தமிழில் சிறு பத்திரிகைகள்/வைகை



22. வைகை


சிறு பத்திரிகைகளில், தரமான ஏடுகளில், 'வைகை'யும் முக்கிய இடம் பெறுகிறது.

வைகை மதுரையிலிருந்து வெளிவந்தது. அதன் முதல் இதழ் ஆகஸ்ட் 1977-ல் தோன்றியது. 1981- ல் வெளிவந்த 28-ம் இதழுக்குப் பிறகு வைகை வரவில்லை.

அதன் முதலாவது இதழில் பிரசுரமான அறிவிப்பு இது :

“வைகையின் நோக்கங்கள் பற்றி அதன் சாதனைகளை வைத்தே தீர்ப்புச் சொல்ல முடியுமென்பதால் இப்போதைக்கு மெளனமே எங்கள் பிரகடனம். ஆனாலும், இன்னொரு பத்திரிகைக்கான அவசியத்துக்கான காரணங்கள் எவையேனும் இருந்தால் அவற்றைச் சொல்லிவிடலா மல்லவா?

மொத்தத்தில் ஒரு தரச் சீரழிவுக்கு நாம் வாழுகிற காலம் சாட்சியாயிருக்கிறது. கலையிலும் இலக்கியத்திலும் தரமிருந்தாலே ஜீவிதத்திலும் தரமிருக்கும். இந்தத் தர நிர்ணயமின்மையைப் பற்றி பிரக்ஞையின்மையே நம் வாழ்க்கையின் குணம். தரம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதும், அதை உயிர்பெறச் செய்து பரவலாக்குவதும் நம் தனித் தன்மையைக் காத்து நம்மை மந்தைகளாக்காமல் காக்கும் என்ற நம்பிக்கையே வைகையின் தோற்றத்துக்கு ஆதாரமும் நியாயமும்.

'வைகை' ஒரு 'சுத்த இலக்கிய இதழ்' அல்ல. நவீன வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பரிசீலித்து ஒரு தரமுள்ள வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவதில் உடன்பாடான சக்திகளை ஒன்றுபடுத்துகிற சாதனமாகவும் விளங்கும்.

பொதுவாக நிலவுகிற நாகரிக நிலைகளைத் தீர்மானிப்பதில் நம் கல்வி ஏன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை; கொள்கைப் பற்றின்றி நம் கட்சி அரசியலில் எவ்வாறு அடிப்படை மனித மதிப்பீடுகள் கூடப் புறக்கணிக்கப்படுகின்ன; அளவிலும் அபாயத்திலும் வீங்கி வருகிற விளம்பரங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படுகிற மேடையாக 'வைகை' விளங்கும். ஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கணக்கில் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுகிற ஆண்களும் பெண்களும் தங்கள் அழகியல் ஈடுபாடுகளை அரிக்கக் கொடுத்துவிட்டு போலியான திருப்தி, தர வேட்கையின்மை, சோம்பேறித்தனம் இவற்றைச் சுவீகரித்துக் கொள்கிறார்கள். இவர்களில் தர ஆர்வமுள்ள சிலரது வளர்ச்சியையாவது சீராக்க ஒரு குவிமையமாக இருந்து ஒன்று சேர்த்துவைக்க முடிந்தால் 'வைகை' சந்தோஷப்படும்.

இதுவரை பொதுவாகத் தரப்பட்டிருக்கிற அளவில் நாங்கள் உணர்ந்திருக்கிற எங்கள் ஈடுபாடுகள் ஓரிரு இதழ்களில் தெளிவாகும்.

Original Composition Esmr வெளியிடுவதற்கு நிறையப் பத்திரிகைகள் இருக்கின்றன. என்றாலும் 'வைகை' இவற்றை அநேகமாகப் புறக்கணிக்கா. பிரசுரத்துக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் வைகைக்கு ஒரு வழிமுறை உண்டென்றாலும் மாறான கருத்துக்களும் பிரசுரமாகும்-அவற்றுக்கு விவாதத்தைத் தொடங்கி வைக்கிற அளவு ஆழமான முக்கியத்துவம் உண்டென்றால்.

