தமிழில் சிறு பத்திரிகைகள்/முடிவு இல்லாத வரலாறு

56. முடிவு இல்லாத வரலாறு


சிறு பத்திரிகைகளின் வரலாறு முடிவு இல்லாமல் வளர்ந்து கொண்டிருப்பது.

என்றாலும், தொடர்ந்து நான் எழுதி வருகிற இந்த வரலாற்றை ஒரு இடத்தில் நிறுத்தத்தான் வேண்டும்.

இத் தொடரில் பெரும்பாலான சிறு பத்திரிகைகள் குறித்து நான் தகவல்கள் தந்திருக்கிறேன். அநேகப் பத்திரிகைகள் இதில் இடம் பெறாமல் போயிருப்பதும் சாத்தியம்தான்.

நான் குறிப்பிட்டுள்ள பத்திரிகைகளில் சில நின்று விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், திடீர் திடீரென்று புத்துயிர் பெற்று இயங்குவதும் சகஜமாக நிகழ்கிறது. அவற்றில் சில தொடர்ந்து நிலையாக வளர்வதும் இல்லை.

புதிது புதிதாக அநேக முயற்சிகள் தோன்றிக் கொண்டும் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றனவே தவிர, ஆற்றலின் மலர்ச்சியாக அமைவதில்லை. அத்தகைய பத்திரிகைகளை நான் இத்தொடரில் குறிப்பிடாமலே விட்டுள்ளேன்.

சிறு பத்திரிகைகளின் தோற்றம்—இயக்கம்—மறைவு ஆகியவற்றை மேலோட்டமாகக் கவனிக்கிறவர்கள் கூட பல உண்மைகளை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.

சிறு பத்திரிகைகளின் தோற்றம் பற்றிய சில உண்மைகள்.

1. ஆற்றலும் ஆர்வமும், லட்சிய வேகமும் உடையவர்கள், பெருவாரியாக வியாபித்துள்ள வணிகப் பத்திரிகைகள் தங்களுடைய எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஒத்து வருவதில்லை என்பதால், தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்காகத் தனிப் பத்திரிகையைச் சிறு அளவில் தோற்றுவிக்கிறார்கள்.

2. பெரிய பத்திரிகைகளுக்குப் படை எடுத்து, பிரசுர வாய்ப்புப் பெறாமல் போகவும், நமக்கென்று நாமே பத்திரிகை நடத்துவோம் என்று இளைஞர்கள் சிலர் குழுவாகச் சேர்ந்து பத்திரிகை நடத்துகிறார்கள்.

3. நமக்கு முற்பட்டவர்களும், நம் சமகாலத்தவரும் செய்துள்ளவை —செய்கிறவை— எல்லாம் பயனற்றவை எவரும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை; நம்மால்தான் புதுமைகள், அற்புதங்கள், சாதனைகள் புரிய முடியும்; அவற்றை நாம் செய்து காட்டுவோம் என்று நினைக்கிற, நம்புகிற கோபம் கொண்ட இளைஞர்கள் சிலர் கூடி ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள்.

4. நாமும் எழுத வேண்டும் நாம் எழுதுகிறவை எல்லாம் அச்சில் வர வேண்டும் என்று ஆசை கொண்டு, சில சங்கத்தின் உறுப்பினர்கள் அல்லது ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் உற்சாகத்தோடு ஒரு பத்திரிகையைத் துவக்குகிறார்கள்.

5. எழுத ஆசைப்படும் இளைஞர்கள் கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த அனுபவமும் ஆசையும் தூண்டிவிட அதையே அவர்கள் அச்சுப் பத்திரிகையாக மாற்றுகிறார்கள்.

6. அவனும் இவனும் பத்திரிகை நடத்துகிறான்; எது எதையோ எழுதுகிறான்; நாமும் நடத்தினால் என்ன, நம் இஷ்டம்போல் எழுதினால் என்ன என்ற மன அரிப்பினாலும்—நாமும் பத்திரிகை ஆசிரியர் என்றாகிவிட்டால் நமக்கும் ஒரு மதிப்பும் தனி கவனிப்பும் கிட்டும் என்று ஆசைப்பட்டும்—சிலர் பத்திரிகை ஆரம்பிக்கிறார்கள்.

