தமிழில் சிறு பத்திரிகைகள்/கொல்லிப் பாவை



19. கொல்லிப்பாவை


உற்சாகமும் இலக்கிய ஆர்வமும், உயர்ந்த நோக்கமும் கொண்ட இளையவர்கள் சிலர், அல்லது இளைஞர் ஒருவர், நல்ல முறையில் இலக்கியப் பத்திரிகை ஒன்று நடத்த ஆசைப்படுவதும், அதற்காகப் பாடுபடுவதும், சிரமங்களை மேற்கொள்வதும் இயல்பாக இருக்கிறது. அப்படி ஒரு குழுவால், அல்லது தனி நபரால், ஆரம்பிக்கப்படுகிற சிறு பத்திரிகை இலக்கியவாதிகளையும் உற்சாகிகளையும் வசீகரிக்கிறது. அம்முயற்சியில் ஒத்துழைக்கப் பலர் வந்து சேர்கிறார்கள். இவர்களில் ஓரிருவர், கூடிய சீக்கிரமே பத்திரிகையின் போக்கையும், அதன் ஆசிரியரது நோக்கையும் திசைதிருப்பிவிட்டு, கோளாறான தடத்திலே செலுத்துகிறார்கள். கால ஓட்டத்தில், உயர்ந்த நோக்குடன் செயல்படத் துவங்கிய முயற்சி சீர்கெட்டுப் போகிறது. சாதனைகள் பல புரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிற காரியமாக வீணாகிப் போகிறது.

தமிழ்ச் சிறு பத்திரிகை வரலாற்றில் இதற்கு உதாரணமாக அமைந்தவை பலவாகும். முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்தது கொல்லிப்பாவை.

திருவனந்தபுரத்தில் ஹாஸ்டல் அறை ஒன்றில் வசித்து வந்த அ. ராஜமார்த்தாண்டனுக்கும், அவருடைய கவிநண்பர் ஒருவருக்கும் நல்ல முறையில் இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 'கலி' என்ற பெயரில் ஒரு இதழ் தொடங்க முயன்றார்கள். ஏழெட்டு மாதங்களாகியும் அவர்கள் முயற்சியும் உழைப்பும் செயல் வடிவம் பெறாமலே தேங்கி நின்றன. கவிநண்பர் ராஜமார்த்தாண்டனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். பின்னரும் காலம் ஓடியது.

காலதாமதத்துக்காக மன்னிப்புக் கோரியவாறே, ராஜமார்த்தாண்டன் 'கொல்லிப்பாவை' என்ற பெயரில், பத்திரிகையின் முதல் இதழை 1976 அக்டோபரில் வெளியிட்டார். இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் தருமு ஔரூப் சிவராம் என்றும் அவர் நன்றியுடன் அறிவித்தார்.

முதல் இதழில் காணப்பட்ட அறிவிப்பின் இறுதிப் பகுதி இது :

"கொல்லிப்பாவை மூலம் தமிழிலக்கிய உலகில் என்ன சாதிக்கப் போவதாக உத்தேசம்? அதைச் சாதிக்க, இதைச் சாதிக்க என்று எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அதெல்லாம் 'கொல்லிப்பாவை' மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையே. படைப்பாளிகள்-விமர்சகர்கள்- வாசகர்கள் தரும் ஆதரவைப் பொறுத்ததல்லவா? எனவே இப்போதைய என்னதைவிட 'கொல்லிப்பாவை'யின் வரும் இதழ்கள் தரும் பதில்தான் பொருத்தமாக இருக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

கொல்லிப்பாவை எத்தனை இதழ்கள் வரும் என்று இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாதுதான். என்றாலும் வெளிவரும் வரையில்இனிமேலும்-எந்தக் காலதாமதமும் ஏற்படாது என்று உறுதி கூற முடியும். ‘கொல்லிப்பாவை' யின் வளர்ச்சியில் பங்கு கொள்வது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது-படைப்புக்கள் அனுப்பி உதவி செய்வது நன்கொடை வழங்குவது இரண்டிலும்”

ராஜமார்த்தாண்டனின் எதிர்பார்ப்புகள் சரிவரச் செயலில் நிகழவில்லை என்பதைக் காலம் நிரூபித்தது.

