தமிழில் சிறு பத்திரிகைகள்/‘எழுத்து’ காலத்தில்
11. 'எழுத்து' காலத்தில்
‘எழுத்து' நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, எழுத்து போன்ற வேறு இரண்டு சிறு பத்திரிகைகள் தோன்றின.
அவை முற்றிலும் எழுத்து போன்றனவும் அல்ல; தத்தமக்கென்று தனித்தன்மை கொண்டிருந்தன.
ஒன்று க. நா. சுப்ரமண்யம் நடத்திய 'இலக்கிய வட்டம்', மற்றது, 'நடை'.
‘இலக்கிய வட்டம்' பெரிய சைஸில், மாதம் இருமுறை பத்திரிகையாக, சென்னையிலிருந்து வெளிவந்தது. 1964 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது.
இலக்கிய விமர்சனமும், இலக்கியப் பிரச்னை குறித்துச் சிந்திப்பதும், படைப்புகளில் சோதனை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அதன் நோக்கமாக அமைந்திருந்தது.
சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் கருத்துத் தெளிவும், நல்ல பலனும் ஏற்படும் என்று கூறி விமர்சனம், சிறுகதை, கவிதை பற்றிய தனது எண்ணங்களை க. நா. க. அடிக்கடி வலியுறுத்தினார்.
‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன- இன்றைய தமிழ் இலக்கியம் பெருக' என்ற உணர்வுடன் நடத்தப்பட்ட பத்திரிகை இது. நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியவாதிகள் அதில் கட்டுரைகள் எழுதினார்கள்.
சர்வதேச இலக்கியங்கள், இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன.
படைப்புகளில் சோதனைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. புதுக்கவிதையையும் ஒரு சோதனைத் துறையாகத்தான் 'இலக்கிய வட்டம்’ கருதியது. சோதனை ரீதியில் கவிதை இயற்றிய அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.க. நா. சு. மயன் என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தினார். டி. கே. துரைஸ்வாமி, சுந்தர ராமசாமி ஆகியோரது தீவிர சோதனைப் படைப்புகள் அதிகம் பிரசுரமாயின. மற்றும் சிலரது கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன.
'தமிழ் இலக்கியத்தில் சாதனை' யை அளவிடும் விதத்தில் 'இலக்கிய வட்டம்' ஒரு விசேஷ இதழைத் தயாரித்தது. 1947-1964 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், தி. க. சிவசங்கரன், ரதுலன், வெ. சாமிநாதன், ஆர். சூடாமணி, தெ. பொ. மீனாட்சி சுந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் அபிப்பிராயங்கள் தெரிவித்துக் கட்டுரைகள் எழுதினார்கள்.
க. நா. சு. எழுதிய 'நடுத்தெரு’ என்ற நாவல் சிறிது காலம் இணைப்பு ஆகப் பத்திரிகையுடன் வழங்கப்பட்டது. அந்த நாவல் பூர்த்தி பெறவில்லை.
‘இலக்கிய வட்டம்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியும் பயனும் அளிக்கக்கூடிய நல்ல விஷயங்களைக் கொண்ட சுவாரஸ்யமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வந்தது. ஆயினும் அது நெடுங்காலம் வாழவில்லை. ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் செயல்பட்டது.
'இலக்கிய வட்டம்' அதன் வளர்ச்சிக் காலத்தில், இலக்கிய ரசிகர்கள் படித்துப் பாராட்டக்கூடிய ஒரு பத்திரிகையாக இருந்ததே தவிர, 'எழுத்து' போல் இலக்கிய வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை உண்டாக்கிவிடவில்லை. ரசிகர்கள் சிறிது காலம் அதைப் பற்றிப் பேசினார்கள். அப்புறம் மறந்து விட்டார்கள்.
'நடை' காலாண்டு ஏடு ஆக சேலத்தில் தோன்றியது. 1968 அக்டோபரில் அதன் முதல் இதழ் வந்தது.
இந்த 'இலக்கிய முத்திங்கள் ஏடு' எழுத்து காலாண்டு ஏடாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரசுரமாயிற்று. அதன் ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது பலரது கூட்டு முயற்சியாலேயே உருவாயிற்று.
