தமிழ்நாடும் மொழியும்/தமிழின் தொன்மையும்

2. தமிழ் மொழி
1. தமிழின் தொன்மையும் சிறப்பும்

தோற்றுவாய்

பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர்.

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி
அதற்கு இணையாகத் தமிழ் மொழியைக்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்"

என்று சிவஞான முனிவர் பாடியிருப்பதைக் கொண்டு கடவுளே மொழியை உண்டாக்கியிருப்பார் என்ற கருத்து நம் நாட்டில் பண்டு நிலவி வந்ததை நாம் அறிவோம். ஆனால் மக்கள் முயற்சியால் மொழி உண்டாக்கப்பட்டது என்று நாம் கொள்ளுதலே சாலப் பொருந்தும். அடுத்து தமிழின் தோற்றம் குறித்து ஒருசில வரைவாம்.

தமிழின் தோற்றம்

தமிழ் என்னும் சொல்லுக்குப் பல பொருள் கூறுவதுண்டு. சகந்நாத பிள்ளை என்பவர் தமிழ் என்னும் சொல்லுக்கு ஒளிவுடையது (தமம்-ஒளி) என்று பொருள் தருவர். இக்கருத்தையே கார்த்திகேய முதலியாரும் கூறியுள்ளார். ‘திராவிடப் பிரகாசிகை' என்னும் நூலாசிரியர் சபாபதி நாவலர் தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருளை வற்புறுத்தியுள்ளார். இப்பொருளே பொருத்தமுடையது என அறிஞர் பலர் முடிவு செய்துள்ளமை நாமறிந்ததொன்றே. நந்தாமணியாம் சிந்தாமணியில் இனிமை என்னும் பொருளில் தமிழ் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ‘தமிழ் தழீ இய சாயலவர்' என்பதில் தமிழ் என்னும் சொல் இனிமை என்னும் பொருளில் வருதலைக் காண் கிறோம். கவிக்குயில் பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று தமிழி னுடைய இனிமையை உணர்த்தியுள்ளார். 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கலந்தை நிகண்டு உரைக்கின்றது.

தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பலர் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவ்வறிஞருள் ஒருவராகிய ஆல்பர்ட் என்பவர் திராவிடன் என்னும் சொல்லே திரமிடம், தமிழகம், தமிழ் என்றாயிற்று எனக் கூறியுள்ளார். டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் என்பவரும் தமிழ் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் மொழியைக் குறித்தது என்று கூறியுள்ளார். ஒருசிலர் தென்மொழி என்பது தமிழ் என்று மருவிற்றென்பர். வேறு சிலர் மள்ளர் என்ற இனத்தவர் பேசிவந்த மொழி மள்ளம் என்றும், அச்சொல்லோடு 'திரு' என்ற அடையைச் சேர்த்துத் திருமள்ளம் என்று மக்கள் வழங்கினர் என்றும், அச்சொல் நாளடைவில் திரிந்து தமிழ் ஆயிற்றென்றும் கூறுவர். ஆனால் இவையனைத்தும் பொருந்தாக் கூற்றுக்களாகும். சுருங்கக் கூறின் தமிழ் என்னும் பெயர் தங்கள் தாய்மொழிக்குத் தமிழர்களாலே இடப்பட்டது என்று கொள்ளவேண்டும். இதனையே சி. வை. தாமோதரன் பிள்ளையும் வலியுறுத்துகின்றார். இத்தகு சிறப்பு மிக்க தமிழ் குடமுனியால் உண்டாக்கப்பட்டது என்று ஒருசிலர் கூறிவந்தனர். இது ஆதாரமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும்.

வடமொழியும் தமிழ் மொழியும்

பல வட சொற்கள் தமிழில் வழங்கிவரும் காரணத்தால் வடமொழியினின்றும் தமிழ் வந்ததாக ஒருசிலர் தவறாக நினைத்துக் கூறத் தொடங்கினர். தமிழ் வடமொழியினின்றும் வந்ததன்று. தமிழ்மொழி வடமொழியினும் தொன்மை வாய்ந்ததென அறிஞர் பலர் கூறுகின்றனர். எனவே தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்பது 'தந்தைக்கு முன் மகன் பிறந்தானென்று' சொல்வது போன்றதாகும்.

தமிழின் தொன்மை

உலகிலே தோன்றிய மொழிகள் ஒன்றல்ல; இரண்டல்ல; பலப்பல. அவற்றுள்ளே செம்மொழிகள் எனக் கூறப்படுபவை ஐந்து. இந்த ஐந்திலே இன்றுவரையும் பொன்றாப் புகழுடன் நாட்டு வழக்கிலும் ஏட்டு வழக்கிலும் களிநடம் புரிந்துகொண்டும், கணக்கற்ற இலக்கிய இலக்கணங்களிலே புரண்டுகொண்டும் இருப்பது சாவா மூவாத் தமிழ்மொழியே ஆகும். ஏனைய மொழிகள் எல்லாம் ஏட்டு வழக்கில் மட்டும் நிலவுகின்றனவே தவிர நாட்டிலே தவழவில்லை. இனித் தமிழின் தொன்மையினை ஆராய்வோம்.