எந்த தியாகமும் செய்யாமல் தற்குறிகளெல்லாம் புகழ் பெறுவதும் கெளரவிக்கப்படுவதும் இங்கு மட்டுமே நடக்க முடிந்த விபத்துக்கள். எச்சரிக்கைக் குரல்கள்-பிரக்ஞை, வைகை என- நிறைந்தால் விபத்துக்கள் குறையலாம்".

வைகையின் ஆசிரியர் ஆர். குமாரசாமி. அவரும் அவருக்குத் துணை சேர்ந்திருந்தவர்களும் சிறு பத்திரிகையான 'பிரக்ஞை'யை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள் என்பது மேலே கண்ட அறிவிப்பிலிருந்து புரியும். மேலும், அக்காலத்திய சிறு பத்திரிகைகள் பலவற்றைப் பெரிதும் பாதித்து வந்த வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் மிகுந்த ஈடுபாடும் அட்மிரேஷ' னும் கொண்டவர்கள் அவர்கள் என்பதை முதலாவது இதழே புலப்படுத்தியது.

முதல் இதழின் முதல் கட்டுரை 'முகங்கள்' ( சி. மோஹன்) வெ. சாமிநாதனுக்கு ஆதரவாக, 'கணையாழி'யின் முஸ்தபாவையும் இந்திரா பார்த்தசாரதியின் போக்கையும் எதிர்த்து எழுதப்பட்ட நீண்ட பதில் (5 பக்கங்கள்) ஆகும். அடுத்தது, 'அக்கிரகாரத்தில் கழுதை' (வெ. சா. வின் நாடகம்) பற்றிய தி. ஜானகிராமன், கந்தர ராமசாமி, சி. மோஹன் கடிதங்கள், (8 பக்கங்கள்). மூன்றாவதாக, 'அக்கிரகாரத்தில் கழுதை' பற்றி ந. முத்துசாமியின் 13 பக்கக் கட்டுரை.

'வைகை' இதழ்களில் வெ. சா. ஒரு கட்டுரைகூட எழுதவில்லை.

ஆனாலும் அவருடைய தாக்கம் வைகைக் குழுவினரை இயக்குவித்திருக்கிறது. இதை அதன் இதழ்கள் நிரூபிக்கின்றன.

முதல் இரண்டு இதழ்களில் வைகை கவிதைகள் பிரசுரித்தது. பின்னர், 'கதைகள், கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா' என்று அறிவித்து வந்தது. சிந்தனைக் கட்டுரைகள், முக்கியமாகப் புத்தக விமர்சனங்கள் வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்த தரத்துக்குக் கட்டுரைகள் வரவில்லை. ஆகவே, இதழ்கள் காலதாமதத்துடனேயே பிரசுரமாயின.

'வைகையின் தாமதத்திற்குக் கட்டுரைகள் வராததும் ஒரு காரணம். போதுமான விஷயங்கள் கிடைத்தால் இந்தத் தாமதம் தவிர்க்கப்படும்' என்றும் ஒரு இதழில் அது அறிவிப்புச் செய்தது.

'வைகை' ந. முத்துசாமியின் நீண்ட கட்டுரைகளை அதிகம் வெளியிட்டுள்ளது. தெருக்கூத்து பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். தெருக்கூத்துக்கு உதவி தேவை. நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து, கொண்டையார் தண்டலம் வரதப்ப வாத்தியாரின் தெருக்கூத்து, பொம்மலாட்டங்களும் தெருக்கூத்தும், பத்மா சுப்ரமண்யத்தின் மீனாட்சி கல்யாணம், மீனாட்சி கல்லூரியில் நாடகங்கள்-இப்படிப் பல கட்டுரைகள். எல்லாம் நீளம் நீளமானவைதான். சில 16 அல்லது 7 பக்கங்கள்கூட வந்துள்ளன. அனைத்தும் ந. முத்துசாமியின் தெருக்கூத்து பற்றிய அக்கறையையும் ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் ஈடுபாட்டையும் காட்டுகின்றன.

