தமிழில் சிறு பத்திரிகைகள்/இலக்கிய இதழ்கள்‌

46. இலக்கிய இதழ்கள்


சமூகப் பார்வையோடு எழுதப்படுகிற முற்போக்குக் கவிதைகள் எழுதுவோர் அதிகரித்து வருகிற காலத்திலேயே, தனிமனிதப் பார்வையுடனும் உள்ளத் தேடல் ஈடுபாட்டுடனும் தூய இலக்கிய உணர்வோடு கவிதைகள் எழுதுகிறவர்களும் வளர்ந்து வருகிறார்கள்.

வெறும் இலக்கியம் என்று மட்டுமல்லாது கலை, ஓவியம், நாடகம், பொருளாதாரம், சமூகப் பிரச்னைகள் மற்றும் மனிதரைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அந்நோக்குடன் செயல்படுகிற சிறு பத்திரிகைகள் பல உள்ளன. அதே சமயத்தில் தனி இலக்கியத்துக்காக (ப்யூர் லிட்டரேச்சர், ஸீயஸ் லிட்டரேச்சருக்காக) என்று மட்டுமே நடத்தப்பட்ட, படுகிற இதழ்களும் உள்ளன.

இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே கவனிக்கலாம்.

ழ-கவிதை மாத ஏடு. ஆசிரியர் : ஆத்மாநாம்.

‘எழுபதுகளின் துவக்கத்தில் வெளிவந்து கொண்டிருந்த கவிதைகளின் போக்குகளிலிருந்து மிகச்சில கவிஞர்களே தங்களது தனித்துவத்தையும் புதியதோர் எதிர்க் குரலாய் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய கவிதைகள் கருப்பொருளிலும் வெளிப்பாட்டுத் திறத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. தலைமுறை இடைவெளி இன்றைய கவிதைகளில் காணக் கிடைக்காத ஒன்று. புதிய உள்ளோட்டத்துடன் வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளையும் தத்துவ தரிசனங்களையும் இவை முன் நிறுத்துகின்றன. இத்தகைய கவிதைகளை ழ தனது இருபத்திநான்கு இதழ்களில் அளிக்க முயற்சித்துள்ளது. நவீன உருவத்தோடும் புதிய உள்ளடக்கத்தோடும் செறிவுடனும் கூடிய கவிதைகள் புதியவர்களிடமிருந்து நிறைய வர வேண்டும்.‘

இப்படி ‘ழ‘ தனது 24-ம் இதழில் (கடைசி இதழ்) அறிவித்துள்ளது.

ஞானக்கூத்தன், ஆத்மாநாம் பிரம்ம்ராஜன், கலாப்ரியா, கல்யாண்ஜி காஸ்யபன், தேவதச்சன், ஆர்.ராஜகோபாலன் முதலிய கவிஞர்களும், க. நா. சுப்ரமண்யம், நகுலன் போன்ற முன்னோடிகளும், மற்றும் பல புதியவர்களும் ‘ழ’ வில் எழுதியிருக்கிறார்கள். பிறநாட்டுக் கவிஞர்களின் படைப்புகளையும் ‘ழ’ மொழிபெயர்த்து அளித்தது.

‘ழ’ கவிதையில் மிகுந்த அக்கறை காட்டியது. ‘பொருளே இல்லாத கோஷங்களைப் பொய் அபிமானங்களில் கலந்து ஒரு காகிதத் தயாரிப்புத் தொழில்போல் கவிதைத் தொழில் புரிய கும்பல் கும்பலாக நபர்கள் புறப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்வது நிச்சயமாக அவஸ்தைதான்...இதுவரை அநேகமாகக் கவிதைகளை மட்டுமே வெளியிட்டு வந்ததுபோக, இனி கவிதை குறித்த கட்டுரைகளையும் ‘ழ’ தாங்கி வரப் போகிறது. கவிதை என்பதை ஓர் அறிவார்த்த வேஷமாகத் தரித்திருப்பவர்களை அடையாளம் காட்ட கட்டுரைகளால்தான் முடியும். கவிதை நிஜம். பொய்யையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்களையும் பற்றிக் கவிதை எழுதலாம். ஆனால் கவிதையில் பொய்ம்மை கூடாது. கவிதையென்ற பெயரில் புனையப்படுகிற பொய்களைக் களைய முற்படுவது அதனால்தான் அவசியமாகிறது.‘

‘ழ’ அதன் 9-ம் இதழில் இப்படிக் கூறியது. அவ்விதமான கட்டுரைகள் சில அவ்வப்போது ‘ழ’ வில் வந்துள்ளன.