தென்னிந்தியாவில் வழங்கப்படும் மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வழங்குகிறோம். திராவிடமொழிகளில் தமிழே தொன்மையானது ஆகும். அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளைத் திருந்தியவை, திருந்தாதவை என்று இரண்டாகப் பாகுபாடு செய்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன.

திருந்திய மொழிகள் :- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், கூர்க்.

திருந்தா மொழிகள் :- தோடா, தோண்டு, போடா, தாச்மகல், வராவோன்.

திருந்திய மொழிகளுள் ஒன்றான தமிழ். 'தேனினும் இனியது; தெவிட்டாத் தெள்ளமுதைப் போன்றது; இலக்கியத்தில் உயர்ந்தது; இலக்கணத்திற் சிறந்தது; தனிப்புகழ் படைத்தது; தன்னேரில்லாதது'. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்ததே மலையாளக் குழந்தை என்று கூறினால் அது மிகையாகாது. இக்கருத்தையே அறிஞர் கால்டுவெலும் தமது நூலில் கூறிச் சென்றார். வடமொழிச் சொற்களும் புணர்ச்சிகளும் நிரம்பிய பழந்தமிழே மலையாளம் என்று திரு. எம். சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். குஞ்சத்து இராமானுச எழுத்தச்சன் என்பவர் மலையாளத்தைத் தமிழினின்றும் வேறுபடுத்த வடசொல் பலவும் மலையாளத்தில் புகுத்தினார். காலம் கி. பி. 11-வது நூற்றாண்டாகும். கி. பி. 1860-இல் தான் மலையாள இலக்கணம் தோன்றிற்று. எனவே மலையாளம் தமிழைப்போல் தொன்மையானதன்று. தமிழுக்கு அடுத்தபடி சிறப்புமிக்க திராவிடமொழி தெலுங்காகும். ஆனால் இம்மொழி வடமொழி உதவியின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையதன்று. மேலும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகத் தொன்மையான இலக்கியங்கள் தெலுங்கில் இல்லை. தெலுங்கைப் போலவே கன்னடமும் வடமொழியின் துணையை மிகுதியாகப் பெற்று இயங்குகிறது. தமிழில் இருப்பதுபோல் தொன்மையான இலக்கியங்களும் இம்மொழியில் இல்லை. இம்மொழி தெலுங்கிற்குப் பிற்பட்டது. ஆனால் மலையாளத்திற்கு முற்பட்டது.

வளர்ச்சியுள்ள மொழியாகக் கூறப்படும் துளுவ மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தக்க அளவிற்கு எந்த நூலும் இல்லை. குடகு மொழிக்கு எழுத்தும் இலக்கியமும் கிடையா. எனவே இதுவரை கூறியவற்றால் திராவிடமொழிகளில் நந்தமிழே மிகத் தொன்மை வாய்ந்தது என்பது வெள்ளிடைமலையாகும். உலக மொழிகளிலே தமிழ் மிகவும் பழமையானதென்று கூறினும் தவறில்லை. அறிஞர் ஞானப் பிரகாசர் தமிழ் எல்லாத் திராவிடமொழிக்கும் அடிப்படையானது என்று எழுதி உள்ளார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும்,

'கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமுந்
துளுவும் உன்னுதரத்து உதித் தெழுந்து ஒன்று பல
ஆயிடினும்'

என்று தமிழிலிருந்தே ஏனைய திராவிட மொழிகள் பிறந்ததாகக் கூறியுள்ளார். அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார்.

'தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை'.

தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார்.

1. தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக் கிடக்கின்றது; தனித் தமிழ்ச் சொற்களையே காணுகின்றோம். இத்தகைய செந்தமிழ் நடையை மக்கள் ஒரே காலத்தில் உண்டாக்கி இருத்தல் அரிது. பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். 2. தமிழ் நிகண்டுகளின் விரிவுப் பெருக்கம் தமிழின் தொன்மையைக் காட்டும். 68500 சொற்களை யாழ்ப்பாணத்துத் தமிழ் அகராதியில் காணலாம். வின்சுலோ என்ற ஐரோப்பியரின் பெரு முயற்சியால் வெளிவந்த பல்கலைக் கழக அகராதியில் 84000 சொற்கள் காணப்படுகின்றன.

3. பழங் கன்னடம், பழைய மலையாளம், துளுவம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை தமிழின் தொன்மையைக் காட்டும்.

4. வடமொழிச் சொற்களைத் தமிழாக்கி வழங்கும் தன்மை தமிழின் பழமையைக் காட்டுவதாகும்.

5. பழைய கல் வெட்டுக்கள் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்களிலும், வட்டெழுத்துக்களிலும் எழுதப்பட்டுள்ளமை தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.

6. தெலுங்கின் முதற் சொற்களும் விகுதிகளும் தமிழின் முதற் சொல் விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியாக இருப்பதும் தமிழின் தொன்மையை விளக்கும்.