முத்துசாமி வேறு சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஒரு சினிமா பற்றி, சுந்தர ராமசாமி எழுதிய 'குரங்குகள்' என்ற சிறுகதை பற்றி எட்டுப் பக்க விரிவுரை. இப்படிச் சில.

சுந்தர ராமசாமியின் கருத்துக்களுக்கு வைகை முக்கியத்துவம் அளித்து வந்தது. வெ. சாமிநாதனின் 'ஓர் எதிர்ப்புக் குரல்' என்ற கட்டுரைத் தொகுப்புக்கு க. ரா. எழுதிய முன்னுரையை வைகை 8 வது இதழில் மறு பிரசுரம் செய்தது, 'வெங்கட்சாமிநாதனின் கருத்துலகம்' என்ற தலைப்பில் வண்ணதாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' என்ற கதைத் தொகுதிக்கு சு. ரா. எழுதிய முன்னுரையை 'வண்ணதாசன் கதைகள்' என்ற தலைப்புடன் பிரசுரித்தது. நாஞ்சில் நாடன் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்', காஸ்யபனின் 'அசடு' ஆகியவற்றுக்கு க. ரா. விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

சுந்தர ராமசாமியின் 'பல்லக்குத் தூக்கிகள்' கதைத் தொகுதி பற்றி சி. மோஹன் ஒரு கட்டுரை எழுதினார்.

அகிலனுக்கு, 'சித்திரப் பாவை' நாவலுக்கு, ஞானபீடம் பரிசு வழங்கப்பட்டதை வைகை கண்டித்தது. அகிலனின் எழுத்தாற்றலை வைகைக் குழுவினர் அங்கீகரிக்கவில்லை. மாயவரத்தில் நடைபெற்ற நாவல் விழாவின்போது அகிலன் பேசிய உரையைக் குறைகூறி விமர்சனக் கட்டுரை வெளியிட்டது. பின்னர், அகிலனின் ஞானபீடப் பரிசு உரை மொழி பெயர்ப்பு வெளியிட்டு, சி. மோஹன் விமர்சனம் எழுதினார்.

கல்வித் துறையில் நிகழும் சீர்கேடுகளை வைகை சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்தது. விசேஷமாக, மதுரைப் பல்கலைக்கழகம் அதன் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக அமைந்திருந்தது. பாடநூலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பின் தன்மை குறித்தும், ஒப்பியல் இலக்கியம் சம்பந்தமான ஆய்வு பற்றிய ஒரு பேராசிரியரின் நூலையும் வன்மையாகக் கண்டனம் செய்து கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஞானி அவ்வப்போது கட்டுரைகள் எழுதி, கனமான விஷயங்கள் குறித்து சிந்தனைகளை வெளிப்படுத்தினார். வெ. சாமிநாதனின் 'பாலையும் வாழையும்' கட்டுரைகளைத் தொடர்ந்து 'வாலையா? வாழையா?-தொடர்ந்து தேடல்' என ஞானி எழுதிய கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. இந்தியன் பிலாசபி பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதிய நூலுக்கு ஒரு விரிவான விமர்சனம் ( 12 பக்கங்கள் ) எழுதியிருக்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை விமர்சித்து 'மணல்மேட்டில் ஒரு அட்டை வீடு' என்ற நீண்ட கட்டுரையில் சிந்தனைகளை வளர்த்திருக்கிறார்.

சிறு பதிப்பாளர் பிரச்னைகளில் வைகை ஆர்வம் காட்டியது. 'க்ரியா' ராமகிருஷ்ணன் கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டது.

புத்தக விமர்சனக் கட்டுரைகளை அதிகம் வெளியிட 'வைகை' ஆசைப்பட்டது. ஆனாலும், அதன் எண்ணம் நிறைவேறவில்லை. இதை 5.7 இதழ்களில் வந்துள்ள அறிவிப்புகள் எடுத்துக்காட்டும்.

