தமிழில் சிறு பத்திரிகைகள்/தெறிகள்



20. தெறிகள்


சிறு பத்திரிகைகளுள் விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவற்றில் 1970 களில் பிரசுரமான 'தெறிகள்' என்பதும் ஒன்று ஆகும்.

இலக்கிய ஆர்வமும், கவிதை எழுதும் ஆற்றலும் பெற்ற உமாபதி பத்திரிகைத் துறையில் தன்னாலியன்றதைச் செய்ய ஆசைப்பட்டு, 'தெறிகள்' என்ற இதழை ஆரம்பித்தார். முதலில் விருதுநகரிலிருந்து வெளிவந்த இந்தச் சிறு பத்திரிகை பின்னர் நாகர்கோவிலிலிருந்து பிரசுரமாயிற்று.

‘கசடதபற’ மாதிரி தோற்றம் கொண்டிருந்த 'தெறிகள்' கவிதை, சிறுகதை, இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஓவியங்களிலும் அது அக்கறை காட்டியது. அட்டையில் 'மாடர்ன் ஆர்ட்' சித்திரங்கள் அச்சாயின.

‘பொதுவாக, சிறு பத்திரிகைகளில் அச்சாகி வந்த 'மாடர்ன் ஆர்ட்' ஓவியங்கள் எதைக் குறிக்கின்றன, என்ன அழகுகளை, நயங்களை அல்லது உண்மைகளை அவை சித்திரிக்கின்றன என்று விளங்கிக்கொள்ள இயலாதுதான். படங்கள் ( ஓவியம் ) என்று பெயருக்கு அவை இடம் பெறுகின்றன என்றே கூறலாம்.

இதுபற்றி 'தெறிகள்' பொருத்தமான மேற்கோள் ஒன்றை வெளியிட்டுள்ளது :

“ஓவியங்களை விளக்குவது முழுதும் நிறைவேறக்கூடியதிலை. இது கூடாது என்பேன். ஓவியத்தை விமர்சிப்பதே வேண்டாம். எவ்வளவு தேர்ந்த விமர்சனமும் அவ் ஓவியத்தை முழுதும் சொல்லிவிடக் கூடியதில்லை. இது சாத்தியமுமில்லை.”

உமாபதி தனக்கெனத் தனித்ததொரு போக்கு வகுத்துக் கொண்டி ருந்தார் என்று தோன்றியது. 'தெறிகள்' இதழ் ஒன்றில் அவர் குறித்திருப்பது இது-

"உனது இலக்கியக் கொள்கை என்ன? அல்லது இதெல்லாம் எதற்கு என்பன போன்ற கேள்விகளையெல்லாம் சந்திக்கிறபோது மௌனமாகவோ அல்லது அந்த க்ஷணத்தில் தோன்றியது மாதிரி ஏதேனும் சொல்லி உள்ளூர வருந்தியோ ஒதுங்கியிருக்கிறேன். இதற் கெல்லாம் பதிலை ஒரு Theory ஆக evalute பண்ண முடியாது என்றே எண்ணுகிறேன். இன்று சிலாகிக்கப்படுகிற இலக்கியக் கொள்கைகளில் பல, இன்னுமொரு நாள் பரிதாபகரமாக வீழ்ச்சியடைந்து போகிற வளர்ச்சி இருக்குமென நம்புகிறேன்.”

ஐந்து இதழ்கள் சாதாரணமாக வந்தபிறகு, பத்திரிகையின் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் காட்ட விரும்பினார் உமாபதி. இது 'தெறிகள்' புதிய பரிணாமத்தில் புலனாயிற்று.

‘காலாண்டு இதழ்-1' என்று குறிக்கப் பெற்றுள்ள இதழ் எந்த வருஷம் எந்த மாதம் தயாராயிற்று எனத் தேதியிடப் பெறவில்லை. இது ஒரு சிறப்பு மலர் போலவே அமைந்துள்ளது.

“தெறிகளின் பரிணாம வளர்ச்சியில் இந்த இதழ் ஒரு முக்கியமான Phase ன் துவக்கம். கடந்த ஐந்து இதழ்களில் 'தெறிகள்' என்ன சாதித்திருக்கிறது என்று புள்ளி விவரம் எடுத்துப் பார்ப்பது எப்படி உபயோகமில்லாத விஷயமோ அதேபோல் புதிய ‘தெறிகள்' என்ன சாதிக்க இருக்கிறது என்று பட்டியல் தருவதும்.

இதெல்லாம் முக்கியமல்ல.

தமிழில் நவீன இலக்கியம் வளர்ச்சியின்றித் தேங்கிப் போய்விட்டது என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம். இது எந்த மொழியிலும் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி நிகழ்தலே வளர்ச்சியின் அடையாளம்.

