தமிழில் சிறு பத்திரிகைகள்/கசட தபற

12. கசடதபற


‘எழுத்து' என்பதே பத்திரிகை உலகில் புதுமையான பெயராக ஒலித்தது முதலில். போகப் போக அது பழகிவிட்டது.

பின்னர், 'எழுத்தோடு' தொடர்பு கொண்டிருந்த சில நண்பர்கள் தனி முயற்சி துவங்கிய போது, தங்கள் காலாண்டு ஏட்டுக்கு 'நடை’ என்று பெயர் சூட்டினார்கள்.

'நடை' யுடன் தொடர்பு கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தபோது, அதற்கு முற்றிலும் புதுமையானபுரட்சிகரமான-ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

‘கசடதபற’ - ஒரு வல்லின மாத ஏடு.

'கோபம் கொண்ட இளைஞர்கள்'

- வாளும் கேடயமும் ஏந்திய ஒரு போர் வீரனின் (இந்திய மரபு) ஓவியத்தைத் தங்கள் பத்திரிகையின் நிரந்தரச் சின்னமாகப் பொறித்திருந்தார்கள்.

அக்டோபர் 1970 -ல் பெரிய அளவில் ( க. நா. சு. நடத்திய இலக்கிய வட்டம் சைஸ் , 16 பக்கங்கள் கொண்ட ‘கசடதபற'வின் முதல் இதழ் வெளிவந்தது. விலை 30 காசு.

“இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொது மேடைதான் கசடதபற ஊதிப் போன சுயகெளரவங்களாலும் பதுங்கிய பார்வைகளாலும் இவர்கள் பாதிக்கப்படாதவர்கள். அரசியல், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறாமல் தோப்புக்கரணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித்தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப் பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். உலகின் இதர பகுதியின் இலக்கியத்தில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச்சிகளை இனம் கண்டு கொள்வதிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். பல காலமாகவும், பலராலும் சொல்லப்படுகிறது என்று ஒன்றை ஏற்க மறுப்பதோடு, எதையும் விமரிசன ரீதியாகப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் சேர்ந்து கசடதபற வை உருவாக்கி இருக்கிறார்கள்.

சொந்த அல்லது வேற்றரசாங்கத்தின் பணம் ஏதும் கொல்லைப் புறமாக இவர்களுக்கு வந்திருக்கவில்லை. அல்லது பை கொழுத்துப் போன ஒருவருடைய இறுதிக் காலத்தியதே போன்ற ஆவலை நிறை வேற்றவோ, கேவலம் சுய விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ கசடதபற வந்திருக்கவில்லை. மாறாக, சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம் விடும் அறைகூவல்களை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாசாரத்தின் ஆழ அகலங்களை, ரகசிய அம்பலங்களை இலக்கியத்தில் காட்டக் கசடதபற வந்திருக்கிறது.’

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்களை வரவேற்கக் கசடதபற பெரிதும் விரும்பும். எதையும் செய்யுங்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்.

இலக்கியத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கிய ரொட்டியின் எந்தப் பகுதியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்று ஆராய்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுபவர்கள் எல்லோரையும் அழைக்கிறது கசடதபற"

-முதல் இதழில் பிரசுரமான இந்த அறிவிப்பு கசடதபற நண்பர்களின் நோக்கை நன்கு எடுத்துக்காட்டியது.

ஞானக்கூத்தன் எழுதிய தமிழை எங்கே நிறுத்தலாம் என்ற கவிதை சூடாகவே சில விஷயங்களைச் சொன்னது.

வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால் தேவலாம் போல இருக்கிறது
மோச மின்னும் போவதற்குள்ளே
வித்தைக்காரர் வர வேண்டும்;
வித்தை தெரிந்த எழுத்துக் கலைஞர்
விலகி நிற்கக் கூடாது.

