தமிழில் சிறு பத்திரிகைகள்/படிகள்‌

41. படிகள்


சிறு பத்திரிகை என்பது இன்று தனக்கானதொரு தத்துவத்தையும் இலக்கணத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான சாதாரண வாசகப் பெருமக்களினின்றும் வேறுபட்டிருப்பது மட்டுமேயன்றி பல இடர்ப்பாடுகளுக்கிடையிலும் தங்களுக்கான மதிப்புகளைத் (Values) தேடுவதிலும் தமிழர்களில் ஒரு சிலரேனும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதை சிறு பத்திரிகைகள் ஓர் இயக்கமாக இயங்குவதிலிருந்து தெரிந்து கொள்ள முடித்றது. இது தமிழுக்கு மட்டுமே உரிய நிகழ்வு என்பதால் தமிழின் மொத்த வரலாற்றை, அதன் கலாச்சார, சிந்தனா வடிவ அமைவுகளை மீண்டும் ஆய நம்மைத் தூண்டுகிறது. நம் தமிழ்க் கலாச்சார உருவாக்கத் தொடர்ச்சிக்குள்ளேயே இன்று மலைபோல் குவியும் ஜனரஞ்சகத்தனமான, ஆழமற்ற, தேடலற்ற எழுத்துக்கான கூறுகளின் குணாம்சங்கள் அடங்கியுள்ளனவோ என்று ஆய வேண்டியுள்ளது. நாடகங்கள் என்ற பெயரில் தோன்றும் வார்த்தைக் குப்பைகளும், திரைப் படங்கள் என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களும் வெறும் ரசனையற்ற தன்மை மட்டுமே அல்ல என்று நம்ப வேண்டியுள்ளது. ஓவியம் என்பது ஓர் தொடர்ந்த கலாரூபமாய் நமக்கு எட்டவில்லை. தமிழ்த் துறைகளில் ஆராய்ச்சிகள் நடக்கும் விதம், தன்மை, நாம் மேற் சொன்னதினின்றும் மாறுபடுவதில்லை. அரசியல் அல்லது இலக்கியச் சொற்பொழிவுகளில் வார்த்தைகளின் சப்தத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வார்த்தைகளின் இன்னொரு அம்சமான அர்த்தத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடும் முறை—பிறமொழிப் பத்திரிகைகளுடன் ஒப்பிடும்போது, வேதனையே தருகிறது.

“இந்த நோய்க் கூறுகளை ஏதோ ஒருவகையில் சிறு பத்திரிகைகள் புரிந்து கொண்டுள்ளன. ஆனால் தீர்வுகள்தான் ஒவ்வொரு பத்திரிகையிலும் மாறுபடுகின்றன. இப்பிரச்னைகளைச் சந்திக்கும் போதெல்லாம் பேசுகின்ற, சிந்திக்கின்ற, அலசுகின்ற ஒரு சிலரின் செயல்பாட்டு வடிவமே படிகளின் வெளிப்பாடு.

படிகள், பத்தோடு பதினொன்றாக வெளி வருகின்ற பத்திரிகை அல்ல. சில அடிப்படைகளைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் இந்தத் தமிழ்ச் சூழலில் நடந்து கொள்ளும் ஜீவித முறையின் இயல்பான செயல் வடிவ எழுத்து ரூபமே படிகள். எனவே படிகள் எதிர்நோக்க வேண்டிய இடர்களை, இடைஞ்சல்களை முன் யோசனையுடன் சந்திக்கும் திராணியுடன் தான் வெளிவருகிறது.”

இப்படி அறிவித்துக் கொண்டு, 1978 டிசம்பரில், பெங்களூரில் தோன்றியது படிகள்.

ஆழமான சிந்தனைகளை மேற்கொள்ள முன்வந்த காலாண்டு ஏடு ஆன, படிகள் தனக்கெனத் தனித் திட்டம் வகுத்திருந்தது : 1. தமிழின் மொழியியல் விஞ்ஞான அறிவைக் கல்வி நிலையச் சூழ்நிலையிலிருந்து விடுபட வைத்து, அக்கறை கொள்ளும் வாசகர்கள் முன் வைப்பது தேவை. இவ்விஷயத்தில் ஏதாவது செய்ய முடியுமா என்ற சாத்தியப்பாடுகளைத் தேடல்.

