தமிழ்நாடும் மொழியும்/சங்க காலம்

4. சங்க காலம்

முன்னுரை

தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி நின்று மக்கள் உள்ளத்தையும் அக்காலத் தமிழகத்தையும் காட்டி நம்மைக் களிப்படையச் செய்துகொண்டிருப்பது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும். அடுத்து இடையிலே எழும்பிய நீருக்கும், ஏற்பட்ட போருக்கும், அயலார் மூட்டிய நெருப்புக்கும், நம்மவர் மறதிக்கும், கரையானுக்கும் இரையாகாதவாறு இன்றுவரை நின்று, நொந்த நந்தம் சிந்தையிலே செந்தேன் பொழிந்துகொண்டிருப்பவை கடைச்சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, குறள் என்பனவாம். இன்றும் கூட சங்க காலம் என்றாலும், சங்க இலக்கியங்கள் என்றாலும், கடைச்சங்க காலத்தையும் அக்கால நூல்களையுமே குறிக்கும். கடைச்சங்க இறுதிக்காலத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் செவ்வி அருமைளையும், தமிழ் வளர்ச்சியையும், அக்காலச் சமய நிலையையும் இன்ன பிறவற்றையும் நாம் நன்கு அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. இனி இவற்றை முறையே ஆராய்வோம்.

முச்சங்கம்

தமிழ் நாடு பற்றிய எந்த வரலாறாயினும் சரி, அதிலே முதல் அத்தியாயமாக இருப்பது முச்சங்கம் பற்றிய வரலாறாகும். சங்கங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை ஏற்படுத்திய மன்னர்கள் யார்? அவை எத்தனை ஆண்டுகள் உலகில் நிலவின? அவற்றிலிருந்த புலவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இயற்றிய நூல்கள் யாவை? போன்ற வினாக்கள் இன்று முச்சங்கம் பற்றி எழுப்பப்படுகின்றன.

சங்கத் தாய் ஈன்ற செழுங்குழவிகளாகிய பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, குறள் ஆகிய இலக்கிய நூற்களிலே சங்கம் என்ற சொல்லே கிடையாது. சங்கம் பற்றிய குறிப்பும் கிடையாது. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியலுரையிலே சங்கங்கள் பற்றிய குறிப்புகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. முதலில் அந்நூல் தரும் குறிப்புகளை நோக்குவோம்.

தலைச் சங்கம்

இதனை முதலில் நிறுவிய பெருந்தகை காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் இருந்தவன் பாண்டியன் கடுங்கோன் என்னும் மன்னனாவான். இது நின்று புகழ் விளக்கிய இடம் தென் மதுரை. இச்சங்கம் நிலவிய ஆண்டுகளின் எண்ணிக்கை 4500. சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள் 4449 பேர். இச்சங்க காலத்திலிருந்த அரசர்கள் 89 பேர். இச்சங்கத்திலிருந்த புலவர்களுள் அடையாளங் காணப்பட்டோர் அகத்தியர், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடி நாகராயர் முதலியவராவர். இக்காலத்தெழுந்த நூல்கள் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியனவாம். இச் சங்கத்தின் கடைசி அரசனான கடுங்கோன் காலத்தில் ஒரு பெருங் கடல்கோள் ஏற்பட்டு முதற்சங்கம் அழிந்துவிட்டது.

இடைச் சங்கம்

முதற் சங்கத்தினை முந்நீர் விழுங்கிவிடவே, அடுத்து ஏற்பட்டது இரண்டாம் சங்கமாகும். இச்சங்கம் இருந்த நகரம் கபாடபுரமாகும். இந்நகர் பற்றிய குறிப்பு வான்மீகியின் இராமகாதையில் வருவதாகக் கூறுவர். இதிலே இருந்த இன் தமிழ்ப்பாச் செய்த புலவர்கள் 449 பேராவர். இச்சங்கத்தினைத் தோற்றுவித்தவன் வெண்டேர்ச்செழியனாம். இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் தொல்காப்பியராம். இச்சங்கத்தின் இறுதி அரசன் நிலந்தருதிருவிற் பாண்டியன். இச்சங்க காலத்தில் எழுந்த நூற்கள் இசை நுணுக்கம், தொல்காப்பியம், வியாழமாலை அகவல், தொகைநூற் பாடல்களில் சில முதலியவாம். இந்தச் சங்கமிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்காப்பியனார், சிறு பாண்டரங்கனார் முதலிய பல புலவராவர். இந்த இடைச் சங்கமும் கடல்கோளால் அழிந்தது.

மூன்றாம் சங்கம்

உலக அரங்கிலே நமக்கு ஏற்றத்தையும், இலக்கிய மாளிகையிலே தமிழன்னைக்குத் தனிச் சிறப்பையும், நொந்த நந்தம் சிந்தையிலே செந்தமிழ்த் தேனையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்ற எட்டுத் தொகை முதலிய இலக்கியங்களை ஈன்றெடுத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. இக்காலம் தமிழக வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய காலமாகும்.

இடைச் சங்கம் கடல்கோளால் அழிந்த பின்னர், இப்பொழுதுள்ள மதுரையிலே இச்சங்கம் தோன்றியதாம். இதன் தலைவர் நக்கீரர். இச்சங்கத்தே வீற்றிருந்த புலவர் பெருமக்கள் தொகை 49-ஆம். இச்சங்கத்தின் கீழ் எல்லை கி. பி. 200; மேல் எல்லை கி. மு. 300. நெஞ்சையள்ளும் சிலம்பும், மணிமேகலையும், குறளும் பிறவும் தோன்றியது இக்காலத்தை ஒட்டியே தான்.

இந்த மூன்று சங்கம் பற்றிய அறிஞர் கருத்துக்களிலே வேற்றுமைகள் பல உள. பொதுவாக அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். 'இந்த முச்சங்க வரலாறே பொய்; கட்டுக்கதை; மூன்று சங்கங்கள் இருந்தன என்று சொல்லு வது அரபு நாட்டு ஈசாப் கதையை ஒத்தது' என்பது ஒருசாரார் கருத்து. 'இறையனார் களவியலுரை கூறும் கருத்துக்கள் அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை; மறுக்க முடியாதவை' என்பது மற்றொரு சாரார் கருத்து. முதல் வகையினர்க்கும் இரண்டாம் வகையினர்க்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.

முச்சங்கம் பற்றிய வரலாறுகளையும், சங்க இலக்கியங்களில் வருகின்ற கடல்கோள் பற்றிய குறிப்புகளையும், எகேல் போன்ற மேலை நாட்டாரது, குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உரைகளையும் பார்க்குங்கால், களவியல் உரைக் குறிப்புகளிலே ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது.

முச்சங்க வரலாற்றை முதல்வகையார் முழுதும் பொய் என்று முடிவுகட்டுவதற்குக் காரணம், அவற்றில் வருகின்ற புலவர்கள், அவை நடைபெற்ற ஆண்டுகள், ஆதரித்த அரசர்கள் ஆகியோரின் கற்பனைக்கெட்ட எண்ணிக்கை ஆகும்.

களவியலுரை கூறும் கற்பனைகளை ஒதுக்கி வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோமாயின், கீழ்வருகின்ற முடிபுக்கே வருவோம். கி.பி. 200க்கு முன்னே பல சங்கங்கள் பல்வேறு காலங்களிலே இருந்து தமிழ்மொழியிலே எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை இயற்றிச் செந்தமிழைச் செழுந்தமிழாகச் செய்திருக்கின்றன. பொய்ம்மையும், கற்பனையும், இடைச்செருகலும் நிறைந்த பாரதம், இராமகதை, விஷ்ணு புராணம், வாயு புராணம், வேதங்கள் ஆகியனவற்றையே வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளும்போது, அவை எவையும் இல்லாத சங்க இலக்கியங்களை வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளல் தவறாமோ?

தொல்காப்பியர் காலத் தமிழகம்
அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும். அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே இதனை,

"ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தோடு
சொல்கா மருபொருட் டொகை திகழ்பொருட்டே"

என்ற பாடல் இனிது விளக்கும்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் என்ன? கி. மு.வா? கி. பி. யா? கி. மு. என்பது டாக்டர் மு. வ. போன்ற பல புலவர் கருத்து. கி. பி. என்பது வையாபுரியார் போன்ற சிலர் கருத்து. இதில் எதுகொள்ளத்தக்கது? தள்ளத்தக்கது?

