தமிழ்நாடும் மொழியும்/தமிழ் மொழியும்
அஃது ஒரு காலம்; எது? தமிழும் வடமொழியும் ஒன்று; அது மட்டுமல்ல; தமிழே வட மொழித்தாயிடமிருந்து தோன்றிய ஒரு மொழி என்று எண்ணிவந்த காலமது. மேலும் அக்காலத்திலே வாழ்ந்த தமிழறிஞர்களும் வட மொழி வாணரும் வட மொழியின் துணையின்றித் தமிழ் வாழவே முடியாது என்று உறுதியாக நம்பிவந்தனர். இந்தக் கொள்கைக்கு முதன்முதல் சாவுமணியடித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர் கால்டுவெல் என்பவராவர். இவர் வெறுமனே தம் எதிர்ப்புக் கொள்கையைக் கூறவில்லை. வடமொழி, தமிழ்மொழி, பிற திராவிடமொழிகள் திராவிட - ஆரிய மொழிகள் ஆகிய பல மொழிகளையும் பல ஆண்டுகளாக நன்கு ஆய்ந்தாய்ந்து இறுதியிலேதான் தமிழ் வேறு; வடமொழி வேறு; வடமொழியின் துணையின்றியே தமிழ் செழுமையோடு விளங்க முடியும் என்று நிறுவினார். ஆணால் இவர்க்கு முன்னரும் பின்னரும், தமிழ் வடமொழியினின்றும் வ ந் த து என்பவர்கள் வெறும் போலிக் காரண்ங்களையே தங்கள் கூற்றுக்குச் சான்றாகக் காட்டிச் சென்றனர்.
வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கக் கால்டுவெல் பெருமகனார் பதின்மூன்று காரணங்களை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் இன்னும் ஆய்ந்தால் மேலும் பல காரணங்கள் வெளிப்படல் உறுதி. கால்டுவெல் மட்டுமின்றிப் பரிதிமாற்கலைஞரும், சிவஞான முனிவரும் தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளிற் சிலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இனிக் கால்டுவெல் காட்டும் வேற்றுமைகளிற் சில காண்போம்.
தமிழ் முதலிய திராவிட மொழிகளில் ஆண்பால் உண்டு; பெண்பால் உண்டு. ஆனல் வடமொழியிலோ இந்த இரண்டோடு அலிப்பால் என்றதொரு புதிய பால் வகுப்பும் உண்டு. மேலும் மற்ருெரு பெரிய வேற்றுமை தமிழுக்கும் வடமொழிக்கும் இடையேயுண்டு. அஃது எது? தமிழில் பால் வகுப்புக்கு அடிப்படையாக இலங்குவது. பொருள்; வடமொழியிலோ சொல்லமைப்பைப் பொறுத்தே பால் வேறுபாடு கற்பிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
மனைவி என்ற பொருளிலேயே தாரம்' என்ற சொல்லும் களத்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றன. ஆனால் தாரம் என்ற சொல் ஆண்பால் எனவும், களத்திரம் என்ற சொல் பெண்பால் எனவும் சொல்லப்படுகின்றன.
மற்ருெரு வேற்றுமையாவது :- வடமொழியிலே ஒருமைக்கு ஒரு விதமான வேற்றுமை யுருபு: பன்மைக்கு மற்றொருவிதமான வேற்றுமை யுருபு. தமிழிலோ அவ்வழக்குப் பெரும்பாலும் இல்லை.
செங்குட்டுவன் வடவனை வென்றான்
செங்குட்டுவன் வடவர்களை வென்றான்
இங்கே " ஐ ” என்ற வேற்றுமை உருபு ஒன்றே ஒருமைக்கும் பன்மைக்கும் வந்துள்ளது. இவ்வாறு வருவது வடமொழியில் இல்லை.
பிறிதொரு வேறுபாடாவது :- வடமொழியிலே வேற்றுமை யுருபுகள் முதலியன சொல்லுக்கு முன்னே வரும்; தமிழிலோ பின்னே வரும். "
உ-ம்: சில தமிழ் ஆசிரியர்கள் வடமொழிக்குப் பெரிதும் ஆதரவு நல்குகின்றனர்.
தமிழிலே ஒன்று, பல என்ற வழக்குண்டு; வடமொழியிலோ ஒன்று, இரண்டு, பல என்ற வழக்குண்டு.
