தமிழில் சிறு பத்திரிகைகள்/ஃ( அஃக் )

14. ( அஃக் )


சேலம் ஜாகிர் அம்மாபாளையம் என்ற இடத்திலிருந்து 1972 ஜூன் மாதம், 'ஃ- ஓர் எழுத்தாயுத மாத ஏடு-' தோன்றியது.

அதன் முதல் இதழின் அட்டையும் உள் அமைப்பும் அச்சும் அழகாய், புதுமையானதாய் விளங்கின. இலக்கியவாதிகளுக்கு நிறைந்த திருப்தியும் நம்பிக்கையும் தரத்தக்க விதத்தில் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

அட்டை முழுவதும் ஃ என்ற எழுத்தையே மூன்று கண்களாகச் சித்திரிக்கும் வடிவங்களும், A Q என்ற எழுத்துக்களும் விரவிக் கிடந்தன. தலையங்கம், கொள்கை விளக்கம், லட்சிய முழக்கம் போன்ற சம்பிரதாயமான ஒலிபரப்புகள் எதுவும் இல்லாமலே தோன்றியது அந்தப் பத்திரிகை.

முதல் இதழில் முதலாவதாக கி. ராஜநாராயணன் எழுதிய 'ஜீவன்' என்ற அருமையான கதை. அடுத்து, வெ. சாமிநாதன் சிந்தனைகள். ‘சில கேள்விகள், சில பதில்கள், சில தெரியாது'கள்.' வல்லிக்கண்ணன் குறிப்பு ஒன்று. அம்பையின் நாடகம் 'பயங்கள்,' கடைசிப் பக்கத்தில் க. நா. சு. சிந்தனை- 'இலக்கியத்தில் சோதனை.'

இந்தப் பத்திரிகையை வரவேற்று மகிழ்ச்சி கொண்டு எழுதிய இலக்கியவாதிகளின் கடிதங்கள் பின் வந்த இதழ்களில் பிரசுரமாயின.

அ ஃ க் பத்திரிகையின் ஆசிரியர் என். பரந்தாமன். லட்சிய வேகமும், கற்பனை உள்ளமும், கலையாற்றலும், துணிச்சலும், புதுமை வேட்கையும், செயல் துடிப்பும் நிறைந்த இளைஞர், கவிஞர், ஓவியர். புதிய சினிமா முயற்சிகளில் அக்கறை கொண்டவர். ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த காலத்திய 'ஞானரதம்' பத்திரிகையுடன் தொடர்பு கொண்டிருந்தவர். தரத்தில் உயர்ந்த இலக்கியச் சிற்றேடு ஒன்றை நடத்த வேண்டும் என்ற தவிப்பை வளர்த்தவர்.

அந்த எண்ணம் அவருள் 1970 லேயே கருக்கொண்ட போதிலும், இரண்டு ஆண்டுகள் அவர் பூர்வாங்க முஸ்தீபுகளில் முனைந்துவிட்ட போதிலும், 1972 ஜூனில்தான் அஃக் முதல் இதழைக் கொண்டு வர முடிந்தது அவரால். -

அஃக் என்ற பெயர், அதற்கு அவர் தீட்டிய சின்னம் குறித்து பரந்தாமன், 1980 ஜூன்- செப்டம்பர் என்று காலக் குறிப்பிட்டுப் பிரசுரித்த 22-வது ஏட்டில் அவரது உள்ளத்தின் உணர்ச்சிகளையும் அனுபல் வெளிப்பாடுகளையும் ஒரு ஆவேசத்தோடு, உக்கிரமான தொனியில் ஒலிபரப்பிய சுயசரிதையில் இவ்வாறு விளக்கினார் :