தமிழில் சிறு பத்திரிகைகள் கணிசமான அளவிற்குத் தோன்றிவிட்டன, 'தெறிகள்' ஈறாக இவைகள் declare செய்கிற அல்ல-தருகிற விஷயங்களை வைத்தே வளர்ச்சியின் தன்மை உருவாகும். யாரும் அவசரம் கொள்ள வேண்டாம். உள்ளேயும் வந்தாகிவிட்டது. திரைகளும் தூக்கப்பட்டுவிட்டன. இனி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதே முறை. காட்சி மாற்றங்களின்போது பேசிக் கொள்வோம்.”

இப்படி உமாபதி அறிவித்திருந்தார்.

90 பக்கங்கள் (அட்டை தனி ) கொண்ட இந்த இதழில் சம்பத் எழுதிய 'இடைவெளி' (குறுநாவல்) 42 பக்கங்களும், கலாப்ரியாவின் ‘சுயம்வரம்' (குறுங்காவியம்) 28 பக்கங்களும் வந்துள்ளன. இவை இரண்டுமே சோதனை ரீதியான படைப்பு முயற்சிகளாகும்.

சம்பத்தின் நாவல் 'சாவு' என்கிற பிரச்னையை மையமாகக் கொண்டது. அறிவுஜீவி ஒருவன் சாவின் உண்மைத் தன்மையைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முயல்கிறான். அவனுடைய எண்ண ஓட்டங்கள், மனக் குழப்பங்கள், அவனைப் பற்றி மற்றவர்கள் கொள்ளும் அபிப்பிராயங்கள், சாவு பற்றி பலரக மனிதர்களின் கருத்துக்களை அறிய அவன் செய்யும் முயற்சிகள், 'சாவு'டன் சம்பாஷிப்பதாகக் கூறும் அவனுடைய பேச்சுக்கள். அவன் கொள்கிற முடிவு இவற்றையெல்லாம் இந்த நாவல் சித்திரிக்கிறது. நல்ல படைப்பு.

கலாப்ரியாவின் 'சுயம்வரம்' தனிரகமானது. “ஒரு கவிதையோட பொருளுக்குப் பரிமாணம் இருப்பதாய் உணர்கிறேன். இதைத் தடவிப் பார்க்கிற பரிமாணமெனச் சொல்லவில்லை. அனுபவபூர்வமான வெளிப்பாடு இந்த பரிமாணத்தின் மூலம் வியாபிக்கும். பரிமாணப் பிரக்ஞை ஒரு சுவாரஸ்யமான விஷயம். . (இந்தத் தொகுப்பில் நான் முழுக்க முழுக்க பரிமாணப் பிரக்ஞையோடு சோதனை செய்திருக்கிறதாய் நம்புகிறேன்). இந்தக் கவிதைகள் முழுக்க என் பரிமானப் பிரக்ஞையைப் பாதித்த விஷயங்கள். இவைகள் கவனிக்கப்பட வேண்டுமென்ற ஆர்வம்கூட சாதாரண ஆர்வமாய்த் தோணல. இவைகளுக்கு விளைவு இருக்க வேண்டுமென்று வெட்கமில்லாமல் விரும்புகிறேன்” என்று கலாப்ரியா கூறியிருக்கிறார்.

("சுயம்வரம் கவிதைகள் வெளிவந்து பல வருடங்கள் ஆகியும், அவை கவனிக்கப்படவேயில்லையே. சரியானபடி கவனிப்பைப் பெற வில்லை” என்று கலாப்ரியா மனக்குறையோடு என்னிடம் 1982-ல் குறிப்பிடடது நினைவில் நிற்கிறது.)

இந்த இதழில் அச்சாகியுள்ள ஓவியங்களை வரைந்த ஏ. நாகராஜன் பற்றி 'கலைஞனின் குழப்பங்கள்' என்று வண்ணநிலவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

'வானம்பாடி’ குழுவினர் பிரசுரித்த வெளிச்சங்கள் கவிதைத் தொகுப்பு பற்றிய வெங்கட்சாமிநாதன் விமர்சனம் (2 பக்கங்கள்) ஒன்றும் வந்துள்ளது.

மற்றும், நாரனோ ஜெயராமன், ஷண்முக சுப்பையா, காஸ்யபன், உமாபதி எழுதிய கவிதைகளும் உண்டு.

இந்த இதழ் கிடைத்த மூன்றாம் மாதத்தில், 'அடுத்த இதழ் இன்னின்ன விஷயங்கள்' தாங்கி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரவில்லை.

முதலாவது காலாண்டு இதழின் தரத்தோடு, மேலும் சில இதழ்கள் சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டு 'தெறிகள்' வந்திருக்குமானால், அது அரிய சாதனைகள் செய்திருக்கக் கூடும்; நவீன தமிழ் இலக்கியம் 'தெறிகள்' மூலம் சிறிது பசுமை ஏற்றிருக்கவும் கூடும்.