தமிழில் சிறு பத்திரிகைகள்/தீவிரவாதப்‌ பத்திரிகைகள்‌

43. தீவிரவாதப் பத்திரிகைகள்


ருக்கு நல்லது சொல்வேன்—உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்ற நோக்குடன், சமூகம், அரசியல், கலை. இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் கவனம் செலுத்தி, நிஜ நடப்புகளையும், தீவிரமான கருத்துக்களையும், சூடான சிந்தனைகளையும், காரசாரமான விமர்சனங்களையும் எடுத்துச் சொல்வதற்கென்றே சில சிறு பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவை எந்த அரசியல் கட்சி சார்பையும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் கட்சிகளின் போக்குகளையும் விமர்சிக்கின்றன. வணிகப் பத்திரிகைகள், பெயர் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலையுலகப் பிரமுகர்களின் உண்மைத் தன்மைகளை அம்பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. சமூகத்தில் காணப்படுகிற சிறுமைகளையும் சீரழிவுகளையும் பிற்போக்குத்தனங்களையும் சாடுகின்றன. முற்போக்கான கதைகள், கவிதைகள், கட்டுரைகளையும் பிரசுரிக்கின்றன. அவ்வப்போது பிரபலஸ்தர்களைப் பேட்டி கண்டு, தங்கள் நோக்கில் கேள்விகள் கேட்டு, அவர் களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றன.

‘மன ஓசை‘ என்ற மாத இதழ் இவ்வகையைச் சேர்ந்தது. இது இதர பத்திரிகைகளில் வருகிறவற்றைவிட வித்தியாசமான கதைகளையும், உணர்ச்சிகரமான—எழுச்சியூட்டக்கூடிய— கவிதைகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது. கவிஞர்கள், கலைஞர்கள் பற்றிய சூடான விமர்சனங்களை வெளியிட்டிருக்கிறது. இதன் சினிமா விமர்சனங்களும் விறு விறுப்பாகவும் கடுமையாகவும் அமைந்து காணப்படுவது வழக்கம்.

இந்தப் பத்திரிகையின் கேள்வி—பதில் பகுதியும் வேகம் நிறைந்ததுதான். ஒரு உதாரணம்

கே : வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது தானே?

ப. இதைப் பணக்காரர்களுக்குச் சொல்லும். அவர்களுடைய உடம்புக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. ஏற்கெனவே உண்ணாமல்தான் ஏழைகள் தூங்கி எழுகிறார்கள். அவர்களிடம் போய் இதைச் சொன்னீரானால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வீர். அவர்கள் பட்டினி கிடக்காமல் இருக்க ஏதாவது வழி தெரிந்தால் சொல்லும் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இரும்.

வேறொரு கேள்விக்கு உரிய பதில் எழுத்துலகத்தின் உண்மையை அம்பலமாக்குகிறது : மக்கள் பக்கம் நின்று எழுத முடியாதவர்கள் எல்லாம் இன்று வளவள என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களிடம் நிறையப் பணம் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு புத்தகங்களின் தரத்தை வளர்க்க முடியாது. புத்தகங்களின் எண்ணிக்கையைத்தான் கூட்ட முடியும்.

இலக்கியப் பணி, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்டு, 1976 முதல் வெளிவருகிறது 'மன ஓசை',

கருத்துக்களைத் தீவிரமாக வெளியிடும் மற்றொரு மாத இதழ் 'தேன்.மழை'. இது மாணவர் இயக்கப் பத்திரிகை. கல்லூரி மாணவர்களே இதன் ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், ஆசிரியர் குழுவினராகச் செயல்புரிகிறார்கள். சில வருடங்களுக்கு ஒருமுறை இப் பொறுப்பினர்களில் மாறுதல் ஏற்பட்டுப் புதியவர்கள் பணியாற்றுவதில் ஈடுபடுகிறார்கள்.

