தமிழில் சிறு பத்திரிகைகள்/சுவடு



21. சுவடு


சிறு பத்திரிகைகள், தனி நபர்களால் தொடங்கி நடத்தப்பட்டாலும், அல்லது இலக்கிய ஆர்வமுள்ள சிலரால்-ஒரு குழுவால்-நடத்தப்பட்டாலும், காலப்போக்கில் குறைபாடுகளை உடையதாக மாறிவிடுவதே இயல்பாக இருந்து வருகிறது. தனிநபரின் விருப்பு வெறுப்புகள் அல்லது குழுவினரின் கோஷ்டி மனோபாவம் அவரவர் பத்திரிகையின் நோக்கிலும் போக்கிலும் வெகுவாகப் பிரதிபலிக்கவே செய்யும். அப்படி ஆகிற போது பொதுவான இலக்கிய சிரத்தை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.

இந்தக் குறைபாடு இல்லாமல், பொதுவான இலக்கிய ஏடு-தரமுள்ள சிறு பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் புதுக்கோட்டை இளைஞர்கள் சிலருக்கு ஏற்பட்டது. அவர்கள் ‘சுவடு' என்ற பெயரில் ஒரு சிற்றேடு ஆரம்பித்தார்கள்.

'சுவடு' முதலாவது இதழ் 14-4-1978-ல் வெளிவந்தது.

முதல் இதழில் 'பயணம்' என்ற தலைப்பில் அவர்களது நோக்கம் தெளிவாக அறிவிக்கப்பட்டது

“இலக்கிய வெளியில் வலது கால் பதிக்கும் இந்த நேரத்தில் கவடு உங்களுடன் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறது.

இது இலக்கியச் சிற்றேடுகளின் காலம். வாழ்ந்து மறைந்த ஏடுகளையும் இன்று வந்து கொண்டிருக்கும் சிற்றேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே இந்த ஏடும் துவங்குகிறது. இன்றைய இலக்கியச் சூழலில் இலக்கியவாதிகள் தனி மரங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து செயற்படுவதால் இலக்கியச் சிற்றேடுகள் உள் வட்டத்தில் சிறு வட்டம் அமைத்து நிற்கின்றன. எல்லாத் தரப்பினருக்கும் பொது மேடையாக அமைய சுவடு ஆசைப்படுகிறது.

உடன் நடக்கும் பாதங்கள் எவை எவை என்று நாங்கள் நிர்ணயிக்கவில்லை. காலத்தை அழுக்காக்காத கால்கள் உங்களுடையதென்றால் நாங்கள் உடன் நடக்க சம்மதம்தான். கண நேரத்தில் மறையும் கடற்கரை சுவடாக இல்லாமல் காலம் காலமாக நிலைபெறும் கல்வெட்டுச் சுவடாக அமைய நீங்களும் உதவுங்கள".

இந்த நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சுவடு, கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் முதலிய படைப்புகளில் அக்கறை காட்டியது.

முதல் இதழில் புவியரசு, மு. மேத்தா, நா. விச்வநாதன் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

‘கடலில் பெய்த மழை' என்றொரு கதை அகல்யா எழுதியது.

க. துரைப்பாண்டியன் 'நினைத்துப் பார்ப்பது நல்லது' என்ற கட்டுரையில் புதிய எழுத்தின் உத்தி, நடை, புரிதல் போன்ற பல விஷயங்கள் பற்றி சிந்திக்க வைக்கும் எண்ணங்களை எழுதியிருந்தார். பத்திரிகைகளில் வந்த எழுத்துக்கள், எழுத்தாளர்களின் போக்குகள் சம்பந்தமான சில கருத்துக்களை அக் கட்டுரை வெளியிட்டது. முடிவாகக் கட்டுரையாளர் கூறியுள்ள வேண்டுகோள், எழுதுகிறவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல எண்ணம் ஆகும். அந்தப் பகுதி இது தான்-

“என்னுடைய கவலையெல்லாம் எழுத்தாளனின் எண்ணங்கள் வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான். நாகரிகமாக எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களில் நளினம் நடமாடட்டும். கனமான செய்திகள் என்று கூறி புரியாமல் எழுதாதீர்கள். மூளை வலிக்கிறது. உங்கள் படைப்புக்களை கருவறைத் தெய்வமாக்காதீர்கள். கோபுரக் கலசமாக்குங்கள். உங்கள் சிந்தனைகளை வடமொழிச் சுலோகங்களாக்காமல் நாட்டுப் பாடல்களாக்குங்கள். என்ன எழுதுகிறோம் என்று அலட்டிக் கொள்ளும் நவீன இலக்கியவாதிகள் எப்படி எழுதுகிறோம் என்றும் நினைத்துப் பார்ப்பது நல்லது.”

