தமிழில் சிறு பத்திரிகைகள்/ஆர்வத்தின்‌ மலர்ச்சிகள்‌

39. ஆர்வத்தின் மலர்ச்சிகள்


பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை யாரை எப்படிப் பிடித்து ஆட்டும் என்று சொல்வதற்கில்லை. வணிக நோக்கில் நடத்தப்படுகிற பெரிய பத்திரிகைகளையும், ஏதேதோ நோக்கில் பிறப்பிக்கப்படுகிற சிறு பத்திரிகைகளையும் பார்த்துப் பார்த்து, நாமும் ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன என்ற எண்ணம் அநேகரைச் செயலுக்குத் தூண்டுகிறது. தனியராகவோ, சிலர் சேர்ந்தோ பத்திரிகை நடத்தத் துணிந்து விடுகிறார்கள்.

இவர்களுடைய ஆர்வத்தின் விளைவுகள் பத்திரிகை உலகில் சாதனைகள் புரிந்துவிடுகின்றன என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்டுப் பெயர் சொல்லும்படியாக நினைவில் நிற்கும் தரத்தனவாக இத்தகைய பத்திரிகைகள் விளங்கின என்றும் கூறுவதற்கில்லை.

சிறு பத்திரிகைகள், இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அச்சேறுவதற்கு உதவுகிற அரங்கங்கள் ஆக உதவுகின்றன. வளர்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பலவும் வெளிச்சத்தைக் காண்பதற்கு இவை தாராள இடம் தருகின்றன. சிறு பத்திரிகைகள் பரபரப்பான கருத்துக்களை, விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த—சர்ச்சைக்குரிய எண்ணங்களை—அவ்வப்போது ஆழமற்ற மேல்பரப்புச் சிந்தனைகளாகத் தூவி வைக்கின்றன. அத்தகைய எழுத்துக்கள் வெளிவந்த சமயத்தில் அவை, சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுக்கும் கவனிப்புக்கும் உரியனவாக அமைகின்றன. அவ்வளவுதான்.

இந்த விதமான பத்திரிகைகள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றன. குதிரைப் பந்தயத்தில் ‘அவையும் ஓடின‘ என்று சொல்லப்படுவது போல, இவையும் பத்திரிகை உலகில் வந்தன, நடந்தன, இருந்தன, மறைந்தன என்று கூறலாம்.

1930—40களில் ‘பிரசண்ட விகடன்’, ‘அணிகலம்’, ‘திருமகள்‘, ‘வசந்தம்‘, 50 களில் ‘புதுமை’, ‘ரசிகன்‘, 60 களில் கன்னிக்கண்ணனின் ‘உதயம்‘ என்று பலப்பல. சரியான ‘பத்திரிகை வரலாறு‘ எழுதப் பெற்றால் பட்டியலில் சேரக்கூடிய சிறு பத்திரிகைகளின் பெயர்கள் அதிகமாகவே இருக்கும்.

1970களிலும் இப்படி அநேகம் பத்திரிகைகள் வந்துள்ளன. ஜயந்தி என்று ஒரு மாத இதழ் ஆசிரியர் : நெ. சி. சாம்பமூர்த்தி. ‘ஆனந்த விகடன்‘ அளவில் வந்து கொண்டிருந்தது. 1972 செப்டம்பரில் தொடங்கி, 1977 ஏப்ரல் வரை 46 இதழ்கள் வெளிவந்துள்ளன. நடுநிலை இலக்கிய இதழ் ஆன ஜயந்தியில் கவிதைகள், கதைகள், இலக்கியச் சிந்தனைகள், புத்தகத் திறனாய்வுக் கட்டுரைகள் பிரசுரமாயின.