‘மூன்று புள்ளிகளை உடைய கண்களே கலையும் விமர்சனமும் ஆகின்றன. 'அஃக்'ன் சின்னமான இந்தக் குறியீட்டில் கீழே இரண்டு சினங் கொண்ட சிமிட்டாத கந்தர்வப் பார்வைகள். மேலே எப்போது திறக்குமோ என்கிற உக்கிரத்துடன் நெற்றிக்கண். விழித்திருக்கும் இரண்டு கண்களின் இமை வட்டங்களில் AQ என்று டிஸைன் செய்திருக்கிறேன். இந்தக் குறியீட்டையே தலை கீழாகத் திருப்பிப் பார்த்தால், நெரிந்த புருவங்களுடன் கோபம் கொப்பளிக்கிற விழிகளும், கீழே உரத்துப் பேசுகிற பெரிய வாயும் தென்படுவதைக் காணலாம். இது தான் ஃ ஆய்த எழுத்து. இது உயிருமல்ல மெய்யுமல்ல. இது தனி. ஆதலால் இது தனி நிலை என்றும் வழங்கப்படும். இந்தப் பெயர் எல்லாரையும் வெகுவாகப் பாதித்து விட்டது. இது ஒரு குழுவுக்காக, கும்பலுக்காக, கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடை அல்ல. ஓர் கலை இலக்கிய இயக்கத்துக்காகப் போடப்பட்ட மேடை எந்தப் பத்திரிகை மாதிரியும் இருக்கக் கூடாது என்றுதான் அஃக் வந்திருக்கிறது. அஃக் இன்னொரு ஏடு மாதிரியே இருக்க வேண்டுமென்றால் அஃக் எதற்கு?

இப்படி எண்ணம் வளர்த்த பரந்தாமன், ஒவ்வொரு இதழும் தரமாகவும் தனித் தன்மையோடும் திகழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர் அச்சுக் கலையில் தேர்ந்தவர்; நல்ல பயிற்சி பெற்றவர். அஃக் பத்திரிகையின் அச்சு அமைப்பு நேர்த்திக்கும் உயர்வுக்குமாக அகில இந்திய ரீதியிலான தேசியப் பரிசு-1976-ல் நற் சான்று இதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

வண்ணதாசன் கதைகள் முதல் தொகுப்பான கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தின் உயர்ந்த அச்சுவேலை அமைப்பு நேர்த்திக்காக இரண்டாவது பரிசும் பரந்தாமனுக்கு அளிக்கப்பட்டுள்ளது- 1976-ல் அந்தத் தொகுப்பை அவர்தான் கலாரீதியாக அமைத்து அச்சிட்டுக் கொடுத்தார்.

ஆகவே, அச்சு அமைப்பிலும் தோற்றப் பொலிவிலும் அஃக் இதர சிற்றேடுகளை விடத் தனிச் சிறப்புடன் விளங்கும் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது.

4-வது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாரானது. அப்போது (புதுக்) கவிதை எழுதிக்கொண்டிருந்த பலரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். கலாப்பிரியாவின் 'சக்தி' ஒன்பது பக்கங்களில் இடம் பெற்றது. அரூப் சிவராமின் பிரசித்தி பெற்ற கவிதை E-MC2 இந்த இதழில் வந்தது.

சிறு பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட ஒரு கசப்பான உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

'எழுத்து' பத்திரிகையில் ஆழமான எண்ணங்களை, சுய சிந்தனைகளை, தீவிரக் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதி இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் வெ. சாமிநாதன், தருமு சிவராம் ஆவர். பிறகு வந்த சிற்றேடுகளுடனும் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில், அவர்களுடைய நோக்கும், திறமையும் திசை திரும்பித் தடம் புரண்டு தாறுமாறான பாதைகளில் வேகமாக ஓடலாயின. விமர்சனக் கலையை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதற்கு மாறாக, இவ் இருவரும் 'விமர்சனம்' என்ற பெயரில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களையும் அவர்களை ஆதரித்த பத்திரிகைகளையும் தாக்கி எழுதுவதில் ஆர்வம் கொண்டார்கள். போகப் போக, ஒரு சில எழுத்தாளர்களைக் குறை கூறி எழுத முற்பட்டு சகல எழுத்தாளர்களையும் மட்டம் தட்டி இழிவுபடுத்துவதிலும், தேவையில்லாமலே தாக்குவதிலும் இவர்கள் உற்சாகம் காட்டலானார்கள். பரபரப்பு, அதிர்ச்சி, தடாலடித்தனம் தந்து, வாசகர்களில் பெரும்பலரை ஈர்த்து சுலபப் பெயர் பெறுவதில் ஆர்வம் பெற்றுவிட்ட இவ்விருவரும் நீளம் நீளமான கட்டுரைகள் எழுதி, சிற்றேடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, அவற்றின் வளர்ச்சியையும் பாதித்தார்கள்.

