தமிழ்ப் பழமொழிகள் 1/அ
௳
முருகன் துணை
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு,
- (அஃகம்.தானியம்; சிக்கென -விரைவாக.)
(கொன்றை வேந்தனில் உள்ளது; பழமொழி போல வழங்குகிறது.)
அஃகம் சுருக்கேல்.
- (ஆத்தி சூடியில் உள்ளது. பழமொழி போல் வழங்குகிறது.)
அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது.
- (கிளி பேசுவது.)
அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா?
அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும். 5
அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம்.
அக்கரைக்கு இக்கரை பச்சை.
அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு.
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும். 10
அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம்.
அக்கரை வந்து முக்காரம் போடுது,
- (முக்காரம் - முழக்கம்.)
அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா?
அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க
- (மொகுடு-கணவன், குக்க-நாய்.)
அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன? 15
அக்காக்காயாகச் சுற்றுகிறான்.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு
ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான்.
அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண்.
அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி.
அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? 20
அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்?
அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு.
- (பி-ம்.) இருந்தால்.
அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு.
- (பி-ம். இருந்தால், மச்சானும் உறவு.
அக்காள் உறவும் மச்சான் பகையுமா? 25
- (பி-ம்.) பகையும் ஆகுமா?
அக்காள் செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு.
அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா?
அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான்.
- (அக்காள்-மூதேவி, தங்கை-சீதேவி.)
அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது.
அக்காள் வந்தாள்; தங்கை போனாள். 30
- (அக்காள்- மூதேவி, தங்கை - சீதேவி.)
அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும்.
அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம்.
அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா?
அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்?
அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள். 35
- (பா-ம்.) தங்கை அவிசாரி ஆனாள். தனிவழி போனாளாம்.
அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு.
- (பா.ம்.) மச்சான் உறவு.
அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்.
அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது. 40
அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?
- (பாம்.) நாய்க்குக் கூட அகவிலை தெரியும்.
அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல,
- (பா-ம்.) அழுமா?
அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே.
அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல.
அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி. 45
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.
- (பா-ம்.) பகவானுக்கு, கருத்து: கறுப்பாய் இருக்கிறான்.
அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?
- (பா.ம்.) வெண்ணெய்ப் பொம்மை,
அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்.
- (பா-ம்.) பிரயோகித்தது போல்.
அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும்.
அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா? 50
- (பா-ம்.) விஷம் இருக்காது.
அக்கினியைக் குளிப்பாட்டி ஆனைமேல் வைத்தாற் போல,
- (கருத்து: எல்லாம் கறுப்பு.)
அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல.
அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?
- (பா-ம்.) கக்குகிற பிள்ளை.
அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை.
அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? 55
- (அக்குத் தொக்கு-சம்பந்தம்.)
அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும், வெட்கம் சிக்கு இல்லாதவன் ரோஷமும் மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்,
அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கிறான்.
அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்,
அகங்கை புறங்கை ஆனாற் போல.
அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? 60
அகடவிகடமாய்ப் பேசுகிறான்.
அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
- (அகத்தியை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பர்.)
அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன?
அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார்.
அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா? 65
அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்.
அகத்திலே உண்டானால் அம்பி சமத்து.
அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்.
- {பா-ம்.) அகத்துக்காரப் பிராம்மணன் அடிமுண்டை என்றால்.
அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்.
அகத்துக்கு அழகு அகமுடையாள். 70
அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்.
- (அசல்-அயல்.)
அகத்துக்கு முகம் கண்ணாடி.
அகத்துக்கு மூத்தது அசடு.
அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான்.
அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே. 75
அகதிக்கு ஆகாசமே துணை.
அகதிக்கு ஆண்டவன் துணை.
- (பா-ம்.) தெய்வமே துணை.
அகதி சொல் அம்பலம் ஏறாது.
அகதி தலையில் பொழுது விடிந்தது.
அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம். 80
அகதியை அடித்துக் கொல்லுகிறதா?
- (பா-ம்) பிடித்து.
அகதியைப் பகுதி கேட்கிறதா?
அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா.
அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும்.
அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு. 85
- (பா-ம்.) ஒன்பதாம் இடத்தில் ராஜா.
அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்.
அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில்.
- (தண்டம் பட்டுக் கணவாய் வடஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ளது.)
அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது?
- (பா-ம்.) களவு செய்வான்.
அகப்பை அறுசுவை அறியுமா?
அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி. 90
அகப்பைக்குக் கணை வாய்த்தது போல.
அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?
அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி?
அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே.
அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான். 95
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
- (பா-ம்.) குறையும்.
அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
அகம் ஏறச் சுகம் ஏறும்.
அகம் குளிர முகம் மலரும்.
- (பா-ம்.) அகம் மலர.
அகம் குறைந்தால் அஞ்சும் குறையும் 100
அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்.
- (பா-ம்.) எல்லாம் மலியும்.
அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது.
அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்;
- அம்மாளுக்குச் செய்தால் அவமானம்.
அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா.
அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன். 105
- (பா-ம்.) அடுத்தகத்துக்காரி சிரிப்பாள்.
அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்.
- (பா-ம்.) மைத்துனனை,
அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம்.
அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும்.
அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா?
அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது. 110
அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு.
- (பா-ம்) தப்பு. இல்லை,
அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்.
அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது.
- (பா-ம்) பீளைவிட்டது. அழுததனால் அப்படி ஆயிற்று.
அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான்.
அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும், 115
அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி.
அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம்.
அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்.
அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும். 120
அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.
- (பா-ம்.) பலம் உண்டானால்.
அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு.
அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது.
அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம். 125
அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்.
- (பா-ம்.)அந்திக் கண்ணன்.
அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன?
அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு.
அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை.
அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா? 130
- (பா-ம்.) சொல்லலாகாது.
அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்.
அகமுடையானைக் கொன்ற அற நீலி.
அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது.
அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?
- (பா-ம்) ஆடலாமா, ஆட்டம்.
அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்? 135
அகர நாக்காய்ப் பேசுகிறான்.
அகராதி படித்தவன்.
அகல் வட்டம் பகல் மழை.
அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை.
- (பா-ம்.) நீண்ட உறவு.
அகல இருந்தால் பகையும் உறவாம். 140
அகல இருந்தால் புகல உறவு.
அகல இருந்து செடியைக் காக்கிறது.
அகல உழுவதை ஆழ உழு,
- (பா-ம்.) அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது; அதனையும் அடுக்கு உழு.
அகலக் கால் வைக்காதே. 145
அகல விதை; ஆழ உழு.
அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன்.
அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?
அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை.
அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை.
அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை. 150
அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
அகா நாக்காய்ப் பேசுகிறான்.
அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது.
அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? 155
அகிலும் திகிலுமாக.
அகோர தபசி வபரீத சோரன்.
- (பா-ம்.) நிபுணன்.
அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி.
அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார். 160
- (பா-ம்.) சேர்.
அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை,
- (பா-ம்.) அலைசொணாதே. தோஷம் போகாது.
அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது.
அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்.
அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.
அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை. 165
அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள்.
- (பா-ம்.) கொத்துமல்லி என்பாள்.
அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே.
- (பா-ம்.) அங்காடி விலையை அதறப் பதற அடிக்காதே.
அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே.
அங்காடி நாய் போல அலைந்து திரியாதே.
அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. 170
அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம்.
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும்.
- (பா-ம். )அகப்பைக் கூழ்.
அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்.
அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு.
- (பாம்.)அங்கிடு தொடுப்பி - கோள் கூறுபவள்.
அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது. 175
அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம்.
- (பா-ம்.) இங்கே வாடி ஆலாய்ப் பறக்கலாம்.
அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா.
அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.
- (பா-ம்.) இருப்பாள்.
அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான்.
அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன். 180
- (பா-ம்.) திம்மட்டிராயன்.
அங்கும் சோதி; அடியேனும் சோதி.