7. ஒரு குழுவாக இயங்கி, சிலர் ஒரு பத்திரிகையை நடத்துகிறபோது, சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்துவேற்றுமையும் பிணக்கும் ஏற்பட்டு, பிளவும் பிரிவும் உண்டாகிவிடவும், விலகியவர்கள் தனியாக ஒரு பத்திரிகை தொடங்குகிறார்கள்.

ஆற்றல், ஆர்வம், ஆசை, அரிப்பு, கனவு, லட்சியம், இவை அனைத்துமோ இவற்றில் சிலவோ உடையவர்கள் பொருளாதார பலம் பெற்றிருப்பதில்லை. அதனால் பத்திரிகையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. விரைவிலேயே நின்றுவிடவும் நேர்கிறது.

லட்சிய வேகம் பெற்ற ஒருவர் கொள்கைப் பிடிப்போடு பிடிவாதத்தோடு பத்திரிகை நடத்துகிறபோது, சிரமங்களையும் நஷ்டங்களையும் அவர் பொருட்படுத்துவதில்லை. எப்படியும் சமாளித்து, தாக்குப் பிடிப்பதில் அவர் தீவிரமாக இருப்பார். அப்படிப்பட்ட தனிநபர் ஆரம்பிக்கிற சிறு பத்திரிகை மட்டுமே வருடக் கணக்கில் நீடித்திருக்க முடியும்— தொடர்ந்து நடைபெற முடிகிறது. இதை இந்த வரலாறு உணர்த்துகிறது.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆதரவில் வெளிவருகிற பத்திரிகையும் நீண்ட காலம் பணிபுரிய இயலும்.

தனிநபர்கள், உள்ளடக்கத்தினால் ( தன்மையால் ) சிறு பத்திரிகையாகவும், அதே சமயம் வியாபார முயற்சியாகவும் இலக்கியப் பத்திரிகை நடத்த முற்படுகிறபோதும், அந்தப் பத்திரிகை நெடுங்காலம் வருவது சாத்தியமாகிறது.

இதே நோக்குடன் இயக்க ரீதியில் பிரசுரம் பெறும் பத்திரிகையும் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் வளரக் கூடும்.

மற்றபடி, வெறும் உற்சாகத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அநேக முயற்சிகள் ஒரு வருடம் அல்லது சில மாத காலம் வாழ்வதற்கே நித்தியப் போராட்டம் அனுபவிக்க நேரிட்டுள்ளது. அநேக முயற்சிகள் இரண்டு அல்லது மூன்று இதழ்களோடு முடிந்து போகின்றன. ஒரே ஒரு இதழோடு மறைந்து போன முயற்சிகள் பலவாகும்.

இந்த விதமாக சிறு பத்திரிகைகள் அல்பாயுசுடன் முடிந்து போவதற்குப் பொருளாதாரம்தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.

நீண்டகாலம் நீடித்திருப்பதற்குத் தேவைப்படக் கூடிய பணபலத்துடன் சிறு பத்திரிகைகள் துவக்கப்படுவதில்லை. பொருள் பலம் பெற்றவர்கள் ஆதரவையும் அருளையும் அவை பெறுவதில்லை. விளம்பரம், ஆயுள் சந்தா, தொடர்ந்து சந்தாப் பணம் என்று பண வரவுக்கான வாய்ப்பு அவற்றுக்கு இல்லை.

’தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று ஆரம்பிக்கப்படுகிற சிறு பத்திரிகைகள் 200 அல்லது 300 பிரதிகளே அச்சிடப்படுகின்றன. அதிகம் போனால், 500 பிரதிகள் அச்சாகலாம். போகப் போக அந்த எண்ணிக்கை குறைந்து, இறுதியில் 150 அல்லது அதற்கும் கீழே என்றாகிவிடும். அநேகமாக இவை முழுவதும் இலவசமாகவே வழங்கப்படும்.

பத்திரிகை நடத்துகிறவரின் நட்புக்காக, அன்புக்காக, முகத்துக்காக, தொந்தரவுக்காக—இவற்றில் எதுவோ ஒன்றுக்காக— ஆரம்பத்தில் பணம் கட்டுகிறவர்கள்கூட அப்புறம் சந்தாவைப் புதுப்பிப்பதில்லை. இதனால் பத்திரிகையின் வளர்ச்சி இயல்பாகவே பாதிக்கப்படுகிறது.