புதிதாக வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய விரிவான விமர்சனங்களை ‘ழ’ பிரசுரித்திருக்கிறது. -

‘அனுப வத்தில் பார்க்கும்போது இன்றைய கவிதைகளுக்கு இளைஞர்களிடையே நல்லவிதமான வரவேற்பும் எதிர்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நல்ல கவிதையை இனங்கண்டு கொள்ளும் கூர்மைப்படுத்தப்பட்ட உணர்வை இளைஞர்களிடத்தில் எளிதாகவே பார்க்க முடிகிறது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக எல்லாத் தயாரான இளைஞர்களுக்கும் கவிதை போய்ச் சேருவதில்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும் தொடர்ந்து கவிதைகளுடன் பரிச்சயத்திற்கான வாய்ப்பு கைவரப் பெறாமல் போகிறது. இரண்டு வழிகளின் மூலமாக இதைச் செய்ய முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒன்று, கவிதைகளை வெளியிடும் பத்திரிகைகள் கவிதை ஒரு உன்னதமான கலை வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான சரியான அந்தஸ்தைத் தரவேண்டும். இரண்டு, கவியரங்கங்களில் கவிஞர்களை அவர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்ல வேண்டுமே தவிர, தலைப்புகள் கொடுத்து வாசிக்கச் சொல்லக் கூடாது. இவைகளே உண்மையான கவிதைகளை இளைஞர்களுக்குக் கொடுக்கக் கூடும்.‘

கவிதையின் நலனுக்கான இத்தகைய கருத்துக்களையும் ‘ழ’ முன் வைத்தது. அது தொடர்ந்து வந்திருந்தால், கவிதையில் சோதனைகளையும் சாதனைகளையும் கணிசமான அளவில் புரிந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ‘ழ’ வின் இதழ்கள் தருகின்றன.

‘ழ’ முதல் இதழ் 1978 மாதம் வெளிவந்தது. அதன் 24 -ம் இதழ் 1983 ஜனவரியில் வந்தது.

கவனம்- இலக்கியத் தரமான கவிதை, கட்டுரை முதலியவற்றைப் பிரசுரிப்பதற்காக 1981 மார்ச்சில் தோன்றிய சிற்றேடு. ஆசிரியர் ஞானக் கூத்தன்.

‘பத்திரிகை என்ற சாதனம் படைப்பிலக்கியத்தைச் சேர்த்து இன்னும் பிற துறைகளையும் கவனிக்கக் கூடியது. சிற்றேடுகள் இன்னமும் இலக்கியத்தையே குறியாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும்கூட, கருத்துக்களைக் கொண்டு செல்லும் சாதனம் என்ற அளவில் பிற துறை நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும். இந்த முறையில் நவீன ஓவியம் சிற்றேட்டியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறே இதர துறைகளும் பங்கு பற்றும்பொழுது இந்த நூற்றாண்டின் புதிய தமிழ்ப் பத்திரிகையின் உருவம் முழுமையாகப் பிடிபடும். ஏனென்றால் முழுமையான பத்திரிகை என்பது ஒரு துறையின் நஷ்டத்துக்குக் கிடைப்பதாகாது. முழுமையான பத்திரிகை பலதுறைகளைக் கவரக் கூடியதானாலும், அதனாலேயே ஒரு துறைக்குப் பிரத்யேகமான பத்திரிகை வேண்டுவதன் அவசியத்தைப் போக்கிவிடாது. எந்தத் துறையோடும் அளவளாவும் இலக்கியம் படைப்பிலக்கியத்தோடு சிற்றேட்டில் சேர்க்கப்படலாம். இன்றைய சிற்றேடுகள் படைப்பிலக்கியத்தாரால் நடத்தப்படுவதால், இலக்கியமே முதன்மை பெறுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த மூளைக்களத்தில் இதர கலைகள் வேண்டப்படாதவை அல்ல. அவை மகிழ்ச்சியுடன் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறவுகள்.‘

கவனம் முதலாவது இதழ் தலையங்கத்தின் கடைசிப் பகுதி இது.

தனித்தன்மை கொண்ட கவிதைகள், கதைகள், கட்டுரைகளை கவனம் பிரகரித்தது. ஞானக்கூத்தன் எழுதிய ’பாரதியின் புதுக்கவிதை’ காஸ்யபன் எழுதிய ’நாவல் படிப்பது பற்றி’ (3 இதழ்களில் தொடர்ந்தது) ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை.

இலக்கிய உணர்வு, அவ் உணர்ச்சி வெகுவாகப் பரவுதல் குறித்து கவனம் கருத்து செலுத்தியது. அதன் 5-ம் இ த ழ் தலையங்கக் குறிப்பு இது—

‘இலக்கியப் பத்திரிகைகளை வாசிப்பது மட்டுமின்றி அவற்றில் பிரசுரமாகும் படைப்புகளைக் குழுவாக விவாதித்து விமர்சனம் செய்வது, அதன் ஆசிரியர்களை நேரடியாகச் சந்திக்கச் செய்து விவரங்களில் தெளிவு காணுவது போன்றவை மிகவும் பயனுள்ளவையாகத் தோன்றுகிறது. இது இன்றைய இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயல்படும்போது சரியாகவே தெரிய வருகிறது எனலாம். இலக்கியப் பத்திரிகைகளின் பணிகளுக்குத் தொடர்ச்சியான அடுத்த கட்ட முக்கிய பணியாக இதைக் கருதவும் முடியும்போது, இலக்கிய அமைப்புகளின் முக்கியம் இன்னும் கூடிப் போகிறது.’

