தமிழின்பம்/முப்பெரும் கவிஞர்
37. முப்பெரும் கவிஞர்
நல்லறிஞரது உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பொங்கும் ஆர்வத்திற் பிறப்பது இயற் கவிதையாகும். இத்தகைய கவி பாடும் நல்லியற் கவிஞர், உலகில் சிலரேயாவர். அன்னார் இயற்றும் அருங்கவிதையில் மாந்தர் அறிந்து உய்தற்குரிய விழுமிய உண்மைகள் அமைந்து மிளிரும். அவர் மொழிகளில் ஒளியும் இனிமையும் நிரம்பித் ததும்பும். இத்தன்மை வாய்ந்த கவிஞருள் ஒருவராகிய பாரதியார், தமிழ்நாடு செய்த தவப்பயனாகப் பொருநை நாட்டிற் பிறந்தார்; அருந்தமிழ் மொழியுடன் ஆரியமும் ஆங்கிலமும் அளவோடு பயின்று, தம் உள்ளத்திலெழுந்த தள்ளரிய ஆர்வத்தால் இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார்.
பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் அறிவையும் ஆண்மையையும், வளத்தையும் வாணிபத் திறத்தையும், ஆற்றையும் அருங் காற்றையும் அக் கவிஞர் போற்றிப் புகழ்ந்துள்ளார். சோழநாட்டை வளநாடாக்கிய காவிரியும், தொண்டை நன்னாட்டின் நல்லணியாய்த் திகழும் பாலாறும், புலவர் நாவிற் பொருந்திய வைகையாறும் தமிழ் நாட்டை அழகு செய்யுந் தன்மையை நினைந்து பாரதியார் நெஞ்சம் தழைக்கின்றார். ஆயினும், நல்லறிவே நாட்டின் உயிரெனக் கருதிய அக் கவிஞர் தமிழ் நாட்டிற்கு என்றும் அழியாப் பெருமையளித்த நல்லியற் கவிஞரை நாவார வாழ்த்துகின்றார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு"
என்றெழுந்த பாரதியார் பாட்டின் நயம் அறியத் தக்கதாகும். கல்வி நலம் படைத்த தமிழ் நாட்டிலே கம்பர் பிறந்தார்; இறவாத பெரும் பனுவல் இயற்றினார்; தமிழ் நாட்டிற்கு அழியாத பெருமையை அளித்தார்; 'கல்வியிற் பெரியவர் கம்பர்' என்ற அழியாத புகழ் மாலை பெற்றார். இத் தகைய கவிஞர் அருளிய காவியம் செந்தமிழ் நாட்டிற்குச் சிறந்ததோர் நல்லணியன்றோ? இன்னும் இம் மாநிலத்தில் வாழும் மாந்தர்க்கென்று ஒளிநெறி காட்டும் உயரிய கவிஞரைப் பிறப்பித்து நல்கிய பெருமையும் செந்தமிழ் நாட்டுக்கே உரியதாகும்.
"வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்றெழுந்த பாரதியார் வாய்மொழி தமிழ் நயமறிந்தோர்க்குத் தேனினும் இனிப்பாகும். திருவள்ளுவர் என்னும் மெய்ஞ்ஞானச் செல்வர் பன்னுாற்றாண்டுகட்கு முன்பு இந் நாட்டிலே தோன்றினார். உலகெலாம் இன்புற்று வாழுமாறு ஒளி நெறி காட்டினார்; இன்று உலகறிந்த கவிஞருள் ஒரு தனிக் கவிஞராக ஒளிர்கின்றார். அக் கவிஞர் தென்னாட்டிற் பிறந்தவராயினும் எந் நாட்டிற்கும் உரியவர்; அவர் பொருளுரை தென்மொழியில் எழுந்த தெனினும் பன்மொழியாளர்க்கும் பொதுவுரையாகும். சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாது உலகியல் காட்டி, உறுதிப் பொருள் நாட்டிய அக் கவிஞர் நிலமிசை நீடு வாழ்கின்றார். இத் தகைய மதிநலம் வாய்ந்த கவிஞரைத் தன்னகத்தே தோற்றுவித்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் வாயார வாழ்த்துகின்றார்.
இன்னும், சேர நாட்டின் செல்வத்தினும், செந்தமிழ்ச் செல்வமே சிறந்ததெனத் தேர்ந்து இளமையிலேயே துறவறம் ஏற்று, தமிழர் குலமணி விளக்காய் விளங்கிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமென்னும் செம்மை சான்ற காவிய அமுதை அள்ளி உண்டு அளப்பரிய இன்பமுற்ற பாரதியார்
" - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”
என்று நம் தாய்நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார். கற்போர் மனத்தைக் கவரும் திறம் வாய்ந்த நூல்களுள் சிலப்பதிகாரம் தலைசிறந்ததாகும் என்று பாரதியார் அறிந்துணர்த்தினார். இரும்பினை இழுக்கும் காந்தம் போல் கற்போர் கருத்தினைக் கவருந் திறம் சிலப்பதிகாரத்தில் அமைந்திருத்தலை உணர்ந்த கவிஞர், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று அச் செஞ்சொற் காவியத்தைப் போற்றினார்; இனிய தமிழ்ப் பனுவலாய் இலங்கும் சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தாயின் கழுத்தில் இலங்கும் செம்மணி மாலையாகக் கருதி உள்ளம் தழைத்தார். தமிழ் நாட்டு மூவேந்தர் தகைமையையும், முந் நாட்டின் சீர்மையையும் முத் தமிழின் நீர்மையையும் முறையாக இளங்கோ முனிவர் தொடுத்தமைத்த பாமாலை தமிழ்த்தாயின் திருமார்பின் ஆரமாக அமைந்து அழகுசெய்தற் குரியதன்றோ? இத் தகைய பழம் பெருமை வாய்ந்த பைந்தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ்மொழியின் பெருமையையும் இனிமையையும் உணராது, வறிதே காலம் கழிக்கும் இக் காலத் தமிழ் மக்கள் நிலை கண்டு பாரதியார் இரங்குகின்றார். முன்னோர் முயன்று தேடித்தந்த முழு மணிகள் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடப்ப, அவர் பின்னோராய நாம் வறிஞராய் இவ்வுலகில் வாழ்கின் றோம்; பாலிருந்த பானையைப் பாற்பானை என்பது போல், தமிழறிஞர் மரபிற் பிறந்த நம்மையும் தமிழரெனப் பிறநாட்டார் அழைக்கின்றார்கள். இங்ஙனம் வாயிருந்தும் ஊமையராய், கண்ணிருந்தும் குருடராய், செவியிருந்தும் செவிடராய்த் திரியும் இக் காலத் தமிழ் மக்களை நோக்கி,
"நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்;
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
என்று கவிஞர் பரிவுடன் வேண்டுகின்றார். நறுஞ்சுவை நிறைந்த தமிழின் நீர்மையைத் தமிழ் மக்கள் அறிந்து மகிழ்தல் வேண்டும். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் முன்னோர் மொழியின் வழி நின்று இனிமை வாய்ந்த தமிழ் மொழியை யாண்டும் பரப்புதல் வேண்டும். "வீடு தோறும் தமிழின் முழக்கம்: வீதி தோறும் தமிழின் விளக்கம்; நகரமெங்கும் தமிழோசை நாடு எங்கும் தமிழோசை." இவ்வாறாக எங்கும் தமிழ் முழக்கமே பெருமுழக்கமாய்ப் பொங்கி எழுதல் வேண்டுமென்பது பாரதியாரது பெரு விருப்பமாகும்.