மொழிக்கு முதலில் வராத எழுத்துக்களுள் சகரக்கிளவியும் ஒன்று எனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலோ சகர முதன்மொழிச் சொற்கள் பல வருகின்றன. அவ்வாறு வருகின்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே ஒழிய அயன்மொழிச் சொற்கள் அல்ல. ஆகவே சங்கத் தொகைநூற்கட்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது போதரும். சங்கத் தொகை நாற்களின் கால எல்லை கி. மு. 300 - கி.பி. 200 என்பதாகும். எனவே தொல்காப்பியர் காலம் கி. மு.வுக்கு முந்தியதாகும். இதுமட்டுமல்ல; சங்கத் தொகை நூற்களிலே மோரியர் படையெடுப்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, மோரியர்கள் வலிவும் பொலிவும் அடைந்த காலம் சந்திரகுப்த மௌரியன் காலமாகும். அவன் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும். ஆக, தொல்காப்பியர் காலம் கி. மு. 300க்கு முந்தியதாகும்.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பாயிரத்தொடர். ஐந்திரம் என்பது பாணினீயத்துக்கு முந்திய நூலாகும். பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் டாக்டர் பந்தர்க்கார். எனவே கி.மு. 300க்கு முந்தியது ஐந்திரவியாகரணம். அஃது கி.மு. 500-இல் தோன்றியதாக இருக்கலாம். எனவே கி. மு. 500க்கும் - 300க்கும் இடைப்பட்ட காலம் தொல்காப்பியர் காலமாகும் என ஒருவாறு கூறலாம்.

பழந்தமிழர் நாகரிகம்

பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் நமக்குப் பேருதவி செய்கிறது. பண்டை மக்களது வழக்கங்கள், நடை, உடை, பாவனை முதலியவைகள் தொல்காப்பியத்திலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

பொருட்கு விரிவாக இலக்கணம் வகுத்துள்ள தொல்காப்பியர் பொருளை அகப்பொருள், புறப்பொருள் என இருவேறு பெரும்பிரிவு செய்துள்ளார். இவற்றுள் அகப்பொருள் என்பது அகத்து நிகழும் ஒழுக்கத்தைச் சொல்லுவதாகும். புறத்தே நிகழும் ஒழுக்கத்தைக் கூறுவது புறப்பொருளாகும். தலைவன் தலைவியரது அகத்து நிகழும் இன்பம் அகப்பொருளாகும். அறத்தினையும் பொருளையும் வெளிப்படையாகவும், வீட்டினைக் குறிப்பாகவும் உணர்த்துவது புறப்பொருள் ஆகும். புறவொழுக்கங்கள் பலவற்றிற்குக் காரணமானதும், அவற்றுளெல்லாம் சிறந்ததும் ஆகிய அரசரது ஒழுக்கமே புறப்பொருளிற் பெரிதும் பேசப்படுகின்றது.

முதலில் அகம் என்பதன் இலக்கணத்தையும், அதன் பிரிவாகிய ஏழ் திணைகளையும், அவற்றின் முதல், கரு, உரிப் பொருள்களையும் பார்ப்போம்.

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் ”- இது நச்சினார்க்கினியர் அகத்துக்குக் கூறும் இலக்கணமாகும். இவ்வகப்பொருளினை, கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழ் திணைகளாக ஆசிரியர் பிரித்துள்ளார். திணை என்பது ஒழுக்கம். இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். எஞ்சிய ஐந்து திணைகளும் மிகச் சிறப்புடையனவாகும். ஐந்திணை என்பது அன்புடைக் காமம் ஆகும். இதற்குரிய முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன உரிப் பொருள்களாகும். தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, ஊர், நீர், விலங்கு, மரம், பூ, புள், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் எனப்படும்.

முன்னர்க் கூறியது போன்று நிலம் குறிஞ்சி முதலிய ஐந்துமே. பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஆவணி மாதந் தொடங்கிக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும் பொழுதினை ஆறு வகையாகப் பிரித்தனர். இவ்வாறே நாளினை ஆறு கூறாகப் பிரித்து ஒவ்வொரு கூறுக்குமுரிய பத்து நாளிகை நேரத்திற்கும் ஞாயிறு தோன்றும் வேளை முதலாகத் தொடங்கிக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதையும் ஆறாகப் பகுத்தனர்.

அகவொழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும். அவற்றுள் களவு என்பது ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் எதிர்ப்பட்டு, மனம் ஒன்றுபட்டு, தம்முட் கூடிக் கலத்தலாகும். இவர்களது களவொழுக்கத்திற்குத் துணைபுரிவோர் பாங்கன், பாங்கி, செவிலி முதலியோராவர்.

களவொழுக்கத்திற்குப் பின்னர் முறைப்படி திருமணஞ் செய்துகொண்ட தலைவனும் தலைவியும் அறவழியே நின்று இனிய இல்லறம் நடத்துவது கற்பொழுக்கமாகும். இவ்வொழுக்கத்தின்கண், கல்வி கற்றல், நாடு காத்தல், தூது போதல், வேந்தர்க்கு உதவி செய்தல், பொருளீட்டல், பரத்தை விருப்பு ஆகிய இவற்றின் காரணமாய் தலைவன் மனைவியைப் பிரிய நேரிடும். அதுகால் தலைவி பிரிவுத் துன்பத்தை ஆற்றாது ஆற்றி இருப்பாள். ஆடவர் மகளிரொடு கடன்மேற் செல்லுதலும், பாசறைக்கண் அவர்கள் மகளிரொடு இருத்தலும் அன்று கடியப்பட்டன.

தலைவி கருவுற்றிருக்குங்கால் தலைவன் பரத்தையிடம் செல்லுதலும், அதன் காரணமாய் தலைவி வருந்தி ஊடுதலும், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களாக, தோழி, இளையர், அறிவர், கூத்தர் முதலியோர் விளங்கினர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. மேலும் காம இன்பத்தினை வேண்டுமளவு நுகர்ந்த பின்னர் தலைவனும் தலைவியும் இறுதியில் வீடு பெறுதற் பொருட்டுத் துறவினை மேற்கொள்ளுவர் எனவும் தொல்காப்பியம் கூறுகின்றது. அடுத்து புறத்திணையைப் பற்றிப் புகலுவாம்.

அகப்பொருளுக்கு ஏழு திணைகள் கூறியதுபோலவே தொல்காப்பியர் புறப்பொருட்கும் ஏழு திணைகள் கூறுகின்றார். அவை யாவன :

1. வெட்சித் திணை - பகைவரது நிரையைக் கவர்தல். நிரை மீட்டலும் இதன் கண்ணே அடங்கப்பெறும்.

2. வஞ்சித் திணை - பகைவரது நாட்டைக் கொள்ள எண்ணி போர்புரியச் செல்லுதல்.
3. உழிஞைத் திணை - பகைவரது மதிலை வளைந்து நின்று பொருதல். மதில் காத்தலும் இதன்கண் அடங்கப்பெறும்.
4. தும்பைத் திணை-பகைவருடன் கலந்து பொருதல்.
5. வாகைத் திணை- வெற்றி கொள்வது.
6. காஞ்சித் திணை-வீட்டின் காரணமாய் செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறுதல்.
7. பாடாண்டிணை - தலைவனது வீரம், கொடை, முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல்.

இத் திணைப் பெயர்களிற் பல பூக்களின் பெயராய் இருப்பதால், போர்க் காலத்தில் அவ்வப்பொழுது அறிகுறியாக வேறு வேறு மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வர் எனத் தெரியவருகிறது. மேலும் ஒரு அரசன் மற்றொரு அரசன் மேல் படையெடுப்பதற்கு முன்னர் தனது கருத்தை நிரைகவர்தல் (Cattle lifting) மூலம் தெரிவிப்பான் என்பதும், போருக்குச் செல்வதற்கு முன்னர் நாளும், புள்ளும் பிறவுமாகிய நிமித்தம் பார்த்தனர் என்பதும், வீரத்தோடு கருணையும் உடையவர்களாய் தமிழ் வீரர் விளங்கினர் என்பதும், பகைவரது நாட்டில் 'எரி பரந்தெடுத்தல்' (தீக் கொளுத்தல்) நடந்தது என்பதும், நகரத்தைச் சுற்றிலும் மிக்க உரனுடையதும் பொறிகள் பொருத்தப் பெற்றதுமாகிய ‘முழுமுதலரணம்' இருந்தது என்பதும், அதனைச் சுற்றிலும் முதலைகள் வாழும் பெரிய அகழி இருந்தது என்பதும், யானைப்படை, குதிரைப்படை தமிழ்நாட்டில் இருந்தன என்பதும், போரில் மாண்டவர்களைத் தெய்வமாக வணங்கினர் என்பதும், கொள்ளை கொண்ட பொருள் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பதும், மகிழ்ச்சியின் காரணமாய் வீரர்கள் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதும், இன்ன பிறவும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

சுருங்கக்கூறின் தொல்காப்பியர் காலத்திலேயே தண்டமிழ் நாடு சிறக்க வாழ்ந்து வளம்பெற்ற நாடாய் விளங்கியது.

