தமிழ்நாடும் மொழியும்/பிற்காலப் பாண்டியர்



7. பிற்காலப் பாண்டியர் வரலாறு

பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகச்தனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அர்த்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுக்கள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக மகாவம்சம் கூறுகிறது. ஒரு பாண்டிய மன்னன் ரோம் நாட்டுக்கு அகச்டசுசீசர் காலத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 300 முதல் 600 வரை ஆண்ட பாண்டியரைப் பற்றி அறிய ஒருவிதச் சான்றும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் களப்பிரர் ஆட்சியே. அதுமட்டுமல்ல; சோழரும் பல்லவரும் தத்தம் ஆட்சிக் காலங்களில் பாண்டியரைத் தலைதூக்கவொட்டாது அடக்கி ஒடுக்கியமையும் ஒரு காரணமாகும்.

பல்லவரும் பிறரும் எவ்வளவோ அடக்கியும் பாண்டியர்கள் கி. பி. 600-இல் தமக்கென ஒரு தனியரசை ஏற்படுத்திக்கொண்டனர். கி.பி. 600 முதல் 800 வரை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி நாம் அறியப் பெருந்துணை புரிவன பாண்டியன் நெடுஞ்சடையன் வெளியிட்ட வேள்விக்குடிப் பட்டயமும், பிற பாண்டியர் பொறித்த கல்வெட்டுக்களுமாம்.

கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியன் கடுங்கோனும், மாறவர்மன் அவனி சூளாமணியும் நாடாண்டனர். களப்பிரரை அடக்கி அழித்த பெருமை கடுங்கோன் என்ற பாண்டியனையே சாரும். மாறவர்மனுக்குப் பின்வந்தவன் சேந்தன் நெடுஞ்செழியன் என்பவனாவான். இவன் கி. பி. 645 முதல் 670 வரை நாடுகாவல் புரிந்தான். இவன் நீதி மீது பற்றும், பெருவீரமும் உடையவன். இவனுக்கு வானவன் என்றதோர் பட்டப்பெயரும் உண்டு. அதிலிருந்து இப்பாண்டியன் சேரரையும் வென்று விளங்கியவன் என அறியலாம்.

சேந்தன் செழியற்குப்பின் அவன் மகனான அரிகேசரி பராங்குச மாறவர்மன் கி. பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இப்பாண்டியன் பரவர்களை அழித்ததாகவும், நெல்லையில் வைத்துப் பல்லவனை வென்றதாகவும் கூறப்படுகிறது. இவனே கூன்பாண்டியனாவான் என்பது சில வரலாற்றாசிரியர்கள் கருத்து. தொடக்கத்தில் இவன் சமணனாக இருந்து பின் சம்பந்தரால் சைவனாக்கப்பட்டான். இவன் மனைவி சோழகுலத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசியாவார். இவன் அமைச்சர் குலச்சிறையார். சைவர்க்கும் சமணர்க்கும் அனல்-புனல் வாதங்கள் நடைபெற்றதும், சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு எரியூட்டியதும், சமணர் 8000 பேர் கழுவேற்றப்பட்டதும் இவன் காலத்தில் நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்றன.

இவனுக்குப் பிறகு இவன் மகனான கோச்சடையன் ரணதீரன் பட்டம் பெற்றான். இவன் பெயரால் கோச்சடை என்ற ஊர் மதுரை நகரப் பகுதிகளுள் ஒன்றாக இன்றும் திகழுகிறது. இவன் ஆட்சி நடைபெற்ற காலம் கி. பி. 700 முதல் 740 வரை ஆகும். இவன் செய்த போர்களும், பெற்ற வெற்றிகளும் பலப்பல. மேற்கே இவன் மங்களூர் வரை படையெடுத்துச் சென்றான்; வாதாபியை ஆண்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தனை வென்றான்.

இவனுக்குப் பின்னர் நாடாண்டவன் முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் என்பவனாம். இவன் கோச்சயைனின் மகனாவான். கி. பி. 740 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். நந்திபுரம் என்ற ஊரிலே நடைபெற்ற பல்லவ பாண்டியப் போரிலே இவன் நந்திவர்மனை வென்று சிறைசெய்தான். இப்போரில் சேரரும் சோழரும் பாண்டியனுக்கு உதவியாகப் போரிட்டனர். இச்சமயத்தில் உதயச்சந்திரன் என்னும் பல்லவத் தளபதி வந்து மாற்றாரைப் புறங்கண்டான். பின்னர் பாண்டியன் மேலைக்கங்கரோடு சேர்ந்துகொண்டு மேலைச்சாளுக்கிய மன்னனான இரண்டாம் கீர்த்திவர்மனைப் புறமுதுகிட்டு ஓடும்படிச் செய்தான்.