- (சுவாதித்திருநாளிடம் ஒருவன் சொன்னது.)
அங்குஸ்தி இங்குஸ்தி.
அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்.
அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு.
அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? 185
- (பெண் கேட்கப் போனவன் கூறியது)
அங்கே போனேனோ செத்தேனோ?
அங்கேயும் தப்பி இங்கேயும் தப்பி அகப்பட்டான் தும்மட்டிக் காய்ப் பட்டன்.
அங்கை நெல்லிக்கனி.
- (ப-ம்.) பழம்.
அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்.
- (ப-ம்.) இல்லாதவன்.
அச்சம் ஆண்மையைக் குறைக்கும். 190
- (ப-ம்.) குலைக்கும்.
அச்சாணி அன்னதோர் சொல்.
- (ப-ம்.) போன்றதோர்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?
- (அழுவணம்-மருதோன்றி. )
அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்.
- (அச்சி-ஓர் ஊர்: சுமத்ராவில் உள்ளது)
அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன். 195
அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல.
அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்.
- (பாலக்காட்டு வழக்கு, அச்சி விட்டில் சங்கடம் வந்தால் பிராமணன் புறப்பட வேண்டும்.)
அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா?
- (ப-ம்.) தேர் ஓடுமா? பிள்ளை பிறக்குமா?
அச்சு இல்லாமல் தேர் ஓடாது. 200
- (பா-ம்.) ஓடுமா.
அச்சு ஒன்றா வேறா?
அசடு வழிகிறது.
அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்.
அசந்தால் வசந்தா,
அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி. 205
அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே.
அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.
- (ப-ம்.) வீட்டுப் பிராம்மணா.
அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்.
அசல் வாழ ஆறு மாசம் பட்டினி.
அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? 210
அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை.
அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா?
அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான்.
அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. 215
அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது.
அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு.
அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்?
அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை.
- (பா-ம்.) பந்தம்.
அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான். 220
அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்?
அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி.
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
- (பா-ம்.) ஆவாய்.
அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள். 225
அஞ்சி அஞ்சிச் சாகிறான்.
அஞ்சி ஆண்மை செய்ய வேணும்.
அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை.
அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே.
அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது. 230
அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான்.
அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை.
- (அஞ்சு-செடியில் ஐந்து இலைகள் இருக்கும் சமயம்.)
அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா?
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான்.
- (பா-ம்.) அறுபதுக்குமேல் கொஞ்சினாலும்.
அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது. 235
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்.
அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை.
அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும்.
அஞ்சினவனைப் பேய் அடிக்கும். 240
- (பா-ம்.) அஞ்சினாரை.
அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே.
அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும்.
அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான்.
அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு.
- (முதியவர்களைச் சொல்வது)
அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும். 245
அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது.
- (பா-ம்.) கோபம் ஆகாது.
அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்.
அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்?
அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி.
அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம். 250
அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை.
அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி.
அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை.
அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார்.
அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும். 255
அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்.
அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே.
அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது.
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும்
- (பா-ம்.) அஞ்சும் மூன்றும் அடுக்காக இருந்தால் அறியாச் சிறுக்கியும்.
அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. 260
அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல்.
அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது.
அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான்.
அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது.
அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி. 265
அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம்.
அஞ்சு வயசில் ஆதியை ஓது.
அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்.
அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும்.
அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல். 270
அஞ்சு விரலும் சமமாக இருக்குமா?
- (பா-ம்.) ஒரு மாதிரி.
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம்.
அஞ்சூரான் பஞ்சு போல.
- (பா-ம்.) புஞ்சை போல.
அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும். 275
அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம்.
அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள்.
அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம்.
- (பா-ம்.)பெட்டை.
அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல.
அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும். 280
- (பா-ம்.) தொட்டதெல்லாம் நட்டம்.
அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது.
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
அட்டாதுட்டிக் கொள்ளித் தேள்.
அட்டாரைத் தொடாக் காலம் இல்லை.
- (பழமொழி நானூறு)
அட்டாலும் பால் சுவையில் குன்றாது. (வாக்குண்டாம்.) 285
அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு.
அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே.
அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்?
அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை.
அட்டை மாதிரி உறிஞ்சுகிறான். 290
அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான்.
அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே.
அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல.
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும்.
அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம் சாக்கடையில். 295
- (பா-ம்.) சகதியிலே.
அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே.
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல.
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்?
- (பா-ம்.) அடக்கம் உள்ள.
அடக்கம் ஆயிரம் பொன் பெறும்.
அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார். 300
அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை.
அடக்கமே பெண்ணுக்கு அழகு;
அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான்.
அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.
அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல. 305
அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண்.
அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு: நமக்கும் பொல்லாப்பு.
அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான்.
அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும்.
அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி. 310
அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக்கலாகாது.
அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே!
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. [யாழ்ப்பாண வழக்கு]
அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?
அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார். 315
அடர உழு; அகல விதை.
அடர விதைத்து ஆழ உழு.
அட ராவணா என்றானாம்.
அடா என்பவன் வெளியே புறப்பட்டான்.
அடாது செய்தவர் படாது படுவர். 320
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை.
- (பி-ம்.) அடி அப்பம்.
அடி அற்ற பனைபோல் விழுந்தான்.
அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது 325
- (பா-ம்.) பனமரம் போல.
அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்.
அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை.
- (பா-ம்.) மந்திரியும் இல்லை, பிடி என்கிற ராஜாவும்.
அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம்.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம். 330
- (பா-ம்.) புத்திரவெகு பாக்கியம் நமஸ்து.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம்.
அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்.
அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்.
அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்?
அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே? 335
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.
அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள்.
அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.
- (பி-ம்.) எழும்பும்.
அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும்.
அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும். 340
அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு.
அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும்.
அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம். 345
அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை.
- (பா-ம்.) அடிப்பதும், அணைப்பதும்
அடிக்கும் காற்றிலே எடுத்துத் துரற்ற வேண்டும்.
அடிக்கும் சரி, பிடிக்கும் சரி.
அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு.
அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல. 350
அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரைச் சவாரி பண்ணினானாம்.
அடி சக்கை பொடி மட்டை
அடி சக்கை, லொட லொட்டை
அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார். 355
அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே.
அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும்.
அடித்த எருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
- (பா-ம்.) அடித்த உழவுக்கும் வார்த்த கூழுக்கும்.
அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு.
அடித்தது ஆலங்காடு. 360
அடித்த நாய் உழன்றாற் போல.
அடித்த மாடு சண்டி.
அடித்தவன் பின்னால் போனாலும் போகலாம்; பிடித்தவன் பின்னால் போகக்கூடாது.
அறுபதுக்குமேல் கொஞ்சினாலும் அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது.
அடித்தா பால் புகட்டுகிறது? 365
அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது;
அடித்தால் கூட அழத் தெரியாது.
அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே.
அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே.
அடித்தாலும் புருஷன், அணைத்தாலும் புருஷன். 370
- (பா-ம்) புடைத்தாலும் புருஷன்.
அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு.
அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி.
அடித்தான் பிடித்தான் வியாபாரம்.
அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா?
அடித்துப் பழுத்தது பழமா? 375
அடித்துப் பால் புகட்டுகிறதா?
அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை.
அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும். 380
- (இல்லை.)
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
- (செவ்வை ஆகா. )
அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது.
அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்;
அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்.
அடி நொச்சி; நுனி ஆமணக்கா? 385
- (அடி நா, நுனி நா.)
அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை.
அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்.
அடிபட்ட நாய் போல.
அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே.
அடிபட்டவன் அழுவான். 390
அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும்.
அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு.
அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- (பா-ம்.) தேயும்,
அடிமை படைத்தால் ஆள்வது கடன். 395
அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு.
அடியாத பிள்ளை படியாது.
