தமிழில் சிறு பத்திரிகைகள்/எண்பதுகளிலும் பிறகும்
எண்பதுகளிலும் பிறகும்
இலக்கியத்துக்கென்று தொடங்கப்படும் சிறு பத்திரிகைகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருந்தன.
கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘ழ’ என்ற இதழ் 1978 மே முதல் பிரசுரம் பெற்றது. 1983 ஜனவரியில் அதன் 24- ம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் ‘ழ’ மறுமலர்ச்சி பெற்றது. கவிஞர் ஞானக்கூத்தின் அதன் ஆசிரியரானார். கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும் அது வெளியிட்டு வந்தது. 1988-ல் சில இதழ்கள் வந்தன. பின்னர் ‘ழ’ நின்று விட்டது.
1983 ஆகஸ்டில் பிரம்மராஜன் ’மீட்சி’ மாத இதழை ஆரம்பித்தார். சர்வதேசக் கவிஞர்கள் வரலாறு, உலகக் கவிதைகள் தமிழாக்கம், திரைப்படம் பற்றிய கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்கள் முதலியவற்றைத் தாங்கி வந்தது அது. சில வருடங்களுக்குப் பிறகு ’மீட்சி’ காலாண்டிதழாக மாற்றப்பட்டது.
‘மீட்சி’ காலாண்டிதழ் கனமான விஷயங்களோடும், அழகிய அட்டை அமைப்புடனும் இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. Non linear writting, Post Modern Literature என்று புதிய இலக்கியப் போக்குகளை அறிமுகம் செய்வதோடு, அவ்விதமான படைப்புகளைச் சோதனை ரீதியில் எழுதி வெளியிடுவதிலும் ’மீட்சி’ ஆர்வம் காட்டுகிறது.
1980 களின் மத்தியில் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் காட்டிய முக்கியமான பத்திரிகைகள் ’கொல்லிப்பாவை’, ’ஞானரதம்’ ஆகியவை.
‘கொல்லிப்பாவை’ அ. ராஜமார்த்தாண்டன் பொறுப்பில், மிகுந்த ‘இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே சில வருடங்கள் வளர்ந்தது. பன்னிரண்டு இதழ்களுக்குப் பிறகு அவர் அந்தக் காலாண்டிதழை நடத்தும் பொறுப்பை ஆர். கே. ராஜகோபாலனிடம் ஒப்படைத்தார். 1985 ஜூலை முதல், அதன் பதின்மூன்றாவது இதழிலிருந்து, 1988 ஜூன் வரை, இருபதாவது இதழ் முடிய ’கொல்லிப் பாவை’ நல்ல இலக்கியப் பணி புரிந்தது.
சுந்தர ராமசாமியின் ஒத்துழைப்பு ’கொல்லிப்பாவை’ க்கு அதிகம் கிடைத்து வந்ததை அதன் ஒவ்வொரு இதழும் எடுத்துக்காட்டியது. சுந்தர ராமசாமியின் கதை— கட்டுரைகள், பசுவய்யா கவிதைகள், மேல் நாடுகளின் கவிதை மொழிபெயர்ப்பு என்று பல வகைகளில் அது வெளிப்பட்டது.
பிறகு, 1988—ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கி விட்டார் .
தேவ. சித்ரபாரதி என்ற பெயர் கொண்ட அப்பாஸ் இப்ராகிம் ‘ஞானரதம்’ பத்திரிகையைப் பல வருடங்கள் நடத்தினார். 1986—ல் அதன் ஆசிரியப் பொறுப்பை அவர் க. நா. சுப்ரமண்யத்திடம் ஒப்படைத்தார்.க. நா. சு. கவனிப்பில் ’ஞானரதம்’ நல்ல இலககிய ஏடாக ஒரு வருட காலம் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இப்ராகிம் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. ஆகவே, 1987 ஜனவரி இதழ் அதன் கடைசி இதழ் ஆயிற்று.
அந்த இறுதி இதழில் க. நா. சுப்ரமண்யம் எழுதிய தலையங்கம் நினைவுகூரத்தகுந்தது. ’தமிழில் எழுத்துத் தரம் உயர’ என்பது தலைப்பு. அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்—
“பொதுவாகத் தமிழில் படிப்பது என்பதும், சிந்திப்பது என்பதும் ஆண்டுக்காண்டு குறைகிற மாதிரி தெரிகிறது.
இலக்கியம், பொதுவாகக் கலைகள் என்பது பற்றி எந்தச் சமுதாயத்தில் சிந்தனைகள் பெருகி வளரவில்லையோ அந்தச் சமுதாயத்தில் மற்ற வளங்களும் பெருகுவதில்லை என்பது சரித்திர அனுபவம்.
சரித்திர ரீதியில் மூன்று நாலு தலைமுறைகளாகவே ஒரு கலாச்சார நசிவுக்குத் தமிழ்ச் சமுதாயம் உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மற்ற இந்தியச் சமுதாயத்தில் ஏற்படாத இந்தக் கலாச்சார நசிவு இயக்கம் தமிழர்களிடையே இந்த நூறு ஆண்டுகளில் தன் வேலையைப் பூர்த்தி செய்துவிட்டது. இப்போது அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
கலை என்றால் சினிமா, படிப்பு என்றால் குப்பைக் கூளங்களைப் படிப்பது, மனித உறவுகள் என்பது கேலிக்கிடமானவையாக நினைப்பது, எந்தச் சந்தர்ப்பத்திலும் கயலாபம் தேடுவது, அறிவு என்றால் பதவி வகிப்பது, பதவிகள் வகித்து முடிந்ததும் இந்தப் பதவிகளினால் லாபமில்லை என்று சொல்வது போலப் பல விஷயங்களை நாம் பார்க்கிறோம்.
அறிவுத் துறைகளில் விஞ்ஞானத் துறையிலும் விமரிசனத் துறையிலும் இன்று ஏற்பட்டிருக்கிற பஞ்சம் சொல்லி முடியாது.
அறிவுப் போலிகளும் இலக்கியப் போலிகளும் கல்விப் போலிகளும் மலிந்துவிட்டதை நாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
வாழ்க்கையைப் பற்றிப் புதிய பார்வை, புதிய நோக்கம் தமிழனுக்கு மிக அவசரமான தேவை. சமுதாயத்தில் தன் நிலையையும் தன்னிடம் உள்ள சமுதாய நோக்கையும் அவன் தெளிவு செய்து கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
இதைத் தெளிவு செய்துகொள்ள எழுத்து, கலை உபயோகப்பட வேண்டும். நல்ல எழுத்தைத் தெரிந்துகொள்ள இயலாத சமுதாயம் நசிவுப் பாதையில் காலடி எடுத்து வைத்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”
இதை எழுதிய க. நா. சு. சிறு பத்திரிகைகள்— இலக்கியப் பத்திரிகைகள்—படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை குறித்துப் பெருமைப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“தமிழ் வாசகர்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. பேராசிரியர்கள், பாப்புலர் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் பொதுஜன இலக்கிய ரசனையின்மையை வைத்து லாபம் பண்ணத் தயாராக இருக்கிறார்கள். இலக்கியப் பத்திரிகைகள் படிக்க இந்தக் கால நிலையில் 200, 300 பேர்வழிகளாவது முன்வருகிறார்களே என்று மகிழ்ச்சியடையலாம் என்று கூடத் தோன்றுகிறது.
இந்த அதிகரிக்க வழி என்ன என்பதுதான் எனக்கும் தெரியவில்லை” என்றும் க. நா. சு. கூறியிருக்கிறார்.
இன்றுவரை இது யாருக்கும் தெரியவில்லைதான். இலக்கியப் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், இலக்கியத்தின் வளர்ச்சியில் நாட்டமும் ஈடுபாடும் கொள்கிற இலக்கியவாதிகள் யாருக்குமே தான் !
என்றாலும், ’தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தோடும்’, தமிழ் இலக்கியத்தை வளம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும், பொதுவாகப் புதுமைகள் பண்ணவேண்டும்— தங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவ்வப்போது சிலர் சிறு பத்திரிகை வெளியீட்டு முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
1980 களிலும் இந்த விதமான புதிய முயற்சிகளுக்குக் குறைவில்லை. லயம், இனி, புதுயுகம் பிறக்கிறது, மண், பாலம், எதிர்வு, பயணம், அஸ்வமேதா, நிஜம் என்று அநேகம். இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை காட்ட முயன்றதைப் பாராட்ட வேண்டும்.