1981 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கவனம், 1982 மார்ச்சில் வந்த ஏழாவது இதழுடன் நின்றுவிட்டது.

ஸ்வரம்— இக்கவிதை மாத இதழின் வளர்ச்சி சுவாரஸ்யமானது.

உதகமண்டலம், ராக்லேண்ட்ஸ், ஜே. எஸ். எஸ். கல்லூரி மாணவர் நந்தலாலா இலக்கிய வேகத்துடன் ஒரு இனிய முயற்சியில் ஈடுபட்டார். முதலில் சிலரது கவிதைகளை ஒரு இன்லண்ட் லெட்டர் தாளில் அச்சிட்டு இலவசமாக ரசிகர்களுக்கு அனுப்பினார்.

அவர் எனக்கு எழுதிய 14-2-82 கடிதம் அவருடைய இலக்கிய தாகத்தை வெளிப்படுத்தியது :

‘உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்பது தெரியவில்லை. என்னுடைய இந்தச் சின்ன முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையது.

காபி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான்.

எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே.’

முதல் ஸ்வரம் (இன்லண்ட்) தாளில் மாலன், ப்ரியதர்ஷன், ஆர். பி. எஸ். சுப்ரபாரதி மணியன், ’அஞ்சிதநுட்பன்’ ஆகியோரின் கவிதைகள் அச்சாகியிருந்தன.

இரண்டாவது இதழ் நீளமான வெள்ளைத்தாளில் ( ஃபுல்ஸ் கேப் பேப்பரில்) அச்சாகி வந்தது, இளம் கவிஞர்களின் கவிதைகளோடு. இளைஞர்களின் உற்சாகம் ஊற்றுப் பெருக்காய் அதில் சிதறித் தெளித்துக் கொண்டிருந்தது.

‘என்னவென்று இப்போது சொல்ல ? ஏகமாய் அடுக்கி, ததும்பும் எண்ணங்களை வரிசைப்படுத்த ஆசை இருந்தாலும் கொஞ்சமாய் மட்டும் இங்கே ஸ்வரத்தை இப்படி வித்யாசமாய் இசைத்திருக்கிறோம். மனசிற்குள் திருப்திப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. சந்தோஷம் சிறு ஊற்றாய் ஊறிக் கொண்டிருக்கிறது. இன்னும் செய்ய வேண்டிய கனவுகள் நிறைய. பார்ப்போம். 13 இளம் மனசுகளின் பாதிப்புகள் விளைவித்த 13 கவிதைகள் இந்த ஸ்வரத்தில். இவைகள் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டால் மிக மகிழ்வோம்.’

நந்தலாலா மற்றும் நண்பர்களின் உற்சாகமும் ஆர்வமும் மாதத்துக்கு மாதம் அளவில் பெருகி மலர்ந்தன. 4 -ம் இதழ் ஒடுக்கமான நீள வடிவில் அச்சுப் புத்தகமாக உருவெடுத்தது.

‘எப்படியோ கவிதை, வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகப் போய்விட்டது. இனிப் பேசிப் பயனில்லை. பின்னுக்குத் திரும்பிவிட வழியில்லை. கவிதை ஒரு அசட்டுத்தனம் என்று சொன்னால் என்ன ? பைத்தியக்காரத்தனம் என்று சொன்னால்தான் என்ன ? கவிதையை நெஞ்சிலிருந்து துடைத்தெறிந்து விடமுடியாது. அது ரத்த ஒட்டத்தையே கடற்பஞ்சு கொண்டு ஒத்தி உறிஞ்சி துடைத்தெடுத்து விடுகிற மாதிரி. ஒன்றும் பயனில்லை. விடுங்கள். புதைகுழி வரைக்கும் தொடர்ந்து வருகிற நோய் அல்லது பேய் இது. எப்படி வைத்துக் கொண்டாலும் சரி. இது ஒன்றும் புதிதில்லை. இந்த மாதிரி கிறுக்கர்கள் காலங் காலமாக இருந்தே வந்திருக்கிறார்கள். அவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.’

புவியரசின் இந்த வரிகளை நினைத்துக் கொள்ள, எதிர்ப்படும் சின்னச் சின்ன நெருடல்களெல்லாம் காணாமல் போகிறது.

