தமிழின்பம்/திருக்குற்றாலம்

9. திருக்குற்றாலம்

தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கிவளரும்: குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்; கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப்பாட்டிசைக்கும். இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச்சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் சிறு நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும். அவ்வருவியில் நீராடி இன்புற்ற மேலைநாட்டுப் பெரியார் ஒருவர்,'இந்நானிலத்தில் உள்ள நன்னீர் அருவிகளுள் தலைசிறந்தது குற்றால அருவியே என்று கூறுதல் மிகையாகாது!' என்று புகழ்ந்துரைத்தார்.[1]

வேனிற்காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய பூங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்; சலித்த உள்ளத்தைத் திருத்தும் சஞ்சீவியாகும். பயன் மரம் நிறைந்த திருக்குற்றாலச் சாரலில் வேரிலே பழம்பழுத்து, துரிலே சுணை வெடிக்கும் குறும் பலாமரம் ஒன்று தொன்றுதொட்டு விளங்குகின்றது. அப்பழுமரம் திருஞான சம்பந்தர் தேவாரத்தில் அமையும் பேறுபெற்றது. குறும் பலாவின் கீழ் அமர்ந்த சிவக்கொழுந்தை அப்பெருமான் மனங்குளிர்ந்து பாடினார். திருக்குற்றால மலையிலே வாழும் களிறும் பிடியும் விரையுறு நறுமலர் கொய்து குறும்பலாவிற் கோயில் கொண்ட ஈசனைக் குழைத்து வணங்கும் கோலம்,

"பூந்தண் நறுவேங்கை கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும்
குறும் பலாவே"

என்ற தேவாரப் பாட்டில் எழுதிக் காட்டப்படுகின்றது.

நறுமணங் கமழும் பொழில்களைக் காணும் பொழுதும், அப்பொழில்களின் இடையே கிளைக்குக் கிளை தாவி விளையாடும் குரங்குகளைப் பார்க்கும் பொழுதும் பிள்ளைப் பெருமானாகிய திருஞானசம்பந்தர் உள்ளம் துள்ளி மகிழும். 'தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்’ திருக்குற்றால மலையில், இந்நாள் இளைஞர்கள் கண்டு இன்புறுகின்ற வானரங்களை அந்நாளில் திருஞான சம்பந்தரும் கண்டார்போலும்! அப்பொழுது அவர் அடைந்த உள்ளக்கிளர்ச்சி ஒரு தெள்ளிய பாட்டாயிற்று.

"மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்"

என்ற தேவாரப் பாட்டில் மந்திகள் தம் வயிற்றைக் கட்டித் தழுவிய குட்டிகளோடு வாழைக் குலைகளின் மீது அமர்ந்து வளமான கனிகளை மாந்தும் காட்சி அழகுற மிளிர்கின்றது. திருக்குற்றாலத்தின் அருகே சிறந்த ஊர்கள் சில உண்டு. வடநாட்டுக் காசிக்கு நிகரான தென்காசி யென்னும் ஊர் அதற்கு மூன்று மைல் தூரத்தில் உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியனால் தென்காசிக் கோவில் கட்டப்பட்டதென்று சாசனம் தெரிவிக்கின்றது. அரசாளும் உரிமையும் அருந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே வாய்ந்த அதிவீரராம பாண்டியர் தென்காசியில் இருந்து நைடதம் முதலிய நயஞ்சான்ற தமிழ் நூல்களை இயற்றினார் என்பர்.

இன்னும் திருக்குற்றாலத்திற்கு அண்மையிலுள்ள சிற்றுார்களில் ஒன்று மேலகரம் எனப்படும். அவ்வூரில் சைவ வேளாள மரபிலே பிறந்து தெள்ளிய கவிதைபாடும் திறமை பெற்றார் திரிகூடராசப்பர். இவர் இயற்றிய 'குற்றாலக் குறவஞ்சி 'நாடகத்தை நற்றமிழுலகம் புகழ்ந்து பாராட்டுகின்றது.