எனவேதான், பத்திரிகை உலகத்தில் பிறப்புகளைப்போலவே இறப்புகளும் சகஜமாகவும் சர்வசாதாரணமாகவும் இருக்கின்றன.

தன்மையினால் சிறு பத்திரிகையாகவும், நடைமுறையில் வியாபார முயற்சியாகவும் விளங்க முயல்கிற பத்திரிகைகள்கூட லாபகரமாக அமைவதில்லை. இவை வியாபார வெற்றிகளாக விளங்குவதில்லை, விளங்க முடிவதில்லை.

’தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று கூறிக்கொள்கிற சிறு பத்திரிகைகள் சில நூறு பிரதிகளே அச்சிடப்படுமானால், வியாபார ரீதியிலும் இயங்க முடியுமா என்று பார்க்கிற சிற்றேடுகள் சில ஆயிரம் பிரதிகள் அச்சாவது நடைமுறை. சந்தாதார்கள் போக, நாட்டின் பல முக்கிய இடங்களிலும் ஏஜண்டுகள் நியமிக்கப்பட்டு இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சில நகரங்களில் ரயில்வே புத்தக நிலையங்களிலும் இவற்றில் சில கிடைக்கக் கூடும்.

தொழில் முறையில் ஜனரஞ்சகமாக மிகப்பெரும் அளவில் நடத்தப்படுகிற வணிகப் பத்திரிகைகள் வாரம்தோறும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. அந்தச் சந்தையில் சிறிய பத்திரிகைகள் போட்டியிட வேண்டியதாகிறது. ஒரு சில ஆயிரம் பிரதிகள், மாதம்தோறும் என்பது மிகவும் குறைவானதுதான். ஆயினும், அவைகூட விற்பனையாவது இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய உண்மை ஆகும்.

இதற்கு வாசகர்களின் ரசனை, ஈடுபாடு, தரம் முக்கியக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. அதைவிட வெகு முக்கியமான காரணம், விற்பனையாளர்களின் நோக்கும் போக்கும்.

ஜனரஞ்சகமான வணிகப் பத்திரிகைகளை விற்பனை செய்கிற ஏஜண்டுகளைத்தான் சிறு பத்திரிகைகளும் நாடவேண்டியிருக்கிறது. ‘பெரிய பத்திரிகைகள்’ வாரம்தோறும் இருநூறு— முந்நூறு (அதற்கும் அதிகமாகவும்) பிரதிகள் செலவாகக் கூடிய ஊர்களில், கனமான— சிந்தனைக்கு உரிய— ’சீரியஸ்’ தன்மை உள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகளைப் பிரசுரிக்கிற சிற்றேடுகள் மாசத்துக்கு இருபது அல்லது முப்பது பிரதிகளே விலை போகின்றன. இதனால் வியாபாரிக்கு அதிகமான லாபம் இல்லை. அவர் கவனமும் சிரத்தையும் அதிகக் கமிஷன் கிடைக்க வகை செய்கிற வணிகப் பத்திரிகைகளை விற்பதிலும், அவற்றின் விற்பனைத் தொகையை உடனுக்குடன் அனுப்பி வைப்பதிலும் தீவிரமாக இருக்கின்றன.

எனவே, தபால் மூலம் வரப் பெறுகிற சிறு பத்திரிகைகளை வியாபாரி எடுப்பாக, வாங்க வருகிறவர் பார்வையில் படும்படியாக, முன்னே வைப்பதில்லை. சில சமயம், அந்தப் பத்திரிகை இருக்கிறதா என்று கேட்டு வாங்க வருகிற வாசகருக்கு எடுத்துக் கொடுக்கவும், உரிய பதிலைச் சொல்லவும்கூட, உற்சாகம் இல்லாதவர் ஆகிவிடுகிறார் கடைக்காரர். விற்பனைத் தொகை சிறு அளவாக இருப்பதால் அதை மாதம்தோறும் அனுப்ப மனம் வருவதில்லை அவருக்கு அனுப்புகிற செலவு குறையுமே என்பதற்காக, இரண்டு மாதம் மூன்று மாதம் சேர்த்துப் பணம் அனுப்பலாமே என்று லாபத்தில் குறியாக உள்ள வியாபாரி நினைக்கிறார். இப்படிப் பல மாதங்கள் ஆகிவிடவும், பணம் அனுப்புவது அவருக்குச் சிரமமாகி விடுகிறது; அனுப்பாமலே இருந்து விடுகிறார்.