'வெளியாகும் புத்தகங்களுக்கு விமர்சனம் மிகவும் தேவையான ஒன்று. நல்ல முறையில் விமர்சனங்கள் வெளியிடுகிறோம். அனுப்பித் தாருங்கள். புத்தக விமர்சனங்களுக்கு மட்டும் (வெளியிடுபவைகளுக்கு மட்டும்) சன்மானம் உண்டு ( வைகை-6). & . 'வைகை-7. இந்த மாத வைகை உங்கள் கைக்கு மாதக் கடைசியில் மிகவும் சிரமப்பட்டுக் கிடைக்கக் காரணம் விஷய வறட்சியே. விமர்சனங்களுக்கு-விமர்சனங்களுக்கு மட்டுமே-முதலிடம் தரவேண்டும் என நினைத்தது வறட்சியில் கொண்டு நிறுத்திவிட்டது. சிறுகதைகள், கவிதைகள் எழுதுகிற வேகம் நமது படைப்பாளிகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதில் இல்லை. வெளியாகிற சிறுகதைகள், கவிதைகளுக்கு ஒரு உருவமும் வரைமுறையும் அமைத்துக் கொடுப்பது சிறந்த விமர்சனங்கள் மட்டுமே. ஏனோ இதை யாரும் சரியாகச் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.’

11-வது இதழ் விமர்சன இதழாக அமைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். 'சுந்தர ராமசாமியின் குரங்குகள்' என்ற ந. முத்துசாமி கட்டுரை; 'சோவியத் நாட்டில் ஒரு தமிழ் மாணவி' (வி. எஸ். கமலா எழுதிய புத்தகம் பற்றி) விமர்சனம், 'கண்டதும் கேட்டதும்'- ஒரு சுய விமரிசனம். ஜி. நாகராஜன் அவருடைய கதைத் தொகுப்பு பற்றி அவரே எழுதியது).

தமிழில் சிறு பத்திரிகைகள், சிறு பத்திரிகைகளின் வாசகர்கள் பற்றி ஒரு சிந்தனை இந்த இதழின் தலையங்கமாக அமைந்துள்ளது. அது நினைவில் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

“தமிழில் சிறு பத்திரிகைகளுக்கு முப்பது வருஷத்திற்குக் குறையாத சரித்திரம் இருக்கிறது. இவற்றில் எழுதியவர்களும், இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களும் தவிர, ஒருமித்த பொறுப்பும் ரசனையும் கோபமும் உள்ள வாசகர்களும் சேர்ந்தே ஒரு புனிதப் போரென்ற வெறியோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், சராசரி தமிழ் வாசகனின் தரத்தை உயர்த்தியிருக்க முடியும். தமிழ்க் குடும்பங்களைக் கொஞ்சமாவது நாகரிகமும் பெருந்தன்மையும் புத்தியும் உள்ளவையாக்கியிருக்க முடியும். (அரை) நிர்வாணப் படங்களோடு ( பொது இடங்களில் வால் போஸ்டராக இருந்தால் முகம் சுளிக்கப்படுகிற படங்கள், பத்திரிகைகளாக வீட்டில் பிரவேசிக்கிற முரண்பாடு வேடிக்கையானது) நரம்பு நோயாளிகளுக்காக நரம்பு நோயாளிகளால் நடத்தப்பட்டு எழுதப்பட்டு படம் போடப்பட்டு வருகிற பத்திரிகைகள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தம்பி, குழந்தைகள் என்று எல்லோராலும் வெட்கமில்லாமல் படிக்கப் படுகிற அநாகரிகத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். விரசமும் வக்கிரமும் தமிழ்க் குடும்பங்களில் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது.

வாழ்க்கையின் குணம் மாற வேண்டும் என்று சூத்திரம் போல் ஒரு சிறு பத்திரிகையின் இலட்சியத்தைச் சொல்லிவிடலாம். ஆனால் அதற்கான வழிமுறைகள் மிகவும் சோதனை தருவதாகவும் நம்பிக்கையிழக்கச் செய்வதாகவும் இருக்கின்றன. கூட்டான பொறுப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிளவுகள் தோன்றி சிறுசிறு வட்டங்களாகக் குறுகிப் போய் கவனம் சிதறி வேகம் திசை மாறி விடுகிறது. இவை மனிதர்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் என்பதால், மனிதர்கள் சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் வாழ்கிறவர்கள் என்பதால் இன்றைய அறிவுலக இயக்கத்தில் இக்குறை தீராமலிருக்கிறது.