கி. பி. 765-இல் இராசசிம்மன் மகனான சடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் பட்டம் பெற்றான். அதன்பின் ஏறத்தாழ அரை நூற்றாண்டு நெடுஞ்சடையன் நாட்டை ஆண்டான். வேள்விக்குடிப் பட்டயத்தை வெளியிட்டவன் இவனே. கொங்கு நாட்டை வென்று அதனைத் தன்னாட்டோடு இவன் சேர்த்துக்கொண்டான். மேலும் இவன் வேணாட்டு (திருவாங்கூர்) மன்னனையும் வென்றான். இவன் செய்த தானங்கள் கணக்கிலடங்கா. காவிரியின் வடகரையில் உள்ள பெண்ணாகடத்தில் நடந்த பல்லவ - பாண்டியப் போரில் நெடுஞ்சடையன், பல்லவனான காடவர்கோன் கழற்சிங்கனை வென்றான். மதுரைக்கருகில் உள்ள ஆனைமலையில் திருமால் கோவில் கட்டியவர் நெடுஞ்சடைனியன் உத்தர மந்திரியாகிய மதுரகவி என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தின் மூலம் நாம் அறியலாம். நெடுஞ்சடையனுக்குப் பின்னர் அவன் மகன் சீமாறன் சீவல்லபன் கி. பி. 830 முதல் 862 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் காலத்தில் ஈழ நாட்டில் பாண்டியர் பரம்பரையில் வந்தவன்போல மாயா பாண்டியன் என்பவன் ஆண்டுகொண்டிருந்தான் என்றும், அவனுக்கு ஈழ நாட்டுக் குறுநில மன்னர்கள் உதவி செய்தனர் என்றும், இதனை அறிந்த சீமாறன் படையுடன் சென்று அவனை முறியடித்தான் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இச்செப்பேட்டுச் செய்திகளை இலங்கை வரலாறாகிய மகாவம்சமும் வலியுறுத்துகிறது. சேரர்கள் சீமாறனால் தோற்கடிக்கப்பட்டனர். கும்பகோணத்தில் கங்கரும் பல்லவரும் பிற மன்னரும் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது பாண்டியனே. எனினும் சீமாறன் சில இடங்களில் தோல்வியும் அடைந்துள்ளான். சீமாறனை மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் தெள்ளாற்றில் வைத்து வென்றான். மேலும் நந்திவர்மனுக்குப் பின் பட்டமேறிய நிருபதுங்கவர்மனும் அரிசிலாற்றங்கரையில் வைத்துப் பாண்டியனை வென்றான். இத்தனை தோல்விகள் அடைந்த போதிலும் சீமாறன் தளரவில்லை. தனது மகனான இரண்டாம் வரகுண பாண்டியனிடம் முன்னிருந்தபடியே பாண்டியப் பெருநாட்டை ஒப்படைத்தான்.

இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலும் பல்லவ-பாண்டியப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இப் போரினால் வரகுணன் மிகுந்த துன்பம் அடைந்தான். இவனுடைய ஆட்சி சிறுபுறம்பியப் போரோடு முடிவுற்றது. இப்போர் நடைபெற்ற ஆண்டு கி. பி. 880 என்பதாம். சிறுபுறம்பியம் என்பது குடந்தைக்கருகில் உள்ள ஒரு சிற்றூராகும். இப்போரே பிற்காலச் சோழர் எழுச்சிக்கு விதை ஊன்றிய போராகும். இப்போர் பல்லவ மன்னனான அபராசிதவர்மனுக்கும் வரகுண பாண்டியனுக்கும் நடைபெற்றது. இப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கம் போரிட்டான். இப்போரில் கடுமையான தோல்வி அடைந்தவன் பாண்டியனே. இதுமட்டுமல்ல; ஈழ நாட்டு அரசனும் பாண்டிய நாட்டு மீது படையெடுத்தான். எனவே பாண்டியப் பேரரசு தன் நிலை குன்றியது.

வரகுணனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீர நாராயணன் ஆவான். இவன் சேரர் உதவியோடு ஓரளவு தன் நாட்டைக் காக்க முற்பட்டான். ஆனால் இறுதியில் தன் தாய் பிறந்த நாடான சேர நாட்டுக்கே இவன் ஓடும்படி நேரிட்டது. இவனுக்கு அடுத்து அரசனான இவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் பாண்டியப் பேரரசை மீண்டும் வலிமையுடையதாக்கத் தன்னால் இயன்றவரை முயன்றான். எனினும் முடியவில்லை . கி. பி. 916-இல் வெள்ளூரின்கண் நடந்த போரில், பாண்டியனும் அவனுக்கு உதவி செய்த ஈழத்தரசனும், சோழ மன்னன் பராந்தகனால் முறியடிக்கப்பட்டனர். இராசசிம்மன் ஈழ நாட்டுக்கு ஓடி ஒளிந்துகொண்டான். அதன் பின்பு இழந்த பாண்டிய நாட்டைப் பாண்டியனால் மறுபடியும் பெறமுடியவே இல்லை. அவனோடு முதற்பேரரசு ஒழிந்தது. ஆனால் பாண்டிய நாட்டில் சோழராட்சி அமைதியாக நடைபெறமுடியவில்லை. சோழராட்சிக்கு அடிக்கடி பாண்டியர்கள் தொல்லை பல தந்தனர். ஆனால் சோழப்பெருவேந்தன் இராசராசன் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தன்னாட்டோடு சேர்த்துக்கொண்டான்; தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டத்தைச் சூட்டிப் பாண்டிய நாட்டை ஆளுமாறு அனுப்பியும், வைத்தான். சிங்கள மன்னர்கள் சோழரை எதிர்க்குமாறு பாண்டிய நாட்டு இளவரசர்களை அடிக்கடி தூண்டியும், உதவியளித்தும் வந்தனர். கி. பி. 949-ல் நடந்த தக்கோலப் போரில் சோழர் படை சற்றுப் பின்வாங்கவே, வீரபாண்டியன் சற்று ஊக்கத்தோடு நாட்டுரிமைக்காகப் போரிட்டான். ஆனால் போரின் முடிவில் அவன் முறியடிக்கப்பட்டு ஓடி ஒளிந்தான். இதன் பின்னர் முதற் குலோத்துங்கன் காலம் வரையிலும் பாண்டியர் காடுமேடுகளிற் கரந்தே உயிர் வாழ்ந்துவந்தனர். குலோத்துங்க சோழன் தென் கலிங்க நாட்டை வெல்லப் பராந்தக பாண்டியன் உதவினான். முதற்குலோத்துங்கனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் வலிமை குன்றியவராக விளங்கினர். எனவே பாண்டியர்கள் மறுபடியும் ஓயாது கிளர்ச்சிசெய்து தங்கள் நாட்டைப் பெற்றனர். ஆனால் தீ ஊழினால் பாண்டியர்களுக்குள்ளேயே அரசுரிமை பற்றி உள்நாட்டுப் போர் மூண்டது. குலசேகர பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் அரசுரிமை பற்றிப் போரிட்டனர். குலசேகரனைச் சோழரும், பராக்கிரம பாண்டியனைச் சிங்களவரும் ஆதரித்தனர். சிங்களப்படை வருமுன்பே குலசேகரன் சோழர் உதவியுடன் மதுரையைக் கைப்பற்றி, பராக்கிரமனைக் கொன்றுவிட்டான். ஆனால் சிங்களவர் தலைவனான இலங்காபுரன் வந்து குலசேகரனை முறியடித்து, பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். இலங்காபுரன் ஈழஞ்சென்ற சமயம் பார்த்துச் சோழர்கள் வீரபாண்டியனை நாட்டைவிட்டு ஓட்டி, மீண்டும் குலசேகரனை அரசனாக்கினர். இவனுக்குப் பின்னர் பட்டமேறிய இவன் மகனான விக்கிரமபாண்டியனுக்கும் சோழர் பக்கபலமாக இருந்து உதவினர். கி. பி. 1186-இல் மூன்றாங் குலோத்துங்கனால் வீரபாண்டியன் அடியோடு முறியடிக்கப்பட்டான்.

சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுக்கள் பல 13-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன.

