தமிழியக்கம்/புலவர் II


௧0. புலவர் (2)


சீவல்லபத் திருவள்
    ளுவரானார் என்றொருவர்
        செப்ப லுற்றார்!
நாவன்மை என்பதுவும்
    செந்தமிழை நலிப்பதற்கோ?
        நாணி லாரோ?
பாவளிக்கும் சுவைமுழுதும்
    பருகி விட்ட தாயுரைக்கும்
        ஒருவர் சொல்வார்:
கோவையிட்ட கம்பனது
    செய்யுளிலே முக்காலும்
        கோணல் என்றே! 46

கம்பனார் பதினோரா
    யிரம் பாட்டில் முக்காலும்
        கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள்
    இவைதாம் கம்பன் செய்யுள்
        என அச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும்
    மேவாத செயல் இதனைச்
        செய்ய இந்தக்
கொம்பன் யார் எனக் கேட்க
    ஆளில்லையா புலவர்
        கூட்டந் தன்னில் ? 47

“வாட்டங்கண்” ”கற்றரை”யை
    வாள்த்தடங்கண் கல்த்தரை என்
        றெழுதி முன்னைப்
பாட்டினிலே பெரும் பிழையைப்
    பல்குவிப்பா னுக்குமணிப்
        பண்டி தர்கள்
சாட்டை கொடுத் தறிக்கை விடத்
    தாள்ஒன்றும் அற்றதுவோ !
        தமக்குச் சோறு
போட்டிடுவார் ஒப்புகிலார்
    எனுங் கருத்தோ மானமற்ற
        போக்குத் தானோ! 48

வடமொழியும் தெரியும் எனப்
   பொய் கூறி வடமொழிக்கு
        வாய்ப்பும் நல்க
வடமொழியா னைக் கொண்டு
    மொழி பெயர்த்து வருவார்க்கு
        வண்ட மிழ்ச்சீர்
கெடுவதிலே கவலையில்லை.
    ஆரியரை ஆதரித்துக்
        கிடப்ப தொன்றே
நடை முறையில் நலன் விளைக்கும்
    என்னு மொரு மடமையினை
        நசுக்க வேண்டும். 49

அரசினரின் மொழியாக,
     அரசியலார் மொழியாக,
         அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின்
     மொழியாக, வையம் அறி
         மொழிய தாகத்
திருமலிந்த தமிழ் மொழிதான்
     ஆகும்வகை நம்புலவர்
         சேர்ந்து தொண்டு
புரிக என வேண்டுகின்றோம்
     பொழிக என வேண்டுகின்றோம்
         பொன்ம ழைதான்!50

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழியக்கம்/புலவர்_II&oldid=1535780" இலிருந்து மீள்விக்கப்பட்டது