தமிழில் சிறு பத்திரிகைகள்/ஞானரதம்

13. ஞானரதம்


லைப்ரேரியன் (நூலகர்) ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்த என். முகமது இப்ராகிம் (சித்திரபாரதி) இலக்கிய ஈடுபாடு கொண்டவர். இலக்கிய வளர்ச்சிக்காகப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வமும் செயல் துடிப்பும் உற்சாகமும் பெற்றிருந்தார் அவர்.

அவர் மதுரையில் பணிபுரிந்த காலத்தில், இலக்கிய ரசனையைப் பரப்புவதற்கு வாசகர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, விமர்சன விழா, ஆய்வுச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் பலவற்றுக்கு ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருந்தார். இது 1960 களில்.

பின்னர் இப்ராகிம் சென்னைக்கு வந்தார். நல்ல இலக்கியப் பத்திரிகை ஒன்று நடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்தது. இலக்கியத்துடன் அரசியல், சமூகம், ஆன்மீகப் பிரச்னைகளிலும் அவர் அக்கறை காட்டிவந்தார். தனது பெயரை தேவ. சித்திரபாரதி என்று ஆக்கிக் கொண்டார். -

இலக்கியப் பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற அவரது ஆசை 1970-ல் செயல் மலர்ச்சி பெற்றது. ஞானரதம் தோன்றியது.

ஜெயகாந்தனிடம் அவருக்குப் பெரும் மதிப்பு உண்டு. ஜெயகாந்தனை மிகுதியும் போற்றிப் புகழ்ந்து வியந்து கொண்டிருந்த தேவ. சித்திர பாரதி, தான் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஞானரதம் மாத இதழுக்கு ஜெயகாந்தனை ஆசிரியர் ஆக்கினார்.

ஆறு மாத காலம் ஞானரதம் சிறிய அளவில் ( கிரவுன் சைஸ்) வெளிவந்தது. ஜெயகாந்தன் முன்னோட்டம் என்ற பகுதியில் பல்வேறு பிரச்னைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். உரத்த சிந்தனை என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவ்வப்போது கவிதைகள் எழுதினார். -

“ரசனை என்ற பகுதியில், ரசனைக்கு அடிப்படையான சில ஆரம்பப் பயிற்சிகளை விளக்கும் நோக்கத்துடன் வெ. சாமிநாதன், ‘அனுபவம், வெளிப்பாடு, நவீன ஓவியம்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். 7-வது இதழ் முடிய.

மற்றும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.

7-வது இதழிலிருந்து ஒவ்வொரு இதழை ஒவ்வொருவர் தயாரிக்கும் முறையை தேவ சித்திரபாரதி கைக்கொண்டார். 7-வது இதழ் ஞானக்கூத்தன் தயாரிப்பு, சைசும் பெரிதாகியிருந்தது-விகடன் அளவில் வெளிவந்தது.

8-வது இதழ்-வல்லிக்கண்ணன் தொகுத்தது. இது ரசனைக்கு விருந்தாகும் ஒரு சிறப்பு மலர்போல் அமைந்து, இலக்கியப் பிரியர்களுக்கு நிறைந்த திருப்தி அளித்தது.

9-வது இதழ் பரந்தாமன் தயாரிப்பு. இத்துடன் ஒரு வருஷம் முடிந்தது. ஞானரதம் என்ற இலக்கிய ஏடு சோர்ந்து தூங்கியது. தேவ. சித்திரபாரதி வேறு முயற்சிகளில் செயலூக்கம் கொண்டிருந்தார்.

1972 ஞானாதம் மாத இதழ் மீண்டும் தோன்றியது. இப்போது ஜெயகாந்தனுக்கும் பத்திரிகைக்கும் தொடர்பு ஏதுவும் இல்லை. தேவ. சித்திரபாரதிதான் ஆசிரியர், நிர்வாகி எல்லாம். இதழ்தோறும் ‘முன்னோட்டம் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர் தமது சிந்தனைகளை விரிவாக எழுதிக் கொண்டிருந்தார்.

பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் ஏற்று ஒரு ஆண்டுக் காலம் முடிந்ததும், அவர் டிசம்பர் 1972 இதழில் எழுதியது ரசமான குறிப்பு ஆகும்.

"தவறாமல் மாதந்தோறும் முதல் தேதியன்றே ஞானரதம் வெளிவந்திருப்பதே சாதனைகளின் சிகரமாகும். தமிழகத்தில் வெளியாகும் சிறு இலக்கியப் பத்திரிகைகளுள் தேதிப்படி சரியாக இந்த ஆண்டில் வெளிவந்த பத்திரிகை ஞானரதம் ஒன்றுதான் என்பதை அறியும்போது இந்தச் சாதனையின் பெருமை பூரிப்பைத் தரவே செய்கிறது.

ஜெயகாந்தன் பெயருக்காகத்தான் ஞானரதத்துக்கு இத்தனை வாசகர்கள் என்ற கணிப்பைப் பொய்யாக்கி, புத்தாண்டு சந்தா இயக்கக் கோரிக்கைக்கு, ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த காலத்தையும் விட அதிக எண்ணிக்கையில் Respond பண்ணியதன் மூலம் வாசகர்கள் ஹீரோ ஒர்ஷிப்பில் மயங்காத, இலக்கிய ரீதியான ரசனையையும், சுயமரியாதையையும் நிரூபித்திருக்கிறார்கள் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.”

புதிய ஓட்டம் பெற்ற ஞானரதம் இலக்கிய விஷயங்களிலும், இலக்கியவாதிகள் விவகாரங்களிலும் (சச்சரவுகளிலும்) அதிக அக்கறை காட்டி வந்தது. உரத்த சிந்தனை என்ற தலைப்பில், படைப்பாளிகள்-ரசிகர்கள் சந்திப்பை (ரசிகர்கள் கேள்விகளையும் படைப்பாளிகளின் பதில்களையும்) பிரசுரித்தது. இது இந்த இலக்கிய ஏட்டின் தனிச் சிறப்பு அம்சமாக விளங்கியது.

‘இலக்கிய அனுபவம்' என்ற தலைப்பில் புத்தகங்கள் அல்லது தனிப் படைப்புகள் பற்றி யாராவது விரிவாக அபிப்பிராயங்கள் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஞானரதம் 1974 முதல்பாதி வரை வெளிவந்து கொண்டிருந்தது. ‘உண்மையைத் தேடும் எழுத்தைவிட உயர்ந்த இலக்கியம் இல்லை.' என்ற வரியை லட்சியக் கொள்கையாகப் பொறித்திருந்த இந்த இலக்கிய ஏடு, கீழ்க்கண்ட கருத்தையும் ஒலிபரப்பி வந்தது.

‘மனிதர்களில் எத்தனை முகங்கள் உண்டோ அத்தனை விதமான நோக்கங்களும் பார்வைகளும் இலக்கியத்திலும் இருக்கவே செய்கின்றன. ஞானரதத்தின் நோக்கங்களுக்கும் பார்வைகளுக்கும் மாறுபட்டவைகளும் கூட இலக்கியமாக இருப்பின் இங்கு இடம்பெறும், ஏனெனில், ஞானரதத்தின் இலக்கே, உண்மையைத் தேடிக்கொண்டிருப்பது ஆகும்.

இலக்கிய விவகாரங்கள், இலக்கியவாதிகளின் சச்சரவுகள், வம்புகள், அக்கப்போர்கள் முதலியவைகளுக்கும் ஞானரதம் அதிகமாகவே இடம் அளித்திருக்கிறது. புதிய திறமையாளர்களை வரவேற்று ஊக்குவித்துள்ளது. சிறுகதைகளிலும் புதுக் கவிதைகளிலும் நல்ல அறுவடை கண்டிருக்கிறது. சோதனை முயற்சிகள் தாராளமாக இடம் பெற்றுள்ளன.