ஒவ்வொரு இதழிலும் காலதாமதத்துக்காக அவர் வருத்தப்பட நேரிட்டது. படைப்பாளிகள் நல்ல கதைகள், கட்டுரைகளை அனுப்பி, பத்திரிகையின் வளத்துக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் துணை புரியவில்லை. தற்சிறப்பு மோகமும் சுயவிளம்பரப் பிரியமும், பிறரைப் பழிப்பது-பரிகசிப்பது-மட்டம் தட்டுவது முதலியவற்றில் தீவிர அக்கறையும் கொண்டவர்களின் ஆக்கிரமிப்பைக் ‘கொல்லிப்பாவை'யும் தவிர்க்க இயலாது போயிற்று.

‘கொல்லிப்பாவை', பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது.

முதல் இதழ் 52 பக்கங்கள். அட்டை தனி சுந்தர ராமசாமியின் கதை 'அலைகள்' (6 பக்), நகுலன் சோதனை ரீதியில் எழுதிய 'ஒரு நீண்ட கவிதை-மழை மரம், காற்று' (5 பக்), அதற்கு 'அவதாரிகை' என்ற 2 பக்க முன்னுரை. இந்த இதழ் வருவதற்குச் சொற்ப காலத்துக்கு முந்தி மரணமடைந்த படைப்பாளி கிருஷ்ணன்நம்பி, கி. ராஜநாராயணன் 'வேட்டி' தொகுதிக்கு, சாது சாஸ்திரி என்ற புனைபெயரில் எழுதி வைத்திருந்த விமர்சனக் கட்டுரை- 'கரிசல்க் காட்டில் ஒரு படைப் பாளி' (13 பக்), 'சாகித்திய அகாடமி பற்றி' சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கடிதம் 3 பக்), 'கலைஞனும் கோட்பாடும்'- தருமு ஔரூப் சிவராம் கட்டுரை (2 பக்.) உமாபதி, ராஜமார்த்தாண்டன் கவிதைகள். இவ்விஷயங்களோடு முதலாவது இதழ் திருப்திகரமாகத்தான் அமைந்திருந்தது.

1977-ல் ஒரே ஒரு இதழைத்தான் வெளியிட முடிந்திருக்கிறது. 1978-ன் 1-ம் இதழில், "கொல்லிப்பாவை ஐந்து இதழ்கள் வெளிவந்திருக்க வேண்டும். இரண்டுதான் வெளிவந்துள்ளது. இந்த ஒழுங்கின்மை, காலதாமதம் இனியும் தொடராதவாறு இதழை வெளிக் கொண்டுவர மேற்கொண்ட வேளையில் இலக்கிய நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்பு கிடைத்தது” என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது ஆண்டு முதல், கொ. பா. குமரி மாவட்டம் இடையன் விளை என்ற ஊரிலிருந்து வரத்தொடங்கியது. இவ் ‘இலக்கிய நண்பர்கள்' ஒத்துழைப்பு காரணமாகப் பத்திரிகையின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதைப் பின்னர் கவனிப்போம். முதலில், ராஜமார்த்தாண்டனின் லட்சியங்கள் பற்றிய அறிவிப்பை நினைவுகூர வேண்டும்:

“கொல்லிப்பாவையின் வெளிப்பாட்டினால் தமிழிலக்கிய இயக்கத்தில் பெரியதொரு மாறுதலை ஏற்படுத்திவிட முடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இதற்கென்று சில லட்சியங்களும் இல்லாமல் இல்லை.