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை வென்றான்; தஞ்சையை அழித்தான். எனினும் ஓய்சால மன்னனின் தலையீட்டால் சோழ நாட்டை திருப்பிச் சோழனுக்குத் தந்தான். இவனுக்கடுத்தாற்போல இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம்பெற்றான். இவன் கி. பி. 1238 முதல் 1251 வரை நாட்டை நல்ல முறையில் ஆண்டான். இவன் காலமான பிறகு சடாவர்மன் சுந்தரபாண்டியன் மன்னனானான். பிற்காலப் பாண்டியர்களுள் பெருவீரனாகவும், பேரரசனாகவும் விளங்கியவன் இவனாகும். சடாவர்மன் பெரம்பலூரில் நடந்த போரில் ஓய்சாலரை முறியடித்து, கொப்பத்தின் கண்ணே விளங்கிய அவர்தம் கோட்டையையும் முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஈழமும், சேர நாடும் பாண்டியனின் சுட்டு விரல் கண்டு நடுநடுங்கின. அவன் அடிபணிந்தன. சோழ நாடு பாண்டிய நாடாயிற்று. சுந்தரபாண்டியனின் நண்பனும், தளபதியுமாகிய சடாவர்மன் வீரபாண்டியன் இவனுக்காகக் கொங்குநாட்டினை வென்றான். பின்னர் பாண்டியன் ஈழத்தோடு போரிட்ட போது இவன் பேருதவி புரிந்தான். இந்தப் பேரரசன் காலத்தில்தான் இரண்டாவது பாண்டியப் பேரரசு புகழேணியின் உச்சியில் நின்று நடம் புரிந்தது. காகத்தீய மன்னனான கணபதியும், பல்லவ மன்னனான சேந்தமங்கலம் கோப்பெருஞ்சிங்கனும் இப்பாண்டிய மன்னனால் அடைந்த தொல்லையும் துயரமும் அளவிடற்கரியன. நெல்லூரை ஆண்ட கந்தகோபன் பாண்டியனால் முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். பாண்டியன் நெல்லூரில் வைத்து வீரமுழுக்காடினான். சிதம்பரம், சீரங்கம் ஆகிய இரு ஊரின் கண்ணும் உள்ள கோவில்களை இப்பாண்டியன் புதுக்கி அழகுசெய்தான். அது மட்டுமல்ல; சிதம்பரத்தில் பொன்னம்பலமும் அமைத்தான். இவன்றன் அறச் செயல்கள் இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன. கி. பி. 1275-இல் இவன் காலமாகவே, இவனோடு ஆண்ட மாறவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றான். குலசேகரன் ஈழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அக்காலை ஈழ நாட்டை ஆண்டவன் பராக்கிரமபாகு என்பவனாவான். பாண்டியன் படையெடுத்து வந்தபோது பராக்கிரமபாகு பணியவில்லை. எனவே அவனை வென்று, பற் சின்னத்தை (புத்தர் பல்லுக்குக் கோவில் உண்டு) எடுத்து வந்துவிடவே, பராக்கிரமபாகு ஓடோடியும் வந்து பாண்டியனைப் பணிந்து மீண்டும் அப்பல்லைப் பெற்றுச் சென்றான்.

குலசேகர பாண்டியன் காலத்தில்தான் வெனீசு நகரத்திலிருந்து மார்க்கபோலோவும், முசுலீம் வரலாற்றாசிரியனான வாசப்பும் பாண்டிய நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்தனர். மேலும் தாங்கள் பார்த்த எல்லாவற்றையும் அவர்கள் எழுதி வைத்தனர். அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் மிகவும் சிறந்தனவாகும். நமது நாட்டின் செல்வ நிலையும், முத்தும் பவளமும் அவர்தம் சிந்தையை வெகுவாகக் கவர்ந்தன.

