தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/034-066
பிறநூல்களின் வெளியீடு
அதனால் தாம் ஆராய்ந்து கொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல் எதையேனும் செந்தமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து பதிப்பித்து வரலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதன்படி, திருவாரூர் உலா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாகச் செந்தமிழில் வெளிவரச் செய்தார். 1905-ஆம் ஆண்டு அந்த நூல் நிறைவேறியது.
பிள்ளையவர்கள் பாடியிருந்த தனியூர்ப் புராணத்தை வெளியிட்டார். பின்னர் மண்ணிப் படிக்கரைப் புராணம் வெளியாயிற்று. அதுவும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றியதுதான். சீவகசிந்தாமணியின் இரண்டாம் பதிப்பு 1907-ஆம் வருடம் நடைபெற்று வந்தது. முதல் பதிப்பைவிடப் பல புதிய செய்திகளை அதில் சேர்த்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது நிறைவேறியது.