2. தமிழ்ப் பாடநூல்களாக மாணவர்கள் மீது திணிக்கப்படும் நூல்கள் மொழி அறிவையோ இலக்கிய அறிவையோ உண்மையில் ஊட்ட வல்லன அல்ல. இப்பாடநூல் தேர்வும் நம் கலாச்சாரச் சீரழிவின் ஒரு குறையீடு. ஆகையால், பாடநூல்களைப் பற்றிய ஆய்வை வெளியிடுதல்முடிந்தால், பிற பல்கலைக்கழக நூல்களுடன் ஒப்பிடும் கட்டுரைகளையும், கல்வி அமைப்பின் குறைகளைப் பாடநூல்களுடன் ஆயும் கட்டுரைகளையும் பிரசுரிப்பது.

3. ஓர் மொழி வளர்வது, வெறும் சொற்கூட்டத்தின் அதிகரிப்பால் மட்டும் அல்ல; சிந்தனையின் அதிகரிப்பாலும் ஆகும். சிந்தனையால் மொழியும், மொழியால் சிந்தனையும் விருத்தி அடைகின்றன என்ற இயக்கவியல் பார்வை கொண்ட படிகள், உலகின் பிற அறிவுத்துறைகளைச் சார்ந்த ஞானம் மட்டுமே நம் அறிவை விசாலமாக்க முடியும் என்று நம்பி, இந்தியச் சூழ்நிலையில் பிற மாநிலங்களில் ஏற்கனவே முக்கியத்துவம் பெற்ற மானுடவியல், சமூகவியல் போன்ற துறைகளில் கட்டுரைகள் பிரத்யேகமாய்ப் போட விரும்புகிறது.

4. தத்துவச் சிந்தனை மீது ஒளி செலுத்த விரும்புகிறது. பிற நாட்டுத் தத்துவ ஆசிரியர்கள் போக்குகள் பற்றி அறிமுகம் செய்யும். தேவைப்பட்டால் விவாதங்கள் வரவேற்றுப் பிரசுரிக்கும்.

5. சிறு பத்திரிகைகள் உதவியால் இலக்கிய உணர்வு ஓரளவு வளர்ந்திருந்தாலும், ஓவியம், சிற்பம், இசை, நாடகம், திரைப்படம் போன்றன பற்றிய சிந்தனை வளரவில்லை. இத்துறைகளிலும் கவனம் செலுத்தப் பெறவேண்டும்.

6. கலைகள், இலக்கியம் போன்ற அடிப்படைகள்—எந்த மனமட்டத்தில் தத்துவம் இங்கு நுழைகிறது, இலக்கிய இயக்கங்கள் பற்றிய அறிமுகங்கள், இலக்கியக் கோட்பாடுகள் தமிழில் இதுவரை வளர்ந்தனவா, ஏன் வளரவில்லை; இனி வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள் யாவை போன்ற அடிப்படை விஷயங்களிலும் தமிழ்ச் சிந்தனை பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு விஷயங்களையும் செய்யமுடியுமா என்ற மலைப்பு இருந்தாலும், இவ்வளவையும் செய்துவிட்டால் ஏற்படக்கூடிய தமிழ்மொழி வளம், தமிழ்ச் சூழ்நிலையின் ஆரோக்யம் போன்றவை மெய்சிலிர்க்க வைப்பதாயிருக்கும். நம் எண்ணம் வெறும் மொழி வளர்ச்சியுடன் மட்டும் சார்ந்தது அல்ல. மனித வளர்ச்சியுடன் சார்ந்தது. அந்த வளர்ச்சி அறிதலில் அடங்கியுள்ளதுபோலவே அறிதலின் உயர்ந்தபட்ச அறிதலாகிய செயல் முறையிலும் அடங்கியுள்ளது. படிகள் செயல்பாட்டிலிருந்து அகலாதிருக்கும் மனிதனையே படைக்க விரும்புகிறது என்றும் அறிவித்தது.

இன்னுமொரு முக்கிய கருத்தையும் அது வலியுறுத்தியது.

‘வாசகர்கள் கடமை முக்கியமானது. நீங்கள் முதலாளித்துவ பத்திரிகை ஏற்படுத்தி வைத்துள்ள Consumer களாகப் படிகளைப் படிக்க வேண்டியதில்லை. படிகள் தன் இயக்கத்தை ஆசிரியர் குழு—எழுத்தாளர்கள்—வாசகர்கள் என்ற மூன்று பரிமாணங்களின் இணைந்த போக்கில் தான் காண்கிறது. ஒவ்வொரு வரியையும் வாசகர்கள் விமர்சிக்க வேண்டும். அப்படித்தான் படிகளின் பங்குதாரர்களாக முடியும்.’