நாவல் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும், சிறுகதை, புதுக் கவிதை வரலாறு அரை நூற்றாண்டையும் தாண்டிவிட்டது. ஆண்டிலும் அளவிலும் மட்டுமின்றி தரத்திலும் இவ் இலக்கியத் துறைகளில் வளர்ச்சி உண்டு. ஆனால் இவற்றோடு இணைந்து வளர வேண்டிய விமர்சனத் துறை மட்டும் இன்னும் அரிச்சுவடி நிலையிலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறது. அன்று தொடங்கி இன்று வரை இலக்கியம் பற்றிப் பேசியதெல்லாம் பொழிப்புரைகள். ஆகா-ஓகோ என்ற பாராட்டுக்கள், தூக்கி எறிதல்கள் தானே? இது தவிர்த்து உருப்படியாக, விமர்சன ரீதியாக, என்ன சாதித்திருக்கிறோம்? எல்லோருமே ஒரு உயர்ந்த பீடத்திலிருந்து ‘கருத்துக்க'ளைத் தாராளமாக உதிர்க்கிறோம். 'இது தரமானது, இவர் அவருக்கு இணை' என்று முடிவுகளை அடைவதற்கான காரணங்கள் என்ன, இலக்கியம் பற்றிய- நவீன இலக்கியப் போக்கின் தரம், சாதனை, கொள்கை குறித்த-நமது பார்வை, மதிப்பீடுகள் 65 6 ? சிற்சில முயற்சிகள் அங்கங்கே தென்பட்டாலும் மொத்தப் பார்வையில் வெறும் அபிப்பிராயங்களும், பட்டியல்களும்தான் விமர்சனம் என்ற போர்வையில், இந்த நிலை மாற, விமர்சனமும் இலக்கியமாக, இலக்கிய அக்கறை கொண்ட விமர்சனப் பார்வைகள் வளர ஒரு களம் அமைத்துச் செயல்பட வேண்டும் என்பது 'கொல்லிப்பாவை' யின் நினைப்பு இதனால் புதிய படைப்புகள் புறக்கணிக்கப்படும் என்றாகாது . படைப்பும் விமர்சனமும் இணைந்து வளர்வதுதானே ஆரோக்கியமான இலக்கிய இயக்கமாகும்). கூடவே, இன்னும் சவலைப்பிள்ளையாகவே கிடக்கும் நாடக இலக்கியம் பற்றியும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு. இந்த நினைப்புகள் நடப்பாக, தொடர்ந்து இலக்கியப் பிரக்ஞையுடன் புதிய சோதனை முயற்சிகளுக்கு ஒரு களமாக 'கொல்லிப்பாவை’ செயல்பட படைப்பாளிகள்-வாசகர்கள் ஒத்துழைக்க வேணும்.”

நல்ல லட்சியங்கள்தான். ஆனால், 'கொல்லிப்பாவை' க்கு உரிய முறையில் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதை அதன் இதழ் ஒவ்வொன்றும் நிரூபித்தது.

வெங்கட்சாமிநாதன், அவர் இயல்புப்படி, சில கருத்துக்களைக் கூறி, அவற்றை விளக்கும் வகையில் சிறு பத்திரிகைகள், சில எழுத்தாளர்களது போக்குகளைச் சாடி பல பக்கக் கட்டுரைகள் எழுதினார். தருமு சிவராம் உடனேயே வெ. சா. க்கு எதிர்ப்பாகவும், தனது பெருமைகளை எடுத்துக் கூறியும் நீண்ட நீண்ட கட்டுரைகள் எழுதுவதும் சகஜமாயிற்று. ஞானக்கூத்தன் அவர் போக்கில் கருத்துக்கள் தெரிவிப்பதும் (உ-ம்; 'பட்டுக் குஞ்சல் மரியாதை' ), சிவராம் (பட்டுக் குஞ்சல் சுயமரியாதை' என்று எதிர்க்கட்டுரை எழுதுவதும், பாதிக்கப்பட்ட தமிழவன் தனது கோணத்தில் கட்டுரைகள் எழுதுவதும், இவை போன்ற பக்க வீணடிப்புகளுக்கெல்லாம் 'கொல்லிப்பாவை’ இடமளிப்பதும் தவிர்க்க இயலாத நியதியாயிற்று.

தருமு சிவராம் எழுத்துகளுக்கு கொ. பா. அதிக இடம் அளித்துள்ளது.

‘கொல்லிப்பாவை'யின் இந்தப் போக்கு அதன் வாசகர்களுக்கு அதிருப்தியே தந்தது. அவ்வப்போது சிலர் தங்கள் அபிப்பிராயங்களை எழுதியிருக்கிறார்கள். மதுரை ரசிகர் ஒருவரின் ( எஸ். டி. லஷ்மணன் ) கருத்து சரியான விமர்சனமாகக் காணப்படுகிறது.