- (பணியாது.)
அடியாத மாடு படியாது.
அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.
அடியுண்ட வேங்கை போல. 400
அடியும் நுனியும் தறித்த கட்டை போல.
அடியும் பட்டுவிட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
அடியும் பிடியும் சரி.
அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன்.
அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு. 405
அடியைப் பிடியடா பாரத பட்டா!
அடியை விட ஆவலாதி பெரியது.
அடியோடு அடிக் கரணம்.
அடிவண்டிக் கிடாப் போலே.
அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல. 410
அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல.
அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது.
அடிவானம் கறுத்தால் ஆண்டை வீடு வலுக்கும்.
அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள்.
அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா? 415
அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல்.
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும்.
- (இருக்கிறது என்கிறான்.)
அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.
- (துடுப்பால் குழைந்தது.)
அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது.
அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா? 420
- (எதற்கு?)
அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
- (அடுக்குகிற வருத்தம், உடைக்கிற பூனைக்கு.)
அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம்.
அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும்.
அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம்.
அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும். 425
அடுத்தவரை அகல விடலாகாது.
அடுத்தவரைக் கெடுக்கலாகாது.
அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல.
அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்?
அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான். 430
- (கெடுப்பான்.)
அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது.
அடுத்தவனைக் கெடுக்கலாமா?
அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம். 435
- (உத்தியோகம் வந்தால்.)
அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம்.
- (இடித்துக் கொண்டாளாம்.)
அடுத்தாரைக் கெடுக்கிறதா?
அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான்.
அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார். 440
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
- (எடுத்த காரியம், கொடுத்த உதவியும் முடியும்.)
அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை.
அடுத்துக் கெடுப்பவர்.
அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை.
- (தொடர்ந்து கெடுப்பாள் வேசி.)
அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும். 445
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்.
- (வாக்குண்டாம்.)
அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு.
அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம்.
அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம்.
அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம். 450
அடுப்பு அடியில் பூனை தூங்க.
அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை.
அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?
அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்?
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும். 455
அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்.
- (அம்மையார் மேல்.)
அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா?
அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும்.
அடுப்புக்கு ஒரு துடுப்பா?
அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு. 460
அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது.
அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு.
- (வாய்த்த மனைவியும் போனாள்.)
அடுப்பும் நெருப்பும் பயப்படுமா?
- (யாழ்ப்பாண வழக்கு.)
அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம்.
அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா. 465
- (இடக்கர்.)
அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம்.
அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்.
அடை தட்டின வீடு தொடை தட்டும்.
அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா.
அடைந்தோரை ஆதரி. 470
அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம்.
அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.
அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம்.
அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல. 475
அடை மழையும் உழவு எருதும்.
அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை.
- (கொடி மழை.)
அடையலரை அடுத்து வெல்.
- (அடையலர்-பகைவர்.)
அடையா, அப்பமா, விண்டு காட்ட?
அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது. 480
- (இல்லை.)
அண்டங் காக்காய் குழறுகிறது போல.
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா?
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
- (அண்டத்துக்கு உள்ளது.)
அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு.
அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா? 485
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம்.
- (ஆலமரம்.)
அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.
அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே.
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? 490
அண்டை அயலைப் பார்த்துப் பேசு.
அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே.
அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல.
- (ஆண்டை மேலுள்ள.)
அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.
அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே! 495
அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல.
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா.
அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே?
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல.
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம். 500
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
- (அண்டைவிட்டு மீனாட்சிக்கும் அடுத்த வீட்டுக் காமாட்சிக்கும்.)
அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான்.
- (திரிப்பான்.)
அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது. 505
- (அன்றறுகிற, நின்றறுகிறது.)
அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம்.
- (மைத்துனிக்கு.)
அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ?
- (எப்போது சாவான்.)
அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு.
- (பணச்சு.)
அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது.
- (அரைஞாண் கயிற்றுக்குச் சரி.)
அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ. 510
அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி.
அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம்,
அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே.
அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ?
அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்? 515
அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம்.
- (பிள்ளையை வளர்ப்பதை விட.)
அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு.
அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.
அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது.
- (சிற்றப்பா.)
அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை. 520
அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா.
அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன்.
அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான்.
அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா?
அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான். 525
- (போகிறாள்.)
அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா?
- (அரை நாழிகை.)
அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ.
அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்.
- (வீட்டாள்.)
அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம். 530
- (மதனி.)
அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான்.
அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல.
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல.
அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது.
அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா? 535
அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்.
அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ.
அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்.
- (அண்ணாதுாரில் பிணத்தாழி கட்டித் தொங்க விட்டிருப்பார்களாம். சதண்டி: ஓரூர்.)
அண்ணாமலைக்கு அரோ ஹரா!
அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம். 540
அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?
- (மன்னார்சாமியைக் கேட்பானேன்? மன்னார்சாமி மருள் வந்து.)
அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை.
அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் படிக்க வேண்டுமா?
- (படிக்கத் தெரியாதா?)
அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்.
அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது. 545
அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்.
அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை.
- (அண்ணாவி-உபாத்தியாயர், அடைமுறை.)
அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை.
அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்.
- (மோளுதல்-சிறுநீர் கழித்தல்.)
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா? 550
அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு.
அண்ணாவுக்கு மனசு வரவேணும்; மதனி பிள்ளை பெற வேணும்.
அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு.
அணி இலாக் கவிதை பணி இலா வனிதை.
அணி எல்லாம் ஆடையின்பின். 555
- (பழமொழி நானூறு.)
அணி பூண்ட நாய் போல.
அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது.
அணில் ஏற விட்ட நாய் போல.
அணில் ஏறித் தென்னை அசையுமா?
- (அசைத்து, ஆடி விடுமா?)
அணில் ஓட்டமும் ஆமை நடையும். 560
- (அணில் ஊணும்.)
அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே,
அணில் நொட்டிப் பனை முறியுமா?
அணில் நொட்டியா தென்னை சாயும்?
அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும்,
அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல. 565
அணில் வாயாற் கெட்டாற் போல.
அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம்.
அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?
அணு அளவு பிசகாது.
அணு மகா மேரு ஆகுமா? 570
அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து.
அணுவும் மகமேரு ஆகும்.
அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு
- (உருவகம்.)
அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்? 575
- (மறிப்பவர்.)
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
- (வராது.)
அணை கடந்த வெள்ளம் அழைக்கத் திரும்புமா?
அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்.
- (லட்சணம்.)
அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு. 580
அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல,
அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள்,
அத்தான் அரை அகமுடையான்.
அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.
அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம். 585
அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
- (இடக்கர். )
அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை.
அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
- (அத்திக்காயை.)
அத்திப் பூவை ஆர் அறிவார்?
அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? 590
அத்தி பூத்தது ஆரும் அறியார்?
அத்தி பூத்தாற் போல்
அத்தி மரத்தில் தொத்திய கிளி போல,
- (கனி போல.)
அத்தி முதல் எறும்பு வரை
- (அத்தி-யானை,)
அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது. 595
அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார்.
அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான்.
அத்து மீறினால் பித்து.
அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை.
அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி. 600
அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி,
அத்தை இல்லா வீடு சொத்தை.
அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல,
அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு.
அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா? 605
அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு.
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா.
அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு,
அத்தைச் சொல்லடா சீமானே,
அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்? 610
அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை.
அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல,
அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா?
- (கிடைப்பாளா?)
அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா?
அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன். 615
அத்தையடி மாமி, கொத்துதடி கோழி.
அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று.
அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும்.
அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல்.
அதமனுக்கு ஆயிரம் ஆயுசு. 620
அதர்மம் அழிந்திடும்.
- (செயங்கொண்டார் சதகம்.)
அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள்.
அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும்.
அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி,
அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது. 625
அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம்.