படிகளுக்குச் சமூகவியல், தத்துவம், தமிழிலக்கியம், மார்க்ஸியம் ஆகிய துறைகளில் ஈடுபாடுள்ள சிலர் ஆசிரியர் குழுவாய் இருந்து ஆலோசனைகளை ஆசிரியருக்கு வழங்கவும், கட்டுரை விமர்சனங்கள், படைப்புக்கள் தேர்ந்தெடுக்கவும் ஒத்துழைப்பதாய்க் கூறியுள்ளனர். இந்தப் பின்பலத்தில் நிற்பது படிகளுக்கு ஓர் பிரத்யேகத் தன்மையைக் கொடுக்கிறது என்றும் கூறிக்கொண்டது.

முதல் இதழில், ’யூரி பரபாஸ்’ என்ற சோவியத் எழுத்தாளரின் ‘எஸ்தெட்டிக்ஸ் அன்ட் பொயட்டிக்ஸ்’ என்ற புத்தகத்தை வைத்து எழுதப் பட்ட சோவியத் அழகியல் எனும் மதிப்புரை கெளதமன் எழுதியது; ஜாக் ஸ்டவ்டர் ஆங்கிலத்தில் எழுதிய ‘காலனிய—ஏகாதிபத்தியச் சூழலில் மானிடவியல்’ கட்டுரையை அஜிதா தமிழில் தந்திருந்தார். இச்சிறப்புக் கட்டுரை 18 பக்கங்கள். ’விவாதத்திற்கு’ என்று ’ஞானி’ எழுதிய ’இந்தியச் சூழலில் கலை இலக்கியவாதிகளின் கடமை’ பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி, சில கவிதைகளும் பிரசுரமாகியிருந்தன.

படிகள் சிறு பத்திரிகைகள் பற்றி அதிகம் சிந்தித்தது. சிறு பத்திரிகைகள் கூட வெறும் இலக்கியம் என்று கூறியே இன்றைய தமிழகத்தைப் பிடித்துள்ள நோயை அகற்ற முடியும் என்று நினைக்கின்றன. நாங்கள் இலக்கியமும் சமூக நோய்களும் அரசியலும்கூட ஓர் பொதுவான— முழுமையான எல்லா அறிவுத்துறைகளின் மொத்த விழிப்புணர்வால்தான் மாற்றம் பெறும், முன்னேறும் என்று நம்புகிறோம் என அழுத்தமாகக் கூறியது.

இது குறித்து மூன்றாவது இதழில் விரிவாகவே எழுதியது.

’படிகள் சிறு பத்திரிகைகளைப் பற்றித் திடமான சில கொள்கைகளைக் கொண்டுள்ளது. இக்கொள்கைகளை ஒரு மனோகரமான காலை வேளையில் உருவாக்கிக் கொள்ளவில்லை. பல நாளைய நீண்ட விவாதத்திற்குப் பிறகே உருவாக்கினோம். அவ்விஷயங்களில் சமூகவியலைச் சிறப்பாய்க் கற்கும் மாணவர்கள் சிலர் முக்கிய பங்கேற்றனர். இவர்கள் படிகளுடன் இணைந்திருப்பதுதான், படிகளுக்குப் பிற தமிழகப் பத்திரிகைகளைவிட தனியான குணத்தைக் கொடுத்துள்ளது.

சிறு பத்திரிகைகளை முதலில் இரண்டாகப் பிரிக்க வேண்டும். வெறும் இலக்கியம் பற்றிப் பேசும் கொல்லிப்பாவை, யாத்ரா, சுவடு, வைகை, சாதனா போன்றவை ஒருபுறம். விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், பிரக்ஞை போன்ற கட்சிக்குட்படாத இடதுசாரிப் பண்புடன் வரும் சிறு பத்திரிகைகள் மற்றொரு புறம் (கட்சிப் பார்வை கொண்ட பத்திரிகைகளை இங்கே விட்டுவிடுகிறோம்). வேறு சில பத்திரிகைகள் நிலைபாடு தெளிவாகவில்லை என்பதால் அவையும் இங்கே சேர்க்கப் படவில்லை.

இவ்விருவகைச் சிறு பத்திரிகைகளையும் முக்கியமானவைகளாகக் காண்கிறோம்.