“கொல்லிப்பாவையை ஆரம்பத்திலிருந்து பார்க்கும்போது, உருப்படியானவையாக ந. முத்துசாமியின் 'தெருக்கூத்து', கிருஷ்ணன்நம்பியுடைது ஒன்று, கி. ராஜநாராயணன், அழகிரிசாமி பற்றி எழுதிய கட்டுரை, வெ. சா. வின் 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’, பதிலான சுந்தர ராமசாமி விளக்கம், தருமு சிவராமின் பிரதிரூப சம்வாதம்- இவை தவிர மற்றைய கட்டுரைகள் எல்லாம். ஏதோ நிர்ப்பந்தத்தை ஒட்டி வெளியானவை போன்று தெரிகிறது. கட்டுரை என்ற கருவி கூட 'தனிமனித தூவிப்பு'க்காக அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. உபயோகித்தவர் யாராக இருந்தாலும் சரி, கட்டுரை பொறுப்புணர்வுக்காக வெளியிடுவதை விட்டு சிற்சில சமயங்களில் நட்பிற்காகவும், 'இந்த உறவு முறிந்துபோய் விடுமோ' என்ற பயத்திலும் வெளியிட்டிருப்பது தெரிகிறது. வெ. சா, த. சிவராம், ஞா. கூ. இவர்களுக்கிடையில் நடைபெற்ற பேனாச் சண்டைக்கு ஒரு களமாக இருந்ததே கொல்லிப்பாவை இப்படிக் களமாக இருந்ததற்கு கொ. பா. வுக்கு எந்த விதத்திலும் கெளரவம் ஏற்பட்டுவிடாது.”

பாராட்டப்பட வேண்டிய சில நல்ல விஷயங்களையும் 'கொல்லிப்பாவை' பிரசுரித்திருக்கிறது.

உலக இலக்கியத்தில் சாதனைகள் புரிந்துள்ள பெரிய படைப்பாளிகள் குறித்து 'கொல்லிப்பாவை' சிறு அளவில் அறிமுகக் கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. நட்ஹாம்சன், கிரேசியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ் போன்றவர்களையும் அவர்களது படைப்புகளையும் பற்றித் தமிழ் இலக்கியப் பிரியர்கள் ஓரளவுக்கேனும் அறிந்து கொள்வதற்கு இக்கட்டுரைகள் உதவின.

தமிழ்ச் சிறுகதையில் தனித்தன்மையோடு படைப்புகள் உருவாக்கிச் சிறப்புடன் திகழ்ந்த கு. அழகிரிசாமி பற்றி, அவருடைய நெருங்கிய நண்பரான கி. ராஜநாராயணன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார்.

'செல்லையா கு.அழகிரிசாமியானது' என்ற அந்த 13 பக்கக் கட்டுரை 'கொல்லிப்பாவை' வரலாற்றில் மிகுந்த சிறப்புடைய விஷயம் ஆகும்.

வெங்கட் சாமிநாதன் எழுதிய 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' பல உண்மைகளைச் சுட்டிக்காட்டி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டிய ஒரு கட்டுரையாக அமைந்திருந்தது.

சுந்தர ராமசாமியின் 'உடல்' என்கிற சோதனை ரீதி நாடகம் குறிப்பிடத்தகுந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டு சிறுகதைகள் சோதனை ரீதியில் எழுதப்பட்டு வெளிவந்தன.

‘கொல்லிப்பாவை' சிறுகதைத் துறையில் அதிக அக்கறை காட்டியது என்று சொல்வதற்கில்லை. அதில் அதிகமான கதைகள் பிரசுரம் பெற்றதில்லை. பிரசுரமான கதைகளும் நினைவில் நிற்கத் தக்கனவாககுறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியனவாக-விளங்கவில்லை.

கொ. பா. புதுக் கவிதையை ஆதரித்தது. ஆயினும் 'எழுத்து' போல் பரவலான உற்சாகத்தை விதைத்து அதிகம் பேரை எழுதத் தூண்டவில்லை. ஒரு சிலரது கவிதைகளே அடிக்கடி வெளிவந்துள்ளன, பிரேமிள்ஜி என்றும், பாதுச்சந் ரூஃப் ப்ரேமிள் என்றும் தருமு சிவராம் கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்றும் நாரனோ ஜெயராமன், உமாபதி, தேவதச்சன், நகுலன், தேவதேவன், கலாப்ரியா, லக்ஷ்மி கண்ணன், சகதேவன் கவிதைகளும் கொல்லிப்பாவை இதழ்களில் வந்திருக்கின்றன.