இது தவிர, 'வெங்கட்சாமிநாதனின் இலக்கியப் பார்வை' பற்றி பாலா எழுதிய கட்டுரையும் இருந்தது.

'குறிப்புகள்' என்ற தலைப்பில், முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது குறிப்பிடத்தகுந்த தகவல்கள், செய்திகள்-அவற்றின் மீது குத்தலான அல்லது நகைச்சுவை பொருந்திய குறிப்புரைகள் தரப்பட்டன.

பார்வை என்ற பகுதியில் புத்தகங்களுக்கு விரிவான மதிப்புரை இடம்பெற்றது.

மீரா 'அந்தப் பக்கம் இந்தப் பக்கம்' பகுதியில் சுவாரஸ்யமாகவும் கிண்டலாகவும் பொது விஷயங்கள் பற்றி அபிப்பிராயங்கள் எழுதினார்.

இவை வழக்கமான அம்சங்களாயின.

இவ்வாறு 'இலக்கிய வெளியில் புதிய சுவடு' பதிக்க முன் வந்த சிறு பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் இலக்கியத் தரமானதாக அமைந்து, சுவடு நல்ல பத்திரிகை என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது.

வண்ணதாசன், பூமணி, நா. விச்வநாதன் ஆகியோரின் நல்ல கதைகள், புவியரசு, ப. கங்கைகொண்டான், துரை சீனிச்சாமி, விச்வநாதன், கிவி மற்றும் புதியவர்கள் பலரது கவிதைகள்; அபூர்வமாகச் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 'அபத்தவாத நாடகங்கள்' பற்றிய நீண்ட கட்டுரை சுவடு இதழ்களில் வந்துள்ளன.

விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு சாதனையைச் சுவடு தனது நாலாவது இதழில் நிகழ்த்தியது. விமர்சகர்கள் பற்றிய விமர்சன இதழ் வெளியிட்டதுதான் அது.

“படைப்புகளை விமர்சிப்பவன் கலை இலக்கிய ஆக்க வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுகிறபோது அவனும் ஒரு படைப்பாளியாக உயர்வடைவதைப் பார்க்கிறோம். படைப்பாளியின் அங்கீகரிப்பிற்கு உதவும் அதே நேரத்தில் சில விமர்சகர்கள் படைப்பாளியின் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்கையும் காண்கிறோம். இந்தச் சூழலில் நம் சமகால விமர்சகர்களின் ஆக்க ரீதியான சாதனைகளை ஒரு மதிப்பீட்டிற்கு உள்ளாக்குவது நல்லது என்ற எண்ணத்தில் இந்த விமர்சகர் இதழை சுவடு வெளியிட முன்வந்துள்ளது. இதில் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள விமர்சகர்களின் பங்கு பற்றித் தெரிவிக்கப்படும் அபிப்பிராயங்கள் முடிவானவை அல்ல என்பதைச் சுவடு அறிந்திருக்கிறது.

இது பொது மேடை ஆரோக்கியமான, ஆக்க ரீதியான கலை இலக்கியச் சிந்தனைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் சுவடு தீண்டாமை பாராட்டாது.”

இந்த விமர்சனச் சிறப்பிதழில் வெளியான கட்டுரைகள்-

1. நம்பிக்கையூட்டும் தமிழ் விமர்சகர்கள்-வல்லிக்கண்ணன் எழுதியது. தமிழில் இலக்கிய விமர்சனம் ஆரோக்கியமாக வளரவில்லை-வளர்க்கப்படவில்லை என்ற குறையை எடுத்துச் சொன்ன கட்டுரை விமர்சகர்கள் பலரது போக்குகள் குறித்தும் அபிப்பிராயம் தெரிவித்தது. முடிவாக, 'வளர்ச்சி பெற்றுள்ள- புதிதாகத் தோன்றி வளர்ந்து வருகிற-திறமையுள்ள படைப்பாளிகள் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் அவர்களுக்கும் வாசகர்களுக்கும் சரியானபடி எடுத்துச் சொல்லக்கூடிய இலக்கிய விமர்சகர் இன்று தேவை' என்று அறிவித்தது.

இத்தேவை இன்று வரையிலும் பூர்த்தி செய்யப்படவேயில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய உண்மையாகும்.

2. சு. நா. சுவின் விமர்சன முகம்-சுந்தர ராமசாமி. 3. ரகுநாதன்-தமிழவன். 4. வெங்கட்சாமிநாதன்-வண்ண நிலவன். 5 நா. வானமாமலை-தி. க. சி.

சி. சு. செல்லப்பா பற்றி கனகசபாபதியும், க. கைலாசபதி குறித்து தி. சு. நடராசனும் எழுதித்தர ஒப்புக்கொண்ட கட்டுரைகள் வந்து சேராததால், அவை சிறப்பிதழில் பிரசுரம் பெறவில்லை.