கடைச்சங்க காலம்

தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்க காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிளினி, தாலமி என்போரின் குறிப்புகளும், பெரிப்ளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம்.

தமிழ் வேந்தர்கள்

சங்க காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ 300 பேர் தமிழகத்தை ஆண்டனர். வளமிக்க வயல் சூழ்ந்த நகரப் பகுதிகளும் கடற்கரையும் முடியுடை மன்னரால் ஆளப்பட்டன. குன்று நிறைந்த பகுதிகளும், காடும் மேடும் நிறைந்த சிற்றூர்களும், வேளிர்கள், வள்ளல்கள் ஆகிய குறுநில மன்னரால் ஆளப்பட்டன. குறுநில மன்னருள் முடியுடை மூவேந்தர்க்கு அடங்கியோரும் உண்டு; அடங்காது தனித்து விளங்கியோரும் உண்டு.

தமிழகத்தை மூவேந்தர் பாகுபாடு செய்துகொண்டு ஆண்டார்கள். அவர்கள் ஆண்ட மூன்று பகுதிகளும் முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என வழங்கப்பட்டன. எனவே அவர்கள் சேர சோழ பாண்டியரெனப்பட்டனர்.

வடக்கே வானியாறு, தெற்கே கோட்டாறு, கிழக்கே மேற்குத்தொடர்ச்சி மலை, மேற்கே கடல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலம் சேர நாடு ஆகும். பாண்டிய நாடு என்பது தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ளதாகும். சோழ நாடு என்பது வெள்ளாற்றுக்கும் தென் பெண்ணைக்கும் இடையே பரந்து விளங்குவது. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடாகும்.

பாண்டியருக்கு வேப்பந்தாரும், சேரருக்குப் பனந்தாரும், சோழருக்கு ஆத்திமாலையும் அடையாள மாலைகளாம். பாண்டியரின் சின்னம் மீன்; சோழரின் சின்னம் புலி; சேரரின் சின்னம் வில். பாண்டியரின் தலை நகர் மதுரை நகர்; கடற்கரை நகர் கொற்கை. சோழரின் தலைநகர் புகார், உறையூர்; துறைமுகம் புகார். சேரருக்குத் தலைநகர் வஞ்சி; துறைமுகம் முசிறி. இன்று மலையாளம் வழங்கும் பகுதி முழுதும் சேர நாடாய் விளங்கியது. அந்நாடு அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாகவே இருந்தது. நெடுநாளைக்குப் பின்னரே அது மலையாள நாடாயிற்று.

இன்று கிடைக்கும் இலக்கியச் சான்றுகளின் மூலம் மிகவும் பழமையான, சிறப்பான சோழ மன்னன் கரிகாலன் என்பதை அறிகிறோம். இக் கரிகாலனே சோழ மன்னர்களிற் சிறந்தவன். "வலிமை மிக்க புலி கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போல பகைவரது சிறையிலிருந்து வளர்ந்த கரிகாலன் பிள்ளைப் பருவமுதலே வலிமை மிக்கவனாகவும், சீற்றத்திலே முருகப்பெருமானை ஒப்பவனாகவும் விளங்கினான். பின்னர் அவன் பகைவரை வென்று முறைப்படி அரசுரிமையைப் பெற்று, பகைவர் நாடுகளைக் கைப்பற்றிச் சோழ வல்லரசை நிறுவினான். பகைவர் ஊர்களில் கூகைகள் இருந்து குழறின; மதில்கள் அழிந்தன. சேர பாண்டியரை வெண்ணியில் வெற்றிகண்டவன்; ஆத்தி மாலையை அணிபவன்; நினைத்தவற்றை நினைத்தவாறே முடிக்கும் ஆற்றல் பெற்றவன்; அருவா நாட்டார், குட்ட நாட்டார், வடநாட்டார், இருங்கோ வேளிர் முதலியவர்களை வென்றவன்; காடு கெடுத்து நாடாக்கியவன்; குளம் தொட்டு வளம் பெருக்கியவன்; கோயில் கட்டியவன்; தமிழ்க்குடிகளைக் காத்தவன்” என்றெல்லாம் பத்துப்பாட்டு இவனது அருமை பெருமைகளைக் கூறுகின்றது.

கரிகாலன் சோழநாட்டரச பதவியை அடைவதற்கு மிகவும் பாடுபட்டான். அரசனானதும் முதலில் உள்நாட்டுக் குழப்பத்தைத் திறம்பட அடக்கினான். தன்னை எதிர்த்த சேரனையும் பாண்டியனையும் வெண்ணி என்னும் இடத்தில் வெற்றிகண்டான். இதன் பிறகு இவன் வடநாட்டின் மீது படையெடுத்தான் எதிர்த்த வடநாட்டு மன்னரை எல்லாம் முறியடித்தான். பின் இமயம் சென்று தன் புலிக்கொடியைப் பொறித்து மீண்டான். பேராசிரியர் பண்டித மு. ராகவய்யங்கார் கரிகாலன் இமயத்தில் புலி பொறித்த இடம் சிக்கிம், பூட்டான் என்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள மலைகள் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். 'இம்பீரியல் கெச்ட்டீர் ஆப் இந்தியா’ ( Imperial Gazetteer of India ) என்ற நூலும் மேற்குறித்த இடத்தில் ‘சோழன் மலை', 'சோழன் கணவாய்' என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன என்று கூறுகின்றது.

வடநாடு சென்று வாகையுடன் திரும்பிய கரிகாலன் அடுத்து இலங்கை மீது படையெடுத்து அதனை வென்றான். 12000 கைதிகளைப் பிடித்துக்கொண்டு தன்னாடு திரும்பினான். திரும்பிய பின்னர் அக்கைதிகளைக் கொண்டு காவிரி நதியின் இரு கரைகளையும் செப்பனிட்டான். ஈழத்தின் பழங்கால நூல்களான மகாவமிசம், தீப வமிசம் இதனைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன. கரிகாலனது காவிரி அணை நூறு மைல் நீளம் இருந்ததென இவை கூறுகின்றன. கரிகாலனது இவ்வழியாப் பணியைப் பற்றித் திருவாலங்காட்டுப் பட்டயங்களும், ரேனாட்டுச் சாசனங்களும் நன்கு கூறுகின்றன.

கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார் பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது. இந்நகர் திண்ணிய மதிலினையும், புலி அடையாளம் பொறிக்கப்பட்ட வலிய கதவுகளையும், பல உணவுச் சாலைகளையும், பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்ற வெண் சுவருடைய கோவில்களையும், அமணப்பள்ளிகளையும், குளங்களையும், முனிவர் தங்கும் இளமரக்காவினையும், காளி கோட்டத்தையும் கொண்டு விளங்கியது.

பட்டினப்பாக்கத்தில் பரதவர் வாழ்ந்தனர். இவர்கள் உயர் நிலை மாடங்களிலிருந்து செல்வ மகளிர் பாடும் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். மாடங்களில் எரியும் விளக்குகளின் உதவியால் அவர்கள் வைகறையில் கட்டுமரங்களிற் செல்வர். இவர்கள் வாழும் அகன்ற தெருவில் உள்ள பண்டகசாலை முற்றத்தில், சுங்கம் மதிப்பிடப்பட்டு, புலி முத்திரை இடப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குவிந்துகிடக்கும்.

பட்டினக்கடைத்தெருவில் வாயில்கள் தோறும் பலவகைக் கொடிகள் இரண்டு வரிசைகளிலும் கட்டப்பட்பட்டிருக்கும். மிளகு, பொன், சந்தனம், அகில், முத்து, பவளம் பிறவும் எங்கும் மிகுதியாகக் காணப்படும். வெளி நாட்டார் பலரும் பட்டினத்தில் குடியிருப்பர். இந்நகர்வாழ் வேளாளர் அருள் ஒழுக்கம் நிறைந்தவராகவும், வணிகர் நடுநிலை பிறழாத நெஞ்சினராகவும் விளங்கினர். அதிகாலையில் மகளிர் பக்திச்சுவையுடைய பாடல்களைப் பாடுவர். கோவில்களில் குழல், யாழ், முரசு முதலியன ஒலிக்க விழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும். பல படிகளையுடைய உயர்ந்த மாடங்களில் சிவந்த அடியினையும், கிளிமொழியினையும், பவள நிறத்தினையும், மயிலின் சாயலையும் உடைய மங்கையர் நின்று விழாவினைக் கண்டுகளிப்பர். இச்செய்திகளை எல்லாம் பட்டினப்பாலையில் பரக்கக் காணலாம்.

