தமிழில் சிறு பத்திரிகைகள்/இடது சாரிப்‌ பத்திரிகைகள்‌

38. இடதுசாரிப் பத்திரிகைகள்


மார்க்ஸிய நோக்குடன், சமூக யதார்த்த (சோஷலிஸ்ட் ரியலிசம்) எழுத்து முயற்சிகளை வளர்ப்பதற்கென்று பலப்பல சிறு பத்திரிகைகள் தோன்றி மறைந்திருக்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை உருப்படியாக எதையும் செய்து காட்டியதில்லை. ‘தாமரை‘, ‘செம்மலர்‘, வழியிலே நடக்க முயன்ற இப்பத்திரிகைகள் சுயமான சிந்தனைத் திறனோ செயலாற்றலோ கொண்டிருக்கவில்லை. ‘சமூக யதார்த்த‘ப் பாணிக் கதைகளையும் புதுக் கவிதைகளையும், அரைத்த மாவையே அரைத்தது போன்ற‘ ரசமான விஷயங்களையும் பிரசுரித்து அவை பக்கங்களை நிரப்பின.

ஆகவே, அந்த விதமான பத்திரிகைகள் பலவும் ‘ஆசை பற்றி‘ ஆரம்பிக்கப்பட்ட ஆர்வ முயற்சிகள் என்றே கணக்கிடப்படல் வேண்டும்.

இந்த ரகச் சிறு பத்திரிகைகள் சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தோன்றின. சில முயற்சிகள் ஒரு வருடம்—ஒன்றரை வருடம் என்ற கால அளவுக்கு உயிருடன் இருந்திருக்கின்றன.

இவற்றில் வெளியான கதைகள் 'சோஷலிஸ்ட் ரியலிச' மரபுப்படி அமைந்திருந்தனவே தவிர ஆழம், கனம், புதுமை, சமூகப் பிரச்னை களைக் கூர்ந்து கவனித்து எழுத்தில் பிரதிபலித்தல் முதலிய தன்மை கள் கொண்ட படைப்புகளாக உருவானதில்லை.

எனவே, இந்தப் பத்திரிகைகள் புதிய தரமான படைப்புகளை அறிமுகப்படுத்தவோ, திறமையுள்ள புதிய எழுத்தாளர்களைக் கண்டு ஆதரித்து, அவர்களது வளர்ச்சிக்குத் தளம் அமைத்துக் கொடுக்கவோ உதவியதில்லை என்றே சொல்லவேண்டும்.

‘தாமரை‘, ‘செம்மலர்‘ ஆகிய தரமான முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிவந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இப்புதிய சிறு பத்திரிகைகளில் வரவுமில்லை. புதிய இளம் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளை வரவேற்பதாகச் சொல்லிக் கொண்டே பத்திரிகைகள் சாரமற்ற எழுத்துக்களைப் பிரசுரிக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன. கவனிப்புப் பெற்றிருந்த முற்போக்கு இலக்கியவாதிகளின் கதை, கவிதை கட்டுரைகள் அபூர்வமாக எப்போதாவது இச் சிற்றேடுகளில் தலைகாட்டு வது நடைமுறையாக இருந்தது.

1970 களில் தோன்றிய முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் ‘ஜீவா‘ எனும் திங்கள் இதழும் ஒன்று. இதன் ஆசிரியர் ஏ. விஜயன். சிறப்பாசிரியர் கவிஞர் செவ்வியன்.

கம்யூனிஸ்டுத் தலைவர் ஜீவாவின் (ப. ஜீவானந்தம் ) நினைவை கவுரவிக்கும் வகையிலும், அவருடைய கொள்கையைப் பரப்பும் நோக்குடனும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. ஜீவா பற்றிய கட்டுரைகள், குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. வழக்கமான பாணியில் கவிதைகள் மிகுதியாக இடம்பெற்றன. கவிஞர் திருச்சி தியாகராசன் தொடர்ந்து கவிதைகள் எழுதியதோடு, ‘பழந்தமிழ் இலக்கியத்தில் புரட்சிக் கருத்துக்கள்‘ என்றொரு கட்டுரை வரிசையும் எழுதி வந்தார். ‘பாரதிக்குப் பின் கவிஞர் வளர்ச்சி‘ என்ற தலைப்பில் விமர்சன அறிமுகம் அவ்வப்போது வெளியாயிற்று. இது மேலோட்டமான மதிப்பீடாக இருந்ததே தவிர, ஆழ்ந்த விமர்சனமாகவோ, முறையான ஆய்வாகவோ அமைந்ததில்லை. சினிமா விமர்சனக் கட்டுரைகளை டி. எஸ். ரவீந்திர தாஸ் எழுதினார். கேள்வி பதில் பகுதியை தா. பாண்டியன் கவனித்துக் கொண்டார்.