அதிக ஆசை அதிக நஷ்டம்.
அதிக ஆசை மிகு தரித்திரம்.
அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா?
அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம். 630
அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது.
அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை.
அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும்.
அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு?
அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும். 635
அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா?
அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது.
அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு.
அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா?
அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம். 640
- (ஒன்றானால்.)
அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு.
அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல.
அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும்.
அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது.
அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது. 645
அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது.
- (வேங்கடம்மா. கொதிக்கிற கஞ்சி.)
அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம்.
அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம்.
அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை.
அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை. 650
- (அடித்தால்.)
அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை.
அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும்.
அதிர் வெடி கேட்ட குரங்கு.
அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது. 655
அதிர்ஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.
அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும்.
அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி.
அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்
- (கெட்டவனுக்கு.)
அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும். 660
அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல.
அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்.
அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை.
- (ஐயரும் இல்லை.)
அதிர அடித்தால் உதிர விளையும்.
அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி. 665
அதிலும் இது புதுமை; இதிலும் அது புதுமை.
அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை.
- (செத்தது வைத்த.)
அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி.
அதி விநயம் தூர்த்த லட்சணம்.
அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி. 670
- (விருஷ்டி-மழை. )
அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை.
- (பத்துக் கவலை.)
அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.
அது எல்லாம் ஐதர் காலம்.
அது எல்லாம் கிடக்கிறது ஆட்டடா பூசாரி,
அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது? 675
அதுக்கு இட்ட காசு தண்டம்.
அதுக்கு இட்ட காசு மினுக்கிட்டு வருவாள், அரிவாள் மணைக்குச் சுருக்கிட்டுத் தா.
அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.
- (இருப்பான்.)
அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம்.
அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே! 680
அதுவும் போதாதென்று அழலாமா இனி?
- (அழுகிறதா?)
அதைக் கை கழுவ வேண்டியதுதான்.
அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்?
- (வலிப்பானேன்?)
அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு.
அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன். 685
- (எடுத்துவிடுகிறேன்.)
அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.
அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை.
- (அப்புறம் போனாலும் வழி இல்லை.)
அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான்.
அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு.
அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று. 690
- (அந்தகன்-யமன்.)
அந்தணர்க்குத் துணை வேதம்!
அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்.
அந்தப் பருப்பு இங்கே வேகாது.
அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும்.
அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது. 695
- (அழகு அழுகிறது.)
அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல,
அந்தரத்திலே விட்டு விட்டான்.
அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான்.
அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது.
அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது? 700
- (சொல்லி அழுகிறது.)
அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி.
அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.
அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான்.
அந்திச் சிவப்பு அடை மழைக்கு அடையாளம்.
அந்திச் செவ்வானம் அப்போதே மழை. 705
அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை.
அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே.
அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு.
அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது,
அந்திப்பீ, சந்திப்பீ பேணாதான் வாழ்க்கை சாமப்பீ தட்டி எழுப்பும் 710
அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா.
- (பிடித்த பிசாசும் விடா.)
அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள்.
அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா.
அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல.
அந்து ஊதும் நெல் ஆனேன். 715
- (நெல்லைப் போல் ஆனேன். அந்து-ஒருவகைப் பூச்சி.)
அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான்.
- (அந்திக் கண்ணிக்கு.)
அந்நாழி அரிசி, முந்நாழிப் பருப்பு, இருநாழி நெய்.
- (கண்ணபுரம் முனையதரையன் பொங்கல்.)
அந்நிய மாதர் அவதிக்கு உதவார்.
அநாதைக்குத் தெய்வமே துணை.
அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள். 720
அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும்.
அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல.
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?
அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல.
அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. 725
அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை.
- (அவள்.)
அப்படிச் சொல்லு ரங்கம்.
அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு.
அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும்.
அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ? 730
அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு.
அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்.
அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில்
அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா.
அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா? 735
அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல.
அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி.
- (திருச்செங்காட்டங்குடி உற்சவத்தில்.)
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும்.
அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா?
அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா? 740
அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது.
அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா?
- (செத்து. )
அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான்.
அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான். 745
அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது.
அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை.
அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா.
அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம்
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான். 750
- (மகன்.)
அப்பனுக்கு மூத்த சுப்பன்.
அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல.
அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான்.
அப்பா என்றால் உச்சி குளிருமா?
அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி. 755
அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.
அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா?
அப்பா வலக்கை; அம்மா இடக்கை.
அப்பாவி உப்பு இல்லை.
அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது. 760
அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா?
அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை.
அப்பியாசம் குல விருது.
அப்பியாசம் கூசா வித்தை.
அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை. 765
அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு.
அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.
அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம்.
அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம். 770
அபாயத்திற்கு உபாயம்.
அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா?
அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான்.
அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா?
அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா. 775
- (குறும்பும், அம்பட்டக் கிருதாவும், போகாது. அடடா சொல்லவா?)
அம்பட்ட வேலை அரை வேலை.
அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும்.
- (அத்தனையும் மயிர்.)
அம்பட்டன் கைக் கண்ணாடி போல.
அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும்.
அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல. 780
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?
- (பஞ்சமா?)
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.
அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா?
அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல.
அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும். 785
- (வந்தால் அடைப்பம் சரியாய் இருக்க வேணும்.)
அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா?
அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல.
அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி,
- (அம்பத்தூர்-மதுரை மாவட்டத்தில் உள்ளதோர் ஊர்.)
அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன?
- (அம்பர்-அம்பர் மாகாளம்.)
அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன? 790
- (அரண்மனையில் இருந்தால் என்ன?)
அம்பலத்தில் அவல்பொரி போலே.
அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
- (அமுது அடக்கம் பண்ண.)
அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல.
- (கட்டுப் பொதி.)
அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது.
அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம். 795
அம்பலம் வேகிறது.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்.
- (அமைத்தாற் போல.)
அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது.
அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா?
- (நரி கொள்வார்களா?)
அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர். 800
அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது.
- (குழை கட்டினால்.)
அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம்.
அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா?
அம்மன் காசு கூடப் பெறாது. 805
- (அம்மன் காசு-புதுக்கோட்டையில் வழங்கிய சிறிய காசு.)
அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?
அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும்.
- (மதுரையில்.)
அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும்.
அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா?
அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல. 810
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
- (வேறா? ஒரு கேடா?)
அம்மா கோதண்டராமன்.
அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவார்.
அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும்.
அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே. 815
அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம்.
அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம்.
அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரியாய்ப் போச்சு.
அம்மாவுக்குப் பின் அகமுடையான்.
அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? 820
- (கூடவா?)
அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும்.
அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது.
- (வடுகு.}
அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி.
அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ? 825
- (வரமாட்டாள்.)
அம்மான் மகளுக்கு முறையா?
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா?
- (வரிக்க.)
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
அம்மி இருந்து அரணை அழிப்பான்.
- (அம்மி-மறைந்து.)
அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்? 830
அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ?
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள்.
அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம்.
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல்.
- (இலவம் பஞ்சு எனக்கு என்ன கதி என்றாற் போல்.)
அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன? 835
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும்.
அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை.
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.
- (பரணி நூலில்.)
அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி. 840
அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே.
அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்?
அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி.
அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு.
- (முழுக்காசு.)
அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? 845
அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம்.
- (கற்றைத் துக்கம்.)
அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும்.
அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா?
அமர்க்களப்படுகிறது.
அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 850
அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்.
அமரிக்கை ஆயிரம் பொன் பெறும்.
அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
- (கருக்கலிலே.)
அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு.
அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம். 855
அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
- (சும்மா அகப்படுமா?)
அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா?
அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா?
அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா?
அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே. 860
- (அமிஞ்சி-கூலி இல்லா வேலை.)
அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?
அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது.
அமிஞ்சி வேலை.
அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான்.
அமுத்தல் பேர் வழி. 865
அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ?
அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம்.
- (அதிகம்.)
அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும்.
அமைதி ஆயிரம் பெறும்.
அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும். 870
அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று.
அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான்.
அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
- (அயலான்.)
அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
- (வீட்டான் பிள்ளை.)
அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும். 875
அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது.
அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- (ஆந்தையாய்.)
அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு.
அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும்.
அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான். 880
அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு.
அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?
அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல்.
அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது.
- (சமைப்பை.)
அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. 885
- (எழுதின எழுத்தில்.)
அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.
அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல்.
அயிலாலே போழ்ப அயில்.
- (பழமொழி நானூறு.)
அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு.
அர்ச்சுன சந்நியாசி. 890
அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு?
அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு?
அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும்
அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில்.
அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை. 895
அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள்.
அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான்.
அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா.
அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? 900
அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ?
- (ஆண்டிக்கு இடுவது.)
அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா?
அரங்கன் சொத்து அக்கரை ஏறாது.
அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது. 905
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ?
- (தொண்டரடிப் பொடியாழ்வார் சொன்னதாகக் கதை.)
அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று.
அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.
அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு? 910
அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம்.
அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம்.
- (பிடித்த சனியன்.)
அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே.
அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
அரசன் அளவிற்கு ஏறிற்று. 915
அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும்.
- (யாழ்ப்பாண வழக்கு ஒறுப்பான்.)
அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.
- (கேட்கும்.)
அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி.
அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம். 920
அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா?
அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
அரசன் இல்லாப் படை அம்பலம்.
அரசன் இல்லாப் படை வெட்டுமா?
அரசன் இல்லாப் படை வெல்வது அரிது. 925
அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி.
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.
- (குடிகள்.)
அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும்.
அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள். 930
- (கத்தரிக்காய்.)
அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல.
அரசன் சீறின் ஆம் துணை இல்லை.
அரசன் நினைத்த அன்றே அழிவு.
அரசன் மெச்சியவள் ரம்பை.
அரசன் வரை எட்டியது. 935
அரசன் வழிப்பட்டதே அவனி.
அரசன் வழிப்படாதவன் இல்லை.
அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது.
அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது.
அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை. 940
அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா?
அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல்.
- (சம்சாரி-பயிரிடுகிறவன்.)
அரசனுக்குத் துணை வயவாள்.
அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம்.
அரசனும் சரி, அரவும் சரி. 945
- (பாம்பும்.)
அரசனும் சரி அழலும் சரி.
- (நெருப்பும்.)
அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான்.
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம்.
- (முட்டி-பிச்சை.)
அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது. 950
- (மயிர் மாத்திரமாக இருக்கிறது.)
அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல.
அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல.
அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும்.
- (பகைத்த.)
அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்.
அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம். 955
அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும்.
அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல.
அரசு இல்லாப் படை வெல்வது அரிது.
அரசு உடையானை ஆகாசம் காக்கும்.
அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 960
- (வெற்றி வேற்கை.)
அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே.
அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல்.
அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே.
அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை.
- (காத்தவனும் வீண் போகான்.)
அரண்மனை காத்தவனுக்கும் அடுப்பங்கரை காத்தவனுக்கும் குறைவு இல்லை. 965
அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள்.
அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம்.
அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம்.
அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை.
- (பழுது போவது இல்லை.)
அரணை அலகு திறக்காது. 970
அரணை கடித்தால் உடனே மரணம்.
- (அப்போதே.)
அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்.
அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும்.
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல்.
- (நல்லது.)
அரமும் அரமும் கூடினால் கின்னரம். 975
- (தாக்கினால்.)
அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும்.
- (சீரங்கத்தில் தாயாருக்கு அமுது செய்விப்பார்.)
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே.
அரவின் வாய்த் தேரைபோல.
அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 980
- (வெற்றி வேற்கை.)
அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது.
- (இல்லாமல்.)
அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.
அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி.
அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான். 985 .
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
- (அதிகாரம் பண்ணலாமா?)
அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம்.
அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்.
அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம்.
அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம். 990
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
- (வீட்டுக்காரன் அவன்.)
அரிசி அள்ளின காக்கைபோல.
அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
- (உழக்கு.)
அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா?
அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு. 995
அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை.
அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை.
அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு.
- (தண்டலையார் சதகம்.)
அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.
- (அள்ளவும் முடியவில்லை. ஊதவும் முடியவில்லை.)
அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும். 1000
அரிசிக்குத் தக்க கனவுலை.
அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.
அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன?
அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா?
- (என்ன சாப்பாடு?)
அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? 1005
அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா?
அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது.
- (அகமுடையான்.)
அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி.
அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது.
அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல 1010
அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே!
அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை.
அரிசிப் பொதியுடன் திருவாரூர்.
- (பொரியுடன், யாழ்ப்பாண வழக்கு.)
அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்.
அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா? 1015
- (மறந்த உலைக்கு உப்பு ஏன் குறைவா?)
அரிசியும் உமியும் போல.
அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும்.
அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி.
அரித்தவன் சொறிந்து கொள்வான்.
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ? 1020
அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி.
அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல்.
அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது.
அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு.
அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே. 1025
- (அசம்பாவிதக் கவிராயர் பாடியது, ஜனத் தொகை ஒரே மாதி; இருக்குமாம்.)
அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல்.
அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்.
- (திரிகிறான்.)
அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு.
- (அல்ல என்கிறவன் வாயில் மண்ணு.)
அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே. 1030
அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ?
அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே.
அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி.
அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும்.
அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும். 1035
- (அசையும்; கெடும்.)
அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான்.
அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்.
அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள்.
அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது.
அருக்காமணி முருக்கம் பூ. 1040
அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா?
- (அழி.)
அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது.
அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா?
அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது.
- (அருங்கோடை போலும்.)
அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம். 1045
- (ரோகம்.)
அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை.
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- (ஆகாசமெல்லாம் பேய்.)
அருணாம்பரமே கருணாம்பரம்.
அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா?
அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. 1050
அரும்பு ஏறினால் குறும்பு ஏறும்.
அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா?
- (நரம்பு கோணினால் நாம் அதற்கென் செய்வோம்.)
அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை.
அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது.
- (இல்லாத வீட்டில். எருமையும் சேராது.)
அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன? 1055
அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன?
- (இருந்தென்ன? இறந்தென்ன?)
அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம்.
அருமை பெருமை அறிந்தவன் அறிவான்.
அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது.
அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது. 1060
- (விறுவிறுத்த பட்டினி.)
அருவருப்பான சோற்றைக்காட்டிலும் விறுவிறுப்பான பசி மேலானது.
அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும்.
அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும். 1065
அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா?
- (அழுது படைப் பார்களா?)
அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது.
அரைக் கல்வி முழு மொட்டை.
- (அறக்கல்வி.)
அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம்.
அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது. 1070
அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா?
அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா?
- (கிடையாது.)
அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை.
அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது. 1075
- (போன வெட்கம் வருமா?)
அரைக் காசுக்கு மலம் தின்பவன்.
அரைக் காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது.
- (ஆயிரம் மரக்கால் பொன்.)
அரைக் காசு கொடுத்து அழச்சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல.
அரைக் காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாளாம்.
அரைக் காசு சேர்த்து முடிப்பணம் ஆக்குவது போல. 1080
அரைக் காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டும்.
அரைக் காசும் முதல் இல்லை; அங்கங்கே வைபோகம்.
அரைக் காசு வேலை ஆனாலும் அரசாங்க வேலை.