வெறும் இலக்கியச் சிறு பத்திரிகைகள், பெரும் ஜனரஞ்சகத்திற்கு எப்படியும் எதிர்ப்பானவைதான். கசடதபற, எழுத்து, நடை இலக்கியப் பத்திரிகைகளின் சாதனை மறக்கக் கூடியதல்ல. ஜெயராஜ், குங்குமம், குமுதம் வகையறாக்களால், நாணயமான தமிழின் தெருக்கூத்து மரபைச் சாகக் கொடுத்துள்ளோம். அதுபோல் நகரக் கலாச்சாரங்களும் அழிகின்றன. இலக்கியப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்பவை கலாச்சாரத்தின் ஓர் அங்கமான இலக்கியத்தை மட்டும் கவனிக்கின்றன அல்லது சினிமா, நாடகம் மட்டும் கவனிக்கப்படுகிறது. இப்பத்திரிகைகள் தங்களைச் சற்று உயர்த்தி கலாச்சார இதழ்களாய் மாற்றிக் கொள்ளாதபடி அவற்றின் குறுகிய இலக்கிய அறிவும், பரந்த பார்வையின்மையும் செய்கின்றன என்றாலும்—தங்களின் அஞ்ஞானத்தையும் மீறி இந்த இலக்கியப் பத்திரிகைகள் வியாபார இலக்கியத்தையும், அவற்றின் நடைமுறைகளையும் எதிர்ப்பதால் அவற்றிடம் ஓரளவு இடதுசாரித் தன்மை உண்டு என்று நம்புகிறோம். அதே நேரத்தில் சக்திமிக்க கலாச்சார இயக்கங்களாய் இப்பத்திரிகைகள்—யாத்ரா, கொல்லிப்பாவை, சாதனா, சுவடு, வைகை போன்றன— உருவாக்கம் பெற எங்கள் விமர்சனங்களையும் தாக்குதல்களையும் அவை மீது வைக்கிறோம்.

விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளை நாங்கள் மிகுந்த மதிப்புடன் அரவணைக்கிறோம். இவை எங்களை ஒத்த, சமூக, இலக்கிய, கலாச்சாரப் பார்வையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை அரசியலிலும் தங்களுக்கான நிலைபாட்டைத் தேர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், தமிழகச் சூழலில் இன்று செயல்படும் வெறும் இலக்கியப் பத்திரிகைகூட தன் இலட்சியத்தை உண்மையில் நிறைவேற்ற, வெறும் இலக்கிய சிரத்தை மட்டும் காட்டினால் போதாது என்பதை ஒரு சித்தாந்தமாகவே முன்வைக்கத் தயாராகி உள்ளோம்.

தற்சமயம் கலாச்சார இயக்கம் அரசியலைப் புறக்கணிக்க முடியாது என்று நினைக்கிறோம். அதற்காக நேரடி அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. உங்களுக்கென்று அரசியலிலும் ஒரு பார்வை வேண்டுமென்கிறோம். சிறு பத்திரிகைகளுக்குப் பொருந்தும் இப்பார்வை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

மொத்தத்தில் இருவகைப் பத்திரிகைகளுக்கும் உள்ள பொதுப் பண்பு இப்போது முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியது. வியாபாரக் கலாச்சாரம் என்ற அரக்கிதான் நம் எல்லோரின் முதல் குறி. காரணம், தமிழில் பத்திரிகை வியாபாரம் அமெரிக்கா மாதிரி யூதாகாரமாய்ப் பெருக ஆரம்பித்துள்ளது. சிறு பத்திரிகைகளின் முதல் எதிரி ஜனரஞ்சகப் பத்திரிகைகள் என்று காணவேண்டும். அதன்பின், ஜனரஞ்சகம் என்பது பற்றிய ஆழமான ஆய்வில், பண்டிதரும் பட்டதாரிக் கும்பலும் கண்ணில் தென்படுவர். அதுபோலவே, சிறு பத்திரிகைகளுக்குள் உள்தாக்குதல் குறையும் கட்சிக் கட்டுப்பாட்டுடன் வெளிவரும் பத்திரிகைகளின் வறட்டுத்தனமும் வெளிப்படாதிருக்காது. மும்முரமான தாக்குதல், பெரும் பத்திரிகை பல்கலைக்கழகங்கள் என்று திரும்பும். சிற்றிலக்கியப் பத்திரிகைகளின் லட்சியமான இலக்கியப் பார்வையும் ஆழங் கொள்ளும்’ (படிகள்—ஜூன் 1979 ).

படிகள் சிறு பத்திரிகைகள் மீது கொண்ட அக்கறையையும், கண்ணோட்டத்தையும் அவை சம்பந்தமான கருத்துக்களின் முக்கியத்துவத்தையும் கருதியே விரிவான மேற்கோள்களை இங்கே சேர்க்க நேரிட்டது.