அஃக் பத்திரிகையும் அவர்கள் வலையில் சிக்கிக் கொண்டது. அதன் 5-வது இதழ் முதல் டி. அரூப் சிவராம், வெ. சாமிநாதன் பாதிப்பு அதிக அளவில் அமைந்தது. இந்த இதழின் பாதியை சிவராமின் கோணல்கள் கட்டுரையும், மறுபாதியை சாமிநாதன் கட்டுரைகளும் பிடித்துக் கொண்டுள்ளன.

இவற்றுக்கான எதிரொலிக் கட்டுரைகளும், இவர்களின் புதிய தாக்குதல்களும் பின்வந்த இதழ்களில் தொடர்ந்தன. அஃக் பத்திரிகை ஒழுங்காக, மாதம்தோறும் வரமுடியாத நிலையையும் அடைந்தது.

என்றாலும், தரமான, சோதனை ரீதியிலான கதைகள், பிறமொழி நாடகம்-சினிமா பற்றிய கட்டுரைகள், கவிதைகள் பிரசுரிப்பதிலும் அஃக் சிரத்தை கொண்டிருந்தது. 8-வது இதழ் தருமு சிவராம் கவிதைச் சிறப்பிதழ் என்று வெளியாயிற்று, கண்ணாடியுள்ளிலிருந்து என்ற தலைப்புடன், சாமிநாதன் முன்னுரையோடு.

வண்ணதாசன், நகுலன், சார்வாகன், நா ஜெயராமன், ஆர். ராஜேந்திர சோழன் கதைகள் முதல் வருட இதழ்களில் பிரசுரம் பெற்றுள்ளன. கன்னட நாடகம் கிரீஷ்கர்னாடின் ஹயவதனா, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம், ஸெர்கி ஐஸன்ஸ்டீனின் திரைப்படக் குறிப்புகள் பற்றியும் கட்டுரைகள் வந்தன.

அஃக்கின் 13வது இதழ் (இரண்டாவது ஆண்டுத் துவக்க இதழ்) 1974 டிசம்பர் மாதம்தான் வந்தது. முன்னரே அறிவித்தபடி, அது வடிவம் மாறியிருந்தது. 13-வது இதழ் முடிய பெரிய அளவில் வந்த ஏடு இப்போது, விகடன் அளவுக்கு மாற்றம் பெற்றது. இதழ்தோறும் விசேஷமான லினோகட் அட்டையில் வர்ணத்தில் அச்சிடப் பெற்றது.

இந்த இதழ் சிறப்பாக அமைந்துள்ளது. அரூப் சிவராம் மூன்று கவிதைகள், நாடகக் கட்டுரை பற்றிய கோபாலி எழுதிய விளக்கம் சில பக்கங்கள், ந. முத்துசாமி கதை வண்டி, ராபர்ட் ஃபிராஸ்டின் சில கவிதைகள், சுந்தர ராமசாமியின் புதிய கதைகள் பற்றிய நா. ஜெயராமன் சிந்தனைகள், வே. மாலி கவிதை ஒன்று, மோகன் ராகேஷின் நாடகங்கள் பற்றிய எஸ். என். கணேசன் கட்டுரை, கலாப்பிரியா கவிதை ஒன்று. உள் பக்கங்களிலும் நவீன சித்திரங்கள் கலர்களில் அச்சாகியிருந்தன.

14-வது இதழ் (ஜனவரி-மே 1975 ) இந்திரா பார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் மட்டுமே கொண்டிருந்தது.

15-வது இதழ் (ஜூன்-டிசம்பர் 1975) ந. முத்துசாமி கட்டுரை, அரூப் சிவராம் கட்டுரை ஆகிய இரண்டு மட்டுமே கொண்டிருந்தன.

அதன் பிறகு பத்திரிகை ஒழுங்காக வரவில்லை. திடீரென்று எப்பவாவது ஒரு இதழ் வரும்.

இதைக் குறித்து 1978 ஜனவரியில் கி. ராஜநாராயணன் எழுதிய கடிதம் ரசமாக இருந்தது. 'பரந்தாமனுக்கு தலைவணங்குகிறேன். தேன் கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடு கட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை உணர்ச்சி வயப்படச் செய்கிறது என்னை. போராடுவதே வாழ்க்கை.'

பரந்தாமனின் போராட்டக் குணம் நன்கு வெளிப்படுகிறது. அவர் ஒரு பிரகடனம் போல் எழுதி வெளியிட்ட சுயசரிதைக் குறிப்பில், அது அஃக் 22-வது ஏடு என்று 1980-ல் (ஜூன்-செப்டம்பர் ) வந்தது. அதுதான் கடைசி இதழ்.