அபூர்வமாக மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியது கொ. பா. சில கவிதைகள் தமிழாக்கம் பெற்றுள்ளன. கெ. ஐயப்ப பணிக்கர் மலையாளத்தில் எழுதிய ஒரு கட்டுரை 'பார்வையாளன்' ( நாடகம் சம்பந்தப்பட்டது) மொழிபெயர்ப்பாக வந்தது.

தமிழில் மாதந்தோறும் புதிய புத்தகங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், புதுக் கவிதை மற்றும் மரபுக் கவிதைத் தொகுப்புகள்-இப்படிப் பல பிரிவுகளிலும் புத்தகங்கள் வருகின்றன. பல வருஷங்களாக வந்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றையாவது- முக்கியமான சிலரது எழுத்துக்களையாவது- இலக்கியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிறவை விமர்சித்தால் நல்லது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சிதறி இருக்கின்ற இலக்கியப் பிரியர்கள் தமிழில் வெளிவந்திருக்கிற-வந்து கொண்டிருக்கிற-புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளில் வரக்கூடிய 'நூல் அறிமுகம்', 'புத்தக மதிப்புரை' பகுதிகள் அவர்களுக்கு உதவக்கூடும். சிறு பத்திரிகைகள் இந்தப் பணியை நன்கு செய்ய முடியும் செய்ய வேண்டும்.

ஆனால், செய்வதில்லை. தமிழில் பல நல்ல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை உரிய கவனிப்பைப் பெறாமல் இருட்டில் ஆழ்ந்து கிடக்கின்றன. சிறு பத்திரிகைகள் அத்தகைய வெளியீடுகள் குறித்து அறிமுகக் கட்டுரைகளும், விமர்சனங்களும் வெளியிடலாம்.

ஆனால், செய்வதில்லை. ஆசை நிறைந்த திட்டத்தை, கொள்கையை வெளியிட்ட 'கொல்லிப்பாவை' கூட இப்படிப்பட்ட பயனுள்ள காரியத்தைச் செய்ய முன்வரவில்லை.

அதன் பிற்காலப் பகுதியில், கொ. பா. புத்தக மதிப்புரைகளைப் பிரசுரித்தது. ஆனால், அதிலும் 'வேண்டுதல் வேண்டாமை' நோக்கே தென்படுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் புத்தகங்களைப் பாராட்டுவதும், வேண்டாதவர்கள்- மற்றவர்கள் புத்தகங்களைக் குறை கூறுவதும் கிண்டல் செய்வதுமான தொனியே இக்கட்டுரைகளில் மேலோங்கி நிற்கின்றது.

வேதசகாயகுமார் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை வரலாறு' பற்றி நகுலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வெங்கட்சாமிநாதனின் 'அக்ரகாரத்தில் கழுதை' பற்றி சில கட்டுரைகள், சாகித்திய அகாடமிப் பரிசு பெற்ற தி. ஜானகிராமனின் 'சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்பு பற்றி வேதசகாயகுமார் விமர்சனம், பாப்ரியாவின் இரண்டு கவிதைத் தொகுதிகள், செவ்வண்ணனின் 'திசை தெரிந்த அம்புகள்' (கவிதை) பற்றி அபிப்பிராயங்கள்-இவ்வளவுதான் கொல்லிப்பாவையின் கவனிப்பைப் பெற்றுள்ளன.

“விமர்சனமும் இலக்கியமாக, இலக்கிய அக்கறை கொண்ட விமர்சனப் பார்வைகள் வளர ஒரு களம் அமைத்துச் செயல்பட வேண்டும் என்பது கொல்லிப்பாவையின் நினைப்பு” என்று அறிவிக்கப்பட்டிருந்தது செயல்வடிவமாக மலர்ச்சி பெறவேயில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

'கொல்லிப்பாவை' 1981-ல் ஒன்றோ இரண்டோ வெளிவந்தது. 1982- ல் அது பிரசுரம் பெற்றதாகத் தெரியவில்லை.