தமிழில் சிறு பத்திரிகைகள்/பரிமாணம்

42. பரிமாணம்


தமிழ்நாட்டில் 'மார்க்சிஸ்டுகள்' என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கு மார்க்ஸிசம் சரியாகவே தெரியாது; மார்க்ஸிய தத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று குறை கூறுகிற சிந்தனையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

மார்க்ஸிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு சோவியத் ரஷ்யாவை முழுமையாக ஆதரிக்கிற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களும், சோவியத் ரஷ்யாவின் போக்கை விமர்சித்தும் குறைகூறியும் சீனாவின் போக்கை ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினரும், உண்மையில் சரியான மார்க்ஸிஸ்டுகள் அல்லர் என்பது இந்த அறிவாளிகளின் அபிப்பிராயம் ஆகும்.

இவர்கள் மார்க்லியத் தேடலில் தொடர்ந்து ஈடுபடுகிறவர்கள். இவர்கள் 'New Lefts' என்று அறியப்படுகிறார்கள். இந்தவிதச் சிந்தனையாளர்களின் கட்டுரைகளும்— இவர்களது சிந்தனை வளர்ச்சிக்குத் துணைபுரிகிற அமெரிக்க, ஐரோப்பிய சிந்தனையாளர்களின் கட்டுரைகளது மொழிபெயர்ப்புகளும்— படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன. இந்த ரீதியான சிந்தனைகள், இலக்கிய விமர்சனங்களுக்கென்றே தனிப் பத்திரிகைகள் நடப்பதும் உண்டு.

கோயம்புத்தூரில் தோன்றிய 'பரிமாணம்' அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை ஆகும்.

“கலை இலக்கியத் துறையில் மார்க்ஸியம் ஆற்றல் மிக்க கோட்பாடாக இடம் பெற்றுள்ளது. கலை இலக்கியப் படைப்புகளின் வரலாற்றுப் பின்னணியை விளக்குவதில் மார்க்லியத்தின் சாதனை வியப்புக்குரியதாகி இருக்கிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் கலை இலக்கியத்தின் பணியைச் சுட்டுவதில் மார்க்ஸியம் சரியான திசை வழியைக் காட்டுகிறது.

கலை இலக்கியவாதிகளின் ஆளுமைக்குள் வரலாறும் சமூகமும் இயங்குவதை மார்க்லியம் எடுத்து விளக்கும்போது, அத்தகைய தன்னறிவு பெற்ற படைப்பாளிக்குள் விசுவரூப தரிசனம் வாய்க்கிறது. இந்த தரிசனம்— இந்த விரிந்த பார்வை— அற்புதங்களைச் சாதிக்கிறது.

ஆற்றலையும் கலையழகையும் இயல்பாகத் தனக்குள் தாங்கிய மனிதன், வரலாற்றுக் களத்தில் வித்தாகிறான். மார்க்ஸிய நோக்கில் இலக்கியவாதியின் விளைவு இத்தகையது.

அப்படியானால், மார்க்ஸியம் கலை இலக்கியப் பிரச்னைகளை முற்றாகக் கண்டதா, தீர்த்ததா என்பது கேள்வி.

மார்க்ஸியம் சந்தித்த பிரச்னைகளிலும் தீர்க்கப்படாதவை பல. தமிழகச் சூழலில் இது மேலும் உண்மை. தமிழகத்தின் கலை இலக்கியப் பிரச்னைகளைக் கண்டறிதலிலும் அவற்றைத் தீர்ப்பதிலும் மார்க்ஸியவாதிகளுக்கு மிக முக்கிய கடமை உண்டு.”

இந்தப் பார்வையோடு பரிமாணம் செயல் புரிந்தது. தாமரை, செம்மலர் ஆகிய முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் வந்த கதைகளையும், முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளின் நாவல்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. தமிழ் இலக்கியத்தில் மார்க்ஸியர்களின் பார்வை, சாதனைகள் பற்றிய இலக்கியத் தேடலில் அது ஈடுபட்டது.

கவிதை மொழிபெயர்ப்புகள், சமூகவியல், அறிவியல், தத்துவக் கட்டுரைகளின் தமிழாக்கம், சுயசிந்தனைக் கட்டுரைகள், விவாதங்கள் முதலியவற்றை பரிமாணம் பிரசுரித்து வந்தது.

குணா, தமிழவன், கதிரவன், நாகராஜன், ஞானி முதலியவர்கள் இதில் எழுதினார்கள்.