வித்தை தெரிந்தவர்க் கெல்லா மின்று
வேலை இருக்குது பலவாக.
நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்

என்று கேட்டிருந்தது அக் கவிதை.

நா. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும், என். மகா கணபதி பப்ளிஷர் ஆகவும் செயலாற்றிய ‘கசடதபற’ வுக்கு ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்), ந. முத்துசாமி, ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் முதலியவர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் உயிருட்டி வளர்த்தார்கள். .

‘சுயபிரக்ஞையோடு - தரமான இலக்கியத்தை இனம் கண்டு கொள்ளும் வாசகர்கள், களைகள் மண்டிய இந்தச் சூழ்நிலையிலும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை இன்னும் வளர கசடதபற பாடுபடும்' என்று அறிவித்து, அம் முயற்சியில் ஆர்வமும் காட்டியது அது.

'கோபம் படைப்புச் சக்தியை வீணாய் எரிக்கிறது. ஆனால், இதற்காக இதைச் செய்கிறோம், இதன் விளைவு இது என்னும் திட நம்பிக் கையோடு கொள்ளும் கோபம் சக்திச் சேதமின்றி சேமிப்புச் சக்தியாக மாறும் வகையில் சுய பிரக்ஞையுடன் இக்காரியத்தில் மிக மிகமிக, அமைதியாக ஈடுபட இருக்கிறோம். எனவே, கசடதபற வில் தொடர்ந்து கோபம் ஒரு யோகமாகப் போகிறது என்று ந. முத்துசாமி முதலாவது இதழ்க் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோபம் பலபேர்கள்-பத்திரிகைக்காரர்கள், எழுத்தாளர்கள், பண்டிதர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், போலிகள், பம்மாத்துக்காரர்கள் போன்ற பல்வேறு இனத்தினர்-மீதும் சூடாகவும் சுவையாகவும் இலக்கிய நயத்தோடும் கசடதபற இதழ்களில் பாய்ச்சப் பெற்றுள்ளது.

புதுமையான சிறுகதைகள், புதுக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இலக்கிய விமர்சனம், புதிய புத்தகங்கள் பற்றிய விரிவான மதிப்புரைகள், சோதனை ரீதியான நாடகங்கள் (ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி எழுதியவை). நாடகக்கலை, ஓவியக்கலை, கூத்து பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் இப்படிப் பலவற்றையும் கசட தபற தந்திருக்கிறது.

‘கசடதபற' வைச் சேர்ந்தவர்களைத் தவிர, நகுலன், ஆர். இராஜேந்திரசோழன், பாலகுமாரன், கல்யாண்ஜி, இந்திரா பார்த்தசாரதி முதலியோரும் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

கி. அ. சச்சிதானந்தம், வெ. சாமிநாதன், தர்மு அரூப் சிவராம், எஸ். கோபாலி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். க. நா. சுப்பிரமணியம் சில கவிதைகள், கதை- கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

ஓவியர்கள் கே. எம். ஆதிமூலம், பாஸ்கரன், பி. கிருஷ்ணமூர்த்தி, கே. தாமோதரன், டி. கே. பத்மினி, எஸ். வைதீஸ்வரன், சிதம்பரகிருஷ்ணன் முதலியவர்களது சித்திரங்களை கசடதபற பிரசுரித்தது. ஓவியம் பற்றிய கட்டுரைகளும் அவ்வப்போது வெளியாயின.

கசடதபற கவிதைக்கு நிறையவே பணியாற்றியுள்ளது. ஞானக்கூத்தன், பாலகுமாரன், கோ. ராஜாராம், எஸ். வைதீஸ்வரன், கலாப்ரியா, சச்சிதானந்தம், தருமு சிவராம், நீலமணி, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நா. ஜெயராமன், மகாகணபதி மற்றும் பலர் கவிதைகள் எழுதியுள்ளனர்.

புதுக்கவிதை பற்றிய சார்வாகன் கட்டுரை விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தது.

நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஸோல்ஸனிட்ஸினின் நோபல் உரை (14 பக்கங்கள் ) 26-ம் இதழ், நவம்பர் 1972, ஸோல்ஸெனிட்ஸின் ஒரு பரிசீலனை ( எஸ். வி. ராஜதுரை ), ஜீன் பால்சார்த்தருடன் ஒரு பேட்டி மற்றும் கான்ஸர் வார்டு (ராஜதுரை ) புனிதஜெனே (தர்மு அரூப் சிவராம் ) ஆகிய கட்டுரைகளும் முக்கியமானவை.

‘கசடதபற'வின் 17-18வது இதழ் (1972 மார்ச்- ஏப்ரல் ஒரே இதழ்) க. நா. சு. சிறப்பிதழாக வந்தது. க. நா. சு. பற்றிய பல கட்டுரைகளுடன் க. நா. சு. வின் படைப்புகளும் அதில் இடம் பெற்றன.

13-வது இதழ் நாடகச் சிறப்பிதழாக வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் 'மழை' முழுமையாக அதில் பிரசுரமாயிற்று.

இந்த இதழிலிருந்து பத்திரிகையின் அளவும் மாறுதல் பெற்றது. சற்றே சுருங்கிய வடிவில் ( ‘கணையாழி' சைஸ்) வெளிவரலாயிற்று.

25வது இதழ் விசேஷத் தயாரிப்பு. அதிகப் பக்கங்கள், கவிதைகள், கதைகள், சித்திரங்கள் மிகுதியாக இடம் பெற்றன.

கசடதபறவின் ஒவ்வொரு இதழிலும் அக்கம் பக்கம் என்ற பகுதி உண்டு. அக்கப்போர், தாக்குதல், தாக்குதலுக்குப் பதில், சூடும் சுவையும் கலந்த அபிப்பிராயங்கள், தகவல்கள், இதில் வெளிவந்து கொண்டிருந்தன.

கசடதபற, 32 இதழ்களுக்குப் பிறகு, 1973 ஜூன்- ஜூலை என்று குறிப்பிட்டு, சிதம்பர கிருஷ்ணன் ஓவியம் ஒரு பக்கமும் ஒரு அறிவிப்பை மறுபக்கமும் அச்சிட்ட ஒரு தாளை அனைவருக்கும் அனுப்பியது. அதில் கண்ட விவரம் இதுதான்-

“மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது.

இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாடும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் உற்சாகத்தைப் பொறுத்தது என்று இந்தியச் சிற்றேடுகளைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது கசடதபற.

இலக்கியம் என்பதை ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் அதற்குத் தொடர்ச்சிதான் குறிப்பே தவிர, தொலைதல் இல்லை என்பது தெளிவாகிறது. இலக்கிய முயற்சிகளும் அப்படித்தான்.

கசடதபறவின் இதழ்கள் வெளிவந்த சமயத்தில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த அத்தனை பேர்களுக்கும் கசடதபற நன்றி தெரிவிக்கிறது.”

பொதுவாக, சிறு பத்திரிகைகள் தங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், பத்திரிகைகள் தயாரிப்பில் எதிர்ப்படும் சிரமங்கள் முதலியவற்றை அடிக்கடி ஒலிபரப்புவதும், சந்தாதார் ஆகும்படி வாசகர்களுக்கு வேண்டு கோள் விடுத்தவாறு இருப்பதும் ஒரு மரபு ஆகவே உள்ளது. ஆனால் கசடதபற தனது மூன்றாண்டு வாழ்வில் ஒரு தடவைகூட இந்த ரீதியில் எதுவும் எழுதியதே இல்லை. இதுவும் அதன் தனிச்சிறப்புகளில் ஒன்று

சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கசடதபற'வைக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சின்ன அளவில், குறைந்த பக்கங்களோடு, சில இதழ்கள் வரவும் செய்தன. சீக்கிரமே அம் முயற்சி கைவிடப்பட்டது. ☐☐