தமிழின்பம்/தமிழ்த் தாய் வாழ்த்து
40. தமிழ்த் தாய் வாழ்த்து
தமிழ்மொழி வழங்கும் தென்னாடு தெய்வத் திருநாடென்று அறிந்து வணங்கத் தக்கதாகும். பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற திருமால், வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாய் அமைந்த வட வேங்கட மலையில் நின்று அருந்தமிழைக் காக்கின்றான். நீலத்திரைக் கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் கன்னித் தெய்வம் கருங்கடலைக் கையமர்த்திக் காவல் புரிகிறாள். இன்னும், 'நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்த' முத்தமிழ் முனிவர், புகழ் பூத்த பொதிய மாமலையில் அமர்ந்து தமிழகத்தைக் கண்ணினைக் காக்கும் இமைபோல் காத்தருள்கின்றார். இங்ஙனம் வடபால் நீலமேனி நெடியோனும், தென்பால் கன்னித் தெய்வமும், குடபால் அருந்தவ முனிவரும் கருத்துற நோக்கிக் காவல் புரிதலால் செந்தமிழ்நாடு தெய்வக் காவலில் அமைந்த திருநாடாகப் பாரதியார் உள்ளத்திலே தோன்றுகின்றது.
இத் தகைய திருநாட்டில் பிறந்து வளர்ந்த தாய் மொழியின் முற்காலப் பெருமையையும், பிற்காலச் சிறுமையையும் தமிழ் மக்களுக்கு உணர்த்த ஆசையுற்ற கவிஞர், தமிழ்த் தாய் முறையிடும் பான்மையில் உருக்கமாக ஒரு பாட்டுப் பாடியுள்ளார். தமிழன்னை, தலையிலணிந்த சூளாமணி சரிய, இடையிலணிந்த மணிமேகலை தளர, இணையடிச் சிலம்புகள் புலம்ப, கண்கலங்கி நின்று, தன் தகை சான்ற பிள்ளைகளை நோக்கி, 'என் ஆருயிர்மக்காள்! ஆதி சிவனருளால் இந் நானிலத்தில் தோன்றினேன்; முத்தமிழறிந்த முனிவரருளால் திருந்தினேன்; நற்றமிழ் மன்னரது செல்வச் சிறுமியாய்ச் செழித்து வளர்ந்தேன்; அறிவறிந்த மக்கள் ஆக்கி யளித்த காவியக் கலனணிந்து விளங்கினேன்; இடைக் காலத்தில் பல நல்லணிகளைப் பறிகொடுத்தேன். இன்று பசையற்ற மாக்கள் பதறாமற் பேசும் வசைமொழி என் செவியினைச் சுடுகின்றது. உள்ளத்தை அறுக்கின்றது. புத்தம் புதிய கலைகள் மேலை நாடுகளில் மெத்த வளர்கின்றனவாம். அக்கலைகள் ஐம்பெரும் பூதங்களின் திறத்தினை அருமையாக உணர்த்து கின்றனவாம். அம்மேன்மைக் கலைகள் என்பால் இல்லையாம். மேலை நாட்டு மொழிகளே இனி மேலோங்கி வாழுமாம். யான் மெல்லத் தளர்ந்து, மேன்மையிழந்து அழிந்து ஒழிவேனாம். இவ்வாறு மதியிலார் உரைக்கும் மாற்றம் அறியீரோ? பேதையர் கூறும் புன்மொழி கேளிரோ? இவ்வசை மொழி என்பாலமைய நீர் வாளா விருத்தலாகுமோ? எட்டுத் திசையும் சென்று கிட்டிய கலைகள் யாவும் கொணர்வீர். புத்தணி புனைந்து என் நலத்தினைப் புதுக்குவீர். நல்ல கலைப்பொருள் அனைத்தையும் வாரிக்கொணர்ந்து நல்குவீர். ஆதி பகவன் அருள் வலியாலும், இன்று சார்ந்த புலவரது தவ வலியாலும், அப்பேதையர் உரைத்த பெரும்பழி ஒழியும். இசையோடு இப்புவிமிசை என்றுமிருப்பேன்' என்று தமிழன்னை தன் ஆற்றாமையை அறிவித்துத் தமிழ் மக்களைத் தட்டித் தேற்றி எழுப்புகின்றாள்.