எந்த வகையில் பார்த்தாலும் பத்திரிகைக்குத்தான் நஷ்டம் ஏற்படுகிறது.

தொழில் முறை ஏஜண்டுகளை நம்பாமல் இலக்கிய ரசனையும் ஈடுபாடும் கொண்ட நண்பர்களுக்கு 10 பிரதிகள் ( சில ஊர்களுக்கு 5 பிரதிகளாவது) அனுப்பி, பத்திரிகையைப் பரப்புவதற்கு முயற்சி பண்ணலாமே என்று சிறு பத்திரிகை நடத்துகிறவர்கள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

உற்சாகமுள்ள நண்பர்கள் சிறிது காலம் ஒத்துழைக்கிறார்கள். போகப் போக இவர்களும் தொழில்முறை ஏஜண்டுகள் போக்கில்தான் செயல்படுகிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த ஊருக்கு பத்திரிகை அனுப்புவதையே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

ஊர் ஊருக்கு இப்படி ஆகி, பத்திரிகைகள் பிரதிகள் அச்சிடும் எண்ணிக்கையைக் குறைக்க நேர்கிறது. இவ்வாறு தேய்ந்து தேய்ந்து பத்திரிகை நிற்க வேண்டிய நிலையை அடைந்து விடுகிறது.

தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகளின் வரலாறு தொடர்ந்து எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கிற உண்மை நிலை இதுதான்.

சிறு பத்திரிகை தொடர்ந்து நீடித்து நடக்க வேண்டுமானால், தரம் அறிந்து படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். ரசனைமிக்க வாசகர்களை விடாது பிடித்து வைத்திருககக் கூடிய விதத்தில் சிறு பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் தரத்தோடும் புதுமைச் சுவையோடும் விளங்க வேண்டும்.

அப்போது இலக்கியப் பிரியர்கள் சந்தா கட்டுவதில் ஆர்வம் உடையவர்கள் ஆவார்கள். அந்தப் பத்திரிகையை விற்க முனைகிற இலக்கிய நண்பர்களுக்கும், ஒவ்வொரு இதழையும் தெரிந்தவர்களிடம் தள்ளிவிடவோ தலையில் கட்டவோ, சிரமப்பட் வேண்டிய தேவை ஏற்படாது.

பரவலாகச் சிறு பத்திரிகைகளைக் கவனிக்கிறபோது, 1970 களிலும் 80களிலும் சிறு பத்திரிகைகள் எண்ணிக்கையில் அதிகமாகத் தோன்றி மறைந்திருக்கின்றன என்பது புலப்படும்.

இப்படி அவை அதிகமாக வந்திருந்த போதிலும், உருப்படியான சாதனைகள் வெகு குறைவுதான் என்பதும் புலனாகும். அநேக முயற்சிகள் பேப்பர் வியாபாரிக்கும் பிரஸ்காரருக்கும் பிசினஸ் தேடிக்கொடுத்த புண்ணியத்தைத் தவிர, எழுத்துக்கோ கலைக்கோ சமுதாயத்துக்கோ எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை.

அநேக வெளியீடுகள், வண்ணிக நோக்குப் பொழுது போக்குப் பத்திரிகைகளைப் போல ஒரு தடவை பார்த்துவிட்டு அப்படியே ஒதுக்கி விடக்கூடிய தன்மையில்தான் இருக்கின்றன. பத்திரமாக பாதுகாத்து வைத்து, அடிக்கடி படித்து இன்புறக்கூடிய விதத்தில் நல்ல தரமான, உயர்ந்த படைப்புகளை பெரும்பாலான பத்திரிகைகள் தரவில்லை.

சிறு பத்திரிகைகள் சக்தி நிறைந்த வலிய சாதனங்கள் ஆகும், ஆக முடியும்.

புதிய எழுத்துக்கு, புதிய புதிய பரிசோதனைகளுக்கு அவை இடம் தரும்—தர வேண்டும். புதிது புதிதாகத் திறமைசாலிகளைக் கண்டு கொள்ள அவை உதவக்கூடும். திறமையாளர்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடிய பயிற்சித் தளமாக அவை விளங்க முடியும். கனமான சிந்தனைகள், வளமான கருத்துக்கள், அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்கள் முதலியவற்றை வளர்த்து, கலை இலக்கியங்களை வளம் செய்ய முடியும்.