பின்னர் அனைத்துக் கட்டுரைகளும் 'தமிழ் விமர்சனப் பார்வை’ என்ற புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டன.

இந்தச் சிறப்பிதழ் 1973 அக்டோபரில் வெளிவந்தது.

ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய 'சுவடு' வின் 5-வது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது.

படைப்பாளி 'லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள்' என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அவருடைய இலக்கிய அனுபவங்கள், உள்முகத் தேடல்கள், அபிப்பிராயங்கள் ஆழமாகவும் அழகாகவும் அதில் வெளிப்பட்டிருந்தன. அவரிடம் அதற்கான முறையில் கேள்விகள் கேட்டவர் கவிஞர் அபி.

அத்துடன் 'மூன்று பல்கேரியப் படங்கள்' பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.

சுவடு 6-வது இதழில் சுயவிமர்சன அறிவிப்பு ஒன்று வெளி வந்தது.

“மாத இதழாக மலர்ந்து இடையில் 'இரு மாதம் ஒருமுறை' என மாறி ஆண்டு நிறைவை எய்தவிருக்கிறது! இந்த ஆறு இதழ்களில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பதை அறிவோம். ஆனால் இனி வரும் நாட்களில் நிறையச் சாதிப்பதற்குரிய பயிற்சியும் அனுபவமும் இக்குறுகிய காலத்திலேயே சுவட்டிற்குக் கிட்டியிருக்கிறது. சுவடு ஒரு பொது மேடை என்ற எங்கள் முதல் இதழ் பிரகடனத்திற்கேற்ப இன்றைய தமிழ் இலக்கியத்தின் சகல கருத்துக்களும் சந்திக்கும் ஒரு களம் என்பதை மெய்ப்பிக்க ஓரளவு முயன்றுள்ளோம். மாற்றுக் கருத்துக்களை முகம் கொடுத்து சந்திக்கவே விரும்பாமல் ஒரு சேணம் பொருத்திய பார்வையுடன் சிறு பத்திரிகைகள் விளங்கியபோது, அனைவரும் அரங்கேறலாம் எனச் சுவடு அழைப்பு விட்டது. 'இது அவர் ஏறிய மேடை நான் மாட்டேன்’ என்று ஓடிப் போகிறவர்களும் இல்லாமல் இல்லை. ‘இது எது, எந்த குரூப் என்று இன்னும் புலப்படவில்லையே' என்று சொல்லிக்கொண்டு இன்னும் காத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்களுக்கிடையில் சுவடு பக்கங்களில் வந்து கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும், சுவடுமீது ஆர்வமும் அக்கறையும் கொண்டு சந்தாக்களும் படைப்புகளும் அனுப்பி வரும் அன்பர்களுக்கும் சுவடு பிரியமுடன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.”

மேலும் சில வரிகளுக்குப் பிறகு தனது எதிர்காலத் திட்டம் பற்றியும் அது கூறியது-

“புதியவர்களுக்கு நிறைய உற்சாகம் தரப்படும். உற்சாகமிழக்காத பழையவர்களின் படைப்புகளும் இடம் பெறும். குறிப்பாகத் தமிழ் நவீன நாடியாக சுவடு விளங்க முயற்சி செய்யும். புதிய தமிழ் எழுத்தின் போக்கிற்கும் நோக்கிற்கும் வெளித்தடைகள் வணிக ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது சுவடு போன்ற ஒரு இலக்கிய இதழுக்கு ஆதரவளிக்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழ் இலக்கியத்தின்மீது அக்கறையுள்ள எங்களுக்கும் உண்டு. இதில் உங்கள் பங்கையும் செலுத் துங்கள்.”

சுவடு ‘ஆனந்தவிகடன்' அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது.

அதன் ஏழாவது இதழ் 'இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்' என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய' பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன.

“நா. விச்வநாதன் கவிதைகள்-4 பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள்.

சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் நல்ல விருந்தாக அமைந்திருந்தது.

அதன் பிறகு சுவடு வெகுகாலம் நீடித்திருக்கவில்லை. விரைவிலேயே ஒரு அறிவிப்பு தந்துவிட்டு, அதன் பிரசுரத்தை நிறுத்திக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

'சுவடு' நெடுங்காலம் வாழ்ந்து வளர்ந்திருக்க வேண்டிய சிறு பத்திரிகை. அதைப் போன்ற ஒரு இலக்கியப் பத்திரிகை இன்றுகூடத் தேவைதான். சுவடு இதழ்களைத் திருப்பிப் பார்க்கிற போதெல்லாம் இந்த எண்ணம் எழத் தவறுவதில்லை.