தமிழிலே நாம் என்று சொன்னால் இச்சொல் முன்னிலை யாரையும் உளப்படுத்தும்; நாங்கள் எனின் முன்னிலை யாரை உளப்படுத்தாது. இத்தகைய வேறுபாடு வடமொழியில் இல்லவே இல்லை. இனிச் சிவஞான முனிவர் கூறுவ தாவது :
'தமிழ் மொழிப் புணர்ச்சிகட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக் குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் - புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய தினைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யு ளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்”
இதுகாறும் கூறியவாற்றால் வடமொழி வேறு தமிழ் மொழி வேறு என்பது தெளிவுறும்.
தமிழகத்தே வடமொழி வந்து வழங்கத் தொடங்கியதினால் தமிழ் பெற்ற கெடுதல்கள் பல. அவற்றுள் குறிப்பிடத் தக்கது. வடமொழி தமிழிற் கலக்கப்பட்டமையேயாகும். இக்கலப்பு தீய எண்ணத்தோடுதான் வடமொழி வாணரால் செய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடில்லை.
தமிழிலே வடமொழிக் கலப்பு சங்க காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வடமொழிக் கலப்பு உச்ச நிலையையடைந்த காலம் கி. பி. 13, 14, 15 ஆகிய நூற்றாண்டுகளாகும். ஏனென்றால், இக்காலத்தேதான் மணிப்பிரவாள நடையிலே எழுதப்பட்ட ஈடும், சீபுராணமும் தோன்றியது என்பதால் என்க. வட சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்து எழுதும் உரைநடையே மணிப்பிரவாள நடையாகும். மணி, பிரவாளம் என்பன முறையே முத்து, பவளம் என்று பொருள்படும். இவ்விரண்டையும் கலந்து ஒரு மாலை உண்டாக்கினால் அது எவ்வாறு இருக்குமோ அது போல வட சொல்லும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்து இம் மணிப்பிரவாள நடை விளங்கும். இதனைச் சிறப்பாகப் போற்றியவர்கள் வைணவரும் சமணரும் ஆவார்கள். கி. பி. 900 - லிருந்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்நடை பெருமை பெற்றிலங்கியது. இந்நடையைப் பற்றி வி.கோ. சூ. அவர்கள் தமது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். 'மணிப்பிரவாளம் என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது வட மொழியும் தென் மொழியும் சரிக்குச் சரி கலந்த பாஷையாம். மணியும் பவளமும் கலந்து கோத்த தோர் மாலை, காட்சிக்கின்பம் பயத்தல் போல தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷையை வகுக்குமாறு தூண்டிற்று.”
மணிப்பிரவாள நடையில் முதலில் தமது நூல்களை எழுதியவர் சமணரே. இவர்களைப் போலவே பெளத்தரும் நூல்கள் எழுதினர்கள். பல இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இயற்றித் தண்டமிழை வளர்த்த சமணர்கள் ஒரளவிற்குப் புதுக் கொள்கைகளும் தமிழிலே புகுவதற்குக் காரணமாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இதன் காரணமாகத்தான் துாய தமிழ் நடை மணிப்பிரவாள நடையாக மாறிற்று. நம் தாயகத்தில் ஆட்சித் துறையிலும் சமயத் துறையிலும் மாறுதல்கள் நேர்ந்தபோது வடமொழி பயின்ற தமிழர்கள் மொழியின் அமைப்பையே மாற்றப் பெரிதும் முயன்றனர். இதனால் மணிப்பிரவாள நடையும் கிரந்த எழுத்து முறையும் தமிழில் ஏற்பட்டன. ஆனால் இம்முயற்சி முற்றிலும் வெற்றிபெற முடியவில்லை. மூவேந்தர் மரபினர் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றிவந்தமையாலும், சமயத் துறையில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் நல்ல தமிழில் இனிய பாடல்களை இயற்றி மக்கள் நாட்டத்தைத் தங்கள்பால் இழுத்தமையாலும், தமிழ் சீர்குலையாமல் இன்று வரை வாழ்ந்துவருகிறது.
சைவ சித்தாந்தக் கொள்கைகள், சங்கராச்சாரியாருடைய வேதாந்தக் கருத்துக்கள், இராமானுசரது விசிச்டாத்வைதம் போன்றவை புகுந்த காரணத்தினாலும்ம் தமிழில் வட சொற்கள் பல நுழைந்தன. வைணவப் பெருமக்களும் ஈடு முதலியவற்றை மணிப்பிரவாள நடையிலேயே எழுதினர். இவ்வாறு சமணர்களாலும், வைணவர்களாலும் உண்டாக்கப்பட்ட மணிப்பிரவாள நடை கி. பி. 1600-க்குப் பின்னர் வரவரக் குறைந்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் மறைந்துவிட்டது. எடுத்துக்காட்டு :
'அக்கிராஸனாதிபதி அவர்களே! உப அத்யகூஷகர் அவர்களே! எதிரே பிரஸன்னமாயிருக்கும் மஹா ஜனங்களே! உங்களுக்கு முதலில் என் நமஸ்காரம்."