அரைக் காசை ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.
அரைக்கிற அரிசியை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்பனோடே போனாளாம். 1085
அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக்கிறவள் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்.
அரைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்கும்.
- (பி.ம்) அறைக்கீரை.
அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது.
அரைகட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா?
அரை குழைத்தாலும் குழைத்தாள்; அரிசியாக வைத்தாலும் வைத்தாள். 1990
- (கொழித்தால் கொழித்தேன். வைத்தேன்.)
அரை குறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறையும் நிறைவாகிவிடும்.
அரை குறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே.
அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல.
அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
- (உபகாரமா?)
அரைச் செட்டு முழு நஷ்டம். 1095
அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச்சொல் முழுச்சொல் ஆகுமா?
- (ஆகும்.)
அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா?
அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி.
- (ஆய் விடுகிறவளும்.)
அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி.
அரைத்ததையே அரைப்பது போல. 1100
அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல்.
அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது.
அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை.
அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன்,
அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல. 1105
அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி.
- (மிஞ்சினது.)
அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம்.
அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம்.
- (விடிய விடிய)
அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா?
அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? 1110
அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை.
அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம்.
அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது.
அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை.
அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை. 1115
அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம்.
அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும்.
அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல்.
அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி. 1120
அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா.
அரையும் குறையும்.
அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
- (ஆகும்.)
அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா?
அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா? 1125
அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல.
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும்.
அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம்.
- (மல்லல் ஒரு காலம் )
அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம். 1130
அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
அல்லவை தேய அருள் பெருகும்.
அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா.
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல். 1135
அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம்.
அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு.
அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும்.
அல்லும் பகலும் கசடு அறக் கல்.
அல்லோல கல்லோலப் படுகிறது. 1140
அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம்.
- (அத்திம்பேரைக் காட்டினாளாம்.)
அலுத்துக் கொழுத்து அக்காளண்டை போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம்.
அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம்.
அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம்.
அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும். 1145
அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா?
அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது?
- (ஒழியும்.)
அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல.
- (அடங்கின பிறகு.)
அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை.
- (பழமொழி நானுாறு.)
அலைகடலுக்கு அணை போடலாமா? 1150
அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை.
அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு.
அலை மோதும் போதே கடலாட வேண்டும்.
- (தலை முழுகவேண்டும்.)
அலையில் அகப்பட்ட துரும்பு போல.
அலையும் நாய் பசியால் இறக்காது. 1555
அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது.
அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ?
அவகடம் உடையவனே அருமை அறியான்.
அவகுணக்காரன் ஆகாசம் ஆவான்.
அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா? 1160
அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு.
- (தெலுங்கும் தமிழும் கலந்தது. ஆக்கு-இலை, நாக்கு-எனக்கு, சேத்திலே-கையிலே.)
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
அவசரக் குடுக்கை.
அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்.
அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே. 1165
அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது.
- (அரிக்கும் சட்டியிலும்.)
அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான்.
அவசரத்திலும் உபசாரமா?
அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது.
அவசரத்துக்குத் தோஷம் இல்லை. 1170
- (பாவம் இல்லை.)
அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம்.
- (புணர அழைத்தாளாம்.)
அவசரப் படேல்,
அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது.
- (அரிசிச் சாலிலும்.)
அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது.
அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 1175
அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை.
அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம்.
அவதந்திரம் தனக்கு அந்தரம்.
அவதிக் குடிக்குத் தெய்வமே துணை.
அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி. 1180
- (நல்லது.)
அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்.
- (அவமானம் செய்து, பேசுகிறதா?)
அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார்.
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான்.
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்.
அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி. 1185
அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை.
அவருடைய இறகு முறிந்து போயிற்று.
அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்.
அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும்.
- (வடமன்-பிராம்மணரில் ஒரு பிரிவினன்.)
அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை. 1190
- (ஆதிலிங்கத்துக்கு.)
அவரை நட்டால் துவரை முளைக்குமா?
- (விதைத்தால், போட்டால் விளையுமா?)
அவல் பெருத்தது ஆர்க்காடு.
அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே.
அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை.
- (பார்க்க வேணுமா?)
அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது. 1195
- (குணத்துக்கு.)
அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.
- (சுலபமாய்.)
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல.
- (அவலைச் சாக்கிட்டு.)
அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு.
அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம்.
- (என்பது புண்ணியம்.)
அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா? 1200
அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள்.
- (ஆயிரம் பேர் வருவார்கள். லட்சம் பேர் மயங்கிப் போவார்கள்.)
அவள் அழகைப் பார்த்தால் கிள்ளித் தின்னலாம் என்று இருக்கிறது
- (போலிருக்கிறது.)
அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான்.
அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள்.
- (பண்ணி ஏழு வலம் வருவாள்.)
அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது. 1205
அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது.
அவள் சாட்டிலே திரை சாட்டா?
அவள் சொல் உனக்குக் குரு வாக்கு.
அவள் பாடுவது குயில் கூவுவது போல.
அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை. 1210
அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம்.
அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது.
அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும்.
அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு. 1215
அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும்,
அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா?
அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்?
அவன் அசையாமல் அனுவும் அசையாது.
அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. 1220
அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார்.
அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்.
அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு.
அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி.
அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும். 1225
அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும்.
அவன் அன்றி ஓரணுவும் அசையாது.
அவன் ஆகாரத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்,
அவன் இட்டதே சட்டம்.
அவன் இவன் என்பதைவிட அரி அரி என்பது நலம். 1230
அவன் உள் எல்லாம் புண்; உடம்பெல்லாம் கொப்புளம்.
அவன் உனக்குக் கிள்ளுக் கீரையா?
அவன் எங்கே இருந்தான்? நான் எங்கே இருந்தேன்?
அவன் எரி பொரி என்று விழுகிறான்.
அவன் என் தலைக்கு உலை வைக்கிறான். 1235
அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.
அவன் எனக்கு அட்டமத்துச் சனி.
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
அவன் ஓடிப் பாடி நாடியில் அடங்கினான்.
அவன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பத்திதான் எழுதியிருக்கிறது. 1240
- (அவன் செட்டியார்.)
அவன் கல்வெட்டான ஆள்; அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்.
அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது. 1245
- (அழிக்க.)
அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு திரான் போடு.
- (மொந்தை போடு.)
அவன் கெட்டான் என் கொட்டிலின் பின்னே.
அவன் கெட்டான் குடியன்; எனக்கு இரண்டு திரான் வாரு.
அவன் கேப் மாறி, அவன் தம்பி முடிச்சு மாறி.
அவன் கை மெத்தக் கூர் ஆச்சே. 1250
அவன் கை மெத்த நீளம்.
அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.
அவன் கொஞ்சப் பள்ளியா?
அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம். 1255
அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அவன் சிறகு ஒடிந்த பறவை.
- (இல்லாத பறவை.)
அவன் செய்த வினை அவனைச் சாரும்.
அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை. 1260
அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.
அவன் சோற்றை மறந்துவிட்டான்.
அவன் தம்பி அங்கதன்.
- (மகன்.)
அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது.
அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான். 1265
அவன் தவிடு தின்று போவான்.
அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்?
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள். 1270
அவன் நா அசைந்தால் நாடு அசையும்.
அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான்.
அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும்.
அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்.
அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால். 1275
அவன் பின்புறத்தைத் தாங்குகிறான்.
அவன் பூராய மாயம் பேசுகிறான்.
அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம்.
அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும்.
அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை. 1280
அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை.
அவன் மனசே அவனுக்குச் சாட்சி.
அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது.
அவன் மிதித்க இடம் பற்றி எரிகிறது.
அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது. 1285
அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்.
- (மெத்தப் பேச்சுக்காரன்.)
அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம்.
அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி.
அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன்.
- (வென்றவன்.)
அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது. 1290
அவனண்டை அந்தப் பருப்பு வேகாது.
அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு.
அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை.
அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை.
அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை. 1295
அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது.
அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும்.
அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்.
அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம். 1300
அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்.
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்?
அவனுக்க ஜெயில் தாய் வீடு.
அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும்.
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது. 1305
அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான்.
அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான்.
- (இருக்கிறான்.)
அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது. 1310
அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது.
அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு.
அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?
அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும்.
அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது. 1315
- (பி-ம். திருடி)
அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா?
அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம்.
அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை.
அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா?
அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது. 1320
அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை.
அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை.
அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி.
அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது.
அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும். 1325
அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது.
அவிசாரி வாயாடுகிறாற் போலே.
அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது.
அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன்.
அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன். 1330
அவித்த பயறு முளைக்குமா?
அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி.
அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று.
- (நலம்.)
அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்.
- (பி. ம்.) நாய்.
அவிழ்த்து விட்ட காளை போல. 1335
அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம்.
அவிழ்த்து விட்டால் பேரளம் போவான்.
அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும்.
- (பி. ம்.) பணம்.
அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான்.
அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன். 1340
அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர்.
- (பி. ம்.) தம் மனிதர்.
அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல.
அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான்.
அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி.
அழகிலே அர்ஜூனனாம்; ஆஸ்தியிலே குபேரனாம். 1345
அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி.
அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே மிதந்த சாணிக் கூடை
அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா?
அழக இருந்து அழும்; அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.
- (பி-ம்.) அழகு இருந்து என்ன பண்ணும்?
அழகு இருந்து உண்ணுமா? அதிருஷ்டம் இருந்து உண்ணுமா? 1350
அழக இருந்து என்ன? அதிருஷ்டம் இருக்க வேண்டும்.
அழகு இல்லாதவள் மஞ்சள் பூசினாள்: ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள்.
அழக ஒழுகுகிறது; நாய் வந்து நக்குகிறது: ஓட்டைப் பானை கொண்டு வா, பிடித்து வைக்க.
அழகு ஒழுகுகிறது, மடியில் கட்டடி கலயத்தை.
- (கட்டடா.)
அழகுக்கா மூக்கை அறுப்பாள்? 1355
அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
அழகுக்கு அழகு செய்வது போல.
அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.
அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்.
அழகுக்கு மூக்கை அழித்து விட்டாள். 1360
அழகு கிடந்து அழும்; அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும்.
அழகு கிடந்து புலம்புகிறது; அதிர்ஷ்டம் கண்டு அடிக்கிறது.
அழகு சொட்டுகிறது.
அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. 1365
அழகு வடியது; கிளி கொஞ்சுது.
அழச் சொல்கிறவன் பிழைக்கச் சொல்லுவான்; சிரிக்கச சொல்கிறவன் கெடச் சொல்லுவான்.
அழப் பார்த்தான் கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்.
அமலாம் என்று நினைப்பதற்குள் அகமுடையான் அடித்தானாம்.
அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவினன் ஆக்குவார். 1370
அழித்தால் ஐந்த ஆள் பண்ணலாமே!
அழித்துக் கழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயர் இட்டானாம்!
அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன?
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன?
- (பி-ம்) அழிந்த நந்தவனத்தில்.
அழிந்தவன் ஆரோடு போனால் என்ன? 1375
அழிய உழுது அடர விதை.
அழியாச் செல்வம் விளைவே ஆகும்.
அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு.
அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
அழிவுக்கு முன்னால் அகந்தை. 1380
அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்.
அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம்.
அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல.
அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும்.
அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது. 1385
- (பி-ம்.) இழுக்குக் குணம்.
அழுகலுக்கு ஒரு புழுத்தல்.
அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன்.
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக் கூடாது.
அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
- (பி-ம்.) கொடுத்த கதை போல.
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம். 1390
- (பி-ம்.) காட்டுகிறது போல
அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும்,
அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது.
அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது.
அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான்.
அழுகின பழம் ஐயருக்கு. 1395
அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான்.
அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி.
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே.
அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில்.
அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான். 1400
அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான்.
அழுத கண்ணீரும் கடன்.
அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
அழுத பிள்ளை உரம் பெறும்.
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம். 1405
அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம்.
அழுத பிள்ளை பசி ஆறும்.
- (பி-ம்.) பிள்ளை பிழைக்கும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம்.
அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம். 1410
அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை.
அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை.
- (பி-ம்.) அகங்காரம்
அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம்.
அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ?
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். 1415
- (பி-ம்.) அழுதும் அழுதும்,
அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு.
அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும்.
அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை?
- (பி-ம்.) பணயம்.
அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை.
- (யாழ்ப்பாண வழக்கு.)
அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. 1420
அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல.
அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும்.
- (பி-ம்.) ஆற்றுவார் அற்ற.
அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே.
அழையாத வீட்டில் நுழையாத விருந்து.
அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. 1425
அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி.
அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி.
- (பி-ம்.) விருந்தாளி.
அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்.
அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்?
அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது. 1430
- (பி-ம்.) இல்லாது சொல்லாது.
அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி.
- (பி-ம்.) கங்கா பவானி,
அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.
- (பி-ம்.) இட்டால்.
அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்.
அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம்.
அள்ளி நடுதல் கிள்ளி நடுதல். 1435
அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது.
அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும்.
அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது.
அள்ளும்போதே கிள்ளுவது.
அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம். 1440
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- (பி-ம்.) அளவு அறியுமா?
அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.
அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு.
அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும். 1445
- (பி-ம்.) ஒழிந்து வழிந்து வழிந்து.
அளந்த நாழி கொண்டு அளப்பான்.
அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது.
அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும்.
அளவு அறிந்து அளித்து உண்.
- (ஆத்தி சூடி. )
அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும். 1450
அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை.
அளவு இட்டவரைக் களவு இடலாமா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.
அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது.
அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே. 1455
அளுங்குப்பிடி பிடித்தாற் போல.
அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா?
- (பி-ம்.) பொன் கொடுத்தாலும்.
அற்பச் சகவாசம் பிராண சங்கடம்.
- (பி-ம்.) பிராண கண்டிதம்.
அற்ப சகவாசம் பிராண சங்கடம். 1460
- (பி-ம்.) சிநேகிதம்.
அற்ப சந்தோஷம்.
அற்ப சுகம், கோடி துக்கம்.
அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம்.
- (பி-ம்.) கிடைத்தால்.
அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும். 1465
- (பி-ம்.) அறைத் தூசியைப் பெருக்கும்.
அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும்.
அற்பம் அற்பம் அன்று.
அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று.
அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான். 1470
- (பி-ம்.) பணம் வந்தால் இடம் அறியான்.
அற்பன் பவிஷு அரைக்காசு பெறாது.
அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- (அடை மழையில் கோடைக்கானல் போவான்.)
அற்றதுக்கு உற்ற தாய்.
அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு. 1475
- (கொன்றை வேந்தன்.)
அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை.
அறிக் கல்வி முழு மொட்டை.
அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான்.
அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது.
அறக் குழைத்தாலும் குழைப்பாள்; அரிசியாய் வைத்தாலும் வைப்பாள். 1480
அறக் கூர்மை முழு மொட்டை.
அறங்கையும் புறங்கையும் நக்குதே.
- (பி-ம்.) அகங்கையும்.
அறச் செட்டு முழு நஷ்டம்.
அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி.
அற நனைந்தவருக்குக் கூதல் என்ன? 1485
- (பி-ம்.) குளிர் என்ன?
அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும்.
அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல.
- (இது தவறான பாடம்.)
அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம்.
அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான்.
- (பி-ம்.) கொள்ளவும்.
அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம். 1490
அறப் பேசி உறவாட வேண்டும்.
அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு.
- (பழமொழி நானூறு.)
அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும்.
அறம் செய்ய அல்லவை நீங்கி விடும்.