மாணவர் பிரச்னைகள், உரிமைப் போராட்டங்கள், கல்லூரிகளில் நிகழும் தில்லுமுல்லுகள்—ஊழல்கள், கல்வித் துறையில் காணப்படுகிற குறைபாடுகள் பற்றிய கட்டுரைகள் வேகத்துடன் எழுதப்படுகின்றன. நாட்டில், வாழ்க்கையில் நிகழ்கிற சகல ஊழல்களையும், சீரழிவுகளையும் தீவிரத் தன்மையோடு சுட்டிக் காட்டுகிறது 'தேன்.மழை'. பெரிய பத்திரிகைகளில் வருகிற செய்திகளின் பின்னே மறைந்து கிடக்கும் மறுபக்க உண்மைகளையும், அரசியலில் ஆட்சியின் மற்றும் பல்வேறு கட்சிகளின் இயல்புகளையும் உணர்ச்சிகரமான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இதில் பிரசுரம் பெறுகின்றன. மாணவர்கள் எழுதும் முற்போக்கு உணர்வு கொண்ட கதைகள், கவிதைகளும் இடம் பெறுகின்றன.

தீவிரமான எண்ணங்களை எடுத்துக் கூறும் பத்திரிகைகளில் ‘சுட்டி' யும் சேர்கிறது. கையகல அளவில் வரும் சிறு பத்திரிகை இது. மாதம்தோறும் முதல் தேதியன்று தவறாது வெளிவரும் சுட்டி பல வருடங்களாகப் பிரசுரமாகிறது.

வணிகப் பத்திரிகைகள் பலவற்றினது உண்மைத் தன்மையையும் 'மசாலாப் பத்திரிகைகள்' என்ற தலைப்பில் சுட்டி வெளியிட்டு வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தது. அதேபோல் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதியது. சினிமா உலகப் பிரமுகர்கள் பற்றி கட்டுரைத் தொடர்கள் இதில் வெளிவந்துள்ளன. சமூக, அரசியல் துறைகளில் மலிந்துவிட்ட ஊழல்கள், குறைபாடுகள் பற்றிச் சிறு சிறு கட்டுரைகளும் தகவல்களும் வருகின்றன. கிண்டலும், பரிகாசமும் கலந்த கவிதைகள், குறிப்புகள் சுட்டியில் அதிகம் காணப்படும். வீட்டு வைத்தியம், மனித உடல் உறுப்புகள் பற்றிய மேலோட்டமான கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

வரவர 'சுட்டி' துணுக்குகள்—பிற பத்திரிகைகளிலிருந்து 'நன்றி' யுடன் எடுத்துப் பிரசுரிக்கும் புதுமையான, ரசமான, சூடான, சுவையான தகவல்கள் முதலியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிகி றது. சாதாரணமான கதைகளும் சுட்டியில் வெளிவரும்.

ஆரம்ப காலத்தில் 'சுட்டி' யின் துணிச்சலான போக்கினால் தாக்கம் பெற்ற இளைஞர்கள், தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில், சுட்டி மாதிரி பத்திரிகைகள் தொடங்குவதில் முனைப்புக் கொண்டார்கள். அம்முயற்சிகள் பலவும் ஒரு சில இதழ்களோடு முடிந்து போயின.

‘மன ஓசை' மாதிரி புதிய கலாசாரம் என்றொரு தீவிர ஏடு வந்து கொண்டிருக்கிறது. இதன் தீவிரப் போக்கு இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது பற்றி ஈடுபாட்டுடன் பேசி மகிழ்கிறார்கள்.

இன்றைய நிலைமைகளில் அதிருப்தி கொண்ட இளைஞர்கள் புதுமை வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்துக்கும் வாழ்க்கை நலனுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயலாற்றுவதில் ஈடுபடுகிறார்கள். ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கருத்து அரங்குகள் நடத்திக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதோடு தங்கள் எண்ணங்களை வெளியிடுவதற்காக ஒரு பத்திரிகையும் நடத்துகிறார்கள்.

இவ்வகையான சிற்றேடுகள் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தோன்றி வெளிவந்திருக்கின்றன.

கோயம்புத்துரில் 'இலக்கிய இயக்கம்' இப்படிச் செயல் புரிந்த அமைப்புகளில் ஒன்று. அது 'துளிகள்' என்ற பத்திரிகையை 1981—ல் ஆரம்பித்துச் சில வருடங்கள் நடத்தியது.