தமிழிற் பிற மொழிச் சொற்கள் மிகுதியாகக் கலக்கப் பட்டதால் தமிழ் கெட்டு உருமாறற்கு வழி ஏற்பட்டது என்பதற்குச் சான்று பல உள. மலையாள மொழியை எடுத்துக் கொள்ளுவோம். மலையாளம் என்பது வேறு எதுவும் அல்ல; தமிழில் வரம்பு மீறி வடமொழியின் கூறுகள் பலவற்றைக் கலந்தமையால் ஏற்பட்ட மொழியாகும். அத்தகைய செயலைச் செய்தவர் எழுத்தச்சன் என்பவராவர். அவர் செய்த செயலினால் இன்று மலையாள மொழி தமிழின் கிளை மொழிதான என்று ஐயப்பட வேண்டிய நிலையிலுள்ளது. இவ்வாறே நன்னய பட்டர் என்பவர் வேங்கடத்தருகே, வடக்கே வழங்கிய தமிழிலே, வடமொழிக் கூறுகளைக் கலந்தார். அங்கு வழங்கிய தமிழ் தெலுங்காயிற்று. இன்று வடமொழியின் துணையின்றித் தெலுங்கு, மலையாளம் என்பன இயங்குதல் பெரிதும் அருமையாகிவிட்டன. அந்த அளவுக்கு அவற்றிலே வடமொழிக் கூறுகள் கலந்துவிட்டன. இனி ஆங்கில மொழியைப் பார்ப்போம். ஆங்கிலேயர்கள் தம் மொழியில் இல்லாத சொற்களையே பிற மொழியினின்றும் அப்படியே கடன் வாங்குவர். அதுவும் எல்லாச் சொற்களையும் அப்படியே கடன் வாங்கார். சிலவற்றை வேடிக்கையாக மொழிபெயர்த்துக்கொள்வர். கட்டுமரம் போன்ற சொற்களை ஆங்கிலேயர் அப்படியே எழுத்துப் பெயர்ப்பாகக்i (Transliteration) கொண்டனர். அதே ஆங்கிலேயர்கள் முருங்கைக் காய், வெண்டைக்காய் என்பனவற்றை அப்படியே கொள்ளவில்லை. ட்ரம்ச்டிக் (Drumstick) என்றும், லேடிசுவிங்கர் (Lady’s finger) என்றும் கொண்டனர். ஆனால் அமெரிக்கர்கள் தத்தம் மனம் போனவாறெலாம் புதுச் சொற்களை ஆக்கியும், பிற மொழிச் சொற்களைக் கலந்தும் வருகின்றனர். இச்செயல்கண்டு ஆங்கிலேயர் பெரிதும் வருந்துகின்றனர்.
இன்னும் ஒரு வினா. பழைய மலையாளத்திற்கும் புது மலையாளத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே அவ்வினா. பழைய மலையாளம் ஒரு மொழி, புது மலையாளம் பிறிதொரு மொழி என்றே கூற வேண்டியுளது. தற்கால மலையாளிக்குப் பழைய மலையாளம் கிரேக்கமாகத் தோன்றுகிறது. அது போலப் பழங் கன்னடம் வேறு; புதுக் கன்னடம் வேறு. வடமொழிச் சொற்கள் மிகுதியும் நுழைக்கப்பட்டுவிட்டதால் அம்மொழிகள் உருமாறிப் பிற்கால மக்களுக்குத் தம்முன்னோர் பேசிவந்த மொழியே புரியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
அறிந்தோ அறியாமலோ தமிழ்மொழியைச் சிதைத்து உருமாற்ற ஒரு முயற்சி பேரளவில் மணிப்பிரவாளம் எழுதப்பட்ட காலத்தில் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தன்னேரில்லாத, தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி ஆரியம் போல் உலகு வழக்கு ஒழியாது, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும், துளுவும் என ஒன்று பல ஆயிடினும், தான் அழியாது, சிதையாது சீரிளமைத் திறனோடு வாழ்கின்றது என்றால் நமது முன்னோரும் நாமும் பிறமொழிச் சொற்களை மிகுதியாகப் புகவிடாமல் செய்ததும், புகுந்த சொற்களை விலக்கியதுமே காரணம். எனவே நாமும் வருங்காலத்தில் விழிப்போடிருந்து பிறமொழிச் சொற்களை மிகுதியாகக் கையாளாது தமிழ்மொழியைப் பேணல் வேண்டும்.