‘பாட்டாளி தோழன் என்றொரு பத்திரிகை சென்னையிலிருந்து பிரசுரமாயிற்று. ஆசிரியர்—டி. ஞானையா. ரசமான தகவல் துணுக்குகளை அதிகம் வெளியிட்ட இந்த இதழ் விறுவிறுப்பான கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தது. நக்சலைட்டின் சிறை அனுபவங்கள், இந்திய சுதந்திரம்—மறைக்கப்பட்ட வரலாறு போன்றவை உதாரணங்கள். வழக்கமான கதைகள், கவிதைகளும் உண்டு.

தேவகோட்டை சமூகச் சிந்தனை இலக்கியக் குழு ‘நாம்‘ என்ற மாத இதழை நடத்தியது. மக்களுக்குச் சிந்தனை விழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் லட்சியமாக இருந்தது. அதன் நோக்கத்தை இவ்வரிகள் நன்கு எடுத்துக் கூறும் :

“இந்த முதலாளித்துவ அரசியலமைப்பை மாற்றினால் அல்லது இன்றைய படுமோசமான நிலைமை மாறாது என்பது விஞ்ஞானபூர்வ சமூகச் சிந்தனையாளர் முடிவு. ஆகவே, முதலாளித்துவப் பொருளாதார முறையை மாற்றி மக்கள் நலனுக்கான சோஷலிசப் பொருளாதார முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் சமுதாய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள இடதுசாரி— ஜன நாயக அணியினர் ஒன்றுபட்டுச் செயலில் இறங்க வேண்டும். இடதுசாரிஜனநாயக அணிகளிலுள்ள கலாச்சாரப் பகுதிகளில் பத்திரிகைகள் இந்தச் செய்தியை முன்னுக்குக் கொண்டுவந்து முழக்க வேண்டும். நாட்டு நலனும், மக்கள் நலனும் நாசகரமாக வீழ்ச்சியுறுவதைத் தடுத்து, நல் வாழ்வைச் சமைக்க விஞ்ஞானபூர்வ சமூகச் சிந்தனையாளர்கள்—ஜன நாயகவாதிகள் அனைவரும் செயல்படுக “ (‘நாம்‘ ).

இதே நோக்குடன் கோவையிலிருந்து துளிகள் வெளிவந்தது, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தது. முற்போக்கு எண்ணங்களை எழுத்தாக்கும் தோழர்கள் சமுதாயப் பார்வையோடு கவிதைகளும், கதைகளும் எழுதி இப்பத்திரிகைக்கு உயிரூட்டி வளர்த்தார்கள். பாராட்டத்தகுந்த விதத்தில் ‘துளிகள்‘ ஒரு ஆண்டு மலரைத் தயாரித்தது.

கோவையிலிருந்து பிரசுரமான மற்றொரு இதழ், ‘இளைய கரங்கள்‘. ‘சமுதாய உறவுகள் பொருளாதாரத்தால் நிர்ணயிக்கப்படுவதால் வளர்ச்சி சிதைகிறது. இக்குறையை அறிவின் வளர்ச்சி ஒன்றாலேயே வெல்ல முடியும். அவ்வறிவினைப் பெற முயலும் எண்ணமே இளையகரங்களின் செயல்திட்டம். மனிதன் தான் படைத்த பணத்திற்குத் தானே அடிமையானால் மானிடத்தின் அழிவு தொடங்குகிறது என்று பொருள். அதைக் களைந்து புதிய பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திட இளையோர் உலகம் தயாராக வேண்டும். கல்வி, சிந்தனை செயல்—இவை நமது பாதையாகட்டும் என்று அது வலியுறுத்தியது. இந்த அடிப்படையில் கட்டுரைகளையும் கதைகளையும் தயாரித்து வெளியிட்டது.

சேலத்திலிருந்து வந்த ‘ஜன்னல் பார்வை‘ என்ற இதழும் அறிவு விழிப்பு ஊட்டக்கூடிய சிந்தனைக் கட்டுரைகளை வெளியிட்டது. இதில் த. ராசு எழுதிய கட்டுரைகள் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தன. மகாகவி பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகத் தயாரிக்கப்படும் என்ற செய்தியை ஆதாரமாக்கி த. ராக வளர்த்திருந்த ‘கமான் ஜெயகாந்தன்! கமான் பாரதி‘ என்ற சிந்தனையும், மற்றும் ‘மதுவிலக்கு‘ எனும் கட்டுரையும் அவரது தனித்த பார்வையையும் சிந்தனை வேகத்தையும் புலப்படுத்தின.