இப்படி எல்லாம் இன்று எத்தனை சிறு பத்திரிகைகள் இருக்கின்றன?

வணிக நோக்கில் பெரிய அளவில் பத்திரிகை நடத்துகிறவர்கள் வாசகர்களின் மன அரிப்பைத் தணிக்கும் விதத்தில் எதெதையோ அச்சிட்டு நல்ல தாளைப் பாழாக்குகிறார்கள் என்றால், தங்கள் மன அரிப்பைத் தனித்துக் கொள்வதற்காக சிறு பத்திரிகைகள் நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் பணத்தை வீணாக்கி, தரமற்ற, நயமற்ற, கவையற்ற, சாரமற்ற எழுத்துக்களை அச்சிட்டு நல்ல காகிதத்தைப் பாழ் பண்ணுகிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

தரமான படைப்புகளையே தருவோம் என்று அறிவித்த ஒரு சில பத்திரிகை அன்பர்கள்கூட சில இதழ்களுக்குப் பிறகு சாரமற்ற எழுத்துக்களால் தங்கள் பத்திரிகையின் பக்கங்களை நிரப்பி வைக்கிறார்கள. தரமான, நயமான, கனமும் ஆழமும் கொண்ட எழுத்துக்கள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

இக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காகச் சிலர் மொழிபெயர்ப்பு விஷயங்களை அதிகம் தர முனைகிறார்கள். இவற்றிலேகூட காலத்துக்கும் நாட்டுக்கும் நமது சமூக நிலைமைகளுக்கும் பொருந்தி வராத கட்டுரைகளையே சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள். அல்லது எங்கோ, எப்பவோ வெளியான ஒரு அரசியல் நூல் பற்றி ஏதோ ஒரு பத்திரிகையில் எவரோ ஒருவர் எழுதிய கடுமையான விமர்சனத்தைத் தமிழாக்கித் தருகிறார்கள்.

பத்திரிகைகள் நடத்துகிறவர்கள் தங்களை ’அறிவு ஜீவிகள்’ (இன் டெலக்சுவல்ஸ்) என்று காட்டிக்கொள்ள விரும்புகிற ஆசைதான் இவற்றின் மூலம் வெளிப்படுகின்றனவே தவிர, இந்த விதமான விஷயங்களால் தமிழ் வாசகர்களுக்கு ஒரு பயனும் கிடையாது. நம் நாட்டு நிலைமைகள், வாழ்க்கைப் பிரச்னைகள், தற்காலச் சிக்கல்கள் பற்றிய சிந்தனைக் கட்டுரைகளை வெளியிட்டால் பிரயோசனம் உண்டு. தமிழில் வெளிவந்து, போதிய கவனிப்புப் பெறாமல் போய்விட்ட நல்ல புத்தகங்கள் பற்றி எழுதினால் பலன் இருக்கும். தமிழ்ப் புத்தகங்கள் படைப்பாளிகள் பற்றிய அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் எழுதினால் அவை வளர்ச்சிக்கு வகை செய்யும்.

பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரமும் நயமும் கலையும் உள்ளதாகத் தர முயல்வதே சிறு பத்திரிகை நடத்துகிறவர்களின் நோக்கமாக அமையவேண்டும்.

கம்மா பொழுதுபோக்காகவும், ’காலவகை’ என்றும் பத்திரிகை நடத்த முற்படாமல், படிக்கிற ரசிகனின் பொழுதைப் பொன்னாக்கக்கூடிய— அவனுக்கு மனநிறைவும், சிந்தனைக்கு உணவும் அறிவுப் பசிக்குத் தீனியும் தரக்கூடிய ஆக்கங்களாகச் சிறு பத்திரிகைகள் விளங்க வேண்டும்.

கால ஓட்டத்தில் அடிபட்டுப் போகிற தாள்களாக இராது, காலத்தினூடு நிலைபெற்று நின்று பெயர் சொல்லக்கூடிய சாதனையாகத் திகழ வேண்டும் என்ற லட்சிய தாகத்தோடு நடத்தப்படுகிற சிறு பத்திரிகைகளே சிறப்பானவையாக அமையும். அவையே இலக்கியத்துக்கும் மொழிக்கும் நல்லது செய்யமுடியும்.