திறந்த மனம் கொண்ட விசாரணைகளும், சுய பரிசீலனைகளும் சிறு பத்திரிகைகளின் பிரயத்தனத்தை வீணாக்காமல் காக்கும்.

சிறு பத்திரிகைகளின் வாசகர்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. வியாபாரப் பத்திரிகைகளின் அரக்கத் தாக்குதலுக்கு ஒரு மாற்றாகவே சில வாசகர்கள் சிறு பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். சிறு பத்திரிகைகளின் பலவீனமான அளவிலும் எண்ணிக்கையிலும் ) எதிர்ப்பு பரவலானால் மொத்த சமூகத்தின் மனோபாவம் மாறி வியாபாரப் பத்திரிகைகளின் மீது ஒரு கட்டுப்பாடு தோன்றலாம். இவ்வாறு பத்திரிகை, சினிமா, கதைகள் போன்ற சீரழிக்கின்ற சாதனங்களின் பிடியிலிருந்து தப்பினாலே பிற புத்தி பூர்வமான காரியங்களில் மனித சக்தி ஈடுபடுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

எனவே, வாசகர்களும் சிறு பத்திரிகைகளின் மாற்று முயற்சிகளுக்குத் துணை நிற்க முடியும்- இவற்றைப் பரவலாக்குவதன் மூலம், பலருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம்" ( வைகை-11)

நேர்மையான சிந்தனைதான். நியாயமான கோரிக்கைதான். ஆனாலும் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாவதற்கு வெகுகாலம் பிடிக்கும். அதற்குள் பணபலமும் வேக இயந்திரங்களின் துணையும் பெற்றிருக்கிற வணிக நோக்குப் பத்திரிகைக்காரர்கள் மிக வேகமாக முன்னேறி விடுகிறார்கள். மக்கள் உள்ளத்தையும் வாசகர்களின் ரசனையையும், அதன் மூலம் சமூகத்தின் நிலைமைகளையும் பாழ்படுத்தி, வெற்றிகரமாகத் தங்கள் நாசவேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுதான் நடந்து வருகிறது.

சமூகச் சீர்கேடுகள், பண்பாட்டுச் சிதைவு, வாழ்க்கை முறைகளில் புகுந்து வளர்கிற போலித்தனங்கள் குறித்தும் 'வைகை' அவ்வப்போது சிந்தனைக் குறிப்புகள் எழுதியது.

நாட்டியம், திரைப்படம் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டது. ட்ரூ ஃபோவும் பிரெஞ்சு திரைப்படக் கலையும் (வெ. ஸ்ரீராம்) கட்டுரை பல இதழ்களில் தொடர் அம்சமாக இடம் பெற்றது.

அயல் நாடுகளின் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளும் (பிரக்ஞை, வைகை போன்ற) சிறு பத்திரிகைகளில் பிரசுரமாவது தேவையற்றது; இவை நமக்கு நேரடியான சம்பந்தம் அல்லாதவை என்ற ரீதியில் கண்டனங்கள் எழுந்தன என்று வைகை குறிப்பிட்டு, இவற்றின் அவசியத்தை விளக்கி ஒரு தலையங்கம் எழுதியது.

“இந்த வாழ்க்கை பற்றி அவ்வளவு நம்பிக்கையற்ற பார்வையை, எனவே இதை மாற்ற - வேண்டிய தீவிரத்தைக் காட்டுகிறவை சிறு பத்திரிகைகள். அரசியலிலும், கலையிலும், இலக்கியத்திலும் பாமரத் தனத்தை, வியாபார ஆதிக்கத்தை எதிர்ப்பது இவற்றின் குணம். இலக்கியம் பிரதான இடம் பெற்றாலும் பிற துறைகளிலும் தரக்குறைவை, நேர்மையின்மையை இவை எதிர்க்கின்றன. இந்த வாழ்வின் பயனின்மையும், முரண்பாடுகளும், மாறுதலுக்கான அவசியமும் சினிமாவில், நாடகத்தில், கல்வியில், அரசியலில் உணரப்பட்டிருக்க முடியும். இங்கு முதலாக இது எழுத்தில் உணரப்பட்டிருக்கிறது. எனவே சிறு பத்திரிகைகள் சினிமா, அரசியல் இவற்றில் பார்வை செலுத்துவது வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்ல, இயற்கையானதும் அவசியமானதும்கூட.

