தமிழின்பம்/தமிழும் சைவமும்

VI. மொழியும் நெறியும்

26. தமிழும் சைவமும்*[1]

பாரத நாடு, என்றும் தெய்வ மணம் கமழும் திருநாடு. தெய்வம் உண்டு என்ற கொள்கை நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாக இந்நாட்டில் நிலவி வந்துள்ளது. 'இவ்வுலகத்தைப் படைப்பது தெய்வம்: காப்பது தெய்வம்: அழிப்பதும் தெய்வம் என்னும் கருத்து பாரத நாட்டுப் பெருஞ் சமயங்களில் எல்லாம் காணப்படும். கருங்கச் சொல்லின், அவனன்றி ஒர் அணுவும் அசையாது' என்னும் உண்மையை அறிந்து போற்றும் நாடு இந்நாடு.

இத்தகைய தெய்வத்தைத் தமிழ் நாட்டார் பலவாறு போற்றினார்கள்; பல திருநாமங்களால் அழைத்தார்கள். நாளடைவில் அப் பெயர்கள் நூற்றுக் கணக்காகவும். ஆயிரக் கணக்காகவும் பெருகிவிட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இதனைக் குறிக்கின்றார்.

"ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ"

என்பது அவர் திருவாக்கு. இவ் வண்ணம் பாடிய திருநாமங்களில் சிவம் என்பது ஒன்று. அது ஒரு சிறந்த பெயர். சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்னும் பொருள் கண்டார் பண்டைப் புலவர். எனவே, எல்லா மங்கலமும் தரும் பொருள் எதுவோ, அதுவே சிவம். பேரின்ப நிலையாகிய முக்தி, சிவகதியாகும். சிவகதியிற் கொண்டு சேர்க்கும் நெறியைச் சைவம் என்றார்கள். எனவே, சிவன் என்னும் மங்கலப் பொருளை வழிபட்டுச் சிவகதியை அடைவதற்கு வழிகாட்டும் சமயமே சைவ சமயமாகும்.

இத்தன்மை வாய்ந்த சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகளிற் சிலவற்றைக் காண்போம்: "அன்பே சிவம்" என்ற அருமையான வாசகமும் சைவ சமய நூல்களில் சிறப்பாக விளங்குகின்றது. எண்ணிறந்த குணம் வாய்ந்த இறைவனை அன்பு வடிவமாக எழுதிக் காட்டினார் திருமூலர் என்னும் பெரியார்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

என்பது அவர் அருளிய திருமந்திரம். இதனால், அன்பு நெறியே சிவநெறி என்பது நன்கு விளங்கும். அன்பு வடிவாகிய சிவபெருமானை அடைவதற்கு அன்பையே சாதனமாகக் கொள்ளுதல் வேண்டும் என்று சைவ சமயம் கூறும். 'எவ்வுயிர்க்கும் அன்பாயிரு' என்றார் ஒளவையார். இவ்வுலகத்தில் அறத்தைக் காப்பது அன்பு மறத்தை அழிப்பது அன்பு: இன்பத்தைப் பெருக்குவது அன்பு: துன்பத்தைப் போக்குவது அன்பு. அன்பினால் ஆகாத தொன்றில்லை. இத்தகைய அன்பு நெறியிலே நின்று பணி செய்தால், இன்ப நிலையாகிய சிவகதி, தானே வந்தடையும் என்பது சைவ சமயத்தின் கொள்கை.

தெய்வத் தன்மையாகிய அன்பு, இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் உள்ளது. அது வளர்ந்து, விரித்து. பரவுதல் வேண்டும். நாம் முதலில், பெற்றோரிடம் அன்பு செலுத்துகின்றோம். பின்பு, உற்றார் உறவினரிடம் அன்பு செல்கின்றது; அப்பால் ஊராரிடம், நாட்டாரிடம், உலகத்தாரிடம் படிப்படியாகப் பரந்து நிலவுகின்றது.

இங்ஙனம் மன்பதையிடம் மட்டும் அன்பு செலுத்தினாற் போதாது; எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும். மண்ணிலே முளைத்து வளரும் செடி கொடிகளும், ஊர்ந்து செல்லும் எறும்பு முதலியனவும், பறந்து செல்லும் பறவையினங்களும், நான்கு காலால் நடந்து திரியும் விலங்குகளும், உயிருள்ள பொருள்களாகும். நம்முயிர் நமக்கு எப்படி இனிதோ, அப்படியே ஒவ்வொரு பிராணியும் தன்னுயிரை இனிதாகப் போற்றுகின்றது. மேலும், எல்லா உயிர்களிலும் கலந்து நிற்கின்றார் கடவுள்.

"எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்
இலங்கும்.உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்"

ஆதலால், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் ஆகாது; எவ்வுயிர்க்கும் கேடு விளைத்தல் ஆகாது எவ்வுயிரையும் கொல்லலாகாது. கொல்லாமையைச் சிறந்த கொள்கையாகக் கொண்டது சைவ சமயம்.

"கொல்லா விரதம் குவலயமெ லாம்ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே"

என்று பாடினார் தாயுமானவர். கொல்லா விரதத்தை மிக உறுதியாகக் கொண்டமையால், சைவம் என்ற சொல்லுக்கே புலால் உண்ணாமை என்னும் பொருள் வந்துவிட்டது.

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”

என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவர். இதனாலேயே நாளடைவில், புலால் உண்ணாதவன் சைவன் என்றும், புலால் உண்பவன் அசைவன் என்றும் பிரித்துப் பேசும் வழக்கம் இந்நாட்டில் எழுந்தது. இது, கொல்லாமையாகிய விரதத்தால் சைவ சமயம் பெற்ற சிறப்பாகும்.

சைவம், பரந்த நோக்கமுடையது. இவ்வுலகில் சைவ சமயமே மெய்ச் சமயம்; மற்றைய சமயங்கள் பொய்ச் சமயம் என்று அது சொல்லவில்லை. சிவன் என்னும் பெயரால் கடவுளை வழிபட்டோர்க்குத்தான் நற்கதி உண்டு; மற்றையோர்க்கு இல்லை என்று அது கூறவில்லை; ஒவ்வொரு சமயத்திலும் அருள்புரியும் பரம்பொருள் ஒன்றே என்பது சைவத்தின் கொள்கை.

"அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்
அவ்வவர்க்கு ஆங்கே ஆரருள் புரிந்து"

என்னும் தேவாரம் இவ்வுண்மையை நன்குணர்த்துகின்றது. அறிவிற் குறைந்தவர்கள் புதிய சமயங்களை வகுத்து எங்கும் பரப்பினாலும் குற்றம் இல்லை.

"விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்"

என்று பாடினார் திருநாவுக்கரசர். ஆகவே, சமயத்தின் பேரால் நிகழும் பிணக்கங்களும் போர்களும் சைவ நெறிக்கு மாறுபட்டன என்பது தெள்ளிதின் விளங்கும்.

சைவ நெறியில் சமயப்பொறுமை சிறந்த கொள்கையாக விளங்கிற்றென்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று தருகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரநாட்டு இளவரசர். அவர் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாது சமண சமயத் துறவியாயினர். ஆனால், அவருடன் பிறந்த சேரன் செங்குட்டுவன் சிறந்த சைவனாய் விளங்கினான். இங்ஙனம் தமையன் சைவ சமயத்தையும், தம்பி சமண சமயத்தையும் மேற் கொண்டு ஒரு குடும்பத்தில் இணக்கமாக வாழ்ந்த நாட்டில், சமயப் பொறுமை நிலைத்திருந்த தென்பதை விரித்துரைக்கவும் வேண்டுமோ?

சைவ சமயத்தின் முடிவுகளைச் சைவ சித்தாந்தம் என்பர். அச்சித்தாந்தத்தின்படி, அநாதியாகவுள்ள பொருள் மூன்று. அவற்றைத் திரி பதார்த்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் திரி பதார்த்தம் எனப்படும். பதி என்பது கடவுள்; பசு என்பது உயிர்; பாசம் என்பது கட்டு. உயிர், பாசத்திலிருந்து விடுபட்ட நிலையிலே பதியைச் சென்றடையும். அதுவே வீடு என்றும், மோட்சம் என்றும் சொல்லப்படும். பசுவாகிய உயிர், பாசமென்னும் கட்டறுத்துப் பதியுடன் இரண்டறக் கலந்துவிடுதலே வீடுபேறு ஆகும்.