இவையாவும் ஒரு சில இதழ்களே பிரசுரம் பெறும் வாய்ப்பினையே பெற்றிருந்தன. நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்தபடி வெளிவந்த இச் சிற்றிதழ்கள் தங்களால் இயன்ற அளவு ஒளிவீச முயன்றுள்ளன என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் கால நிலையாலும்தான் சுந்தர ராமசாமி ’காலச்சுவடு’ என்ற காலாண்டிதழை ஆரம்பித்தார், 1988 ஜனவரியில், ’கனவுகளும் காரியங்களும்’ நிறைந்த உள்ளத்தோடு, தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துக்களை இயன்றவரை தரமாகத் தர முயலும் என்ற அறிவிப்புடன் ‘காலச்சுவடு’ தோன்றியது.
‘காலச்சுவடு’ இதழ் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பிதழே என்று கருதப்பட வேண்டிய விதத்தில் அமைந்திருந்தது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் அது தனித்தன்மை காட்டியது. 1989 இறுதியில் அதன் எட்டாவது இதழ் பிரசுரமாயிற்று.
கவனிப்புக்கு உரிய மற்றொரு பத்திரிகை ’முன்றில்’. க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு 1988 செப்டம்பரில், மாதப் பத்திரிகையாக முன்றில் பிறந்தது. க. நா. சு. எழுத்துக்களை அதிகம் பிரசுரித்து வந்தது. 1988 டிசம்பர் மாதம் க.நா.சு. நினைவு மலர் வெளியிட நேரிட்டது.
‘முன்றில்’ கால ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியாத நிலையும் வந்தது. இருப்பினும் ஒவ்வொரு இதழும் தரமான தயாரிப்பாக இரு மாதம் ஒருமுறை வெளியீடென, அது வந்துகொண்டிருந்தது. அதன் எட்டாவது இதழிலிருந்து அசோகமித்திரன் சிறப்பாசிரியரானார்.
’முன்றில்’ ஒன்பதாவது இதழ் ஆண்டுமலர் ஆகப் பிரசுரமாயிற்று. 1989 நவம்பர்—டிசம்பர் இதழ் அது. 1990—ல் மூன்று இதழ்களைக் கொண்டு வந்தது ’முன்றில்’ சிறுகதை, கவிதை படைப்பிலக்கியத்துக்கு ‘முன்றில்’ நன்கு பணியாற்றியுள்ளது.
1987—ல் பிறந்து, நல்லமுறையில் வளர்ந்து, இப்பவும் வந்து கொண்டிருக்கிற இலக்கியச் சிற்றேடு ’கனவு’. சுப்ரபாரதி மணியன் செகந்திராபாத்திலிருந்து இக் காலாண்டிதழை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், பாராட்டப்பட வேண்டிய விதத்தில் கனவு ஆண்டு மலர் வெளியிடப்படுகிறது. சிறுகதை மலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ், கட்டுரைச் சிறப்பிதழ் என்றெல்லாம் கனவு இதழ்கள் மலர்ச்சி பெற்றுள்ளன. படைப்பிலக்கியத்துக்கு ‘கனவு’ நல்ல தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது.
சிரத்தையோடு தனது ஒவ்வொரு இதழையும் ஒரு சிறப்பிதழாக உருவாக்கி வருவது, கோணங்கி என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டுள்ள ‘கல்குதிரை’. கோணங்கி திறமை உள்ள படைப்பாளி. புதுமைகள் செய்வதில் ஆர்வம் உடையவர். அவரது கல்குதிரை தனித்தன்மை கொண்ட பத்திரிகையாக வந்து கொண்டிருக்கிறது.
சிறப்பிதழ்கள் தயாரிப்பதில் கோணங்கி ஒரு ஒழுங்குமுறையை அனுஷ்டிப்பதாகத் தெரியவில்லை. இந்தி எழுத்தாளர் அக்ஞேயா பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார். அடுத்து, அரவிந்தரின் சாவித்திரி காவியம் பற்றியும், தமிழ்நாட்டுச் சித்தர்கள் இயல்பு பற்றியும் ஒரு சிறப்பிதழ். அப்புறம் டாஸ்டயேவ்ஸ்கி பற்றிய மாபெரும் சிறப்பிதழ். இந்தப் போக்கு எப்படி இருந்தாலும், கல்குதிரை’ ஒரு சிறப்பான சிற்றிதழாக வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்தான்.
விசேஷமான தனித்தன்மை கொண்ட இன்னொரு சிற்றிதழ், கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் ’நிகழ்’ ஆழ்ந்த சிந்தனை, தீர்க்கமான ஆய்வு, தெளிவான அபிப்பிராயங்கள், புத்தக, விமர்சனம், சமுதாய மேம்பாடு குறித்த தத்துவச் சிந்தனைகள் ’நிகழ்’ பத்திரிகையில் இடம் பெறுகின்றன. கோவை ஞானியின் ஆழ்ந்த சிந்தனைத் திறமும், பரந்த கல்வி அறிவும் நிகழ் உள்ளடக்கத்துக்குக் கனம் சேர்க்கின்ற்ன.
சென்னையிலிருந்து பிரசுரமாகும் ’விருட்சம்’ தரமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வருகிறது. 1988 பிற்பகுதியில் தோன்றிய இக்காலாண்டு ஏடு அழகியசிங்கர் என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டிருக்கிறது. கவிதை வளத்துக்குக் கணிசமான பங்கு செலுத்தி வருகிறது விருட்சம்.
புதுக் கவிதையில் புதுமைகள் பண்ணுவதில் ஆர்வம் காட்டிய ’கிரணம்’ காலாண்டிதழும் குறிப்பிடத்தகுந்த இலக்கியப் பத்திரிகை ஆகும்.
எழுபதுகளில் பேராசிரியர் நா. வானமாமலை ’ஆராய்ச்சி’ என்ற காலாண்டிதழை நடத்திவந்தார். பல்கலைக்கழக ஆய்வுகள் தன்மையில் தமிழ் நாவல்களையும், சமூக— பொருளாதாரப் பிரச்னைகளையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யும் கட்டுரைகளை ஆராய்ச்சி வெளியிட்டது. நா. வா. இறந்த் பிறகு தேங்கி நின்ற ’ஆராய்ச்சி’ இதழ், எண்பதுகளில் நா. வா. ஆராய்ச்சிக் குழுவினரால் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதழின் பெயரை அவர்கள் ’நா. வா. வின் ஆராய்ச்சி’ என்று மாற்றிக்கொண்டார்கள். இக் காலாண்டிதழ், தரமான விஷயங்களைத் தாங்கி இப்பவும் வந்துகொண்டிருக்கிறது.
மார்க்ஸியப் பார்வையுடன் சோஷ்யலிஸ்ட் ரியலிச இலக்கியம் படைக்க முயல்கிற முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து, முற்போக்கு இலக்கியப் பணிபுரிகிற ’தாமரை’, ’செம்மலர்’ பத்திரிகைகள் தங்கள் பணியை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.
அவை காட்டிய வழியில் தோன்றிய பத்திரிகைகளில், ’புதிய பாசறை’ குறிப்பிடத் தகுந்தது. கவிஞர் பாரதிவிஜயன் ஆசிரியர். காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த இந்த இதழ் நல்ல கதைகளையும் சிந்தனைக் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது.
முற்போக்கு அம்சங்களுடன் தீவிரமாகச் செயல்படுகிற மனஓசை, புதிய கலாசாரம், கேடயம் போன்ற பத்திரிகைகளும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்றன.
இலக்கிய வளத்துக்கும் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரிந்துள்ள ’தீபம்’ பத்திரிகை அதன் இருபத்து மூன்றாவது ஆண்டில் நின்றுவிட நேரிட்டது. மிகுந்த சிரமத்தோடு வளர்ந்து வந்த ‘தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி திடீர் மரணம் அடைந்ததும், 1987—ல் ஒன்றிரண்டு இதழ்கள் வெளியிட்ட பிறகு, ஒடுங்கி விட்டது
மற்றொரு இலக்கிய இதழான ‘கணையாழி’ வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அது உருவ மாற்றம் பெற்று, இலக்கிய வளர்ச்சிக்கு நன்கு பணிபுரிகிறது.
எண்பதுகளில் நின்றும் தோன்றியும், சிரமங்களுடன் வெளிவந்தலட்சிய நோக்குடன் நடத்தப்பட்ட—பத்திரிகைகளில் ’புதிய நம்பிக்கையும்’ ஒன்று. பொன்விஜயன் ஆசிரியராக இருந்து நடத்தும் இந்த இதழ் 90 களில் புதிய உருவ அமைப்பும் புதிய வேகமும் பெற்று வெளிவருகிறது.
நாடகத்துக்கென்று கவிஞர் புவியரசு நடத்திய ’காற்று’ எண்பதுகளின் பிற்பகுதியில் மீண்டும் புதிய உற்சாகத்துடன் தோன்றியது. நாடகக் கலை பற்றிய கட்டுரைகள், புதிய நாடகங்களை வெளியிட்டது. இம்முறையும் அது நீடித்து வளர முடியவில்லை.