இந்தக் கட்டுரைகள் எழுதப்படுகிற தொனியும் நோக்கமும்தான் இவற்றின் relevance ஐத் தீர்மானிக்கும். வெறும் தகவல் தருகிறவை என்ற அளவில்கூட இக் கட்டுரைகள் உபயோகமானவையே. இவற்றில் Snob கள் இருக்கக்கூடும். அவற்றைச் சுட்டிக்காட்டாமல் மொத்தமாக எல்லாவற்றையும் நிராகரிப்பது விவரமற்ற செய்கை. இதுபோன்ற கட்டுரைகள் உபயோகப்படுவதற்கு சந்தர்ப்பம் வேண்டும். அரசியல் மாற்றத்தில் அடுத்த கட்டத்திற்குப் போவதற்கு இத்தகைய அறிவு பயன்படும் என்று வைகை நினைக்கிறது” ( வைகை-14)

வைகை ‘கல்கி' பத்திரிகை அளவில், நல்ல வெள்ளைத் தாளில் அச்சாகி வந்தது. முதல் வருடம் ஒவ்வொரு இதழும் 34 பக்கங்கள் ( அட்டை தனி )-சில சமயம் அதிகமாகவும்-கொண்டிருந்தது. பின்னர், பக்கங்கள் குறைந்தும் கூடியும் வந்தன. ஒரு இதழ் பத்தே பக்கங்கள்- இரண்டு கட்டுரைகள் கொண்டிருந்தது.

இதற்கெல்லாம் எழுதுகிறவர்களையே அது குறை கூறியது. -வைகை-12-ல் காணப்படும் குற்றச்சாட்டு இது

“வைகை தொடங்கியபோது வாசகர்களுக்கு மட்டுமின்றி எழுதுகிற வர்களுக்கும் சில அக்கறை இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. எழுதுகிறவர்களின் தயக்கத்தையும் இடைவெளியையும் பார்க்கிறபோது நம்பிக்கையின்மைதான் மிஞ்சுகிறது. எழுதுகிறவர்கள் வேறு வேறு துறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பது நல்ல அறிகுறியில்லை.

உண்மையான பிரச்னைகள் எவை என்று கண்டுகொள்ள உதவி செய்கிற, அவற்றின் தீர்வுக்கு விஞ்ஞான பூர்வமான அணுகல் தருகிற எழுத்தை விரும்புவதாய் எப்போதும் வைகையின் பக்கங்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது . ஆனால் high-brow குணமுள்ள எழுத்துக்களே வைகையை ஆக்கிரமிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது பற்றிய முழு விவாதத்தை வைகை வரவேற்கிறது.

ஒரு சிறு பத்திரிகையின் தொனி அதோடு சம்பந்தப்பட்டிருக்கிறவர்களாலும் அதில் எழுதுகிறவர்களாலும் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. வைகைக்காக நிராகரிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் குறைவென்பதால் எழுதுகிறவர்களையே- எழுதாதவர்களையே-குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது.”

வைகை அதன் இறுதிக் கட்டத்தில் 'மணிக்கொடி' மீது தனது கவனத்தைத் திருப்பியது. கு. ப. ரா. சிறப்பிதழ் வெளியிடுவதில் அக்கறை கொண்டது. மணிக்கொடியில் வந்த 'யாத்ரா மார்க்கம்' பகுதியில் வெளியான குறிப்புகளையும் சூடான விவாதங்களையும் வைகை 27, 28 வது இதழ்களில் மறுபிரசுரம் செய்தது.