‘சந்தோஷமாய் இருக்கிறது. எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல, சும்மா நடக்கவே. மாலனின் வார்த்தைகள் மனசில், கனவில் கற்பனைகள் சிலதைப் பறித்து இந்த ஸ்வரத்தில் கொண்டு வந்தாயிற்று. பிடரி சிலிர்க்கக் கனைக்கும் அசுவமாய் உற்சாகம் எங்களுக்குள். மலைச் சாரல் கவியரங்கம் முடிந்த பின் புதுருபமெடுத்த, போன ஸ்வரத்தை கள்ளிய பிப்ரவரி முதல் ஞாயிறின் வெயிலில்— கார்டனில் பெற்றுக் கொண்டு வாழ்த்துக்களையும் விமர்சனத்தையும் சொன்ன எங்கள் இனிய ஸ்நேகிதர், பேராசிரியர் சீனிவாசனுக்கு நன்றி. ஸ்வரத்தின் கவிதைகளைப் பற்றிப் பேசிய பலரும் கவிதை உலகில் கம்பீரமாக எழுந்த வானம்பாடியைப் போல, மலைகளின் கொழிக்கும் பகமையோடு, வளமையோடு, ஸ்வரம் கவிதை உலகில் எழும்ப வேண்டும் என்றார்கள். எங்களுக்கும் அதே ஆசைகள் நிறைய நிறைய. அந்த அளவிற்கு உயர்கிறோமோ இல்லையோ, அந்த இலக்கை அடைய வேணுமென்கிற உந்துதலே, ஆசைகளே, மகிழ்ச்சியான விஷயமாய் இருக்கிறது. ஸ்நேகி தத்துடன் நீண்ட கைகளைக் கோத்துக்கொண்டு உயரிய இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்.’

இப்படி உற்சாகத்தின், சந்தோஷத்தின் வெளிப்பாடாகப் பூத்துக் கொண்டிருந்த ’ஸ்வரம்’ அதன் 8-ம் இதழ் முதல் (செப்டம்பர் 1982 ) புதிய வடிவத்தை அடைந்தது. பிரம்மராஜன் அதன் சிறப்பாசிரியர் ஆனார். ஸ்வரம் தரம் நிறைந்த இலக்கியச் சிற்றேடு ஆக வளரலாயிற்று.

புதுமையான, நல்ல கவிதைகள் ஸ்வரம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகள் அதிகம் அறிமுகம் செய்யப்பெற்றன. கவிதை நூல்களின் விமர்சனம் காரசாரமாக எழுதப்பட்டது.

இது குறித்து 12-ம் இதழில் (ஜனவரி 1983) ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார் :

‘உள்நாட்டு அஞ்சல் கடிதத்தில் துவங்கப்பட்ட ஸ்வரம் இன்று முழுவதும் கவிதைக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு இலக்கியச் சிற்றேடாக மாறி நிற்கிறது. 8-ம் இதழிலிருந்து தன் அமைப்பை மாற்றிக் கொண்டதோடன்றி உள்ளடக்கங்களையும் மாற்றியுள்ளது. தமிழ்க் கவிதையின் இன்றைய சாத்தியப்பாடுகள் அறியப்பட வேண்டுமெனின் கவிதைகள் மீதான தாட்சண்யமற்ற விமர்சனங்களும், கட்டுரைகளும் வெளிவர வெண்டும்

இன்று எழுதவரும் இளம் கவிஞர்களுக்கு கவிதைக் கலை பற்றி அடிப்படை தெரியாத போலிகளும் அரைப் போலிகளும் முன்மாதிரிகள் ஆகிவிடுவது சோகமான விஷயம். எனவே தான் ஸ்வரம் ஐரோப்பிய மற்றும் ஆங்கிலக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் தொடர்ந்து வெளியிட இருக்கிறது.

ஸ்வரம் தோற்றத்திலும், அச்சு அமைப்பிலும் எளிமையான அழகுடன் வசீகரமாகத் திகழ்ந்தது, 16-ம் (மே 1983) இதழுக்குப் பிறகு ஸ்வரம் வரவில்லை.

ழ, கவனம், ஸ்வரம் — இச் சிற்றேடுகள் நவீன ஓவியங்களை அட்டைப்படமாக வெளியிட்டு வந்தன.

மீட்சி : உதகமண்டலத்திலிருந்து, ஸ்வரம் கவிதை இதழின் புதிய பரிணாமம் போல மீட்சி என்ற மாத இதழ், 1983 ஆகஸ்டில் தோன்றியது. பிரம்மராஜன் கவனிப்பில் இது வளர்ந்து வருகிறது.

தனது ஓராண்டைச் சிறப்பாகப் பூர்த்தி செய்துள்ள ’மீட்சி’ குறிப்பிடத்தகுந்த நல்ல தரமான இலக்கியச் சிற்றேடு ஆகும்.

சர்வதேசக் கவிஞர்களை அறிமுகம் செய்து கட்டுரை எழுதுவதோடு, அவர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து இலக்கியப் பணி புரிந்துகொண்டிருக்கும் பிரம்மராஜன் மீட்சியில் பல கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளையும் அவர்களது படைப்புகளையும் தந்திருக்கிறார்.