ரெங்கராஜன் நாடகத்துக்கென்றே தனிப் பத்திரிகையாக ’வெளி’ என்ற காலாண்டிதழை நடத்துகிறார். சென்னையிலிருந்து வெளிவரும் இந்த இதழ் சிறப்பாக விளங்குகிறது.
கவிஞர் மீரா சிவகங்கையில் ‘கவி’ என்ற காலாண்டிதழை ஆரம்பித்திருக்கிறார். கவிதைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை பற்றிய கட்டுரைகளோடு வெளிவரும் நல்ல பத்திரிகை இது.
புதுக்கோட்டையில் ’ஒரு’ என்ற சிற்றிதழ் தோன்றி, நான்கு இதழ்களை வெளியிட்டுள்ளது. இலக்கியத்தரமான விஷயங்களை சேகரித்து வெளியிட முயல்கிறது அது.
பாளையங்கோட்டையில், பல்கலைக்கழக ஆய்வு ரீதியான விஷயங்களுக்காகவே ’மேலும்’ என்ற பத்திரிகை பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது.
பேராசிரியர்—முனைவர் சாலை இளந்திரையன்—சாலினி, தமிழகத்தில் அறிவு விழிப்பு ஏற்படுத்தவும், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பவும் ’மனித வீறு’ என்ற இதழை, 1987 செப்டம்பர் முதல் ஓராண்டுக் காலம் வெளியிட்டனர். ஆழமும் கனமும் நிறைந்த விஷயங்களைக் கொண்டிருந்தது இதழ்.
ஐந்திணைப் பதிப்பகம், ஐந்திணை வாசகர் பேரவை சார்பில், ‘ஐந்திணை ஆய்விதழ்’ என்ற காலாண்டிதழை வெளியிடுகிறது. தமிழ் இலக்கணம், இலக்கியம், மொழியியல், நுண்கலைகள் சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், குழந்தை இலக்கியம், அறிவியல்—சமூகம்பொருளாதாரம்—வரலாறு—தத்துவம் முதலியன சம்பந்தப்பட்ட கட்டுரைகள், புதிய வெளியீடுகள் பற்றிய தகவல்கள் இவ்விதழில் இடம் பெறுகின்றன.
இலக்கிய நோக்குடன், கனமான விஷயங்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் நாடுகின்ற உள்ளத்தோடு, வலிந்து சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளச் சித்தமாக இருப்பவர்கள் இப்பவும் உள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும்.
‘சிறு பத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை’ என்று தி. ஜ. ரங்கநாதன் (தி. ஜ. ர. ) ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். குடிசைத் தொழில் முயற்சிகள் போல் பலப்பல சிற்றேடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முகம், நண்பர் வட்டம், தாராமதி, சுகன் போன்ற சிற்றிதழ்களை இவ்வகையில் குறிப்பிடலாம். சமூகம், அரசியல், மொழி மற்றும் தனி மனிதப் பிரச்னைகள் சம்பந்தமான கூரிய சிந்தனைகளைக் கட்டுரைகளாகவும், கவிதை வடிவத்திலும் இவை பிரசுரிக்கின்றன.
’முகம்’, மாமணி என்ற எழுத்தாளரின் எழுத்தாற்றலையும் உழைப்புத் திறனையும் வெளிப்படுத்துகிறது. ’தாராமதி’ குன்றம் மு. இராமரத்நம் என்ற எழுத்தாளரின் சிந்தனை ஆற்றலையும் தனித்த பார்வையையும் எடுத்துக்காட்டுகிறது.
சிறு பத்திரிகைகளின் வளர்ச்சியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு உதவியாக அமைப்பு ரீதியில் ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறு பத்திரிகை நடத்துகிறவர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இந்த நோக்கத்துடன், கோவை ’தாராமதி’ ஆசிரியர் குன்றம் மு. இராமரத்நத்தைத் தலைவராகக்கொண்டு ’TASNA’ —தாஸ்னா—என்ற அமைப்பு துவக்கப்பட்டு, மூன்று வருடங்களாகச் செயல்படுகிறது. ’தமிழ்நாடு ஸ்மால் நியூஸ்பேப்பர்ஸ் அசோஸியேஷன்’ என்ற அவ் அமைப்பு பலம் பொருந்தியதாக வளரவில்லை இன்னும்.
இதுபோன்ற ஒன்றிரு முயற்சிகள் சென்னையிலும் திட்டமிடப்பட்டன. அவையும் சரியாக உருவாகவில்லை.1980களில் சிற்றிதழ்கள்
தமிழ்ச் சிற்றிதழ்களின் வரலாறு சுவாரசியமானது பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலருடைய விடாப்பிடியான முயற்சிகளையும், மனப்போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம், அவர்களுடைய தோல்விகளையும் ( தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல் முடக்கம் அல்லது செயலற்ற தன்மை என்று சொல்லலாம் ), இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.
சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும், உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் ‘சென்று தேய்தல்’களையும், முடிவில் உரிய மரியாதை பெறாது, நேரிய புகழ் பாடப்பெறாது, நினைவுகூர யாருமின்றி—Unhonoured, unsung and unwept—என்ற தன்மையில் அவை கவனிப்பற்று மறைந்துபோக நேர்வதையும் கொண்டிருக்கிறது.
1970களில் இலக்கிய உணர்வோடும், இலட்சிய நோக்கத்துடனும் சிற்றிதழ்கள் அதிகமாகவே தோன்றின. அவற்றில் ஒருசிலவே 1980களிலும் தொடர்ந்து வாழும் வாய்ப்பைப் பெற்றிருந்தன.
1970களின் பிற்பகுதியில், சிற்றிதழ்கள் இலக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நின்றுவிடாது. கலை, கலாச்சாரம், சமூகவியல், அரசியல், தத்துவம் முதலிய பல்வேறு விஷயங்களிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும் என்ற உணர்வு தீவிரம் பெற்றிருந்தது. சில பத்திரிகைகள், சாதி— சமய— இனப் பிரச்சினைகளிலும் மும்முரமான ஈடுபாடு காட்டலாயின.
வற்றா இருப்பு— புதுப்பட்டி என்ற ஊரில் 1976—ல் ஆரம்பிக்கப்பட்ட ‘இலக்கிய வெளிவட்டம்‘, இவ்வகையில் முன்னின்றது. 1980களில், சர்ச்சைக்குரிய சூடான கட்டுரைகளை அது பிரசுரித்தது. 1983—ல் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி அதிகக் கவலையும் தீவிர அக்கறையும் காட்டியது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறுபத்திரிகைச் சூழல் சேர்ந்தவர்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் இணைந்த கருத்தரங்கம் ஒன்றை 1983 ஆகஸ்டில், மதுரையில், ‘இலக்கிய வெளிவட்டம்‘ ஏற்பாடு செய்தது. சுயேச்சை எழுத்தாளர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது வெளியிடபபடட கருத்துகள், தீர்மானங்கள் அனைத்தையும் தொகுத்து, ‘இலக்கிய வெளிவட்டம்‘ ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளையும் போராட்ட அனுபவங்களையும் தமிழ் நாட்டினருக்கு உணர்த்தும் நோக்குடன் அது தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறப்பிதழுக்குப் பிறகு, அச் சிற்றிதழ் தொடர்ந்து நெடுநாள் வாழமுடியாமல் ஆகிவிட்டது.
”‘படித்தல்‘ என்பது உண்மையைத் தேடுவது; அந்தத் தேடல் சுலபமற்றதும் முடிவற்றதும் ஆகும்” என்று அறிவித்தபடி, ‘மானுடம்‘ எனும் இருமாதம் ஒருமுறைச் சிற்றேடு, திருச்சியிலிருந்து 1979 முதல் வெளிவந்தது. தரமான படைப்புகள்— சமூக விழிப்புணர்வு, சமுதாய மாற்றத்திற்கான உந்துதல்கள்— இவற்றில் நம்பிக்கை கொண்டு செயற்படுபவர்களிடமிருந்து வந்தாலும், அத்தகைய நோக்கங்களை மறைமுகமாகக் கொண்டு கலை— இலக்கியம் மூலமாய் வாழ்வின் தீவிரத்தை உணர்த்துவோரிடமிருந்து வந்தாலும், அவைகளின் இலக்கியத் தரத்தையே பெரிதாக மதித்து வரவேற்று வெளியிட்டது, மானுடம், படைப்பிலக்கியத்துடன் இலக்கிய விமரிசனம், நவீனத் திரைப்படம், ஓவியம் பற்றிய கட்டுரைகள், அரசியல் விமரிசனங்கள் ஆகியவற்றையும் அது பிரசுரித்தது; வீதி நாடகங்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தது.