ஞானரதம், அதன் காலகட்டத்தில் க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோரின் மணிவிழாச் சிறப்பிதழ்கள் வெளியிட்டு அப்படைப்பாளிகளைக் கௌரவித்தது.

படைப்பாளிகள் பலரும் ஞானரதத்துடன் ஒத்துழைத்தது, அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் துணை புரிந்தது. பல வருட காலம் நடுவில் எழுதாதிருந்த சுந்தர ராமசாமி ஞானரதத்துக்கு அதிகமாகவே கதைகள், சுதந்திரச் சிந்தனைகள், கவிதைகள்- எழுதி உதவியுள்ளார்.

1974-ல் தேவ சித்திரபாரதி தேவையில்லாத ஒரு புதுமையை ஞானாதத்தில் புகுத்தினார். கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியவர்களின் பெயர்களை அச்சிடாது, அவர்களது எழுத்துக்களை மட்டுமே கொடுப்பது. குறிப்பிட்ட எழுத்தை வைத்து, சம்பந்தப்பட்ட படைப்பாளி யார் என்று வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும். இதனால் ரசனை வளர இடமுண்டு என்று அவர் கருதினார். உரிய பெயர்கள் அடுத்த இதழில் பிரசுரிக்கப்பட்டன. இதைப் பெரும்பாலான வாசகர்கள் வரவேற்கவில்லை. - -

1974 ஜனவரி முதல் ஞானரதம் கடைகளில் விற்பனை செய்யப்படாத-சந்தாப் பணம் கட்டிய வாசகர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய- ஒரு சிறு பத்திரிகையாக மாற்றப்பட்டது.

அதன் கடைசி இதழ் 37-39 (மே-ஜூலை 1974 ) என்று இலக்கமிடப்பட்டு, ஸோல்ஸெனிட்ஸின் சிறப்பிதழ் என்று வெளிவந்தது. அந்த இதழின் கடைசிப் பக்கத்தில் காணப்பட்ட முக்கிய அறிவிப்பு

“1974 ஆகஸ்டு முதல், இப்போது இலக்கியத் துறைப் பத்திரிகையாக மட்டும் உள்ள ஞானரதம் மானிட இயல்கள் (Humanities) அனைத்துக்குமான பத்திரிகையாகப் பரிணாமம் பெறுகிறது.

இதற்கிசைவாக திரு. கந்தர ராமசாமியின் தலைமையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட புதிய ஆசிரியர் குழு ஆகஸ்டு 1974 முதல் பொறுப்பேற்கிறது.

ஆகஸ்டு முதல், ஞானரதம் இதே அளவில் 80 பக்கங்களுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலை அம்சங்களுடன் வெளிவரும். தனி இதழ் விலை ரூ. 2 ஆண்டுச் சந்தா ரூ.12 இருக்கும்.”

இந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை.

ஞானரதம் ஆசிரியர் தேவ. சித்திரபாரதி வலியுறுத்தி வந்த கருத்து நினைவுகூரத்தக்கது- .

“நாமெல்லாம் உண்மையைத் தேடி வெளிப்படுத்தத் துடிக்கும் தத்துவவாதிகள் மட்டுமில்லை, கலைஞர்களும்கூட. நாம் வெளிப்படுத்தும் உண்மைகளின் புதிய பரிணாமங்கள் கலா பூர்வமாகவும், இலக்கிய நிலைகளுடனும், அழகியல் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. கூடவே, வெளிப்படுத்தும் உண்மைகள் நாலு பேருக்காவது விளங்க வேண்டுமே என்ற பொறுப்பும், பிறர் புரிந்து கொள்ளும் பொதுமை அனுபவமாகவும் அவை இருந்தால் நல்லது. ஆனால் தனி அனுபவங்களுக்கு நாம் விரோதிகளல்லோம்.” ☐☐