கரிகாலனுக்குப் பின்பு கிள்ளிவளவன் சோழ நாட்டின் அரசுரிமையைக் கைப்பற்றினான். இவன் காலத்தில்தான் புகாரைக் கடல் விழுங்கியது என மணிமேகலைக் காப்பியத்தால் நாம் அறிகிறோம். இதன் பின்பு சோழநாட்டில் குழப்பமும் கொந்தளிப்புமே ஏற்பட்டன. இக்காலை சேரன் செங்குட்டுவன் சோழநாட்டு அரசியலில் தலையிட்டு அமைதியினை ஏற்படுத்தினான். புறநானூற்றின் மூலம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற சோழ அரசர்களும் சோழ நாட்டை நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் அறிகின்றோம்.

'சோழ அரசர்களுள்ளே கரிகாலன் எப்படியோ அப்படியேதான் சேரமன்னருள் செங்குட்டுவன். சேரன்செங்குட்டுவன் சிறந்த வீரன்; செங்கோலன் தமிழரசரை வடவர் இகழ்ந்தனர் எனக்கேட்டு உடனே வடநாட்டின் மீது படையெடுத்துச்சென்றான். செல்லும் வழியிலே நூற்றுவர் கன்னர் என்ற வடநாட்டு மன்னர்களின் உதவி கிடைத்தது. பின்னர் வடக்கே சென்று கனகவிசயர் என்னும் ஆரிய மன்னரை முறியடித்துச் சிறைப்பிடித்தான். பனிவரையில் விற்கொடி பொறித்துவிட்டுப் பத்தினித்தேவிக்குப் படிமஞ்சமைக்க எடுத்த கல்லைக் கனகவிசயர் தலைமீதேற்றித் தமிழகம் மீண்டான். முன்னர் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் இவன் தன்னை எதிர்த்த சோழ பாண்டியரை வெற்றிபெற்றான். அடுத்துக் கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகைவரைக் கடலிற் படைகளைச் செலுத்தி, செங்குட்டுவன் வென்றனன். மேலும் தன்னை எதிர்த்த பாண்டிய நாட்டுத் தளபதி பழையனையும், சோழர் ஒன்பதின்மரையும் இவன் தனித்தனியே வெற்றிகொண்டான் என்றும் தெரியவருகின்றது. சுருங்கக்கூறின் சேரன் செங்குட்டுவன் தலைசிறந்த தமிழ்நாட்டு வேந்தர்களில் ஒருவன். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் முழுவதும் இவன் வெற்றி பற்றியதேயாகும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு அடைந்தனர். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனாகிய இந்நெடுஞ்செழியனால் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோற்கடிக்கப்பட்டான். இந்நெடுஞ்செழியன் மீது பாடியதே நெடுநல்வாடை. இதனைப் பாடியவர் நக்கீரர். மதுரைக் காஞ்சியும் இவனைப் பற்றியதே. இவன் இளமைப் பருவத்தில், சேரலிரும்பொறையோடு, சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ, வேண்மான், பொருநன் என்ற எழுவரையும் ஒருசேர வென்றான். இவன் புலவர்களிடத்து மிக்க அன்புடையவன். 'நகுதக்கனரே' என்னும் புறப் பாடலைப் பாடியவனும் இவனே.

இவனது காலத்தில் பாண்டியர் கோநகரமாகிய மதுரை தலைசிறந்த நகரமாய் விளங்கியது என்பதை மதுரைக்காஞ்சி மூலம் அறியமுடிகின்றது. நிலமடந்தையின் முகத்தைப் போலப் பொலிவுடன் விளங்கும் மதுரையினை வையை ஆறு அணி செய்ய, ஆழமுடைய அகழியாலும், பேரரசராலும் அழிக்கமுடியாத கோட்டை மதில்களாலும் முறையே சூழப்பட்ட இந்நகரினது கோட்டை வாயில் நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையும், மாடங்களையும் கொண்டிலங்கியது. இக்கோட்டைக்குள் இருபுறங்களிலும் உயர்ந்து தோன்றும் சாரளங்களுடன் கூடிய வீடுகளை உடைய அகன்ற தெருக்கள் இருந்தன. கடைத்தெருக்கள் எப்பொழுதும் ஆரவாரத்துடன் விளங்கின. கட்டடங்கள் தோறும் கொடிகள் பறந்து பட்டொளி வீசின. நால்வகைப் படைகளும் நகரத்தில் இருந்தன. கோவில்களில் எப்பொழுதும் விழா நடந்துகொண்டே இருக்கும். இசையுடன் இன்னியம் எங்கும் கேட்கும்; முரசம் முழங்கும். இரவிலும் கூட கடைகள் பல திறந்திருக்கும். சுருங்கக்கூறின் பகலென்றும் இரவென்றும் பாராமல் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் எழுப்பிய ஆரவாரம் எங்கும் கேட்கும். இந்நிலையில் மதுரைமாநகர் மாண்புடன் விளங்கியது.

முடியுடை மூவேந்தரைப்போலவே உரிமையுடனும் வள்ளண்மையுடனும் வாழ்ந்த வள்ளல்கள் எழுவராவர். இவர்கள் புலவரைப் பெரிதும் போற்றிப் புரந்தனர். வறிஞரைத் தம் வண்மையாற் காத்தனர். நத்தத்தனார் என்னும் புலவர் இந்த எழுபெரும் வள்ளல்களையும் தன் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் பாடியுள்ளார்.

பாரி என்பவன் பறம்பு நாட்டை ஆண்ட வள்ளல். இவனோடு நட்புப் பூண்டு ஒழுகியவர் கபிலராவர். இவன் வறியவர்க்கும் அறிஞர்க்கும் வரையாது வழங்கிய வள்ளல் ஆவான். இவனையே முடியுடை மூவேந்தர் எதிர்த்தனர். காரி என்பவன் வீரத்திலும் கொடை ஈரத்திலும் சிறந்தவன். பேகன் என்பவன் பழனிமலைப் பகுதியை ஆண்டவன். மயிலுக்குப் போர்வை தந்தவன். இவ்வாறே ஓரி, நன்னன், அதியமான், நள்ளி முதலிய வள்ளல்களும் தம் வண்மையால் நாளும் புகழ்பரப்பி வாழ்ந்தனர்.

மக்கள்

பண்டைத் தமிழகத்திலே மக்கள் தம் தொழில் பற்றிப் பிரிக்கப்பட்டார்களே தவிர வர்ணாசிரம தருமப்படி பிரிக்கப்படவில்லை. தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். மலைப்பகுதி குறிஞ்சி எனவும், காட்டுப்பகுதி முல்லை எனவும், ஆற்றுப்பகுதி மருதம் எனவும், கடற்கரைப்பகுதி நெய்தல் எனவும், வளங்குன்றிய பகுதி பாலை எனவும் வழங்கப்பட்டன . குறிஞ்சி நிலத்தவர் குறவர்; முல்லை நிலத்தவர் ஆயர்; மருத நிலத்தவர் வேளாளர்; நெய்தல் நிலத்தவர் பரதவர்; பாலை நிலத்தவர் வேடர், மறவர். மேற்குறித்தவாறு நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழ் மக்கள், அவற்றிற்கேற்ப ஐவகைப்பட்ட அகவொழுக்கம் வகுத்து, அதனை ஐந்திணை என்று பெயரிட்டழைத்தனர்.

காதல் வாழ்வு பெரிதும் மதிக்கப்பட்டது. தமிழ் மக்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். பொருளீட்டலுக்கும், இன்பம் பெறுவதற்கும் அறத்தின் உதவியினையே நாடினர். தமிழர்கள் வீரஞ்செறிந்தவர்களாகத் திகழ்ந்தனர். நாட்டுக்காக, மன்னனுக்காக உயிரைக்கொடுக்கும் எண்ணம் உள்ளவர்களாய் வாழ்ந்தனர். ஆடவர்போலவே பெண்டிரும் தறுகண்மை உடையவர்களாய் வாழ்ந்தனர்.

பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன.

உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டமையால் அவைகள் புகையைப்போலவும், பால் நுரையைப்போலவும் சிறந்து விளங்கின. கன்னார், தச்சர், கப்பல் கட்டுவோர், பொற் கொல்லர், இசைக்கருவிகள் செய்வோர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் பண்டு தமிழகத்தில் நன்கு விளங்கினர்.

ஒழுக்கமே மக்கட் பண்பு என்பது தமிழர் கொள்கையாதலால் ஒழுக்கம் உயிரினும் அதிகமாகப் போற்றப்பட்டது. “தீதும் நன்றும் பிறர் தரவாரா” “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலும் இலமே" போன்ற உயர்ந்த கொள்கைகளைச் சங்ககால மக்கள் பொன்னேபோற் போற்றி ஒழுகினர்.

பண்டு தமிழ்மக்கள் வீரஞ்செறிந்தவராகவும், காதல் கனிந்தவராகவும், கடமை உணர்வுடையோராகவும், பண்பு நலன்கள் அனைத்தும் கொண்டவராகவும் விளங்கினர். இன்பம், அமைதி. அழகு இம்மூன்றும் தமிழ் நாடெங்கணும் களிநடம் புரிந்தன.

வாணிகம்

சங்ககாலத்தில் தமிழகம் மேனாடுகளுடனும், கீழ் நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு பெரிதும் கொண்டிருந்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டும். மேலும் பழைய ஏற்பாடும், செனகா, பெட்ரோனியசி, பிளினி, தாலமி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆகியவற்றில் தமிழர் மேலை நாட்டாரோடு செய்த வாணிகத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. இதுமட்டுமா? ரோம நாணயங்கள் பல தமிழக மண்ணிற் கிடைத்துள்ளன. தோகை, மயில், அரிசி, இஞ்சி, முத்து ஆகிய சொற்கள் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.

மேற்கே யவனமும் கிரேக்கமும் தமிழகத்தோடு வாணிகம் செய்தன; கிழக்கே தமிழகம் மலேயா, சீனா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தது. பாண்டிய நாட்டிலிருந்து முத்தும், சேர நாட்டிலிருந்து தந்தம், மிளகு, முதலியனவும், சோழ நாட்டிலிருந்து பட்டும் பிறவும், பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. வெளிநாடுகளிலிருந்து பாவை விளக்கு, மது வகைகள், தங்கம், குதிரை முதலியன தமிழகத்தில் வந்து குவிந்தன. யவன வீரர்கள் தமிழ் மன்னர்தம் காவலர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். இவற்றைக் கீழ்வரும் வரிகள் நன்கு வலியுறுத்தும்.

'யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' (சிலம்பு)
“நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடன் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்" (பத்துப்பாட்டு)

தமிழகத்து முத்துக்கு மேலை நாட்டிலே நல்ல விலையிருந்தது. மேலை நாட்டு அழகிகள் தமிழகத்தின் முத்தின் மீது மாறாக்காதல் கொண்டு விளங்கினர். இதனால் ஏராளமான தங்கம் அந்நாடுகளிலிருந்து தமிழகத்திலே வந்து குவிந்தது. பிளினி எனும் ரோம வரலாற்றாசிரியன் ரோம் நாட்டுப் பெண்கள் முத்தின்மீது கொண்டுள்ள வெறியையும், அதனால் ஏராளமான பொன் செலவாவதையும் கண்டு மிகவும் மனம் புழுங்கினான். கையசு என்ற மன்னனின் மனைவியாகிய இலாசியசி என்பவள் ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு 40,000,000 செச்ட்டர்கள் மதிப்புள்ள முத்தை அணிந்து கொண்டு வந்தாளாம். அதுமட்டுமல்ல; யாராவது அவள் அணிந்துள்ள முத்தின் விலையை வினவின் அதனை உடனே தெரிவிக்க அந்த முத்து விலைச்சீட்டை (Cash bill) யுங்கூட. உடன் கொண்டுவந்து இருந்தாளாம். இது பற்றிப் பிளினி மேலும் கூறுவதாவது:- "நமது ஆரணங்குகள் தங்களின் பெருமை காதிலும் கையிலும் ஒளிவிடும் முத்துக்களிலே இருப்பதாக எண்ணுகிறார்கள். முத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் போதும். அவ்வளவுதான், நமது நங்கைகளின் உடல் பூரிப்படைகிறது. உள்ளம் களிப்பு வெள்ளத்திலே மிதக்கிறது. அதுமட்டுமல்ல; ஏழை எளியவர்கள் கூட அந்தச் செல்வமகளிரைப் பின்பற்றலாயினர். 'முத்தும் முடியுடை வேந்தனும் ஒன்றே. முத்தணிந்து செல்வோள் முன் முடியுடை வேந்தன் செல்வான்' என்பது மக்களின் எண்ணம். இதுமட்டுமல்ல; முத்தைப் பெண்டிர் பாதத்தில் அணிகின்றனர். செருப்பு முழுவதும் முத்தே நிறைந்துள்ளது. முத்தை அணிந்தால் மட்டும் அவர்களுக்குப் போதாது. முத்தின் மீது உலவவேண்டும் என்பதும் அந்நாரீமணிகளின் மனப்பான்மையாகும்."

இதுமட்டுமா? தமிழக மன்னர்கள் ரோம் நாட்டு மன்னன் அகச்டசுசீசருக்கும், சீன மன்னனுக்கும் தூது அனுப்பியுள்ளனராம். தமிழ் வணிகர்களுக்குக் கடலே அஞ்சியதாம். வெளிநாட்டு வாணிகத்தைப் போன்றே உள் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. அவ்வியாபாரம் பெருநகர்களிலன்றிச் சிற்றூர்களிலும் பரவி இருந்தது. வணிகர் வியாபாரப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு வண்டிகளில் ஏற்றிச்சென்றனர். பகலில் திறந்திருக்கும் கடைவீதிகள் நாளங்காடி எனவும், இரவில் திறந்திருக்கும் கடைவீதிகள் அல்லங்காடி எனவும் வழங்கப்பட்டன. பண்டு வாணிகம் வளம் பெற்று விளங்கியமைக்கு முக்கிய காரணம் அன்று நாடு முழுதும் நல்ல சாலைகள் இருந்தமையே.

தமிழ்நாட்டுப் பண்டைய வாணிகச் செழிப்பைப் பற்றிப் பல ஆங்கில வரலாற்று நூல்கள் சிறந்த முறையிலே பேசுகின்றன.

அரசியல்

பண்டைத் தமிழகத்தில் நிலவிவந்த ஆட்சி முடியாட்சியே. எனினும் குடியாட்சியே அந்த முடியாட்சி மூலம் நடைபெற்றது. இதனைப் புறநானூறு நன்கு தெளிவாகக் காட்டுகின்றது. மன்னன், 'மக்களின் நலனே தன் நலன்; மக்கள் வாழ்வே தன் வாழ்வு' என்று எண்ணி முறைபிறழாது, அறந்திறம்பாது நெறியே நின்று ஆட்சிபுரிந்தான். காவலர்கள் புலவர் பெருமக்களுக்கு நல்ல மதிப்பை அளித்தனர். புலவர் சொல்லைப் பொன்னேபோலப் போற்றி ஒழுகினர். புலவரும் மன்னன் நன்னெறி விலகிப் புன்னெறி தழுவி இடர்ப்படுகையிலே சென்று தூயது துலக்கித் தீயது விலக்கி அறிவுகொளுத்தினர். இதனைக் கோவூர்க்கிழார் வரலாறு ஒன்றே உறுதிப்படுத்தும். முன்னர்க் கூறியவாறு தமிழகம் பண்டைக்காலத்திலே முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டது. அவர்களோடு, பாரி, காரி போன்ற வேளிரும், குறுநில மன்னரும் இருந்து நாடு காவல் செய்தனர்.

மன்னர்கள் ஆறில் ஒருபங்கு இறைபெற்று முறை செய்தனர். மேலும் அவர்கள் மக்களின் காட்சிக்கெளியராய் வாழ்ந்துவந்தனர். இதனால் மக்களும் மன்னனை எளிதிற் பார்த்துத் தம் குறைகூறி முறைசெயப்பெற்றனர்.

பண்டைத் தமிழ் ஆட்சிமுறையைச் செவ்வனே அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது குறளே. அரசன் என்பவன் யார்? அவன் கடமை என்ன? அவன் குடிகட்குச் செய்ய வேண்டியன என்ன? என்பன போன்ற வினாக்கட்கு விடை காண வேண்டுமாயின் குறளே பெரிதும் உதவும். மன்னனுக்கு அரசியலில் உதவ ஐம்பெருங்குழுவும், எண் பேராயமும் இருந்தன. அவற்றின் துணைகொண்டே ஆட்சி நடைபெற்றது

கல்வி முறை

சங்ககாலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான்.

'உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
.................................................................
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்'

என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும். அதுமட்டுமின்றி அங்கங்கே வரும் வானநூற் கருத்தும், மருத்துவமுறைக் குறிப்பும் பண்டைக்காலக் கல்வி முறையை நன்கு தெளிவுறுத்தும்.

பண்டு மன்னருட் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். பெண்பாலரும் கல்வியிற் சிறந்து விளங்கினர். பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார், நச்செள்ளையார், குறமகள் இளவெயினியார், ஒளவையார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர். சங்கமிருந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்கள் பற்பல நூல்களியற்றிப் புகழ்பெற்றனர். சுருங்கக் கூறின் அக்காலத்தில் கல்வியின் உயர் நிலை நன்கு உணரப்பட்டது.

பொருளாதாரம்

சங்ககாலப் பொருளாதாரம் ஓரளவு நல்ல நிலையிலேயே இருந்தது. பெரும்பாலும் பண்டமாற்றே வழக்கத்தில் இருந்துவந்தது. உள் நாட்டு வாணிகம் வண்டியின் மூலமாகவும், வெளிநாட்டு வாணிகம் கலத்தின் மூலமாகவும் நடைபெற்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நால்வகை நிலப்பொருட்களும் வந்து குவியுமிடம் மருதமாகும். குறிஞ்சி நில மக்கள் தமது தேன், சந்தனம், அகில் முதலியனவற்றையும், முல்லை நிலத்தார் பாலையும் மோரையும் தயிரையும், நெய்தல் நிலத்தார் உப்பு முதலியவற்றையும், மருத நில மக்களுக்குக் கொடுத்து நெல்லைக் கொண்டு செல்லுவர். எனவே சங்ககாலத்திலே பொருளியல் வளம் செறிந்த நிலம் மருதநிலமாகும்.

போர் முறை

இக்காலத்திலே நடக்கும் போர் அறம் திறம்பிய போராகும். ஆனால் சங்ககாலத்திலோ போர் அறவழியிலேயே நடைபெற்றது, முன்னறிவுப்புடனேயே போர் நடைபெற்றது. போர் செய்ய விரும்புவோர் முதலிலே பகைவர் நாட்டகத்தே சென்று பறையறைவர். பிள்ளை பெறாதவரும், பிணியுடையோரும், பார்ப்பனரும், பிறரும் தத்தம் புகலிடம் நோக்கிப் போகுமாறு கூறி, அங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இஃதறிந்த பிற நாட்டார் ஆநிரைகளை மீட்கப் போருக்கு வருவர். உடனே போர் தொடங்கும். போரிலே புறமுதுகிட்டோடலும், அவ்வாறு ஓடுவார் மீது படை ஓச்சலும் தவறு எனக் கருதப்பட்டன. ‘போர்க் குறிக் காயமே புகழ்க்குறி காயம்' என்பது பன்டைத்தமிழ் வீரர்களின் இதய நாதமாகும். போரில் இறந்தோருக்கு நடுகல் நடுவது வழக்கமாம். போரில் புண்பட்டோர் வடக்கிருந்து உயிர் நீத்தலும் அக்காலத்தில் உண்டு.

கலைகள்

சங்ககாலத் தமிழகம் கலை நலத்தால் கவினுற விளங்கியது. சிற்பத்தால் சிறந்தும், ஓவியத்தால் உயர்ந்தும், இசையால் இனிமை பெற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். முத்தமிழ் முழக்கம் வீதிதோறும் கேட்டது. இசைத்தமிழ் சங்க காலத்தில் நன்கு போற்றப்பட்டது. பெருநாரை, இசை நுணுக்கம் முதலிய இசைத்தமிழ் இலக்கண நூல்களும், சிலப்பதிகாரம் போன்ற இசைத்தமிழ்ச் செய்யுள் நூல்களும் சங்க காலத்தில் எழுந்தன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழு சுரங்களும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பண் வகைகளும், தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்ற நால்வகை இசைக் கருவிகளும், பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் முதலிய யாழ்களும் சங்க காலத்தில் வழக்கில் இருந்தன. இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் , பாடினியர் முதலியவர்களை மக்களும், மன்னரும் பெரிதும் போற்றினர்.

அக்காலத்தில் கோவில்கள் செங்கல், மரம் இவற்றால் கட்டப்பட்டன. சுவர்மேல் கண்ணைக் கவரும் வகையில் சுண்ணம் பூசப் பெற்றிருந்தது. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரது கீழ்வரும் பாடலால் அறியலாம்.

"இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை" (அகம்-167)

சோழர் பெருநகராகிய காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளிலே மக்களை மயக்கும் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

"சுடுமண் ஒங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம்"

என மணிமேகலை கூறுவதிலிருந்து அறியலாம். மேலும் அக்காலத்தில் மண்ணினும், கல்லினும், மரத்தினும் சுவரினும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

சிற்பத்தில் சிறந்து விளங்கிய செந்தமிழ் நாடு, ஓவியத்திலும் உயர்ந்து விளங்கியது. சுவர், மரம், துணிச் சீலை, முதலியவற்றில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓவியங்களைத் தமிழ் மக்கள் எழுதி மகிழ்ந்தனர். அரண்மனை, கோவில் மண்டபம் இவற்றின் சுவர்களில் நல்ல நல்ல ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினர். அரண்மனையின் ஒரு பகுதி சித்திர மாடமாக விளங்கியது. பாண்டிய மன்னனது சித்திர மாடத்தை ,

"வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொரு கொடி வளை இக்
கருவொடு பெரிய காண்பின் நல்லில்"

என நெடுநல் வாடையும்,

"கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செபியன் றன்ன செஞ்சுவர் புனைந்து"

என மதுரைக் காஞ்சியும் போற்றிப் புகழ்கின்றன. பாண்டியன் நன்மாறன் சித்திர மாடத்தில் உயிர்நீத்த காரணத்தால் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புலவர்களால் அழைக்கப்பட்டான். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் மூலம் திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரமாடம் இருந்தது எனவும், முருகனை வணங்கிய பின்னர் மக்கள் இம்மாடத்திற்குச் சென்று அங்கு எழுதப்பட்டிருந்த காமன், ரதி, அகலிகை முதலிய பலவகைப்பட்ட ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும் தெரிய வருகின்றது.

"நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்" (பரி-18')

"இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளகலிகை இவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றியபடி யிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல வெழுத்து நிலை மண்டபம்" (பரி-19)

இதுவரை கூறியவாற்றான் சங்ககாலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில்தான் தமிழன் நாகரிகமிக்கவனாய் வாழ்ந்தான். பற்பல வகை உணவுண்டு, பட்டினும், நூலினும் ஆடை உடுத்து, கோட்டையையும் கொத்தளமும் கொண்டு வாழ்ந்தான். மேலும் நல்லரசாட்சி கொண்டு நல்லறிவு கொளுத்தும் கலை நலம் பல பெற்று, உயர் வாழ்க்கை நடாத்தினான். நஞ்சு பெய்வதைக் கண்டும் அதனை உண்டு அமைவர் நனி நாகரிகம் வேண்டுபவர் என்று கூறுகிறது தமிழ் வேதம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுரைத்தான் நற்றமிழ்ப் புலவன் ஒருவன். இவ்வுணர்ச்சி இன்றிருக்குமாயின், உலகப்பேரச்சம் நீங்குமன்றோ? “தீதும் நன்றும் பிறர்தர வரா” என்று உலக உண்மையை உயர்முறையில் விளக்கினான் அதே தமிழன். உலகம் உய்ய, உயர்வாழ்வு பெறத் தமிழர்தம் பண்டைப்பண்பாடு பெரிதும் உதவும் என்பதும் இதனால் பெறப்படுகிறதன்றோ?

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என அக்கால மக்கள் எண்ணினர். இதனை,

'தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே' (புறம். 182)
 'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன்' (புறம், 134)

'தனக்கென வாழாப் பிறர்க்குரிய யாள' (அகம். 54)
‘பிறர்க்கென வாழ்தி நீ' (பதிற். 38)

என்ற சங்ககாலப் பாடல் வரிகள் மூலம் நன்கு அறியலாம். செய் நன்றி மறத்தல் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.

'ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென' (புறம். 34)

சமய நிலை

திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்' பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை யேறுதலும், அன்றிக் கைம்மை நோன்பு நோற்றலும் உண்டு என்றும் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன.