அடுத்து தமிழின் தொன்மை குறித்துத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம். அவர் எழுதியிருப்பதாவது:

“தமிழ் மொழியின் இயலே தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றது. தமிழின் தொன்மை வரலாற்றுக் காலத்தையும் கடந்து நிற்பதொன்று. உலகில் நிலவும் பல மொழிகளுள் நம் தமிழ் மொழி மெல் லோசை உடையது என்பது வெளிப்படை மெல்லோசை மொழி நேற்றோ இன்றோ தோன்றியிராது."

தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மை வாய்ந்த நூல் ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியமே என்பதைத் தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு அறிவர். அஃது இற்றைக்குச் சற்றேறக் குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். ஒரு மொழியில் இலக்கண நூல் எப்பொழுது தோன்றும்? அம் மொழியில் இலக்கியங்கள் பல நூருயிரமாகப் பெருகிப்பெருகி வளர்ந்த பின்பே இலக்கண நூல் தோன்றுதல் இயல்பு. எனவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தோன்ற வேண்டுமானுல் அதற்கு எத்தனை ஆண்டுகட்கு முன்னுல் இலக்கிய நூற்கள் பல தமிழில் தோன்றியிருத்தல் வேண்டும்?

ஒரு மொழியில் இலக்கியங்கள் திடீரெனப் புற்றிசல்கள் போலத் தோன்றுதல் என்பது நடவாத காரியம். அந்த மொழியில் சுவைமிக்க இலக்கியங்கள் தோன்ற வேண்டும் என்றால் அந்த மொழி பலநூறு ஆண்டுகட்கு முன்பே தோன்றி மக்களிடையே வழங்கி, பின் புலவரிடையே தவழ்ந்து சொல்வளம் பல்கியிருத்தல் வேண்டும். இதிலிருந்து தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கும் முந்திய ஒரு தொன்மை மொழி என்பது விளங்கும்.

கி. மு. வில் செய்யப்பட்ட ரோம நாடகம் ஒ ன் றி ல் கன்னட மொழிக் காட்சி ஒன்று வருகிறது. கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதை அறிஞர் எல்லோரும் கூறுவர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். மோகஞ்சோதாரா, ஆரப்பா என்னும் சிந்துவெளிப் புதையற் பொருட்களிலே காணப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களை ஒத்திருக்கின்றன எனப் பேரறிஞர் ஈராசடிகள், மார்சல் என்பவர்கள் கூறியிருக்கின்றனர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.

வட மொழியிலே மிகவும் தொன்மையான நூல் இருக்கு வேதமாகும். அஃது இற்றைக்கு ஏறத்தாழ பதியிைரமாண்டுகட்கும் முந்திய பழமையுடையது எனச் சொல்லப்படுகிறது. அந்த நூலிலே மயில், முத்து முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று வடமொழிப் பேரா சிரியர்களே கூறியுள்ளனர். அது மட்டுமல்ல; பாரதம் இராமாயணத்துக்கும் முந்திய நூலாகும். அந்தப் பாரதப் போரிலே தமிழ் மன்னன் பங்கு கொண்டு அப் பாரதப் போர்ப் படைகட்கு உணவு அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.

சென்னை உயரற மன்ற நடுவராக இருந்த திரு. சதாசிவ ஐயர் கூறிய கீழ்வரும் கூற்றும் தமிழின் தொன் மைக்குச் சான்ருகும்:-

தமிழ் மொழியில் க, ச, ட, த, ப போன்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றே இருக்க வடமொழியில் இவற்றிற்கு நன்னன்கு எழுத்துக்கள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று எழுத்துக்கள் மிகுதியாக உள்ளன. இது வடமொழியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது புலணுகும். இதிலிருந்து வட மொழிக்கும் தமிழ் முந்தியது என்பது புலனுகும். இதுமட்டு மல்ல; எபிரேய மொழியிலாய பைபிளிலே தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. தோகை, இஞ்சி, அரிசி என்பனவே அச் சொற்கள். இவற்ருேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள மலைகள் மிகவும் பழமை வாய்ந்தது எனப் பேராசிரியர் திட்சதர் கூறியிருக்கிருர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை விளங்கும். தெலுங்கு, மலையாளம் போன்ற கிளை மொழிகளின் சொற்கள் பலவற்றுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேதான் காணப்படுகின்றன. வடமொழியாளர் தமிழிடம் பெற்ற சொற்களும் கருத்துக்களும் எண்ணற்றவை.

இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழின் தொன்மை நன்கு அங்கைச் செங்கனிபோல விளங்கும். மேலும் தமிழ் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல; மென்மையும், இளமையும், வளமையும், ஒண்மையும், நுண்மையும் உடைய ஒரு சீரிய செம்மொழியாகும். இதனுலன்றோ,

"ஆரியம்போல் உலகவழக்
       கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
       செயல்மறந்து வாழ்த்துதுமே"
  
"சது மறையா ரியம்வருமுன்
       சக முழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென
       மொழிகுவதும் வியப்பாமே !"

என்றார் பேராசிரியர் சுந்தரனார்.