ஆர்தர் கெஸ்லர் பற்றிய நினைவுகளும் வரலாறு பற்றிய சிந்தனைகளும், ஜோர்ஜ் லூயி போர்ஹே கவிதைகள் எஹூதா அமிக்ஹாய் என்ற ஹீப்ரூ மொழிக் கவிஞர், அவரது கவிதைகள்; டென்னசி வில்லியம்ஸ் கவிதைகள் முக்கியமானவை. டி. எஸ். எலியட்டின் ‘தி வேஸ்ட் லேண்ட்’ ஐ முழுமையாக மொழிபெயர்த்து ’பாழ் நிலம்’ என மீட்சி வெளியிட்டுள்ளதை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும்.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் ’வாளின் வடிவம்’, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ’செவ்வாய்க்கிழமை மதிய உறக்கம்’ கதைகளின் மொழிபெயர்ப்பும் மீட்சியில் வந்துள்ளன.

வில்லியம் ஃபாக்னர் பேட்டி, ஜோசப் ப்ராட்ஸ்கி மீதான விசாரனை (லெனின்கிராட் நகரில் நடைபெற்றது), சர்ரியலிசத்தின் கவிதைக் கோட்பாடுகள்-இத்தகைய விஷயங்களையும் மீட்சி பிரசுரித்திருக்கிறது.

சுய படைப்பான சிறுகதைகளும் கணிசமான அளவில் மீட்சியில் வெளிவந்துள்ளன. கோணங்கி, வண்ணதாசன், விமலாதித்த மாமல்லன், சுகுமாரன் கதைகள் வித்தியாசமானவை; அவரவர் படைப்பாற்றலை வெளிப்படுத்துபவை. நல்ல கவிதைகளையும் மீட்சி பிரசுரித்துள்ளது.

கம்யூனிஸ்டுகளும் கலையும் என்ற தலைப்பில் ஞானி சிந்தனையைத் தூண்டும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். திரைப்படம் பற்றிய கட்டுரைகளும், வண்ணதாசன் சிறுகதைகள்—சா. கந்தசாமி நாவல்களுக்கான விமர்சனக் கட்டுரைகளும் மற்றும் பல நூல்கள் பற்றிய விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

மீட்சியின் 10-ம் இதழ், கர்நாடக இசை— விவாதத்திற்கான சில குறிப்புகள் என்ற விசேஷக் கட்டுரையைக் கொண்டுள்ளது. இந்த இதழை இசைச் சிறப்பிதழ் என்று கூறலாம். ’இசை— சில அடிப்படை அணுகல்கள்’ குறித்து பிரம்மராஜன்—சுகுமாரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். செய்தி என்ற தி. ஜானகிராமனின் இசை சம்பந்தமான ஒரு கதையும், அவருடைய நெகிழ்ச்சி எனும் கட்டுரையும் பிரசுரம் பெற்றுள்ளன.

11-ம் இதழ் ஆத்மாநாம் நினைவு இதழாக அமைந்திருக்கிறது. 12-ம் இதழ் (1984 அக்டோபர்—நவம்பர் ) ஓராண்டு நிறைவுச் சிறப்பிதழ் ஆகும். சுந்தர ராமசாமி, வண்ணதாசன், கோணங்கி கதைகள் இதில் உள்ளன. மற்றும் கவிதைகளும் கட்டுரைகளும்.

மீட்சியும் நவீன ஓவியங்களை அட்டைப் படமாக வெளியிட்டு வருகிறது.

மையம் (காலாண்டு இதழ் )

சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவரும் மையம்’

1983 அக்டோபர்—டிசம்பர் இதழாகத் தனது முதல் இதழைக் கொண்டு வந்தது. ஆசிரியர் : ஜெயதேவன்.

’பத்திரிகை, எழுதுபவருக்கும் வாசகருக்குமான பொதுவான மேடையாக இயங்குகிறது. இலக்கியம் மட்டுமின்றி பல்வேறு கலைகளைப் பற்றிய முடிவான கருத்துக்களைப் பத்திரிகை வெளிப்படுத்த முடியும். பத்திரிகைக்கான முறைகள் உள்ளன. நவீன கலைகளுக்கும் நவீன படைப்பாளிகளுக்கும் உரிய ஸ்தானத்தை அளித்து போஷிப்பது பத்திரிகைக்கு அவசியமாகிறது. எந்தக் கலைப் படைப்பிலும் உரிய நேர்மையைக் காப்பது இதனால் முக்கியமாகிறது. சிறு பத்திரிகையின் முடிவும் துவக்கமும் எந்த உயிருக்கும் அமைந்த விதிபோல் தீர்மானமானது. படைப்பிலக்கியம் மேற்சொன்ன விதியிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் எந்தக் கலையும் உண்மையில் நம் வாழ்வுக்கு நிறைவைத் தருபவை. இந்த அடிப்படையைத் தன்னுடைய முக்கிய அம்சமாக மையம் கருதுகிறது’ என்று அது அறிவித்துள்ளது.

