தமிழில் சிறு பத்திரிகைகள்/இன்னும்‌ சில பத்திரிகைகள்‌

45. இன்னும் சில பத்திரிகைகள்


புது விடியல்

‘இன்று வரும் மாறுதல்களை நாம் மறக்கமுடியாது. ஆனாலும் சமுதாய சீர்திருத்த வழிகளில் வரும் சிக்கல்களைத் தகர்ப்பது அவசியமே....

புது விடியல்—இது எந்த அரசியல் உலாவிலும் சேராது. ஆனால், தனியாகவே வாசகர்களை உள்ளடக்கிச் செல்லும். இது எந்த முலாம் பூச்சுகளிலும் முகம் புதைத்துக் கொள்ளாது. ஒரு தெளிந்த சிந்தனையை, செம்மையான பாதையை இதனுள் காணலாம்.

காகிதக் கவர்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்தப் பத்திரிகையைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கு வேண்டுமானால் உளுத்துப்போன சிந்தனைகள் வெளியே பற்றாக்குறையின்றிக் கிடைக்கும்.

சிலர் தடுமாறுகிறபோதும், தடம் மாறுகிறபோதும், தாக்கி விட்டுச் செல்லும்போதும், பெருஞ்சோதனைகளை இது சாதனையாகவே மாற்றிப் படைக்கும். ‘

முதல் இதழில் இவ் ‘வெளிச்ச வரிகள்‘ அறிவிப்போடு கும்பகோணம், புது டபீர் தெரு, பழ. ராதாக்கண்ணன் ‘புது விடியல்‘ என்ற இதழை 1984 செப்டம்பர் முதல் பிரசுரித்தார். சமூக நோக்குடன் பல பிரச்னைகளையும் ஆராயும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த படைப்பாளியும், ‘பசித்த மானுடம்‘ என்ற அருமையான நாவலின் ஆசிரியருமான கரிச்சான் குஞ்சு (ஆர்.நாராயணசுவாமி ) ‘அவன் கதை‘ என்ற ரசமான தொடர் கதை ஒன்றை இதில் எழுதினார்.

மஞ்சள் பத்திரிகைத்தனமான எழுத்துக்களை வளர்க்கும் வணிகப் பத்திரிகைகளையும், பணத்துக்காகப் பெரிய பத்திரிகைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உற்சாகமாக ஈடுபடும் எழுத்து உற்பத்தியாளர்களையும் புதிய விடியல் காரசாரமாகக் கண்டனம் செய்து வந்தது.

புது விழிகள்

இதுவும் கும்பகோணத்திலிருந்துதான் வெளிவந்தது. ஆசிரியர் இராம. உமாசந்திரன். இம்மாத இதழ் சமூகப் பிரச்னைகளைச் சூடாக ஆராய்ந்தது. கவிதைகள், கதைகளோடு புத்தக விமர்சனத்திலும் இது அக்கறை காட்டியது. படைப்பாளிகளைப் பேட்டி காண்பதோடு, சமூகத்தின் அடிமட்டத்தில் வசிக்கிற உழைப்பாளி மக்களையும் (உதாரணமாக, கூலி விவசாயத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்களை பேட்டி கண்டு, அவர்களுடைய பிரச்னைகளையும் குறைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

கரிச்சான் குஞ்சு இதில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

நீலமலை பனி மலர்

இது 1979-1980-ல் நடைபெற்ற தரமான சிறு பத்திரிகை. கனமான விஷயங்களைப் பிரசுரித்து வந்தது. இலக்கியத்துடன் நவீன ஓவியம், சினிமா, சமூகப் பிரச்னைகளிலும் அக்கறை கொண்டிருந்தது. சார்த் ஆல்பெர் காம்யு பற்றிய ஆய்வுகளை வெளியிட்டது. அபத்த நாடகங்களில் ஆர்வம் காட்டியது. தி. ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன் பேட்டி கண்டு பிரசுரித்திருந்த உரையாடல் குறிப்பிடத்தகுந்தது. தமிழவன், நிவேதிதா, கௌதமன், மணிக்கண்ணன், நாகூர் ரூமி முதலியோர் இதில் எழுதியிருக்கிறார்கள்.

சிறு சூழலும் சரி, அதற்கப்பாலும் சரி. மார்க்ஸியத்தின் வசீகரம் பரவலாக உணரப்படுவதும், அதன் தாக்கத்திற்கு இத்தலைமுறையினரின் பெரும்பான்மையான அறிவுஜீவிகள் உட்படுவதும் காணமுடிகிறது. இந்த உண்மையினைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் நாங்கள் தயக்கம் கொள்வதுடன், இப்போக்கினை ஓர் ஆழமான ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தவும் விழைகிறோம். வெறும் அறிவைப் பூசித்து மனித விமோசனத்திற்கான எழுச்சிகளில், போராட்டங்களில் சிரத்தையற்ற லபுடான்கள் எத்துணை மார்க்ஸியம் பேசினாலும் அவர்களில் நம்பிக்கை கொள்ள பனி மலர் தயாராயில்லை. நல்ல விஷயமாயிருப்பினும் கூட அவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒன்றைத் தெரிந்து கொண்டதனால் மட்டும் அதனை அறிந்து கொண்டவனாய் ஒருவன் மாறிவிட முடியாது. இது பனிமலர் அறிவித்த கருத்துரையாகும்.

உதக மண்டலத்திலிருந்து வெளிவந்தது பனிமலர். ஆசிரியர் அரு. அய்சானுல்லா.

‘ப்ருந்தாவனம்‘ பெங்களூரிலிருந்து வெளிவரும் இலக்கியப் பத்திரிகை.

‘அறிவுத்தேடலுக்கான ஒரு முயற்சி என்ற ஒத்துக் கொள்ளலுடன் வெளிவந்த ப்ருந்தாவனம், இன்னும் அதிகத் தெளிவுள்ள ஒரு பாதையைத் தனக்கென வகுத்துக் கொள்வதில் சிறிது காலம் தாழ்த்தி, மறுபடியும் வெளிவந்துள்ளது‘ என்று அதன் ஆறாவது இதழில் அறிவித்தது.

‘சிறு பத்திரிகைகள் தங்களுக்கென ஒரு வட்டத்தை இட்டுக் கொண்டு அவற்றினுள்ளேயே உழலும்போது, பெருவாரியான வியாபாரப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் தேக்கமடைகின்றன அல்லது தோல்வியுறுகின்றன. இந் நிலையைத் தவிர்க்கச் சிறு பத்திரிகை வாசகர்களுக்கு மட்டுமேயல்லாது, மற்ற வாசகர்களுக்கும் பொதுவான விஷயங்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்துதல் அவசியமாகிறது. எனவே வியாபாரப் பத்திரிகைகள் இன்று தங்கள் வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியுள்ள கலை இலக்கியப் போக்குகளையும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் விமர்சித்து, மாற்றுப் படைப்புக்களை அவர்கள் மத்தியில் அறிமுகம் செய்கின்ற வழியிலும் இடைநிலைப் பத்திரிகைகளின் (middle magazines) அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ப்ருந்தாவனம் செயல்படும்.

இத்தகைய நிலைப்பாட்டில் எந்தக் குறிப்பிட்ட அரசியல் கோட்பாடுகளுடனும் இனம் காணுவதை ப்ருந்தாவனம் தவிர்க்கிறது‘ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.