“தமிழ் மக்களுக்கு 'நடை' என்னும் புதிய ஏட்டினை அறிமுகப் படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். நடை ஒர் இலக்கிய முத்திங்கள் ஏடு, இலக்கியப் படைப்புக்கும் திறனாய்வுக்கும் என்றே வருகின்ற ஏடு. இது போன்ற எடு தமிழுக்குப் புதிதல்ல; என்றாலும் 'நடை' பலவகையிலும் மாற்றம் உடையது என்பது வாசகரின் முதற் பார்வைக்கே புலனாகி இருக்கும். இந்த மாற்றம் 'நடை'யினது நோக்கத்தின் அடிப்படையில் எழுவதாகும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே 'நடை' யின் நோக்கம். இந்த இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த 'நடை'. 'நடை' யின் நோக்கம் நிறைவேறவும் 'நடை' வெற்றியுடன் நடக்கவும் இக்கூட்டு முயற்சியில் வேறு சிலரின் துணையும் தேவை. இதற்கு எல்லா எழுத்தாளரையும் விமரிசகரையும் துணை செய்யுமாறு அழைக்கிறோம். சிறு கதை, கவிதை, கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வுக் கட்டுரை முதலியவற்றை நடை வரவேற்கிறது. ஓர் ஏட்டின் வெற்றிக்கு அடிப்படைத் தேவை வாசகரின் பேராதரவுதான். எனவே இலக்கியச் சுவைப்புக்குப் புகழ் பெற்ற தமிழ் மக்களைத் துணை புரியுமாறு அழைக்கிறோம்.”
நடை முதலாவது இதழில் வெளியான ஆசிரியர் அறிவிப்பு இது.
ந. முத்துசாமியின் சிறுகதைகளையும் நாடகத்தையும் நடை வெளியிட்டுள்ளது. சி. மணி, செல்வம் என்ற பெயரில் கவிதை, பழந்தமிழ் இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். புதுக் கவிதையும் யாப்பிலக்கணமும் பற்றிய சிறப்பு இணைப்பு குறிப்பிடத்தகுந்தது. வே. மாலி என்ற பெயரிலும் அவர் சோதனை ரீதியான கவிதைகள் எழுதியுள்ளார். நெஞ்சங்கவரும் கற்பனையும், அருமையான சொற்கட்டும். இறுக்கமான உருவ அமைதியும், நுணுகிய பார்வையும், ஆழ்ந்த பொருள் நயமும் கொண்ட ஜப்பானியக் கவிதைகள் செல்வம் மொழி பெயர்ப்பில் வந்தன.
‘எழுத்து' பத்திரிகையில் எழுதி வந்த வி. து. சீனிவாசன், இரா. அருள், எஸ். வைத்தீஸ்வரன் முதலியவர்கள் நடையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்கள். வெ. சாமிநாதன் மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார்.
‘விருந்து' என்ற தலைப்பில் புத்தக மதிப்புரைப் பகுதி பிரசுரமாயிற்று. எடுத்துக் கொண்ட புத்தகம் பற்றி விரிவாகவே மதிப்புரை எழுதப்பட்டது.ஓவியம் போன்ற கலைகள் பற்றியும் கட்டுரைகள் பிரசுரமாயின.
'நடை' புத்தக வடிவத்தில், 'ஆனந்த விகடன்' அளவில், கனத்த அட்டையுடன் தயாரிக்கப்பட்டது. எட்டு இதழ்கள்தான் ( இரண்டு வருடங்கள்) வெளிவந்தன.
ஐராவதம், ஞானக்கூத்தன் போன்ற புதியவர்களும், அசோகமித்திரன், நகுலன், நீல. பத்மநாபன், மா. தக்ஷிணாமூர்த்தி, கோ. ராஜாராம் ஆகியோரும் நடையில் எழுதினார்கள்.
அதன் காலத்தில் அது இலக்கியத்தையோ எழுத்தாளர்களையோ பாதிக்கும்படியான சாதனைகள் எதையும் புரிந்துவிடவில்லை. தரமான ஒரு பத்திரிகையாக நடை விளங்கியது.
திரைப்படப் பாடல்களின் இலக்கியத் தன்மை குறித்து, சிந்தனையைத் தூண்டக்கூடிய நல்ல கட்டுரை ஒன்றையும் நடை வெளியிட்டுள்ளது. அதன் இரண்டு வருட வாழ்வில் நடை புதுக் கவிதைக்குச் சிறப்பான பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
‘எழுத்து', அதன் ஆசிரியருக்குப் பெரும் தொகை நஷ்டம் ஏற்படுத்திய போதிலும், இலக்கிய வரலாற்றில் நிரந்தரமான ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அதன் மதிப்பை இலக்கிய மாணவர்களும், ஆய்வாளர்களும் பிற்காலத்தில் உணரலானார்கள். 'எழுத்து' போன்ற ஒரு பத்திரிகை தேவை என்ற உணர்ச்சியைப் பின்வந்த தலைமுறையினரிடம் உண்டாக்கிவிட்டிருப்பது, 'எழுத்து' க்கு மாபெரும் வெற்றி ஆகும்.