அறம் பெருக மறம் தகரும். 1495
அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை.
அறம் வெல்லும்; பாவம் தோற்கும்.
அற முறுக்கினால் அற்றுப் போகும்.
- (பி-ம்.) முறுக்கு.
அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும்.
அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும். 1500
அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல்.
- (பி.ம்.) காடிப் பானையில்
அறவில்............. வாணிகம்.
அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல்.
அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது.
அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல். 1505
அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான்.
அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை-----
- (பி-ம்.) அறிந்த பார்ப்பான் தோசைக்குப் போனால்.
அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை.
- (யாழ்ப்பாண வழக்கு பனாட்டு-பன வெல்லத்தில் பண்ணும் தின்பண்டம் பினாட்டுத்தட்டை.)
அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல.
- (பி-ம்.) வழக்கு பிடித்து இட்டாற் போல.
அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? 1510
அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும்.
அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல்.
அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
- (பி-ம்.) கெட்டவர்.
அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல். 1515
அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்.
அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.
அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு.
- (பி-ம்) பொறியாய்.
அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு.
அறியாப் பிள்ளை புத்தியைப் போல. 1520
அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார்.
அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார்.
அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா?
அறிவினை ஊழே அடும். 1525
- (பழமொழி நானூறு.)
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.
அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது?
அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன?
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான். 1530
அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும்.
அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான்.
அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது. 1535
அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை.
அறிவு உடையார் ஆவது அறிவார்.
அறிவு உடையாரை அடுத்தால் போதும்.
அறிவு உடையாரை அரசனும் விரும்பும். 1540
- (வெற்றி வேற்கை.)
அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை.
அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா?
அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன?
அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம்.
அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும். 1545
அறிவு புறம் போய் ஆடினது போல.
- (பி-ம்.) ஆண்டது போல.
அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன்.
அறிவு மனத்தை அரிக்கும்.
அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவார்.
அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம்.
அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம். 1550
- (பி-ம்)உதவும்.
அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம்.
அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை.
அறுக்கப் பிடித்த ஆடுபோல.
அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள்.
அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை. 1555
அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி.
அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது.
அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான்.
அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான். 1560
அறுகு போல் வேர் ஓடி.
அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும்.
அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான்.
அறுத்த கோழி துடிக்குமாப் போல.
அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல. 1565
அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல.
அதுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல.
அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை.
அறுத்தவளுக்குச் சாவு உண்டா?
அதுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான். 1570
- (ஆண்டி வந்தாலும் பிச்சை போட மாட்டான்.)
அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்.
- (பி-ம்) அறுத்து விட்டதாம்.
அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி.
- (பொன்னுருவி-கர்ணன் மனைவி.)
அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும்.
அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன்.
அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம், 1575
அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது.
அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம்.
அறு நான்கில் பெற்ற புதல்வன்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார்.
- (ஐந்து பெண்சாதி.)
அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். 1580
அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம்.
அறுபதாம் கலக்கம்.
- (அறுபது-அறுபது பிராயம்.)
அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும்.
- (பி-ம்.) அடியில் இறங்கித்தான் பிச்சை எடுக்க வேண்டும்.
அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு.
அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1585
- (யாழ்ப்பாண வழக்கு.)
அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம்.
அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம்.
- (பி-ம்.) கிறுகிறுப்பு.
அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை.
அறுபது நாளைக்கு எழுபது கதை.
- (பி-ம்.) இருபது கதை.
அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1590
அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி.
- (பி-ம்.) நான்கு.
அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது.
அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை.
- (பி-ம்.) விலைமாது கையில்.
அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது.
- (பிள்ளை.)
அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான். 1595
அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான்.
அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்.
- (பி-ம்.) மிரட்டன்.
அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும்.
அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா? 1600
அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும்.
அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்.
அன்பின் பணியே இன்ப வாழ்வு.
அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே.
அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே. 1605
அன்பு இருக்கும் இடம் அரண்மனை.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும்.
அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்?
அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை. 1610
அன்பு இலாதார் பின்பு செல்லேல்.
- (குறள், 1255) காளிங்கன் உரை.
அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது.
அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம்.
அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்.
அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி. 1615
அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை.
அன்புடனே ஆண்டவனை வணங்கு.
அன்பே சிவம்.
- (திருமந்திரம்.)
அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.
- (பி-ம்.) வெகுதானம்.
அன்பே மூவுலகுக்கும் ராஜா. 1620
அன்றாடம் காய்ச்சி.
அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது.
அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம்.
அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது.
அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே. 1625
அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது.
அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான்.
- (பி-ம்.) அறைக்கு எழுதுவானா?
அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்.
அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல.
அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை. 1630
அன்று கண்டனர் இன்று வந்தனர்.
- (பி-ம்.) கண்டவர்.
அன்று கழி, ஆண்டு கழி.
அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது.
அன்று குடிக்கக் தண்ணீர் இல்லை; ஆனை மேல் அம்பாரி வேணுமாம்.
அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே. 1635
அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும்.
அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும்.
அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா?
அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்.
- (பி-ம்.) பழத்திலும், களாப்பழம்.
அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு. 1640
அன்று பார்த்ததற்கு அழிவில்லை.
அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர்.
அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல்.
அன்று விட்ட குறை ஆறு மாசம்.
அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம். 1645
அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது.
அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும்.
அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா.
அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம்.
- (பி-ம்.) இன்றைக்குக் குடை. இடையன் தரித்திரம்.
அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு. 1650
- (பி-ம்.) அன்னைக்கு.
அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா?
அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது.
- (பி-ம்.) ஆயிரம் ரூபாயை விட.
அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும்.
- (பி-ம்.) உறைக்கும்.
அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல்.
- (பி-ம்.) பெரிது.
அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது. 1655
அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது.
- (யாழ்ப்பாண வழக்கு.)
அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும்.
அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு.
அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது?
- (பி-ம்.) சரி.
அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு. 1660
அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம்.
- (தண்டலையார் சதகர்.)
அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல.
அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது.
அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1665
அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
அன்னம் இறங்குவது அபான வாயுவால்.
அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை.
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1670
அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும்.
அன்னம் வில்வாதி லேகியம்.
அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை.
அன்னமயம் பிராண மயம்.
அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன். 1675
அன்னமோ ராமசந்திரா.
அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான்.
அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான்.
அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்.
அன்னிய மாதர் அவதிக்கு உதவார், 1680
- (பி-ம்.) உதவுவாரா?
அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான்.
- (பி-ம்.) ஆருக்கும் ஆகான்.
அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
- (கொன்றை வேந்தன்.)
அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது?
அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது. 1685
அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும்.
அனலில் இட்ட மெழுகுபோல.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள்.
அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான்.
அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும். 1690
- (பி-ம்.) அனுபோகம் மிகும்போது.
அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம்.
அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.
அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்?
அனுமார் தம்பி அங்கதன் போலே.
அனுமார் வால் நீண்டது போல. 1695
அஜகஜாந்தரம்.
அஜாகளஸ்தம் போல்.
அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை
அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு.
அஷ்டதரித்திரம். 1700
அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது.
அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.
- (பி-ம்.) ஆத்தாள் வீடு.
அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான்.
- (பி-ம்.) பிட்டுக்கொண்டு.
அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன்.
அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான். 1705
அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன்.
அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது.
அஷ்டமத்துச் சனி போல.
அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல.
அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும். 1710
அஷ்டமி நவமி ஆகாச பாதாளம்.
அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது.
அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது.
அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம்.
அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம். 1715
- (பி-ம் ) அஸ்தமனத்துச் செவ்வானம்.
அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது.
அஸ்தியிலே ஜூரம்.
அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா.
அக்ஷர லக்ஷம் பெறும்.