குலசேகரனுக்கு மக்கள் இருவர். ஒருவன் சடாவர்மன் சுந்தரபாண்டியன்; மற்றொருவன் வீரபாண்டியன். வீர பாண்டியன் பட்டத்துக்குரியவனாக இல்லாத போதிலும் அவனையே குலசேகரன் ஆதரித்தான். ஆதலால் சுந்தர பாண்டியன் குலசேகரனைக் கொன்று பாண்டிய நாட்டு அரசைக் கைப்பற்றினான். உடனே உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அந்தப் போரில் சுந்தரபாண்டியன் மதுரை மாநகரிலிருந்து துரத்தப்பட்டான். துரத்தப்பட்ட சுந்தரபாண்டியன், அல்லாவுத்தீனின் தளபதியாகிய மாலிக்காபூரின் உதவியை வேண்டினான். 'கும்பிடப்போன சாமி குறுக்கே வந்ததைப்போல' பாண்டியனே வேண்டுகோள் விடுக்கவே மாலிக்காபூர் படையுடன் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான். இராமேசுவரத்தில் ஒரு மசூதியைக் கட்டினான். மதுரையைத் தனது பேரரசின் ஒரு பகுதியாக்கப் போவதாகத் தெரிவித்தான். குசுருகான் என்ற மற்றொரு டெல்லி முசுலீம் தளபதி கி. பி. 1318- இல் மதுரையைத் தவிடு பொடியாக்கினான். பாண்டியராட்சி அடியற்ற மரமாயிற்று. இந்தச் சமயம் பார்த்துத் திருவாங்கூரை ஆண்ட இரவிவர்ம குலசேகரன் பாண்டிய நாட்டு மீது படையெடுத்துச் சென்று நெல்லூர் வரையுள்ள பகுதிகளை வென்றான். உள் நாட்டுக் குழப்பம், மாலிக்காபூர், குசுருகான் ஆகியோரது படையெடுப்புக்கள், இவற்றுடன் இரவிவர்ம குலசேகரனின் படையெடுப்பும் ஒருங்கு சேர்ந்து பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. ஒரு முசுலீம் அரசு மதுரையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் நிலைபெற்றிருக்க முடியவில்லை . கி. பி. 1378-இல் விசய நகர மன்னர்கள் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தங்களோடு சேர்த்துக்கொண்டனர். மதுரையைப் பிடிக்க முடியாவிட்டாலும், பாண்டியர்கள் திருநெல்வேலியிலிருந்து கொண்டே 1800 வரை ஆட்சி செய்துவந்தார்கள்.

பாண்டியர் காலத் தமிழகம்

பாண்டியர் ஆட்சி முறை சோழர் ஆட்சி முறையைப் போன்றதே. கிராமச் சபைகளிடமே கிராம ஆட்சி இருந்தது. பெரும் பெரும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தமிழ் நாட்டுக்கோவில், பண்பாட்டின் உறைவிடமாகவும், மடங்கள் கல்விக் கழகங்களாகவும் திகழ்ந்தன. சைவ வைணவ சமயங்களோடு சமணமும் பௌத்தமும் வளர்ந்தன. அரபு நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையே சிறந்த வாணிகம் நடந்தது. அரேபியர்கள் பாண்டிய நாட்டில் காயல் பட்டினத்தில் குடியேறினர். பாண்டிய நாட்டுக் கடற்கரை அவர்களால் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சொல்லே பின்பு கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலுள்ள கடற்கரையைக் குறிக்கலாயிற்று. பாண்டிய, சோழர் காலக் கல்வெட்டுக்கள் அக்கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறியப் பேருதவி புரிகின்றன. தமிழர்கள் இந்த இடைக்காலத்தில் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த உரிமையோடு உலவினர். அஃதோடு அவர்கள் பல அன்பளிப்புகளும் தந்தனர். அடிமைமுறை அக்காலத்தில் நிலவியது. திருமறைக்காட்டிற் காணப்படும் மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுக்கள் இரண்டு, ஆரியன்பிச்சன் என்பான் 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 காசுக்கு விற்றதாகக் கூறுகின்றன. சதியும் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் மனைவியாகிய வானவன் மாதேவியும், ஒரு மல்லன் மனைவியாகிய தேக்கபியும் உடன்கட்டை ஏறியதாகத் தெரிகிறது. சாதிவெறி அக்காலத்தில் கடுமையாகவே இருந்தது;