ராஜபாளையம் எழுத்தாளர்கள் அனைவரும்— கொ. மா. கோதண்டம், மு. கு. ஜகந்நாத ராஜா, கொ. ச. பலராமன், பூ. அ. துரைராஜா, இரா. கதைப்பித்தன்— ஜயந்தியில் எழுதினார்கள். சிவசு, இளசை அருணா போன்றவர்களும் எழுதினார்கள். வல்லிக்கண்ணன், நீல. பத்மநாபன், நாஞ்சில் நாடன் படைப்புகளையும் ஜயந்தி பிரசுரித்திருக்கிறது. பிறமொழி இலக்கியங்களை (மலையாளம், தெலுங்கு ) சேர்ந்த கதைகளின் மொழி பெயர்ப்புகளும் இதில் வந்தன.

கற்சிலை என்றொரு மாதமிருமுறை, 1973 ஜனவரியில் ஆரம்பித்து 1974 மே வரை வந்திருக்கிறது. ஆசிரியர்— கு. பரமசிவம்.

எழுத்தாளர் கு. பரமசிவம் படைப்பாளி விந்தனின் நெருங்கிய நண்பர். விந்தன் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்ட இவர் எழுத்தாளர் விந்தனின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் எழுதியிருக்கிறார். இது 1980களின் சமாச்சாரம்.

கற்சிலை சாதாரணப் பத்திரிகையாக வந்துள்ளது. சினிமா பற்றிய தகவல்கள், அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் சம்பந்தமான கருத்துக்கள், சுமார் ரகக் கதைகள், கவிதைகளை வெளியிட்டுள்ள இப் பத்திரிகை நல்ல, ‘சோவியத் சிறப்புக் கட்டுரைகள்‘— இலக்கியம் சம்பந்தமானவை—பலவற்றை அச்சிட்டிருக்கிறது. மறைந்த கவிஞர் தமிழ் ஒளியின் பெருமையை அடிக்கடி அறிவுறுத்தியது (15-வது இதழுக்குப் பிறகு சினிமா விஷயங்கள் கைவிடப்பட்டன .

தமிழ் ஒளியின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை மறுபிரகரம் செய்த கற்சிலை, தனது 17—வது இதழை தமிழ் ஒளியின் பொன்விழாச் சிறப்பிதழ் ஆகத் தயாரித்துள்ளது. இந்த இதழுக்குப் பிறகு, பத்திரிகையின் சிறப்பாசிரியர் உமா மகேசுவரன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

உமா மகேசுவரன் அதற்குப் பல மாதங்கள் முன்பிருந்தே விறுவிறுப்பான நடையில் சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி வந்திருக்கிறார். பிறகும் தீவிரமாகக் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். த. கோவேந்தன், ஞானம்பாடி, ஏ. சுவாமிநாதன் ஆகியோர் உற்சாகத்துடன் ஒத்துழைக்கிறார்கள்.

புதுக் கவிதையை எதிர்த்தும், க. நா. சு. வைச் சாடியும், சரித்திர நாவல்களைக் கண்டித்தும் ஆழமில்லாத, பரபரப்பு ரீதியான, சிறு கட்டுரைகளைக் கற்சிலை வெளியிட்டிருக்கிறது.

முதல் ஆண்டு முடிந்ததும், ‘கற்சிலை‘ ‘சுயவிமர்சனம்‘ செய்து கொண்டது. அதில் பெருமையோடு இப்படி அறிவித்துள்ளது

‘கற்சிலை இதழ் மூலம் பெருத்த அளவில் பொருளாதாரம் நட்டமாகிவிட்டது என்று பொய் சொல்லிப் புலம்பிட நாங்கள் விரும்பவில்லை. அப்படிச் சொல்பவர்களைக் கண்டால் நாங்கள் மிகுந்த கோபம் கொள்கிறோம்.

நாங்கள் அறிந்தவைகளை— தெரிந்தவைகளைப் பலருக்கு அறிவிப்பதற்கும் தெரிவிப்பதற்கும் ஆயுதமாகக் கொண்டுள்ள ஒரு கருவிக்கு ஆகும் செலவை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எங்களுக்கு ஆயுதமே முக்கியம்! இலட்சக்கணக்கான வாசகனுக்கு எங்கள் அறிமுகம் தேவையில்லை; இலட்சியப் பிடிப்புள்ள வாசகனுக்கு நாங்கள் அறிமுகமாகிட விரும்புகிறோம்.