1981முதல் ‘மானுடம்‘, தன்னை, நவீன இலக்கியத்தின் குரல்‘ என அறிவித்துக்கொண்டது. படைப்பிலக்கியத்துடன், சமூகவியல், காலச்சாரம், மற்றும் சார்புடைய துறைகள் பற்றிய விமரிசனக் கட்டுரைகளை வெளியிடுவதில் உற்சாகம் காட்டியது. 1983 ஜனவரியில் வெளிவந்த மானுடம் 10ஆவது இதழ் விசேஷமான சிறப்பிதழ் ஆகும்.
1982 அக்டோபரில், திருச்சியில், ‘இலக்கிய— கலாச்சார இயக்கத்தின் திருச்சிக் குழு, ‘சினிமாவும் நமது கலாச்சாரமும்‘ பற்றி இருநாள் கருத்தரங்கு நடத்தியது. அங்குப் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து விசேஷ வெளியீடாகப் பிரகரித்தது, ‘மானுடம்‘.
கவனிப்புக்குரிய சிற்றிதழாக வளர்ந்துவந்த ‘மானுடம்‘, அதன்பிறகு பிரசுரம் பெறுவதற்கான வசதிகளைப் பெறாது நின்றுபோயிற்று.
1983-ஆம் வருடம், தரமான அநேக சிற்றிதழ்களின் இறுதி ஆண்டாக அமைந்திருந்தது என்று சொன்னால் அதில் தவறில்லை.
மதுரை இலக்கிய வட்டம் சார்பில் வந்து கொண்டிருந்த ‘விழிகள்‘, அந்த ஆண்டின் ‘பாடுவாசியான‘ மற்றொரு இதழ் ஆகும். கிண்டல் தொனியிலும், காரசாரமான செய்திகளை வெளியிட்டுவந்த இதழ் அது. ‘ரிப்போர்ட்டு‘, ‘மியாவ்‘ என்னும் தலைப்புகளில் பல தகவல்களையும், விறுவிறுப்பான அபிப்பிராயங்களையும், சூடான எண்ணங்கயையும் ‘விழிகள்‘ தந்து கொண்டிருந்தது. சோதனை ரீதியிலான சிறுகதைகளையும் புதுக்கவிதைகளையும் அது வெளியிட்டது. கவி பாரதியார் நூற்றாண்டுச் சமயத்தில், 1983 ஜனவரி இதழைப் ‘பாரதி மலர்’ என்று பிரசுரித்தது. ‘விழிகள்‘, தெருக்கூத்து, பகல்வேஷம் ஆகிய மக்கள் கலைகளின் ஆய்வு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.
கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து நடத்திய ‘ழ’ இதழும், 1983 ஜனவரியுடன் முடிந்துபோயிற்று. 1978 மே முதல் பிரசுரம்பெற்று வந்த ‘ழ‘, அதன் 24ஆம் இதழை, 1983 ஜனவரியில் வெளியிட்டது; அவ்வளவுதான்.
பின்னர் 1987-ல், ‘ழ’ மறுமலர்ச்சி பெற்றது. கவிஞர் ஞானக்கூத்தன், அதன் ஆசிரியரானார். அந்த வருடமும் 1988லும், ‘ழ'வின் சில இதழ்கள் வந்தன; நீடித்து வளர முடியவில்லை, அதனால்.
1981 மார்ச்சு மாதம், கவிஞர் ஞானக்கூத்தன், ‘கவனம்‘ என்று இதழைத் தொடங்கினார். 1982 மார்ச்சில், அதன் ஏழாவது இதழ் வந்தது; அதனுடன் ‘கவனம்‘ நின்றுவிட்டது.
‘கவனம்‘ வலியுறுத்திய ஒரு கருத்து முக்கியமானது:
“இலக்கியப் பத்திரிகைகளை வாசிப்பது மட்டுமின்றி, அவற்றில் பிரசுரமாகும் படைப்புகளைக் குழுவாக விவாதித்து விமரிசனம் செய்வது, அதன் ஆசிரியர்களை நேரடியாகச் சந்திக்கச் செய்து விவரங்களில் தெளிவு காணுவது போன்றவை மிகவும் பயனுள்ளவையாகத் தோன்றுகிறது. இது இன்றைய இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயல்படும்போது சரியாகவே தெரிய வருகிறது எனலாம். இலக்கியப் பத்திரிகைகளின் பணிகளுக்குத் தொடர்ச்சியான அடுத்த கட்ட முக்கியப் பணியாக இதைக் கருதவும் முடியும்போது, இலக்கிய அமைப்புகளின் முக்கியம் இன்னும் கூடிப்போகிறது.”
பூம்புகார்— மேலையூரில், 1980—ல் தோன்றிய ‘முழக்கம்‘, திருநெல்வேலி மாவட்டத்தில் 1978—ல் தொடங்கப்பெற்ற ‘தேடல்‘, பண்ணை மூன்றடைப்பு எனும் இடத்திலிருந்து 1978முதல் வந்துகொண்டிருந்த ‘யாத்ரா‘ ஆகியனவும், 1983-ல், தங்கள் முடிவை அடைந்துள்ளன.
‘யாத்ரா‘, தனது 27ஆவது இதழில் சிறுபத்திரிகையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த ஒரு கருத்து முக்கியமானது; இன்றைக்கும் பொருந்திவரக்கூடியது.‘யாத்திரா‘வின் அறிவிப்பு இது:
“தற்போதைய தமிழ்ச் சூழலில், ஒரு கலாச்சார விழிப்புணர்வுக்குச் சிறுபத்திரிகை இயக்கம் எந்த அளவு தேவை என்பதைக் கருத்தில் கொண்டே, நாங்கள், பலவித சிரமங்களுக்கிடையிலும் ‘யாத்ராவை’ நடத்துவதில் ஒரு விடாப்பிடியான தீவிரத்தைக் கொண்டிருக்கிறோம். இதில், எங்களுடைய தீவிரம்மட்டும் போதாது; இவ்வியக்கத்தில் பங்கு கொள்ளும் உங்களிடமிருந்தும் ஒரு பொறுப்புணர்வின் ஒரு அம்சம், யாத்ராவிற்கு சந்தா அனுப்புவதும் ஆகும். ஒரு சிறுபத்திரிகையை நடத்தும் சிரமத்தை ஒருசிலர்மட்டுமே தாங்கக்கூடுமா என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சிறு பத்திரிகை ஒன்றோடு சம்பந்தம் கொள்வது என்பது, வெறுமனே அதனை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. அப் பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் தங்களால் ஆன உதவிகளையும் செய்யக்கூடிய பொறுப்புணர்வு நமக்கு வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
“இந்தச் சமயத்தில், இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். சிறுபத்திரிகை இயக்கம் வெறுமனே எழுத்து, இலக்கியம் என்றில்லாமல், தன்னுடைய இயக்கக் களனை மற்றக் கலாச்சாரங்களுக்கும் விரித்து ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டுவரும் சமயத்தில், இத்துறை சம்பந்தப்பட்டவர்கள், சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம் எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதேசமயத்தில், இக்கலாச்சாரத் துறைகளின் பாதிப்பினால் விழிப்புணர்வு பெற்ற பலர் சிறு பத்திரிகையின் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனோடு தங்களை இணைத்துக்கொள்ள முன்வருவது எங்கள் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை, எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் விஷயமும் கூட.
“மிகுந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டிய சூழல் இது. ஒரு கலாச்சாரத் துறையில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு பொறியாக மாறி, மற்றக் கலாச்சாரத் துறைகளையும் பாதிக்க வேண்டும்; அதற்கான சூழல் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... இன்றைய சிறுபத்திரிகை இயக்கங்கள் விரிந்து, மற்றக் கலாச்சாரத் துறைகளோடு சம்பந்தம் கொண்ட ஒன்றாகி விட்டது. இந் நிலையில், அனைவரும் பங்கு கொண்டு பேணிப் பாதுகாக்க வேண்டிய ஒரு இயக்கம் சிறு பத்திரிகை இயக்கம் என்பதை நாம் உணரவேண்டும்.”
இவ்வாறு ‘யாத்ரா‘, தனது கருத்தை வெளியிட்டது. இத்தகைய வலுவான சிந்தனைகளை ‘யாத்ரா‘ வளர்த்தபோதிலும், அந்தக் காலாண்டிதழ் காலம் தவறாது வெளிவர இயலவில்லை. 1980லும் ஒருசில இதழ்களையே அது வெளியிட முடிந்தது. 1983—ல், 44—45—46 என்ற எண்கள் இட்ட ஒரு இதழைத் தயாரித்து விட்டுத் தனது இயக்கத்தை அது நிறுத்திக்கொண்டது.
1970களில் உற்சாகமாக இலக்கியம் வளர்க்க முயன்ற நாகர்கோவில் ‘சதங்கை‘, கோயம்புத்தூர் ‘வானம்பாடி‘, உதகமண்டலம் ‘ஸ்வரம்‘ ஆகியனவும் நீடித்து வாழமுடியாமல், 1980களின் முற்பகுதியில் மறைந்து போயின.