ஓவியர் கே. எம். ஆதிமூலம் வரைந்த ஓவியம் ஒன்றை முதல் இதழின் அட்டைப்படமாக வெளியிட்டு, ‘ஆதிமூலத்தின் அக உலகம்’ என்று சா. கந்தசாமி எழுதிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது. ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் மற்றும் சுயபடைப்புகளும் மையம் இதழ்களில் இடம் பெறுகின்றன.

கதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரை முதலியனவும் வருகின்றன. நீல. பத்மநாபன், நகுலன், காஸ்யபன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆனந்த், ஆர். ராஜகோபாலன், காளி—தாஸ் முதலியவர்கள் ( ழ, கவனம் சிற்றேடுகளில் எழுதிய பலரும்) மையம் காலாண்டு இதழில் எழுதுகிறார்கள்.

உயிர்மெய் : கோவையிலிருந்து வெளிவரும் கவிதை இதழ். வித்தியாசமான, புதுமையான, தரமான கவிதைகளை வெளியிடுவதில் அக்கறை கொண்டுள்ளது. பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறது. பிரம்மராஜன் கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் வருகின்றன.

‘தமிழ் கவிதையுலகு தேங்கிக் கிடக்கிறது. தற்பொழுது சொல்லிக் கொள்ளக்கூட கைக்கடக்கமாய்த்தான் உள்ள கவிஞர்கள் பற்றி, புற்றீசலென வெளிவருகிற படைப்புகள் பற்றிய தொடர்ந்த வியாக்யானம், புதுக்கவிதை என்றொரு பதம் இனியும் உபயோகத்தில் இருப்பது பற்றிய முரண், கவிதை—கவிதையில்லாதவை என்று இருக்க வேண்டியதன் நியாயம், இவையனைத்தையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் மாணவர்களாய் இருந்தபொழுது தொடங்கி இப்பொழுதும் இதைத் தொடர்வதால் முந்தைய குறைகளையும் கலை வறட்சியையும் முழுக்க விடுத்து, புதிய வடிவங்களுக்கும் சமகால உலக கவிதைகளுக்கும், முக்கியமாக கவிதை மீதான கட்டுரைகளுக்கும் இடமளிக்க எண்ணியுள்ளோம்’ என்று ’உயிர்மெய்’ 1984-ல் ஒரு இதழில் அறிவித் துள்ளது.

’மிருணாள்சென் கூறுகிறார், I try to disturb you and get disturbed in the process. இதுதான் உண்மையான கலையின், கலைஞனின் எதிர்பார்ப்பும்’ என்று கூறுகிற உயிர்மெய் அவ்வழியில் செயல்படுவதில் ஆர்வம் காட்டுகிறது எனக் கருதலாம்.

நிகழ் : இலக்கிய இதழ். கோவையிலிருந்து வெளிவருகிறது. ஆசிரியர் —இரத்தினம். .

சூடாகவும் விறுவிறுப்பாகவும் புதிய நூல்கள் பற்றிய திறனாய்வை நிகழ் பிரசுரிக்கிறது. ஞானி புத்தகத் திறனாய்வு செய்வதுடன்,சிந்திக்கத் தூண்டுகிற கனமான கட்டுரைகளையும் இதில் எழுதுகிறார். டி. எஸ். இலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற தலைப்பில் அவர் எழுதிய நீண்ட கட்டுரை முக்கியமானது. இலக்கிய உலகம், எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளையும் குறிப்புகளையும் அவ்வப்போது தருகிறது.

முதல் இதழில் ’தற்காலத் தமிழிலக்கியத்தில் தேக்கம்’ எனும் பொருள் குறித்து ஞானி, சுகுமாரன், நிர்மல் விஸ்வநாதன், அறிவன், அரசு, அமரநாதன் ஆகியோர் சர்ச்சை செய்து வெளியிட்ட உரையாடல் உபயோகமான எண்ணங்களைக் கொண்டுள்ளது.

சா. கந்தசாமியின் நாவல்கள் ஆய்வு செய்து ’சா. கந்தசாமியும் கண்ணாடித் துண்டும்’ என்று ஞானி எழுதிய கட்டுரை உண்மையான மதிப்பீடாக விளங்குகிறது.

கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வந்த நிகழ் 4-ம் இதழிலிருந்து இதர பிரச்னைகளிலும் அக்கறை கொள்ளத் தொடங்கியது.