நிலங்கள் மன்றங்களுக்கும், தனியாருக்கும் சொந்தமாய் விளங்கின. வைரமேகதடாகம், வீர சோழன், கீர்த்தி மார்த்தாண்டன் முதலிய குளங்களாலும், கால்வாய்களாலும் வேளாண்மை செழிப்பாக நடைபெற்றது. கோவில்கள் மிகவும் சீரும் சிறப்பும் கொண்டு திகழ்ந்தன. கோவிற்குப் பல ஆயிரம் பணம் பெறுகின்ற நகைகள் தேவைப்பட்டன. இதனால் நகைக்கலை செழித்தது. காஞ்சியிலும், மதுரையிலும் கைத்தறித் தொழில் ஓங்கியது. குமரி முனையிலும், மரக்காணம் (தென்னார்க்காடு) என்ற இடத்திலும் உப்பளங்கள் மிக்கு விளங்கின. நாட்டில் பொதுவாக நிலவிய வட்டி விகிதம் 12 1/2%. உறுதித் தாள்கள் (Promissory notes) நடைமுறையில் இருந்தன. 72 தானிய எடை உள்ள காசு அல்லது மடை என்ற தங்க நாணயமும் அக்காலத்தில் பழக்கத்திலிருந்தது. காசு என்பது அரைப்பொன். கழஞ்சு என்பது நாணயமாக வழங்காத தங்கமாகும். நாணயங்களில் வில், கயல், புலி பொறிக்கப்பட்டிருந்தன. மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே பெருத்த வாணிகம் நடைபெற்றது. மூன்று தூதுக் குழுக்களைச் சீனாவிற்குப் பாண்டியன் அனுப்பினான்.

இக்காலத்தில் சைவமும் வைணவமும் நன்கு வளர்ந்தன. சமயப்பொறை நிலவியது. எனினும் சில போழ்து சமய வெறியும் கொலைகள் பல நடத்தியது. காளமுகம், பாசு பதம், கபாலிகம் முதலியனமிகுந்த செல்வாக்கோடு உலவின. மடமும், கோவிலும் பண்பாட்டுக்கும் கல்விக்கும் உறைவிடங்களாகத் திகழ்ந்தன. சுருங்க உரைப்பின், அக்காலக் கோவில்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகளாகவும், நிதியகங்களாகவும், செழுங்கலை நிலையங்களாகவும், கலைக்கண்காட்சிகளாகவும், பொருட்காட்சி சாலைகளாகவும், மருந்தகங்களாகவும், அற நிலையங்களாகவும் திகழ்ந்தன. பெரும்பாலான கோவில்களில் நூல் நிலையங்கள் இருந்தன. நாடகமும், நடனமும் நன்கு வளர்க்கப்பட்டன. நெல்லைக்கருகிலுள்ள பத்தமடைக் கல்வெட்டு ஒன்று, திருவிழாக்களில் நடனமாடவும், நாடகம் நடிக்கவும் ஒரு நடன மங்கைக்கு நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது எனக் கூறுகிறது. சமண, பௌத்த சமயங்களும் ஓரளவுக்கு அடியார்கள் மிகப்பெற்றிருந்தன. சமணம் பௌத்தத்தைவிட நன்கு செல்வாக்கோடு திகழ்ந்தது என்னலாம்.

இடைக்காலத்திலே தமிழிலக்கியமும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது என்னலாம். சமண, சைவ, பௌத்த, வைணவ அடியார்களால் பல அழகிய தமிழ் நூற்கள் எழுதப்பட்டன. திருத்தக்க தேவர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியை எழுதினார். சிதறிக் கிடந்த சைவ நூற்களைத் திருமுறை என ஒரு ஒழுங்குபடத் தொகுத்து வகுத்தது கி. பி. 1100-லேதான். சேக்கிழார் தித்திக்கும் பெரிய புராணம் எழுதியது இக்காலத்தில்தான். அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வாழ்ந்தது இக்காலத்திலேதான். வீரசோழியம் பிறந்தது இந்தக் காலத்திலேதான். யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், கலிங்கத்துப்பரணி, இராமகாதை, மூவருலா, நளவெண்பா போன்ற தமிழ்ப் பெருநூல்கள் இந்த இடைக்காலத்திலே தான் எழுந்தன. குணவீரபண்டிதரால் நேமிநாதம் இக்காலத்திலேதான் எழுதப்பட்டது. நன்னூல் என்னும் பொன்னூல் தோன்றக் காரணமாக இருந்தது இந்த இடைக்காலமே. தண்டியலங்காரம் என்னும் அணிநூல் இக்காலத்திலேதான் எழுந்தது. சுருங்க உரைப்பின் இடைக்காலம் என்பது தமிழ் மொழி வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் என்று கூறலாம்.