தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/033-066
பழைய திருவிளையாடல்
1906-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் என்கிற நூலை அரும்பத உரையோடும், வேறு பல ஆராய்ச்சிக் குறிப்புகளோடும் ஆசிரியர் வெளியிட்டார். அதற்குப் பாண்டித்துரைத் தேவர் ஓரளவு பொருளுதவி செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியர் தொடர்ந்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லாமல் இருந்ததனால் வேறு பணி எதையும் தம்மால் செய்ய முடியாமல் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்தார். “தங்கள் கட்டுரை இருந்தால்தான் பத்திரிகைக்கே மதிப்பு உண்டாகும். தங்கள் விருப்பம் எப்படியோ அந்த வகையில் செய்யுங்கள்” என்று பாண்டித்துரைத் தேவர் மீண்டும் வற்புறுத்தினார்.