’தற்கால அரசியல், பொருளியல், கலாச்சாரச் சூழலில் கலை இலக்கியம் பற்றிய சரியான பார்வையின் தேவை பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. கலை இலக்கியங்களை அரசியலின்—அது போலவே பிற தேவைகளுக்கு அடிமைப்படுத்தும் போக்கு தமிழகச் சூழலில் தீவிரப் பட்டிருக்கிறது. இதனால் கலை இலக்கியம் பற்றிய பார்வையும் அனுபவமும் சீர்குலைவதோடு, இறுதியில் அரசியல், கலாச்சாரம் பற்றிய பார்வையும் சீர்குலையும். அரசியல்வாதிகளோ, கலை இலக்கியவாதிகளோ இந்த ஆபத்து பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளுக்குக் கலை வெறும் சாதனம். தாங்களே கலை இலக்கியவாதிகள் என்று பெருமிதம் கொள்ளும் சில படைப்பாளிகளுக்கு, கலை இலக்கியமே கதிமோட்சம். இந்த இரு எல்லைகளில் பயணம் செய்வது, சிற்சில சந்தர்ப்பங்களுக்குத் தேவையாக இருந்தாலும், இந்தத் தீவிர எதிர் நிலைகளின் உண்மை முழுமையாக அகப்படுவதில்லை. ஒரு எதிர்நிலை தீவிரம் கொள்ளும்போது, அப்போக்கே அதன் எதிர் நிலையைத் தோற்றுவிக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டால் இது புரியும்.

இன்றைய உலக, இந்திய, தமிழகச் சூழலில் முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு பிரச்னை, சூழலியல் பற்றியது. இதைப் போலவே சரியான ‘விஞ்ஞானக் கண்ணோட்டம் எது’ என்பது பற்றியும், ’பெண் விடுதலை’ என்ற தீவிரமான பிரச்னையும் பல பரிமாணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இவை பற்றி அரசியல்வாதிகளுக்கும், அதுபோலவே கலை இலக்கியவாதிகளுக்கும் கவலை இல்லை. அரசியலும் கலை இலக்கியமும் சந்திக்கும் ஒரு ஆதார தளத்திலிருந்து மேற்குறித்த பிரச்னைகள் எழுகின்றன. இவை பற்றி நிகழ் சில கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்கிறது.

நிகழ் தமிழில் வெளிவரும் மிகச் சிறிய இதழ். சிறியதாயினும் மேற்குறித்தவற்றில் அக்கறை கொள்கிறது’ என்று அது அறிவித் துள்ளது.

புதிய தலைமுறை என்ற பெயரில், 1970 களில் கோவையிலிருந்து ஒரு இலக்கிய இதழ் வெளிவந்தது. அது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தது. தரமான படைப்புகளை வெளியிட்டது. ஞானி போன்றவர்களின் சிந்தனைகள் அதில் பிரசுரமாயின என்று வண்ணநிலவன் தகவல் தருகிறார். இப்போது ’புதிய தலைமுறை’யின் இதழ் ஒன்றுகூட என் பார்வைக்குக் கிடைக்காததால், அதுபற்றிய விரிவான குறிப்புகளைத் தர இயலவில்லை.

விருந்து என்னும் இலக்கியத் திங்கள் இதழ் திருமதி பகலாவதி பி. ஏ. யை ஆசிரியராகக் கொண்டு, 1975-76-ல் புதுச்சேரியில் பிரசுரமாயிற்று. இது மரபுக் கவிதை, புதுக் கவிதை இரண்டையும் வெளியிட்டு வந்தது. தேவமைந்தன் ( அ. பசுபதி, பழமலய், சக்திப்புயல் முதலியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

ராகம்- திருச்சியில் தோன்றியுள்ள புதிய இலக்கியப் பத்திரிகை. ஆர். ரமேஷ்குமார், எம். செந்தில்குமார், ஐ. பிரான்சிஸ் மனோகர், எம். டி. முத்துக்குமார் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு இயங்குகிற இம் மாத இதழ் 1984 ஆகஸ்ட் முதல் வருகிறது. ’தீபம்’ அளவில் பெரியதாய், 48 பக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ராகம் புதிய சோதனைகளில் துணிச்சலோடு ஈடுபடுகிறது.

ஒரு வருட காலம் கையெழுத்துப் பிரதியில் வந்த ராகம் இன்று அச்சில் உயிர்பெற்றிருக்கிறது. இன்று தெருவிற்கு ஒரு பத்திரிகை வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ராகம் வெளிவரும் அவசியம் என்ன ?

பெரும்பாலான பத்திரிகைகள் பிஸினஸ் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராகம் உண்மையான எழுத்துக்களைத் தரிசிக்க ஆசைப்பட்டு அச்சு உரு எடுத்திருக்கிறது.