ஜனரஞ்சகப் பத்திரிகை உலகில் பெரும் கவனிப்புப் பெற்று, வாசகர்களின் பாராட்டுதலைப் பெரும் அளவில் சம்பாதித்த சுஜாதாவைப் பேட்டி கண்டு அந்த உரையாடலை விரிவாகப் பிரசுரித்தது படிகள் வரலாற்றில் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

‘சுஜாதா பெரும் பத்திரிகை உலகில் புகழுடன் விளங்கும், சிறு பத்திரிகைச் சூழலை நன்கு அறிந்த, நன்கு மதிக்கும் ஒரே எழுத்தாளர் என்ற முறையில் தமிழகச் சந்தையில் ( market) நடக்கும் பெரும் பத்திரிகை இலக்கிய வியாபாரத்தைச் சுட்டிக் காட்டவும், தனி நபர் லாப நோக்கம் சமூகத்தில் ஓர் அங்கமான இலக்கியத்தையும் Commodity யாக மாற்றுவதை விளக்கவும் அவரை அணுகினோம். சுஜாதா மீது தனிநபர் தாக்கு நடத்துவதால் தமிழ் இலக்கிய வியாபாரச் சூழலை அழிக்க முடியாது. வேண்டுமென்றால் ஒரு சுஜாதா எழுதாமல் இருக்கலாம், நம் வசைபாடலுக்குப் பயந்து ஆயிரம் சுஜாதாக்கள் வருகிறார்களே ! எங்கள் எண்ணம் சுஜாதாக்கள் வியாபாரப் பத்திரிகை குணத்துக்கு ஏற்பவுள்ள விதிகளுக்குத் தக உருவாகிறார்கள் என்பதே. எனவே இந்தச் சமூக நிகழ்வைச் சரியாய் விளக்குவதும், விளங்கிக் கொள்வதும் நம் கடமை. தனிநபர் பொறுப்பை நாங்கள் குறைக்கவில்லை என்பதைப் பேட்டியின் கேள்விகளில் உள்ள பண்பைக் கூர்ந்து கவனிப்பவர்கள் புரிவார்கள். இத்தகைய ஆய்வு இதுவரை பெரும் பத்திரிகை எழுத்தாளர்களைப் பயன்படுத்தி, சமூகவியல் பார்வையில், செய்யப்படவில்லை’ (படிகள்).

படிகள் ஆழ்ந்த நோக்கின் ஆதாரத்தோடும், சிந்தனை கனத்தோடும் கேள்விகள் கேட்டுள்ளது. சுஜாதா ( ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் ) மனம் திறந்து பதில்கள் சொல்லியிருக்கிறார். ஆனாலும், மேம்போக்காகவும், நமக்கு ஏன் வீண் விவகாரம் என்ற எண்ணத்தில் பல கேள்விகளுக்கு, ஆம், இது மிக அருமையான ஆப்ஸர்வேஷன் என்று ஒத்துப்பாடியும், பாராட்டியும் நழுவியிருக்கிறார் என்பதை அவருடைய பல பதில்கள் புலப்படுத்துகின்றன.

பெரும் பத்திரிகை வாசகர்கள் குறித்து சுஜாதா சொல்லியிருப்பது ரசமான விஷயம் :

‘ஒரு பெரும் பத்திரிகை வாசகன் எப்படி இருப்பான் என்று யாராவது ஆராய்ச்சி டாக்டரேட் கூட வாங்கலாம். நான் இது வரை நிறைய வாசகர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் பொதுவாகவே ஒரு Philistinism இருக்கிறது. சினிமா பார்ப்பது, கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்பது, பிக்னிக் போவது, சனிக்கிழமை டி. வி. பார்ப்பது, ஆர்கெஸ்ட்ரா, சங்கீதம் போன்ற வெறும் பொழுதுபோக்கு சமாசாரங்களுடன் கதை படிப்பதும் அவர்களுக்கு ஒரே ரகம். எனக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் மேம்போக்காக என் கதைகளைத் திகட்டத் திகட்டப் புகழ்ந்து விட்டு, ஒரு கையெழுத்திட்ட போட்டோ கேட்கும் கடிதங்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததில் தெரிந்தது— நிச்சயம் இலக்கிய பிரக்ஞை இல்லை. Association with the famous. அவ்வளவுதான். இதே கடிதத்தை அவன் ரஜினிகாந்துக்கும் எழுதுவான், கவாஸ்கருக்கும் எழுதுவான். எனவே பெரும் பத்திரிகையின் லட்சக்கணக்கான வாசகர்களில் தொண்ணுறு சதவிகிதத்திற்கு மேல் மேம்போக்கான வாசகர்கள், இலக்கியப் பிரக்ஞை இல்லாதவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி சர்க்கரை தடவித்தான் தரவேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கலாம், ஏன் பெரிய பெரிய பத்திரிகைகளில் எழுதாமலே இருந்து விடலாமே என்று. அது defeatism என் குறிக்கோள், அந்த பத்து சதவிகிதத்தை அதிகமாக்குவது. அதற்காக இந்தக் கத்தி நடப்பு செய்ய வேண்டியிருக்கிறது’ (சுஜாதா).