மலைச்சாரவிலே, தேனும் தினைமாவும் உண்டு திளைக்கும் கானவர் வாழ்க்கையும், காதலுற்ற கடுவன் மத்திக்குக் கனி கொடுத்துக் கொஞ்சும் காட்சியும், அருள் வடிவாய அருவி, அகத்தும் புறத்தும் செறிந்த அழுக்கைப் போக்கிக் கழுநீராய் ஒடும் அழகும், பண்பாகக் குறி சொல்லிப் பட்டும் மணியும் பரிசு பெறும் குறவஞ்சியின் கோலமும் அந்நூலில் இனிமையாக எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

திரிகூடராசப்பர் இயற்றிய குறவஞ்சி நாடகம் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்த முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் கருத்தைக் கவர்ந்தது. அதன் அருமை பெருமைகளைக் கற்றறிந்தார் வாயிலாகக் கேட்டு இன்புற்ற நாயக்கர் திரிகடராசப்பரை ஆதரிக்க விரும்பினார்; குற்றாலத்தில் இன்றும் 'குறவஞ்சிமேடு': என்று வழங்குகின்ற நன்செய் நிலத்தை அவருக்கு நன்கொடையாக அளித்தார். கருப்புக்கட்டி ஊற்றின் அருகே அமைந்துள்ள அவ்வளமார்ந்த நிலம், வழி வழியாக அக்கவிராயர் குடும்பத்தினர் ஆளுகையில் இருந்து வருகின்றது. கவிப் புலமையால் திரிகூடராசப்பர் பெற்ற கவிராசர் என்ற பட்டமும் திருக்குற்றால நாதர் சந்நிதியில் வாகனக் கவி பாடும் சிறப்பும் இன்றும் அவர் குடும்பத்தார்க்கு உண்டு.

திருக்குற்றாலத்தின் அருகே அமைந்த ஊர்கள் யாவும் குறிஞ்சி வளம் வாய்ந்தனவாகும். அவற்றுள் ஒன்று பைம்பொழில் என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது. பசுமையான சோலை சூழ்ந்த சிற்றூரைப் பைம்பொழில் என்றழைத்த பண்டைத் தமிழ் மக்களது மனப்பான்மை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பதாகும். கவிநலஞ் சான்ற அவ்வூர்ப் பெயரைச் சரியாகச் சொல்ல மாட்டாத பாமர மக்கள் பம்புளி என்று சிதைத்துவிட்டார்கள். அச்சிற்றுாரின் எல்லையில் திருமலையென்னும் சிறந்த குன்றம் அமைந்திருக்கின்றது. முருகப் பெருமான் எழுந்தருளிய குன்றமாதலால் அது, திருமலை என்னும் பெயர் பெற்றது.

இன்னும், குற்றாலத்தின் ஒருசார் காசிமேசபுரமும், இலஞ்சியும் அமைந்துள்ளன. காசிமேசபுரத்திற்கும் காசிக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. ஆங்கில வர்த்தக் கம்பெனியார் காலத்தில் காசாமேஜர் என்ற பெயருடைய ஆங்கிலேயர் ஒருவர் தென்னாட்டில்

வர்த்தகக் கர்த்தராக நியமிக்கப்பட்டார். அவர் குற்றால மலையின் செழுமையைக் கண்டு அங்குத் தோட்டப்பயிர் செய்யத் தொடங்கினார். அவர் பெயரால் அமைந்த சிற்றூர் காசாமேசர்புரம் என்று பெயர் பெற்று, இப்பொழுது காசிமேசபுரம் என்று வழங்குகின்றது. 'பொன் இலஞ்சி' யென்றும், 'மீறும் இலஞ்சி' யென்றும் குறவஞ்சிக் கவிராயரால் சிறப்பிக்கப்பட்ட சிற்றுார் செல்வம் மலிந்த சீருராய்த் தென்காசியின் அருகே திகழ்கின்றது.


  1. History of Tinnevelly by Bishop Caldwell