காப்பிய காலம்

தமிழக வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் காப்பிய காலமாகும். காப்பிய காலம் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய காலமாகும். இவ்விரட்டைக் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் என்பது நெஞ்சையள்ளும் செந்தமிழ்க் காப்பியம் ஆகும். மணிமேகலை அத்துணை சிறப்புடையதன்று.

காப்பிய காலத்திலே நிலவிய தமிழ்ச் சமுதாயத்தின் நிலை, அக்காலத்துச் சமயநிலை, மக்களிடையே உலவிய பழக்க வழக்கங்கள் முதலியவற்றை நன்கு அறிய நமக்குத் துணைபுரிவன இந்த இருபெரும் காப்பியங்களேயாம். இந்த இரண்டு காப்பியங்களிலும், வெவ்வேறு சமயச் சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அவற்றை இனிப் பார்ப்போம்.

காப்பிய காலச் சமயச் சூழ்நிலைக்கும் சங்ககாலச் சமயச் சூழ்நிலைக்கும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை இருகால இலக்கியங்களையும் கற்றோர் அறியலாம். சங்ககால இலக்கியங்களிலே கோவில்களைப் பற்றிய குறிப்புகள் மிக மிகக் குறைவு. மேலும் சங்கத்தமிழ்ச் சமுதாயத்திலே சமயத்துக்கு அளிக்கப்பட்ட இடமும் செல்வாக்கும் மிக மிகக் குறைவு. அதுமட்டுமல்ல; சமயத்தைச் சேர்ந்த புலவர்கள் சமயப் பிரசாரம் செய்யவில்லை; சமயம் பற்றிய நூல்களை எழுதவில்லை. மாறாக, பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வகுத்த அகம் புறம் பற்றியே பாடல்களை இயற்றினர்.

ஆனால் காப்பிய காலத்திலே சமண, புத்த, வைதிக சமயங்களுக்குரிய கோவில் பல காணப்படுகின்றன. சதுக்கப் பூதம் என்ற ஒன்று காணப்படுகின்றது. புகார், வஞ்சி, மதுரை, காஞ்சி ஆகிய தலைநகரங்களிலே பல கோவில்கள் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் ஓரளவுக்குத் தன் சமயக் கருத்துக்களைப் பொதிந்துள்ளார். ஆனால் மணிமேகலையிலோ சமயம் பேருருக் கொண்டு காணப்படுகின்றது. நூல் முழுதும் சமயப்பிரசாரமே. சமயவாதப் போர்கள் நடைபெறுகின்றன. இளங்கோவடிகள் சமணராயினும் பிற சமயங்களைத் தாழ்த்திப் பாடவில்லை. ஆனால் மணிமேகலை ஆசிரியரோ புத்தமே சிறந்தது என்று கூறுகிறார். மணிமேகலை மூலம் பிற சமயங்களோடு போராட்டம் நடத்துகிறார். பிற சமயங்களின் குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறார். இறுதியில் புத்த சமயத்துக்கு வாகை மாலை சூட்டுகிறார். புத்த சமயக் கருத்துக்கள் மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நூல் சுவை குன்றிக் காணப்படுகிறது.

சங்க காலத்தைவிடக் காப்பிய காலத்திலே உள்ள நகரங்கள் ஓரளவுக்கு விரிவடைந்திருந்தன என்று கூறலாம்! சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, வஞ்சி முதலிய பேரூர்களின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. 'தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை' என கவுந்தியடிகளால் பாராட்டப்பெற்ற பாண்டியர் தலைநகர் காப்பிய காலத்தில் சிறந்த நிலையில் விளங்கியது. வடக்கே வையை அணிசெய்ய, புறத்தே காவற்காடும், அகழியும் கொண்டு மதுரை மாநகர் அன்று விளங்கியது. மேலும் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகிய வையை பொய்யாக் குலக்கொடியாக எங்கும் தவழ்ந்து சென்று விளையாடியதால், மதுரை நகரின் புறஞ்சேரி' புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ள நீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்' காய்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் பந்தரும்' கொண்டு அறம் புரியும் மாந்தரின் இருக்கையாய் விளங்கியது. நகரின் மதில் வாயில் வாளேந்திய யவன வீரர்களால் காக்கப்பட்டது. அவ்வாயிலையடுத்து திருவீற்றிருந்த பெருவீதிகளும், அரசர் வீதியும், கலைவல்ல கணிகையர் வீதியும், அங்காடி வீதியும், மணிகள் நிரம்பிய வண்ணக்கர் வீதியும், பொன் நிறைந்த பொற்கடை வீதியும், நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும் செய்த ஆடைகள் நிறைந்த அறுவை வீதியும், கூலம் குவித்த கூல வீதியும், பிற வீதிகளும் செறிந்து விளங்கின. நகரின் மதில் வளைவிற்பொறி, கல்லுமிழ் கவண், காய் பொன் உலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு. ஆண்டலையடுப்பு, கவை, கழு, புதை, புழை, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல் முதலிய பலவகைப் பொறிகளைக் கொண்டிலங்கியது.

மாண்புடன் மதுரை மாநகர் விளங்கியது போலவே, சோழர் தலை நகராகிய காவிரிப்பூம்பட்டினமும் கவினுற இருந்ததாகச் சிலம்பு கூறுகின்றது. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் இருந்த இந்நகர் மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பெரும் பிரிவுகளாக இருந்தது. அரசர், வணிகர், மறையவர், வேளாளர் முதலியோர் வாழும் பெரு வீதிகளும், மாலை தொடுப்போர், நாழிகைக் கணக்கர், நாடகக்கணிகையர், படைவீரர் முதலியோர் வாழும் வீதிகளும் அடங்கிய பகுதியே பட்டினப்பாக்கம் எனப்பட்டது. மருவூர்ப் பாக்கத்தில், வேயா மாடம், பண்டகசாலை 'மான் கட் காலதர்' மாளிகை (Palatial building), கண்கவர் வேலைப்பாடுடன் கூடிய யவனர் பெருமனை, வணிகர் பெருமனை மாடங்கள் முதலியவற்றுடன் கூடிய நகர வீதியும், அருங்கல மறுகும், கூல வீதியும், பிட்டு, அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலை, நறுவிரை, முத்து, மணி இவற்றை விற்போர் வீதியும் இருந்தன. இப்பகுதி கடற்கரை யாகலான், இரவில் கானற்சோலையில்

'வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்
.................................................
.................................................

இடையிடை மீன் விலை பகர்வோர் விளக்கமும்
இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் "

இன்ன பிறவும் காண்பார் கண்கட்கு இனிய விருந்தளித்தன. மேலே கூறிய இரு பாக்கங்களுக்கும் இடையே இருந்த பரந்த பொழிலில், நிழல் தரும் உயர்ந்த மரங்களின் அடியில் பந்தரிட்டு வணிகர் வாணிகம் செய்தனர். இது நாளங்காடி எனப்பட்டது. மேற்கூறிய வீதிகள் தவிர, மண்டபங்கள், மன்றங்கள், தோட்டங்கள், கோவில்கள், குளங்கள் பல இப்பட்டினமெங்கும் காணப்பட்டன.

உறையூர் சோழரது மற்றொரு தலை நகரமாகும். இதனை இளங்கோவடிகள் "முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நகரை வாரணம் என்றும், கோழியூர் என்றும் மக்கள் வழங்கியதாகத் தெரியவருகிறது. இவ்வூரைச் சுற்றி மதிலும், கிடங்கும், அவற்றையடுத்துக் காவற்காடும், புறஞ்சேரியும், பூம்பொழிலும் விளங்கின. இவ்வூரில் இருந்த நிக்கந்தக் கோட்டத்தில் அருகக் கடவுளை வழிபடும் சாவகர் பலர் வாழ்ந்தனர்.

காப்பிய காலத்தில் வஞ்சிமா நகர் சேரர்தம் தலைநகரமாய் விளங்கியது. இந்நகரின் புறத்தே குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நான்கு நிலப்பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் எழுப்பிய இன்னிசையைக் கேட்டு இந்நகர மாந்தர் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தனர். இங்கு குணவாயிற்கோட்டம், வேளாவிக்கோ மாளிகை, பொன் மாளிகை, இலவந்தி வெள்ளிமாடம் முதலிய பெரு மாளிகைகள் இருந்தன. இந்நகர் மலை நாட்டுத் தலைநகராதலால், யானைக்கோடு, அகில், கவரி, மலைத்தேன், சந்தனம், ஏலம், மிளகு முதலிய மலைபடு பொருள்கள் இந்நகரில் எங்கும் மலிந்து காணப்பட்டன.