இங்ஙனம், உயிர் வர்க்கங்களை ஈடேற்றும் பொருட்டுக் கடவுள் ஐந்து தொழில்கள் செய்கின்றார் என்று சைவ சித்தாந்தம் கூறும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும் ஈசன் செயல்கள். இவ்வைந்து தொழில்களுக்கு முரிய சின்னங்களையும் நடராஜ வடிவத்தில் நன்கு காணலாகும். அவ்வடிவத்தில் உள்ள ஒரு கரம் உடுக்கையடிக்கும்; மற்றொன்று அபயமளிக்கும்; பிறிதொரு கையில் நெருப்பு எரியும்; இனி, திருவடிகளில் ஒன்று முயலகன்மீது ஊன்றி நிற்கும்; மற்றொன்று துாக்கிய திருவடி. இவ்வைந்தும் ஆண்டவன் புரியும் ஐந்து தொழில்களையும் காட்டுவனவாம். இறுதியாக உள்ள அருள் புரிதல் என்னும் தொழில், எடுத்த திருவடியால் விளங்கும். எடுத்த திருவடியே பிறவியைக் கெடுத்துப் பேரின்பமளிப்பது. ஆதலால், தில்லைச் சிற்றம்பலத்தில் காலைத் துாக்கி நின்றாடும் கடவுளைக் கண்டு காதலால் கசிந்துருகிப் பாடினார் நாவரசர் :

"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே"

என்பது இவர் திருப்பாட்டு. ஐந்து தொழிலும் விளங்க ஆண்டவன் ஆனந்தக் கூத்தாடும் தில்லைச் சிற்றம்பலமே சைவ உலகத்தில் கோயில் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆகவே, அழகிய திருக் கூத்தாடி ஆன்மாக்களை ஈடேற்றும் குறிப்புடைய நடராஜ வடிவத்தை நமக்குத் தந்தது சைவ சித்தாந்தம்.

சைவ சமயத்தில் ஆலய வழிபாடு இன்றியமையாததாகக் கொள்ளப்படுகிறது. 'ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே' என்று சிவஞான போதம் என்னும் சித்தாந்த நூல் கூறும். கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகாது என்பது சைவர் கொள்கை. இதனால், எண்ணிறந்த சிவாலயங்கள் தமிழ்நாடெங்கும் தலையெடுத்து நிற்கின்றன. பொருள் வளம் பெற்ற அரசரும், அருள் நலம் பெற்ற முனிவரும் ஆலயப் பணியில் ஈடுபட்டார்கள்: தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களை ஆலயங்களில் இன்னிசையோடு பாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். பாடலோடு ஆடலும் நிகழ் வதாயிற்று. இவ்வண்ணம், பெரிய கோயில்களில் எல்லாம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் செழித்தோங்கி வளர்ந்தன. கடவுளுக்குரிய கோயில் கலைக் கோயிலாகவும் காட்சியளித்தது.

இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்களில் சாதி வேற்றுமை காணப்படுகின்றது. ஆண்டவன் கோயிலுக்குள்ளே சில சாதியார் செல்லலாகாது என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்குள்ளே சென்றாலும் இன்னார் இன்ன இடத்தில் நிற்க வேண்டும் என்ற வரையறை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், சைவசித்தாந்த முறையில் சமயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை.

"சாத்தி ரம்பல பேசும்ச ழக்கர்காள்
கோத்தி ரமும்குல மும்கொண்டு என்செய்வீர்"

என்று வினவினார் ஒரு சைவப் பெரியார்.

"சாதிகுலம் பிறப்பென்னும் கழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு"

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்திலே பாடினார். எனவே, கோத்திரமும் குலமும் கொண்டு. நாம் ஆண்டவன் அருளை அடைய முடியாது. எக்குலத்தவராயினும் பக்குவப்பட்ட ஆன்மாக்களே பரகதி அடைவர் என்று சைவ சித்தாந்தம் பறையறைகின்றது. இக் காலத்தில் இழிந்த சாதிகள் என்று எண்ணப்படுகின்ற குலங்களில் பிறந்தவர்கள் பரிபக்குவத்தால் முத்தியடைந்த செய்தியைச் சிவ கதைகளால் அறியலாம். புலையர் குலத்தில் பிறந்த நந்தனார், புனிதமான தில்லையம்பதியில் சிவகதி யடைந்தார். பெத்தான் சாம்பான் பத்தி செய்து முத்தி பெற்றான். ஆதலால், "சாதியினும் சீலமே சிறந்தது: குலத்தினும் குணமே உயர்த்தது" என்னும் உண்மை சைவத்தில் அடிப்படையாக உண்டென்பது நன்கு விளங்குவதாகும். இதனாலன்றோ தேவாரத் திருப்பாகரத்தில்,

"அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
       ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராயின்
       அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே"

என்று பாடினார் திருநாவுக்கரசர்!


  1. சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அந்நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்த்தது.