இங்ஙனம் தமிழ்த் தாயின் வாய்மொழியாகப் பாரதியார் எழுதியுள்ள பாட்டின் கருத்து அறிந்து போற்றுதற் குரியதாகும். மேலை நாடுகளில் நாள்தோறும் நலமுற்றோங்கி வளரும் நவீனக் கலைகள் தமிழ்மொழியில் இல்லை என்பது உண்மையே. அக்குறைபாடறிந்து தமிழன்னை வருத்தமுற்றாளேனும் சீற்றமுற்றாளில்லை. மேலை நாட்டுக் கலைகளிலமைந்த அரும்பொருள்களை எடுத்துரைக்கும் திறம் தமிழ் மொழிக்கில்லை என்றும், அத்திறமின்மையால் இனி மெல்லத் தமிழ்மொழி இறந்துபடுமென்றும், விரிவிலா அறிவினார் கூறும் வசைமொழி கேட்டுத் தமிழ்த்தாய் சீறுகின்றாள்; அருந்தமிழின் ஆற்றலறிந்தவர் எவரும் அவ்வாறு உரை செய்யாராதலால், 'கூறத் தகாதவன் கூறினன்' என்றாள். தமிழ் மொழியின் நீர்மை உணராத முழு மகனே அவ்வாறு உரைக்கத் துணிவானாதலால், அந்தப் பேதை உரைத்தான் என்று அன்னை அவனைச் சுட்டி இகழ்ந்துரைத்தாள். ஆயினும், அத்தீய வெஞ்சொல் அன்னையின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கின்றது. தகவிலார் கூறும் வசையினைத் தீர்த்து இசையினை நல்குமாறு அருந்தமிழ் மக்களை அன்னை வருந்தி அழைக்கின்றாள்.
ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புறக் கூறுகின்றார்; பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக்கலைகளிலமைந்த புதிய கருத்துகளை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற்பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல் வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின், தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை இயற்றியும் மொழியின் கலைச் செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங்ஙனம் விரைந்து பணிசெய்ய முற்படாது, தமிழ்மொழியின் பழம்பெருமை பேசி மகிழ்வதாற் பயனில்லை. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை". 'கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து, பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்' என்று பாராட்டுவதனால் தமிழ் மொழி பரவிவிட மாட்டாது. 'என்றுமுள தென்றமிழ்' என்று இறுமாந்து பேசுவதால் தமிழ்மொழி ஏற்றமுற மாட்டாது. 'சங்கத் திருப்பிலேயிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்துவிட மாட்டாது. தமிழ்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகை சான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணி செய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோ என்று ஏங்கித் தளர்பவர் இந்நாளில் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற் பலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ் மணக்க மீண்டும் தான் ஏற்றமுறும் காலம் அண்மையில் வருமென்று அறிவிக்கின்றாள். ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த மக்கள் ஆர்வத்தாலும் வீறுபெற்று விளங்குவேன்’ என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறும் வாய்மொழி கார்மேகத்தினரிடையே இலங்கும் கதிரொளியாகும்.
"வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு."
※ ※ ※
தமிழ் விருந்து
தமிழகம் ஊரும் பேரும்
தமிழர் வீரம்
ஆற்றங்கரையிலே
கடற்கரையிலே
வழிவழி வள்ளுவர்
கால்டுவெல் ஜயர் சரிதம்
வேலின் வெற்றி
வேலும் வில்லும்
அலையும் கலையும்
செஞ்சொற்கவிக் கோவை
பாரதியார் இன்கவித் திரட்டு
ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை 600 014.