நாங்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் சினிமா நடிகைகளுக்கும், ஏழை எளியவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளியத்திற்கும் துணை போகாது. புதியதோர் உலகைச் சமைக்கப் போராடிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறைக்குப் போர்க் கருவியாகப் பயன்படும்.

தமிழ்ப் பத்திரிகை உலகில் நாங்கள் பெரிய சாதனை உண்டாக்க விரும்பவில்லை. ஏனெனில் இவ்வுலகில் புகழ் அடைந்துள்ள ‘சாதனை‘ , மனிதனின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் அப்பாற்பட்ட நச்சுத்தனத்தின் பேருருவே. நாங்கள் இத்தகைய ‘சாதனை‘ க்குரிய மனிதர்களைத் தோல் உரித்துக்காட்டவே எமது ஆயுதத்தைப் பயன்படுத்துவோம்.'(மலர்-2, இதழ்- 1... 16-1-74).

‘போகும் வழி நீளமென்று
புத்தி உணர்ந்தாலும்
போகும் வழி யெங்கள்

போக்குக்கு இசைந்த வழி‘ என்ற வலிய கவிதை வரிகளோடு பயணத்தைத் தொடர்ந்த கற்சிலை அதன் பிறகு நீண்ட நாட்கள் நடக்க வில்லை.

இத்தகைய பயணங்கள் 1980 களிலும் துணிந்து தொடங்கப் படுகின்றன.

பயணம் என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை புது டில்லியில் தோன்றியது. சிறப்பாசிரியர் : து. முத்துக்கிருஷ்ணன். இதர பத்திரிகைகளின் போக்கில் திருப்தி அடைய முடியாத சில இளைஞர்களின் முயற்சி.

முதலாவது இதழ் இலட்சிய ஒலிபரப்போடு வெளிவந்தது. வழக்கமான (சுமாரான) புதுக் கவிதைகள், வித்தியாசமான கதைகள், புத்தக விமர்சனம் பிரசுரமாயின.

பயணம் மூன்று இதழ்கள்தான் வந்தது.

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட பத்திரிகை மஞ்சு, ‘பழமையைத் திரும்பிப் பார்த்துப் பின் புதுமையாய் இனிமையாய்-பல செய்திட வேண்டும் என்ற குறிக்கோளை நெஞ்சில் நிறுத்திச் செயல்படுவோம்’ என முன்வந்துள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சி.

‘எல்லாத் துறைகளிலும் சிந்தனைத் தேன்துளிகளைப் பொழிகின்ற இதழாக மஞ்சு தயாரிக்கப்படுகிறது. இளைய எழுத்தாளர்கள் அநேகர் உற்சாகமாக எழுதுகிறார்கள். எழுத்துத் துறையில் அனுபவமும் நல்ல பெயரும் பெற்றுள்ள தஞ்சாவூர் எழுத்தாளர்களின் துணையும், ‘மஞ்சு‘க்குக் கிடைத்திருக்கிறது. ப்ரகாஷ், நா. விச்வநாதன், சி. எம். முத்து ஆகியோரின் படைப்புகள் மஞ்கவில் வெளிவந்துள்ளன.

தஞ்சாவூர் இலக்கிய நண்பர்கள் ‘சும்மா இலக்கியக் கும்பல்‘ என்று கூறிக் கொண்டு கூடிப்பேசியும், இலக்கிய சர்ச்சைகள் செய்தும், புதுமைகள் பண்ணியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மஞ்சுவின் நான்காம் இதழ் ‘தஞ்சை சும்மா இலக்கியக் குழுவினர்‘ தரும் சிறப்பிதழ் ஆக வெளிவந்திருக்கிறது.