படிகள் இதர சிறு பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையிலேயே செயலாற்றியது. தனது நோக்கை அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் படிகளுக்கு இருந்தது.

’படிகளின் குறிக்கோள் வெறும் கலை சார்ந்த களன் அல்ல. அதாவது ஓவியம் அல்ல, சிற்பம் அல்ல, நாடகம் அல்ல, கவிதை அல்ல, திரைப்படம் அல்ல, இசை அல்ல. ஆனால் இவைகளையும் மற்றும் அரசியல், சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், சரித்திரம், விஞ்ஞானம் முதலியவற்றையும் சேர்ந்த கலாச்சாரக் களனேயாகும்... கலாச்சாரம் என்று—வெறும் கலை சார்ந்த, இலக்கியம் சார்ந்த களனை யாரும் சொல்வதில்லை. வாழ்வின் இயக்கம் பற்றிக் கவலைப்படும் அனைத்துத் துறைகளையும் தழுவி அலசுவதுதான் கலாச்சார ஆய்வின் வேலை. படிகள் தன்னால் முடிந்த எல்லாத் துறைகளையும் தொட்டு நிற்கும் ஜீவித விருக்ஷம்...தமிழின் வாழ்வு பற்றிய முழுமையே எங்கள் அக்கறை, சமூகவியலாரும் மானுடவியலாரும் சொல்லும் கலாச்சாரம் தான் எங்கள் களன் என்று படிகள் அழுத்தமாக அறிவித்து வந்தது.

தமிழ்ப் பத்திரிகைகள்—சிறு பத்திரிகைகள் கூட—அக்கறை காட்டியிராத பல கனமான விஷயங்களைத் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் படிகள் ஆர்வம் கொண்டிருந்தது.

‘சமூகவியலில் ஒரு புதிய திருப்பத்தைத் தோற்றுவித்த அமெரிக்க நாட்டின் தலைசிறந்த சமூக விஞ்ஞானி— சமூக விஞ்ஞானத்தைச் சரியான பாதையில் கொண்டு சென்றவர் என்று கீர்த்தி பெற்றவரான ரைட் மில்ஸ் பற்றி அறிமுகக் கட்டுரை (சிவராமன்).

மார்க்ஸியத்திற்கு இன்று வரை அளிக்கப்பட்டுள்ள புரிந்து கொள்ளுதலில்—லெனினிசம், டிராட்ஸ்கியிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம் போல் குவேராயிசமும் ஒன்று அது ஒரு கூர்மையான ஆழமான ஆய்வுக்குரியது என்று ஷே குவேரா பற்றி அறிமுகமும் ஆய்வும், (சேதுராமலிங்கம்).

எதற்கு எழுதுகிறோம்—ழான் பவுல் சார்த்தர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மார்க்ஸியம்—தேடல்களில் எழும் பிரச்னைகள்—ராயன் (13 பக்கங்கள்).

புதிய இலக்கியக் கோட்பாடுகளைக் கற்பித்தலில் எழும் பிரச்னைகள்.

சமூக மாற்றமும் புதிய ஆதிக்க சக்திகளின் தோற்றமும்— நூல் அறிமுகம் (பி. எஸ். ஆர். ).

சார்த். ஓர் தத்துவத் தேடலின் புதிய பரிமாணங்கள் (சாரு நிவேதிதா ).

சோழர் காலச் சமுதாயமும் அரசும்: வேளாளர்களும் பிராமணர்களும் (நூல் அறிமுகம்-பி. எஸ். ஆர். ).

இன்றைய கன்னட இலக்கிய விமர்சனம் : அன்னிய பாதிப்புகளும் சாதனைகளும் (கன்னட மூலம் : கெ. வி. நாராயணன்).

எழுத்து உடையும் காலத்தினூடே—நாகார்ஜுனன்.
க. நா. சு. வுடன் ஒர் உரையாடல்.
படிகள் வெளியிட்டுள்ள முக்கியமான கட்டுரைகள் இவை.

சிந்தனைக் கனம் நிறைந்த—படிக்கிறவர்களைச் சிந்திக்க வைக்கிறவிஷயங்கள்.

இவை தவிர ஈழம் பற்றிய பல கட்டுரைகள், தத்துவம் சம்பந்தமான சில சிந்தனைகள், விவாதங்கள், குறிப்புகளும் உண்டு.