(தேனி ) அல்லிநகரம் பொன் விஜயன் ‘புதிய நம்பிக்கை‘ என்ற மாத இதழைப் பிரசுரித்தார். மிகுந்த சிரமங்களோடு, முற்போக்கு இலக்கியப் பத்திரிகையை நல்லமுறையில் நடத்த வேண்டும் என அவருக்கு இருந்த ஆர்வம் 'புதிய நம்பிக்கை'யின் இதழ்களில் பிரதிபலித்தது. ஆயினும் தரமான எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு அவருக்கு அதிகம் கிட்டவில்லை என்பதையும் ஒவ்வொரு இதழும் காட்டியது. 'புதிய நம்பிக்கை'யின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்கியது, பெயர் பெற்ற படைப்பாளிகளைப் பேட்டி கண்டு, 'கண்டோம், கேட்டோம், சொல்கிறோம்' என்ற பகுதியாக வெளியிட்டது. அசோமித்திரன், நீல. பத்மநாபன், வண்ணநிலவன், வல்லிக்கண்ணன், இலங்கை எழுத்தாளர் டானியேல் ஆகியோரின் பேட்டிகள் முக்கியமானவை.

கும்பகோணம் வே. மு. பொதியவெற்பன் 'முனைவன்' என்ற காலாண்டு இதழை வெளியிட்டார். முதலில் இது இதழியல் இதழாகத் தயாரிக்கப்பட்டது. பின்னர் முனைவன் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கப்பட்டது.

மொத்தத்தில், சமுதாயப் பார்வை கொண்ட முற்போக்கு இலக்கிய ஏடு ஆகவே அது வெளிவந்தது. புத்தக மதிப்புரைப் பகுதி இதழ் தோறும் இடம்பெற்றது. இலங்கையில் நிகழ்ந்த இனவெறிப் படுகொலை பற்றி இதர பத்திரிகைகள் வெளியிடாத தன்மையில் கருத்துக்களையும் கட்டுரைகளையும் பிரகரித்துள்ளது. இதன் 11-ம் இதழில் கோ. கேசவன் ‘சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்‘ சம்பந்தமாக எழுதிய முன்னுரை, பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய ‘பாரதியும் பகவத்கீதையும்‘ என்ற ஆய்வுரை, மற்றும் கனமான சிந்தனைக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

‘இது நாள் வரையில்
பாதம் மிதியாத் தளங்களின் மீதும்
கன்னிச் சுவடுகள் பதிப்போம்—இனி
எதிர்வரு நாளில்
பதிந்து பதிந்தவை பாதங்களாகப்
புதுயுகத் தடங்கள் விதிப்போம்!‘

என்ற வரிகளை லட்சிய முழக்கமாகக் கொண்டுள்ள ‘முனைவன்’ ஒவ்வொரு இதழும் நீண்ட கால இடைவெளிகளோடுதான் வெளி வந்திருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் செய்தி, கலாச்சார ஏடாக விளங்கி, மக்களின் கலை, அரசியல், சமூக உணர்வு மட்டத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்குடன் சில முற்போக்கு இதழ்கள் செயலாற்றியுள்ளன.

மதுரையிலிருந்து வெளிவந்த 'தடம்' மாத இதழ் இத்தன்மையது. வேடசந்தூர் வட்டாரத்தின் செய்தி, கலாச்சார ஏடாகத் தடம் இயங்கியது. கிராம மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்துவது; கிராமிய இலக்கியங்களை, கலையைக் கண்டெடுத்துப் பரப்புவது; மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களைக் கண்டெடுத்து, அறிமுகப்படுத்தி வளர்ப்பது; புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது—இவற்றையும் தன் நோக்கங்களாகக் கொண்டிருந்தது தடம்.

வேடசந்தூர் வட்டாரத்தில் நடைபெற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகள் மற்றும் விறுவிறுப்பான கட்டுரைகள், கவிதைகள் தடம் இதழ்களில் பிரசுரம் பெற்றன. அவ்வட்டாரத்தில் வழங்கி வந்த பழம் பாடல்களை, நாட்டுப் பாடல்களை— சேகரித்து இதழ்தோறும் வெளியிட்டது.

அட்டைப் படங்களை வித்தியாசமான முறையில் தடம் அச்சிட்டு வந்தது. அது தயாரித்து அளித்த 'சுதந்திர தின மலரும்' வித்தியாசமானதாகவே இருந்தது.