1983—ல், தனது 16ஆவது இதழைக் கடைசி இதழாகக் கொண்டு முடிவுற்ற ‘ஸ்வரம்‘ சிற்றிதழின் வளர்ச்சி சுவாரசியமானதாகும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு மாணவர், ‘ஸ்வரம்‘ முதலாவது இதழை ‘இண்லண்ட் லெட்டர்‘ தாளில் அச்சிட்டு அனுப்பினார். தொடர்ந்து இதழுக்கு இதழ்வெவ்வேறு வடிவம் கொண்டு வெளிவந்த ‘ஸ்வரம்‘, 8ஆவது இதழ் முதல் ( 1982 செப்டம்பரில்), புதிய வடிவமும் உள்ளடக்க மாற்றமும் பெற்றது. பிரம்மராஜன், அதன் சிறப்பாசிரியரானார். ஐரோப்பியக் கவிஞர் அறிமுகம், சர்வதேசக் கவிதைகள் மொழிபெயர்ப்பு எல்லாம் அதில் இடம் பெறலாயின. அட்டையும், நவீன ஓவியத்துடன், வசிகரத் தோற்றம் பெற்றது. ஆயினும், 16 இதழ்களுக்குமேல் ‘ஸ்வரம்‘ வளரவில்லை.
அதன் தொடர்ச்சி போல, 1983 ஆகஸ்டில், பிரம்மராஜன், சொந்தமாக ‘மீட்சி‘ மாத இதழை ஆரம்பித்தார். சர்வதேசக் கவிஞர்கள் வரலாறு, உலகக் கவிதைகள் தமிழாக்கம், திரைப்படம் பற்றிய கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்கள் முதலியவற்றைத் தாங்கி வந்தது, ‘மீட்சி‘. சில வருடங்களுக்குப் பிறகு, பிரம்மராஜன், ‘மீட்சி‘யை காலாண்டிதழாக மாற்றிவிட்டார்.
‘மீட்சி‘ காலாண்டிதழ், கனமான விஷயங்களோடும், அழகிய அட்டையமைப்புடனும் தொடர்ந்து வந்தது. Nonlinear எழுத்துகள், ‘போஸ்ட் மாடர்ன் லிட்டரேச்சர்‘ என்று புதிய இலக்கியப் போக்குகளை அறிமுகம் செய்து, அவ்விதமான படைப்புகளைச் சோதனை ரீதியில் எழுதி வெளியிடுவதிலும் மீட்சி ஆர்வம் காட்டியது.
தரமான முறையில் சிறபத்திரிகை நடத்துவதில் அக்கறை கொண்டிருந்தவர்கள், இலக்கியச்சூழல், வாசகர் மனநிலை, நாட்டின் நிலை பற்றியெல்லாம் சிந்தனை வளர்த்துக் கவலையோடு அபிப்பிராயங்கள் தெரிவிக்கத் தவறியதில்லை. தனியான குணங்களைக் கொண்ட முறையில், பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘படிகள்‘ என்ற காலாண்டு ஏடு, அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனைகளை ஒலிபரப்பியது.
“சிறுபத்திரிகை என்பது இன்று தனக்கானதொரு தத்துவத்தையும் இலக்கணத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான சாதாரன வாசகப் பெருமக்களினின்றும் வேறுபட்டிருப்பதுமட்டுமேயன்றிப் பல இடர்ப்பாடுகளுக்கிடையிலும் தங்களுக்கான மதிப்புகளை (values)த் தேடுவதிலும் தமிழர்களில் ஒரு சிலரேனும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிறுபத்திரிகைகள் ஓர் இயக்கமாக இயங்குவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இது தமிழுக்கு மட்டுமே உரிய நிகழ்வு” என்று கணித்த ‘படிகள்‘, சிறுபத்திரிகைகள் பற்றிய தனது ‘திடமான கொள்கை களையும்'யும் அறிவித்தது. அது பின்வருமாறு:
“சிறுபத்திரிகைகளை, முதலில், இரண்டாகப் பிரிக்க வேண்டும். வெறும் இலக்கியம் பற்றிப் பேசும் கொல்லிப் பாவை, யாத்ரா, சுவடு, வைகை, சாதனா போன்றவை ஒருபுறம் விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், பிரக்ஞை போன்ற, கட்சிக்குட்படாத, இடதுசாரிப் பண்புடன் வரும் சிறுபத்திரிகைகள் மற்றொரு புறம். ( கட்சிப் பார்வை கொண்ட பத்திரிகைகளை இங்கே விட்டுவிடுகிறோம்; வேறுசில பத்திரிகைகளின் நிலைப்பாடு தெளிவாகவில்லை என்பதால், அவையும் இங்கே சேர்க்கப்படவில்லை.)
இவ்விரு வகைச் சிறுபத்திரிகைகளையும் முக்கியமானவைகளாகக் காண்கிறோம்.
வெறும் இலக்கியச் சிறுபத்திரிகைகள், மிகுந்த ஜனரஞ்சகத்திற்கு எப்படியும் எதிர்ப்பானவைதாம். கசடதபற, எழுத்து, நடை போன்ற இலக்கியப் பத்திரிகைகளின் சாதனை மறக்கக்கூடியதல்ல. குங்குமம், குமுதம், ராணி வகைகளால் நாநயமான தமிழின் மரபைச் சாகக்கொடுத்துள்ளோம்; அதுபோல் நகரக் கலாச்சாரங்களும் அழிகின்றன. இலக்கியப் பத்திரிகைகள் என்று கூறிக்கொள்பவை கலாச்சாரத்தின் ஓர் அங்கமான இலக்கியத்தைமட்டும் கவனிக்கின்றன; அல்லது சினிமா, நாடகம்மட்டும் கவனிக்கப்படுகிறது. இப்பத்திரிகைகள் தங்களை உயர்த்திக் கலாச்சார இதழ்களாய் மாற்றிக்கொள்ளாதபடி, அவற்றின் குறுகிய இலக்கிய அறிவும், பரந்த பார்வையின்மையும் செல்கின்றன. என்றாலும், தங்களின் அஞ்ஞானத்தையும் மீறி, இந்த இலக்கியப் பத்திரிகைகள், வியாபார இலக்கியத்தையும் அவற்றின் நடைமுறைகளையும் எதிர்ப்பதால், அவற்றிலும் ஓரளவு இடதுசாரித் தன்மை உண்டு என்று நம்புகிறோம்.
விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளை நாங்கள் மிகுந்த மதிப்புடன் அரவணைக்கிறோம். இவைகள், எங்களை ஒத்த சமூக, இலக்கிய, கலாச்சாரப் பார்வை கொண்டிருக்கின்றன. மேலும், அவை அரசியலிலும் தங்களுக்கான நிலைப்பாட்டைத் தேர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், தமிழகச் சூழலில் இன்று செயற்படும் வெறும் இலக்கியப் பத்திரிகைகூடத் தன் இலட்சியத்தை உண்மையில் நிறைவேற்ற, வெறும் இலக்கிய சிரத்தை மட்டும் காட்டினால் போதாது என்பதை ஒரு சித்தாந்தமாகவே முன்வைக்கத் தயாராக உள்ளோம்.
தற்சமயம், கலாச்சார இயக்கம் எதுவும் அரசியலைப் புறக்கணிக்க முடியாது என்று நினைக்கிறோம் அதற்காக நேரடி அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. உங்களுக்கென்று அரசியலிலும் ஒரு பார்வை வேண்டும் என்கிறோம். சிறுபத்திரிகைகளுக்குப் பொருந்தும் இப்பார்வை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
மொத்தத்தில், இருவகைப் பத்திரிகைகளுக்கும் உள்ள பொதுப் பண்பு இப்போது முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டும். வியாபார கலாச்சாரம் என்ற அரக்கிதான் நம் எல்லோரின் முதல் குறி, காரணம், தமிழில் பத்திரிகை வியாபாரம், அமெரிக்கா மாதிரிப் பூதாகாரமாய்ப் பெருக ஆரம்பித்துள்ளது. சிறுபத்திரிகைகளின் முதல் எதிரி ஜனரஞ்சகப் பத்திரிகைகள்தான் என்பதைக் காணவேண்டும். அதன்பின், ஜனரஞ்சகம் என்பது பற்றிய ஆழமான ஆய்வில், பண்டிதரும் பட்டதாரிக் கும்பலும் கண்ணில் தென்படுவர். அதுபோது, சிறுபத்திரிகைகளுக்குள் உள்தாக்குதல் குறையும் கட்சிக் கட்டுப்பாட்டுடன் வெளிவரும் பத்திரிகைகளின் வறட்டுத்தனமும் வெளிப்படாதிருக்காது. மும்முரமான தாக்குதல் பெரும் பத்திரிகை, பல்கலைக் கழகங்கள் என்று திரும்பும், சிற்றிலக்கியப் பத்திரிகைகளின் லட்சியமான இலக்கியப் பார்வையும் ஆழங்கொள்ளும்.”