இந்தச் சிறப்பிதழில் நல்ல கதைகள்—ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் பிரசுரமாகிற கதைகளிலிருந்து வெகுவாக மாறுபட்டவை— இடம் பெற்றுள்ளன. அவற்றை ப. சிங்காரம் ( புயலிலே ஒரு தோணி என்ற குறிப்பிடத்தகுந்த நாவலைப் படைத்தவர்), நா. விச்வநாதன், சி. எம். முத்து, கரிச்சான் குஞ்சு, மு. செந்தமிழன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். மற்றும் கவிதைகளும் கட்டுரைகளும் உள்ளன.

‘மஞ்சு‘ வின் ஒவ்வொரு இதழ் அட்டையிலும் புதுமை ஓவியம் அச்சிடப்பட்டு, அதற்கு சுவாரஸ்யமான— விரிவான விளக்கம் உள்ளே தரப்பட்டுள்ளது. மஞ்சுவின் முகப்போவியங்களுக்கு ரசனை நிறைந்த விளக்கவுரைகளை எழுதியிருப்பவர் ‘இலக்கியன்‘ (ப்ரகாஷ்) தான்.

மஞ்சு இதுவரை ஐந்து இதழ்களை வெளியிட்டிருக்கிறது.

மதுரையிலிருந்து வருவது ‘புதிய பார்வை‘. 1982 செப்டம்பரில் தொடங்கப் பெற்ற இந்தத் திங்களிதழ் ‘அறிவன்‘ என்பவரை சிறப்பாசிரியராகவும், மற்றும் சிலரை ஆசிரியர் குழுவினராகவும் கொண்டு இயங்கியது.

‘சமுதாய, இலக்கிய, மெய்ப்பொருளியல் கண்ணோட்டத்தில்‘ புதிய பார்வை வளர்ந்தது. மெய்யறிவைப் போதிக்கும் வள்ளுவத்தையும், மெய்ப் பொருளறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அறிவுரைகளையும் இது எடுத்துக் கூறியது. பகவான் ரஜ்னீஷின் கொள்கைகளையும் வாசகர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தது.

இலக்கிய ரீதியில் மரபுக் கவிதைகளை மட்டுமே ஆதரித்து வந்த ‘புதிய பார்வை‘ புதுக் கவிதையை எதிர்க்கும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது, ஒரு விவாதத்துக்கு இடம் அளித்தது. பிறகு ‘வளரட்டும் புதுக் கவிதை‘ என்று அறிவித்து, புதுக் கவிதைப் படைப்புகளை வரவேற்றுப் பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டு விட்டது.

‘வெண்பாப் போட்டி‘ நடத்தி, இதழ்தோறும் வெண்பாக்களை இரண்டு பக்கங்கள் பிரசுரித்தது.

‘பழமையின் சுமையினின்றும் விடுபடுவோம்—என்றும் புதிய பார்வையைப் போற்றி வாழ்வோம்‘ எனக் கொள்கை முழக்கம் செய்த ‘புதிய பார்வை‘ காலத்துக்கும் நவ சிந்தனைக்கும் ஒத்துவராத— முரண்பட்ட—கருத்துக்களைப் பிரசாரம் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தது.

விலைமகளிர் விடுதிகளை நாடு முழுவதும் திறக்க வேண்டியது அவசியம் என்று ஒரு கட்டுரை மூலம் அழுத்தமாக அறிவித்தது புதிய பார்வை. இயற்கை உணவுகளை உண்டு இயற்கை வாழ்வு வாழ வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது. தனித்தமிழுக்கு ஆதரவு காட்டவும் முற்பட்டது.

‘மெய்யறிவைத் தேடிப் பார்க்கும் புதிய பார்வை’ வாழும் வழியாகக் கடைப்பிடிக்க விரும்புவது—

‘மறைந்த காலத்தை மறப்போம். வருங்கால நினைவு நமக்கு வேண்டாம். நிகழ்கின்ற காலத்திலே நிறைவைக் காண்போம்‘ என்பதாம்.