எழுத்து சுதந்திரமானது. நிபந்தனைகள் வைத்து, கடிவாளம் மாட்டி எழுதச் சொன்னால் நிஜ எழுத்தைச் சந்திக்க முடியாது. கல்லூரி மாணவர்களின் சிந்தனையில் தமிழ்ப்பட பாதிப்பும், பிரபல எழுத்தாளர்களின் பாதிப்பும் நிறையவே இருக்கின்றன என்ற அபிப்பிராயத்தைப் பொய்யாக்க இதோ ஒரு ராகம் இருக்கிறது என்று காட்டுவோம். மாணவர்களாலும் ஆக்கபூர்வமாய் செய்ய முடியும் என்று நிரூபிப்போம்.

ராகம் ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு அரவணைப்பாய், குருகுலமாய் இருக்க ஆசைப்படுகிறது. வித்தியாசமான எழுத்துக்களை, புதுமை முயற்சிகளை இருகரம் கூப்பி வரவேற்கிறது...’

இந்தக் கொள்கை அறிவிப்புடன் தோன்றிய ராகம் இலக்கிய இதழை நடத்துகிறவர்கள் கல்லூரி மாணவர்கள்; தமிழுக்குப் புதியவர்கள்; ஆங்கிலம் மூலம் உலக இலக்கியப் பரிச்சயம் பெற்றவர்கள். அந்த அனுபவத்தை, அறிவை, ஆற்றலைத் துணை கொண்டு, தமிழில் புதுமைகள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஸில்வியா என்ற பெயரில் ஒருவர் புதுமையான இலக்கிய உத்திகளில் சிறுகதை எழுதுகிறார். ப்ரக்ஞை, நனவு ஓட்டம், சிலசில சுவாரஸ்யமான விஷயங்களை நினைப்பது என்ற தன்மைகளில் ’ஸ்வப்ன சிநேகிதா!’ எனும் அவரது முதல் இதழ் கதை பற்றி அவர் எழுதியிருக்கும் முன்னுரை ரசமான விதத்தில் இதைத் தெளிவுபடுத்துகிறது.

’முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்தக் கதை அந்நியக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஓர் ’ஞாபகக் கதை’. ஞாபகக் கதை என்றவுடன் மலையாள சினிமாவில் ப்ளாஷ்பேக் என்ற பெயரில் முதலில் குண்டு குண்டாய் பிரமீளாவைக் காட்டிவிட்டு அடுத்த சீனில் அந்தக் குண்டு மாறாமல் பிரமீளாவைத் தாவணியில் அடக்கி, பிரா அவிழ்ப்பார்களே, அந்த சமாச்சாரம் என்று நினைத்துவிடாதீர்கள். ஞாபகம் என்பது இக் கதையில் ஒரு பெண்ணின் ஞாபகம். வயதான பிரக்ஞை. இதன் பெக்யூலியாரிட்டி என்னவென்றால் சில கடந்த கால சாக்லேட் விஷயங்களை பிரக்ஞை பெரிதுபடுத்தும். சில பாவக்காய் விஷயங்களைச் சொல்லவே சொல்லாது. அல்லது மிகவும் கட்பண்ணி எடிட் பண்ணி டுரிங் டாக்கீஸ் ஃபோர்த் பிரிண்ட் மாதிரி சொல்லும். காலம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மறந்து போகும். இன்னும் எவ்வளவோ கொஞ்சங்கள். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், பலகீனப்பட்ட பிரக்ஞை சில சமயம் தேதி விஷயங்களில் குழம்பிப் போகும் என்பதனையும் ஞாபகம் வைத்துக் கொள்வார்களாக’

ரசமாகக் கதை எழுதத் தெரிந்த ஸில்வியா ஒவ்வொரு இதழிலும் தனித்தனி ரகமான கதை எழுதியிருக்கிறார்.

எஸ். டி. எம். புத்தக மதிப்புரை எழுதுகிறார். மிகுந்த படிப்பு அறிவுள்ளவர் என்பது இவரது கட்டுரைகளில் வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள், எம். ஜி. சுரேஷின் தாஜ்மகாலுக்குள் சில எலும்புக் கூடுகள், தேவதேவன் கவிதைகள் மாற்றப்படாத வீடு, கவிதை பற்றி ஆத்மாநாம் ஆகிய புத்தகங்களின் மதிப்புரைகள் ‘ராகம்’ இதழ்களில் வந்துள்ளன.

‘கலியுகம்’ என்ற கடைசிப் பக்கம்—பா. அரசுக்கண்ணன் எழுதுவது—இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது.

இதர பத்திரிகைகளில் வருவதைவிட மாறுபட்ட கலைகளையும் வித்தியாசமான கவிதைகளையும் தருவதற்கு ராகம் முயற்சி செய்கிறது. தற்கால ஐரோப்பிய, ஆங்கிலேய, அமெரிக்கப் படைப்பாளிகள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறது. சில படைப்புகளை மொழி பெயர்த்துத் தருகிறது.

‘ராகம்’ ஆறு இதழ்கள்தான் பிரசுரம் பெற்றது. பிறகு வெளிவரவில்லை.