1979ல் ‘படிகள்‘ வெளியிட்ட இந்தக் கண்ணோட்டத்தின் முக்கியத்துவம் கருதியே, இவ்விரிவான மேற்கோளை இங்குக் காட்ட நேர்ந்தது. இது இன்றைக்கும் வெகுவாகப் பொருந்திவரும் கருத்தாகவே உள்ளது. சிறுபத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் சிந்திக்கவைக்கும் கருத்தும் இதுவாகும். -
‘படிகள்‘ இதழும் நீண்ட காலம் தனது வளர்ச்சியைத் தொடர இயலவில்லை.
1980களின் மத்தியில் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் காட்டிய முக்கியமான பத்திரிகைகள்— ‘கொல்லிப் பாவை‘, ‘ஞானரதம்‘ ஆகியவையாம்.
‘கொல்லிப் பாவை‘ அ. ராஜமார்த்தாண்டன் பொறுப்பில், மிகுந்த ‘இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே‘, சில வருடங்கள் வளர்ந்தது. பன்னிரண்டு இதழ்களுக்குப் பிறகு, அவர், அந்தக் காலாண்டிதழை நடத்தும் பொறுப்பை ஆர். கே. ராஜகோபாலனிடம் ஒப்படைத்துவிட்டார். 1985 ஜூலை முதல், ‘கொல்லிப் பாவை‘, அதன் பதின்மூன்றாவது இதழிலிருந்து, 1988ஜூன் வரை— இருபதாவது இதழ் முடிய, நல்ல இலக்கியப் பணிபுரிந்தது. சுந்தர ராமசாமியின் ஒத்துழைப்பு ‘கொல்லிப் பாவைக்கு‘ அதிகம் கிடைத்துவந்ததை அதன் ஒவ்வொர் இதழும் எடுத்துக்காட்டியது. சுந்தர ராமசாமியின் கதை கட்டுரைகள், பசுவய்யாவின் கவிதைகள், மேல்நாடுகளின் கவிதைகள் மொழிபெயர்ப்பு எனப் பலவகைகளில் அது வெளிப்பட்டது.
பிறகு, 1988-ல் சுந்தர ராமசாமி ‘காலச்சுவடு‘ என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கினார்.
‘ஞானரதம்‘, தேவ. சித்ரபாரதி என்ற பெயர் கொண்டிருந்த அப்பாஸ் இப்ராகிமால், பல வருடங்கள் நடத்தப்பெற்றது. 1986—ல் அவர், ஞானரதம் ஆசிரியர் பொறுப்பை, க. நா. சுப்ரமண்யத்திடம் ஒப்படைத்தார். க. நா. சு. கவனிப்பால் அது ஒரு நல்ல இலக்கிய ஏடாக ஒரு வருடம் வளர்ந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக, இப்ராகிம், ‘ஞானரத‘த்தைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. ஆகவே, 1987 ஜனவரி இதழ், ‘ஞானாதம்‘ மாசிகையின் கடைசி இதழாக அமைந்தது.
அந்த இறுதி இதழில் க. நா. சுப்பரமண்யம் எழுதிய தலையங்கம் நினைவு கூரத்தகுந்தது. தமிழில் எழுத்துத் தரம் உயர என்பது தலைப்பு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்:
“பொதுவாகத் தமிழில் படிப்பது என்பதும், சிந்திப்பது என்பதும் ஆண்டுக்காண்டு குறைகிற மாதிரித் தெரிகிறது.
இலக்கியம், பொதுவாகக் கலைகள் என்பன பற்றி எந்தச் சமுதாயத்தில் சிந்தனைகள் பெருகி வளரவில்லையோ அந்தச் சமுதாயத்தில் மற்ற வளங்களும் பெருகுவதில்லை என்பது சரித்திர அனுபவம்.
சரித்திர ரீதியில், மூன்று நாலு தலைமுறைகளாகவே ஒரு கலாச்சார நசிவுக்குத் தமிழ்ச் சமுதாயம் உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மற்ற இந்தியச் சமுதாயங்களில் ஏற்படாத இந்தக் கலாச்சார நசிவு இயக்கம், தமிழர்களிடையே இந்த நூறு ஆண்டுகளில் தன் வேலையைப் பூர்த்தி செய்துவிட்டது.
இப்போது, அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கத் தொடங்கி யிருக்கிறோம். -
கலை என்றால் சினிமா, படிப்பு என்றால் குப்பை கூளங்களைப் படிப்பது, மனித உறவுகள் என்பதைக் கேலிக்கிடமானவையாக நினைப்பது, எந்தச் சந்தர்ப்பத்திலும் சுயலாபம் தேடுவது, அறிவு என்றால் பதவி வகிப்பது, பதவிகள் வகித்து முடிந்ததும் இந்தப் பதவியினால் லாபமில்லை என்று சொல்வது போலப் பல விஷயங்களை நாம் பார்க்கிறோம்.
அறிவுத் துறைகளில், விஞ்ஞானத் துறையிலும் விமரிசனத் துறையிலும் இன்று ஏற்பட்டிருக்கிற பஞ்சம் சொல்லி முடியாதது.
அறிவுப் போலிகளும், இலக்கியப் போலிகளும் கல்விப் போலிகளும் மலிந்துவிட்டதை நாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வை, புதிய நோக்கம் தமிழனுக்கு மிக அவசரமான தேவை. சமுதாயத்தில் தன் நிலையையும் தன்னிடம் உள்ள சமுதாய நோக்கையும் அவன் தெளிவுசெய்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.
இதைத் தெளிவு செய்துகொள்ளவே எழுத்து, கலை உபயோகப்பட வேண்டும். நல்ல எழுத்தைத் தெரிந்து கொள்ள இயலாத சமுதாயம் நசிவுப் பாதையில் காலடி எடுத்துவைத்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”
இதை எழுதிய க. நா. சுப்ரமண்யம், சிறுபத்திரிகைகள்— இலக்கியப் பத்திரிகைகள்— படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை குறித்துப் பெருமைப்படலாம் என்றும் சொல்லியிருக்கிறார்:
“தமிழ் வாசகர்களைமட்டும் குறைகூறிப் பயனில்லை. பேராசிரியர்கள், பாப்புலர் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் பொதுஜன இலக்கிய ரசனையின்மையை வைத்து லாபம் பண்ணத் தயாராக இருக்கிறார்கள். இலக்கியப் பத்திரிகைகள் படிக்க இந்தக் காலநிலையில் 200—300 பேர்வழிகளாவது முன்வருகிறார்களே என்ற மகிழ்ச்சியடையலாம் என்று கூடத் தோன்றுகிறது.”
“இந்த எண்ணிக்கை அதிகரிக்க வழி என்ன என்பதுதான் எனக்குத் தெரியவில்லை” என்றும் க. நா. சு. குறிப்பிட்டிருக்கிறார். இன்று வரை இது யாருக்கும் தெரியவில்லைதான்! இலக்கியப் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், இலக்கியத்தின் வளர்ச்சியில் நாட்டமும் ஈடுபாடும் கொள்கிற இலக்கியவாதிகள் யாருக்குமேதான்!
என்றாலும், ‘தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழ் இலக்கியத்தை வளம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும், பொதுவாகப் புதுமைகள் பண்ண வேண்டும்— தங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவ்வப்போது சிலர் சிறுபத்திரிகை வெளியிடும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
1980களிலும் அந்தவிதமான புதிய முயற்சிகளுக்குக் குறைவில்லை. லயம், இனி, புதுயுகம் பிறக்கிறது, மண், பயணம், பாலம், எதிர்வு அஸ்வமேதா, நிஜம் என்று அநேகமானவை. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை காட்டுவதில் ஆர்வங்கொண்டு உழைத்ததைப் பாராட்ட வேண்டும்.
இவை பலவும் ஒருசில இதழ்களே பிரசுரம் பெறக்கூடிய வாய்ப்பினையே பெற்றிருந்தன. நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்தபடி வெளிவந்த இச்சிற்றிதழ்கள் தங்களால் இயன்ற அளவு ஒளிவீச முயன்றுள்ளன என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமேயாகும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலிலும் காலநிலையிலும்தான், சுந்தர ராமசாமி, ‘காலச்சுவடு‘ காலாண்டிதழை ஆரம்பித்தார். 1988 ஜனவரியில், ‘கனவுகளும் காரியங்களும்‘ நிறைந்த உள்ளத்தோடு, தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, படைப்பு சமூக விமரிசனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இயன்றவரை தரமாகத் தர முயலும், என்ற அறிவிப்புடன் ‘காலச்சுவடு‘ தோன்றியது.