“சுதந்திர தினத்தைப் பற்றிய எங்கள் அறிவின் அளவைக் கொட்டி அளப்பதைக் காட்டிலும் கிராம மக்களின் அனுபவங்களை வெளியிடுவோம் என்று அவர்களை அணுகினோம்.

அப்புறம்தான் தெரிந்தது— முதலில் அவர்கள் சுதந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதும், அந்த நிலையில் அவர்கள் இல்லை என்பதும்.

அப்படி இருக்க போலித்தனமாக சுதந்திர தின மலர் என்று தாம் தூம் என்று நாங்களே எழுதிக் குவிக்கவும் விரும்பவில்லை.

கிடைத்தவற்றை மட்டுமே பிரசுரிக்கிறோம், இது சிறப்பிதழ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்று“ (தடம், ஆகஸ்ட்-1981).

கிராமவாசிகள்— பலதரப்பட்டவர்கள்— சாதாரணர்களிடம் சுதந்திரம் பற்றிக் கருத்து சேகரித்து, 'சொதந்திரம்.அப்படின்னா என்ன ?' என்று தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது 'தடம்'.

தடம் வெளியிட்டுக்குப் பொறுப்பேற்றிருந்த 'ஆசிரியர் குழுவினர்' பெயர் எதுவும் தரப்பட்டதில்லை.

மதுரையிலிருந்து வெளிவந்த மற்றுமொரு சிறு பத்திரிகை 'நிஜங்கள்'. ஆசிரியர் ஏ. மஹபூப் பாட்சா. இதுவும் தீவிர கதியிலேயே இயங்கியது.

சமூகத்தில் பல்வேறு துறைகளில் காணப்படும் ஊழல்களைச் சாடியது. பல்கலைக்கழகங்களின் சீர்கேடுகளை அம்பலப்படுத்தியது. கல்லூரிகளில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்த உண்மை விவரங்களை விறுவிறுப்பான கட்டுரைகளாகப் பிரசுரித்தது.

உதாரணம் : திருச்சி ஜோசப் கல்லூரியில் நிகழ்ந்தவை பற்றி ‘ஒ... வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே !‘, ‘காந்தி கிராமத்தில் பிராமணர்—மலையாளி லடாய்‘ (காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடந்தது பற்றி), ‘மதுரை பல்கலை (ளை)க் கழகம்‘. . . இப்படிப் பலப் பல.

இன்குலாப், பாவண்ணன், வண்ணச் சிறகு முதலியவர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாயின. கல்வித் துறையில் மண்டியுள்ள சீர்கேடுகள் மீது நிஜங்கள் மிகுந்த வெளிச்சமிட்டு, உண்மைகளை எடுத்துக் காட்டியது.

இந்த ரீதியான பத்திரிகைகள் சில இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையிலிருந்து ‘குடிசை‘ வெளிவருகிறது. சமுதாயக் கல்விக்கான கிராமிய இயக்க வெளியீடு என்று அறிமுகம் செய்து கொள்ளும் குடிசை பலவிதமான சமுதாயப் போராட்டச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. பல மட்டங்களிலும் நிகழ்ந்து வருகிற ஊழல்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறது. கருத்து பொதிந்த கார்ட்டூன்களையும், புதுக்கவிதைகளையும், ரசமான தகவல்களையும், நாட்டு நிலையைச் சுட்டிக் காட்டும் புள்ளி விவரங்களையும் அச்சிடுகிறது.

சிறு பத்திரிகைகளின் நிலை குறித்து குடிசை எழுதியுள்ள ஒரு குறிப்பு கவனத்துக்கு உரியதாகும். . .

‘பேருந்துகளில் இறங்குவோரை இறங்கவிடாமலே முட்டி, மோதி, இடித்து ஏறும் மனித அவசரத்தில், புரட்டிய உடனே எறிவதற்கு அல்லாமல், சிறிது சிந்தனை செலுத்துவதற்கு வேண்டிய மக்கள் பிரச்னைகளைத் தொடும் சிறு பத்திரிகைகளின் வாழ்நாள் நிலைக்குமா என்ற கேள்விகள் இப்போதும் இருந்து கொண்டிருக்கும்போது, சிறு பத்திரிகைகளின் வளர்ச்சியும் பாராட்டத்தகும் விதத்தில் வளர்ந்து வருகிறது. இவைகளுக்கு ஒரு சிறிய வட்டம்தான் என்ற நிலை மாறி இவை பரந்த வட்டங்களிலும் கவனத்தை ஈர்க்கும்போது இவர்களின் வேலைகளிலும் உற்சாகம் கிளம்பும் ‘குடிசை‘யும் நீடித்து நிலைக்கவில்லை.