மரபு ரீதியான எண்ணங்கள், போக்குகளிலிருந்து வெளிப்பட்ட சிந்தனைகளையும் பார்வைகளையும் கொண்ட கட்டுரைகளைத் தமிழவன் எழுதியிருக்கிறார். கதையும் கடவுளும், கலாப்ரியாவின் கவித்துவக் குயில் வன்முறையும் பாலுணர்வும் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. ஜே. ஜே. சில குறிப்புகள் என்ற புதுமையான நாவலுக்குத் தமிழவன் புதுமையான வகையில் விமர்சனமும் எழுதினார். ஸ்ட்ரக்சுரலிச விமர்சனம் என்று குறிப்பிடப்படும் அது உரையாடல் தன்மையில் எழுதப்பட்டிருந்தது.

இந்த விமர்சனத்திற்கு எதிரான குரல்களும் பின்னர் வெளிவந்தன. “எழுத்து உடையும் காலத்தினூடே என்ற தலைப்பில் பிரசுரமான நாகார் ஜூனன் உரையாடல், தமிழவனின் ஸ்ட்ரக்சுரல் விமர்சனம் குறித்தும், சுந்தர ராமசாமியின் நாவல் பற்றியும், மற்றும் இலக்கிய விமர்சனம், எழுத்து முறைகள் போக்குகள் குறித்தும் ஆழ்ந்து சர்ச்சித்துள்ளது.

பல்வேறு புதிய புத்தகங்கள் பற்றிய வேகமான விமர்சனங்களை— சூடான முறையில்—படிகள் வெளியிட்டது.

சிறுகதைகளில் படிகள் நாட்டம் கொள்ளவில்லை. என்றாலும் இரண்டு மூன்று கதைகளை அது பிரசுரித்தது. அவற்றுள் ஒன்று, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய 'ஒரு செவ்வாய் பகல் தூக்கம்' என்ற கதையின் தமிழாக்கம் ( ஆங்கில வழி தமிழாக்கம்: விசாலாக்ஷி ). இதே கதை வேறு இரண்டு சிறு பத்திரிகைகளிலும் ( வெவ்வேறு எழுத்தாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாயிற்று.

அபூர்வமாக எப்போதாவது கவிதைகளையும் படிகள் வெளியிட்டது. ஜெனகப்பிரியா, ஆத்மாநாம், விக்ரமாதித்தன் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தலித் கவிதைகளின் மொழிபெயர்ப்பும், ஈழக் கவிதைகள் சிலவும் வெளியிடப்பெற்றுள்ளன.

உள்ளும் வெளியும் என்ற பகுதியில் பல பொதுவான விஷயங்கள், பிரச்னைகள், விவகாரங்கள் பற்றியும் படிகள் விறுவிறுப்பான குறிப்புகள் தந்தது. கன்னடப் பாடப் புத்தகங்களும் நவீன ப்ரக்ஞையும், தமிழ்ப் பாடநூல்கள், புதிய நாடக இலக்கியம், சாதிப்போர்வையில் வர்க்கப்போர், ஹரிஜனங்கள் நிலை, வியாபாரக் கலாச்சாரம்—இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் காண முடியும்.

படிகள் சில தீவிரமான செயல்பாடுகளிலும் முனைந்தது. சிறு பத்திரிகைகளை ஒன்று சேர்த்து 'இலக்கு— கலாச்சார இயக்கம்' ஒன்றை நடத்த முன்வந்தது. வியாபாரக் கலாச்சாரம் பற்றிப் பேசியும் எழுதியும் எதிர்ப்பு காட்டுவதோடு நின்றுவிடாமல், செயல் முறையிலும் எதிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று இலக்கு திட்டமிட்டது.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்யப்பட்டு ஒரு 'கும்பமேளா' நடத்தப்பட்டபோது, இலக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கள் எதிர்ப்புக் குரலை வெளியிட்டார்கள்.

அது சம்பந்தமாக படிகள் எழுதிய குறிப்பு இது :

‘எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், கலாச்சாரவாதிகள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளின்போது கைகட்டி சும்மா இருக்கக் கூடாது என்று இலக்கு செயல்பாட்டில் இறங்கியது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சரி, நாசிகளின் எதிர்ப்பு இயக்கமும் சரி, அதிகமான புத்திஜீவிகளின் ஆதரவு இவ்வியக்கங்களுக்கு இருந்தது. தற்காலத் தமிழகத்தின் வாழ்வுச் சூழலில் புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் பொது அக்கறை அற்றவர்களாய் தொடர்ந்தபோது இலக்கு முதன் முதலில் இந்தப் போக்கை எதிர்த்தது, கீழ்வெண்மணியாயிருந்தாலும் சரி, நெருக்கடி நிலைமையாயிருந்தாலும் சரி, உலகத் தமிழ் மாநாட்டு ஏமாற்றுத்தனமாயிருந்தாலும் சரி, தமிழக எழுத்தாளர்கள், அறிவாளிகள் போன்றோர் மௌனம் சாதித்தே வந்திருக்கிறார்கள். இச்சூழலில் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் இலக்கு நடத்திய ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எதிர்ப்பு தமிழகத்தின் நாலு கோடித் தமிழர்களில் ஒரு சிறு கூட்டமாவது சுய உணர்வுடன் இருக்கிறது என்பதை வரும்கால சரித்திராசிரியனுக்கு விளக்கியது.