‘காலச் சுவடு‘ இதழ் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பிதழே என்று கருதப்பட வேண்டிய விதத்தில் அமைந்திருந்தது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் அது தனித்தன்மை காட்டியது. 1989 இறுதியில், அதன் எட்டாவது இதழ் பிரசுரமாயிற்று, அதன்பிறகு, ‘காலச் சுவடு‘ வரவில்லை.
1/4. கிரணம் என்ற காலாண்டிதழ்களும் புதுமை செய்ய முயன்றன. ‘கிரணம்‘, கவிதையில் தீவிரச் சோதனைகள் செய்தது. ‘1/4‘ என்ற பத்திரிகை, நான்கு இதழ்களைத்தான் பிரசுரிக்க முடிந்தது. கிரணமும் அதிக காலம் சாதனைகள் புரியக்கூடிய வாய்ப்பைப் பெறவில்லை.
கவனிப்புக்குரிய மற்றொரு பத்திரிகை, ‘முன்றில்‘. க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு, 1988 செப்டம்பரில், மாதப் பத்திரிக்கையாக ‘முன்றில்‘ பிறந்தது. க. நா. சு. எழுத்துகளை அது அதிகம் பிரசுரித்துவந்தது. 1988 டிசம்பர் மாதம், ‘க. நா. சு. நினைவு மலர்’ வெளியிட நேரிட்டது. முன்றில் கால—ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியாது நிலையும் வந்தது. இருப்பினும், ஒவ்வொர் இதழும் தரமான தயாரிப்பாக, இருமாதம் ஒரு முறை வெளியீடு என வந்து கொண்டிருந்தது. அதன் எட்டாவது இதழிலிருந்து அசோகமித்திரன் சிறப்பாசிரியரானார். ஒன்பதாவது இதழ் ‘ஆண்டு மலர்‘ ஆகப் பிரசுரம் பெற்றது; 1989 நவம்பர்—டிசம்பர் இதழ் அது. 1990—ல் மூன்று இதழ்களை வெளியிட்டது, ‘முன்றில்‘ சிறுகதை, கவிதைப் படைப்பிலக்கியத்தக்கு ‘முன்றில்‘ நன்கு பணியாற்றியுள்ளது.
1987-ல் பிறந்து , நல்ல முறையில் வளர்ந்து, இப்போதும் வந்து கொண்டிருக்கிற இலக்கியச் சிற்றேடு, ‘கனவு‘. சுப்ரபாரதி மணியன், செகந்திராபாத்திலிருந்து, இந்தக் காலாண்டிதழை நடத்தினார். ஒவ்வொர் ஆண்டின் முடிவிலும், பாராட்டப்பட வேண்டிய தன்மையில், ‘கனவு‘ ஆண்டுமலர் தயாரித்து வெளியிட்டது. சிறுகதை மலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ், கட்டுரைச் சிறப்பிதழ் என்றெல்லாம் ‘கனவு’ இதழ்கள் மலர்ச்சிபெற்றன. (பின்னர், ‘கனவு‘, திருப்பூருக்கு மாற்றப் பெற்றது; அதன் போக்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. இவை 1990களில் நிகழ்ந்தவையாகும்.)
சிரத்தையோடு சிறப்பு இதழாகத் தனது ஒவ்வொர் இதழையும் உருவாக்குவதில் கவனிப்புப் பெற்றது, கோணங்கி என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டுள்ள, ‘கல்குதிரை‘. கோணங்கி, திறமையுள்ள படைப்பாளி, புதுமைகள் செய்வதில் ஆர்வம் உடையவர். அவரது ‘கல் குதிரை‘ தனித்தன்மை கொண்ட பத்திரிகையாக வளர்ந்துள்ளது.
சிறப்பிதழ்கள் தயாரிப்பதில் கோணங்கி ஓர் ஒழுங்கு முறையைக் கையாளவில்லை. இந்தி எழுத்தாளர் அக்ஞேயா பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார். அடுத்து, அரவிந்தரின் சாவித்திரி காவியம் பற்றியும், தமிழ்நாட்டுச் சித்தர்கள் இயல்பு குறித்தும் ஒரு சிறப்பு இதழ். அப்புறம், டாஸ்டாவ்ஸ்கி பற்றிய ஒரு மாபெரும் சிறப்பிதழ். இந்தப் போக்கு எப்படி இருந்தபோதிலும், ‘கல்குதிரை‘ தனி வகையான ஒரு சிறந்த சிற்றிதழாக வளர்ந்துவந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
விசேஷமான தனித்தன்மை கொண்ட மற்றொரு சிற்றிதழ், கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்த, ‘நிகழ்’ ஆழ்ந்த சிந்தனை, தீர்க்கமான ஆய்வு, தெளிவான அபிப்பிராயங்கள் புத்தக விமரிசனங்கள், சமுதாய மேம்பாடு குறித்த தத்துவச் சிந்தனைகள் ஆகியவை ‘நிகழ்‘ இதழில் இடம்பெற்றுள்ளன. கோவை ஞானியின் ஆழ்ந்த சிந்தனைத்திறனும், பரந்த கல்வியறிவும் நிகழ் பத்திரிகையின் உள்ளடக்கத்துக்குக் கணம் சேர்த்தன.
‘ழ’, ‘கவனம்‘ ஆகிய இதழ்களின் தொடர்ச்சிபோல் விளங்கியது. சென்னையில் தோன்றிய ‘விருட்சம்‘. 1988 பிற்பகுதியில் ஆரம்பமான இக்காலாண்டிதழ் நல்ல வளர்ச்சி காட்டியது. கவிதை வளத்துக்குக் கணிசமான பங்கு செலுத்தியது. 1990களில் அது ‘நவீன விருட்சம்‘ என்று பெயர்மாற்றம் கொண்டு, பல புதுமைகள் செய்வதில் முனைப்புக் காட்டியுள்ளது.
‘விருட்சம்‘ தோன்றுவதற்கு முன்னர், ‘ழ’ பத்திரிகையுடன் தொடர்பு கொண்டிருந்த சில நண்பர்கள், ‘மையம்‘ என்ற புதுமை இதழைத் திருவல்லிக்கேணியிலிருந்து வெளியிட்டார்கள். இலக்கியத்துடன், நவீனக் கலைகளுக்கும் நவீனப் படைப்பாளிகளுக்கும் உரிய இடம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது, ‘மையம்‘. ஓவியர் ஆதிமுலத்தின் ஒவியங்களை வெளியிட்டு, ‘ஆதிமூலத்தின் அக உலகம்‘ என்றொரு கட்டுரையைப் பிரசுரித்தது. ஆனால் ‘மையம்‘ நீடித்து வளரவில்லை.
எண்பதுகளில், கோவையிலிருந்து வெளிவந்த ‘உயிர் மெய்‘ வித்தியாசமான ஒரு பத்திரிகையாகக் காணப்பட்டது. ‘I try to disturb you and get disturbed in the process’ என்று மிருணால் சென் கூறினார்; ‘இதுதான் உண்மையான கலையின்—கலைஞனின் எதிர்பார்ப்பும்‘ என்று அறிவித்த உயிர்மெய், வித்தியாசமான விஷயங்களைக் கொடுக்க முயன்றது; ஆனால், நீண்டகாலம் உயிரோடு உலாவவில்லை.
எழுபதுகளில், பேராசிரியர் நா. வானமாமலை ‘ஆராய்ச்சி‘ என்ற காலாண்டிதழை நடத்திவந்தார். பல்கலைக்கழக ஆய்வுகளின் ரீதியில் தமிழ் நாவல்களையும் சமூக—பொருளாதாரப் பிரச்சினைகளையும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யும் கட்டுரைகளை, ‘ஆராய்ச்சி‘ வெளியிட்டது. நா. வா. இறந்த பிறகு, தேங்கி நின்ற இந்த இதழ், எண்பதுகளில், நா. வா. ஆராய்ச்சிக் குழுவினரால் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அவர்கள், இதழின் பெயரை, ‘நாவாவின் ஆராய்ச்சி‘ என்று மாற்றிக் கொண்டார்கள். இக்காலாண்டிதழ், தரமான விஷயங்களைத் தாங்கித் தொடர்ந்து பிரசுரம்பெற்றது.
மார்க்சியப் பார்வையுடன் சோஷியலிஸ்ட் ரியலிச இலக்கியம் படைக்க முயல்கின்ற முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து, முற்போக்கு இலக்கியப் பணி புரிகிற ‘தாமரை‘, ‘செம்மலர்‘ பத்திரிகைகள், எண்பதுகளிலும், தங்கள் பணியை வெற்றிகரமாகச் செய்துவந்தன.