வடமொழிச் சொற்களும் வடவர் புராணக்கதைகளும் சங்க இலக்கியத்தில் மிகக் குறைவு. ஆனால் காப்பியங்களில் அதிகம். சங்ககாலத்திலே திருமணம் பெற்றோரால் செய்துவைக்கப்படவில்லை. காதலர்கட்கு முழு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. பருவம் வந்த ஆணும் பெண்ணும் தத்தமக்குப் பிடித்தவரைத் தாமே கண்டு காதல் கொண்டு களவொழுக்கம் புரிந்து, அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லற வாழ்வில் பேரின்பங்கண்டனர்.

ஆனால் காப்பிய காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பியகாலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி - கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும் மறையோன் ஆவான். செங்குட்டுவன் போன்ற பெருஞ் செல்வ மக்களுக்கும் உயர்ந்தோருக்கும் நெருங்கிய அறவுரை கூறுகின்ற நண்பனும் அவனே.

இரு காப்பியங்களிலும் பெரிதும் பேசப்படுகின்றவர்கள் பெண்களே. இதனால் காப்பியகாலத்திலே பெண்களின் செல்வாக்கு அதிகமாயிற்றோ என எண்ண இடம் உளது. மழைக்காகக் களவேள்வி செய்து கடவுளைப் பரசல் காணப்படுன்றது. சங்ககால மன்னர்களைவிட செங்குட்டுவற்கு பிற நாட்டு மன்னர் தொடர்பு அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் தமிழன் செல்வாக்கு காப்பிய காலத்திலே வேங்கடத்தையுங் கடந்து சென்றுளது என அறியலாம்.

காப்பிய காலத்தில் மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த னர். தமிழ்நாட்டு மனையறம் மாண்புடன் விளங்கியது. மகளிர் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களை ஆர்வமுடன் அயராது செய்தனர். ஆண்டுதோறும் இந்திரவிழா, பங்குனி வில் விழா, வேட்டுவர் குரவை முதலிய விழாக்களை மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்தினர். இந்திரவிழா தலைசிறந்த விழாவாகக் கருதப்பட்டது. இவ்விழா காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின்போது மறக்குடி மகளிரும், மறவரும் காவற்பூதத்துப் பலிபீடிகையினை வழிபடுவர். அடுத்து பூதசதுக்கம் போன்ற ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டப்படும். மங்கலக் கொடி, தோரணம், பூரண கும்பம், பொற்பாலிகை முதலியன கொண்டு நகரையும் கோயில்களையும் மக்கள் அழகுசெய்வர். பின்னர் அரசியல் அதிகாரிகளும், படைவீரரும் பிறரும் ஒன்றாய்க் காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து விண்ணவர் தலைவனை விழுநீராட்டி, பாடிப்பரவி மகிழ்வர். இசைப்புலவர்கள் இன்னிசை வழங்க, நாடக மகளிர் நடனமாட, மக்கள் முறையே கேட்டும் கண்டும் மகிழ்வர். இறுதிநாளன்று மக்கள் கடலாடிக் கானற்சோலையில் களிப்புடனிருப்பர். காட்டில் வாழும் வேடுவர் வரிக்கூத்தாடி கொற்றவையைப் பரவுதலும் காப்பியகாலத்தில் இருந்துவந்தது. இடையர்கள் குரவைக் கூத்தாடிக் கண்ணனைப் பரவினர். நிமித்தம் பார்த்தலும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும் வழக்கத்தில் இருந்தன. பூதங்களுக்குப் பலியிட்டு வழிபடும் வழக்கமும் இருந்தது. மக்கள் அரசனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.

அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற பிரிவு காப்பிய காலத்திலும் இருந்தது. இவர்கள் உயர்ந்தோராகக் கருதப்பட்டனர். கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், கஞ்சர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், சூதர் எனத் தொழில்புரிவோர் பல்வேறு வகையினராய் விளங்கினர். படைக்கலம் செலுத்துதல், சுதை வேலை, தச்சுவேலை, சங்கறுத்தல், மாலை தொடுத்தல், ஓவியம் எழுதுதல், துணி நெய்தல், செம்பு, வெள்ளி, இரும்பு, பொன் இவற்றால் பொருள்கள் செய்தல் முதலிய முக்கிய தொழில்களை மக்கள் செய்துவந்தனர்.

“மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பமல்லது தொழுதகவு இல்"

எனச் செங்குட்டுவன் கூற்றாக அடிகள் பாடியிருப்பதின் மூலம் அக்காலத்தில் மன்னர்கள் தங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து பணியாற்றினர் எனத் தெரியவருகின்றது. மக்கள் நலமே தம் நலம் எனத் தங்கள் மனதிலே கொண்டு, அவர்கள் அரசியற் சுற்றம், எண்பேராயம், ஐம்பெருங்குழு, நால்வகைப் படை இவற்றின் துணையுடன் நாட்டின் நலம் காத்துவந்தனர். எனவே மக்கள் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்ந்தனர்.

இருண்ட காலம்

தமிழ் நாட்டின் பொற்காலமாகிய சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில், அதாவது கி. பி. 3, 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றது என்று சொல்லமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் என்னும் ஓர் அரச மரபினர் தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினர். இவர்களைப் போன்றே கி. பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாட்டில் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் என்போர் தலையெடுத்தனர். முத்தமிழ் வளர்த்த முடியுடை மன்னர் மறைந்தனர். நாளுக்கு நாள் தமிழர் வீரம் குன்றியதால் வடவராகிய இராட்டிரகூட, கங்க வேந்தர்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். எனவே இக்காலத்தினைத் தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்று கூறவேண்டும். இக்காலத்தில் ஆண்டவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிவதற்கில்லை. எனினும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இக்காலத்தைக் களப்பிரர் இடையீட்டுக் காலம் என்று அழைப்பர். இக்களப்பிரர் வரலாறு குறித்து ஒன்றும் திட்டமாகக் கூறுவதற்கில்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் களப்பிரர் காளத்தி முதலிய தமிழ்நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர் கூட்டத்தினர் என்று "பல்லவர் வரலாறு' என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தமிழ் நாட்டினுள் புகுந்து தமிழ் வேந்தர்களை வென்று தமிழகம் முழுவதும் தம் ஆட்சியை நிறுவினர். வேள்விக்குடிச் செப்பேடுகள் இவர்கள் பாண்டியரை வென்று பாண்டிய நாட்டைக்கைப்பற்றி ஆண்டனர் என்றும், அவர்தம் ஆட்சியில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன்செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டது என்றும் கூறுவதால் களப்பிரர் படையெழுச்சி பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணியது என நாம் அறியலாம். இதன் காரணமாகவே மதுரையில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றிருக்கவேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். சுருங்கக் கூறின் களப்பிரர் படையெடுப்பால் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் நாகரிகம் ஆகியவை அடியோடு வீழ்ச்சி அடைந்தன.

சோழப்பேரரசு அழிந்தநேரத்தில் வடக்கிலிருந்து களப்பிரரும் பல்லவரும் முறையே தமிழகத்திற்கு வந்தனர். களப்பிரருக்கும் பல்லவருக்குமிடையே அடிக்கடி போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒருசில வரலாற்றறிஞர்கள் இவர்களே பிற்காலத்தில் முத்தரையச் சிற்றரசராகவும் குறுநில மன்னராகவும் விளங்கினர் என்று கூறுவர். இன்று செந்தமிழ்நாட்டில் வாழும் கள்ளர் மரபினர் களப்பிரர் வழிவந்தோராவர் என மற்றுஞ்சிலர் கூறுகின்றனர்.

இவ்விருண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும், பௌத்தம், சமணம் ஆகிய புறச் சமயங்களும் உயர்வெய்தின; பெருமையுற்றன. எனவே தமிழ்மொழி ஆதரவும் வளர்ச்சியும் இல்லாத - காரணத்தால் தளர்ச்சி அடைந்தது; தழைக்காது போயிற்று. களப்பிரர் பௌத்த சமயத்தைத் தமிழ்நாடெங்கணும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். பௌத்த சமய நூல்கள் பல பாலி மொழியில் எழுதப்பட்டன. இதன் காரணமாய் நம் தாய் மொழி வளர்ச்சி தடையுற்றது. எனினும் இவ்விருண்டகாலத்தினும் பல நீதி நூல்களும் ஏனைய சில நூல்களும் தமிழில் தோன்றின. அவற்றைப் பற்றி இலக்கிய வரலாற்றில் விரிவாகக் காண்போம்.