று இப்போது நல்லறிஞர் எல்லோரும் ஒன்றுபட்டுக் கூறுகின்றார்கள். இனி வருகின்ற தமிழரசில் கலைகள் எல்லாம் தமிழ் மொழியின் வாயிலாகவே பயிற்றப்படும் என்பது திண்ணம். அந்த முயற்சியில் கல்வி அமைச்சர் ஈடுபட்டிருக்கின்றார். இப்பொழுது அவர் வகுத்துள்ள திட்டம் உயர்தரப்பள்ளிகளுக்கே யாயினும், அதனோடு நின்றுவிடப் போவதில்லை. கல்லூரியிலும் கலைகளெல்லாம் தாய்மொழியின் மூலமாகவே கற்பித்தல் வேண்டும் என்னும் ஆணையை அவர் ஒல்லையிற் பிறப்பிப்பார் என்று நம்புகின்றோம். அதற்குரிய கலைச்சொற்களை ஆக்கும் பணியில் இப்பொழுதே தமிழறிஞர் தலைப்படல் வேண்டும். கலைச்சொல்லாக்கம் வேகமாகச் செய்யக்கூடிய வேலை யன்று. பல்லாற்றானும் பதைப்பற ஆராய்ந்து, தமிழின் நீர்மைக்கு ஏற்றவாறு கலைச்சொற் காணுதலே தமிழ் மொழிக்கு ஆக்கம் தருவதாகும்.

இனி, வருங்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் செய்தற்குரிய சிறந்த வேலைகள் பல இருக்கின்றன. குடியரசாட்சியில் பேச்சுக்கும் எழுத்துக்கும் பெருஞ் சிறப்புண்டு. தமிழ்மேடையில் நிகழும் பேச்சுக்களைச் சுருக்கெழுத்திலே எடுக்கும் கலையைத் தமிழாசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பத்திரிகை யுலகம் பெரும்பாலும் தமிழ்ப் பேச்சுக்களை மதிப்பதில்லை; பிரசுரம் செய்வதில்லை. திருவள்ளுவர் முதலிய புலவரின் நினைவு நாட்கள் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. அவ்விழாக்களிலே பெரும் புலவர்கள் பேசுகின்றார்கள்; பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்கின்றார்கள். கிளர்ச்சி பெறுகிறார்கள்; பயனடைகிறார்கள். ஆனால், அந்நிகழ்ச்சிகளைப் பற்றித் தமிழ்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் விவரமாக ஒன்றும் காண முடியாது. தமிழ்ப் பத்திரிகைகளிலும் சிலவற்றைத் தவிர, மற்றவை ஏனோ தானோ என்றுதான் அந்நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கும். இந்த நிலையை மாற்றவே வேண்டும். அதனை மாற்றும் ஆற்றல் தமிழறிஞரிடம் இருக்கின்றது. நாடெங்கும் தமிழார்வம் நிறைந்துவிட்டால் பத்திரிகைகள் தாமே தமிழிற் கவித்து வரும். தமிழ்ப் பேச்சுக்களைப் பரப்புகின்ற பத்திரிகைகளைப் பெருவாரியாகத் தமிழ் மக்கள் ஆதரிக்கத் தலைப் பட்டால் இன்றுள்ள நிலை நாளையே மாறிவிடும்.

ஆதலால், தமிழ் அறிஞர்களே! தமிழ் நாடெங்கும் தமிழ்ச்சங்கம் நிறுவுங்கள்; தமிழ்ப்பாடம் சொல்லுங்கள்; கலைச்செல்வத்தை வாரி வழங்குங்கள்; தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யுங்கள். இவ்விதம் ஒல்லும் வகையால் நாம் ஒவ்வொருவரும் பணி செய் வோமானால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் நாடு புத்துயிர் பெற்றுவிடும். அக் காலத்தில் நாடு முற்றும் தமிழுணர்ச்சி பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்கும். கல்லூரிகளில் நல்லாசிரியர்கள் எல்லோரும் தமிழறிஞ ராயிருப்பர். பல்கலைக் கழகங்களில் நக்கீரர் போன்ற நற்றமிழ்ப் புலவர் தலைவராக வீற்றிருப்பர். 'எந்த மொழியும் நமது சொந்த மொழிக்கு இணையாகாது' என்று தமிழ் நாட்டு இளைஞர் செம்மாந்து பேசுவர்; 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்' என்று முரசு கொட்டுவர். எட்டுத் திசையிலும் தமிழ்நாடு ஏற்றமுற்று விளங்கும். அந்த நிலையினை இன்று எண்ணிப் பாரீர்! அதனை எய்தியே தீர்வோம்; பணிசெய்ய வாரீர்!


  1. மாநாடு நடந்தபோது அப்படி நின்றோம்.