‘சமுதாய மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு பொதுமை நலக் கோட்பாட்டில் மக்களை ஒன்றுபடுத்துதல், நாட்டுப்புற மேம்பாட்டை மையமாகக் கொண்டு புதிய, எளிய, இலக்கிய வடிவங்களை மக்களுக்குத் தருதல், சிற்றூர் மக்களை அறவே எட்டாத மொழிக் கலவையை விலக்கி எளிய இலக்கிய வழியாக்கல்—இவற்றை நோக்கமாகக் கொண்டு இலக்கிய இயக்கம் பணிபுரிந்தது.

பயனுள்ள சிந்தனைகளைத் தூண்டும் நல்ல எழுத்துக்களோடு ‘துளிகள்‘ வெளிவந்தது. அதன் அமைப்பும் நன்றாக இருந்தது.

கோவை நகரில் இலக்கிய, சமுதாய இளைஞர் அமைப்பான இளைய கரங்கள், ‘இளையகரங்கள்‘ என்ற பத்திரிகையை நல்ல முறையில் சில காலம் பிரசுரித்தது.

‘தனக்குத் தானே அன்னியமாகிப் போய் தனக்கென ஓர் உலகைத் தேடி வெறுமையில் வாடும் இளைய நெஞ்சங்களே !

உங்கள் சோகங்களைப் பகிர்ந்து நம்பிக்கையுடனும் நல்ல நட்புடனும் புதுவுலகில் சஞ்சரிக்க இதோ ஓர் இதழ்! தோள் கொடுக்க வாருங்கள், தோழர்களாய்ச் சேருங்கள்.

உங்கள் உலகம் உங்களை வரவேற்கிறது !‘ என்று இளைஞர்களை ஒன்று சேர்க்க இது முயன்றது.

வழக்கமான பல அம்சங்களோடு, சமுதாயவியல், சட்டவியல், மருத்துவம் போன்றவைகளிலும் இளையகரங்கள் கட்டுரைகள் பிரசுரித்தது. இயக்கச் செய்திகளையும் வெளியிட்டு வந்தது.

கடலூர் ‘இலக்கியச் சிந்தனை‘ என்ற இளைஞர்கள் அமைப்பு ‘கோடுகள்‘ எனும் இதழை 1983-ல் வெளியிட்டது. ஆரம்ப எழுத்தாளர்களின் ஆர்வ முயற்சியாகவே இது அமைந்திருந்தது.

மதுரை மாவட்டம், த. ஆண்டிப்பட்டி, இளைஞர் மற்றும் சமுதாய வளர்ச்சி நிறுவனம் ‘விழி‘ என்ற இதழை வெளியிடுகிறது. சமூக சிந்தனை தழுவிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறது ‘விழி‘.

‘விழித்தலும் விழிக்க வைத்தலுமே எங்கள் விதிமுறைகள். இது இளைஞர்களுக்குள்ளிருக்கின்ற சக்திகளை வெளிப்படுத்த தட்டுகின்ற முரசு. இந்த எழுத்துக்களால் இரவு விடியாமல் இருக்கலாம். ஆனால் தூங்குகிறவர்கள் விழித்தாக வேண்டும். மக்களைச் சுரண்டல் வலையிலிருந்தும் மூடப் பழக்கங்களிலிருந்தும், ஏமாற்றுவோர் கையிலிருந்தும் வெளிப்படுத்தும் வழிகளை எழுதுங்கள் என்று விழி அறிவிக்கிறது.

இளைஞர் இயக்கச் செயல்கள், இளைஞர் கொள்கைகள் போன்றவற்றையும் பிரசுரிக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், ஈக்காடு என்ற இடத்தில் சமூகநலப்பணி புரிகிற ‘ஐகோடெப்‘ வழிகாட்டி என்ற இதழை வெளியிட்டு வருகிறது. சிறிது காலம் இது டைப் செய்யப்பட்டு ரோனியோ இயந்திரம் மூலம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு, பத்திரிகையாக வந்துகொண்டிருந்தது. பின்னர் அச்சுப் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றள்ளது.