இலக்கு என்ற அமைப்பு, இலக்கியம், திரைப்படம்—நாடகம் தொடர்பாய் தமிழ்நாட்டில் என்ன நடந்தது, எத்தகைய போக்குகள் வெளிப்பட்டன என்றெல்லாம் ஆராய்வதற்காக சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தியது.

‘சிறு பத்திரிகைகள் மத்தியில் தோன்றிய ஜனரஞ்சக எதிர்ப்பு இயக்கம் தன் சமூகப் பங்கை செயல்பாட்டுத் தளத்திலும் ஆற்ற முன் வருவது சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வு. இங்கு அகவயப்பட்ட இருட் குகைகளிலிருந்து வெளிப்படுவதும், புற உலகை தைரியமாய் ஏறெடுத்துப் பார்ப்பதும் சாத்யப்படுகிறது. இலக்கு செய்ய விரும்புவது போன்ற காரியங்கள் பொறுப்புடைய எல்லோராலும் ஊக்கப்படுத்தப்படும்’ என்று படிகள் எழுதியது.

படிகள் தனது வாசகர்களிடையே ஒரு சர்வே நடத்தியது. பலருக்கும் ஒரு படிவம் அனுப்பி, கேள்விகளுக்கு உரிய பதில்களை எழுதி அனுப்பும்படி கேட்டது. வந்து சேர்ந்த படிவங்களை ஒப்பிட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆய்வு செய்யும் பி. எஸ். ஆர். எழுதிய கட்டுரை படிகளில் பிரசுரமாயிற்று.

அந்தக் கட்டுரையின் முடிவுரை இது :

“மொத்தத்தில், சிறு பத்திரிகை வாசகர்களில் அதிகமானவர்கள் 40 வயதிற்கும் குறைவான மத்தியதர வர்க்கப் பின்னணியிலிருந்து வந்துள்ள, கல்லூரிப் படிப்புள்ளவர்கள். பலவாறான சிறு பத்திரிகைகளில் எழுதியும் வரும் இவர்கள், அதிக சமூக அக்கறையும், சமூக மாற்றத்திற்கான முயற்சிக்குச் சாதகமான மனநிலையையும் உடையவர்கள். சீரிய இலக்கிய வளர்ச்சிக்கும் சிக்கலான விஷயங்களில் விவாதங்களையும் மேற்கொள்ளும் இவர்களிடமிருந்துதான் கலாச்சார மேம்பாட்டுச் சக்திகளைப் பெறமுடியும்.

படிகள் பாராட்டப்பட வேண்டிய ஒரு நோக்கைக் கொண்டிருந்தது. வணிக நோக்குப் பத்திரிகைகள். ஜனரஞ்சகம் என்று கூறிச் செயல்படுகின்றன. அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறு பத்திரிகைகளோ வாசகர்களைக் கருத்தில் கொள்ளாது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்காக உருவாக்கப்படுகின்றன. இவ்விரண்டும் சரியில்லை என்று படிகள் கருதியது.

‘ஜனரஞ்சகத்திற்கும் எலிட்டிசத்திற்கும் இடைப்பட்ட சீரிய பாதையை வளர்த்தெடுக்க வேண்டும். சரியான இப்பாதை இதுவரை வளரவில்லை. வாசகரை மறுக்கும் குழு இலக்கியத்தையும், வாசகரை மயக்கும் ஜனரஞ்சகத்தையும் ஒரு சேர விமர்சிக்க வேண்டும். ஜனரஞ்சகத்தை முற்றாய் மறுக்கவும் முடியாது. சமீபத்திய சிறு பத்திரிகைகளில் உருவாகி வரும் வாசகரை மறுக்கும் எழுத்துக்களையும் முற்றாக மறுக்க முடியாது. இரண்டையும் விமர்சித்து ஆரோக்கியமான கூறுகள் இரண்டிலிருந்தும் எடுக்கப்பட வேண்டும்'—படிகள்.