‘யாத்ரா மார்க்கம்' பகுதியில் புதுமைப்பித்தன் இலக்கியக் குறிப்புகள் எழுதினார். அதில் அயல்நாட்டுக் கதைகளைத் தமிழில் தழுவி எழுதுவதைக் கிண்டல் செய்திருந்தார். நேரடி மொழிபெயர்ப்பை அவர் ஆதரித்தார். பாரதி பாடல்கள் பிரசுரிக்கப்பட்ட விதத்தையும், பாடல்களில் காணப்பட்ட மாற்றங்களையும் குறிப்பிட்டு ஒரு தடவை எழுதினார். தழுவல் விஷயத்தில் அவர் சுட்டிக்காட்டிய ஒரு பெயரும் படைப்பும் பலரிடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றுத் தந்தன. மொழிபெயர்ப்பு-தழுவல் விஷயம் இலக்கிய விவகாரமாகி சர்ச்சிக்கப்பட்டது. கு. ப. ரா, க. நா. சு. சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டார்கள். ‘சந்தேகத் தெளிவு' என்று புதுமைப்பித்தன் விரிவான கட்டுரை எழுதினார். ,

இலக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த விவாதத்தை முழுமையாக வைகை மறுபிரசுரம் செய்தது பாராட்டப்பட வேண்டிய நற்பணி ஆகும். 'மணிக்கொடி' யில் வெளியான சில புத்தக மதிப்புரைகளையும் வைகை பிரசுரித்தது. -

இவ்விஷயங்களைக் கொண்ட 27, 28 இதழ்களுக்கு முன்னர் சில இதழ்கள் வெளியிடப்படவில்லை. இது பற்றிய ஒரு விளக்கம் 27-ம் இதழில் காணப்படுகிறது. அது வைகையின் கொள்கை மாற்றத்தையும், ஆசை நிறைந்த திட்டத்தையும் காட்டுகிறது. கதை, கவிதைகள் போன்ற படைப்பு முயற்சிகளைப் பிரசுரிக்க மறுத்து வந்த வைகை அந்தப் போக்கைக் கைவிட விரும்பியது.

“25-ம் வைகைக்கு மேல் வரும் வைகைகளில் 3, 6, 9- ல் முடிபவை (உ-ம். 26, 29, 33, 36 ) படைப்புகளுக்காக ஒதுக்கலாம் என எண்ணம். வாசகர்கள் அபிப்பிராயம் வரவேற்கப்படுகிறது. நாடகம், கவிதை, சிறுகதைகள் முதலியன இடம்பெறும். நாடகங்களைத் தேர்ந் தெடுக்க நிஜ நாடகக் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுபோல் சிறுகதைகளுக்கு ஒரு குழுவினரும், கவிதைக்கு ஒரு குழுவினரும் தேவைப்படுகிறது. வாசகர்கள் இது குறித்து ஏதாவது யோசனை சொல்வதாக இருந்தாலும் வரவேற்கப்படுகிறது.

யாத்ரா மார்க்கம் 32 பக்கங்களுக்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். 50 பக்கங்கள் வரும் என்ற நிலை ஏற்பட்டதும் 2 இதழ்களாக வெளியிட்டு ஒரே நேரத்தில் அனுப்ப வேண்டி ஏற்பட்டது. தொடர் நம்பராக வர வேண்டும் என்பதற்காக இந்த வைகை 27, 28 என வந்துள்ளது. இடையில் 25, 26 இனிமேல்தான் வரும். இதில் 25 பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தாரின் அனுபவங்கள் பற்றியதாகவும், 26 இதழ் படைப்புகள் தாங்கியும் வரும். தவறுதலாக, அனுப்பவில்லை என எண்ணிக் கடிதம் எழுத வேண்டாம். அடுத்த மாதம் 25 வரும். அதற்கு அடுத்த மாதம் 26 வரும்.”

இப்படித் தெளிவாகத் திட்டம் தீட்டப்பட்டிருந்த போதிலும், அது நிறைவேறுவதற்கு வழி பிறக்காமலே போய்விட்டது.