முற்போக்கு அம்சங்களோடு தீவிரமாகச் செயற்படுகிற மன—ஓசை, புதிய கலாச்சாரம், கேடயம் போன்ற இதழ்களும் வளர்ச்சிப் பாதையில் தடம்பதித்துள்ளன.தனி இலக்கிய நோக்குக் கொண்ட தீபம், கணையாழி பத்திரிகைகள், 1980களில் நல்ல வளர்ச்சி காட்டின. வெள்ளி விழா ஆண்டை நெருங்கிக்கொண்டிருந்த ‘தீபம்‘ மிகுந்த சிரமங்களோடு வளர்ந்தது. 1986 இறுதியில், ‘தீபம்’ நா. பார்த்தசாரதி திடீர் மரணம் அடையவும், ‘தீபம்‘ இதழ், சில இதழ்களை வெளியிட்டுவிட்டு ஒடுங்கியது.
‘கணையாழி‘, வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. 1990களில், இவ்விதழ் உருவமாற்றம் பெற்றுத் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்தது.
எண்பதுகளில் நின்றும் தோன்றியும், சிரமங்களோடு, இலட்சிய நோக்கை விடாது கைக்கொண்டு வெளிவந்த சிற்றிதழ்களில், புதிய நம்பிக்கையும் ஒன்று. 90களில், ‘புதிய நம்பிக்கை‘ புதிய உருவமைப்புனும் புதிய உத்வேகத்தோடும் வரலாயிற்று.
1980களில், சிறு பத்திரிகை வட்டாரத்தில் ஒரு புதிய நோக்கு வெளிப்பட்டது. கனமான விஷயங்களைத் தாங்கிக் குறைந்த அளவு வாசகர்களைமட்டுமே எட்டக் கூடிய சிற்றிதழ்கள் மற்றும், நிரம்ப ‘லைட்டான‘ விஷயங்களோடு மிக அதிக அளவு வாசகர்களை அடைகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகள். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, நடுவாந்தரமான இதழ்களே— ‘மிட்வே ஜர்னல்‘— தற்காலத் தேவையாகும். இந்த வகையான இதழ்கள்— நிரம்பவும் கனமான விஷயங்களாகவும் இல்லாது, மிக லைட்டான விஷயங்களாகவும் இல்லாது, வாசகர்களின் ரசனையை வளர்த்துப் பண்படுத்தக்கூடிய விஷயங்களை வெளியிடும் பத்திரிகைகள்நடத்தப்படவேண்டும் என்ற கருத்துப் பல இடங்களிலும் எழுந்து ஒலித்தது.
அத்தன்மையில், கவிஞர் மீராவும் சில பேராசிரியர்களும் சேர்ந்து, ‘அன்னம் விடு தூது’ என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்கள். பத்திரிகை நன்றாக இருந்தது; ரசிகர்களின் பாராட்டுகளை அதிகம் பெற்றது, ஓரளவு வரவேற்பும் இருந்தது அதற்கு. ஆனாலும், பத்து மாதங்களில், பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் என்று கூறி, பத்தாவது இதழுடன் பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள்.
பேராசிரியர் தமிழவனும் சிலரும் சேர்ந்து, பெங்களூரில், ஒரு ‘மிட்வே ஜர்ன‘லை ஆரம்பித்தார்கள். ‘இன்று—இங்கே‘ என்ற பெயரில், இலக்கிய நோக்குடன் தொடங்கப்பெற்ற இந்த இதழ், போகப் போக, வாசகர்களுக்குப் பிடித்தமான பரபரப்பு விஷயங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டலாயிற்று. அப்படியும் ஒரு வருடத்துக்கு மேலாக அது தாக்குப்பிடிக்க முடியவில்லை.ஆகவே, ‘இருவேறு உலகத்து இயற்கை‘ என்ற நியதி பத்திரிகையுலகிலும் நிலைபெற்றுள்ளது என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது, ஆழ்ந்த, கனமான இலக்கிய— கலை— கலாச்சார— சமூகச் சிந்தனைகளை விரும்பிப் பிரசுரிக்கிற சிற்றிதழ்கள் எப்போதும் குறைந்த வாசகர் வட்டத்தையுடைய தனி இனம்தான். ஜிலுஜிலுப்பும் விறுவிறுப்பும் பரபரப்பும் கிளுகிளுப்பும் மசாலாக்களாகச் சேர்கிற ‘லைட்ரீடிங் மேட்டரை‘ மட்டுமே வெளியிடுகிற, வியாபார வெற்றிபெறுகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகள், மிகுந்த அளவு வாசகர்களை வசீகரிக்கும் சக்தியாக விளங்குகின்றன.
இருப்பினும், இலக்கியத் தாகத்துடன் கனமான விஷயங்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் நாடுகிற உள்ளத்தோடு, வலிந்து சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளச் சித்தமாக இருப்பவர்கள் இப்போதும் உள்ளனர். இது மகிழ்ச்சிக்குரியது. இல்லாவிடில் ஆங்காங்கே உற்சாகத்தோடு புதிய முயற்சிகள் தலைதூக்குமா என்ன?
புதுக்கோட்டையில் ‘ஒரு’ என்ற சிற்றிதழ், சிவகங்கையில் ‘கவி‘ என்பது, பாளையங்கோட்டையில் பல்கலைக்கழக ஆய்வுரீதியான விஷயங்களுக்காகவே ‘மேலும்‘ என்ற இதழ், மிகுந்த கனமும் ஆழமும் கொண்ட சிந்தனைக் கட்டுரைகளை வெளியிடும் ‘நிறப்பிரிகை‘, நாடகத்துக்கென்றே ஒரு தனி இதழாக ‘வெளி‘, திருத்துறைப்பூண்டியிலிருந்து வெளிவரும் ‘தகழி‘ போன்ற சிற்றிதழ்கள் தோன்றியிருப்பது, நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.
இவை போன்ற கனமும் ஆழமும் கொண்ட புது முயற்சிகள் எனக்குத் தெரியவராமலே இன்னும் எத்தனையோ இருக்கவும்கூடும்.
1960களில், ‘சரஸ்வதி‘ பத்திரிகை பற்றி எழுதிய தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்), ‘சிறுபத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை’ என்று குறிப்பிட்டிருந்தார். குடிசைத் தொழில்களினுள்ளும் குட்டிக் கைத்தொழில் முயற்சிகள்போல அநேகம் சிற்றிதழ்கள் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முகம், சுட்டி, தாராமதி, சுந்தரசுகன், நண்பர் வட்டம் போன்ற இதழ்களை இவ்வகையில் குறிப்பிடலாம். சமூகம், அரசியல், மொழி, மற்றும் தனிமனிதப் பிரச்சினைகள் சம்பந்தமான கூரிய சிந்தனைகளைக் கட்டுரைகளாகவும், கேள்விபதில்கள் என்றும், கவிதை வடிவத்திலும் இவை பிரசுரிக்கின்றன. ஆயினும், இவை போதிய தாக்கம் ஏற்படுத்தக் கூடியனவாக இல்லை.
மேலும், ஆசை பற்றியும், பத்திரிகை நடத்த வேண்டும் என்ற மன—அரிப்புக் காரணமாகவும், சிறுபத்திரிகைகள் பலராலும் தொடங்கப்பெறுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இப்படி எண்ணற்ற இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. எண்பதுகளிலும், இத்தகைய முயற்சிகள், எண்ணிக்கையில் அதிகமாகவே தோன்றியுள்ளன. அமைப்பிலும் பக்க அளவிலும் இவை சிற்றிதழ்களாகவே இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கம் பற்றி இவை அதிக அக்கறை காட்டுவதில்லை; ‘தரம்‘ பற்றிய கவலை, இவற்றைத் தொடங்கி நடத்துகிற இளைஞர்களுக்குக் கிடையாது. தங்களைத் தாங்களே தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் முனைப்பும், அவர்களிடம் இல்லை. எனவே, மிகப் பல சிற்றிதழ்கள், வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன.
சிறுபத்திரிகைகளின் வளர்ச்சியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாண்பதற்கு உதவியாக அமைப்பு ரீதியில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறுபத்திரிகை நடத்துகிறவர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நோக்கத்துடன், கோயம்புத்தூர் ‘தாராமதி‘ ஆசிரியர் குன்றம் மு. இராமரத்திநம் தலைவராக இருந்து, ‘தாஸ்னா‘— தமிழ்நாடு ஸ்மால் நியூஸ் பேப்பர்ஸ் அசோஸியேஷன்—என்ற அமைப்பு துவக்கப்பெற்றது. சில வருடங்களாக இது செயற்படுகிறது எனினும், இவ்வமைப்பு பலம் பொருந்தியதாக வளர்ச்சி பெறவில்லை.
இதுபோன்ற ஒன்றிரு முயற்சிகள், சென்னையிலும் திட்டமிடப்பட்டன; அவையும் சரியாக உருவாகவில்லை.