அதில் அவர் பல லினோகட், பன்வர்கட் ஓவியங்களையும் இணைத்துள்ளார். லினோகட், பன்வர்கட் உட்கட் ஆகியவைகளுக்கு உரிய விளக்கங்களும் அக்கட்டுரையில் உள்ளன.

1972 ஜூனில் தொடங்கி 1980 ஜூனில் அஃக் நின்று விடுகிறது. எட்டாண்டுகள் 22 இதழ்கள், என் பிராணனை வாங்கிக் கொண்டு பிரசுரமாயின. என்றாலும், நான் நினைத்த சர்வ நிச்சயமான ஆழத்தின் சோபையுடன் அந்த மனோகரமான முதல் அஃக் இன்னும் வெளிவரவே இல்லை. பத்தாண்டுகளும் மனசாலும் சரீரத்தாலும், சதாசர்வமும் இதையே நினைத்து, இதற்காகவே அலைந்து திரிந்திருக்கிறேன் ஒரு பைத்தியக்காரனைப் போல. என் கையிலிருந்த கடைசிச் சல்லியையும் இதற்காகவே செலவு செய்து விட்டு தற்சமயம் நான்தான் எனக்கு மீதியாக இருக்கிறேன். பாடு அதிகம், பலன் குறைவு. சாதனை என்று சொல்லமாட்டேன். காம்பீர்யமான துவக்கம் என்று சொல்லுவேன். ஒரு தூர தரிசனத்தைக் கருதி, இருபது முப்பது ஆண்டுகளானாலும் பெற முடியாத ஒன்றை இந்தப் பத்தாண்டுகளில் நான் பெற்றேன். அனுபவம். அதுதான் எனது அபரிமிதமான உபரி லாபம். நான் தூக்க நினைத்தது கோவர்த்தன கிரியை. குடிக்க நினைத்தது பாற்கடைலை. இப்படி நினைக்கவே ஒரு மனோதைரியம் வேண்டும். இது என் சுபாவம். எனக்களித்த சாகாவரம். இத்தகைய சித்த காம்பீர்யம்தான் ஒரு மனிதனை ஒரு பட்டாளமாக்குகிறது. மனிதப் பட்டாளமாய் சமுதாயத் தோடு சமரிட்டு இந்த நினைப்பைச் செயலாக்கிக் காட்டத்தான் போகிறேன். எதிர்வரும் அந்த ஒரு நாளின் சூர்யோதயம் உங்கள் எல்லாரது நேத்திரங்களையும் கூசவைக்கத்தான் போகிறது.’

த்தகைய ன்னம்பிக்கையும் னித்தன்மைகளும் கொண்ட பரந்தாமன் எடுத்துச் சொல்லும் எண்ணங்களில் மிக முக்கியமான ஒன்று பின் வருவது-

'முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையே படைப்பாக வெளிவந்தாக வேண்டும் என்கிற அத்தியாவசியத்துக்கான காலகட்டமிது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே நாம் அதி தீவிர அதிருப்தி கொண்டிருப்பதான நிஜத்துக்கு, இப்படிப்பட்ட ஒரு முழு மாற்றத்துக்கான அணுகலே பரிகாரமாகும். சிறு பத்திரிகைகளின் உள்ளும் புறமுமான படைப்புத் தரங்களின் விஸ்தாரமான வீச்சில்தான் ஜனரஞ்சக ஏடுகளை மிஞ்ச முடியும். மிஞ்சி விட்டால் மாறுதல் தானே விளைகிறது. அதுவரைக்கும் எதற்கும் பின்வாங்காத போர்க்குணம் தேவைப்படுகிறது. இதைச் செய்ய பலவிதத் திறமைகளுள்ள தீரர்களே தேவைப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களே சிறு பத்திரிகைத் துறையின் அல்லது சமுதாயத்தின் சகல துறைகளின் முழு மாற்றத்துக்குமான போராளிகள் ஆவார்கள். தனக்காகத் தன்னுடனேயே போராடுவது போலத்தான், சக மனிதர்களுக்காக இந்த பதிதர்களுடனேயே போராட வேண்டியிருக்கிறது. சரியானவர்கள் சரியும் போதெல்லாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. விமர்சனத்துக்கு அடங்காவிடில் ஒதுக்கவோ, ஒதுங்கவோ அல்லது எதிர்க்கவோ வேண்டியிருக்கிறது.'