கிராமப்புறச் சீர்திருத்தம், கிராம மக்களின் நலனுக்கான சிறு தொழில்களின் வளர்ச்சி, குழந்தை நலம், சமூகப் பணிகள் முதலியவற்றில் வழிகாட்டி அக்கறை காட்டுகிறது. கவிதைகள், கதைகளையும் பிரசுரிக்கிறது.

சென்னை, செந்தூரம் இலக்கிய வட்டம், ‘செந்தூரம்‘ என்ற இதழைக் கொண்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் கையெழுத்துப் பத்திரிகையாக வளர்ந்த செந்தூரம் 1984 ஏப்ரல் முதல் அச்சுப் பத்திரிகையாகப் பிரசுரம் பெறுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் : கே. ஜகதீஷ்,

‘வாழ்ந்து கெட்டவர்களின் வரலாறுகளும், வாழத் துடிப்போரின் எழுச்சிகளும், வாழ்க்கைக்கு விஷம் கலக்கும் மனிதர்களின் தோலுரிப்பும் இந்த இந்த இதழில் சங்கமிக்கின்றன.

பல பெரிய பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கவர்ச்சியான மசாலாத்தனங்கள், ஆப்செட் உதவியுடன் ஊரெங்கும் விநியோகம் செய்கையில், இது போன்ற சிறு பத்திரிகைகள் மலர்வதும் வளர்வதும் ஒரு வேதனை நிறைந்த போராட்டம்தான். என்ன செய்வது? போராட்டம் இல்லாமல் வாழ்வே இல்லையே!

நம்பிக்கையுடன்தான் நாங்கள் எழுதத் துவங்கியிருக்கிறோம். மக்கள் கலாச்சாரம் மலரச் செய்யும் மகத்தான நோக்கோடு, இலட்சியத் கனல்களால் எங்கள் எழுத்துக்கள் எழுகின்றன. நாளைய இலக்கியப் பாதைக்கு இன்று ஒரு புதிய அஸ்திவாரம் போடுகிறோம்.

நிகழ்காலப் பிரச்னைகளை மறந்த கற்பனைகள் எங்களுக்கு வேண்டியதில்லை. ஒரு புதிய உலகைப் படைக்கும் உத்வேகமுள்ள கருத்துக்களே எங்களுக்குத் தேவை.‘

இப்படி ‘செந்தூரம்‘ முதலாவது இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம் யாருக்காக, இலக்கியமும் வாழ்க்கையும் என்பன போன்ற சிந்தனைக் கட்டுரைகள், கவிஞர் மாயகோவஸ்கி, தந்தை பெரியார், சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் பற்றிய குறிப்புகள்; கார்ல் மார்க்ஸ், மாவோ சிந்தனைகள், கதைகள், கவிதைகளும் செந்தூரம் இதழ்களில் வந்துள்ளன. தரமான திரைப்படம், நல்ல சினிமா இயக்குநர் பற்றியும் கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. கவிஞர் எஸ். அறிவு மணி, கவிஞர் இன்குலாப் பேட்டிகளையும் செந்தூரம் வெளியிட்டுள்ளது.

முற்போக்கு இலக்கிய இதழ்களில், திருப்பூரிலிருந்து 1979-80களில் வெளிவந்த ‘விழிப்பு‘ என்ற பத்திரிகை குறிப்பிடப்படவேண்டியது ஆகும். மு. நடராஜன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவுமிருந்து நடத்திய இப் பத்திரிகையில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் பலரும் எழுதி வந்தனர். வறுமையையும், வாழ்வின் வெறுமையையும், போராட்ட நிகழ்ச்சிகளையும் காட்டும் நிழற்படங்கள் அட்டைச் சித்திரமாக அமைந்து, இப்பத்திரிகைக்கு ஒரு தனித் தோற்றம் தந்தன. கடைசிக் கட்டத்தில் இது யுகவிழிப்பு என்ற பெயரைத் தாங்கி வந்தது.